Pandora Papers – விசாரணைகள் ஆரம்பம்!

விசேட விசாரணை குழுவொன்றை நியமித்து பண்டோரா பேப்பர்ஸில் வௌிப்படுத்தப்பட்ட இலங்கையர்கள் மற்றும் அந்த பரிவர்த்தனைகள் தொடர்பிலான விசாரணைகள் தற்போதைய நிலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச மற்றும் ஊழல் பற்றிய குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் செயலாளர் அப்சரா கல்தேரா தெரிவித்தார்.

பண்டோரா பேப்பர்ஸில் வௌிப்படுத்தப்பட்ட இலங்கையர்கள் மற்றும் பரிவர்த்தனைகள் குறித்து உடனடி விசாரணைக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டதை அடுத்து இவ்வாறு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் ஒரு மாதத்திற்குள் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் இன்று பண்டோரா வௌிப்படுத்தல் குறித்து சர்வதேச விசாரணை ஒன்று தேவை என்று தெரிவித்திருந்தார்.

Posted in Uncategorized

கடல்நீரை நன்னீராக்கும் சுத்திரிக்கும் நிலையம் திறப்பு

ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு என்னும் கருத்திட்டத்திலான தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் ஆசிய அபிவிருத்தி வங்கியின் வறுமைக் குறைப்பிற்கான ஜப்பான் நாட்டு நிதியுதவியில் மின்சார விநியோகத்தை அதிகரிக்கும் உதவித் திட்டத்தின் கீழ் நயினாதீவு நீர்வழங்கல் திட்டத்திற்கு நன்னீர் குடிநீரை வழங்குவதற்காக நிர்மாணிக்கப்பட்ட கடல்நீரை நன்னீராக்கும் சுத்திரிக்கும் நிலையத்தினை திறந்து வைக்கும் நிகழ்வு இன்று யாழ் நயினாதீவில் உள்ள 07 வட்டராத்தில் இடம்பெற்றது.

இவ் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிராமிய மற்றும் பிரதேச குடிநீர் வழங்கல் கருத்திட்டங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த கலந்துகொண்டு உத்தியோகபூர்வமாக திரைநீக்கத்தினை செய்து வைத்து திறந்துவைத்தார்.

இவ் நிகழ்வில் பாராளுமன்ற பிரதிக்குழுக்களின் பிரதித்தலைவர் மாவட்ட பிரதிக்குழுக்களின் பிரதித்தலைவர் அங்கஜன் இராமநாதன், வடமாகாண ஆளுநர் பி.எச்.எம்.சாள்ஸ், வடமாகாண பிரதம செயலாளர் சரத்பத்துல,மற்றும் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன்,உள்ளிட்ட அதிகாரிகள் கொண்டகுழுவினர்கள் கலந்துகொண்டனர்..

இவ் குடிநீர்த் திட்டத்தில் 150 கன மீற்றர் குடிநீராக்கும் நிலையமாக காணப்படுகின்றது.. இதற்காக 187 மில்லியன் ரூபா செலவில் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் ஊடாக 5,000 குடும்பங்கள் நன்மைபெறவுள்ளனர். இந்த குடிநீரை 120 ரூபா செலவில் பெற்றுக்கொள்ள கூடியதாக இருந்தாலும் அவற்றினை ஒரு யூனிட் 10 ரூபாவாக அறவிட்டு நன்னீரை பெற்றுக் கொள்ள முடியும். என நீர்வழங்கல் சபை தெரிவித்துள்ளது..

ஐரோப்பிய ஒன்றிய GSP+ கண்காணிப்புக் குழுவின் இலங்கைக்கான விஜயம் பூர்த்தி

(GSP+) தொடர்பில் இலங்கை நடைமுறைப்படுத்த வேண்டிய, 27 சர்வதேச கடைப்பிடிப்புகள் தொடர்பில் மீளாய்வு செய்வதற்காக இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் அடங்கிய குழு தனது விஜயத்தை நிறைவு செய்துள்ளதாக குறிப்பிடடுள்ளது.

இது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் வௌியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு…

கொழும்பு , 06 ஒக்டோபர் 2021- Generalised System of Preferences Plus (GSP+) தொடர்பில் இலங்கை நடைமுறைப்படுத்த வேண்டிய, 27 சர்வதேச கடைப்பிடிப்புகள் தொடர்பில் மீளாய்வு செய்வதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் அடங்கிய குழு 2021 செப்டெம்பர் 27 ஆம் திகதி இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்தது.

மனித மற்றும் தொழிலாளர் உரிமைகள், சூழல் மற்றும் காலநிலை மற்றும் நல்லாட்சிக் கொள்கைகள் போன்றன இவற்றில் அடங்கியுள்ளன. இலங்கையில் இந்தக் குழு தங்கியிருந்த பத்து நாட்கள் வரையான காலப்பகுதியில், ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச , வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர். ஜி.எல்.பீரிஸ், நீதி அமைச்சர் அலி சப்ரி மற்றும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச போன்ற அரசாங்க பிரதிநிதிகளுடன் சந்திப்புகளை மேற்கொண்டிருந்தது.

எதிர்கட்சி , சிவில் சமூக அமைப்புகளான மனித உரிமை காப்புச் செயற்பாட்டாளர்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் தொழில் வழங்குநர்களுடனும் இந்த அதிகாரிகள் சந்திப்புகளை முன்னெடுத்தனர். ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாடுகளின் தூதுவர்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் முகவர் அமைப்புகளின் பிரதான அதிகாரிகளுடனும் சந்திப்புகளை மேற்கொண்டிருந்தது.

மனித உரிமைகள் மற்றும் சட்ட விதிமுறை, பொருளாதார, சமூக மற்றும் கலாசார உரிமைகள் மற்றும் தொழிலாளர் உறவுகள் போன்றவற்றில் தாக்கம் செலுத்தியிருந்த விடயங்கள் தொடர்பில் கண்காணிப்புக் குழு கவனம் செலுத்தியிருந்தது. பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) தொடர்பிலும் விஜயம் செய்திருந்த அதிகாரிகள் கலந்துரையாடியிருந்ததுடன், 2017 ஆம் ஆண்டு GSP+ திட்டத்தில் இலங்கையை மீள உள்வாங்கிய போது பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வது என்பது பிரதான உறுதியளிப்பாக அமைந்திருந்தது.

தற்போது பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் தொடர்பில் நிலவும் பிரச்சனைகள் தொடர்பிலும் ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்புக் குழு கேட்டறிந்ததுடன், அடிப்படை சுதந்திரங்களை அனுபவிப்பதற்கு காணப்படும் கட்டுப்பாடுகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு புதிய சட்ட வரைபு தயாராகின்றமை தொடர்பிலும் கவனம் செலுத்தியிருந்தது.

இலங்கையிலுள்ள சகல சமூகங்களின் உரிமைகளுக்கும் மதிப்பளிப்பது மற்றும் பாகுபாடு இன்றிய செயற்பாடுகள் தொடர்பிலும், இந்த விடயம் தொடர்பில் அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பிலும் அதிகளவு கவனம் செலுத்தப்பட்டிருந்தது.

போதைப்பொருள் கொள்கை, சூழல் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பிலும் இந்தச் சந்திப்புகளின் போது மீளாய்வு செய்யப்பட்டிருந்ததுடன், ஊழல் மோசடி பற்றியும் ஆராயப்பட்டிருந்தது. GSP+ பயன்பாடு மற்றும் எதிர்கால வர்த்தக உறவுகள் என்பது இலங்கையிலுள்ள ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய வர்த்தக சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வெபினாரின் தலைப்பாக அமைந்திருந்தது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் டெனிஷைபி கருத்துத் தெரிவிக்கையில், “சர்வதேச அர்ப்பணிப்புகளின் வினைத்திறன் வாய்ந்த நடைமுறைப்படுத்தல் என்பதனூடாக இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் சந்தையை முன்னுரிமைச் சலுகை அடிப்படையில் அணுகுவதற்கான அடித்தளத்தை ஏற்படுத்துகின்றது.

சம்பந்தப்பட்ட விடயங்கள் தொடர்பில் 2015 ஆம் ஆண்டு முதல் இலங்கை அரசாங்கத்துடன் நாம் இணைந்து பணியாற்றுவதுடன், தொடர்ச்சியான ஈடுபாட்டை வரவேற்கின்றோம். கண்காணிப்பு மற்றும் இலங்கை அரசாங்கத்துடன் ஈடுபாட்டை பேணுவது என்பது, ஐரோப்பிய பாராளுமன்றம் மற்றும் சம்மேளனத்தின் அமைச்சர்களுக்கு அடிக்கடி அறிக்கைகள் சமர்ப்பிப்பதாக அமைந்திருக்கும்.” என்றார்.

நினைவேந்தலுக்கு எதிரான தடைகளுக்கும் எம்.பி கைதுக்கும் வலி. கிழக்கு பிரதேச சபை அமர்வில் கண்டனம்

தியாகி திலீபனின் நினைவேந்தலுக்குத் தடைகள் ஏற்படுத்தப்பட்டமை மற்றும் அஞ்சலி செலுத்த முற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் உள்ளிட்ட உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டமைக்கு எதிராக வலிகாமம் கிழக்குப் பிரதேச சபை தனது கண்டனத் தீர்மானத்தினை நிறைவேற்றியுள்ளது.

வெள்ளிக்கிழமை   வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் மாதாந்தக் கூட்டம் தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ)  யாழ் மாவட்ட அமைப்பாளரும், வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளருமான   தியாகராஜா நிரோஷ்  தலைமையில் நடைபெற்றது.

அதில் பிரதேச சபை உறுப்பினர் ஞனகுனேஸ்வரி கமலச்செல்வம் தவிசாளரின் அனுமதியுடன் விசேட பிரேரணை ஒன்றை முன்வைத்தார்.

அப் பிரேரனையில் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் தியாகி திலிபனுக்கு நினைவேந்தலை மேற்கொள்ள முயற்சித்தபோது அவர் பாராளுமன்ற உறுப்பினர் என்ற சிறப்புரிமைகளை மீறி கைது செய்யப்பட்டுள்ளார். அதனை இந்த கௌரவ அவை கண்டிக்க வேண்டும் எனக்கேட்டுக்கொண்டார்.

அமர்வில்யின் மீது கருத்துரைத்த தவிசாளார், அடிப்படையில் நினைவு கூர்வதற்கான உரிமை எமக்கு உள்ளது. அதனை யாரும் தடுக்கக் கூடாது. மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் உள்ளிட்ட உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்ட விதம் கண்டிக்கத்தக்கது. நினைவேந்தலை மறுக்கும் நோக்கில் தனிமைப்படுத்தல் சட்டத்தினை பயன்படுத்தி பொலிசார் கைது செய்துள்ளனர். இந் நிலையில் நினைவேந்தல்களுக்கு விதிக்கப்படும் தடைகள் தொடர்பிலும் பாராளுமன்ற உறுப்பினர் உள்ளிட்டவர்களின் கைதுகள் தொடர்பிலும் எமது எதிர்ப்பினை வெளிப்படுத்துகின்றோம் என்றார்.

அதனை சபையில் இருந்தவர்கள் ஏற்றுக்கொண்டது தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் சபையில் இருந்து வெளியேறியதுடன் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உறுப்பினர் ஒருவர் நடுநிலை வகித்தார்.

இருதரப்புத் தீர்மானங்கள் இரு நாடுகளினது மக்களுக்கும் தெளிவுபடுத்தப்பட வேண்டும் – கோட்டாபய ராஜபக்ஷ

இணக்கப்பாடுகளுடன் எட்டப்படும் இருதரப்புத் தீர்மானங்களை, இரு நாடுகளினது மக்களுக்கு சரியான முறையில் தெளிவுபடுத்தப்பட வேண்டுமென்று, இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லாவிடம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.

நன்மை, தீமைகளை எடுத்துரைத்து, பெரும்பான்மையான மக்களின் விருப்பத்துடன் செயலாற்றுவது அத்தியாவசியம் என்றும், ஜனாதிபதி எடுத்துரைத்தார்.

இந்திய வெளிவிவகாரச் செயலாளருடன் இன்று (05) முற்பகல், ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில், 1960, 70ஆம் நூற்றாண்டுகளில் காணப்பட்ட நட்புணர்வு மற்றும் தொடர்புகளை மீளக் கட்டியெழுப்புவதன் அவசியம் பற்றி, ஜனாதிபதி தெளிவுபடுத்தினார். 1971இல், இந்து சமுத்திரத்தை சமாதான வலயமாக மாற்ற வேண்டுமென்று, அப்போதைய பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க முன்வைத்த யோசனையைச் செயற்படுத்துவதற்கான பலத்தை அதிகரித்துக்கொள்ள, இந்தியாவின் உதவியை எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கு இடையிலான தொடர்புகளை உயர் மட்டத்துக்குக் கொண்டுசெல்ல வேண்டுமாயின், குறுகிய மற்றும் நீண்டகாலத் தேவைகளின் பொருட்டு முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளைத் துல்லியமாக அடையாளம் காணவேண்டுமென்பது, இரு தரப்பினதும் கருத்தாக அமைந்திருந்தது.

தற்போது காணப்படும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை விரைவாக அடையாளம் காண்பதுடன், மீனவச் சமுதாயத்துக்குக் கிடைக்க வேண்டிய நன்மைகளைப் பெற்றுக் கொடுத்து, இரு நாடுகளினதும் மீனவர்கள் எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்க வேண்டியதன் அவசியத்தையும், ஜனாதிபதி எடுத்துரைத்தார்.

இரு நாடுகளுக்கு இடையில் காணப்படும் வர்த்தக ஏற்றத்தாழ்வுகள் தொடர்பிலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி , அவற்றுக்கு விரைவில் தீர்வு வழங்க வேண்டியதன் அவசியம் பற்றியும் வலியுறுத்தினார்.

யாழ்ப்பாணக் கோட்டையை மீட்ட தனது அனுபவத்தை எடுத்துக்கூறிய ஜனாதிபதி, காணாமற்போனோர், யுத்தம் காரணமாக கணவரை இழந்தோர் உள்ளிட்ட யுத்தத்தின் பக்க விளைவுகள் பற்றி, தான் நல்ல புரிதல் கொண்டிருப்பதாக எடுத்துரைத்தார்.

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தின் பலவீனங்களைப் போன்றே அதில் காணப்படும் பலம் தொடர்பிலும் கண்டறிந்துச் செயற்படுவதன் தேவை தொடர்பிலும் ஜனாதிபதி எடுத்துரைத்தார்.

இலங்கையிலிருந்து சென்ற தமிழ் மக்களை மீண்டும் நாட்டுக்குத் திருப்பியழைக்கும் நடவடிக்கைகளை முன்னெடுப்பது தனது எதிர்பார்ப்பென்று தெரிவித்த ஜனாதிபதி, அதற்காக அரசாங்கம் முன்னெடுத்துவரும் வேலைத்திட்டங்களை வெற்றிகரமானதாக்கிக்கொள்ள, ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத் தொடரின் போது உரையாற்றி, புலம்பெயர் தமிழர்களுக்கும் வெளிநாடுகளில் வசிக்கும் தமிழ் மக்களுக்கும் பகிரங்க அழைப்பு விடுத்ததாகவும், ஹர்ஷ் வர்தன் ஷரிங்லாவிடம் ஜனாதிபதி எடுத்துரைத்தார்.

வடக்கு – கிழக்கு அபிவிருத்திக்காகத் தனது அரசாங்கம் கடந்த காலங்களில் முன்னெடுத்திருந்த நடவடிக்கைகள் தொடர்பில் தெளிவுபடுத்திய ஜனாதிபதி, யுத்த காலத்தின் போது பாதுகாப்புத் தரப்பினரால் கைப்பற்றப்பட்டிருந்த காணிகளில் 90 சதவீதத்துக்கும் மேலானவை, அவற்றின் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன என்றும், ஜனாதிபதி எடுத்துரைத்தார்.

அதேபோன்று, காணாமற் போனோரது குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது எனத் தெரிவித்த ஜனாதிபதி, யுத்தத்தால் ஏற்பட்ட ஏனைய பிரச்சினைகளுக்கும் உடன் தீர்வு வழங்குவதற்கான தேவை தொடர்பிலும் தெளிவு படுத்தினார்.

இரு நாடுகளினதும் புவியியல் இருப்பிடம் தொடர்பில் தெளிவான புரிந்துணர்வு இருப்பின், இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய எந்தவொரு செயற்பாட்டுக்கும் இலங்கையைப் பயன்படுத்திக்கொள்ள இடமளிக்கப் போவதில்லை என்றும், ஜனாதிபதி எடுத்துரைத்தார்.

சீனாவுடனான தொடர்புகள் பற்றி மிகத் தெளிவாக எடுத்துரைத்த ஜனாதிபதி அவர்கள், அது தொடர்பில் எவ்வித சந்தேகமும் கொள்ள வேண்டாமென்று, இந்திய வெளிவிவகாரச் செயலாளரிடம் தெரிவித்தார்.

இலங்கையில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. அதனால், இந்திய முதலீட்டாளர்களுக்கு பகிரங்க அழைப்பு விடுப்பதாக, ஜனாதிபதி தெரிவித்தார்.

திருகோணமலை எண்ணெய்த் தாங்கிகள் தொடர்பான பிரச்சினையை, இரு நாடுகளுக்கும் பயனுள்ள வகையில் தீர்த்துக்கொள்ளும் பொறுப்பு, விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளது என்றும், ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இரு நாடுகளுக்கு இடையிலான சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பிலும், இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

இலங்கையின் முப்படையினருக்கு, இந்தியாவில் வழங்கப்படும் பயிற்சிகளை விரிவாக்குவது தொடர்பிலும், இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது.

மின்சாரத்தை அதிகளவில் பயன்படுத்தும் சந்தர்ப்பங்களை அடையாளம் கண்டு, இரு நாடுகளுக்கிடையில் மின்சாரக் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டது.

கொவிட் தடுப்பூசி ஏற்றல் தொடர்பில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றத்தைப் பாராட்டிய இந்திய வெளிவிவகாரச் செயலாளர், கொவிட் கட்டுப்பாட்டுக்கு இலங்கை முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் மகிழ்ச்சி தெரிவித்தார்.

ஜனாதிபதி அவர்களின் நீண்ட நேர தெளிவுபடுத்தல் தொடர்பில் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்ள இந்திய வெளிவிவகாரச் செயலாளர், இரு நாடுகளுக்கும் இடையிலான கருத்துக்கள் சமனாக இருப்பதால், இரு நாடுகளுக்கு இடையிலான நட்புணர்வைத் தொடர்ந்து முன்னோக்கிக் கொண்டுசெல்ல முடியுமென்றும் தெரிவித்தார்.

இந்தியப் பிரதமரை இலங்கைக்கு இராஜாங்க விஜயமொன்றை மேற்கொள்ள அழைப்பதாகவும், இந்திய வெளிவிவகாரச் செயலாளரிடம் ஜனாதிபதி தெரிவித்தார்.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, வெளிநாட்டு அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொழம்பகே ஆகியோரும், இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.

Posted in Uncategorized

பாராளுமன்றத்தில்   வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் பாராளுமன்றில் ஆற்றிய உரை!

இலங்கையின் சார்பாக சர்வதேச அரங்கில் எமது முயற்சிகளை இந்த சபைக்குத் தெரிவிக்க நான் இன்று விளைகின்றேன். நாங்கள், ஒரு அரசாங்கமாக, தற்போதைய தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதுடன், அதன் மோசமான தாக்கங்கலால் ஏற்பட்ட பொருளாதார இறுக்கத்தின் விளைவுகளைக் கையாள்கின்றோம், உங்கள் அனுமதியுடன், நிர்வாகம் மற்றும் தேசிய நல்வாழ்வுக்கான எமது அணுகுமுறையின் மற்றொரு அம்சத்தை முன்னிலைப்படுத்த விரும்புகின்றேன். கொள்கை அளவில், சக தேசிய அரசுகளுடன் முழுமையான, நேர்மையான மற்றும் வெளிப்படையான ஈடுபாட்டிற்கான எமது ஜனாதிபதியின் உறுதிப்பாட்டை நாம் வலியுறுத்த வேண்டும். செழிப்பு மற்றும் நல்வாழ்விற்கான எமது இலக்குகளை தனியாக அடைய முடியாது. நாம் அனைவரும் ஒரு பொதுவான எதிர்காலத்தைப் பகிர்ந்துகொண்டு, அடுத்த தலைமுறையினருக்கு அந்த சிறந்த பிரகாசமான எதிர்காலத்தைப் பாதுகாக்கவும் உத்தரவாதப்படுத்தவும் நம்மால் முடிந்ததை மேற்கொள்ள கடமைப்பட்டிருக்கின்றோம்.

இந்த வகையில், கௌரவ. சபாநாயகர் அவர்களே, எமது சர்வதேசப் பங்காளிகள் மற்றும் நண்பர்களுடனான சமீபத்திய சர்வதேச ஈடுபாட்டினை இந்த அவையின் கவனத்திற்குக் கொண்டு வருகின்றேன். இலங்கையில் உள்ள இராஜதந்திரப் பிரதிநிதிகளுடனும் இலங்கைக்கு அங்கீகாரம் பெற்ற இருதரப்புப் பங்குதாரர் நாடுகளுடனும் நாங்கள் உரையாடலைப் பேணுகையில், புவியியல் மற்றும் ஏனைய எல்லைகளைக் கடந்து சர்வதேச மட்டத்திலும் நாங்கள் ஈடுபட விரும்புகின்றோம். கௌரவ. சபாநாயகர் அவர்களே, வழங்கப்பட்ட ஒவ்வொரு வாய்ப்பிலும் சாத்தியமான பரந்த பார்வையாளர்களுடன் உரையாற்றுவதற்கு நாங்கள் எதிர்பார்க்கின்றோம். இது விமர்சனக் கருத்தை எதிர்கொள்வது அல்லது தவிர்ப்பது மட்டுமல்லாமல், உலகளாவிய அரங்கில் எமது குரலை ஒலிக்கச் செய்ய வேண்டும். நாங்கள் இதை இருதரப்புப் பங்காளிகள், நிறுவனங்கள், பிராந்தியக் குழுக்கள் மற்றும் குறிப்பாக பல்தரப்பு மன்றங்களில் மேற்கொள்கின்றோம். தனிப்பட்ட முறையில் மற்றும் கூட்டாக நாம் எதிர்கொள்ளும் எண்ணற்ற சவால்களை எதிர்கொள்வதில் கற்றுக்கொள்வதற்கான விருப்பம் மற்றும் திறந்த மனப்பான்மை ஆகியவற்றால் ஊக்குவிக்கப்பட்டு, ஏனையவர்களின் உணர்வுகள் மற்றும் உண்மையான வாழ்க்கை அனுபவத்தை உள்வாங்கிக் கொள்கின்றோம்.

கௌரவ. சபாநாயகர் அவர்களே, நாங்கள் ஒப்பீட்டளவில் சிறிய தீவு அரசு. எனினும், நாங்கள் ஒரு பெருமைமிக்க வரலாறு மற்றும் சிக்கலான பின்னணி கொண்ட நாடாகும். உலகத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கின்ற அதே நேரத்தில், பகிர்ந்து கொள்ளவும் அதிகம் இருக்கின்றது. எமது பல்வகைமை கொண்ட பன்முகத்தன்மை ஒரு சமூகப் பரிசோதனை அல்ல, ஆனால் நாம் அதனுடன் அன்றாட அடிப்படையில் வாழ்கின்றோம். அவ்வப்போது இது பதற்றத்தை ஏற்படுத்துகின்றது, ஆனால் நாங்கள் இன்னும் சகோதரத்துவம் மற்றும் நல்லெண்ண உணர்வுடன் இணைந்து வாழ்கின்றோம். இத்தாலி, ஜெனீவா மற்றும் நியூயோர்க்கில் அண்மையில் நடைபெற்ற மூன்று உயர்மட்ட நிகழ்ச்சிகளின் போது, அதிமேதகு ஜனாதிபதி, மாண்புமிகு பிரதமர் மற்றும் நான் கலந்து கொண்டிருந்தோம். இந்த நிகழ்வுகள், அனைத்து நாடுகளுக்கும் பொதுவான உலகளாவிய முக்கிய விடயங்களில் சர்வதேச சமூகத்துடன் ஒற்றுமையை வெளிப்படுத்தவும், இது தொடர்பாக இலங்கையின் சொந்தக் கருத்துக்களை முன்னிறுத்தவும் இலங்கைக்கு முக்கியமான தளங்களை வழங்கியது. இந்த சமீபத்திய தொடர்புகள் சர்வதேச அளவில் தலைவர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களுடன் அதிக அளவில் தலையிட எங்களுக்கு உதவியது.

தொற்றுநோயின் காரணமாக பௌதீக ரீதியான தொடர்புகளில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர், ´நம் காலத்தின் மிகப்பெரிய நெருக்கடி´ எனக் குறிப்பிட்ட பல்வேறு அம்சங்களில் உரையாற்ற இந்த ஈடுபாடுகள் முக்கியமான வாய்ப்பை வழங்கின.

நியூயோர்க்கில் நடைபெற்ற 76வது ஐ.நா. பொதுச்சபையிலான தனது அறிக்கையில், தொற்றுநோய் மற்றும் அதனால் ஏற்படும் பொருளாதார வீழ்ச்சி மற்றும் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் இருத்தலியல் நெருக்கடிகளை எதிர்த்துப் போராடுவதற்காக இலங்கை சர்வதேச பங்காளிகளுடன் முழுமையாக ஈடுபட்டுள்ளது என அதிமேதகு ஜனாதிபதி குறிப்பிட்டார். இந்த உலகளாவிய சவால்களின் மோசமான விளைவுகளிலிருந்து எமது மக்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டதே எமது ஈடுபாடு ஆகும்.

இலங்கைக்கு சமமாக முக்கியமாக, இந்த விஜயங்கள் மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான முக்கியமான தேசிய பிரச்சினைகளில் இலங்கையில் நாம் சந்தித்த சமீபத்திய உள்நாட்டு முன்னேற்றங்கள் மற்றும் சிரமங்கள் மற்றும் தவறான அல்லது சார்பு உணர்வுகளை சரி செய்வது குறித்து இருதரப்பு மற்றும் பல்தரப்பு மட்டங்களில் சர்வதேச சமூகத்திற்கு உரையாற்றுவதற்கான வாய்ப்பை எங்களுக்கு வழங்கியது.

நான் ஜெனீவாவில் உள்ள மனித உரிமைகள் பேரவையில் பின்வரும் கூற்றுடன் எனது அறிக்கையை முடித்துக்கொண்டேன்: ´நாங்கள் எமது சவால்களை ஒப்புக்கொள்வதில் வெளிப்படையாக இருப்பதுடன், ஒரு பொறுப்பான மற்றும் ஜனநாயக அரசாங்கமாக, பொறுப்புக்கூறல், நல்லிணக்கம், மனித உரிமைகள், சமாதானம் மற்றும் நிலையான அபிவிருத்தி தொடர்பான முழு அளவிலான விடயங்களில் உறுதியான முன்னேற்றத்தை அடைய நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்´.

இந்த சவால்களை எதிர்கொள்ள வேண்டியதன் அவசியத்தை நாங்கள் அங்கீகரித்துள்ளோம், அந்த முயற்சியில், ஆக்கபூர்வமான விமர்சனங்கள் மற்றும் நல்லெண்ணத்தில் வெளிப்படுத்தப்பட்ட சர்வதேசக் கருத்துக்களுக்கு நாம் திறந்த முறையில் பதிலளிக்க வேண்டும். இவ்வாறு கூறினால், கௌரவ. சபாநாயகர் அவர்களே, நாம் எமது சுதந்திரம், தேசிய இறையாண்மை அல்லது ஒரு தேசமாக எமது சுய மரியாதையை சமரசம் செய்யத் தேவையில்லை.

பொதுநலவாயம், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு, ஜனநாயக சமூகம் மற்றும் ஜெனீவா மனித உரிமைகள் பேரவை போன்ற இலங்கையுடன் நேரடியாக சம்பந்தப்பட்ட பல முக்கிய நாடுகளின் வெளிநாட்டு அமைச்சர்களுடன் தனிப்பட்ட முறையில் கலந்துரையாடுவதற்கு எனக்கு வாய்ப்புக் கிடைத்தது. எமது அனுபவம், உணர்வுகள் மற்றும் நிலைப்பாட்டைப் பதிவு செய்வதற்கான எமது தொடர்ச்சியான மற்றும் தீவிரமான முயற்சிகள், இந்த வெளிப்படையான அணுகுமுறை மற்றும் ஈடுபடுவதற்கான விருப்பத்தை நிரூபிக்கின்றது. ஆசியாவின் பழமையான ஜனநாயக நாடுகளில் ஒன்றாக ஒன்பது தசாப்தங்களாக இந்த அமைப்பைக் கடைப்பிடிக்கும் ஒரு தேசத்தின் நிலைப்பாட்டில் இருந்து ஜனநாயக விதிமுறைகள், இலட்சியங்கள் மற்றும் பொதுவாகப் பகிரப்பட்ட மதிப்புக்களுக்கான எமது உறுதிப்பாட்டை நாங்கள் மீண்டும் உறுதிப்படுத்தினோம்.

கௌரவ. சபாநாயகர் அவர்களே, உண்மையான மற்றும் உறுதியான நன்மைகள் எமது மக்களுக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இந்த முயற்சிகளை மேற்கொள்வது மிக முக்கியமானதாகும். தொற்றுநோய், காலநிலை மாற்றம், உலகளாவிய உணவு நிலைமை, நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைதல் மற்றும் ஆற்றலை சுத்தம் செய்வதற்கான மாற்றம் போன்ற உலகின் பெரிய மற்றும் சிறிய நாடுகளைப் பாதிக்கும் விடயங்களிலேயே இந்த ஆண்டு ஐ.நா. பொதுச்சபையின் முக்கிய கவனம் இருந்தது. உலகளாவிய இயல்புடன் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட இந்தப் பிரச்சினைகள் அனைத்து இலங்கையர்களினதும் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கின்றன என்பது மிகவும் தெளிவாக உள்ளது.

இந்த அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் இலங்கை சர்வதேசத்துடன் இந்த உரையாடலில் பங்கேற்க வேண்டும். விஞ்ஞானிகள், பொருளாதார வல்லுநர்கள், தனியார் துறை, தொழில்நுட்பத் தலைவர்கள், இளைஞர்கள் மற்றும் உணவின் முதன்மை உற்பத்தியாளர்கள் போன்ற உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் நாம் மிகவும் பரந்த அளவிலான பங்குதாரர்களை அணுக வேண்டும் என்பதும் தெளிவாக உள்ளது. இது பல்வேறு நிலைகளில் மற்றும் பல்வேறு துறைகளிலான உள்ளூர் மற்றும் உலகளாவிய சமூகத்தின் ஒரு குறுக்குவெட்டைக் குறிக்கின்றது. அதிமேதகு ஜனாதிபதி கூறியது போல், ´தொற்றுநோயின் பொருளாதாரத் தாக்கம் குறிப்பாக அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் கடுமையாக உள்ளது. இது நிலையான அபிவிருத்தி இலக்குகளுக்கான 2030 நிகழ்ச்சி நிரலை செயற்படுத்துவதில் கணிசமான ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது.´

எனவே, கௌரவ. சபாநாயகர் அவர்களே, இது கூட்டாக எம்மை எதிர்கொள்ளும் பெரும் சவால். சில முக்கியமான துறைகளில் இலங்கை தலைமை வகித்துள்ளதுடன், சுற்றுச்சூழல் செயற்பாட்டின் சில முக்கிய அம்சங்களுக்குத் தலைமை தாங்குகிறது எனக் கூறுவது சாதாரண பெருமை அல்ல. காலநிலை மாற்றத்தின் உச்சகட்டப் பாதிப்புக்குள்ளாகும் ஒரு நாடாக, ஐக்கிய இராச்சியத்தில் சி.ஓ.பி.26 இல் எமது வரவிருக்கும் ஈடுபாடு பொதுவான, ஒன்றுக்கொன்று சார்ந்திருக்கும் எதிர்காலத்திற்கான எமது உறுதிப்பாட்டை மட்டுமே அடிக்கோடிட்டுக் காட்டும்.

இந்த காரணங்களுக்காக இந்த ஆண்டு சர்வதேச சமூகம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையுடன் இலங்கையின் ஈடுபாடு சரியான நேரத்தில் மற்றும் இன்றியமையாததாக இருந்தது. உதாரணமாக, பருவநிலை மாற்றத்தைப் பொறுத்தவரை, கடந்த காலத்தின் குறைபாடுகளைத் திருப்பி, ஆரோக்கியமான உலகை சரிசெய்து மீண்டும் கட்டியெழுப்புவதற்கு எம்முடைய இளைஞர்கள் மற்றும் வருங்காலத் தலைமுறையினருக்கு நாம் கடமைப்பட்டிருக்கின்றோம். இந்த முயற்சியில் நாங்கள் உலகின் ஏனைய நாடுகளுடன் ஒற்றுமையுடன் கைகோர்த்திருக்கின்றோம் என்பதுடன், எமது ஜனாதிபதி ஐ.நா. பொதுச்சபை மற்றும் ஆற்றல் பற்றிய உயர் மட்ட உரையாடலில் எமது நிலைப்பாட்டை அறிவித்தார். இந்தப் பல காரணங்களுக்காக சர்வதேச சமூகம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையுடன் இந்த ஆண்டு இலங்கையின் ஈடுபாடு சரியான நேரத்தில் மற்றும் இன்றியமையாதது என அவர் குறிப்பிட்டார்.

உதாரணமாக காலநிலை மாற்றத்தில், எம்முடைய இளைஞர்கள் மற்றும் பிறக்காத தலைமுறையினருக்கு கடந்த கால சேதங்களை மாற்றியமைக்க மற்றும் ஒரு ஆரோக்கியமான பூமயை சரிசெய்ய மற்றும் மீண்டும் கட்டியெழுப்ப நாம் கடமைப்பட்டிருக்கின்றோம். இதில், நாங்கள் உலகளாவிய ரீதியில் கைகோர்த்துள்ளதுடன், உலகின் ஏனைய நாடுகளுடன் ஒற்றுமையுடன் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை மற்றும் ஆற்றல் தொடர்பான உயர் மட்ட உரையாடலில் அதிமேதகு ஜனாதிபதி எமது நிலைப்பாட்டை அறிவித்தார். நிலையான நைதரசன் முகாமைத்துவம் குறித்த கொழும்பு பிரகடனம் மற்றும் பொதுநலவாய நீல சாசன வெற்றியாளராக எம்மை அங்கீகரிப்பதன் மூலம் இந்த உலகளாவிய முயற்சிகளுக்கு இலங்கை பங்களித்துள்ளதாக அவர் தெரிவித்தார். 2050 க்குள் கார்பன் நடுநிலை நாடாக மாறுவதற்கான உலகளாவிய முயற்சிகளில் சேரவும், 2030 க்குள் புதுப்பிக்கத்தக்க மூலங்களிலிருந்து 70% ஆற்றல் வளங்களைப் பெறவும் உறுதிமொழி எடுத்துள்ளோம். நிலையான விவசாயத்தை ஊக்குவிக்கவும், வனப்பகுதியை அதிகரிக்கவும், நீர் மற்றும் பிளாஸ்டிக் மாசுபாட்டை எதிர்த்துப் போராடவும் நாம் முன்னெடுத்துள்ள எமது உள்நாட்டு முயற்சிகள் பொதுவாக வரவேற்கப்படுகின்றது.

இந்த லட்சிய இலக்குகளை அடைந்து கொள்ள, வரவிருக்கும் ஆண்டுகளில் தொழில்நுட்பம், நிதி ஒத்துழைப்பு மற்றும் உதவியை நாம் கணிசமாக அணுக வேண்டுமாதலால், சர்வதேச மற்றும் பொதுச் சபையில் எமது இருப்பு மிக முக்கியமானது. இந்த ஆண்டின் பிற்பகுதியில் இந்த செய்திகளை சி.ஓ.பி. 26 இல் மீண்டும் வலியுறுத்துவோம்.

கௌரவ. சபாநாயகர் அவர்களே, நாம் சமாளிக்க வேண்டிய மற்றொரு பெரிய சவால் சமூக ஒன்றிணைப்பு மற்றும் ஒற்றுமை ஆகும். உள்நாட்டு சச்சரவுகள், கசப்பு மற்றும் வெறுப்பு இல்லாத உண்மையான ஒருங்கிணைந்த நாடு இல்லாத நிலையில், நாம் சுவர்களைக் கட்டி எழுப்புவதிலும் பார்க்க பாலங்களைக் கட்ட வேண்டும். சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளையும் நாம் அணுக வேண்டும் மற்றும் 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் அடுத்தடுத்த தேர்தல்களில் அரசாங்கத்தின் மீது வைக்கப்பட்ட நம்பிக்கையையும் திருப்பிச் செலுத்த வேண்டும். செப்டம்பர் மாதம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நான் மேற்கொண்ட அறிக்கையில் தேசிய முயற்சிகளுக்கு புத்துயிரூட்டவும் மீண்டும் உயிர்ப்பிக்கவும் நாம் மேற்கொள்ளும் எமது முயற்சிகளைக் குறிப்பிட்டேன். நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதற்காக, நீடித்த மோதலுக்குப் பின்னர் மிகவும் அது மிகவும் அவசியமாகும். அதமேதகு ஜனாதிபதி நியூயோர்க்கில் குறிப்பிட்டது போல் ´நீடித்த சமாதானத்தை அடைந்து கொள்வதற்கு உள்நாட்டு நிறுவனங்களின் மூலம் அதிகமான பொறுப்புணர்வு, மறுசீரமைக்கப்பட்ட நீதி மற்றும் அர்த்தமுள்ள நல்லிணக்கத்தை வளர்ப்பது அவசியமாகும்.´

2009 ஆம் ஆண்டு கடினமாக வெற்றிகொண்ட சமாதானத்தை நிலைநாட்டவும், கட்டியெழுப்பவும் இந்த முயற்சியில் நாங்கள் ஆதரிக்கும் பல தேசிய நிறுவனங்களுக்கு நான் விளக்கினேன். குறிப்பாக, கௌரவ. சபாநாயகர் அவர்களே, காணாமல் போனவர்கள் குறித்த அலுவலகத்தின் முக்கிய செயற்பாடானது, காணாமல் போனவர்களின் பட்டியலை ஏனைய முகவர்களுடன் இணைந்து துயரப்பட்ட குடும்பங்களுக்கு இறுதிப்படுத்தலை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது எனபதை நான் வலியுறுத்தினேன். இந்த ஆண்டில் மட்டும், இழப்பீட்டு அலுவலகம் 3775 உரிமைகோரல்களை செயலாக்கியுள்ளது. தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தை அதன் 8 அம்ச செயற்றிட்டத்தை மீண்டும் செயற்படுத்தும் முயற்சியில் நாங்கள் ஆதரவு அளித்துள்ளோம். இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவானது, இலங்கையில் மனித உரிமைகளைப் பாதுகாக்கவும் ஊக்குவிக்கவும் அதன் ஆணையை நிறைவேற்றுவதில் நாங்கள் தொடர்ந்தும் ஆதரவளித்து வருகின்றோம். நிலையான அபிவிருத்தி இலக்கு 16 இன் கீழ், சமாதானம், நீதி மற்றும் வலுவான நிறுவனங்களை மேம்படுத்துவதற்காக ஒரு தேசிய வழிநடத்தல் குழு செயற்படுகின்றது என்பதை நாங்கள் சுட்டிக்காட்டினோம். இதற்கும் மேலதிகமாக, கடந்த பல ஆண்டுகளாக நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றை இலக்காகக் கொண்ட பல்வேறு முயற்சிகளை ஆணைக்குழுவுக்கு எடுத்துரைத்து, ஒரு முடிவுக்கு வந்ததுடன், பரிந்துரைகள் இந்த செயன்முறைகளை முன்னோக்கிச் செல்ல வழிவகுக்கும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம். எமது மண்ணின் அடுத்த தலைமுறை மகன்கள் மற்றும் மகள்களுக்கு ஒரு பிரகாசமான, வளமான மற்றும் அமைதியான இலங்கையை செயற்படுத்துவதற்காக நாம் இவை அனைத்தையும் நேர்மையுடனும், சிரத்தையுடனும் மேற்கொள்கின்றோம்.

சமீபத்தில் இத்தாலியின் பொலோக்னாவில் முடிவடைந்த ஜி 20 சர்வமத உரையாடலின் உரையில், மதம் மற்றும் ஏனைய சமூகக் கலாச்சார வேறுபாடுகளின் அடிப்படையிலான தடைகளைத் தாண்டுவதன் முக்கியத்துவத்தை எமது மாண்புமிகு பிரதமர் வலியுறுத்தினார். பொலோக்னாவில் நடைபெற்ற சர்வமத மன்றத்தில் மாண்புமிகு பிரதமரின் பங்கேற்பானது, உள்நாட்டு அமைதியையும் நல்லிணக்கத்தையும் வளர்ப்பதில் கல்வி மற்றும் இளைஞர்களின் முக்கிய பங்கை மேலும் எடுத்துரைத்தது. இந்த சர்வமத மன்றம் இலங்கையில் எடுத்துக்காட்டப்பட்ட எமது பிராந்தியத்தில் உள்ள பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் ஒரு பொருத்தமான தருணமாவதுடன், இந்தப் பன்முகத்தன்மை ஒரு தேசமாக எமது வலிமையின் அடித்தளம் என்பதை மீண்டும் வலியுறுத்துகின்றது. ´இந்த வேறுபாடுகளுக்கு மேல் உயர்ந்து, முதிர்ச்சியடைந்த தேசிய உணர்வை உருவாக்கும் சவாலுக்கு நாங்கள் பதிலளித்துள்ளோம்´ என அவர் குறிப்பிட்டார்.

கௌரவ. சபாநாயகர் அவர்களே, தேசத்திற்கும் உலகுக்கும் உங்களின் மூலமான எங்களின் செய்தி என்னவென்றால், நாம் பல உள்ளூர் மற்றும் உலகளாவிய சவால்கள் குறித்து குறிப்பிடுவதால், நாங்கள் பன்முகத்தன்மையைக் கொண்டாட விரும்புகின்ற அதே நேரத்தில் பலவீனத்தை விட வலிமைக்கு ஆதாரமாக இருக்கும் ஒற்றுமை, இலங்கை என்ற உணர்வு மற்றும் அடையாளத்தை உருவாக்க விரும்புகின்றோம். மாண்புமிகு பிரதமர் பொலோக்னாவில் தனது உரையில் குறிப்பிட்டது போல், ´நல்லிணக்கம் எமது காலத்தின் முக்கியமான தேவை. மோதல்கள் மற்றும் அதிகரித்து வரும் பதற்றங்கள் எம்மைச் சுற்றி மிகவும் தெளிவாக உள்ளன. அவர்களுடன் எங்களுக்கு ஆழ்ந்த கருத்து வேறுபாடுகள் இருந்த போதிலும், சமாதானத்தையும் ஸ்திரத்தன்மையும் எமது நாடுகளில் வாழும் அனைவருடனும் ஆரோக்கியமான உறவுகளிலிருந்து வருகின்றன.

இங்கே, வெறுப்பு வெறுப்பால் வெல்லப்படாது, மாறாக அன்பால் மட்டுமே வெல்லப்படுகின்றது என்பதை எமது மதம் எமக்குப் போதிக்கின்றது. கடந்த காலத்திலிருந்து பெறப்பட்ட மனக்கசப்புக்களைப் பற்றி விவாதிப்பதற்குப் பதிலாக, நாம் நிகழ்காலத்தில் கவனம் செலுத்த வேண்டும், இணக்கத்தின் தேவை, சகோதரத்துவம் மற்றும் புரிதலின் அவசரத் தேவையான இணைப்புக்களை எம்முடைய பார்வையில் இருந்து மாறுபட்ட பார்வைகளுடன் உருவாக்கினால், அதுவெ எம் அனைவருக்கும் காத்திருக்கும் உத்வேகம் தரும் புதிய எல்லையாகும்.´

இந்த முயற்சிகளில் சிவில் சமூகத்தின் பங்கை வலியுறுத்த விரும்புகின்றேன். சிவில் சமூகத்தின் பிரதிநிதிகள் நாம் வகுக்க விரும்பும் தீர்வுகளின் ஒருங்கிணைந்த பகுதியாகும். கௌரவ. சபாநாயகர் அவர்களே, அவர்கள் பிரச்சினையின் வெளிப்பாடு அல்ல, ஆனால் எமது பிரச்சினைகளைத் தீர்ப்பதில் இன்றியமையாத கூறாவர். இலங்கையில் அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகளை முடக்குவதாகக் கூறப்படும் அரசாங்கத்தின் முயற்சிகள் குறித்து கவலைகள் எழுப்பப்பட்டுள்ளன. இதற்கு மேல் எதுவும் இருக்க முடியாது. நாங்கள் சமூகத்துடன் தீவிரமாக ஈடுபட்டுள்ளதுடன், நல்லிணக்கத்திற்கு ஆதரவாக மற்றும் நிலையான அபிவிருத்தி இலக்கு 16 இன் செயன்முறைகளுக்கு ஆதரவாக அவர்களின் ஆற்றலையும் சந்தேகத்திற்கு இடமில்லாத திறன்களையும் பயன்படுத்த முயற்சிக்கின்றோம். ஜெனீவாவில் மனித உரிமைகள் பேரவையில் நான் மேற்கொண்ட உரையில் இதை நான் தெளிவாகக் கூறினேன், எமது மக்களின் முன்னேற்றத்திற்கான முயற்சிகளில் அவர்களை மதிப்புமிக்க பங்காளிகளாக நாங்கள் கருதுகின்றோம் என இந்த சபைக்கு உறுதியளிக்க விரும்புகின்றேன்.

கௌரவ. சபாநாயகர் அவர்களே, இந்த ஒருங்கிணைந்த நோக்கிற்கான முக்கிய சவால்களில் ஒன்று தீவிரவாதம் மற்றும் அதிலிருந்து பிறந்த பயங்கரவாதம் ஆகும். நாங்கள் ஒரு பிரதிநிதித்துவ அரசாங்கமாக, சர்வதேசப் பங்காளிகளுடனான நெருக்கமான ஒத்துழைப்புடன் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு, பரந்த அர்த்தத்தில் மனிதப் பாதுகாப்பை உறுதிப்படுத்துகின்றோம். இந்த சூழலில் கணக்கில் கொள்ளப்பட வேண்டிய கூட்டு தேசிய மற்றும் சர்வதேசப் பாதுகாப்பில் பல பரிசீலனைகள் உள்ளன. தனிப்பட்ட சுதந்திரங்களுக்கு உத்தரவாதம் அளிப்பது தேசியப் பாதுகாப்பு என்ற கருத்துக்கு எதிரானது அல்ல. உண்மையில், இது தனிநபர் உரிமைகளை அனுபவிக்க உதவும் ஒரு நிலையான மற்றும் பாதுகாப்பான சர்வதேச மற்றும் உள்நாட்டு ஒழுங்காகும். உன்னதமான புராணத்தின் பல தலைகள் கொண்ட ஹைட்ரா போல, ஒரு நாடு அல்லது பிராந்தியத்தில் ஒரு இயக்கம் தோற்கடிக்கப்படும்போது தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதம் வேறு இடங்களில் வளர்கின்றன. இதை நாம் பல நிகழ்வுகளில் பார்த்திருக்கின்றோம். ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட உலகில், முன்பு ஊடுருவ முடியாத தேசிய எல்லைகளை இத்தகைய இயக்கங்களும் தீவிரவாத சித்தாந்தங்களும் அர்த்தமற்றவையாக்குகின்றன. கௌரவ. சபாநாயகர் அவர்களே, எமது பதில் சமமான இயக்கத்துடன், நெகிழக்கூடியதாகவும் நிலையானதாகவும் இருக்க வேண்டும். நியூயோர்க் மற்றும் ஏனைய இடங்களில் உள்ள நட்பு நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்களுடனான எனது பரிமாற்றங்களின் போது, நெருக்கமான ஒத்துழைப்பு, உளவுத்துறை சேகரிப்பு மற்றும் பகிர்வு, அத்துடன் இந்த குற்றவியல் வலையமைப்புக்களின் நிதியுதவி மற்றும் தடை போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான கூட்டு நடவடிக்கை ஆகியவற்றில் நாங்கள் கூர்மையான கவனம் செலுத்தியுள்ளோம்.

ஐ.நா. பொதுச் சபையில் தனது உரையில் அதிமேதகு ஜனாதிபதி வலியுறுத்தியது போல், ´பயங்கரவாதம் என்பது, அதிலிருந்து மீளுவதற்காக குறிப்பாக உளவுத்துறைப் பகிர்வு போன்ற விடயங்களில் சர்வதேச ஒத்துழைப்பு தேவைப்படும் ஒரு உலகளாவிய சவாலாகும். இலங்கையில் கடந்த அரை நூற்றாண்டில் வன்முறை ஆயிரக்கணக்கான உயிர்களையும் பல தசாப்தங்களின் செழிப்பையும் கொள்ளையடித்துள்ளது.

இதுபோன்ற வன்முறைகள் இலங்கையில் மீண்டும் நடக்காது என்பதை உறுதி செய்வதில் எனது அரசாங்கம் உறுதியாக உள்ளது.

எனவே அதன் பின்னணியில் உள்ள முக்கிய பிரச்சினைகளைத் தீர்க்க நாங்கள் செயற்படுகின்றோம்.

இறுதியாக, கௌரவ. சபாநாயகர் அவர்களே, சர்வதேச சமூகத்துடன் தொடர்ச்சியான முனைப்புடன் ஈடுபடுவதன் மூலம் தேசத்திற்கான சிறந்த முடிவுகளைப் பெறுவதற்கான எமது முயற்சிகளில் நாங்கள் ஓய்வெடுக்க மாட்டோம் என நான் இலங்கை மக்களுக்கு உறுதியளிக்க விரும்புகின்றேன். வரும் மாதங்களில், இது தொடர்பான எமது முயற்சிகளில் பெருமளவிலான அவை உறுப்பினர்களுக்கும், தேசத்துக்கும் தொடர்ந்தும் தெரிவிக்க முயற்சிப்பேன்.

Posted in Uncategorized

லொஹான் ரத்வத்தேக்கு எதிராக மனு தாக்கல் செய்த 8 கைதிகளுக்கு பாதுகாப்பு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு

இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தேக்கு எதிராக மனு தாக்கல் செய்துள்ள 8 கைதிகளுக்கும் போதிய பாதுகாப்பு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மற்றும் அநுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகருக்கு ஆலோசனையளிக்குமாறு சட்ட மா அதிபருக்கு உயர் நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.

கடந்த 12 ஆம் திகதி இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தேவினால் அநுராதபுரம் சிறைச்சாலையில் துப்பாக்கி முனையில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக, குறித்த சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பூபாலசிங்கம் சூரியபாலன் உள்ளிட்ட 8 கைதிகள் மனு தாக்கல் செய்துள்ளனர்.

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வளிப்பு இராஜாங்க அமைச்சராக செயற்பட்ட இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே கடந்த 12 ஆம் திகதி மாலை அநுராதபுரம் சிறைச்சாலைக்கு வருகை தந்து, தாம் உள்ளிட்ட சில கைதிகளை சிறைக்கூடத்தில் இருந்து வௌியில் அழைத்து கொலை மிரட்டல் விடுத்தமையினூடாக தமது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக அறிவிக்குமாறு மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த அடிப்படை உரிமை மனுக்கள் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, முர்து பெர்னாண்டோ மற்றும் எஸ். துரைராஜா உள்ளிட்ட நீதியரசர் குழாம் முன்னிலையில் இன்று பரிசீலிக்கப்பட்டன.

மனுக்கள் தொடர்பிலான எழுத்துமூல ஆட்சேபனையை எதிர்வரும் 14 ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு சட்ட மா அதிபர் உள்ளிட்ட பிரதிவாதி தரப்பு மற்றும் மனுதாரர் தரப்புக்கு உத்தரவிட்ட நீதியரசர் குழாம், வழக்கை எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.

இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே, நீதியமைச்சர் அலி சப்ரி, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய மற்றும் அநுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகர் எச்.ஆர். அஜித் உள்ளிட்டோர் வழக்கின் பிரதிவாதிகளாவர்.

ஷ்ரிங்லாவை சந்தித்த தமிழ் கட்சிகள்

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லாவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகியவற்றின் பிரதிநிதிகள் சந்தித்து கலந்துரையாடினர்.

இந்திய இல்லத்திலேயே இந்தச் சந்திப்புகள் இடம்பெற்றுள்ளன.

தனிமைப்படுத்தல் உத்தரவை மீறியமைக்காக 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது

சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இதுவரையான காலப் பகுதியில் 80 ஆயிரத்துக்கும்மேற்பட்டவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த குற்றச்சாட்டுக்காக‍ இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் 110 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அதேநேரத்தில் நான்கு வாகனங்களும் பொலிஸாரினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

2020 ஒக்டோபர் 30 முதல் இதுவரையான காலப் பகுதியில் தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக மொத்தம்  80,055 பேர்கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை மேல் மாகாணத்தின் 13 நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களில் நேற்றைய தினம் 1,718 வாகனங்களில் பயணம் செய்த 2,596 நபர்கள்பொலிஸாரினால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களில் உரிய காரணமின்றி 52 வாகனங்களில் பயணித்த 99 நபர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

Posted in Uncategorized

சீனா – இந்தியா – அமெரிக்காவிற்கு தாரைவார்க்கப்படும் சிறிலங்கா!

நாட்டின் பெறுமதி மிக்க இடங்களை சீனாவுக்கு விற்பனை செய்தது மாத்திரம் அல்லாமல் மறுபுறம் இந்தியாவையும் அமெரிக்காவையும் திருப்திப்படுத்த மிகுதியுள்ள வளங்களையும் அரசாங்கம் விற்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பின் ஜே.சீ. அலவத்துவல தெரிவித்துள்ளார்.

கொழும்பு – எதுல்கோட்டையில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

இந்த நாட்டிலுள்ள வளங்களைப் பாதுகாப்பதாக அரசாங்கம் ஆட்சிக்கு வரமுன்னர் வாக்குறுதிகளை வழங்கியிருந்தது.

குறிப்பாக பிரதமர் மகிந்த ராஜபக்சவின்  ஆட்சி காலத்தில் ஷங்ரிலா ஹோட்டலுக்கு வழங்கிய இராணுவ தலைமையகத்தின் இடத்தையும் மீண்டும் அரசாங்கம் பொறுப்பேற்கும் என அரச தலைவர் கோட்டாபய ராஜபக்‌ச தெரிவித்திருந்தார்.

இன்று இரண்டு வருடங்கள் செல்லும் முன்னர், எல்லாம் தலைகீழாகியுள்ளது.

இந்தியாவின் வெளிவிவகார செயலாளர் இலங்கைக்கு வருவதற்கு முன்னர், எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில   மற்றும் விமல் வீரவன்ச   உள்ளிட்டவர்கள் திருகோணமலைக்கு சென்றுள்ளதாக அறிந்தோம்.

எனவே, இந்திய வெளிவிவகார செயலாளரின் இலங்கை விஜயமானது, திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை பெறுவதற்கும் ஐ.ஓ.சி  எரிபொருள் நிறுவன ஒப்பந்தத்தை நீடிப்பதற்கே.

யுகதனவி மின்சக்தி ஏகபோக உரிமையை அமெரிக்காவுக்கு வழங்கியதால், எமது நாட்டில் மின்துண்டிப்பை கூட அமெரிக்க அரசாங்கமே செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதேபோல் தான் எரிபொருளின் ஏகபோக உரிமையும் இந்தியாவுக்கு வழங்கப்படவுள்ளது. ஆகவே, ராஜபக்‌ச   குடும்ப நிறுவனம் இந்த நாட்டை ஏலம் விடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

இவ்வாறு ஒவ்வொரு நாடுகளுக்கும் எமது நாட்டு வளங்களின் ஏகபோக உரிமையை வழங்கினால், எமது குழந்தைகளின் எதிர்காலம் அல்லது எமது நாட்டின் எதிர்காலம் என்னவாகும் என்றும் அவர் மேலும் கேள்வி எழுப்பியுள்ளார்.