இலங்கை சீர்குலைந்தால், இந்து சமுத்திரத்தில் அமைதியின்மை ஏற்படும் – விமல் வீரவன்ச

இலங்கை தற்போது பொருளாதார ரீதியில் நெருக்கடிகளை கொண்டுள்ளது. இந்த நிலைமையில் கடன்களை விட முதலீடுகளை எதிர்பார்ப்பதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வருகைதந்துள்ள சீன இராணுவத்தின் யுவான் வாங் 5 கப்பலுக்கு உத்தியோகபூர்வ வரவேற்பளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இதனை தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துவெளியிட்ட அவர், எமது கடல், வான்வெளியே எம்மை ஏனைய நாடுகளுடன் இணைக்கிறது. அவற்றில் இறையாண்மை அடிப்படையில் எமக்கு சில உரிமைகள் உள்ளன. ஒரு நாடு என்ற வகையில் அதனை பேணவேண்டிய கடப்பாடு எமக்கு உள்ளது.

இந்து சமுத்திரத்தில் அமைதி நிலவ வேண்டும். யுத்த களமாகவோ, எதிரிகளின் கூடாரமாகவோ மாறிவிடக்கூடாது என்பதே எமது எதிர்பார்ப்பு.

நாம் பொருளாதார ரீதியில் பலமாகவோ, பலவீனமாகவோ இருந்தாலும் அதனை நாம் பாதுகாக்க வேண்டும். சிலர் இதனை உளவு கப்பல் என்றனர். நாம் இதனை தொழில்நுட்ப கப்பல் என்கிறோம்.

சீனா எம்முடன் நீண்டகாலமாக நட்புறவை கொண்டுள்ளது. நாம் பொருளாதார ரீதியில் விழுந்துள்ள சந்தர்ப்பங்களிலும் எமக்கு கைகொடுக்கும் நாடுகளில் சீனாவும் ஒன்றாகும்.

நாம் எதனை செய்ய வேண்டும் என்று எமக்கு ஒருபோதும் சீனா அழுத்தங்களை பிரயோகிக்கவில்லை. தொண்டு நிறுவனங்களை நிறுவி ஆட்சி கவிழ்ப்புகளை மேற்கொள்ள சீனா ஒருபோதும் செயற்பட்டதில்லை.

இந்த சந்தர்ப்பங்களில் கடன்களை விட முதலீடுகளால் அதிகம் சீனா எமக்கு உதவுமென நாம் எதிர்பார்கிறோம்.
இலங்கை சீர்குலைந்தால், இந்து சமுத்திரத்தில் அமைதியின்மை ஏற்படும், ஸ்திரமின்மை நிலைகொள்ளும். இந்த நிலைமை ஏற்படாமல் எம்மால் முன்னேறிச்செல்லமுடியும் என நாம் நம்புகிறோம் என்றார்.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய விரிவாக்கத் திட்டத்தை நிறுத்த ஜப்பான் நிறுவனம் தீர்மானம்

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய விரிவாக்கத் திட்டத்தை நிறுத்துவது தொடர்பாக இலங்கை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த ஜப்பானின் Taisei நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பான திட்டத்துக்கான நிதியுதவியை இடைநிறுத்தியதையடுத்து நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

விமான நிலையத்தில் புதிய பல்நோக்கு முனையம் மற்றும் வீதியை அமைப்பதற்கான ஒப்பந்தத்தை நிறுவனம் 2020 இல் பெற்றுள்ளது, அது அடுத்த ஆண்டுக்குள் முடிக்கப்பட வேண்டும்.

அதன்படி, நிதி நிலைமை நன்றாக இல்லை என்றால், ஜப்பானிய நிறுவனம் சம்பந்தப்பட்ட திட்டத்திலிருந்து விலக்குக் கோரும் திறன் உள்ளது.

அரச அதிகாரிகளுக்கு ஜனாதிபதி போட்ட உத்தரவு!

அரசாங்க செலவினங்களைக் கட்டுப்படுத்துவதற்காக திறைசேரியின் செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு அப்பாற்பட்ட செலவுகள் மேற்கொள்ள வேண்டாம் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரச அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.

அவ்வாறு செலவு செய்தால் அதற்கான செலவினங்களை சம்பந்தப்பட்ட பொறுப்பான உத்தியோகத்தர்கள் தனிப்பட்ட முறையில் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

திறைசேரி செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ள “பொது செலவினங்களைக் கட்டுப்படுத்துதல்” என்ற சுற்றறிக்கையின் விதிமுறைகளை அனைத்து அரச நிறுவனங்களின் தலைவர்களும் நிறைவேற்ற வேண்டும் என ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனக் கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் நுழைந்தது!

சீனாவில் இருந்து புறப்பட்ட சர்ச்சைக்குரிய யுவான் வான்-5 என்ற ஆராய்ச்சிக் கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை இன்று காலை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கப்பல் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடப்படவுள்ளது.

கடந்த 11 ஆம் திகதி கப்பல் நாட்டை வந்தடையவிருந்த நிலையில் உரிய அனுமதி கிடைக்காததால் கப்பலின் வருகை தாமதமானது.

குறித்த கப்பலினால் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சி காரணமாக இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுக்கூடும் என இந்தியா குற்றம் சுமத்தியிருந்தது.

எனினும் இராஜதந்திர ரீதியில் கலந்துரையாடி கப்பலை துறைமுகத்திற்குள் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

புதிய நியமனங்கள் குறித்து ஜனாதிபதி அமைத்த குழு!

அரச கூட்டுத்தாபனங்கள், சபைகள் மற்றும் அரச நிறுவனங்களின் தலைவர் மற்றும் பணிப்பாளர் பதவிகளில் புதிய நியமனங்கள் அல்லது மாற்றங்களுக்கு, முன் அனுமதி பெறுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் குழுவொன்றை நியமித்துள்ளார்.

ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தலைமையிலான குழுவின் ஏனைய உறுப்பினர்களாக பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, அமைச்சரவை செயலாளர் டபிள்யூ.எம்.டி.ஜே. பெர்னாண்டோ ஆகியோர் செயற்படுவார்கள்.

இந்தக் குழுவின் செயலாளராக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் சமிந்த குலரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

அரச கூட்டுத்தாபனங்கள், சபைகள் மற்றும் அரச நிறுவனங்களின் தலைவர் மற்றும் பணிப்பாளர்கள் பதவிகளில் மாற்றம் செய்ய வேண்டுமாயின், நியாயமான காரணங்களுடன் இந்தக் குழுவிடம் பரிந்துரைகளைச் சமர்ப்பித்து முன் அனுமதி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

முன் உடன்பாடுகளின்றி, அரச கூட்டுத்தாபனங்கள், சபைகள் மற்றும் அரச நிறுவனங்களின் தலைவர் மற்றும் பணிப்பாளர் பதவிகளில் மாற்றம் செய்யுமாறு ஜனாதிபதியிடம் அவ்வப்போது விடுக்கப்பட்ட எழுத்து மூலமான கோரிக்கைகள் மற்றும் சில முறைசாரா நியமனங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தி இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஜனாதிபதி செயலாளரின் கையொப்பத்துடன் அனைத்து அமைச்சுகளின் செயலாளர்களுக்கும் நேரடியாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளதுடன், அது தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பிரதமரின் செயலாளர் மற்றும் நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சுக்கும் இக்கடிதத்தின் பிரதிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

Posted in Uncategorized

டயஸ்போரா அமைப்புகளை சந்தித்து உரையாட நான் தயார். அதற்கான அடிப்படையை அரசு உருவாக்க வேண்டும் – மனோ கணேசன்

ரணில் நிர்வாகம், உலகத் தமிழர் பேரவை, பிரிட்டன் தமிழர் பேரவை, கனடா தமிழ்க் காங்கிரஸ், ஆஸ்திரேலிய தமிழ்க் காங்கிரஸ், உலக திராவிட ஒருங்கிணைப்புக் குழு மற்றும் திராவிட ஈழ மக்கள் சம்மேளனம் ஆகிய ஆறு அமைப்புக்கள் மீதான தடையும், 316 தனிநபர்களுக்குமான தடையும் நீக்கியுள்ளது. இந்நடவடிக்கையை நான் வரவேற்கிறேன்.  ஆனால், தடை நீக்கம் மாத்திரம் அவர்களை திருப்தி படுத்த போவதில்லை.

இலங்கையின் 52 பில்லியன் டொலர் கடன்சுமை, நாட்டை நடத்த மாதாந்த 500 மில்லியன் டொலர் தேவை ஆகிய வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்துள்ள அனைத்து தமிழ், சிங்கள மக்களின் ஒத்துழைப்புகளை நாம் நாட வேண்டும். இதற்காக கால தாமதம் செய்யாமல்,இந்நாட்டின் தேசிய ஐக்கியம் மற்றும் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பிலும், ஊழலற்ற நிதி நிர்வாகம் தொடர்பிலும் ஒரு குறைந்தபட்ச பொது கோட்பாடுகளை இலங்கை அரசு புலம்பெயர் இலங்கையர்களை நோக்கி அரசாங்கத்தின் உத்தரவாதமாக அறிவிக்க வேண்டும்.

இந்த அடிப்படையில் தமிழ் அமைப்புகள் மட்டுமல்ல,  இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்துள்ள சிங்கள மற்றும் அனைத்து மக்களது அமைப்புகளுடனும் சென்று உரையாட நான் தயாராக இருக்கின்றேன். ஒரு பக்கம் தமிழர் என்ற முறையிலும்,மறுபுறம் தெற்கில் சிங்கள மக்கள் வாழும் கொழும்பு மாவட்ட எம்பி  என்ற முறையிலும் நான் இந்த பாத்திரத்தை வகிப்பது பொருத்தமானது என நம்புகிறேன். அரசில் அமைச்சு பதவிகளை பெறுவதை விட இதுதான் பிரயோஜனமானது எனவும் நான் நம்புகிறேன் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன்  எம்பி தெரிவித்துள்ளார்.

இன்று நடத்திய விசேட ஊடக சந்திப்பில் மனோ எம்பி மேலும் கூறியதாவது,

இன்று நாம் உலக நாடுகளிடம் கையேந்தி கொண்டு இருக்கிறோம். ஆனால்,இந்தியாவை தவிர எவரும் எமக்கு உதவில்லை. இந்திய மக்களின் வரிப்பணம் மூலமான இந்த உதவிகள் இன்னமும் எவ்வளவு நாளைக்கு கிடைக்கும் என தெரியவில்லை.  சர்வதேச நாணய நிதி, உலக வங்கி ஆகியவை ஒதுங்கியே இருக்கின்றன.

அவர்களிடம் முன்வைக்கும் சமூக பொருளாதார திட்டம் என்ன? ஜனாதிபதி பதவி ஏற்று  பல வாரங்கள் ஆகியும் இவை எதுவும் இன்னமும் நடைபெறவில்லை. இந்நிலையில் பழைய அடிப்படைகளில் இருந்து மாறி, புதிய முறையில் பார்க்க, சிந்திக்க முடியுமானால், நாம் உலகம் முழுக்க வாழும் நமது நாட்டு மக்களிடம், தாய் நாட்டுக்கு உதவுங்கள் என கோர முடியும்.

உலகம் முழுக்க புலம் பெயர்ந்துள்ள அனைத்து தமிழ், சிங்கள இலங்கையர்கள் சுமார் 25 இலட்சம் பேர் வாழ்கிறார்கள். இவர்கள் அனைவரும் மனமுவந்து நாட்டுக்கு உதவக்கூடிய அளவில் அவர்களது நம்பிக்கையை பெறுவது நாட்டின், நாட்டு அரசின் கடமை. இந்நாட்டில் வாழ முடியாமல், வெளிநாடுகளுக்கு போய் விட்ட  இவர்களுக்கு நாடு நல்ல திசையில் மாறுகிறது என்ற நம்பிக்கை ஏற்பட வேண்டும்.

ஆனால், அவற்றுக்கு முன்நிபந்தனைகள் உண்டு. புலம் பெயர்ந்துள்ள தமிழர்கள் குறிப்பாக நாட்டின் தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் உத்தரவாதங்களை எதிர்பார்ப்பார்கள். புலம் பெயர்ந்துள்ள சிங்கள மக்கள் குறிப்பாக தமது உதவிகள் ஊழல், வீண்விரயம் ஆகியவற்றை செய்யும் அரசியல்வாதிகளின் கைகளுக்கு போய்விடக்கூடாது  தொடர்பில் உத்தரவாதங்களை எதிர்பார்ப்பார்கள்.

இந்நாடு சிங்கள பெளத்த நாடு என்ற அடிப்படை மாற வேண்டும். இந்நாடு சிங்கள, தமிழ், முஸ்லிம் நாடு என்ற அடிப்படை ஏற்கப்பட வேண்டும். இந்நாடு மத சார்பற்ற நாடாக மாறவும் வேண்டும். இலங்கையர் என்ற அடையாளம் மேலெழும்ப வேண்டும். அதேபோல் வெளிநாட்டில் இருந்து வரும், ஒவ்வொரு டொலரும், பவுண்டும், யூரோவும் நாட்டின் தேவைகளுக்காக வெளிப்படை தன்மையுடன் கூடிய பொறுப்பு கூறலுடன் பயன்படுத்தப்பட வேண்டும். இவை பற்றிய குறைந்தபட்ச பொது கோட்பாடுகளை உத்தரவாதமாக இலங்கை அரசும், எதிர் கட்சிகளும் அறிவிக்கும்மானால், இது சாத்தியப்படலாம்.

இந்த அடிப்படையில் தமிழ் அமைப்புகள் மட்டுமல்ல,  இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்துள்ள சிங்கள மற்றும் அனைத்து மக்களது அமைப்புகளுடனும் சென்று உரையாட நான் தயாராக இருக்கின்றேன். ஒரு பக்கம் தமிழர் என்ற முறையிலும்,மறுபுறம் தெற்கில் சிங்கள மக்கள் வாழும் கொழும்பு மாவட்ட எம்பி  என்ற முறையிலும் நான் இந்த பாத்திரத்தை வகிப்பது பொருத்தமானது என நம்புகிறேன். அரசில் அமைச்சு பதவிகளை பெறுவதை விட இதுதான் பிரயோஜனமானது எனவும் நான் நம்புகிறேன்.

Posted in Uncategorized

தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்காக நேபாளம், இலங்கை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைசாத்திடும் முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அமைச்சரவை இது தொடர்பில் செய்தி வெளியிட்டுள்ளது.

நேபாளத்திற்கும் இலங்கைக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ள அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

Posted in Uncategorized

இலங்கை – பாகிஸ்தான் கடற்படைகளுக்கு இடையிலான ‘போர் பயிற்சி ’   – கடற்படை விளக்கம்

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் கடற்படைக் கப்பலான (பிஎன்எஸ்) தைமூர் உடனான திட்டமிடப்பட்ட கடற்படைப் பயிற்சி தொடர்பான சில தகவல்களுக்குப் பதிலளித்த இலங்கை கடற்படையினர், வெளிநாடுகளிலிருந்து வருகை தரும் கடற்படைக் கப்பல்கள் நாட்டை விட்டுப் புறப்படும்போது வழக்கமான செயற்பாடாக பயிற்சிகளை மேற்கொள்வது சம்பிரதாயபூர்வமானது என தெரிவித்துள்ளது.

134 மீ. நீளமுள்ள PNS தைமூர் ஆகஸ்ட் 12 அன்று ஒரு உத்தியோகபூர்வமான பயணமாக கொழும்பு வந்தடைந்தது. இந்த கப்பல் ஆகஸ்ட் 15 வரை நாட்டில் இருக்கும் , மேலும் இரு கடற்படைகளுக்கு இடையில் ஒத்துழைப்பையும் நல்லுறவையும் மேம்படுத்துவதற்காக இலங்கை கடற்படை ஏற்பாடு செய்யும் பல நிகழ்ச்சிகளில் கப்பலின் பணியாளர்கள் பங்கேற்பார்கள்.

மேலும், பிஎன்எஸ் தைமூர் ஆகஸ்ட் 15 ஆம் திகதி புறப்படும்போது மேற்கு கடல் பகுதியில் இலங்கை கடற்படையுடன் கடற்படை பயிற்சியை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“இந்தப் பின்னணியில், இலங்கை கடற்படைக்கும் பாகிஸ்தான் கடற்படைக்கும் இடையில் ‘போர் விளையாட்டு’ பற்றி பரப்பப்படும் சில ஊடகச் செய்திகள் தவறானவை” என்று இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இந்த பயிற்சிகளின் முக்கிய நோக்கம், வெளிநாட்டு கடற்படைகளுடன் செயல்படும் திறன், கூட்டாண்மை மற்றும் நல்லெண்ணத்தை மேம்படுத்துவது மற்றும் சிறந்த நடைமுறைகளை பரிமாறிக்கொள்வதாகும்.

இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஜப்பான், ஜேர்மனி, இங்கிலாந்து, ரஷ்யா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளின் கடற்படைகளுடன் இதற்கு முன்னர் பல தடவைகள் இவ்வாறான பயிற்சிகளை மேற்கொண்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

ஐநா மனித உரிமைகள் பேரவைக்கு தமிழ்க் கட்சிகள் கூட்டாக கடிதம்!

ஐந்து தமிழ் கட்சிகளின் தலைவர்கள் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக்கு கூட்டாக அறிக்கையொன்றை அனுப்பிவைத்துள்ளனர்.

தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வைக் கொண்டு வருவதற்கு, சர்வதேச கண்காணிப்புடனான பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என இந்த அறிக்கையில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கடந்த வருடம் நிறைவேற்றப்பட்ட 46/1 பிரேரணையில் உள்ள சரத்துக்களுக்கு மேலதிகமாக சில முக்கிய விடயங்கள் உள்ளடக்கப்பட்டு இந்த அறிக்கை அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஒருங்கிணைப்பாளர் சுரேந்திரன் குருசுவாமி தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான  சி.வி.விக்னேஸ்வரன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் , தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் ந.சிறீகாந்தா ஆகியோர் கூட்டாக, இந்த அறிக்கையை ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அமர்வு செப்டெம்பரில் நடைபெறவுள்ள நிலையில் அனுப்பிவைக்கப்பட்டுள்ள இந்த அறிக்கையில் ஆறு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

தமிழர்களின் துன்பத்தைத் தணிக்கவும், தமிழர்களுக்கு எதிராக நடத்தப்படும் அட்டூழியக் குற்றங்களுக்கு நீதி வழங்கவும் இந்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு  தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் ஐநா மனித உரிமைகள் பேரவையை கோரியுள்ளனர்.

ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் 2021 மார்ச் அறிக்கையின் பரிந்துரைக்கு அமைய  இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துவதுடன்  வட கொரியாவை போன்று   ஐ.நா. பாதுகாப்புப் பேரவை இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு  பரிந்துரைக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது

1983 க்கு முந்தைய காலத்தை போன்று தமிழர் பகுதிகளில் இலங்கை இராணுவத்தின் பிரசன்னத்தை குறைத்தல் வேண்டும் எனவும், யுத்தம் முடிவடைந்து பதின்மூன்று வருடங்கள் கடந்துள்ள போதிலும், இன்னமும் அரசாங்கம் தமிழர் பிரதேசங்களில் அதே இராணுவ மட்டத்தை  பேணுவதாகவும் தமிழ் கட்சித் தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பிரதேச எல்லைகளை மீள் நிர்ணயம் செய்து அரசாங்கத்தின் அனுசரணையில் முன்னெடுக்கப்படுகின்ற திட்டமிட்ட குடியேற்றங்களை நிறுத்த வேண்டும் எனவும் அவர்களது அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்களுக்கு   நிரந்தர அரசியல் தீர்வைக் கொண்டு வருவதற்காக சர்வதேச கண்காணிப்புடனான பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பதவி விலகியுள்ள நிலையில் அவர் அரச தலைவருக்கான பாதுகாப்பை இழந்துள்ளதாக தெரிவித்துள்ள தமிழ் கட்சிகளின் தலைவர்கள், அவரை நீதிக்கான பொறிமுறைக்கு முன் நிறுத்துமாறும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையை கோரியுள்ளனர்.

சுயாதீனமாக அரசியல் கருத்துக்களை வெளிப் படுத்துவவதற்கான உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் ஐந்து தமிழ் கட்சிகளினதும் தலைவர்கள் கூட்டாக அனுப்பிவைத்துள்ள அறிக்கையில்  குறிப்பிடப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

”இந்தியாவுக்கு இலங்கை நம்பிக்கை துரோகமிழைத்துள்ளது”: ராமதாஸ் குற்றச்சாட்டு!

சீன கப்பலுக்கு அனுமதி அளித்து இலங்கை இந்தியாவுக்கு நம்பிக்கை துரோகம் செய்துள்ளது என்று  பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ´´இந்தியாவின் அழுத்தத்தைத் தொடர்ந்து சீன உளவுக் கப்பலுக்கு அனுமதி மறுத்த இலங்கை அரசு, இப்போது அதன் நிலையை மாற்றிக் கொண்டு நாளை மறுநாள் சீன கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வர அனுமதித்திருக்கிறது. இலங்கை அரசின் செயல் மிகப்பெரிய நம்பிக்கைத் துரோகம்.

சீன கப்பல் இலங்கை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டால், தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்கள் உளவு பார்க்கப்படும். இந்திய பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படும் என எச்சரித்தப் பிறகும் சீனக் கப்பலுக்கு இலங்கை அனுமதி அளித்துள்ளது. இலங்கையின் சீன பாசத்திற்கு இது தான் எடுத்துக்காட்டு.

இலங்கையின் வேண்டுகோளை ஏற்று அந்நாட்டிற்கு டோர்னியர் 228 வகை போர் விமானத்தை இந்தியா நாளை இலவசமாக வழங்குகிறது. இப்படியாக ராணுவ உதவி, பொருளாதார உதவி அனைத்தையும் பெற்றுக் கொண்டு தான் இந்தியாவுக்கு இலங்கை துரோகம் செய்கிறது. இதுதான் அதன் குணம்.

இலங்கையின் துரோகத்தை இந்தியா புரிந்து கொண்டு அதற்கேற்ற வகையில் வெளியுறவுக் கொள்கையை வகுக்க வேண்டும். இந்தியாவின் பாதுகாப்பு கருதி, இலங்கைக்கு இலவசமாக வழங்கப்பட்ட கச்சத்தீவை திரும்பப் பெறுவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.´´ என்று தெரிவித்துள்ளார்.