”அரசாங்க அதிகாரிகள் அரசியல், இனவாத நோக்கில் செயற்படுகின்றனர்”

பின்தங்கிய நிர்க்கதியான மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அரசு பொறிமுறை மீது எனக்கு நம்பிக்கை இல்லை. நிவாரணம் பெறுவோரை தெரிவு செய்வதில் பிரதேச செயலக, கிராம சேவகர் மட்ட அரசாங்க அதிகாரிகள் அரசியல் நோக்கிலும், இனவாத நோக்கில் செயற்படுகின்றனர்.
உண்மையான நிர்க்கதியான மக்களுக்கு, இந்திய அரசு, தமிழக அரசு, உலக நாடுகள், ஐநா அமைப்புகள் கொடையாக வழங்கும் நிவாரணங்கள் முறையாக கிடைப்பதில்லை. எனவே நிவாரண நன்கொடைகள் நேரடியாக நிர்க்கதியான மக்களை சென்று அடைவதை உறுதிப்படுத்த அவற்றை சிவில் அமைப்புகள் மூலமாக சர்வதேச சமூகம் வழங்க வேண்டும். அவை கண்காணிக்கப்பட வேண்டும். நிவாரணம் பெறுகின்றவர்கள் யார் என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, ஜனாதிபதி முன்வைத்த இடைக்கால பாதீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள யோசனைகள் நடைமுறை சாத்தியம் அற்றவை. கணிசமான யோசனைகளுக்கு நிதி ஒதுக்கீடுகள் இல்லை. துண்டு விழும் தொகையை ஒருபோதும் நிதியமைச்சர் ஜனாதிபதியால் சரி செய்ய முடியாது. ஏற்கனவே அரச கஜானா காலி. ஆகவே எங்கே இருந்து நிதி வரப்போகிறது என்று கேட்க விரும்புகிறேன்.

இதனால்தான் நான் வரவு செலவு திட்ட விவாதத்தில் உரையாற்றிய போது, எனது அக்கறை, அவதானம் ஆகியன ஆக, பின்தங்கிய நிர்க்கதியான மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் மாத்திரம் இருக்கிறது என கூறினேன். அதிலும், பின்தங்கிய மக்கள் யார் என்பதை அறிவதில் அதிக கண்காணிப்பு வேண்டும் என கூறினேன்.

ஏற்கனவே, சமுர்த்தி மற்றும் பின்தங்கியோர் பட்டியலில் இருக்கின்ற பெயர்கள் தொடர்பில் எனக்கு திருப்தி இல்லை. அங்கே நிவாரணம் பெற தகைமையற்ற வசதியானோர் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. அதேபோல் அங்கே நிவாரணம் பெற வேண்டிய நிர்க்கதியான மக்களின் பெயர்கள் இடம்பெறவில்லை. இதை நான் பொறுப்புடன் கூறுகிறேன்.

இதற்கு காரணம் அரசியல்வாதிகள் தங்கள் ஆதரவாளர் பெயர்களை அங்கே திணித்துள்ளார்கள். எனது தொகுதி கொழும்பில் வாழும் “ஹர்பன் புவர்” என்ற நகர பாமரர்களின் பெயர்கள் முறையாக அங்கே இல்லை. குறிப்பாக சொந்த வீட்டில் வாழவில்லை என்ற காரணத்தால் பலரது பெயர்கள் இடம்பெறவில்லை. இது எப்படி? சொந்த வீடு இல்லாத வாடகை வீட்டில் வசிக்கும் ஏழைகள் மண்ணை சாப்பிட்டு, தண்ணீர் குடிக்க வேண்டுமா? அடையாள அட்டையை பார்த்து கஷ்டப்படும் எல்லோருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்.

அரசியல் காரணமாகவும், தமிழர்கள் என்ற காரணத்தாலும், பாரபட்சமாக நமது மக்கள் நடத்தபடுவதை நான் இலங்கைக்கு உதவும் உலக சமூகத்துக்கு சொல்லி வருகிறேன். இன்னமும் சொல்வேன்.

அடுத்தது, பெருந்தோட்டங்களில் வாழும் பாமர மக்கள். உழைக்கும் மக்கள். இன்று கோதுமை, பாண், மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலையேற்றத்தால் விழி பிதுங்கி போயிருக்கும் பிரிவினர். நாட்சம்பள தொகையை 25 ஆல் பெருக்கி மாதம் இவ்வளவு சம்பளம் எனக்கூறி அவர்களை சமுர்த்தி மற்றும் பின்தங்கியோர் பட்டியலில், பிரதேச செயலக, கிராம சேவகர் மட்ட அரசாங்க அதிகாரிகள் சேர்ப்பதில்லை. இந்த மாத சம்பளம், காகிதத்தில் மட்டுமே இருக்கிறது. தேவையான அளவு நாட்கள் வேலை எல்லோருக்கும் கிடைப்பதில்லை. மாத சம்பளமும் கிடைப்பதில்லை.

இங்கேயும் தமிழர் என்ற இனவாத நோக்கில், பாரபட்சமாக நமது மக்கள் நடத்தப்படுகிறார்கள் என நான் நினைக்கிறேன். தமிழகத்தில் இருந்து வந்த பொருட்களை இலங்கையில் துன்பத்தில் வாழும் எல்லா மக்களுக்கும் கொடுங்கள் என நான்தான் முதன் முதலில் சொன்னேன். பாராளுமன்றத்திலும் சொன்னேன். அதையிட்டு தமிழக முதல்வரும் மகிழ்ச்சி தெரிவித்து இருந்தார்.

ஆனால், அரசாங்கம் கடைசி கட்டத்தில் தமிழகத்தில் இருந்து வந்த பெருந்தொகை பொருட்களை உணவு ஆணையாளரிடம் கொடுத்து விநியோகம் செய்தது. இதில் நமது மக்களின் பிரதிநிதிகள் தொடர்பு படவில்லை. ஆகவே இந்த பொருட்களை அரசு அதிகாரிகள் தனது சொந்த விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் விநியோகம் செய்தார்கள்.

இவற்றை நான் அறிந்து வைத்துள்ளேன். நம் நாட்டின் பின்தங்கிய மக்களுக்கு என உலகம் தரும் நன்கொடைகள் எல்லோருக்கும் பாரபட்சமின்றி கிடைக்க வேண்டும் என்பது எனது குரல். அது யாருக்கு கேட்க வேண்டுமோ அவர்களுக்கு கேட்கும்படி நான் செய்வேன்.

இது சிங்கள பெளத்த நாடு என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் – சரத் வீரசேகர

இது சிங்கள பெளத்த நாடு என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இங்கு பழைய தூபிகளைப் பராமரிக்க எவருடைய அனுமதியையும் பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது என முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

மேற்குலக நாடொன்றின் தூதுவர் ஒருவர், ஏன் சிங்கள பௌத்த நாடு என்று கூறுகின்றீர்கள் என்று, ஒருவரிடம் கேட்டுள்ளார். நீங்கள் தேவேந்திர முனையில் இருந்து காங்கேசன்துறைக்கு உலங்குவானூர்தியில் போகும்போது தெரியும் விகாரைகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்டுள்ளமையாலேயே அவ்வாறு கூறுகின்றோம் என்று தூதுவருக்கு அவர் விளக்கமளித்துள்ளார்.

இங்கு பழைய தூபிகளைப் பராமரிக்க எவருடைய அனுமதியைப் பெற்றுக்கொள்ளும் அவசியமில்லை. அது தொல்பொருள் திணைக்களத்தின் பணியாகும். இந்து ஆலயங்கள், முஸ்லிம் பள்ளிகள் இந்த நாட்டில் அமைக்கப்படுகின்றன. அதற்கு பௌத்தர்கள் ஒருபோதும் எதிர்ப்பு வெளியிடுவதில்லை.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அந்த நாடாளுமன்ற உறுப்பினர் வடக்கில் பௌத்த விகாரைகளை அமைக்க வேண்டாம் என்று கோஷங்களை எழுப்பிவிட்டு கொழும்புக்கு வந்து மீண்டும் வடக்குக்குப் போவதானது இது பௌத்த நாடு என்பதனாலேயே என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

வேறு நாட்டில் பெரும்பான்மையான மதமொன்றுக்கு வேறு மதத்தைச் சேர்ந்த ஒருவர் இடையூறு ஏற்படுத்தினால் அதற்கு மறுநாள் அவர் காணாமல்போயிருப்பார். குருந்தூர் விகாரை பராமரிப்புக்காக இடைவிடாது செய்யும் இடையூறுகளை நிறுத்த வேண்டும் என்று நாங்கள் மிகவும் விநயமாக அவர்களிடம் கேட்கின்றோம்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற ஒருவர் முல்லைத்தீவு குருந்தூர் மலை விகாரையின் விகாராதிபதி சட்டவிரோத நிர்மாணத்தை மேற்கொள்கின்றார் என்று தெரிவித்து பொய்யான தகவலை நாடாளுமன்றத்துக்கு அறிவித்து, நாடாளுமன்றத்தையும் மக்களையும் தவறாக வழிநடத்த முயற்சித்துள்ளார்.தொல்பொருள் அகழ்வுப் பணிகளை நிறுத்துவதற்கான தீய எண்ணத்துடனேயே அவர் அவ்வாறு கூறியுள்ளார்.

முல்லைத்தீவு நீதிவான் அந்த நிர்மாணத்தை நிறுத்துவதற்கு உத்தரவு வழங்கியிருந்தார். அதன் பின்னர் பொலிஸார் நகர்த்தல் பத்திரமொன்று மூலம் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சட்டத்தரணிகளுடன் அந்த இடத்துக்குச் சென்று அவதானித்து அந்த வழக்கை நீக்கிக்கொண்டுள்ளனர்.இதன்படி தொல்லியல் திணைக்களத்துக்கு அதனைப் பராமரிக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படியே நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.

குருந்தூர் அசோக விகாரை என்பது 2 ஆயிரம் வருடங்கள் வரையில் பழமையான பௌத்த விகாரை தொகுதியாகும். தீபவம்சம் மற்றும் மகாவம்சத்துக்கு அமைய குருந்தூர் மலை உண்மைக் கதையை எழுதிய வரலாற்று இடமாகும்.அங்கு அகழ்வுகளின்போது புத்தர் சிலைகள் உள்ளிட்டவை மீட்கப்பட்டுள்ளன. ஆனால், அங்கு எந்த இடத்திலும் இந்து ஆலயம் இருந்தமைக்கான சாட்சியம் இல்லை. இதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அன்று நடந்த சம்பவத்துக்கு வெட்கப்பட வேண்டும்.

இங்கு புனித சின்னங்களை பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு ஜூன் 12 ஆம் திகதி நடைபெற்றது. அதில் பௌத்த பீடங்களின் நாயக்க தேரர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த சிலர் குண்டர் குழுக்களுடன் சென்று அதைக் குழப்பினர். மலர் ஒன்றை வைத்துக்கூட பூஜை செய்ய முடியாத வகையில் பிக்குகள் திரும்பியிருந்தனர்.இந்த பௌத்த நாட்டில் பெளத்த சாசனத்தை அவமதிக்கும் வேலையைச் செய்தும், பெளத்தர்கள் அமைதியாகப் பார்த்துக்கொண்டிருப்பதை மௌனித்திருப்பதாகக் கருத வேண்டாம் என்று அன்று நான் நாடாளுமன்றத்தில் கூறினேன்.

அன்று விடுதலைப்புலிகள் மக்களையும், அரந்தலாவ பிக்குகள் உள்ளிட்டவர்களையும் கொலை செய்யும் போதும் கொழும்பில் இந்து ஆலயங்களில் திருவிழாக்கள் நடந்தன. பௌத்தர்கள் எந்தத் தடைகளையும் ஏற்படுத்தவில்லை. அதனால் நீங்கள் செய்யும் வேலையால் அனைத்து தமிழ் மக்களுக்கும் அவமானத்தையே கொண்டுவந்துள்ளது. இது பௌத்த நாடாகும். சிங்கள பெளத்த நாடு என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

போராட்ட செயற்பாட்டாளர் நடிகை தமிதாவுக்கு விளக்க மறியல்!

கைது செய்யப்பட்டுள்ள போராட்ட செயற்பாட்டாளரும் நடிகையுமான தமிதா அபேரத்ன விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இவர் இன்று (08) கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய பின்னர், எதிர்வரும் 14 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஜூலை மாதம், ஜனாதிபதி செயலகத்திற்குள் நுழைந்து அதன் சொத்துக்களை சேதப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார்.

நேற்று (07) பத்தரமுல்லை தியத்த உயனேயில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட போது தமிதா அபேரத்ன, கொழும்பு வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவின் விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

அனர்த்தங்களுக்கு முகம்கொடுக்க தயாராக இருக்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை!

அனர்த்தங்கள் ஏற்படுவதற்கு முன்னர் தேவையான முன்னேற்பாடுகளை செய்துகொள்ளுமாறு அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட அமைச்சுகள் மற்றும் திணைக்களங்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் நேரடியாக உத்தரவு பிறப்பிக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அதன்படி, 25 மாவட்டங்களையும் உள்ளடக்கி, மாவட்டச் செயலகங்களின் தலைமையில், மாவட்ட நிர்வாக ஒருங்கிணைப்புப் பிரிவுகள் மற்றும் தொழில்நுட்ப ஆதரவை வழங்கும் புவிச் சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம், வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை செயற்படும்.

மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு பிரிவுகள் மற்றும் பிரதேச செயலக மட்டத்தில் உள்ள நிவாரண சேவை அதிகாரிகளுக்கு தேவையான அறிவுறுத்தல்களை பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வழங்கும்.

அனர்த்தங்கள் ஏற்படுவதைத் தவிர்த்து, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையைப் பேணுவதற்காக தேவையான நடவடிக்கைகள் மற்றும் அவசரகால பேரிடர் சூழ்நிலை ஏற்பட்டால், அதற்காக எடுக்க வேண்டிய துரிதமான நடவடிக்கைகள் குறித்தும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், அப்பணிகளின் செயல்திறனை உயர் மட்டத்தில் பேணி, தேவையான நிவாரணத் திட்டத்தை அவசரமாக நடைமுறைப்படுத்துவதற்கான தேவையான ஒத்துழைப்பை வழங்குமாறும் அனைத்து துறைசார் அமைச்சுகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அவசரநிலை தொடர்பில் முறையிடுவதற்கு 117 என்ற தொலைபேசி எண், 24 மணிநேரமும் செயல்படுத்தப்படுகிறது. அனர்த்த நிவாரண சேவை நிலையத்தை (NDRSC) 24 மணிநேரமும் செயற்படுத்த அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, குடிநீர் மற்றும் பிற வசதிகள் இதன் மூலம் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Posted in Uncategorized

தேசிய பாதுகாப்பு தொடர்பாக சட்ட முறைமையை அறிமுகப்படுத்தத் தீர்மானம்!

தேசிய பாதுகாப்பு தொடர்பாக சட்ட முறைமையை அறிமுகப்படுத்தத் அரசாங்கம் தீர்மனித்துள்ளது.

பயங்கரவாதம் மற்றும் வன்முறையான தீவிரவாதத்தின் புதிய வடிவங்கள் தொடர்பான ஏற்பாடுகளை அறிமுகப்படுத்துவதற்காக தற்போது காணப்படும் பயங்கரவாத எதிர்ப்புச் சடடங்களிலுள்ள பலவீனங்களை தவிர்ப்பதற்கும், அவ்வாறான செயற்பாடுகளை எதிர்கொள்வதற்கும், சட்ட வலுவாக்கம் செய்வதற்கும், விசாரணை மற்றும் புலனாய்வு செயற்கருவிகளை மேலும் வலுப்படுத்துவதற்கும் விரிவான தேசிய பாதுகாப்பு சட்ட முறைமையொன்று அறிமுகப்படுத்த வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த அனைத்து விடயங்கள் தொடர்பாகவும் சர்வதேச தரநியமங்கள் பரிந்துரைகளைக் கருத்தில் கொண்டு தேசிய பாதுகாப்பு தொடர்பாக முழுமையான சட்ட முறைமையொன்றுக்கான அடிப்படைச் சட்டமூலத்தைத் தயாரிப்பதற்காக நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியல்மைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளரின் தலைமையில் குழுவொன்றை நியமிப்பதற்காக பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி அவர்கள்: நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியல்மைப்பு மறுசீரமைப்பு அமைச்சர்: மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோரால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இலங்கையிலிருந்து ஜெனீவாவிற்கு புறப்பட்ட குழு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி வரை ஜெனிவாவில் நடைபெறவுள்ள

இந்நிலையில், குறித்த அமர்வில் பங்கேற்பதற்காக அமைச்சர் அலி சப்ரி தலைமையிலான குழுவினர் இன்று ஜெனிவாவிற்கு பயணமாகியுள்ளனர்.

அதன்படி, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, நிதீ அமைச்சர் விஜயதாச ராஜபக்‌ஷ, சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் குறித்த குழுவில் உள்ளடங்குதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

இந்தியா இலங்கைக்கு 4 பில்லியன் டொலர் உதவிகளை வழங்கியுள்ளது – ஐநாவில் இந்தியா

மனிதனை மையமாக கொண்ட உலகமயமாக்கலில் தனது ஆக்கபூர்வமான பங்களிப்பு குறித்து ஐநாவில் கருத்து தெரிவித்துள்ள இந்தியா இலங்கைக்கு உணவு மற்றும் நிதியுதவியாக கிட்டத்தட்ட 4 பில்லியன் டொலர்களை வழங்கியதாக தெரிவித்துள்ளது.

சமாதானத்தை ஏற்படுத்தும் ஆணைக்குழு தொடர்பான ஐக்கியநாடுகள் பொதுச்சபையின் வருடாந்த கூட்டு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய இந்தியாவின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி ருச்சிரகம்போஜ் இதனை தெரிவித்துள்ளார்.

எங்களின் நெருங்கிய அயலில் உணவுப்பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கடந்த சில மாதங்களாக 4 பில்லியன் டொலர் உணவு மற்றும் நிதியை வழங்குவதன் மூலம் எங்களின் சிறந்த நண்பரும் அயலருவமான இலங்கைக்கு உதவுகின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மோதல் ஆரம்பித்தது முதல் உணவு மற்றும் பொருட்விநியோக சங்கிலி அழிக்கப்பட்டதால் ஏற்பட்ட மோசமான விளைவுகளிற்கு தீர்வை காண்பதற்காக நிதி உதவி தேவைப்படும் நாடுகளிற்கு இந்தியா உதவிகளை வழங்குகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

22ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டதால் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் அதிகாரங்கள் பகிரப்படும் – அலி சப்ரி

அரசியலமைப்பின் 22வது திருத்தம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் அதிகாரங்கள் பகிரப்படும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

கொழும்பில் செய்தியாளர்களிடம் இன்று பேசிய அவர்,

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட பெரும்பாலான கட்டமைப்புகள் அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் நிறைவேற்றப்படும் போது மீண்டும் திரும்பும் என தெரிவித்தார்.

முன்னர் திட்டமிடப்பட்ட இடைக்கால ஏற்பாட்டை தக்கவைக்க தற்போதைய ஜனாதிபதி விரும்பவில்லை என்றும் 19ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தவே அவர் விரும்புவதாகவும் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்தார்.

சர்வதேச மற்றும் பிராந்திய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சிறந்த நடைமுறைகளுக்கு அமைவாக தேசிய பாதுகாப்பு, மனித உரிமைகள் மற்றும் மனித சுதந்திரத்தை சமநிலைப்படுத்துவதற்கும், சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டத்தை தயாரிப்பதற்கும் இலங்கை தயாராகி வருவதாகவும் வெளிவிவகார அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் வெறிபிடித்தவர்களே உள்ளனர் – முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போது எந்தக் கொள்கையையும் கொண்டிருக்கவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இல்லை என்றும் கட்சியில் கொள்கைகளோ, ஆட்களோ இல்லை என்றும் பெயர் பலகை மட்டுமே உள்ளது என்றும் தற்போது கட்சியில் வெறிபிடித்தவர்களே உள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திரத்திற்குப் பிறகு இலங்கையில் பெரிய ஜனநாயகக் கட்சியாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இருந்ததாகவும், தற்போது அது அழிக்கப்பட்டுள்ளதாகவும் தனக்கு கட்சி முக்கியமல்ல என்றும் கட்சியின் கொள்கைகளும் மக்களும் தான் முக்கியம் என்றும், எனவே மக்களுக்காகவும் கட்சியின் கொள்கைகளுக்காகவும் தொடர்ந்து பணியாற்றுவேன் என்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்

Posted in Uncategorized

இங்கிலாந்து பிரதமராக லிஸ் டிரஸ் தெரிவு!

இங்கிலாந்து பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் விலகியதை தொடர்ந்து, புதிய பிரதமராகும் வாய்ப்பை லிஸ் டிரஸ் பெற்றுள்ளார்.

ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த 2 ஆம் திகதி முடிவடைந்தது.

இந்தத் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முன்னாள் நிதி மந்திரி ரிஷி சுனக்குக்கும், தற்போதைய வெளியுறவு மந்திரி லிஸ் டிரஸ்சுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

புதிய தலைவரை தேர்வு செய்ய கன்சர்வேட்டிவ் கட்சியின் உறுப்பினர்கள் சுமார் 1.60 லட்சம் பேர் தபால் மற்றும் ஆன்லைன் மூலமாக வாக்களித்தனர். வாக்குகள் எண்ணப்பட்டு இறுதி முடிவுகள் இன்று அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஆளும் கட்சியின் தலைவருக்கான தேர்தலில் லிஸ் டிரஸ் வெற்றி பெற்றார்.

இதையடுத்து, இங்கிலாந்தின் அரசியலமைப்பு சட்டப்படி ஆளும் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்படும் நபரே நாட்டின் பிரதமராக நியமிக்கப்படுவார். நாளை இங்கிலாந்து ராணியை சந்தித்து ஆசி பெற்ற பின்னர் பிரதமராக பதவியேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.