திணறும் அரச நிறுவனங்கள்: சம்பளம் வழங்குவதில் சிக்கல்?

பணப் பற்றாக்குறை காரணமாக அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் அரச கூட்டுத்தாபனங்களின் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் கடும் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இந்நிலைமை காரணமாக அந்த நிறுவனங்களின் அத்தியாவசிய சேவைகளை பராமரிப்பதும் பாரிய பிரச்சினையாக மாறியுள்ளதாக பல முக்கிய அமைச்சுக்களின் செயலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சில நிறுவனங்களில் அன்றாட நடவடிக்கைகளுக்குத் தேவையான எழுதுபொருள்களை கொள்வனவு செய்வது மற்றும் அத்தியாவசியப் பணியாளர்களுக்கு மேலதிக நேரக் கொடுப்பனவுகளை வழங்குவது போன்றவை பாரிய பிரச்சினையாக மாறியுள்ளதாக அறியமுடிகிறது.

அமைச்சுக்களில் புதிய திட்டங்களை ஆரம்பிப்பது மாத்திரமன்றி ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டங்களை பராமரிப்பதிலும் கூட கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, சுகாதாரம், கல்வி, நெடுஞ்சாலைகள், வீடமைப்பு போன்ற அமைச்சுக்களில் ஒப்பந்ததாரர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகை இருபதாயிரம் கோடிக்கு மேல் உள்ளதாக அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பல அரச நிறுவனங்களில் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதிலும் கடுமையான நெருக்கடி நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கைக்கு 3.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்குவதாக ஜப்பான் தெரிவிப்பு

இலங்கைக்கு ஆதரவாக 3.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை அவசர மனிதாபிமான உதவியாக வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யோஷிமாசா தெரிவித்துள்ளார்.

மே மாதம் 3 மில்லியன் அமெரிக்க டொலர் அவசரகால உதவித்தொகை ஏற்கனவே வழங்கப்பட்டது, இருப்பினும், பொருளாதார நிலைமை மோசமடைந்து வருவதால், மனிதாபிமான உதவிக்கான உயர்ந்த தேவை வெளிப்பட்டது என அவர் செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நெதர்லாந்து மற்றும் சவூதி அரேபிய நாடுகளின் இலங்கைக்கான புதிய தூதுவர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது என ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

ஏழு நகர சபைகளை மாநகர சபைகளாக மாற்றுவதற்கான அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

ஒவ்வொரு நிர்வாக மாவட்டத்திலும் ஒரு தலைநகரை அபிவிருத்தி செய்யும் நோக்கில் ஏழு நகர சபைகளை கலைத்து மாநகர சபைகளாக மாற்றுவதற்கான அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, வவுனியா, களுத்துறை, கேகாலை, புத்தளம், திருகோணமலை, மன்னார் மற்றும் அம்பாறையின் இரண்டு நகரங்களில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களின் நகர சபைகள் கலைக்கப்பட்டுள்ளன.

பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் என்ற வகையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் இந்த அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ் மக்களுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டு அடுத்த சில மாதங்களில் இறுதி தீர்வு ஏற்படும்-ரணில்

நாட்டில் யுத்தத்தில் ஈடுபட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. எனினும் தற்போது நாம் நாட்டில் சமாதானத்தை நிலைநிறுத்த வேண்டும். அதற்கமைய வடக்கு மற்றும் தமிழ் மக்களுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டு அடுத்த சில மாதங்களில் இறுதி தீர்வு ஏற்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

பிராந்தியத்தின் பாதுகாப்பையும் அமைதியையும் பாதிக்கும் முறுகல் நிலை உருவாவதை நாம் விரும்பவில்லை. எந்தவொரு அதிகாரப் போட்டியிலும் இலங்கை பங்கேற்காது.

இலங்கையின் பாதுகாப்பை உறுதி செய்யும் அதே வேளை, இந்தியாவுக்கு எந்தவொரு பாதகமான விளைவும் ஏற்படாது என்பதையும் நாம் உறுதி செய்வதுடன் தொடர்ந்தும் அதே நிலைப்பாட்டில் இருப்போம் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இக்கருத்தை வெளியிட்டுள்ளார்.

Posted in Uncategorized

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்: ஐ.நா உப நிகழ்வில் சுரேந்திரன் வலியுறுத்தல்

இலங்கை பொறுப்புக்கூறலை இழுத்தடித்துள்ளதால் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இடம்பெற்ற உப நிகழ்வில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஊடகப்பேச்சாளர் சுரேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

‘ஆயுத மோதலின் போதும் அதற்கு பின்னரும் இலங்கையில் தமிழர் உரிமைகளுக்கான சர்வதேச சட்ட பாதுகாப்பில் தோல்வி’ என்ற தலைப்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இடம்பெற்ற உப நிகழ்வில் தமிழர் தரப்பு பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர்.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஊடகப்பேச்சாளர் சுரேந்திரன் குருசுவாமி, தமிழர் உரிமைக்கான குழுமத்தின் பிரதிநிதி பெரிடன்ஸ் பெர்டினான்டஸ் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டவர்கள் இந்த உப நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

இந்நிகழ்வில் சுரேந்திரன் மேலும் கூறுகையில், பல வருடங்கள் கடந்து விட்ட போதிலும் இலங்கை அரசு கலப்பு நீதிமன்ற பொறிமுறை தொடர்பில் கரிசனை செலுத்தவில்லை எனவும் தமிழர் பிரதேசங்களை சிங்களமயமாக்குவதையும் இராணுவமயமாக்கல் மற்றும் காணி சுவீக்கரிப்பையும் முன்னெடுக்கப்படுகின்றது என தெரிவித்துள்ளார்.

அத்தோடு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்ற போதிலும் தமிழர்களுக்கு ஏதும் மாறவில்லை எனவும், மாறாக சர்வதேச சமூகத்துடன் தனது உறவுகளை கட்டியெழுப்ப இலங்கை அரசிற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது எனவும் இதன்போது தமிழர் உரிமைக்கான குழுமத்தின் பிரதிநிதி பெரிடன்ஸ் பெர்டினான்டஸ் கூறியுள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பல தசாப்தங்களாக தமக்கான நீதியைக் கோரி நிற்பதாக வட கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் செயலாளர் லீலாவதி ஆனந்தராஜா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கு – உலகத் தலைவர்கள் உட்பட 2,000க்கும் மேற்பட்ட முக்கிய நபர்கள் லண்டன் வருகை!

ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக உலகத் தலைவர்கள் இங்கிலாந்திற்கு படையெடுத்துள்ளனர். லண்டனில் வெஸ்ட் மின்ஸ்டர் மண்டபத்தில் மேடையில் ராணியின் உடல், ராஜ மரியாதையுடன், கிரீடத்துடன் வைக்கப்பட்டுள்ளது. ராணியின் உடல் அடங்கிய சவப்பெட்டியை கண்டு அஞ்சலி செலுத்துவதற்காக பொதுமக்கள் வெள்ளமென திரண்டு வருகின்றனர்.

இரவிலும் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் மக்கள் ராணியின் மீதுள்ள அன்பை வெளிக்காட்ட அஞ்சலி செலுத்த நீண்ட வரிசையில் காத்துக்கிடக்கின்றனர். கடந்த ஆண்டு மறைந்த ராணியின் கணவர் அரசர் பிலிப் அடக்கம் செய்யப்பட்ட இடம் அருகே, வரும் 19-ம் தேதி அன்று ராணியின் உடல் நல்லடக்கம் செய்யப்படும். இதில் 2,000க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்துகொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் பங்கேற்குமாறு ஏறக்குறைய அனைத்து நாடுகளின் தலைவர்களுக்கும் இங்கிலாந்து அழைப்பிதழ்களை அனுப்பியது.

லண்டனுக்கு வரும் வெளிநாட்டுத் தலைவர்களைப் பாதுகாக்க, பிரிட்டிஷ் எம்ஐ5 மற்றும் எம்ஐ6 உளவுத்துறை நிறுவனங்கள், லண்டனின் பெருநகர காவல்துறை மற்றும் ரகசிய சேவை ஆகியவை இணைந்து செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து காவல் துறை இதுவரை மேற்கொள்ளாத மிகப்பெரிய பாதுகாப்பு நடவடிக்கை இதுவாகும்.லண்டன் முழுவதும் பலத்த பாதுகாப்பு வளையத்திற்குள் காணப்படும் என்று முன்னாள் ராயல் பாதுகாப்பு அதிகாரியான சைமன் மோர்கன் தெரிவித்துள்ளார்.

சுமார் 7.5 லட்சம் பேர் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவின் துணை அதிபர் வாங் கிஷான், அதிபர் ஜி ஜின்பிங் சார்பாக இறுதிச் சடங்கில் பங்கேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோர் ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் பங்கேற்க இன்று லண்டன் புறப்படுகின்றனர்.

இந்தியாவில் இருந்து ஜனாதிபதி திரவுபதி முர்மு இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள உள்ளார். பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மற்றும் ஜப்பானின் பேரரசர் நருஹிட்டோ ஆகிய பல தலைவர்களும் இறுதிச் சடங்கில் பங்கேற்பார்கள்.ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் பங்கேற்க ரஷியா, பெலாரஸ் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற இங்கிலாந்துடன் முரண்பட்ட நாடுகளின் தலைவர்கள் அழைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Posted in Uncategorized

”நாட்டில் எந்தக் கட்சியிலும் ஜனநாயகம் கிடையாது”: மகிந்த தேசப்பிரிய!

நாட்டில் எந்தக் கட்சியிலும் ஜனநாயகம் இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், இதன் காரணமாக இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பொதுவாக தமது அரசியல் நோக்கங்களை அடைய முடியாதுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் சுற்றியே அதிகப்படியான அதிகாரங்கள் குவிந்துள்ளதாக மஹிந்த தேசப்பிரிய சுட்டிக்காட்டியுள்ளார்.

கட்சித் தலைவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு மீண்டும் மீண்டும் சலுகைகளை வழங்குவதாகவும் அவர்கள் ஏற்கனவே அரசியல் குடும்பங்களை மையமாகக் கொண்ட அதிகாரங்களைக் கொண்டு தேர்தலில் வெற்றி பெறுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அரசியலுக்கு வருவதை தாம் எதிர்க்கவில்லை என்றும் ஆனால் தகுதியின் அடிப்படையில் அவர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும் என்றும் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.

இந்த போக்கு தொடரும் வரை, இளைஞர்கள் தாங்கள் விரும்பும் அமைப்பு மாற்றத்தை அடைய முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

கொழும்பிலுள்ள நோர்வே தூதரகம் மூடப்படவுள்ளது

கொழும்பிலுள்ள நோர்வே தூதரகத்தை 2023 ஜூலை இறுதிக்குள் மூட நோர்வே அரசு முடிவு செய்துள்ளது.

வெளிநாட்டு தூதரகப் பணிகளின் வலையமைப்பில் கட்டமைப்பு மாற்றங்களைச் செய்வதற்கான நோர்வேயின் தீர்மானத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஸ்லோவாக்கியா, கொசோவோவில் உள்ள நோர்வே தூதரகங்கள் மற்றும் ஹூஸ்டன் அமெரிக்காவிலுள்ள துணைத் தூதரகங்களும் 2023 இல் நோர்வே வெளியுறவு சேவையின் கட்டமைப்பு மாற்றங்களின் ஒரு பகுதியாக மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தியோகபூர்வமாக இரண்டு நாள் விஜயமாக சமந்தா பவர் இலங்கை வருகை

சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க உதவித்திட்டத்தின் நிர்வாகி சமந்தா பவர், இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார்.இதேவேளை ஒன்றிணைந்ததும், சுபீட்சமானதும், பாதுகாப்பானதுமான சுதந்திர இந்திய – பசுபிக் பிராந்தியத்தைக் கட்டியெழுப்புவதற்கான அமெரிக்காவின் பூரண ஆதரவையும் அவர் இதன்போது உறுதிப்படுத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள், தனியார்துறைசார் பிரதிநிதிகள், விவசாயிகள் மற்றும் தற்போதைய நெருக்கடியின் விளைவாகப் பாதிக்கப்பட்டோரை அவர் சந்திக்கவுள்ளார்.

மேலும் இந்த நெருக்கடியிலிருந்து மீள்வதற்கும் வாழ்வாதாரத்தை மீளக்கட்டியெழுப்புவதற்கும் அமெரிக்கா எவ்வாறு உதவமுடியும் என்பது குறித்தும் சமந்தா பவர், கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளார்.நிலவும் பொருளாதார நெருக்கடி தொடர்பான பிரச்சனைகள் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான அபிவிருத்தியை வலுப்படுத்தும் நோக்கில் இந்த விஜயம் அமைந்துள்ளது.

மஹிந்த தலைமையில் புதிய கூட்டணியை உருவாக்கி எதிர்காலத்தில் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவோம் – நாமல் ராஜபக்ஷ

மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் புதிய கூட்டணியை உருவாக்கி, எதிர்காலத்தில் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவோம் என்றும் இலங்கையை நவீன யுகத்திற்கு அழைத்துச் செல்வதற்குத் தேவையான தலைமைத்துவத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வழங்கும் என்றும் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

சமூக ஊடகங்கள் ஊடாக வன்முறையை தூண்டுபவர்களுக்கு எதிராக கோட்டாபய ராஜபக்ஷ சட்டத்தை அமுல்படுத்தினால் இன்றைய நிலை வேறுவிதமாக இருந்திருக்கும் என்றும் கூறினார்.

எவ்வாறாயினும், இந்த சவாலான காலகட்டத்தில் அவ்வாறானவர்களுக்கு எதிராக தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுப்பது மகிழ்ச்சியளிப்பதாக தெதிகமவில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்

Posted in Uncategorized