ஜப்பானின் கடற்படைக் கப்பல்கள் இலங்கையில்

page2image500824640

ஜப்பானிய கரையோர சுய-பாதுகாப்பு படையின் இந்தோ-பசுபிக் செயற்படுத்தல் 2021 (IPD21) அலகைச் சேர்ந்த மாபெரும் கப்பல்களில் ஒன்றான “JS KAGA (DDH-184)” மற்றும்  “JS MURASAME (DD-101)” ஆகியன கொழும்பு துறைமுகத்துக்கு 2021 ஒக்டோபர் 2 முதல் 4 வரையான காலப்பகுதியில் நல்லிணக்க விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளன.

இலங்கைக்கு விஜயம் செய்யும் முன்னர், பசுபிக் பிராந்தியத்தைச் சேர்ந்த சில நாடுகளுக்கு JMSDF கப்பல்கள் விஜயம் செய்துள்ளதுடன், பரஸ்பர மற்றும் பல்தேசிய கடல்சார் செயற்பாடுகளின் பங்கேற்றிருந்தன.

முரசாமே மற்றும் காகா ஆகிய இரு போர் கப்பல்களும் இலங்கைக்கு வருகை தருவது, இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கு சிறந்த சந்தர்ப்பமாகும் என ஜப்பான் தூதரகம் தெரிவித்துள்ளது.

Posted in Uncategorized

2022 ஆண்டுக்குள் இலங்கை புதிய பொருளாதார பாதையில் பயணிக்கும் – அஜித் நிவாட் கப்ரால்

2022 ஆண்டுக்குள் இலங்கை புதிய பொருளாதார பாதையில் பயணிக்கும் என்று மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.

நேற்று (01) மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் எதிர்வரும் 6 மாதங்களுக்கான மத்திய வங்கியின் நிதிக் கொள்கை அறிக்கையை வெளியிட்டார்.

இதுதெடார்பான ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அதேவேளை, நாட்டின் பொருளாதார வளர்ச்சியானது இவ்வருட முடிவில் 5 சதவீதமாகவும் 2022 இன் முதற்காலாண்டில் 6.5 சதவீதமாகவும் அமையும் என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்த அவர், NRFC மற்றும் RFC கணக்குகள் தொடர்பில் எந்தவொரு பீதியும் கொள்ளத் தேவையில்லை என்றும் மத்திய வங்கியின் ஆளுநர் கூறினார்.

இந்த கணக்குகள் தொடர்பில் எந்தவொரு மாற்றங்களையும் ஏற்படுத்துவது அரசாங்கத்தினதோ, இலங்கை மத்திய வங்கியினதோ அபிப்பிராயம் இல்லை என்று தெரிவித்த ஆளுநர் ,குறித்த கட்டமைப்பின் கீழ் முதலீடு செய்த எவருக்கும் பிரச்சினை ஏற்படவில்லை. அந்த நிதி பாதுகாப்பாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

வெளிநாடுகளில் இருந்து நிதியை அனுப்பும் போது இலங்கையிலுள்ள பொதுவான வங்கிக் கட்டமைப்பைப் பயன்படுத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டார். அவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்வதைத் தவிர்க்குமாறும் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் இறக்குமதியாளர்களிடம் கோரிக்கை விடுத்தார்.

கொவிட் தொற்றின் காரணமாக சிறிய மற்றும் நடுத்தர தொழில் துறையினருக்கு ஏற்பட்ட பாதிப்பை குறைப்பதற்காக 15,000 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்ய மத்திய வங்கி தீர்மானித்திருப்பதாக தெரிவித்த அவர் ,அனுமதி பெற்ற வர்த்தக வங்கிகள் மற்றும் தேசிய சேமிப்பு வங்கியுடனான நாணயக் கடிதங்களின் ஏற்றுக்கொள்ளல் நியதிகள் தொடர்பான ஆவணங்களின் கீழ் மேற்கொள்ளப்படுகின்ற தெரிவு செய்யப்பட்ட அத்தியாவசியமற்ற அல்லது அவசர தேவையற்ற பொருட்களின் இறக்குமதி தொடர்பில் விதிக்கப்பட்ட 100% எல்லை வைப்புத் தொகை கட்டுப்பாடு இன்று முதல் நீக்கப்படுவதாகவும் கூறினார்.

இலங்கையின் பொருளாதாரம் எதிர்கொண்டுள்ள கடுமையான டொலர் இருப்பு பற்றாக்குறை காரணமாக, இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் பேராசிரியர் W.D.லக்ஷ்மன் தலைமையில் கடந்த செப்டெம்பர் மாதம் 09ஆம் திகதி, மத்திய வங்கியினால் அத்தியாவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்வது தொடர்பில் 100% நிதி வைப்பு கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதற்கமைய, குறித்த குறித்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட போதிலும், வர்த்தகர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் பொறுப்புடன் செயற்படுமாறு தெரிவித்த அவர், நாட்டின் பொருளாதாரம் மற்றும் செலாவணி வெளியேற்றத்தினை கருத்திற் கொண்டு, எதிர்வரும் 6 மாதங்களுக்கு மிகையான இறக்குமதிகளை மேற்கொள்ள வேண்டாமென இறக்குமதியாளர்களிடம் ஆளுநர் கேட்டுக்கொண்டார்.

கடந்த காலத்தில் ´ஆசியாவின் ஆச்சரியம்´ என்றும் ´ஆசியாவின் அடுத்த அதிசயம்´ என்றும் வர்ணிக்கப்பட்ட எமது நாடு, கடந்த சில வருடங்களில் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்திருக்கின்றது. கொவிட் – 19 வைரஸ் பரவல் காரணமாக எமது பொருளாதாரம் பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்ளவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.ஆனால் இது எமது நாட்டிற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட விடயமல்ல. இருப்பினும் தற்போது பொருளாதாரத்தின் முக்கிய துறைகள் நேர்மறையான துலங்கலைக் காண்பிக்கின்றமை மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.

அதேவேளை கொவிட் – 19 வைரஸ் பரவல் நெருக்கடியை எதிர்கொள்வதில் அரசாங்கத்தினாலும் மத்திய வங்கியினாலும் வழங்கப்பட்ட பங்களிப்புக்கள் உரியவாறான அங்கீகாரத்தைப் பெறவில்லை. உண்மையில் அவை பாராட்டப்பட வேண்டியவையாகும். குறிப்பாக கொவிட் – 19 சௌபாக்கிய மீள்நிதி வழங்கல் திட்டத்திற்கென 165.5 பில்லியன் ரூபாவும் அரசாங்கத்திற்கு நிதி ரீதியான உதவிகளை வழங்குவதற்கென இரண்டாயிரத்து 2 பில்லியன் ரூபாவும் மத்திய வங்கியினால் ஒதுக்கப்பட்டது.

எனினும் இவ்வாறான சவால்களின் போது அரசாங்கமோ அல்லது மத்தியவங்கியோ மாத்திரம் தனித்துச்செயற்பட்டு, அதனை வெற்றிகொள்ள முடியாது. மாறாக வங்கிக் கட்டமைப்புக்கள், வங்கியல்லாக் கட்டமைப்புக்கள், ஏற்றுமதியாளர்கள், இறக்குமதியாளர்கள், அபிவிருத்திப் பங்காளிகள், முதலீட்டாளர்கள், சேவை வழங்குனர்கள், வெளிநாடுகளிலிருந்து பணம் அனுப்புவோர் உள்ளிட்ட அனைத்துத்தரப்பினரதும் ஒத்துழைப்புடன் இணைந்து பணியாற்றுவதன் ஊடாகவே பொருளாதார நெருக்கடியிலிருந்து மீளமுடியும் எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் கூறினார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ் சந்திப்பு

நல்லிணக்க நடவடிக்கைகளின் முன்னேற்றம், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் மீளாய்வு, சிவில் சமூகத்துடனான ஈடுபாடு, நிலையான அபிவிருத்தி இலக்கு 16 முன்முயற்சி மற்றும் மனித உரிமைகள் சபையுடனான இலங்கையின் ஒத்துழைப்பு ஆகியவை குறித்து ஐரோப்பிய தூதுக்குழுவுக்கு வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ் விளக்கமளித்ததாக வெளிநாட்டமைச்சு தெரிவித்துள்ளது.

இச் சந்திப்பு குறித்து வெளிநாட்டமைச்சு விடுத்துள்ள அறிக்கையில்,

2021 அக்டோபர் 01ஆந் திகதி, வெள்ளிக்கிழமை வெளிநாட்டு அமைச்சில் வைத்து ஐரோப்பிய ஒன்றியத்தின் ஐந்து பேர் கொண்ட தூதுக்குழுவுடன் நடைபெற்ற சந்திப்பில் இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான ஆக்கபூர்வமான, நட்பான மற்றும் வழக்கமான ஈடுபாட்டை வெளிநாட்டு அமைச்சர் (பேராசிரியர்) ஜீ.எல். பீரிஸ் வரவேற்றார். இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியக் குழுவிற்கு ஐரோப்பிய ஆணைக்குழுவின் வர்த்தகத்திற்கான பொதுப் பணிப்பாளர் நாயகமான சிரேஷ்ட ஆலோசகர் நிகோலாஸ் ஸைமிஸ் மற்றும் ஐரோப்பிய வெளிவிவகார சேவையின் தெற்காசியாவின் பிரிவுத் தலைவர் இயோனிஸ் ஜியோகாரகீஸ்-ஆர்கிரோபோலோஸ் ஆகியோர் தலைமை வகித்தனர். இந்த சந்திப்பில் ஐரோப்பிய ஒன்றியம் – இலங்கை ஆகியவற்றுக்கிடையிலான ஒத்துழைப்பு மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடனான இலங்கையின் ஈடுபாடுகள் தொடர்பான விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

இந்தக் கலந்துரையாடலில், நல்லிணக்க நடவடிக்கைகளின் முன்னேற்றம், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் மீளாய்வு, சிவில் சமூகத்துடனான ஈடுபாடு, நிலையான அபிவிருத்தி இலக்கு 16 முன்முயற்சி மற்றும் மனித உரிமைகள் சபையுடனான இலங்கையின் ஒத்துழைப்பு ஆகியவை குறித்து ஐரோப்பிய தூதுக்குழுவுக்கு வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ் விளக்கமளித்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்துடனான இலங்கையின் உறவுகள் பொருளாதார மற்றும் அபிவிருத்தி ஒத்துழைப்பு உட்பட பரந்த அளவிலானதும் மற்றும் பரஸ்பரம் நன்மை பயப்பதுமாகும் என வெளிநாட்டு அமைச்சர் குறிப்பிட்டார். ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையின் இரண்டாவது பெரிய ஏற்றுமதி இடமாக இருப்பதால் (2020 இல்), ஐரோப்பிய ஒன்றிய ஜி.எஸ்.பி. + வரிச் சலுகையின் நேர்மறையான பங்களிப்பையும், நாட்டின் சமூகங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதில் அதன் நன்மைகளையும் வெளிநாட்டு அமைச்சர் எடுத்துரைத்தார்.

அமைச்சருடனான கலந்துரையாடல்களில், இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான பலதரப்பட்ட ஈடுபாட்டை வரவேற்ற ஐரோப்பிய ஒன்றியம் தூதுக்குழு, தொடர்ச்சியான ஒத்துழைப்பை உறுதி செய்தது.

இந்த விஜயத்தின் போது, ஐரோப்பிய ஒன்றியம் – இலங்கை கூட்டு ஆணைக்குழு செயன்முறை மற்றும் ஜி.எஸ்.பி. + வரிச் சலுகை மூன்றாம் சுழற்சி மீளாய்வு செயன்முறை (2020ஃ2021) தொடர்பான சந்திப்புக்களில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழு பங்கேற்றது. இந்த சந்திப்புககளில் 30 க்கும் மேற்பட்ட வரிசை முகவர்களைக் கொண்ட அரசாங்கத்தின் பரந்த அளவிலான பங்குதாரர்கள் கலந்து கொண்டனர்

இந்தத் தூதுக்குழுவானது, ஐரோப்பிய ஆணைக்குழு மற்றும் ஐரோப்பிய வெளி நடவடிக்கை சேவையின் சிரேஷ்ட அதிகாரிகளை உள்ளடக்கியிருந்ததுடன், இந்த விஜயம் ஐரோப்பிய ஒன்றியத்துடனான இலங்கையின் தொடர்ச்சியான ஈடுபாட்டின் ஒரு பகுதியாகும். இந்த விஜயத்தின் போது அரசாங்கத்தின் ஏனைய சிரேஷ்ட பங்கேற்பாளர்களையும் இந்தத் தூதுக்குழு சந்தித்தது. கொழும்பிற்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழுவின் தூதுவர் டெனிஸ் சாய்பி, வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் (பேராசிரியர்) ஜயநாத் கொலம்பகே மற்றும் வெளிநாட்டு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.

இந்திய வெளியுறவுச் செயலாளர் இன்று இலங்கைக்கு விஜயம்

வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே அவர்களின் அழைப்பின் பேரில்  இந்திய வெளியுறவுச் செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா 2021 அக்டோபர் 2 – 5 வரையான காலப்பகுதியில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

இந்த விஜயம் நீண்டகால பலதரப்பட்ட உறவுகளை ஒருங்கிணைப்பதற்கும் இரு நாடுகளுக்கிடையிலான இருதரப்புக் கூட்டுறவுகளை மேம்படுத்துவதற்கும் பங்களிக்கும். வெளியுறவுச் செயலாளர் ஷ்ரிங்லாவின் இலங்கை வெளியுறவுச் செயலாளருடனான இருதரப்புக் கலந்துரையாடலுக்கும் மேலதிகமாக, ஜனாதிபதி, பிரதமர், நிதி அமைச்சர்  மற்றும் வெளிநாட்டு அமைச்சர் ஆகியோரையும் சந்திக்கவுள்ளார்.

விஜயம் செய்யவுள்ள இந்திய வெளியுறவுச் செயலாளர் இலங்கையில் தங்கியிருக்கும் போது கண்டி,  திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணத்திற்கு விஜயங்களை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தியாவின் வெளியுறவுச் செயலாளராகப் பதவியேற்றதன் பின்னர், ஸ்ரீ ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும்  முதலாவது சந்தர்பபம் இதுவாகும்.

 

Posted in Uncategorized

ஊடகவியலாளர்கள், செயற்பாட்டாளர்களை மீறி அடக்குவதாக தேரர் குற்றஞ்சாட்டு

மோசடிக்காரர்களின் செயற்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ள ஸ்ரீலங்கா அரசாங்கம் உண்மையை அம்பலப்படுத்தும் ஊடகவியலாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களை சட்டத்தை மீறி அடக்குவதாக தென்னிலங்கை தேரர் ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சரத் வீரசேகர  போன்ற முட்டாள்தனமான அமைச்சர்களின் செயற்பாடுகள் மற்றும் கருத்துகள் காரணமாக ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை தக்கவைத்துக்கொள்ள முடியாத நிலை இன்று ஏற்பட்டுள்ளதாக உலப்பனே சுமங்கல தேரர்  இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.

சரத் வீரசேகர போன்ற முட்டாள் அமைச்சர்களைக் கொண்டு ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் தொழிற்சங்கத் தலைவர்களை அச்சுறுத்துகின்றனர். இந்த நாட்டின் சட்டங்களை மேலும் வலுப்படுத்த வேண்டுமென சரத் வீரசேகர குறிப்பிடுகின்றார்.

இந்த நாட்டில் உள்ள சட்டங்கள் இந்த நாட்டை நிர்வகிக்க போதாதா? இவர்களுக்கு எதிரான மக்களின் ஆர்ப்பாட்டங்கள், எதிர்ப்புகளை அடக்குவதற்கு புதிய சட்டத்தை இவர்கள் வேண்டுமென்கின்றனர். இந்த நாட்டில் இராணுவ ஆட்சியை ஏற்படுத்த முயல்கின்றனர்.

சீனி மோசடி, வெள்ளைப்பூண்டு மோசடி மாபியாக்களுக்கு எதிராக இவர்கள் எடுத்த சட்ட நடவடிக்கை என்ன? மாபியாக்காரர்களின் அருகில் சென்று மண்டியிட்டு, ஊடக நிறுவனங்களுக்குள் ஒழிந்துகொண்டு, கீழ்த்தரமான ஊடகப் பிரசாரத்தை எதிர்பார்க்கின்றனர்.

இவர்கள் மாபியாக்களுக்கு எதிராக எவ்வித சட்ட நடவடிக்கையையும் எடுக்கமாட்டார்கள். இந்த விடயங்களை அம்பலப்படுத்தும் ஊடகவியலாளர்களை இன்று விசாரணைக்கு அழைக்கின்றனர்.

அரசாங்கத்திற்கு எதிராக ஏதாவது ஒரு கருத்தை வெளியிட்டால் சட்டத்தை மீறி இவர்கள் அடக்குகின்றனர். ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை தக்கவைத்துக்கொள்ள முடியாத நிலை இன்று ஏற்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் இந்த நாட்டிற்கு வருகைதந்துள்ள இந்த சந்தர்ப்பத்தில் சரத் வீரசேகர (sarath weerasekara) போன்ற முட்டாள் அமைச்சர்களின் செயற்பாடுகள் மேலும் பாதிப்பினை ஏற்படுத்தும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

அரச ஊழியர்களை பணிக்கு அழைப்பது குறித்த சுற்று நிரூபம் வெளியிடப்பட்டுள்ளது

நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் இன்று முதல் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், அரச ஊழியர்களை பணிக்கு அழைப்பது குறித்த சுற்று நிரூபம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த சுற்று நிரூபம் பொது நிர்வாக அமைச்சரின் செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, நாடு மீளத் திறக்கப்படும் செயற்பாடுகளின்போது, அரச அலுவலகங்கள் ஊடாக வழங்கப்படும் அத்தியாவசிய சேவைகளைத் தடையின்றி முன்னெடுத்துச்செல்வதற்கு தேவையான ஆளணியினரை அடையாளம் கண்டு, கடமைக்கு அழைக்கப்பட வேண்டும் என்றும், அவ்வாறு ஊழியர்களைச் சேவைக்கு அழைக்கும் அதிகாரம் நிறுவன பிரதானிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

உத்தியோகப்பூர்வ வாகனங்களைக் கொண்டுள்ளவர்கள் மற்றும் நிறுவனத்தால் வழங்கப்படும் போக்குவரத்து வசதிகளைப் பெற்றுக்கொள்ளும் ஊழியர்களுக்கு மேற்படி நியதி பொருந்தாது எனவும், அவர்கள் வழமை போலக் கடமைக்குச் சமுகமளிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கடமைகளுக்கு அழைக்கப்படும் அதிகாரிகளைத் தவிர்ந்த மற்றைய அனைவரும் ஒன்லைன் முறைமை ஊடாகக் கடமையாற்ற வேண்டும் என்றும், கடமைகளுக்காக அலுவலகத்துக்கு அழைக்கப்படும் ஊழியர்கள் பணியல்லா நாட்களில் ஒன்லைன் முறைமை ஊடாகக் கடமையாற்ற வேண்டும் எனவும் குறித்த சுற்றுநிருபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கடமைக்கு அழைக்கப்படும் அதிகாரிகள் மற்றும் ஒன்லைன் முறைமை ஊடாகக் கடமையாற்றும் ஊழியர்களுக்கான வசதிகள் வழங்குதல் மற்றும் அவசியமான சந்தர்ப்பங்களின்போது வேறு இடங்களில் கடமையாற்ற தற்காலிகமாக வாய்ப்பளிக்கும் அதிகாரம் அமைச்சின் செயலாளர் மற்றும் நிறுவன பிரதானிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் அரச நிறுவனங்களுக்கு ஊழியர்கள் கடமைக்கு அழைக்கப்படும்போது கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், விசேட நோய் நிலைமைகளைக் கொண்டவர்களைக் கடமைக்கு அழைக்க வேண்டாம் எனவும் அவ்வாறானவர்களின் சேவை கட்டாயம் தேவைப்படும் சந்தர்ப்பங்களில் மாத்திரம் அவர்கள் கடமைக்குச் சமுகமளிக்கவும், வீடு செல்லவும் விசேட கால எல்லை மற்றும் வசதிகளை வழங்க நிறுவனத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

மேலும், சுகாதாரத்துறை ஊழியர்களைக் கடமைக்கு அழைக்கும் விதம் தொடர்பில் சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஆகியோர் ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.

சிறுவர் நலனை மையப்படுத்தியே பிரதேச அபிவிருத்தி சிறுவர் தின உறுதிப்பிரமானத்தில் தவிசாளர் நிரோஷ்

சிறுவர்களின் நலன்களுக்கும் உரிமைகளுக்கும்  முன்னுரிமையளித்தே  பிரதேசத்தின் அபிவிருத்தியினைத்திட்டமிட்டு நடைமுறைப்படுத்தி வருவதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ)  யாழ் மாவட்ட அமைப்பாளரும், வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளருமான   தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

இன்று (ஓக்டோபர் 01) காலை சபையின் அபிவிருத்தியினை நடைமுறைப்படுத்துதல் தொடர்பான பிரதேச சபைக் கூட்டம் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறுவர் தினம் ஆகையினால் சிறுவர் தொடர்பான விடயம் முக்கியத்துவப்படுத்தப்பட்டது.

இக் கூட்டத்தில், சபையின் எல்லைப் பரப்பிற்குள்; சிறுவர்களின் உரிமைகளுக்கும் நலன்களுக்கு முன்னுரிமையளித்தே அபிவிருத்தியினையும் கருமங்களையும் திட்டமிட்டு நடைமுறைப்படுத்துவதற்கான உறுதி மொழியினை மக்கள் பிரதிநிதிகளும் சபையின் செயலாளர் உள்ளிட்ட உத்தியோகத்தர்களும் எடுத்துக்கொண்டனர்.

இவ் உறுதிமொழியினை தொடர்ந்து உரையாற்றுகையிலேயே தவிசாளர்;, சிறுவர்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் அதிகரித்தே வருகின்றன. அத்துடன் சிறுவர்கள் சமூகத்தில் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளை பாரிய பிரச்சினைகளாக கருதாமல் சகஜமாக விட்டுவிடும் துர்ப்பாக்கிய நிலைமையும் காணப்படுகின்றது. இதற்கு எதிராக மக்கள் பிரதிநிதிகள் சமூகத்தில் விழிப்பினை ஏற்படுத்துவதுடன் காத்திரமாகவும் செயற்படவேண்டும்.   சகல அரச, தனியார், அரசசார்பற்ற தாபனங்களும் தமது செயற்றிட்டங்களில் சிறுவர்கள் தொடர்பான நலன்களுக்கு முக்கியத்துவமளிக்க பொறுப்பளிக்கப்பட்டுள்ளது.

எமது உள்ளுராட்சி மன்றத்திற்கு சிறுவர்களின் பாதுகாப்புத் தொடர்பில் பாரிய பொறுப்புள்ளது. பிரதேசத்தில் சிறுவர்களின் உடல் உள முன்னேற்றத்தினை நோக்காகக் கொண்ட உட் கட்டமைப்பினை ஏற்படுத்த வேண்டிய பொறுப்புள்ளது. வருடாவருடம் எமது வரவு செலவுத்திட்டம் ஊடாக சிறுவர் நலத்திட்டங்களுக்கு நாம் முன்னுரிமை அளிக்கின்றோம்.
பிரதேசத்தில் சிறுவர்களுக்கான பாலர் கல்வி வசதிகளை மேம்படுத்தும் திட்டங்களைச் செயற்படு;த்தி வருகின்றோம். பிரதேச சபையின் முன்பள்ளிகளை வசதிக்குறைவான இடங்களில் உருவாக்கி வருகின்றோம். இவ்வாறாக ஆவரங்கால் முன்பள்ளி சிறப்பாக இயங்கியுள்ளது. இருபாலையில் மேலும் ஒரு நவீன முன்பள்ளியை அமைத்து வருகின்றோம்.

சபை, நூலக வாரத்தினைக் கூட சிறுவர்களின் தேடலை அதிகரித்தல் என்ற தொனிப்பொருளிலேயே நடத்தியது. ஆயுர்வேத வைத்தியசாலைகள் ஊடாக சிறுவர்களின் மருத்துவத் தேவைகள் விடயத்தில் இயங்குகின்றோம். பிரதேசத்தின் எந்த அபிவிருத்தியிலும் சிறார்களின் நலன்கள் பற்றிச் சிந்தித்தே முடிவுகள் எடுக்கின்றோம். அபிவிருத்தியில் சிறுவர்களின் அபிப்பிராயங்களும் உள்வாங்கப்படவேண்டும்.  அபிவிருத்திகளில் பிள்ளைகள் உச்ச அளவில் எப்படிப்பயனடைவர் என்பதை ஆராய்கின்றோம். முன்பள்ளிக் கல்வி முறை தொடர்பில் நடளாவிய ரீதியில் பலகுறைபாடுகளும் பிரச்சினைகளும் உள்ளன. முன்பள்ளிக் கல்வியில் அரசின் சரியான மறுசீரமைக்கப்பட்ட ஒழுங்கு விதிகள் அவசியமாகவுள்ளன.

இவ் வருடம் நாம் வலிகாமம் கிழக்கில் பொது சிறுவர் பூங்காவினை தாபித்து உள்ளோம். மேலும் பாடசாலை மாணவர்கள் பயன்படுத்தும் வீதிகளை முன்னுரிமைப்படுத்தி அமைத்துள்ளோம். சிறுவர்கள் நாளைய தலைவர்கள் என்ற வகையில் அவர்களது சிறுவர் நலன்களை மேம்படுத்தத் தக்க வகையில் தொடர்ந்தும் எமது சபை செயலாற்றும். அபிவிருத்தியில் சிறுவர்களின் அபிப்பிராயங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

Posted in Uncategorized

அடுத்தவாரம் கூடுகின்றது நாடாளுமன்றம் 

எதிர்வரும் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருப்பதாக சபை முதல்வரும் அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

அதன்படி நாடாளுமன்றமானது ஒக்டோபர் 4ஆம் திகதி தொடக்கம் 8ஆம் திகதி வரை ஐந்து நாள்கள் கூடுவதற்கும் நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி கூடவுள்ள 4 நாள்களுக்கும் நடைபெறவுள்ள நிழ்ச்சி நிரல்,

* ஒக்டோபர் 4ஆம் திகதி திங்கட்கிழமை முழு நாளும் வாய்மூல விடைக்கான கேள்விகளுக்கான விசேட நாடாளுமன்ற அமர்வு தினமாக ஒதுக்கப்பட்டுள்ளது.

பல்வேறு காரணங்களால் இதுவரை நாடாளுமன்றத்தில் கேட்கப்படாத வாய்மூல விடைகளுக்கான 40 கேள்விகளுக்காக முற்பகல் 10 மணி தொடக்கம் பிற்பகல் 4.30 வரையான நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

* ஒக்டோபர் 05ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றம் முற்பகல் 10மணிக்குக் கூடவுள்ளது.

அதன்படி முற்பகல் 11 மணி தொடக்கம் பிற்பகல் 4.30 மணி வரை பெறுமதிசேர் வரிச் (VAT) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள், உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள், நிதிச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் என்பன விவாதிக்கப்பட்டு அங்கீகரிக்கப்படவுள்ளன.

* ஒக்டோபர் 6ஆம் திகதி புதன்கிழமை முற்பகல்11 மணி தொடக்கம் பிற்பகல் 4.30 மணிவரை பெற்றோலிய வளங்கள் சட்டமூலம் (இரண்டாம் மதிப்பீடு) விவாதிக்கப்பட்டு அங்கீகரிக்கப்படவுள்ளது.

* ஒக்டோபர் 7ஆம் திகதி வியாழக்கிழமை முற்பகல் 11.00 மணி தொடக்கம் பிற்பகல் 4.30 மணிவரை தேருநர்களைப் பதிவுசெய்தல் (திருத்தச்) சட்டமூலம் (இரண்டாம் மதிப்பீடு), ஊழியர் சகாய நிதிய (திருத்தச்) சட்டமூலம் (இரண்டாம் மதிப்பீடு) மற்றும் ஊழியர் சேமலாப நிதியச் சட்டத்தின் கீழ் கட்டளைகள் என்பன விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன.

* ஒக்டோபர் 8ஆம் திகதி வெள்ளிக்கிழமை முற்பகல் 11.00 மணி தொடக்கம் பிற்பகல் 4.30 மணிவரை 2021ஆம் ஆண்டு நடுப்பகுதியின் நிதி நிலைமைகள் தொடர்பான அறிக்கை தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதம் இடம்பெறும்.

அத்துடன், செவ்வாய்க்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை முற்பகல் 10 மணி முதல் முற்பகல் 11.00 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது என செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், செவ்வாய்க்கிழமை முதல் வியாழக்கிழமை வரை தினமும் பிற்பகல் 4.30 மணி முதல் 4.50 மணி வரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை மற்றும் வியாழக்கிழமை ஆகிய தினங்களில் பிற்பகல் 4.50 மணி முதல் 5.30 மணி வரையான நேரம் ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான விவாதத்துக்கும், புதன்கிழமை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான விவாதத்துக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

சுவீடனால் விதிக்கப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாடுகள் நீக்கம்

கொரோனாவை கட்டுப்படுத்த சுவீடனால் இலங்கைக்கு விதிக்கப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன.

இன்று (01) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த தடை நீக்கப்பட்டுள்ளது.

இலங்கை சுற்றுலாத் துறையின் தலைவர் கிமர்லி பெர்னாடோ (Kimarli Fernado) இதை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் இன்று ஊரடங்கு நீக்கப்படுவதுடன், இலங்கையை பல நாடுகள் தமது சிவப்பு பட்டியலில் இருந்து நீக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இறக்குமதிக்கான நிதி வைப்பு கட்டுப்பாடுகள் உடனடியாக நீக்கம்

அத்தியாவசியமற்ற பொருட்கள் இறக்குமதி செய்யும் போது விதிக்கப்பட்டிருந்த நிதி வைப்பு கட்டுப்பாடுகளை உடனடியாக நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் சற்று முன்னர் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆறு மாதங்களுக்கான நிதி கொள்கை குறித்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை நீக்குவதன் மூலம் வர்த்தகர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் கடுமையான பொறுப்புடன் செயல்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இலங்கை பொருளாதாரம் எதிர்கொள்ளும் கடுமையான டொலர் இருப்பு பற்றாக்குறை காரணமாக இரண்டு வாரங்களுக்கு முன்பு, 623 அத்தியாவசியமற்ற பொருட்களுக்கு கடுமையான இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.

இதேவேளை, புதிய பொருளாதாரத் திட்டம் அடுத்த ஆறு மாதங்களுக்கு இலக்கு வைக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் முன்னர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.