இறுதி யுத்த காலத்தில் விடுதலைப் புலிகள் தங்களிடம் சரணடையவில்லை என்கிறது இராணுவம்!

இறுதி யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் இலங்கை இராணுவத்திடம் தமிழீழ விடுதலைப் புலிகள் எவரும் சரணடையவில்லை என இலங்கை இராணுவம் தகவலறியும் ஆணைக்குழு முன்பாக சாட்சியம் வழங்கியுள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தமிழ் பத்திரிகையொன்றின் ஊடகவியலாளர் பா.நிரோஸ் தகவலரியும் ஆணைக் குழுவிடம் முன்வைத்திருந்த மேன்முறையீடு நேற்று (வியாழக்கிழமை) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இலங்கை இராணுவம் இவ்வாறு சாட்சியம் வழங்கியுள்ளது.

2019ஆம் ஆண்டும் “எங்களிடம் புலிகள் சரணடையவில்லை” என ஊடகவியலாளரின் தகவலறியும் விண்ணப்பத்தை இராணுவம் மறுத்திருந்ததது.

இது தொடர்பான மேன்முறையீடு மூன்று வருடங்களுக்குப் பின்னர் நேற்று பரிசீலிக்கப்பட்டது.

“யுத்த பகுதியிலிருந்து மக்கள் இடம்பெயர்ந்தார்கள். அவர்கள் புலிகளா? பொதுமக்களா? என்பது எமக்கு தெரியாது. நாம் பொறுப்பேற்று கொண்டபோது பதிவுகள் எதனையும் மேற்கொள்ளவில்லை.

எம்மிடம் வந்தவர்களை பஸ்களில் ஏற்றி புனர்வாழ்வு ஆணையாளர் நாயகப் பணியகத்தின் கட்டுப்பாடுகளில் இருந்த முகாம்களில் சேர்த்தோம்.

அதன் பின்னர் புனர்வாழ்வு பணியகமே அவர்கள் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.” எனவும் இராணுவம் சாட்சியம் வழங்கியது.

ஆனால், ஊடகவியலாளர் நிரோஸ் சார்பாக ஆணைக்குழுவில் முன்னிலையான சட்டத்தரணி ஸ்வஸ்திக்கா இதனை மறுத்ததோடு இராணுவத்திடம் புலிகள் சரணடைந்தமைக்கான ஆதாரங்களை ஆணைக்குழுவுக்கு சமர்ப்பித்தார்.

மேலும், புனர்வாழ்வு பணியகத்திடம் இராணுவத்தினம் கூறும் தகவல்கள் இல்லை என, புனர்வாழ்வு பணியகம் வழங்கியுள்ள தகவல்களையும் சட்டத்தரணி ஸ்வஸ்திக்கா ஆதாரபூர்வமாக சுட்டிக்காட்டினார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட ஆணைக்குழு, “அரசாங்கமே இந்த விடயங்களை சர்வதேச அமைப்புகளுக்கு பல்வேறு முறை வழங்கி இருக்கிறது.

எனவே, 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் இப்போது மறைப்பதற்கு ஒன்றுமில்லை.” என இராணுவத்துக்கு அறிவித்தது.

புலிகள் இராணுவத்தினரிடம் சரணடைந்தமைக்கான எழுத்துமூல சமர்ப்பணங்களை 10 நாட்களுக்கு இராணுவத்துக்கு ஊடகவியலாளர் நிரோஸ் வழங்க வேண்டும்.

அதுபோல இராணுவமும் எழுத்துமூல சமர்ப்பணங்களை விண்ணப்பதாரருக்கு வழங்கவும் ஆணைக்குழு உத்தரவிட்டது.

ஜனவரி 4ஆம் திகதி மனு மீள ஆணைக்குழு முன்பாக விசாரிக்கப்பட விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் இவ்வாண்டிற்கான 2வது அபிவிருத்திக் குழுக் கூட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் இவ்வாண்டிற்கான இரண்டாவது அபிவிருத்திக் குழுக் கூட்டம் பாராளுமன்ற உறுப்பினரும் கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் இன்று (04) திகதி மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரனின் ஏற்பாட்டில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம், இராசமாணிக்கம் சாணக்கியன், கிழக்கு மாகாண பிரதம செயலார் ஆர்.எம்.பீ.எஸ். ரத்னாயக ஆகியோர் பிரசன்னமாயிருந்தனர்.

குறிப்பாக இம்மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் பெரும்போக நெற்செய்கைக்குத் தேவையான இரசாயன மற்றும் சேதன உரத்தினை விரைவாகப் பெற்றுக் கொடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டு அதற்கான முன்னாயத்த செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

மேலும் இதன்போது கடந்த ஆண்டில் மாவட்டத்தில் மெற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாகவும் இவ்வாண்டு நடைமுறைப்படுத்துவதற்காக முன்மொழியப்பட்டுள்ள திட்டங்களுக்கான அனுமதியினை பெற்றுக்கொள்வது தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

மேலும் இம்மாவட்டத்தின் பொருளாதாரம், விவசாயம், நீர்ப்பாசனம், கல்வி, சுகாதாரம், சமுர்த்தி, சுற்றாடல் உட்பட அனைத்து திணைக்களங்கள் சார் விடயங்களும் ஆராயப்பட்டதுடன் அவற்றில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

இக்கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சினி ஸ்ரீகாந், காணிப்பிரிவிற்கான மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.நவரூபரஞ்ஜனி முகுந்தன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.சசிகலா புண்ணியமூர்த்தி, உள்ளுராட்சி சபைகளின் தவிசாளர்கள், மாவட்ட பொலிஸ் மற்றும் இராணுவ தரப்பு பிரதானிகள், பிரதேச செயலாளர்கள், ஏனைய திணைக்களங்களின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்துகொண்டிருந்தனர்.

வட மாகாணத்தின் அபிவிருத்தி -ஆளுநர் ஜப்பான் தூதரகம் இணைந்து கலந்துரையாடல்

வட மாகாணத்தில் மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் பாங்கெடுப்புகள் தொடர்பில் வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா மற்றும் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் ஹிடோக்கி மிசுகோஷி இணைந்து கொழும்பில் நேற்று (28) கலந்துரையாடலை ஏற்பாடு செய்தனர்.

குறித்த கலந்துரையாடலில் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் ஹிடேக்கி மிசுகோஷி, மாற்றுக் கொள்கைக்கான மையம் (CPA ) – கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து, பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க இந்தியாவில் உள்ள இலங்கை தூதுவர் மிலிந்த மொரகொட,வடக்கு ஆளுநரின் பிரத்தியேக செயலாளர் தன்யா ரத்னாவல், கொரிய தூதுவர் சந்துஷ் ஜியோங் வூன்ஜின் தாய்லாந்து தூதுவர் ஹெச், வியட்நாம் தூதுவர் போஜ் ஹர்ன்போல் , திருமதி ஹோ திதான் ட்ரூக் (தூதர்) மலேசியா, இந்தோனேசியா தூதர் எச்.இ. டெவி குஸ்டினா டோபிங் ,யாழ் இந்தியத் துனைத்தூதர் ராகேஷ் நடராஜ் , இலங்கைக்கான துருக்கி தூதரக அதிகாரி பிலால் சக்லாம் (மூன்றாவது செயலாளர்) ,சர்வதேச அமைப்புகள் WFP – அப்துர் ரஹீம் சித்திக் ( நாட்டு இயக்குநர் ) UNDP – திரு. ராபர்ட் ஐங்கர், அருண நாணயக்கார (அலகு தலைமை போர்ட்ஃபோலியோ நிர்வாகம்) WB – அசேல திஸாநாயக்க (சிரேஷ்ட நடவடிக்கை அதிகாரி), ஹூசம் அபுதாகா (ஆலோசகர்) JICA – டெட்சுயா யமடா (தலைமைப் பிரதிநிதி) , டகாஃபுமி சகுரசாகாத ஆகியோர் கலந்து கொண்டனர்.

குறித்த கலந்துரையாடலில் வட மாகாணத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தூதரக அதிகாரிகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பணிப்பாளர்களுக்கு விளக்கமளித்தார்.

கலந்துரையாடலில் பங்கு கொண்ட தூதரக அதிகாரிகள் மற்றும் அரசு சார்பற்ற நிறுவனத்தின் பணிப்பாளர்கள் வடமாகாணத்தில் மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்தி திட்டங்களுக்கு காத்திரமான பங்கை வகிப்பதுடன் விரைவில் வடக்கு மாகாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளதாக தெரிவித்தனர்.

கடல்சார் பாதுகாப்பை உறுதி செய்வது நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியம் – அரசாங்கம்

இந்தியப் பெருங்கடல் உலக இராணுவ சக்திகளின் மோதலுக்குரிய பகுதியாகவோ அல்லது விளையாட்டு மைதானமாகவோ இருக்கக் கூடாது என இலங்கை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

கடல்சார் பாதுகாப்பை உறுதி செய்வது, நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு என்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

இந்தியப் பெருங்கடல் முழுவதும் உள்ள கடல்சார் இராஜதந்திரத்தை மற்ற பெருங்கடல்களுடன் இணைவதற்கு மேலும் வலுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

இதேவேளை இலங்கை எந்தவொரு இராணுவக் கூட்டணியிலும் பங்கேற்காது என்றும், பசுபிக் பிராந்தியத்தின் பிரச்சனைகள் இங்கு வருவதை விரும்பவில்லை என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

உலக வல்லரசுகளின் போட்டியிலிருந்து இலங்கை எப்போதுமே விலகி இருக்கும் என்றும் இந்தப் போட்டிகள் எதுவும் இந்தியப் பெருங்கடலில் மோதலுக்கு வழிவகுக்காது என்றும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

தமிழர்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம்:தவறவிட வேண்டாம்!:பிரதமர் வலியுறுத்து

“தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு இது அரிய சந்தர்ப்பம் எனவும், கிடைத்த அரிய சந்தர்ப்பத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உள்ளிட்ட தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகள் தவறவிடக்கூடாது”என பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

‘தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு புதிய அரசமைப்பு மூலம் கிடைக்கும். ஒரு வருடத்துக்குள் இந்த பணிகள் முற்றுப்பெற வேண்டும் என்பதே தனது நோக்கம்’ என்று அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்த நிலையில் பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

“புதிய அரசமைப்பு, தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் அதிபர் திறந்த மனதுடன் அனைவருடனும் பேச ஆரம்பித்துள்ளார்.

எனவே, தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகள் கட்சி, பேதமின்றி மக்களின் நலனைக் கருத்திற்கொண்டு அதிபருடன் இணைந்து செயற்பட வேண்டும்.

காலத்தை இழுத்தடிக்காமல் புதிய அரசமைப்பு மூலம் தேசிய பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காண்பதுதான் அதிபரின் விருப்பம். அதனால்தான் ஒரு வருடத்துக்குள் தீர்வுக்கான பணிகள் நிறைவுபெற வேண்டும் என்ற கால வரையறையை அதிபர் விதித்துள்ளார்”என தெரிவித்துள்ளார்.

ஜீ.எஸ்.பி சலுகையை பெற்றுக்கொள்ள சர்வதேசத்துடன் தொடர்ந்து பேச்சு-அமைச்சர் பந்துல குணவர்தன

ஜீ.எஸ்.பி சலுகையை இலங்கைக்கு பெற்றுக் கொள்வது தொடர்பில் சர்வதேசத்துடன் தொடர்ந்து பேச்சு வார்த்தை இடம்பெற்று வருவதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதற்காக மனித உரிமைகள் தொடர்பான விடயங்களை மேம்படுத்த அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். எனவே அந்த நிவாரணம் நாட்டுக்கு கிடைக்கும் என தாம் நம்புவதாக அமைச்சர் தெரிவித்தார்.

“கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சீனாவுடன் ஆலோசிக்கப்படுகிறது இது தொடர்பில் ஜப்பானும் கலந்துரையாடியுள்ளது. எனினும் ஒரு உறுதியான முடிவுக்கு வர சிறிது காலம் பிடிக்கும். கடன் மறுசீரமைப்பு என்பது அத்தியாவசியமான விடயம் என்பதால் அது தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்“ என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

Posted in Uncategorized

இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய அகதிகளுக்காக வடமாகாணத்தில் நடமாடும் சேவை!

இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய அகதிகளின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் நடமாடும் சேவையை முன்னெடுப்பதற்கு நீதி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இலங்கையர்களின் குடியுரிமை பெறுதல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் நடமாடும் சேவைகள் எதிர்வரும் 31 ஆம் மற்றும் நவம்பர் மாதம் முதலாம் திகதிகளில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதன்படி எதிர்வரும் 31 ஆம் திகதி யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திலும் நவம்பர் முதலாம் திகதி கிளிநொச்சி திறன் அபிவிருத்தி மத்திய நிலையத்திலும் இந்த நடமாடும் சேவைகள் இடம்பெறவுள்ளதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.

சுமார் ஏழாயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 12 ஆயிரத்து 500 இற்கும் மேற்பட்டவர்கள் வட மாகாணத்திற்கு திரும்பி மீண்டும் குடியேறியுள்ளனர்.

அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மேற்பார்வையில், அமைச்சுடன் தொடர்புடைய நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளின் பங்களிப்புடன் இந்த நடமாடும் சேவை இடம்பெறவுள்ளது.

Posted in Uncategorized

வரவு – செலவுத் திட்ட உரை நவம்பர் 14

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நவம்பர் 14 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளது.

நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனை முன்வைத்து வரவு செலவு திட்ட உரையை நிகழ்த்தவுள்ளார்.

இன்று நடைபெற்ற பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழு கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க துணைத் தூதர் டக் சோனெக் மயிலிட்டி துறைமுகத்தை பார்வையிட்டார்!

இலங்கைக்கான அமெரிக்க துணைத் தூதர் டக் சோனெக், வலி வடக்கு மயிலிட்டி துறைமுகத்துக்கு சென்று, துறைமுக அதிகாரிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன் மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பொருளாதார நிலைமை தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டார்.

தற்போது ஏற்பட்டுள்ள மண்ணெண்ணெய் பிரச்சினை, மீனவர்கள் எதிர்கொள்கிற முக்கிய பிரச்சினையாக காணப்படுகின்றது தொடர்பில், இதன்போது அவர் மீனவர்களிடம் கேட்டறிந்தார்.

அத்துடன் மயிலிட்டி கிராம அபிவிருத்தி சங்கத்துக்கு சென்ற அவர், அங்கு மீள்குடியேற்ற குழுவினரை சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது காணிகள் விடுவிக்கப்படாமை தொடர்பிலும், பொதுமக்களுடன் காணிகள் அதிஉயர் பாதுகாப்பு வலையத்தில் இருக்கின்றமை தொடர்பிலும் அவருக்கு வலிவடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சுகிர்தன் தெளிவுபடுத்தினார்.

இது தொடர்பில் அவர், தான் ஜனாதியுடன் பேசி ஒரு நல்லதொரு முடிவினை பெற்று தருவதாக கூறியுள்ளார்.

பொங்கலுக்கு மேலும் சில தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை ; ஜனாதிபதி உறுதி

“தீபாவளியில் விடுவிக்கப்பட்டதைப் போல், தைப்பொங்கலுக்கு இன்னொரு தொகுதி தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதாக என்னிடம் நேரில் தெரிவித்தார் ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.”

இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,
“ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற தீபாவளி நிகழ்வில் நானும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் தமிழ் அரசியல் கைதிகள் விடுவிப்பு பற்றியும், கொழும்பில் பொலிஸ் பதிவு பற்றியும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் உரையாடினோம்.
பொலிஸ் பதிவு பற்றி மீண்டும் ஒருமுறை ஐ.ஜிக்குப் பணிப்பதாக ஜனாதிபதி சொன்னார்.

தீபாவளியில் விடுவிக்கப்பட்டதைப் போல், தைப்பொங்கலுக்கு இன்னொரு தொகுதி தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதாக ஐனாதிபதி மேலும் சொன்னார்.

அருகிலிருந்த பிரதமர் தினேஷ் குணவர்த்தன மற்றும் அமைச்சர் மனுஷ நாணயக்கார, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சாகல, யோகராஜன் ஆகியோரும் சாதகமாகக் கருத்து பகிர்ந்தனர்.
மலையக மக்கள் மத்தியிலான பெருந்தோட்டப் பிரிவினர் பற்றி நான் நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த பிரேரணை பற்றி ஜனாதிபதி அறிந்திருந்தார்.

பெருந்தோட்டப் பகுதிகளிலேயே 51 வீத உணவின்மை பிரச்சினை காணப்படுகின்றது என்று கூறினேன். பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளை ஆராய, செயலணி ஒன்றை அமைக்குமாறு ஜனாதிபதியிடம் கோரினேன். ஜனாதிபதி கொள்கை ரீதியாக உடன்பட்டார்”

– என்றார்.இதேவேளை, அரசமைப்பின் 34 ஆவது சரத்தின்படி, இலங்கை நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்ட ஒருவருக்கு பொதுமன்னிப்பு வழங்குவது தொடர்பில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம், சிறையிலுள்ள 8 தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு, தீபாவளித் தினமான நேற்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

Posted in Uncategorized