இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் குழு வர்த்தக பிரதிநிதிகளுடன் சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐவரடங்கிய ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழு, வர்த்தகத் துறைசார் பிரதிநிதிகளுடன் திங்கட்கிழமை (27) சந்திப்புகளை நடத்தியுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுகீஸ்வர குணரத்ன தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் அக்டோபர் மாதம் 5 ஆம் திகதிவரை கொழும்பில் தங்கியிருந்து தமது மதிப்பீட்டுப் பணிகளை முன்னெடுக்கவுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழுவில் வர்த்தகம் மற்றும் நிறைபேறான அபிவிருத்தி தொடர்பான ஆலோசகர் நிக்கோலாவோஸ் ஸைமிஸ், ஐரோப்பிய வெளியக சேவையின் தெற்காசிய பிராந்திய பிரிவின் தலைவர் ஐயொனிஸ் ஜியோக்கரகிஸ் அர்ஜிரோபோலொஸ், ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகை தொடர்பான ஒருங்கிணைப்பாளர் கைடோ டொலரா, ஐரோப்பிய ஆணைக்குழுவின் வேலைவாய்ப்பு மற்றும் சமூக விவகாரங்கள் சபையின் தலைவர் லூயிஸ் ப்ரற்ஸ் மற்றும் ஐரோப்பிய வெளியக சேவையின் இலங்கை மற்றும் மாலைதீவிற்கான அலுவலக அதிகாரி மொனிகா பைலெய்ற் ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உரியவாறான விசாரணைகள் முன்னெடுக்கப்படாமை உள்ளிட்ட காரணங்களினால் கடந்த 2010 ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்டு வந்த ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகை இடைநிறுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து 2015 ஆம் ஆண்டில் ஆட்சிபீடமேறிய நல்லாட்சி அரசாங்கம் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை மீளப்பெற்றுக் கொள்வதற்காக 2016 ஆம் ஆண்டில் விண்ணப்பித்ததுடன், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குதல் உள்ளிட்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்வதாக வாக்குறுதியளித்து 2017 ஆம் ஆண்டில் வரிச்சலுகையை மீளப் பெற்றுக் கொண்டது.
எனினும் ஏற்கனவே வாக்குறுதியளித்தவாறு பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படாமை மற்றும் மோசமடைந்து வரும் மனித உரிமை நிலைவரங்களை சுட்டிக்காட்டி, இலங்கைக்கு வழங்கப்பட்டு வரும் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை இடைநிறுத்தப்பட வேண்டும் என்ற தீர்மானம் கடந்த ஜூன் மாதம் ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இவ்வாறானதொரு பின்னணியிலேயே இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழு வருகை தந்துள்ளது.

போர்க்குற்றங்கள் விசாரணைசெய்யப்படவேண்டும்: நோர்வே தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் கம்சாயினி 

இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக வெளியக விசாரணை நடைபெற வேண்டும். உண்மைகள் கண்டறியப்படுவது அவசியமானது என்று யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட நோர்வே நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கம்சாயினி அழுத்தந் திருத்தமாகத் தெரிவித்தார்.

நோர்வே நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர்  இணையவழியில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட முதலாவது ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு  தெரிவித்தார்.

ஒன்றரை மணித்தியாலங்கள் நடைபெற்ற இந்த ஊடகவியலாளர் சந்திப்பை நோர்வே தமிழ் மக்கள் அரசியலில் ஏற்கனவே அறியப்பட்டவரான பாலசிங்கம் யோகராஜா (பாஸ்கரன்) நெறிப்படுத்தினார்.

ஊடகச் சந்திப்பின் ஆரம்பத்தில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிகளிலும் தன்னை கம்சாயினி அறிமுகச் செய்திருந்தார். 1991ம் ஆண்டு தனக்கு 3 வயதாக இருந்த போது தனது பெற்றோருடன் நோர்வேயில் ஹமபெஸ்ற் என்ற நகருக்குக் குடிபெயர்ந்தாகவும், பின்னர் தமிழ்மொழியை முறையாகக் கற்கும் நோக்குடன் நோர்வேயின் தலைநகரான ஒஸ்லோவுக்கு இடம் மாறியதாகவும் அவர் தெரிவித்தார்.

தனது குடும்பம் எந்தவிதமான அரசியல் பின்னணியையும் கொண்டிருக்கவில்லை என்றும் ஒஸ்லோவிலுள்ள சமூகங்களுக்கிடையில் தான் சந்தித்த ஏற்றத்தாழ்வுகளும் அரசியலுக்குள் தான் வருவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று என்றும் அவர் தெரிவித்தார்.

பெண்கள் வலுவூட்டல் தொடர்பாக ஈராக், மொஸாம்பிக், பாலஸ்தீனா, சிறீலங்கா போன்ற பல நாடுகளுக்குச் சென்று அங்கே பெண்கள் வலுவூட்டல் நிகழ்வுகளில் கலந்துகொண்டதாகவும் அவர் மேற்குறிப்பிட்ட சந்திப்பில் குறிப்பிட்டார்.

2011ம் ஆண்டு ஜூலை மாதம் நோர்வேயில் தொழிற்கட்சியின் இளையோர் பங்குபற்றிய ஒரு நிகழ்வில் அண்டேஸ் பிரைவிக்கினால் 69 இளையோர்கள் கொல்லப்பட்டதை நினைவுகூர்ந்த கம்சி அவ்வேளையில் இளையோரின் நிறைவேற்றுக் குழுவில் தான் அங்கம் வகித்ததாகவும் தனது நண்பர்கள் பலரை அந்த நிகழ்வில் இழந்ததாகவும் உணர்வுபூர்வமாகத் தெரிவித்தார்.

இலங்கையுடனான பொருண்மிய உறவை நோர்வே அரசு தொடர்ந்து பேண வேண்டும் என்றும் பொருண்மிய உதவிகளைச் செய்யும் போது அனைத்து மக்களுக்கும் அந்தத் திட்டங்கள் சென்று சேர்வதை உறுதிப்படுத்தும் வாய்ப்பு அப்போது தமக்கும் கிடைக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தனது முதன்மைப்பணி தன்னை நாடாளுமன்றத்துக்கு அனுப்பிய நோர்வே மக்களுக்குப் பணிபுரிவது என்பதை வலியுறுத்திய கம்சாயினி, தனது கட்சியான தொழிற்கட்சியுடன் இணைந்து தமிழ் மக்களுக்கான பணிகளை முன்னெடுக்கத் தனக்கு இருக்கும் ஆர்வத்தையும் வெளிப்படுத்தத் தவறவில்லை. அவ்விடயத்தில் யாராயிருந்தாலும் அவர்களுடன் பேசுவதற்குத் தான் தயாராக இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Posted in Uncategorized

இலங்கை – ஐக்கிய இராச்சியத்துக்கிடையில் விசேட கலந்துரையாடல்

வர்த்தகம், முதலீடு மற்றும் உள்நாட்டு நல்லிணக்க செயன்முறை குறித்து இலங்கை மற்றும் ஐக்கிய இராச்சிய அமைச்சருக்கிடையில் விசேடகலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் தெற்காசியா, ஐக்கிய நாடுகள், பொதுநலவாய நாடுகளுக்கான ஐக்கிய இராச்சியத்தின்இராஜாங்க அமைச்சர் விம்பிள்டனின் பிரபு அஹ்மத் ஆகியோருக்கிடையில் நியூயோர்க்கில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் இந்த கலந்துரையாடல்இடம்பெற்றுள்ளது.

வர்த்தகம், துறைமுக நகரம் மற்றும் ஏனைய இடங்களில் காணப்படுகின்ற முதலீட்டு வாய்ப்புக்கள் பல்வேறு விடயங்கள் தொடர்பில் இதன் போதுகலந்துரையாடப்பட்டதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

கொவிட் தொற்றுநோயால் தடைகள் விதிக்கப்பட்டுள்ள போதிலும், உள்நாட்டு நிறுவனங்களால் பல்வேறு துறைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள கணிசமானமுன்னேற்றங்கள் குறித்து அஹ்மத் பிரபுவுக்கு அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் விரிவாக விளக்கினார்.

வசதியான காலப்பகுதியில் விரைவில் இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொள்ளுமாறு அமைச்சர் பீரிஸ் விடுத்த அழைப்பை அஹ்மத் பிரபு  ஏற்றுக்கொண்டதாகவும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

Share

நாட்டின் சொத்துக்களை விற்கும் போட்டி வைத்தால் இந்த அரசாங்கமே வெல்லும் – பா.உ. உதயகுமார்

நாட்டு சொத்துக்களை விற்கும் போட்டி வைத்தால் அதில் இந்த அரசாங்கத்திற்கு அனைத்து பரிசில்களும் கிடைக்குமென நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

லிந்துலை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

மலையகத்தின் மாற்றம் என்பது கல்வியில் தங்கியுள்ளது அதனால் எமது பிள்ளைகளின் கல்வி வளர்ச்சி குறித்து நாம் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறோம் குறிப்பாக அவர்களுக்கான ஆரம்பக்கல்வியை முறையானதாக அமைய வேண்டும் அதற்கு தேவையான சகல வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது எங்களுடைய பொறுப்பு.

அதனால் நாங்கள் சிரமம் பாராது தனிப்பட்ட முறையில் எனும் முடிந்தளவு எமது மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கான உதவிகளை செய்து வருகிறோம். அதில் ஒரு அங்கமாகவே இன்று இந்த அறநெறி பாடசாலை கட்டிடம் திறந்து வைக்கப்படுகிறது இந்த அறநெறி பாடசாலை என் கட்டிடத்தின் ஊடாக மாணவர்கள் முடிந்தளவு நலம்பெற வேண்டும் என்பதோடு இந்த கட்டிடத்தின் உடைய செயற்பாடுகள் சிறந்த முறையில் இடம்பெற வேண்டும் என நான் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

கல்வி அபிவிருத்தி எனும் போது ஆசிரியர்கள் அதிபர்கள் தவிர்க்க முடியாதவர்களாக இருக்கின்றனர் மாணவர்களுக்கு நல்ல கல்வியை வழங்குவதற்கு முதலில் அவர்களுக்கு கல்வியைப் புகட்டும் ஆசிரியர்களின் மனங்களை நாங்கள் திருப்திப்படுத்த வேண்டும்.

அதனால் இந்த அரசாங்கம் உடனடியாக ஆசிரியை அதிபர்களின் உடைய சம்பள முரண்பாடு பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். வரவு செலவுத் திட்டத்தில் தீர்வு காண்பதாக அறிவித்துள்ள போதிலும் ஆசிரியர்கள் அதிபர்கள் அதன் மீது நம்பிக்கை கொள்ளவில்லை அதற்கு காரணம் இந்த அரசாங்கம் சொன்ன எதையுமே செய்யவில்லை என்பதாகும் தேர்தல் காலத்தில் கூறியதுபோல அல்ல இந்த அரசாங்கத்தினுடைய செயற்பாடுகள் அனைத்தும் வாக்குறுதிகளுக்கு அப்பாற்பட்டு முற்றுமுழுதாக நாட்டுக்கு எதிரானதாக அமைந்துள்ளது.

நாட்டினுடைய சொத்துக்களை வெளிநாடுகளுக்கு விற்க மாட்டோம் என்று கூறியவர்கள் இன்று பெறுமதிமிக்க சொத்துக்களை வெளிநாட்டுக்கு விற்பனை செய்யும் திட்டத்தில் இறங்கியுள்ளனர். கொழும்பு துறைமுகத்தில் அதேபோன்று கெரவலப்பிட்டி மின்னுற்பத்தி நிலையத்தில் கொழும்பு துறைமுகத்தை அண்டியுள்ள முக்கிய இடங்களில் அரசாங்கம் கை வைத்துள்ளது.

இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து செய்துள்ள மிகப்பெரிய சாதனை என்னவென்றால் நாட்டினுடைய பெறுமதியான சொத்துக்களை வெளிநாட்டிற்கு விற்பதாகும். சொத்துக்களை விற்பனை செய்யும் போட்டி ஒன்று வைத்தால் இந்த அரசாங்கத்தை யாராலும் நெருங்க முடியாது. அதற்காக வழங்கப்படும் அனைத்து பரிசுகளையும் இந்த அரசாங்கமே தட்டிச் செல்லும் அந்த அளவு சொத்துக்களை விற்பதில் பெயர் போன அரசாங்கமாக இது மாறியுள்ளது.

அதேபோன்று அமைச்சுப்பதவி எடுத்து எவ்வித வேலைகளும் செய்யாமல் வெறும் வாய்ச்சொல்லில் மாத்திரம் அமைச்சு எது என்பதை தேர்ந்தெடுத்து பரிசு வழங்கினால் நிச்சயமாக அது மலையகத்திற்கு வந்து சேரும். காரணம் ராஜாங்க அமைச்சு ஒன்றை பெற்றுக் கொண்டு அப்படி ஒரு அமைச்சு இருக்கிறதா இல்லையா என்பது கூட தெரியாத அளவு மலையகத்தில் வேலைத்திட்டங்கள் மந்தகதியில் சென்று கொண்டிருக்கின்றன என பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் தெரிவித்தார்.

Posted in Uncategorized

டீசல் கிடைக்காவிடின் முடக்கம் நீடிக்கும் – ரணில் விக்கிரமசிங்க 

ஒக்டோபர் 1 ஆம் திகதிக்குள் இலங்கையால் கோரப்பட்ட டீசல் கிடைக்கவில்லை என்றால், ஒக்டோபர் நடுப்பகுதி வரை முடக்கம் நீட்டிக்கப்படலாம் என்று முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையால் டீசலுக்கு பணம் கொடுக்க முடியாததால், நாட்டை திறப்பதில் தாமதம் ஏற்பட்டதாக அறிந்ததாகக் கூறிய அவர், அரசாங்கம் ஏற்கெனவே டீசலுக்கு பணம் செலுத்திதால் நாட்டிற்கு டீசல் வருவதாகக் கேள்விப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஒக்டோபர் 1 க்குள் டீசல் வரவில்லை என்றால், அரசாங்கம் முடக்கத்தை நீட்டிக்க வேண்டியிருக்கும் என்றும் முன்னாள் பிரதமர் குறிப்பிட்டார்

சர்வதேச வர்த்தக சபையுடன் ஒன்லைன் கலந்துரையாடலில் பங்கேற்ற போதே முன்னாள் பிரதமர் இதனை தெரிவித்தார்.

ஊடக அறிக்கையின்படி, இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஐக்கிய அரபு அமீரக வெளியுறவு அமைச்சரிடம் கடன் திட்டத்தின் மூலம் இலங்கைக்கு எரிபொருள் விநியோகத்தை வழங்குமாறு கோரியுள்ளார் என்றும் குறிப்பிட்டார்.

ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகள் பொதுவாக அவ்வாறு செய்யாவிட்டாலும், இலங்கை வெளியுறவு அமைச்சரின் கோரிக்கை நிறைவேறும் என்று நம்புவதாக ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

Posted in Uncategorized

குழந்தைகள் பிறந்தவுடனேயே அடையாள அட்டை

இலங்கையில் குழந்தைகள் பிறந்தவுடனேயே அவர்களுக்கான அடையாள அட்டை இலக்கத்தை விநியோகிப்பது அவசியம் என, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

சிறுவர் உரிமை மற்றும் சமூக பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக இந்த யோசனையை முன்வைப்பதாகவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசியை வழங்குவது தொடர்பாக சுகாதார சேவை பணிப்பாளர் தலைமையில் அமைக்கப்பட்ட தொழிநுட்ப குழு கூட்டத்திலேயே இந்த விடயம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த விடயத்தை செயற்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்துமாறு, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதியிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.

Posted in Uncategorized

கட்டுநாயக்கவில் நாளை முதல் பரிசோதனைகள்

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நிறுவப்பட்ட பிசிஆர் பரிசோதனை வசதிகள் தொடர்ந்து இடைநிறுத்தப்பட்டு உள்ளதாகவும் இன்னும் இயங்கவில்லை என்றும் விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த சனிக்கிழமை முதல் விரைவான பரிசோதனை வசதி கிடைக்கும் என்று அரசாங்கம் உறுதியளித்த போதிலும், விமான நிலையத்தில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பயணிகளிடமிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் தொடர்ந்து ஆய்வகங்களுக்கு அறிக்கைகளைப் பெற அனுப்பப்படுகின்றன.

எவ்வாறாயினும், தொழில்நுட்ப சிக்கல்கள் தீர்க்கப்பட்டு, நாளை (28) க்குள் இந்த மையத்தில் மாதிரிகளின் பரிசோதனைகள் மீண்டும் ஆரம்பிக்கும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Posted in Uncategorized

48 மணி நேரத்தில் புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்படும் – இராணுவ தளபதி

நாட்டை மீண்டும் திறப்பதற்கான பரிந்துரைகளை சமர்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்த இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா, அடுத்த 48 மணி நேரத்தில் புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.

ஒக்டோபர் 1 ஆம் திகதிக்குப் பின்னர் நாட்டை மீண்டும் திறப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்த இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா, தேவையான வழிகாட்டுதல்கள் தற்போது இறுதி செய்யப்பட்டு வருகின்றன என்றும் தெரிவித்தார்.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை நீக்கிய பின்னர், சுகாதாரம், பொதுப் போக்குவரத்து, விவசாயம், பொதுச் சேவை மற்றும் தனியார் துறையை எவ்வாறு பராமரிப்பது என்பது தொடர்பான வழிகாட்டுதல்கள் மற்றும் கட்டுப்பாடுகளை அதிகாரிகள் அறிவிப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அடுத்த சில நாட்களில் இது தொடர்பான பரிந்துரைகளை சமர்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், அடுத்த 48 மணி நேரத்தில் புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.

நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 53% பேருக்கு இப்போது முழுமையாக தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாகவும், 30 வயதுக்கு மேற்பட்ட 98% பேருக்கு முழுமையாக தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

20 முதல் 30 வயதுக்குட்பட்ட மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 50 சதவீதத்தினர் ஒரு டோஸைப் பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

ஞானசார தேரருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி முஸ்லிம் எம்.பி.க்கள் முறைப்பாடு

முஸ்லிங்கள் மீது அவதூறு பரப்பும் விதமாகவும் இறைவனை நிந்திக்கும் விதமாகவும் சிங்கள தனியார் ஊடகமொன்றின் அரசியல் விவாத நிகழ்ச்சியில் கருத்து தெரிவித்த பொதுபல சேனா அமைப்பின் செயலாளர்  ஞானசார தேரருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பொலிஸ் தலைமையகம் மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவு பணிப்பாளர் அலுவலகத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார்கள்.

இதற்கமைய சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், பைசல் காசிம், அல்ஹாபிழ் இசட். நஸீர் அஹமட், எம்.எஸ். தௌபீக், அலிசப்ரி ரஹீம், சட்டத்தரணி முஸாரப் முதுநபின், இசாக் ரஹ்மான் ஆகியோரே இவ்வாறு முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

ஞானசார அண்மையில் சிங்கள ஊடகத்திற்கு கருத்து தெரிவிக்கையில் கடந்த ஈஸ்டர் குண்டு தாக்குதல் நடத்திய குழு மற்றும் அவர்களை அந் நடவடிக்கையில் ஈடுபட தூண்டிய விடயம் சில குர்ஆனின் போதனைகளாக இருப்பதுடன் அவர்கள் வணங்கும் இறைவனான அல்லாஹ்தான் இதற்கு முழுக்காரணம் என்று இறைவனை நிந்திக்கும் விடயம் பாரதூரமானது.

எனவே இந்த விடயத்தை செய்த ஞானசார தேரருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நோக்கில் குறிப்பாக மக்களை குழப்பி மத நிந்தனை செய்துள்ள இந்த குற்றச் செயலுக்கு ஐ.சி.சி.பி.ஆர் (ICCPR )சட்டத்தின்கீழ் ஞானசாரவை கைது செய்து தண்டிக்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர்கள் குறித்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளனர்.

தமிழ் அரசியற் கைதிகளை அச்சுறுத்தி, அவமானப்படுத்திய லொஹான் ரத்வத்தயை அழைத்துவந்தது எதற்காக – ரெலோவின் செயலாளர் நாயகம் ஜனா

எமது தமிழ் அரசியற் கைதிகளை அச்சுறுத்தி, அவமானப்படுத்திய லொஹான் ரத்வத்தயின் பாதணியை நீங்கள் நக்குவதற்காகவா அவரை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு அழைத்து வந்தீர்கள் என்ற கேள்வியையே ஒட்டுமொத்த தமிழ் மக்களும் கேட்கின்றார்கள் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமாகிய கோவிந்தன் கருணாகரம் ஜனா தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் பாரளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 25ம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்திற்கு கரும்புள்ளி ஏற்பட்டிருக்கின்றது. அண்மையில் சில நாட்களாக இலங்கையிலே குறிப்பாகத் தமிழ் மக்கள் மத்தியில் பெயர் அடிபட்டவர் மட்டக்களப்பிற்கு வருகை தந்து பொதுஜன பெரமுன கட்சி அலுவலகத்திலே இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், கட்சியின் மாவட்ட அமைப்பாளர் சந்திரகுமார் ஆகியோருடன் இணைந்து அவரது கட்சி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கின்றார்.

தகவல்களின் அடிப்படையில் அநுராதபுரம் சிறைச்சாலைக்கு நிறை வெறியுடன் சென்று தமிழ் அரசியற் கைதிகளைத் தன் முன் முழந்தாழிட வைத்து தனது கைத்துப்பாக்கியை அவர்களின் தலையில் வைத்து அச்சுறுத்திய அமைச்சர் லெஹான் ரத்வத்த கைதிகளை அச்சுறுத்தியத்தற்கும் மேலாக தனது பாதணிக் கால்களை நக்கும்படி செய்து அவமானப்படுத்திவயரை இந்த மட்டக்களப்பு மண்ணிற்கு அழைத்து வந்தது, அவருடன் இணைந்து சந்திப்பை நடத்தியது ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் அவமதிக்கும் ஒரு செயலாகவே பாhர்க்கின்றேன்.

லெஹான் ரத்வத்தயின் தகப்பனாhர் அனுரத்த ரத்வத்த நான் பாராளுமன்றத்திலே இருந்த 1989ம் ஆண்டு காலகட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர். ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவுக்கு மிகவும் நெருக்கமானவர். சந்திரிக்காவின் ஆட்சிக் காலத்திலே நான் நினைக்கின்றேன் பாதுகாப்பு அமைச்சராகவும் இருந்தவர். 1988ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலிலே பிரேமதாசாவை எதிர்த்துப் போட்டியிட்ட ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவுக்கு ஆதரவு கேட்டு தமிழீழ விடுதலைப் புலிகளை நேரடியாகச் சென்று சந்தித்தவர்.

தந்தை தேர்தலில் வெல்வதற்கு தமிழ் மக்களின் ஆதரவு வேண்டும். ஆனால் மகன் இராஜாங்க அமைச்சராக இருந்துகொண்டு தமிழ் அரசியற் கைதிகளை அவமானப்படுத்துகின்றார்.

2010ம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது கூட கண்டியிலே பதினொரு முஸ்லீம் இளைஞர்களைச் சுட்டுக் கொண்ட சம்பவத்தில் தகப்பன் மகன் இருவரும் சம்பந்தப்பட்டவர்களாகத் தகவல்கள் இருக்கின்றன. அந்த பரம்பரைச் செயல்களினூடாவே அரசியல் நடத்துபவர், தற்போது தமிழ் அரசியற் கைதிகளைத் தன் அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி தனது பாதணியை நக்க வைத்துள்ளார்.

நான் பொதுவாக அரசியல்வாதிகளைத் தனிப்பட்ட ரீதியில் விமர்சிப்பவன் அல்ல. ஆனாலும் நானும் ஆயுதப் போராட்டத்தில் இருந்து, அதனூடாக அரசியலுக்குள் வந்தவன் என்ற அடிப்படையில் எனது இரத்தம் கொதிக்கின்றது. அதனால்தான் எனது கருத்துக்கள் இவ்வாறு அமைகின்றது.

மேற்சொன்னவாறு எமது தமிழ் அரசியற் கைதிகளை அச்சுறுத்தி, அவமானப்படுத்திய லொஹான் ரத்வத்தயின் பாதணியை நீங்கள் நக்குவதற்காகவா அவரை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு அழைத்து வந்தீர்கள் என்ற கேள்வியையே ஒட்டுமொத்த தமிழ் மக்களும் கேட்கின்றார்கள். லொஹான் ரத்வத்த ஒரு கனவான் அரசியல்வாதியல்ல, கழிவு அரசியல்வாதி. அந்தக் கழிவு அரசியல்வாதியை மட்டக்களப்பிற்குக் கொண்டு வர வேண்டாம்.

அவருக்காக பாராளுமன்றத்திலும் வெளியிலும் குரல் கொடுப்பவர்கள் இருவர். ஒருவர் பொலிஸிற்குப் பொறுப்பானவர். சரத் வீரசேகர கூறுகின்றார். அவர் கையில் வைத்திருந்தது அனுமதிப்பத்திரம் உள்ள துப்பாக்கியாம், அனுமதிப்பத்திரம் வைத்துள்ள துப்பாக்கி என்றால் கொலை அச்சுறுத்தல் விடலாமா? இல்லை கொலை தான் செய்யலாமா?

அவருடன் இணைந்து லொஹானுக்கு ஆதரவு கொடுக்கும் மற்றையவர் விமல் வீரவன்ச. இலங்கையில் முதற்தர இனத்துவேசி. அவர் சிறைச்சாலை அமைச்சராக இருந்து செய்த குற்றத்திற்காகவே அவரது இராஜாங்க அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்திருக்கின்றார். அவர் வகிக்கும் ஏனைய பதவிகளை இராஜினாமா செய்ய வேண்டாம் என்கின்றார். அங்கும் ஏதாவது நடக்க வேண்டும். அதன் பின்னர் தான் அதிலிருந்தும் அவரை இராஜினாமா செய்ய வைப்பார்கள் என்று நினைக்கின்றேன்.

இலங்கையின் நீதி அமைச்சர் கடந்த பாராளுமன்றத்திலே சம்மந்தப்பட்டவர்களிடமும், சம்மந்தப்பட்டவர்களது குடும்ப உறுப்பினர்களிடமும் பகிரங்கமாக மன்னிப்புக் கோருகின்றார். ஒரு ஓய்வுபெற்ற நீதிபதி அவர்களது தலைமையில் இந்தச் சம்பவம் சம்மந்தமாக விசாரிப்பதற்கான குழுவை நியமித்து விசாரணை நடைபெற்று வருகின்றது. இந்த விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது அந்த இராஜாங்க அமைச்சரை மட்டக்களப்பிற்கு அழைத்து வந்து மாலை அணிவித்து நீங்கள் அவரை நல்லவராகக் காட்ட முற்படுகின்றீர்கள்.

இது மாபெரும் தவறு என்பதுடன், பன்றியுடன் சேரும் கன்றும் பவ்வி அருந்தும் என்ற பழமொழிக்கேற்றால் போலான வேலையையே செய்துள்ளீர்கள் என்பதை மிகவும் மனவருத்தத்துடன் கூறிக் கொள்கின்றேன். இவ்வாறான செயற்பாடுகளை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள். எதிர்காலத்திலும் செய்து விடாதீர்கள் என்று தெரிவித்தார்.

Posted in Uncategorized