”ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான உண்மைகளை வெளிக்கொண்டு வாருங்கள்”: ஜனாதிபதியிடம் பேராயர் வேண்டுகோள்!

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிக்கொணர முயற்சித்தால் மட்டுமே தற்போதைய ஜனாதிபதியை ஏற்றுக்கொள்ள முடியும் என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

கொச்சிக்கடை புனித அந்தோணியார் ஆலயத்தில் நடைபெற்ற ஆராதனையின் போது, ​​ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாப்பரசர் பிரான்சிஸ் வழங்கிய நிதி கையளிக்கப்பட்டது .

இதன்போது உரையாற்றிய அவர், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான உண்மையை வெளிக்கொணரும் நோக்கில் தற்போதைய ஜனாதிபதி செயற்பட்டால் மட்டுமே அவரை ஏற்றுக்கொள்வோம். இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் சதி இருக்கலாம் என அறியப்படுகிறது. கூறியுள்ளது. இது குறித்த உண்மையை வெளிக்கொணர தற்போதைய ஜனாதிபதி உழைக்க வேண்டும்.

மேலும் 2019 ஏப்ரல் 21க்கு முன்னர் தாக்குதலுக்கு தலைமை தாங்கிய சஹ்ரானைக் கைது செய்யவிருந்த பொலிஸ் அதிகாரியைத் தடுத்தவர்களுக்குத் தண்டனை வழங்குவது அவசியமாகும். சஹ்ரானை கைது செய்ய விடாமல் தடுத்த அதிகாரிகளுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும், ஏனெனில் அவரும் சஹரானைப் போன்ற குற்றத்தை செய்துள்ளார். நாங்கள் யாரையும் பழிவாங்க முயற்சிக்கவில்லை, ஆனால் உண்மையை மட்டுமே அறிய விரும்புகிறோம்” என்று அவர் மேலும் கூறினார்

Posted in Uncategorized

2500 பொருட்களுக்கு கட்டுப்பாடு விதிக்க மத்திய வங்கி யோசனை!

இலங்கையில் டொலர் பற்றாக்குறை மேலும் மோசமடையக்கூடும் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இதனால் அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை மேலும் மட்டுப்படுத்துமாறு இலங்கை மத்திய வங்கி நிதியமைச்சிற்கு அறிவித்துள்ளது.

நாட்டில் வெளிநாட்டு கையிருப்பின் தாக்கம் எதிர்காலத்தில் தொடர்ந்து மோசமாக இருக்கும் என மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. எனவே, இந்த இறக்குமதிக் கட்டுப்பாடுகளை உடனடியாகச் செய்ய வேண்டும் என்று மத்திய வங்கி பரிந்துரை செய்துள்ளது.

எரிபொருள், மருந்து மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு டொலரை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதால், அத்தியாவசியமற்ற அனைத்து பொருட்களின் இறக்குமதியும் கண்டிப்பாக கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதன்படி, அத்தியாவசியமற்ற பொருட்களின் மூன்று பட்டியல்களை மத்திய வங்கி நிதியமைச்சிற்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இப்பட்டியலில் 2500க்கும் மேற்பட்ட அத்தியாவசியமற்ற பொருட்கள் அடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

Posted in Uncategorized

”பலம் வாய்ந்த நாடுகளின் வேட்டைக் களமாக இலங்கை மாறிவிட்டது”

பலம் வாய்ந்த நாடுகளுக்கு வேட்டைக்களமாக இலங்கை மாறிவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

இதன் மூலம் தேசிய பாதுகாப்பு கூட நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், ராஜபக்சர்களால் இந்நாட்டின் முதுகெழும்பு உடைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

2019 ஜனாதிபதி தேர்தலில் “ஐக்கிய பாதை”க்கு பதிலாக “தவறான பாதையை” தெரிவு செய்ததன் அவலத்தை இன்று நாடு எதிர்கொண்டுள்ளதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இந்நாட்டை கட்டியெழுப்பும் ஆற்றல் ஐக்கிய மக்கள் சக்திக்கே உண்டு எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இன்று (13) ஹோமாகம தேர்தல் தொகுதியில் நடைபெற்ற கட்சி ஆதரவாளர்களுடனான கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஹோமாகம தேர்தல் தொகுதியின் ஐக்கிய மக்கள் சக்தி பிரதான அமைப்பாளர் சட்டத்தரணி எரந்த வெலியங்க இதனை ஏற்பாடு செய்திருந்தார்.

தற்போதைய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டமை அரசியலமைப்பு ரீதியாக சரியானது என்றாலும், அங்கீகாரம் மற்றும் மக்கள் அபிப்பிராயம் என்ற அடிப்படையில் இது முற்றிலும் மாறுபட்ட நிலை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

கடந்த காலத்தை விட நிகழ்காலம் முற்றிலும் மாறுபட்டது என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், அந்நாட்களில், பெரும்பாலும் அரசியல் முடிவுகளை எடுப்பதில் முன்னுரிமை பெற்றது பெரியவர்களே என்றாலும், இன்று இளம் தலைமுறையினர் அதை வீட்டில் கூட பெற்றுள்ளனர் எனவும் தெரிவித்தார். தேர்தலில் முடிவெடுப்பது குறித்து வீட்டில் செல்வாக்கு செலுத்துவது இளைஞர் சமுதாயத்தினரின் எண்ணங்கள் மற்றும் விருப்பங்களின் பிரகாரமே என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், அவர்களின் எண்ணங்களையும் விருப்பங்களையும் புரிந்து கொள்ள வேண்டியது ஆட்சியாளர்களின் பொறுப்பு எனவும் அவர் தெரிவித்தார்.

தம்மிடம் இரத்தம் சிந்திய வரலாறு இல்லை எனவும்,தமது வங்கி கணக்குகளில் போதைப்பொருட்கள் விற்ற பணம் இல்லை எனவும்,தம்மிடம் எந்த வித கபடத்தனமும் இல்லை என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், ஓர் அணியாக இணைந்து நாட்டை கட்டியெழுப்பும் சவாலை ஏற்றுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

புலம்பெயர் தமிழ் அமைப்புகள் சிலவற்றின் மீதான தடைகள் நீக்கம்

இலங்கையில் 6 புலம்பெயர் அமைப்புகள் மீதான தடையை நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி 6 சர்வதேச தமிழ் அமைப்புக்கள் மீதான தடை தளர்த்தப்பட்டுள்ளது.
உலக தமிழர் பேரவை (GTF), பிரித்தானியத் தமிழர் பேரவை (BTF), கனடியத் தமிழர் பேரவை (CTC), அவுஸ்ரேலியத் தமிழர் பேரவை (ATC), தமிழீழ மக்கள் பேரவை (TEPA) மற்றும் உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (WTCC)ஆகியவற்றின் மீதான தடைகள் நீக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சு இது தொடர்பில் அறிவித்துள்ளது.

இதேவேளை பிரித்தானியாவை தலமாக கொண்டு இயங்கும் உலக தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரனும் தடை பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் 316 நபர்கள் மீதான தடையையும் நீக்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனக் கப்பலுக்கு ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் நுழைய அனுமதி!

சர்ச்சைக்குரிய சீன ஆய்வுக் கப்பலை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட அனுமதிக்க துறைமுக மாஸ்டருக்கு வெளிவிவகார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.

யுவான் வாங்-5, சீன விண்வெளி, ஏவுகணைகள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவுவதற்கும் கண்காணிப்பதற்கும் துணைபுரியும் உயர்தர ஆன்டெனாக்கள் மற்றும் மின்னணு உபகரணங்களுடன் கூடிய அதிநவீன கப்பலானது, சமீபத்திய நாட்களில் தீவிர இராஜதந்திரப் பேச்சுக்கு உட்பட்டது.

இந்த கப்பலின் வருகைக்கு இந்தியா கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தது.

இந்நிலையில் குறித்தக் கப்பல் தற்போது இலங்கை கடலுக்குள் நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி அந்தக் கப்பல் எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரையில் அந்த துறைமுகத்தில் நங்கூரமிடவுள்ளது.

தாய்லாந்தில் கோட்டாபயவுக்கு பாதுகாப்பு தரப்பினர் விடுத்துள்ள அறிவித்தல்!

தாய்லாந்தில் தங்கியுள்ள இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு தான் தங்கியுள்ள ஹோட்டல் அறையில் இருந்து வெளியே வர வேண்டாம் என்று பாதுகாப்பு தரப்பினர் அறிவித்துள்ளனர்.

தற்போதுள்ள பாதுகாப்பு நிலவரத்தின் அடிப்படையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கோட்டாபய ராஜபக்ஷ தங்கியிருக்கும் ஹோட்டலின் பெயர் பாதுகாப்பு காரணங்களுக்காக வெளியிடப்படவில்லை எனவும், அவரது பாதுகாப்பிற்காக சிவில் உடையில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் ஹோட்டலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாய்லாந்தில் 90 நாட்கள் தங்கியிருந்து பின்னர் எதிர்வரும் நவம்பர் மாதம் நாடு திரும்புவார் என தெரிவிக்கப்படுகிறது.

Posted in Uncategorized

அரச படைகள் இந்த நாட்டில் ஒரு இனத்தை அழிக்கின்ற ஒரு படையாகவே இருந்திருக்கின்றார்கள் – தவராசா கலையரசன்

அரச படைகள் இந்த நாட்டில் ஒரு இனத்தை அழிக்கின்ற ஒரு படையாகவே இருந்திருக்கின்றார்கள். சமாதானம் நீதியை நிலைநாட்டுகின்ற அரச படைகளாக அவர்கள் இந்த நாட்டில் இருக்கவில்லை.அது மாத்திரமன்றி அம்பாறை மாவட்டத்தின் எல்லையில் நாங்கள் பிறந்து வளர்ந்தவர்கள்.நேரடியாக எம்மவர்கள் கொலை செய்யப்பட்டதனை அவதானித்தவன் என்ற வகையில் எல்லைக் கிராமங்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்டன.குறிப்பாக அம்பாறை என்ற நகரமும் கூட எங்களுடைய தமிழ் மக்கள் வாழ்ந்திருக்கின்றார்கள்.இன்று அங்கு தமிழர்களின் எந்தவொரு குடியுருப்பும்  இருந்த  எந்தவொரு அடையாளமோ இல்லை என்ற செய்தியை சொல்ல விரும்புகின்றேன் அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின்   பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் குறிப்பிட்டார்.
அம்பாறை மாவட்டம் வீரமுனையில் 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12ஆம் திகதி  இடம்பெற்ற படுகொலை தினத்தின் 32 ஆவது வருட நினைவேந்தல் நிகழ்வு வெள்ளிக்கிழமை(12) மாலை அகம் மனிதபிமான வள நிலையம்(AHRC) சூழலியல் நீதிக்கான மக்கள் கூடல் (PCCJ) அமைப்பின் ஏற்பாட்டில்   வீரமுனை பகுதியில் அனுஷ்டிக்கப்பட்ட வேளை மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது
தமிழர்களின் இன ஒழிப்பின் அங்கமாக இந்த வீரமுனை படுகொலை நடந்தேறி இருக்கின்றது.கடந்த 32 ஆண்டுகளுக்கு முன்னர் வடக்கு கிழக்கு மாகாணங்களில் எல்லைக்கிராமங்களில் வாழ்ந்த தமிழ் மக்கள் விரட்டி விரட்டி வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்ட இத்தினத்தை அனுஸ்டித்து அஞ்சலி செலுத்தி வருகின்றோம்.உண்மையில் இலங்கை நாட்டில் தமிழரான பிறந்த எங்களுக்கு இது தான் நிலைமை என்ற செய்தியை உலகத்திற்கு சொல்கின்ற வகையில் இந்த நாட்டை ஆண்ட தலைவர்கள் தொடர்ச்சியாக அழித்து வந்திருக்கின்றார்கள் என்பது உதாரணமாகும்.
1990 ஆம் ஆண்டு தமிழ் மக்கள் வாழ்ந்த பிரதேசங்களில் எந்தவிதமாக கேள்வி கணக்குமின்றி கொடூரமான முறையில் சமாதானம் நீதியை நிலைநாட்டுகின்ற அரச படைகள் இந்த நாட்டில் ஒரு இனத்தை அழிக்கின்ற ஒரு படையாகவே இருந்திருக்கின்றார்கள். சமாதானம் நீதியை நிலைநாட்டுகின்ற அரச படைகளாக அவர்கள் இந்த நாட்டில் இருக்கவில்லை.அது மாத்திரமன்றி அம்பாறை மாவட்டத்தின் எல்லையில் நாங்கள் பிறந்து வளர்ந்தவர்கள்.நேரடியாக எம்மவர்கள் கொலை செய்யப்பட்டதனை அவதானித்தவன் என்ற வகையில் எல்லைக் கிராமங்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்டன.
குறிப்பாக அம்பாறை என்ற நகரமும் கூட எங்களுடைய தமிழ் மக்கள் வாழ்ந்திருக்கின்றார்கள்.இன்று அங்கு தமிழர்களின் எந்தவொரு குடியுருப்பும்  இருந்த  எந்தவொரு அடையாளமோ இல்லை என்ற செய்தியை சொல்ல விரும்புகின்றேன்.இந்த கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பதை தெளிவு படுத்த விரும்புகின்றேன்.இங்கு வாழந்த தமிழர்களை தேடி தேடி அழித்தார்கள்.கல்விமான்களாக இருந்தவர்கள் சமூகத்தில் பற்றுறுதி கொண்டவர்கள்.சகூகத்தை வழிநடத்த கூடியவர்களாக இருந்தவர்கள் உள்ளிட்டோரை அரச படையினர் திட்டமிட்டு அழித்திருந்தார்கள்.
ஆகவே நாங்கள் இவ்வாறான நினைவுகளை ஏன் நினைவு கூர்கின்றோம் எனில் எதிர்காலத்தில் இந்த நாட்டில் தமிழர்கள் வாழ்வதற்குரிய அனைத்து உரிமையும் கிடைக்கப்பெற வேண்டும்.தொடர்ச்சியாக இந்நாட்டில் தமிழர்கள் அடிமைத்தனத்துடன் தங்களது வாழ்வுரிமையை மறுக்கின்ற சூழலில் வாழ முடியாது என்ற அடிப்படையில் தான் நாங்கள் இந்த நினைவு கூறல்களை நினைவு கூர்ந்து வருகின்றோம்.குறிப்பாக அம்பாறை மாவட்டத்தின் எல்லைக்கிராமங்களில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் யுவதிகள் கொலை செய்யப்பட்ட வரலாறுகளை மறந்து விட முடியாது.
அதன் அடிப்படையில் வீரமுனை மாத்திரமல்லாது   சொறிக்கல்முனை ,பெரியநீலாவணை, சவளக்கடை, திராய்க்கேணி, காரைதீவு ,அக்கரைப்பற்று, உடும்பன்குளம், பொத்துவில், வளத்தாப்பிட்டி, மல்வத்தை ,போன்ற பிரதேசத்தில் திட்டமிட்டு எங்களது மக்கள் அழிக்கப்பட்ட வரலாறுகளை நீங்கள் நினைவு கூற வேண்டும்.எனவே எங்கள் மக்கள் நிலையான சமாதானத்தை வேண்டியவர்களாக இந்த மண்ணிலே நிலையாக வாழ வேண்டும் என்பதற்காக தமிழர்களாகிய நாங்கள் எமது மக்கள் மீது அக்கறையுடன்    தொடர்ச்சியாக எமது மக்களின் விடுதலைக்காக குரல் கொடுத்துக்கொண்டு இணைந்து பயணிப்போம்   என கூறினார்.
இந்த நினைவேந்தல் நிகழ்வில்  தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் ,காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில்,  உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள்,  பொதுமக்கள்  உயிரிழந்தவர்களின் உறவினர்கள், என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
கடந்த 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12ஆம் திகதி அம்பாறை மாவட்டம் வீரமுனையில் இடம்பெற்ற படுகொலை தினத்தின் 32 ஆவது வருட நினைவேந்தல் நிகழ்வு   வீரமுனையில் அனுஷ்டிக்கப்பட்டதுடன் வீரமுனையில் ஆலயத்திற்குள் புகுந்து இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 55 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில்  அவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்பதற்காக 32 ஆவது வருடம் தொடர்ச்சியாக நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
இந்த சதிகாரர்களை நாங்கள் மறக்கவும் மாட்டோம். மன்னிக்கவும் மாட்டோம்.எதிர்கால சந்ததிக்கு இதனை எடுத்தியம்பும் பிரகாரத்தில் எதிர்காலத்தில் இப்படிப்பட்ட சம்பவம் இடம்பெறக்கூடாது என்பதற்காகவும் நினைவேந்தலை நடத்தி வருகின்றோம் என கலந்து கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
Posted in Uncategorized

சீன, பாகிஸ்தான் கப்பல்களின் வருகையானது இலங்கைக்குக் கிடைத்த இராஜதந்திரத் தோல்வியாகும் – இரா.துரைரெட்ணம்

இந்தியாவினைப் பகைத்துக் கொள்ளும் வகையில், சீனாவின் கப்பல், பாகிஸ்தான் கப்பல் ஆகியன இலங்கையின் துறைமுகங்களை நோக்கி வருகை தருவது இலங்கையின் இராஜதந்திரத்துக்குக் கிடைத்த தோல்வியாகும் என்று முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் பத்மநாபா மன்றத்தினுடைய தலைவருமான இரா.துரைரெட்ணம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு நகரிலுள்ள கிழக்கு ஊடக மன்றத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்,

இன்று நாடு எதிர்நோக்குகின்ற பல விடயங்களைப் பார்க்கின்ற போது இலங்கையின் இராஜதந்திர ரீதியான நடவடிக்கைகள், கடந்த காலத்துக்குரிய செயற்பாடுகள் வெற்றியளித்திருக்கின்றதா. குறிப்பாக குறிப்பிட்ட தினங்களாக சீனவின் போர்க்கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்தை நோக்கி விரைவதும், பாகிஸ்தானுடைய கப்பல் கொழும்பு துறைமுகத்தை நோக்கி விரைவதும் இலங்கையின் இராஜதந்திரத்துக்குக்கிடைத்த தோல்வியாகும். அருகிலுள்ள இந்திய நாட்டைப் கைத்துக் கொண்டு இரண்டு நாட்டுக் கப்பல்களுக்கும் அனுமதி கொடுத்தது என்பது முதலாவது தவறான செயற்பாடாகும். இராஜதந்திர நடவடிக்கையில் அருகிலுள்ள நாட்டைப் பகைத்து ஒரு இராஜதந்திர ரீதியான செயற்பாடுகளை முடக்குவதென்பதே இந்த நாட்டுக்குக் கிடைத்த முதலாவது தோல்வியாகும்.

இன்றுள்ள சூழ்நிலையில், இந்த அரசு புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், இந்த ஜனாதிபதியைப் பொறுத்தவரையில்  கடந்த காலத்தில் அம்பாந்தோட்டை ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டது. அது மாத்திரமல்ல வடக்கு கிழக்கின் தமிழ் அரசியல் தலைவர் சம்பந்தன் ஐயா எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கால கட்டத்தில்தான் கௌரவ ரணில் விக்கிரமசிங்க இவ் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இதனை மறந்துவிடக்கூடாது. இதனை அம்பலப்படுத்த வேண்டியப பல விடயங்கள் முடிக்கிவிடப்பட்டிருந்ததன. இந்த விவகாரத்தில் இலங்கை அரசு இனிமேலாவது இராஜதந்திர ரீதியாக இந்தியாவை பகைக்காமல், அருகிலுள்ள நாட்டைப் பகைக்காமல் செயற்பட வேண்டும்.

ஒரு நாடு ஒரு நாட்டு அரசைச் செயற்பட வைப்பதற்கு அணிசேரா செயற்பாடுகளும் அணி சேரக்கூடிய செயற்பாடுகளும் தத்துவார்த்த ரீதியாக இருக்க வேண்டும். இலங்கையைப் பொறுத்தவரையில் கடந்த காலங்களில் மிக உன்னிப்பாகச் செயற்படுத்திவந்திருந்தது. ஆனால் குறிப்பிட்ட காலமாக எடுப்பார் கைப்பிள்ளைத் தனமான வகையில் தனிப்பட்ட ரீதியில் இராஜதந்திர ரீதியான செயற்பாடுகள் முடக்கிவிடப்பட்டிருந்தன. இந்த வகையில் கடந்த குறிப்பிட்ட காலமாக நடைபெற்ற செயற்பாடுகள் இலங்கை அரசாங்கத்தைக் கண்டிக்கக்கூடிய செயற்பாடுகளாக அமைகின்றன. ஆகவெ இந்தியா விவகாரத்தில் இலங்கை அரசு சரியான அணிசேராக் கொள்கையைச் சரியாக கடைப்பிடிக்கும் பட்சத்தில் இலங்கைக்கான மேலதிக உதவிகளை இந்தியாவிலிருந்து பெறுவதற்குரிய வாய்ப்புக்கள் உருவாகும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வியாபார ரீதியாக இலங்கை அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட பொருள்க்களுக்கான விலையேற்றத்தினைக் கட்டுப்படுத்துவதற்கான செயற்பாட்டில் மாவட்ட பாவனையாளர் அதிகார சபை விலைக் கட்டுப்பாடுகளை அமுல் படுத்துகிறதா என்ற கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன. இதனை முழுமையாக அழுல் படுத்துவதற்கு அரசாங்க அதிபர் பரிபூரணமான நடவடிக்கை எடுப்பார் என்று நான் நம்புகிறேன்.

இன்றைய நிலையில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் நடைபெறுகின்ற கருத்து மோதலென்பது அந்தத் தலைமையின் பலவீனத்தைக் காட்டுகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரண்டு கட்சிப் பிரதிநிதிகளின் கருத்து மோதல்களை தீர்ப்பதற்கான ஒரு களத்தை தலைமை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அதை விடுத்துவிட்டு இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் சரி பிழையை பொது மக்களுக்கு மத்தியில் விவாதிப்பது ஏற்புடையதல்ல. இன்றைய காலகட்டத்தில் அந்தக் கட்சியினை பலவீனத்தில் கொண்டே செல்லும் என்ற அடிப்படையில் உடனடியாக தமிழரசுக்கட்சியும், தமிழ் ஈழ விடுதலை இயக்கமும் உள்ளே எழுகின்ற பிரச்சினைகளைத்  தீர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

இன்றைய சூழ் நிலையில் நாடு எதிர்நோக்குகின்ற அரசியல் ரீதியான விடயங்களில் இலங்கை அரசாங்கம், இலங்கை அரசு செயற்படமுடியாமல் அரசியல் தலைமைகள் பின்வாங்குகின்ற நிலையில்,  மக்கள் வெகுஜனப் போராட்டம் மேற்கொண்டு எழுச்சி காரணமாக நாட்டில் பதவி விலகல்கள் நடைபெற்றன. வெகுஜனப் பொராட்டம் வெற்றியளித்து. தற்போது அரசு ஓரளவுக்குச் செயற்படத் தொடங்கியிருக்கிறது. இதை முன்னேற்றகரமாக கொண்டு செல்வதற்கு ஜனாதிபதி அவர்களால் இப்போது சர்வகட்சி ஆட்சி முறையினை ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்திருக்கிறார். ஆனால், சர்வகட்சி ஆட்சி என்று கூறிக் கொண்டு குறிப்பிட்ட சில கட்சிகளுக்குள் தங்களுடைய செயற்பாடுகளை முடக்குவது ஏற்புடையதல்ல. அதே வேளையில் அனைத்துக் கட்சிகளும் சர்வகட்சி ஆட்சிமுறைக்கு பங்களிப்புச் செய்வதா இல்லையா என்பதில் சம்பிரதாயபூர்வமாக என்று கூறுகின்றவே தவிர, முழுமையாக பங்களிப்புச் செய்கின்றதா என்ற கேள்வி தொக்கி நிற்கின்றது. ஆனால் வடக்கு கிழக்கிலுள்ள கட்சிகளைப் பொறுத்தவரையில், சர்வகட்சி முறைக்குக் கீழ் ஒத்துழைக்கும் பட்சத்தில் தமிழர்களின் நலன்கள் சிலதைப் பாதுகாக்க முடியும் என்ற கருத்து சமூகத்தின் மத்தியில் காணப்படுகிறது. எனவே தமிழ் தரப்பு இதற்கு ஆதரவு தெரிவிக்கும் பட்சத்தில் எதிர்காலத்தில் தமிழர்களுடைய நலன்களைப் பாதுகாக்க முடியும்.

Posted in Uncategorized

கோட்டாபய எந்த நாட்டிற்கு சென்றாலும் தமிழர்களின் நீதிக்கான போராட்டம் தொடரும் ! த.தே.ப. பேரவை

தமிழினப் படுகொலையாளியான சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய அவர்கள் உலகத்தில் எந்தவொரு நாட்டிற்குள் சென்றாலும் உலகளாவிய நியாயாதிக்கத்தின் கீழ் அவரை கைது செய்யக் கோரும் தமிழர்களுக்கான நீதிக்கான போராட்டம் தொடரும் என தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சுவீகரன் நிஷாந்தன் தெரிவித்துள்ளார்.

கோட்டாபய அவர்கள் சிறிலங்காவில் இருந்து அதிகாலை வேளையில் இராணுவ விமானம் மூலம் நாட்டை விட்டு வெளியேறி மாலைதீவுக்கு சென்றிருந்த நிலையில் அங்கு அவருக்கு எதிராக இலங்கைவாழ் மக்களால் முன்னெடுக்கப்பட்டிருந்த பாரிய போராட்டத்தின் விளைவாக மாலைதீவு அரசாங்கம் கோட்டாபாயவை நாட்டைவிட்டு வெளியேறுமாறு அறிவித்திருந்தது.
அதன் பின் அங்கிருந்து சிங்கப்பூர் சென்றிருந்தார்.

சிங்கப்பூர் சென்றிருந்த கோட்டாபாய அவர்களை சிங்கப்பூரினுடைய சட்டமா அதிபர் அவர்கள் கைது செய்து நீதியின் முன் நிறுத்தக்கோரி சிங்கப்பூரில் உள்ள தமிழர்களால் பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்த இதே வேளை இப் போராட்டம் தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் ஒரே நேரத்தில் முன்னெடுக்கப்பட்டிருந்த இப் போராட்டம் சிங்கப்பூர் அரசிற்கு பாரிய அழுத்தத்தை கொடுத்திருந்தது என்பது நிதர்சனமான உண்மை.
இதன் காரணமாகவே சிங்கப்பூர் அரசு தனது நாட்டில் தொடர்ந்தும் அடைக்கலம் தர முடியாது என்று கைவிரித்திருந்த நிலையில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை தாய்லாந்து நோக்கி பயணித்திருந்தார் கோட்டாபாய அவர்கள்.

மேலும் சிங்கப்பூர் சட்டமா அதிபரை நோக்கி தாயக, புலம்பெயர் மக்களால் முன்னெடுக்கப்பட்டிருந்த கையெழுத்துப் போராட்டம், இனி தாய்லாந்து சட்டமா அதிபரை நோக்கியதாக மாற்றம் செய்யப்படுவதோடு, முன்னராக பெறப்பட்ட கையொப்பங்கள் அனைத்தும் நீதிக்கான நோக்கத்தின் அடிப்படையில் ஜக்கிய நாடுகள் மனித உரிமை சபையினரின் பார்வைக்கு தெரிப்படுத்தப்படுவதற்காக ஈழத்தமிழர்களின் சர்தேச விவகாரங்களை கையாளும் புலம்பெயர் தேசத்தில் உள்ள பலம்பொருந்திய அமைப்பினருக்கு அவர்களுடைய அதிகார பூர்வமான இயைத்தளத்தில் பதிவேற்றம் செய்வதற்காக மின்னஞ்சல்கள் ஊடாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இனப்படுகொலை, மானிடத்திற்கெதிரான குற்றம், மற்றும் போர்க் குற்றங்களைப் புரிந்ததற்கான நம்பத்தகுந்த சாட்சியங்கள் உள்ளதாக ஐக்கிய நாடுகள் அறிக்கைகள் கூறியுள்ளன. 1948ம் ஆண்டு இன அழிப்புச் சட்டத்தின் கீழும், 1949ம் ஆண்டு ஜெனீவாச் சட்டங்களின் கீழும் மற்றும் 1977ம் ஆண்டு Additional protocol 1 இன் கீழும் சர்வதேச சட்டங்களின் கீழ் கையெழுத்துப் போராட்டத்தின் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது என்றும் தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவையினால் தாயகத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கான நீதிக்கான போராட்டத்தில் அனைத்து தரப்பினரையும் பங்கெடுத்து உங்களது தார்மீக உரிமையை நிலைநாட்ட முன்வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்கள்.

ஜெனீவா கூட்டத் தொடருக்கு முகங்கொடுக்க தயாராகும் இலங்கை

ஐக்கிய நாடுகளின் ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடருக்கு முகம் கொடுக்கும் வகையில் இலங்கை சமர்ப்பிக்கவுள்ள அறிக்கையை தயாரிக்கும் நடவடிக்கையை இலங்கை ஆரம்பித்துள்ளது.

நீதி மற்றும் சிறைச்சாலைகள், மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி விஜேயதாச ராஜபக்ஷ தலைமையில் நேற்று முன்தினம் (09) நீதி அமைச்சில் இது தொடர்பான விசேட கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.

மனித உரிமைகள் நல்லிணக்கம் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளை கையாளும் தேசிய நிறுவனங்களின் நடவடிக்கைகளின் முன்னேற்றம் தொடர்பாக ஆராயும் இவ் விசேட கலந்துரையாடலில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியும் கலந்து கொண்டார்.

மனித உரிமைகளை பாதுகாப்பது, நல்லெண்ணத்தை உருவாக்குவது மற்றும் கட்டியெழுப்புவது தொடர்பாக அந்நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் முன்னேற்றம் தொடர்பாக இங்கு பல கருத்துக்கள்  முன்வைக்கப் பட்டதோடு எதிர்காலத்தில் அந்நிறுவனம் செயற்பட வேண்டிய விதம் தொடர்பாகவும்  கவனம் செலுத்தப்பட்டது.

ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடருக்கு இது தொடர்பான அனைத்து நிறுவனங்களும் எவ்வாறு முகம் கொடுப்பது என்பதற்கான பொறிமுறையொன்றை தயாரிக்கவும் இக்கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.