ஜீ.எஸ்.பீ பிளஸ் வரிச்சலுகையை நீக்க வேண்டாமென ஐரோப்பிய ஒன்றிய குழுவினரிடம் சஜித் கோரிக்கை

ஜீ.எஸ்.பீ பிளஸ் வரிச்சலுகையை நீக்க வேண்டாமென ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளிடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்துக் கலந்துரையாடினர்.

இந்த விடயம் குறித்து  எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போதே, ஜீ.எஸ்.பீ பிளஸ் வரிச்சலுகையை நீக்க வேண்டாமென ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளிடம் எதிர்க்கட்சி தலைவர் கோரியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதியமைச்சரினை சந்தித்து பேசியது ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் குழு!

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவினருக்கும்,  நீதியமைச்சர் அலி சப்ரிக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்படும் ஜி.எஸ்.பி ப்ளஸ் வரிச்சலுகையை எதிர்காலத்திலும் பெற்றுக்கொள்வது தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் இலங்கைக்கு வழங்கப்படும் சலுகை குறித்து சாதகமான நடவடிக்கைகளை எடுப்பதாக ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் இதன்போது, குறிப்பிட்டதாக நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் அவர்கள் சாதகமான பதில்களை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்கம்

நாட்டில் பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் முதலாம் திகதி அதிகாலை 4 மணி முதல் நீக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு உத்தரவை நீக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார் என்றும் புதிய கட்டுப்பாடுகள் மற்றும் சுகாதார வழிகாட்டுதல்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

இதே வேளை ஒக்டோபர் 01 ஆம் திகதி முதல் ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும், இரண்டு வாரங்களுக்குள் எந்த ரயில்களும் இயக்கப்பட மாட்டாது என்று போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

அடுத்த இரண்டு வாரங்களுக்கு மாகாணங்களுக்கு இடையே பஸ்கள் இயக்குவதைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்ட அவர், சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைக்கு அமையவே இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஒக்டோபர் 1 முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்கப்பட்ட பின்னர், வழமை போல மாகாணங்களுக்கு இடையே பஸ்கள் இயக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

Posted in Uncategorized

மன்னார் பிரதேச சபைக்கான புதிய தவிசாளர் தெரிவு: மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவு

மன்னார் பிரதேச சபைக்கான புதிய தவிசாளரை நியமித்து, வர்த்தமானி வெளியிடுவதை தடுத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றத்தால், வடமாகாண உள்ளூராட்சி   ஆணையாளருக்கு இன்று  (29) இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வடமாகாண ஆளுநரால், மன்னார் பிரதேச சபை தவிசாளர் பதவி மற்றும் அவரது உறுப்புரிமை நீக்கப்பட்டு, கடந்த 13 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி, தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிரினால், நேற்று  (28), கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில், ரிட்   மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த மனுவை இன்று (29) ஆராய்ந்த சோபித்த ராஜகருணா மற்றும் தம்மிக்க கனேபொல ஆகிய நீதிபதிகள் குழாம், இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

குறித்த மனு தொடர்பிலான விசாரணைகள் நிறைவடையும் வரை, இந்த உத்தரவு செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முஜாஹிர் சார்பில், சட்டத்தரணிகளான என்.எம்.ஷஹீட், ருஷ்தி ஹபீப் உள்ளிட்ட குழாமினர் வாதங்களை முன்வைத்திருந்தனர்.

மன்னார் பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவு, இன்று (29) நடைபெற்ற நிலையிலேயே,  இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மன்னார் பிரதேச சபையின் புதிய தவிசாளராக, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட உறுப்பினர் எம்.ஐ.எம். இஸ்ஸதீன் தெரிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வரலாறு தெரியாமல் சிறுபிள்ளைத் தனமாகக் கருத்திடக் கூடாது – டெலோ செயலாளர் நாயகம் ஜனா

தமிழீழ விடுதலை இயக்கத்திற்கு நெடிய நீண்ட வரலாறு இருக்கின்றது. இந்த விடயங்கள் தெரியாமல் தமிழ்த் தேசியத்தின் குழந்தைப் பிள்ளைகள் கருத்துக்கள் கூறுவது சிறுபிள்ளைத் தனமானது என பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) தொடர்பில் அண்மைக் காலங்களில் வெளிவந்த கருத்துக்கள் தொடர்பில் குறிப்பிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை ஆரம்பிப்பதற்கு முயற்சி எடுத்த கிழக்கிலங்கை செங்தியாளர் சங்கம் முதலாவதாகச் சந்தித்த கட்சி தமிழீழ விடுதலை இயக்கம் தான். அதனைத் தொடர்ந்து தான் ஏனைய கட்சிகளை அந்த அமைப்பு சந்தித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. தமிழீழ விடுதலை இயக்கத்திற்கு ஒரு பெரிய நீணட வரலாறு இருக்கின்றது. தமிழீழ விடுதலை இயக்கம் தான் ஆயுதப் போராட்ட இயக்கங்களிலே முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்ட இயக்கம். இதில் சில காலம் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின்  தலைவர்  பிரபாகரன்  கூட இருந்ததாக வரலாறுகள் உண்டு.

தமிழீழ விடுதலை இயக்கம் தான் ஒரு பாதுகாப்புப் படையினரின் அறணை முற்றுமுழுதாக அழிப்பு நடவடிக்கையினை மேற்கொண்டு அதனை முதலாவதாக  காணொளியாகப் படைத்தது. 1984ம் ஆண்டு சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தை முற்றுமுழுதாக நிர்மூலமாக்கிய வரலாறு டெலோவுக்கே உண்டு.

ஆயுதப் போராட்ட இயக்கங்களுக்குள் பல முரண்பாடுகள் ஏற்பட்டது வெளிப்படையான உண்மை. 2001லே கடந்த கால கசப்பான சம்பவங்களை மறந்து நாங்கள் எல்லோரும் ஒன்றாகினோம். இன்னுமொரு உண்மையும் இருக்கின்றது, ஆயுதப் போராட்ட இயக்கங்களாக இருந்து அரசியற் கட்சிகளாக போராட்ட இயக்கங்கள் பதிவு செய்யப்பட்டதன் பின்பு 1989ம் ஆண்டில் இருந்து இன்றுவரைக்கும் தொடர்ச்சியாக நடைபெற்ற ஒவ்வொரு பாராளுமன்றத் தேர்தல்களிலும் தமிழீழ விடுதலை இயக்கம் மாத்திரம் தான் பாராளுன்ற உறுப்புரிமையை வகித்து வருகிறது..

ஆனால் வரலாறு தெரியாத சில பாராளுமன்ற உறுப்பினர்கள், தமிழ்த் தேசியத்தின் குழந்தைப் பிள்ளைகள், 2009 ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் தமிழ்த் தேசியத்துக்குள் வந்தவர்கள் கூறுகின்றார்கள் தமிழீழ விடுதலை இயக்கம் டெலோவும் ஒரு கட்சி என்று மக்களுக்குக் காண்பிப்பதற்காக ஜெனீவாவுக்கு அனுப்பிய கடிதத்தில் கையொப்பம் வைத்துள்ளது என்று.

தமிழீழ விடுதலை இயக்கத்திற்கு நெடிய நீண்ட வரலாறு இருக்கின்றது. எமது கட்சியின் 50வது ஆண்டு பூர்த்தியை நாங்கள் 2019ம் ஆண்டு கொண்டாடியுள்ளோம். 52வது ஆண்டிலே தமிழீழ விடுதலை இயக்கம் பயணித்துக் கொண்டிருக்கின்றது. இந்த விடயங்கள் தெரியாமல் கருத்துக்கள் கூறுவது சிறுபிள்ளைத் தனமானது.

கட்சியிலே தேசியத்துடன் நீண்ட காலம் இருக்க வேண்டும், வளர வேண்டும், பக்குவம் அடைய வேண்டும், அதற்குப் பின்பு இந்த வரலாறுகளைச் சரியாகப் படிக்க வேண்டும். எம்மைப் பொருத்தமட்டில் சுமார் 39 வருடங்களாக போராட்டம், அரசியல் தமிழ் மக்களின் பிரச்சினைகள் என்ற வரலாற்றுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எங்களுக்கு கடந்த கால வரலாற்றினை யாரும் சொல்லித் தரத் தேவையில்லை. ஆனால் சிலருக்கு இந்த வரலாறுகளை யாராவது சொல்லிக் கொடுக்க வேண்டும் அல்லது ஏதாவது புத்தகத்தில் படித்துத் தெரிந்துகொள்ள வேண்டும். இந்த வரலாறுகளைப் பற்றி அறிய வேண்டுமாக இருந்தால் அவற்றைச் சரியானவர்களிடம் கேட்டு அறிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

Posted in Uncategorized

ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர்கள் பாதிக்கப்பட்ட தமிழர்களின் பேச்சை கேட்க வேண்டும்: காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கம்

ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர்கள் பாதிக்கப்பட்ட தமிழர்களின் பேச்சைக் கேட்க வேண்டும் என தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்க செயலாளர் கோபாலகிருஷ்ணன் ராஜ்குமார் தெரிவித்தார்.
வவுனியாவில் 1685வது நாளாக ஒரு நாளைக்கு ஒரு நேர உணவுத்தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கம் ஏற்பாடு செய்த கவனயீர்ப்பு போராட்டம் மற்றும் ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் இங்கு இருக்கும்போது, ​​அவர்கள் தமிழர்களின் பேச்சைக் கேட்க வேண்டும்.
காணாமல் ஆக்கப்படட குழந்தைகள் உட்பட, அரசியல் தீர்வு மட்டுமே தீவின் முழுப் பிரச்சினையையும் தீர்க்கும் என்று நாங்கள் ஐரோப்பிய ஒன்றியத்திடம் தொடர்ந்து சொல்ல விரும்புகிறோம்.
ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர்கள் பாதிக்கப்பட்ட தமிழர்களின் பேச்சை கேட்க வேண்டும்: காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கம் கோரிக்கை
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதில் மட்டும் ஐரோப்பிய ஒன்றியம் கவனம் செலுத்தக்கூடாது, ஆனால் அரசியல் தீர்வு போன்ற பெரிய படத்தை பார்க்கவும்.
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இலங்கை நன்கொடையாளர் இணைத் தலைவர்கள் விடுதலைப் புலிகளின் அழிவுக்கு ஒரு பகுதியாக இருந்ததை நாங்கள் அறிவோம், இது இலங்கையில் சிங்களவர்கான ஒரு உதவி.
போரின் போது, ​​இலங்கை நன்கொடையாளர் இணைத் தலைவர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்ற இலங்கை தவறிவிட்டது, ஐரோப்பிய ஒன்றியம் என்பது இலங்கை நன்கொடையாளர் இணைத் தலைவர்களின் ஒரு பகுதியாகும்.
சிங்கள இராணுவம், காவல்துறை மற்றும் சிங்கள அரசியல்வாதிகளிடமிருந்து ஆக்கிரமிப்பு மற்றும் ஒடுக்குமுறையிலிருந்து தமிழர்களைப் பாதுகாக்க ஒரு அரசியல் தீர்வு தேவை.
பொழுது சாயுதே, நாம் இன்னும் 2 ஆண்டுகள் காத்திருந்தால், வடக்கு மற்றும் கிழக்கில் தமிழர்கள் தங்கள் அரசியல் அதிகாரத்தை இழக்க நேரிடும். வடக்கு மற்றும் கிழக்கில் சிங்களவர்களை குடியேற்றி இலங்கை அரசின் வேகம் கூடிக்கொன்று போகிறது .
இலங்கை நன்கொடையாளர் இணைத் தலைவர்களுக்கு இலங்கை அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான தார்மீகப் பொறுப்பை ஐரோப்பிய ஒன்றியம் கொண்டுள்ளது.
தமிழ் அரசியல்வாதிகளை நாங்கள் நம்பவில்லை. அவர்கள் குரல் எழுப்ப பயப்படுவதாகத் தெரிகிறது, மேலும் இலங்கை அரசாங்கத்தால் வழங்கப்படும் சலுகைகளையும் அவர்கள் அனுபவிக்கிறார்கள்.
சம்பந்தனுக்கு கொழும்பில் மாளிகை எப்படி கிடைத்தது என்று ஒவ்வொரு தமிழர்களும் கேட்கிறார்கள். இந்த மாளிகை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவினது. இந்த மாளிகை சம்பந்தனை அமைதிப்படுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு  கொடுக்கப்பட்ட லஞ்சம் என்று தமிழர்கள் நினைக்கிறார்கள்.
ஐரோப்பியர்கள் உள்ளூர் தமிழர்களின் கிராமத்திற்குச் சென்று, போரில் பாதிக்கப்பட்டவர்களுடன், குறிப்பாக காணாமல் ஆக்கப்படட குழந்தைகளின் தாய்மார்களுடன், தமிழர்களின் துன்பத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு டன் பேசுவது, குறிப்பாக சம்பந்தன் மற்றும் சுமந்திரன் தமிழர்களின் குரலை பிரதிநிதித்துவப்படுத்த மாட்டார்கள்.
ஜிஎஸ்டி வரியை ரத்து செய்வது உட்பட ஐரோப்பிய ஒன்றியம் சரியானதைச் செய்யும் என்று நாங்கள் நம்புகிறோம் என்றார்.

Posted in Uncategorized

‘சர்வதேச அரசியல் செயற்பாட்டாளர்கள் விழிப்போடு செயல்பட வேண்டிய காலம்’- அருட்தந்தை மா.சத்திவேல்

தேசிய மற்றும் சர்வதேச அரசியல் செயற்பாட்டாளர்கள் மிக விழிப்போடு செயல்பட வேண்டிய காலமிது. இல்லையெனில் முள்ளிவாய்க்கால் பேரழிவை விடவும் பயங்கர அழிவை நாம் சந்திக்க வேண்டும். என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவரால் இன்று (28) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“அண்மையில் ஐ.நா பொதுச் சபை கூட்டத்தில் கலந்துகொள்ள சென்றிருந்த ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச புலம்பெயர் (டயஸ்போரா )சமூகத்தை தமிழர் பிரச்சினை தீர்வு காண பேச்சுவார்த்தைக்கு அழைத்து இருக்கிறார். இது குறுகிய அரசியல் நோக்கம் கொண்டதும், பிரச்சினைக்கு தீர்வு காண பேச்சுவார்த்தை என காலத்தை இழுத்தடிக்கும் மற்றும் சர்வதேச அழுத்த சக்திகளை அமைதி கொள்ளச் செய்வதுமான நரி செயலுமாகும்.

சிங்கள பேரினவாத தலைவர்கள் தமிழ் தலைவர்களோடு கடந்த காலத்தில் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கைகள் அனைத்தையும் கிழித்ததோடு, விடுதலை இயக்கங்களோடு நடாத்தப்பட்ட திம்பு பேச்சுவார்த்தையும் தோல்வி கண்டு, யுத்தம் திணிக்கப்பட்டு சர்வதேச மட்டத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் தமிழர்கள் ஏமாற்றப்பட்டது மட்டுமல்ல தமிழ் ஈழ விடுதலை புலிகளோடு செய்துகொண்ட இடைக்கால உடன்படிக்கை ஏற்பாடுகளும் நிறைவேறாததன் காரணமாகவே அவலங்களை சந்தித்தவர்கள், உயிர் பாதுகாப்பு தேடியவர்கள் நாட்டை விட்டு புலம்பெயரும் நிலை ஏற்பட்டது.

முள்ளிவாய்க்கால் அவலத்தின் பின்னர் சர்வதேச சமூகத்தை கொடுத்த 13 பிளஸ் வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை அதுமட்டுமல்ல தற்போதைய ஜனாதிபதி நாட்டில் அரசியல் பிரச்சினை இல்லை, இருப்பது அபிவிருத்தி பிரச்சினை என தேர்தல் மேடைகளில் கூறி தானே உண்மையான தேசப்பற்றாளனும் பௌத்தனுமாவேன் என அடையாளப்படுத்திய பின்னர் எந்த நம்பிக்கையில் புலம்பெயர் சமூகம் பேச்சு வார்த்தைக்கு வரும்.

தற்போதைய ஜனாதிபதியையும், ஆட்சியாளர்களையும் பதவிக்கு அமர்த்திய மக்களே வெறுப்படைந்து இருக்கின்ற நிலையிலும் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் நான் போட்டியிடுவேன். அடுத்த ஜனாதிபதி பதவிக் காலமும் எனக்கும் வேண்டும் என்றவர் அந்தத் தேர்தலை சந்திப்பதற்கான வியூகமாகவே பேச்சுவார்த்தை என காலத்தை இழுத்தடிக்கவும், புலம்பெயர் சமூகத்துக்கு ஊடாக தாயக தமிழர்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவும் அவர்களுடைய வாக்குகளை தமதாக்கவும் பேச்சுவார்த்தைக்கு அழைக்கின்றார்.

காணாமல் ஆக்கப்பட்டோர்க்கு மரண சான்றிதழ் என சர்வதேசத்தின் முன்னாள் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தவர் யுத்த குற்றங்கள் மனிதகுலம் அங்கீகரிக்காத குற்றங்களையும் ஏற்று பகிரங்க மன்னிப்பு கேட்காத யுத்த குற்றவாளிகளின் அழைப்புக்களை ஏற்பது என்பது தற்கொலைக்கு ஒப்பாகும்.

தியாகி திலீபனின் ஐந்து அம்ச நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாது கொலை செய்தவர்கள், யுத்தம் முடிவுற்றது என்று அவர்களே அறிவித்துவிட்டு படை முகாம்களை அகற்றாது, மகாவலி எல் வலயம் என புதிய குடியேற்றங்களை ஏற்படுத்த முனைவதோடு, தொல்பொருளியல் திணைக்களத்தோடு பேரினவாத பௌத்த துறவிகளை சுதந்திரமாக தமிழ்ப் பிரதேசங்களில் நடமாட இடமளித்து தமிழர்களின் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை கையகப்படுத்திக் கொண்டு புலம்பெயர்ந்துள்ள சமூகத்தை பேச்சு வார்த்தைக்கு அழைப்பது சர்வதேச சமூகத்தின் கண்களில் மண்ணை தூவுவதற்காகவே.

இதில் இன்னுமொரு அபாயமும் உள்ளது. புலம்பெயர்ந்து வாழும் சமூகத்தில் தனக்கு வேண்டியவர்களை அழைத்து சர்வதேச புவிசார் அரசியலை முன்னெடுக்கவும் பேச்சுவார்த்தை என்ற நாடகத்தை அரங்கேற்ற முனைவதாகவே தோன்றுகின்றது. இதனூடாக தமிழர்களையும் தமிழ் தேசத்தையும் சிதைக்கவும் புதிய உத்தியாகவே இந்த அழைப்பு எனக்கூறலாம். தேசிய மற்றும் சர்வதேச அரசியல் செயற்பாட்டாளர்கள் மிக விழிப்போடு செயல்பட வேண்டிய காலமிது. இல்லையெனில் முள்ளிவாய்க்கால் பேரழிவை விடவும் பயங்கர அழிவை நாம் சந்திக்க வேண்டும்.

அந்த அழிவுக்கு காரணமானவர்கள் என நாம் நம்முடைய சரித்திரத்தில் பயப்படுவோம். இத்தகைய அவல நிலையை நீக்க தாயகம் மீது தணியாத தாகம் கொண்ட அனைத்து சக்திகளும் தமிழ் தேசத்தையும் தேசியத்தையும் பாதுகாக்க ஒன்று சேர வேண்டும் அதுவே காலத்தின் கட்டாயமாகும். பச்சோந்திகளையும் அடையாளம் கண்டு சமூக நீக்கம் செய்வதும் காலக்கடனே” என்றார்.

Posted in Uncategorized

இராணுவத்தேவைகளுக்காக கையகப்படுத்தப்பட்ட பல காணிகள் உரிய தரப்பினரிடம் ஒப்படைக்கப்படவில்லை – நவநீதம்பிள்ளை

இலங்கையில் போரின்போது இராணுவத்தேவைகளுக்காக ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்புக்கள் படையினரால் கையகப்படுத்தப்பட்டதுடன் அதன்பின்னர் அவை பாதுகாப்புத் தேவைக்கென மாற்றியமைக்கப்பட்டன. அவற்றில் சில பகுதிகளில் கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் பொதுமக்களிடம் மீள வழங்கப்பட்டுள்ள போதிலும், மேலும் பல காணிகள் உரிய தரப்பினரிடம் ஒப்படைக்கப்படவில்லை என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் முன்னாள் உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளை சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ் மக்களின் தாயகமான வடக்கு, கிழக்கில் காலங்காலமாக அரசாங்கங்களினால் மேற்கொள்ளப்பட்டுவரும் நில அபகரிப்பை ஆதாரபூர்வமாக எடுத்துக்காட்டும் வகையில் சோமீதரனால் இயக்கப்பட்ட ‘தாய்நிலம் : நில அபகரிப்பு இலங்கைவாழ் தமிழ்மக்களின் உண்மையான பெருந்தொற்று’ (Land Grabbing – The Real Pandemic For The Tamils In Sri Lanka) என்ற ஆவணப்படம் கடந்த சனிக்கிழமை இலங்கைநேரப்படி மாலை 5.30 மணிக்கு இணையவழியில் திரையிடப்பட்டது.
தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் யாழ்மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் ஆகியோரால் ஆரம்பித்துவைக்கப்பட்ட இந்நிகழ்வில், சுமார் 70 வருடகாலமாகத் தமிழர் தாயகத்தில் இடம்பெற்றுவரும் நில அபகரிப்பு தொடர்பான அவர்களது உரைகளும் இடம்பெற்றன.
வட்டுவாகலில் இக்கரை என்று சொல்லக்கூடிய பகுதியில் நிலத்திற்கு மேலாக 400 ஏக்கர் காணி இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டிருக்கின்றது. அதேபோன்று வட்டுவாகல் அக்கரை என்று சொல்லக்கூடிய கரையோரப்பகுதியில் 617 ஏக்கர் நிலப்பரப்பில் கோட்டாபய கடற்படைமுகாம் அமைக்கப்பட்டிருப்பதுடன் வனஜீவராசிகள் திணைக்களம் என்றுகூறி நந்திக்கடல் நீரேரியும் அதனை அண்டிய நிலப்பரப்புமாக 10229.92 ஏக்கர் காணியும் அபகரிக்கப்பட்டிருப்பது குறித்து ‘தாய்நிலம்’ ஆவணப்படத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

‘போரின்போது இராணுவத்தினரின் தேவைக்காக ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்புக்கள் கையகப்படுத்தப்பட்டதுடன் அதன்பின்னர் அவை பாதுகாப்பு என்ற தேவைக்குரியவையாக மாற்றப்பட்டன. இருப்பினும் இவை மிகக்குறைந்தளவிலான சுயாதீன கண்காணிப்பு, இழப்பீடு வழங்கல் என்பவற்றுடனோ அல்லது சுயாதீன கண்காணிப்பு மற்றும் இழப்பீடு வழங்கல் என்பன ஏதுமின்றியோ கையகப்படுத்தப்பட்டன.
அவற்றில் சில இடங்களில் கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் மீள வழங்கப்பட்டுள்ள போதிலும், மேலும் பல காணிகள் மீள வழங்கப்படவில்லை’ என்று இந்த ஆவணப்படத்தில் பேசியிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் முன்னாள் உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளை தெரிவித்திருக்கின்றார்.
அதுமாத்திரமன்றி வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளின் ஏக்கர் விபரம், மற்றும் தமிழரின் வாழ்விடங்களில் பௌத்த சின்னங்கள் காணப்படுவதாகக்கூறி முன்னெடுக்கப்படும் தொல்பொருள் அகழ்வாராய்வு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இந்த ஆவணப்படத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
குறித்த ஆவணப்படம் திரையிடப்பட்டதன் பின்னர் இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்றுவருகின்ற நில அபகரிப்பு தொடர்பிலான கலந்துரையாடலொன்றும் இடம்பெற்றது. அக்கலந்துரையாடலில் இஸ்ரேல் நாட்டைச்சேர்ந்த பிரபல ஆய்வாளரும் நில அபகரிப்பு தொடர்பான பேராசிரியருமான ஓரென் யிஃ;ப்ரசெல் விசேட உரையொன்றினை நிகழ்த்தினார்.
பாலஸ்தீன நிலங்களை அபகரிப்பது குறித்து தனது இஸ்ரேலிய அரசாங்கத்தைத் துணிச்சலுடன் விமர்சித்திருக்கும் அவர், இஸ்ரேலை ஒத்த ‘இனவாத ஆட்சியே’ இலங்கையிலும் காணப்படுகின்றது என்று தெரிவித்திருக்கின்றார். அதுமாத்திரமன்றி இஸ்ரேல் – பாலஸ்தீனம் மற்றும் இலங்கை ஆகிய இருநாடுகளிலும் இடம்பெற்றுவரும் நில அபகரிப்பின் ஒத்த தன்மையை வெளிப்படுத்தும் வகையிலான ஆய்வுகளையும் அவர் இக்கலந்துரையாடலில் பகிர்ந்துகொண்டார்.
அதேவேளை இந்தியாவில் சுமார் 30 வருடங்களுக்கும் அதிகமான காலம் மக்களின் நில உரிமைக்காகத் தொடர்ச்சியாகக் குரல்கொடுத்துவரும் செயற்பாட்டாளரான கலாநிதி மேதா பட்கார், இலங்கையில் இடம்பெற்றுவந்த மூன்று தசாப்தகாலப்போர் முடிவிற்குக்கொண்டுவரப்பட்டதன் பின்னரும் வடக்கு, கிழக்கில் தொடர்ச்சியாக நில அபகரிப்புக்கள் இடம்பெற்றுவருவதாகவும் ஆரம்பத்தில் இராணுவ முகாம்களை அமைப்பதற்கெனவும் இப்போது சுற்றுலாத்துறை மேம்பாட்டிற்கெனவும் காரணம் கூறப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.
மேலும் தமிழீழ விடுதலைப்புலிகளினால் முன்னெடுக்கப்பட்ட ஆயுதப்போராட்டம் பாராட்டப்படக்கூடியது அல்ல என்றாலும்கூட, அப்போராட்டத்திற்கு வழிவகுத்த அடக்குமுறைகள் தொடர்பில் அவதானம் செலுத்தவேண்டும் என்றும் குறிப்பிட்டார். அத்தோடு போர் இடம்பெற்ற காலப்பகுதியில் படையினரால் கையகப்படுத்தப்பட்ட காணிகள் பொதுமக்களிடம் மீள ஒப்படைக்கப்படும் என்று ராஜபக்ஷ அரசாங்கம் வாக்குறுதியளித்திருந்த போதிலும் இன்னமும் அது நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பது குறித்து சுட்டிக்காட்டிய மேதா பட்கார், நில அபகரிப்பு என்பது ஒரு சமுதாயத்தின் வரலாற்று மற்றும் வாழ்வியல் அடையாளங்களை அழிக்கும் அதேவேளை அவர்களது வாழ்வாதாரத்தையும் முழுமையாகப் பாதிக்கும் என்றும் தெரிவித்தார்.
இவ்வாறானதொரு சூழ்நிலையில் ஏற்கனவே அபகரிக்கப்பட்ட நிலங்கள் பொதுமக்களிடம் மீளவும் கையளிக்கப்படுவதற்கான அழுத்தங்களை இலங்கைமீது சர்வதேச சமூகம் பிரயோகிக்கப்படவேண்டும் என்றும் அதனை வலியுறுத்தி பெண்களின் தலைமைத்துவத்தின் கீழான அமைதிவழி (சத்தியாக்கிரகப்போராட்டங்கள்) போராட்டங்கள் எழுச்சிபெறவேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
மேலும் அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் அமைந்துள்ள ‘த ஓக்லன்ட் இன்ஸ்டிடியூட்’ என்ற கல்வியகத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளரான அனுராதா மிட்டாலும் இக்கலந்துரையாடலில் பங்குபற்றியிருந்தார். அவர் இலங்கையில் இடம்பெறும் நில அபகரிப்புக்கள் தொடர்பில் கடந்த 2014 ஆம் ஆண்டிலிருந்து ஆய்வுகளை முன்னெடுத்துவந்திருப்பதுடன் அதன் முடிவுகளை ஏற்கனவே பகிரங்கப்படுத்தியிருக்கின்றார்.
2014 ஆம் ஆண்டின் பின்னரைப்பாகத்தில் இலங்கையின் மனித உரிமை மீறல் நிலைவரங்கள் மிகத்தீவிரமான கட்டத்தை அடைந்தபோது, இலங்கைக்கு மிகத்துணிகரமான பயணமொன்றை மேற்கொண்ட அனுராதா மிட்டேல் வடக்கு – கிழக்கு மாகாணங்களிலுள்ள பல இடங்களுக்கும் விஜயம்செய்து, பல்வேறு தகவல்களைத் திரட்டியதுடன் அவற்றைத் தொகுத்து 2015 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் ‘நீண்டகாலப்போரின் நிழல் : இலங்கையில் போரின் பின்னரான காலப்பகுதியில் நீதியை நிலைநாட்டுவதில் காணப்படும் சவால்கள்’ என்ற தலைப்பிலான ஆய்வறிக்கையொன்றை வெளியிட்டார். இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்களை சர்வதேச நாடுகள் பலவற்றுக்கும் வெளிப்படுத்திய முக்கிய ஆவணமாக இந்த ஆய்வறிக்கை நோக்கப்படுகின்றது.
அத்தோடு இலங்கையின் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழர்கள்மீது மிகுந்த அக்கறைகொண்டு அவர்களது நிலை தொடர்பில் நீண்டகாலமாக ஆய்வுகளை முன்னெடுத்துவருகின்ற சென்னை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராமு மணிவண்ணனும் இந்தக் கலந்துரையாடலில் இணைந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

அத்தியாவசிய பொருட்களை விடுத்து சிகரெட்டுக்கான வரியை அதிகரிப்பு செய்யுங்கள். அடைக்கலநாதன் எம். பி. பிரதமருக்கு கடிதம்

அத்தியாவசிய பொருட்களை விடுத்து சிகரெட்டுக்கான வரியை அதிகரிப்பு செய்யுங்கள் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னிப்பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் பிரதமர் மற்றும் நிதி அமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

இன்று (28) அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

“அத்தியாவசிய பொருட்களுக்கான வரியை அரசாங்கம் அதிகரிக்கும் போது, சிகரெட்டின் மீதான வரியை அதிகரிக்க ஏன் பின்வாங்குகின்றது. இவ்வாறான சூழலில் தான் அரசாங்கம் ஏழைமக்களின் அத்தியாவசியப் பொருட்களின் மீதான வரியை அதிகரித்து வருகின்றது. ஒரு சிகரெட்டின் விலையினை ரூபாய் 20தினால் உயர்த்தியிருந்தால் சுமார் 100 பில்லியன் ரூபாயினை இழக்கவேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது.

இன்று பெரும்பாலான சிறுவர்கள் முதல் பெரியோர் வரை இதனை பயன்படுத்துவதும் இதற்கு அடிமையாகி காணப்படுவதினாலும் இது ஓர் பாரிய சமூக சீர்குலைவிற்கு வழிவகுத்துக்கொண்டிருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

எனவே இதனை தடுக்க வேண்டுமென்றால் அரசாங்கம் சிகிரெட் மீதான முறையான வரி முறைமையை கடைப்பிடிக்க வேண்டும். அவ்வாறான வரி முறைமையினால் அரசாங்கம் தனது வருமானத்தை அதிகரிக்கச்செய்வதோடு பாவனையிலும் சடுதியான வீழ்ச்சியினை ஏற்படுத்த முடியும்.

இன்றைய காலப்பகுதியில் சிகரெட் பாவனையை குறைப்பதானது கோவிட் -19 கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கும் பாரிய உதவியாக அமையும் என்பதும் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

எனவே மக்கள் பிரதிநிதி என்ற வகையில், எதிர்வரும் 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் முன்வைக்கப்படவுள்ள 2022ம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தில் நாட்டிற்கும் நாட்டுமக்களுக்கும் நன்மை பயக்கும் வகையில் சிகரெட் மீது முறையாக வரி அறவிடப்படும் கொள்ளையொன்றினை உருவாக்குவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவீர்கள் என தீர்க்கமாக நான் நம்புகின்றேன்” என தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு சர்வதேசத்தின் அடுத்த கிடுகுப்பிடி

கடந்தகாலங்களில் இதே அரசாங்கம் வழங்கிய எந்த உத்தரவாதங்களையும் நிறைவேற்றவில்லை என டெலோவினுடைய உத்தியோகபூர்வ ஊடக பேச்சாளரும் சர்வதேச தொடர்பாளருமான குருசாமி சுரேந்தர் தெரிவித்துள்ளார்.

ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த காலங்களிலும் இதே அரசாங்கம் இதே விடயங்கள் சர்வதேச அரங்கிலே கொண்டுவரப்பட்ட பிரேரணைகளிலிருந்து இலங்கை அரசாங்கம் வெளியேறிக்கொண்டு தங்கள் பல விடயங்களை நிறைவேற்றுவதாக வழங்கிய உத்தரவாதங்கள் எதையுமே அவர்கள் நிறைவேற்றவில்லை.

இது வழக்கமாக இந்த அரசாங்கம் முன்னெடுத்து வருகின்ற ஒரு தந்திரோபாய நடவடிக்கையாகவே நாங்கள் பார்க்கின்றோம் எனத் தெரிவித்துள்ளார்.