சர்வதேச நாடுகளிடம் எம்.கே.சிவாஜிலிங்கம் முக்கிய கோரிக்கை

சர்வதேச நாடுகளிடம் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் 5 அம்ச கோரிக்கையை  முன்வைத்துள்ளார்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை நடைபெற்ற தியாக தீபம் திலீபனின்  34ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வினை தொடர்ந்து இவ்வாறு 5 அம்ச கோரிக்கையை அவர் முன்வைத்துள்ளார்.

குறித்த 5 அம்ச கோரிக்கையில் எம்.கே.சிவாஜிலிங்கம் முன்வைத்துள்ளதாவது, இலங்கை அரசால் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட படுகொலையை நிரூபித்தல்.

இனப் படுகொலைக்காக இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துதல்.

இனப் படுகொலை மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்தல்.

தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட சர்வதேச குற்றங்களுக்காக ஈடுசெய் நீதி கிடைப்பதை உறுதி செய்தல்.

ஈடு செய் நீதி கிடைப்பதன் மூலம் இலங்கையின் வடக்கு கிழக்கு பிராந்தியத்தில் தமிழ் தேசிய இனத்தின் அரசியல் அபிலாசைகளைத் தெரிந்து கொள்ளக் கூடிய விதத்தில் பொதுசன வாக்கெடுப்பு  உள்ளிட்ட கோரிக்கைகளை அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், இந்த  5 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு குவாட் அமைப்பில் அங்கம் வகிக்கும் அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், அவுஸ்ரேலியா உள்ளிட்ட நாடுகளிடம் எம்.கே.சிவாஜிலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்க நிறுவனத்துடனான ஒப்பந்தம்: அரசாங்கத்தின் பங்காளி கட்சிகள் இடையே கடுமையான மோதல்

கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனமொன்றிற்கு வழங்குவதற்கான ஒப்பந்தம் குறித்து அரசாங்கத்தின் பங்காளி கட்சிகளுக்கிடையில் மோதல் எழுந்துள்ளது.

அமைச்சர்களான விமல் வீரவங்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார உள்ளிட்டவர்கள் இதற்கு ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இதனை கடுமையாக எதிர்த்துள்ளது.

அரசாங்கத்தின் முக்கிய பங்காளிகளான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஜாதிக நிதஹஸ் பெரமுன, பிவித்துரு ஹெல உறுமய, ஜனநாயக இடது முன்னணி, லங்கா சம சமாஜ கட்சி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, ஸ்ரீலங்கா மகாஜன கட்சி ஆகியன ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து உடனடியாக விவாதிக்கக் கோரி, அரசாங்க கூட்டணியில் உள்ள 10 கட்சிகளின் தலைவர்களும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மூன்று பக்கம் கொண்ட கடிதத்தை அனுப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடிதத்தில் இந்த ஒப்பந்தத்தின் மூலம் எரிவாயு விநியோக ஏகபோகம் ஒரு நிறுவனத்திற்கு மாற்றுவது குறித்த கவலைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதோடு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்யுமாறும் கோரப்பட்டுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தரப்பினர் கடந்த வியாழக்கிழமை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுடன் அலரிமாளிகளில் மேற்கொண்ட கலந்துரையாடல் தோல்வியில் முடிந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

திலீபனின் நினைவேந்தல்- வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் ஈகைச்சுடரேற்றி அஞ்சலி

தியாகி திலீபனுக்கு அஞ்சலி செலுத்தினால் அது சுகாதார விதிமுறைகளை மீறும் செயற்பாடு. ஆனால் பண்டாரநாயக்காவுக்கு அஞ்சலி செலுத்தினால் சுகாதாரம் மீறப்படாது. இதுதான் அரசாங்கத்தின் இனரீதியிலான அணுகுமுறை என தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ)  யாழ் மாவட்ட அமைப்பாளரும், வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளருமான  தியாகராஜா நிரோஷ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தியாக தீபம் திலீபனின் 34 ஆவது நினைவேந்தலை வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ், தனது குடும்பத்தினருடன் சுகாதார நடைமுறைக்கு அமைய, ஈகைச்சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தியாகராஜா நிரோஷ் மேலும் கூறியுள்ளதாவது, “தியாகி திலீபனின் 34 ஆவது நினைவு தினம் இன்று ஆகும். அவர் உண்ணாநோன்பிருந்த இடத்தில் தமிழ் மக்கள் அஞ்சலிப்பது தேசியக்கடமையாக இருக்கின்றது.

ஆனால், தமிழர்களான நாம் தியாகி திலீபனின் சிலைக்கு அண்மையில் கூட செல்ல முடியாதவர்களாகத் தடுக்கப்பட்டுள்ளோம்.

ஏற்கனவே  நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் அஞ்சலித்தமைக்காக, தனிமைப்படுத்தல் விதிமுறைகளின் பிரகாரம் கைது செய்யப்பட்டிருந்தார். இவ்வாறாக இராணுவமும் பொலிஸாரும் நினைவுகூர்தல் சுதந்திரத்திற்கு தடைகளை ஏற்படுத்தியுள்ளனர்.

முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கா சுடப்பட்டு 62 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்றாகும்.

அந்த நினைவு கூர்தல் நிகழ்வு பெருமளவானோரின் பங்குபற்றுதலுடன் பண்டாரநாயக்கா சமாதியில் இடம்பெற்றுள்ளது.

முன்னாள் ஜனாதிபதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்கத்தின் பங்காளிகள் எனப் பலரினதும் பிரசன்னத்துடன் தடைகள் இன்றி அஞ்சலிக்கப்பட்டுள்ளது.

சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி இறந்தவர்களை நினைவில் கொள்வதில் எமக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் நாம் தமிழர் என்பதற்காக அரசாங்கம் வேறுபட்ட அணுகுமுறை வாயிலாக எமது நினைவுகூரலைத் தடுக்கின்றது என்பதே பிரச்சினை.

பொலிஸாரும் இராணுவத்தினரும் அரசாங்கத்தின் உள்நோக்கத்தினை சட்டம் ஒழுங்கு என நடைமுறைப்படுத்துகின்றனர்” என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

Posted in Uncategorized

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஐவர் அடங்கிய குழு நாளை இலங்கை வருகை

இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொடு ஐரோப்பிய ஒன்றியத்தின் ஐவர் அடங்கிய குழுவொன்று நாளை (திங்கட்கிழமை) நாட்டிற்கு வரவுள்ளது.

இந்த விஜயத்தின்போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ உட்பட அரசாங்கப் பிரதிநதிகள், எதிர்க்கட்சித்தலைவர், எதிர் அணியில் உள்ள கட்சிகளின் தலைவர்கள், சிவில் சமூகத்தினர், தொழிற்சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் சந்தித்து குறித்த குழு கலந்துரையாடவுள்ளது.

குறித்த குழு இலங்கையின் நிலைமைகளை நேரில் ஆய்வு செய்து ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகையை வழங்குவதா இல்லையா என அறிக்கையொன்றை தயாரித்து ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றில் சமர்ப்பிக்கவுள்ளது.

காணாமல் போனவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பதை ஜனாதிபதி ஏற்றுள்ளார்- செல்வம்

காணாமல் போனவர்களுக்கு இறப்பு பத்திரம் வழங்க முடியுமென தெரிவித்ததன் ஊடாக, அவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பதை ஜனாதிபதி ஏற்றுள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் செல்வம் அடைக்கலநாதன் மேலும் கூறியுள்ளதாவது, “சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் எங்களை பற்றி பல்வேறு கருத்துக்களை சொல்லியிருக்கின்றார்கள். அதற்கான விளக்கத்தினை எங்களால் சொல்ல முடியும்.

எமது இயக்கத்துக்கும் வரலாறு இருக்கின்றது. அந்த வரலாற்றையும் காரணங்களையும் சொல்லமுடியும்.

தமிழ் மக்களின் விடுதலைக்காக துப்பாக்கி எந்தி போராடியவர்கள் நாம். இப்போதும் மக்களின் விடுதலைக்காக போராடவேண்டும் என்ற சிந்தனையே எமக்குள்ளது.

தனிப்பட்ட முறையில் மாறி மாறி கருத்துக்களை சொல்வதால் மக்கள் வெறுப்படைகின்றனர். நாம் ஒற்றுமையாக செயற்படவேண்டும் என்ற விடயத்தினை கடந்த தேர்தல் மூலம் மக்கள் எமக்கு உணர்த்தியுள்ளனர்.

எனவே எமது தலைவர்கள் விட்டுச்சென்ற பணியினை தொடர்ந்து முன்னெடுப்போம்.

இதேவேளை ஜிஎஸ்பி பிளஷ் வரிச்சலுகையினை பெற்றுகொள்ளவதற்கான யுக்தியாகவே  ஜனாதிபதியின் ஐ.நா உரையை பார்கின்றேன்.

இலங்கையில் வாழும் அனைத்து இனமும் சமம் என்று அவர் தெரிவித்தார். ஆனால் ஜனாதிபதியாக பொறுப்பேற்றதில் இருந்து அடிக்கடி ஒரு விடயத்தை அவர் குறிப்பிட்டு வருகின்றார். தான் சிங்கள மக்களின் வாக்குகளாலேயே வெற்றிபெற்றேன் என்றார்.

மேலும், தமிழர் பிரதேசங்களில் முன்னெடுக்கப்படும் அடக்குமுறைகள் இராணுவ பிரசன்னம், உயிரிழந்தவர்களை நினைவுகூரக் கூட முடியாத இக்கட்டான நிலையில் தமிழினம் இருக்கின்றது.

எனவே, இனங்கள் அனைத்தும் சமன் என்று தெரிவிப்பதை ஏற்கமுடியாது. அது உண்மைக்கு புறம்பானது.

காணாமல் போனவர்களுக்கு இறப்பு பத்திரம் வழங்க முடியும் என தெரிவித்ததன் ஊடாக அவர் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் என்ற வகையில் ஒப்புதல் வாக்குமூலம் ஒன்றை வழங்கியுள்ளார்.

காணாமல் போனவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பதை அவர் ஏற்றுள்ளார்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

வடக்கு கிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒன்றிணைக்க ஆரம்பமாகியது முக்கிய நகர்வு!

வடக்கு-கிழக்கைப் பிரதேசவாரியாகவும் தேசியப்பட்டியலூடாகவும் பிரதிநிதித்துவம் செய்கின்ற தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இயன்றவரை ஒன்றிணைந்து ஈழத்தமிழர்களின் கூட்டு உரிமை சார்ந்த நிலைப்பாடுகளை மேற்கொள்ளவேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள் என அதி. வண. கலாநிதி கி. நோயெல் இம்மானுவேல் ஆயர், திருகோணமலை மறை மாவட்டம் மற்றும்  தவத்திரு அகத்தியர் அடிகளார் தென்கயிலை ஆதீனம் ஆகியோர் கூட்டு அறிக்கை ஒன்னறை வெளியிட்டுள்ளனர்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்ட்டிருப்பதாவது,

இது தொடர்பில், கடந்த வருட இறுதியிலும் இவ்வருட ஆரம்பத்திலும் ஒன்றிணைந்த நிலைப்பாட்டை மேற்கொள்ளச் செய்யும் சந்திப்புகளை நடத்துவதில், சிவில் சமூகச் செயற்பாட்டாளர்களின் முயற்சியோடு மதத்தலைவர்களும் இணைந்து ஊக்குவித்தோம்.

சில கூட்டங்களைத் தலைமையேற்றும் நடாத்தியிருந்தோம். சமீபத்தைய நாட்களில் மீண்டும் இதைப் போன்ற ஒரு வரலாற்றுத் தேவை எழுந்திருப்பதாகச் சமூகத்தின் பல மட்டங்களில் இருந்தும் எம்மைத் தொடர்புகொண்டு வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டிருக்கின்றன.

ஒவ்வொரு முறையும் சிக்கல்கள் எழும்போது, அவற்றைத் தீர்த்துவைக்கவென மீண்டும் மீண்டும் புதிதாக முயற்சிகளை மேற்கொள்வதற்குப் பதிலாக, ஒரு பொதுவான மாற்றீட்டு அணுகுமுறையை வகுத்துக்கொள்வதை ஆராய்ந்து செயற்படுத்துவதே பொருத்தமாகத் தெரிகிறது.

இவ்வாறான ஒரு முயற்சியை முன்னெடுப்பதில் முதற்கட்டமாகச் சமூகத்தின் பல மட்டங்களில் இருந்தும் கருத்துகளைப் பெற்று, அவற்றைப் பரிசீலித்து, அடுத்;தகட்டமாகப் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தனித்தனியாகவும் கூட்டாகவும் கலந்துரையாடி, தக்க வழி ஒன்றை வகுக்க ஆவன செய்வதற்காகப் பூர்வாங்கச் செயற்குழு ஒன்றை எமது மேற்பார்வையில் உருவாக்கிவருகிறோம்.

வடக்கு-கிழக்கு இணைந்து மேற்கொள்ளும் இம்முயற்சியில் சட்டத்துறை சார்ந்த இளந்தலைமுறையோடு, சிவில் சமூக மற்றும் மரபுரிமைச் செயற்பாடுகளில் இயங்கிய அனுபவம் கொண்டவர்களும், ஊடக அமையங்களை ஸ்தாபித்துச் செயற்பட்ட அனுபவம் வாய்ந்தவர்களுமாக, எந்தவித அரசியற் கட்சிப் பின்னணியும் இல்லாத ஐவர் இணைக்கப்பட்டுள்ளார்கள்.

முதற்கட்டமாக, இவர்கள் கல்வி மற்றும் சட்டத்துறை சார்ந்தவர்களோடு கலந்துரையாடல்களையும் ஆரம்பித்திருக்கிறார்கள். இந்தப் பூர்வாங்கக் குழுவின் பொதுத் தொடர்பை சட்டத்துறை சார்ந்த மூவர் கையாள்வது பொருத்தம் என்ற அடிப்படையிலும், இளைய தலைமுறையின் பங்கேற்பு இவ்வாறான முயற்சிகளுக்கு அவசியம் என்ற நோக்கோடும், மேலும் இரண்டு சட்டத்தரணிகள், இயன்றவரை பால், மத, மற்றும் பிரதேச சமத்துவத்துடன் இணைக்கப்பட்டு பொதுத்தொடர்பைக் கையாளவேண்டும் என்று நாம் விரும்புகிறோம்.

செயற்குழு மற்றும் பொதுத்தொடர்பில் பங்கேற்பவர்களின் விபரங்களை, ஆரம்பக் கலந்துரையாடல்கள் முடிவடைந்ததும் வெளிப்படைத்தன்மையோடு அறியத்தரும் பணியை மன்னாரைச் சேர்ந்த அ. அன்ரனி றொமோள்சன் எனும் சட்டத்தரணியிடம் கையளித்திருக்கிறோம். இந்தக் குழுவில் இணைந்து கொள்ளவும், ஆலோசனைகளை வழங்கவும், இம் முயற்சியை ஊக்குவித்துச் செயற்படவும் விரும்புவோர் participate@tamildemocracy.org என்ற மின்னஞ்சல் முகவரி ஊடாகத் தமது தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளலாம்.

கல்வித்துறை, சட்டத்துறை, மனித உரிமை, ஊடகத்துறை மற்றும் இதர சமூகப் பரப்புகளில் இருந்து கருத்துக்களை உள்வாங்கி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரோடும் கலந்தாலோசித்து, உகந்த ஒரு பொறிமுறையை வகுக்கும் பணியை முன்னெடுக்கவேண்டும் என்ற நல்லாசியுடன் இம் முயற்சியை ஆரம்பித்து வைப்பதில் மனநிறைவடைகிறோம். அனைவரின் ஆதரவும் இம்முயற்சிக்குக்கிட்ட இறையருளை வேண்டிநிற்கிறோம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

அக்டோபர் முதலாம் திகதி ஊரடங்குச் சட்டம் நீக்கப்படுமா? சந்தேகிக்கும் ரணில் விக்ரமசிங்க

நாட்டில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் அக்டோபர் முதலாம் திகதி நீக்கப்படும் என வெளியாகும் தகவலை சந்தேகிப்பதாக இலங்கையின் முன்னாள் பிரதமரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தேசிய சந்தைக்கு விநியோகிப்பதற்கான டீசலை கொள்வனவு செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதன் பிரதிபலனாக அக்டோபர் நடுப்பகுதி வரை ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்படலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச வர்த்தக சபை ( இலங்கை) ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடலில் வைத்து ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

சிவப்புப் பட்டியலில்’ இருந்து அகற்ற செயற்கை சரிவை உருவாக்க முயலவில்லை – சுகாதார அமைச்சு

இலங்கையை ‘சிவப்புப் பட்டியலில்’ இருந்து அகற்றுவதற்காக, கோவிட் தொற்றுக்களில் செயற்கை சரிவை உருவாக்குவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று இலங்கையின் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேலா குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் வெளியாகியுள்ள அறிக்கைகளை அவர் முற்றிலுமாக நிராகரித்துள்ளார்.

இலங்கையில் பிசிஆர் சோதனைகளின் எண்ணிக்கையை குறைத்து, செயற்கை வீழ்ச்சியை உருவாக்கி, சிவப்பு பட்டியலில் இருந்து, நாட்டை நீக்க முடியும் என்ற செய்தி தவறானது.

நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு மட்டுமே ஒரு நாடு சிவப்பு பட்டியலில் இருந்து நீக்கப்படாது. அதற்கு ஏனைய அளவுகோல்களும் உள்ளன என்று அவர் சுட்டிக்காட்டினார்.

செப்டெம்பர் 22 புதன்கிழமை, முதல் தமது நாட்டின் சிவப்பு பட்டியலில் இருந்து இலங்கை நீக்கப்படும் என்று இங்கிலாந்து அரசாங்கம் அறிவித்த நிலையிலேயே இலங்கை சுகாதார அமைச்சும் இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.

Posted in Uncategorized

திலீபனுடைய நினைவேந்தலை மேற்கொள்ள முன்னாள் வடமாகாணசபை உறுப்பினருக்கு தடையுத்தரவு

தியாகதீபம் திலீபனுடைய நினைவேந்தலை நடத்த முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனுக்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதிக்குள் தியாகதீபம் திலீபனுடைய நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்தவுள்ளார் என தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் நேற்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் இலக்கம் AR/724/21இல் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.

அதனடிப்படையில் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை ஆராய்ந்த முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா தியாகதீபம் திலீபனுடைய நினைவேந்தல் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனுக்கு தடையுத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த தடையுத்தரவினை முல்லைத்தீவு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இன்று, முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரனின் இல்லத்திற்குச் சென்று கையளித்துள்ளார்.

குறித்த தடையுத்தரவில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,

துரைராசா ரவிகரன் ஆகிய நீங்கள் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்குள் விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்த இராசையா பார்த்தீபன் என்பவர் தொடர்பில் நினைவுகூரல் நிகழ்வுகளை நடத்தவுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளதென முல்லைத்தீவு பொலிஸார் அறிக்கை செய்துள்ளனர்.

எனவே துரைராசா ரவிகரன் ஆகிய நீங்களும், உங்கள் ஆதரவாளர்களும் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்குள் 24.09.2021 தொடக்கம் 27.09.2021 வரையான காலப்பகுதிக்குள் இராசையா பார்த்தீபன் தொடர்பிலான எந்தவொரு நினைவுகூரலையும் மேற்கொள்ளக்கூடாதென்ற தடைக்கட்டளையினை குற்றவியல் நடவடிக்கை முறைச்சட்டக்கோவையின் பிரிவு 106இற்கு அமைவாகப் பிறப்பிக்கின்றேன் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் முல்லைத்தீவு பொலிஸார் முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் இணைப்பாளர் மரியசுரேஸ் ஈஸ்வரி, தமிழரசுக்கட்சி உறுப்பினர் அ.பீற்றர் இளஞ்செழியன் உள்ளிட்டவர்களுக்கும் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் திலீபனின் நினைவேந்தலை மேற்கொள்வதற்குத் தடை உத்தரவுகளைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி சபைகளின் ஆயுட்காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்க யோசனை

உள்ளூராட்சி சபைகளின் ஆயுட்காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பது தொடர்பில் அரசு கவனம் செலுத்தி வருகின்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டில் தற்போது இயங்கும் உள்ளூராட்சி சபைகளின் பதவிக் காலம் 2022ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நிறைவுக்கு வருகின்றது.

எனினும், தற்போதைய சூழ்நிலையில் தேர்தலொன்றை நடத்துவது நிதி உட்பட ஏனைய விடயங்களில் தாக்கம் செலுத்தும் என்பதாலேயே சபையின் ஆயுட்காலத்தை நீடிப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதற்காக முன்னெடுக்கப்பட வேண்டிய சட்ட ஏற்பாடுகள் தொடர்பில் உள்ளூராட்சி சபைகள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சு ஆராய்ந்து வருகின்றது எனவும் அறியமுடிகின்றது.
நாட்டில் கடைசியாக நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தல் கலப்பு முறையிலேயே நடைபெற்றது.

சபைகளுக்குத் தெரிவாகும் உறுப்பினர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.