சஜித் நோர்வேத் தூதுவர் இடையே முக்கிய சந்திப்பு

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் நோர்வேயின் இலங்கைக்கான தூதுவர் ட்ரைன் எஸ்கடெல் அம்மையாருக்கும் இடையிலான சந்திப்பு எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.

இருதரப்பு ஒத்துழைப்பு குறித்த விரிவான கலந்துரையாடலாக இது அமைந்திருந்தது என்று எதிர்க்கட்சித் தலைவரின் ஊடகப் பிரிவு இன்று (21.10.2022) விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் குறிப்பாக இலங்கை தற்போது முகம் கொடுத்துள்ள நெருக்கடியிலிருந்து மீள்வதற்குத் தேவையான ஒத்துழைப்பையும், ஆதரவையும் வழங்குமாறு நோர்வேத் தூதுவரிடம் எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனநாயகக் கட்டமைப்புகளைப் பாதுகாப்பது, மக்கள் நல மேம்பாட்டு முன்னெடுப்புகளான மூச்சு, பிரபஞ்சம் போன்ற வேலைத்திட்ட முன்வருகைகளுக்காகத் தமது பாராட்டுக்களையும் நோர்வேத் தூதுவர் இதன்போது தெரிவித்தார் என்று எதிர்க்கட்சித் தலைவரின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

யாழ். வைத்தியசாலைப் படுகொலை : 35ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையினுள் அத்துமீறி உள்நுழைந்த இந்திய இராணுவத்தினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட 68 பேரின் 35 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழ். போதனா வைத்தியசாலையில் இன்று நடைபெற்றது.

கடந்த 1987 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21, 22ஆம் திகதிகளில் யாழ். போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி துப்பாக்கிளுடன் உள்நுழைந்த இந்திய இராணுவத்தினர் சகட்டு மேனிக்குச் சுட்டனர்.

இந்தச் சம்பவத்தில் வைத்தியசாலையில் கடமையில் இருந்த மூன்று மருத்துவர்கள், இரண்டு தாதியர்கள், மேற்பார்வையாளர் உள்ளிட்ட 21 மருத்துவ சேவையாளர்கள் மற்றும் சிகிச்சை பெற்று வந்த 47 நோயாளர்கள் என 68 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

வடக்கில் சீனாவை அனுமதித்துள்ளமை பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும்-சுரேஷ் பிரேமச்சந்திரன்

சீனாவால் ஏற்படவுள்ள ஆபத்து குறித்து இனியாவது அவதானம் செலுத்துமாறு அரசாங்கத்தை கோரியுள்ளதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் வடக்கில் சீனாவை அனுமதித்துள்ளமை பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும் என சுரேஷ் பிரேமசந்திரன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்து -பசுபிக் பிராந்தியத்தில் அமைதியையும் சமாதானத்தையும் பேணுவதற்கு இலங்கை ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் சீனாவின் வல்லாதிக்க போட்டிக்கு இலங்கையை பயன்படுத்த இடமளிக்க வேண்டாம் எனவும் அறிக்கையில் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் சீனாவின் முதலீடுகள், ஊடுருவல்கள் இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என்பது தொடர்பாகவும் பலமுறை சுட்டிக்காட்டியிருந்ததாக சுரேஷ் பிரேமசந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

சீனாவிற்கு அகலமாகக் கதவுகளைத் திறந்து விட்டுவிட்டு இந்தியா எனது சகோதரன் என்றும் சீனா எனது நண்பன் என்றும் இலங்கை கூறுவது நகைப்புக்குரியது என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்திற்குள் சீனாவின் சகலவிதமான நடவடிக்கைகளையும் இலங்கை அரசாங்கம் கட்டுப்படுத்த வேண்டும் எனவும் அவ்வாறு கட்டுப்படுத்தத் தவறினால் அது பெரும் பின்விளைவுகளை எதிர்காலத்தில் ஏற்படுத்தும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

Posted in Uncategorized

பணவீக்கம் உச்சநிலையை அடைவதை நாங்கள் காண்கின்றோம்-மத்திய வங்கி ஆளுநர்

பணவீக்கம் உச்சநிலையை அடைகின்றது என தெரிவித்துள்ள மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க இந்த மாதம் பொருட்களின் விலைகள் குறைவடையலாம் எனவும்தெரிவித்துள்ளார்.

பணவீக்கம் உச்சநிலையை அடைவதை நாங்கள் காண்கின்றோம் என கருதுகின்றேன் என மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நிதி நெருக்கடிக்குதீர்வை காண்பதற்கு நீண்ட தூரம் செல்லவேண்டியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் நுகர்வோர் பணவீக்கம் செப்டம்பர் மாதம் 69.8 வீதமாக அதிகரித்து காணப்பட்டது, இது இலங்கை முன்னொhருபோதும் இல்லாத நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில் மத்திய வங்கி எதிர்கொள்ளும் சவால்களை வெளிப்படுத்தியுள்ளது.

ஆனால் இந்த நிலை மாறும் ஒக்டோபரில் பணவீக்கம் குறைந்தால் அந்த போக்கு நீடிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

வட்டி வீதங்களை அதிகரிப்பது இடைநிறுத்தப்பட்டமை நீடிக்குமா என்பது குறித்து மத்திய வங்கி ஆளுநர் எதனையும் தெரிவிக்கவில்லை.

நாங்கள் பணவீக்கத்தை மாத்திரமல்ல எதிர்கால நிலை எதிர்பார்ப்புகள் பணவியல் விரிவாக்கம் வளர்ச்சிக்கண்ணோட்டம் போன்றவற்றையும் ஆராயவேண்டும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இந்த மாதம் வங்கிகள் வீதங்களை உயர்வாக வைத்திருக்கவேண்டும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த இது அவசியம் டிசம்பர் ஜனவரியில் விலைகள் குறைவடையலாம் எனவும் மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.

22 ஆவது அரசியலமைப்பு திருத்தம் 174 வாக்குகளால் நிறைவேற்றம்!

22 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம்  திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.

சட்டமூலத்தின் மூன்றாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பின் போது திருத்தத்திற்கு ஆதரவாக 174 வாக்குகள் அளிக்கப்பட்டிருந்ததுடன், எவரும் எதிராக வாக்களிக்கவில்லை.

திருத்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின் போது அதற்கு அதரவாக 179 வாக்குகள் அளிக்கப்பட்டிருந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சரத் வீரசேகர மாத்திரம் அதற்கு எதிராக வாக்களித்திருந்தார்.

இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் கலந்துகொண்ட ஆறு பாராளுமன்ற உறுப்பினர்கள், மூன்றாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பின் போது சபையில் பிரசன்னமாகியிருக்கவில்லை.

ஐக்கிய மக்கள் சக்தி,  ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தேசிய மக்கள் சக்தி ஆகியவற்றின் பாராளுமன்ற உறுப்பினர்களும் 22 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர்.

அரசியலமைப்பு திருத்தம் மீதான வாக்கெடுப்பு நடைபெற்ற சந்தர்ப்பத்தில் பாராளுமன்றத்தில் 40-க்கு மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரசன்னமாகியிருக்கவில்லை.

ஜனாதிபதியின் தனி அதிகாரத்தை நீக்கி அரசியலமைப்பு பேரவையை அதனுடன் தொடர்புபடுத்துவது, சுயாதீன ஆணைக்குழுக்களை வலுப்படுத்துவது உள்ளிட்ட விடயங்கள் அரசியலமைப்பு திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இரட்டை பிரஜாவுரிமையுள்ளவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாவதற்கு இருந்த சந்தர்ப்பம் இந்த அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம்  நீக்கப்பட்டுள்ளதுடன், தற்போது பாராளுமன்ற உறுப்பினர்களாக உள்ள இரட்டை பிரஜா உரிமை உள்ளவர்களும் ஆசனங்களை இழக்கவுள்ளனர்.

இரண்டரை வருடங்கள் கடந்ததன் பின்னர் பாராளுமன்றத்தை கலைப்பதற்கான அதிகாரத்தை ஜனாதிபதிக்கு வழங்கும் வகையில் புதிய ஏற்பாடுகளும் அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டுள்ளன.

அரசியலமைப்பு பேரவைக்கு சிவில் பிரதிநிதிகளை நியமிக்கும்போது எதிர்க்கட்சித் தலைவரின் அபிப்பிராயத்தையும் கேட்டறிவதற்கு சட்டமூலத்தின் திருத்தங்களின் போது அனுமதி வழங்கப்பட்டது

Posted in Uncategorized

குறைப்பாடுகளை சுட்டிக்காட்டி 22ஆவது திருத்தத்துக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளேன்-சி.வி.விக்னேஸ்வரன்

பொருளாதாரம் மற்றும் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணும் முதல் படியாக அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை கருதுகிறேன். ஆகவே குறைப்பாடுகளை சுட்டிக்காட்டி 22ஆவது திருத்தத்துக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளேன் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூல வரைபு மீதான விவாதத்தின் போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூல வரைபு முற்போக்கான விடயங்களை கொண்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் ஜனநாயக இலட்சினங்களை கொண்டிருந்தது.

22ஆவது திருத்தத்தில் ஜனாதிபதியின் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்படவில்லை. அமைச்சரவை நியமனம், அமைச்சின் செயலாளர் நியமனம் உள்ளிட்ட முக்கிய பல நியமனங்கள் ஜனாதிபதிக்கு பொறுப்பாக்கப்பட்டுள்ளது.

ஒருசிலரின் அபிலாசைகளையும், கோரிக்கைகளையும் நிறைவேற்றும் வகையில் 22ஆவது திருத்த வரைபு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

நாடு பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில் 22ஆவது திருத்தச் சட்ட நிறைவேற்றம் தற்போதைய நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு முதல் படியாக அமையும்.

1978ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை தொடர்பில் சாதக மற்றும் பாதகமான விளைவுகள் குறிப்பிடப்படுகின்றன.

ஒட்டுமொத்த மக்களாலும் தெரிவு செய்யப்படும் ஜனாதிபதி நாட்டு மக்கள் அனைவருக்கும் பொறுப்பு கூற வேண்டும். அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்ட வகையில் ஜனாதிபதி செயற்படுவது அவசியமாகும்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை இந்த நாட்டில் சிறுபான்மை மக்களுக்கு எந்தளவுக்கு காப்பீடாக அமைந்தது என்பது கேள்விக்குறியானதே.

அரசியலமைப்பு திருத்தம் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ள பின்னிணியில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டால் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் முழுமையாக இரத்து செய்யப்படும். அவ்வாறு நீக்கப்பட்டால் 13ஆவது திருத்தம் ஊடாக தமிழர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வரையறுக்கப்பட்ட அதிகாரங்கள் கூட இல்லாமல் போகும்,ஆகவே 13ஆவது திருத்தம் குறித்து இந்தியா அவதானம் செலுத்த வேண்டும்.

பொருளாதார நெருக்கடிக்கு தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்வு காண்பார் என்ற நம்பிக்கை உள்ளது.வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்துக்கு முரண்பாடற்ற வகையில் தீர்வு வழங்கப்பட வேண்டும்.

ஆகவே 20ஆவது திருத்தத்தில் காணப்படும் ஒருசில குறைப்பாடுகளை சுட்டிக்காட்டி அதற்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளேன் என்றார்.

 

Posted in Uncategorized

எதிர்காலத்தில் சர்வதேசம் இலங்கைக்கு உதவுவதற்கான சாதக நிலை 22 இல் தங்கியுள்ளது – விஜயதாச ராஜபக்ஷஎதிர்காலத்தில் சர்வதேசம் இலங்கைக்கு உதவுவதற்கான சாதக நிலை 22 இல் தங்கியுள்ளது – விஜயதாச ராஜபக்ஷ

எதிர்காலத்தில் சர்வதேசம் இலங்கைக்கு உதவுவதற்கான சாதக நிலை 22 ஆவது அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றப்படுவதிலேயே தங்கியிருப்பதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர், சர்வதேச நாணய நிதியத்திடம் சென்றமை தொடர்பில் வாதப்பிரதிவாதங்கள் நிலவுகின்றன.

எனினும் தற்போதைய நிலையில், சர்வதேச நாணய நிதியத்தை தவிர இலங்கையில் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேறு வழியில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, தமக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவி ஏனைய நாடுகளின் ஆதரவு மற்றும் ஜி எஸ் பி வரிச்சலுகை போன்றவை இலங்கைக்கு தொடர்ந்தும் கிடைக்க வேண்டுமாக இருந்தால் அது 22 ஆவது திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதிலேயே தங்கியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

Posted in Uncategorized

பிரிட்டன் பிரதமர் லிஸ் டிரஸ் பதவி விலகினார்!

அண்மையில் பிரிட்டன் பிரதமராகப் பதவியேற்ற கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் லிஸ் டிரஸ் தாம் பதவியேற்ற 45 நாள்களில் பதவி விலகியுள்ளார்.

இதுவரை எந்த பிரிட்டன் பிரதமரும் இவ்வளவு குறுகிய காலத்தில் பதவி விலகியதில்லை.

எனவே, இவரது பிரதமர் பதவிக் காலம்தான் வரலாற்றிலேயே மிகக் குறுகிய பிரிட்டன் பிரதமர் பதவிக் காலமாக இருக்கும்.

எண் 10, டௌனிங் சாலையில் உள்ள பிரதமர் அலுவலகத்துக்கு வெளியே தமது பதவி விலகல் குறித்துப் பேசிய லிஸ் டிரஸ், தாம் கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அரசர் சார்லசிடம் கூறிவிட்டதாகவும் தெரிவித்தார்.

இது பிரிட்டன் அரசியலின் மிகப் பெரிய குழப்பமாகப் பார்க்கப்படுகிறது.

லிஸ் டிரஸ்சுக்கு அடுத்தது ஒரு பதவி ஏற்றால் இந்த ஆண்டின் மூன்றாவது பிரிட்டன் பிரதமராக அவர் இருப்பார்.

கன்சர்வேட்டிவ் கட்சியால் அடுத்து ஒரு பிரதமரை தேர்வு செய்ய இயலுமா? அதன் மூலம் அந்தக் கட்சியால் நாடு பொதுத் தேர்தலை சந்திக்காமல் தடுக்க முடியுமா? என்பது இப்போது கேள்வியாக உள்ளது.

இதனிடையே, கன்சர்வேட்டிவ் கட்சிக்கு ஆட்சியில் தொடர உரிமை இல்லை என்றும், உடனடியாக பொதுத் தேர்தல் நடத்தப்படவேண்டும் என்றும் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சித் தலைவர் சர் கெய்ர் ஸ்டார்மர் கூறியுள்ளார்.

Posted in Uncategorized

புனர்வாழ்வு சட்டமூலம்:உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு-செய்திகளின் தொகுப்பு

வன்முறையாளர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கும் புனர்வாழ்வு சட்டமூலத்தின் சில சரத்துகள் அரசியலமைப்புக்கு முரணானவை என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்.

இந்த சட்டமூலமானது, நாடாளுமன்றத்தின் விசேட பெரும்பான்மை மற்றும் மக்கள் கருத்து கணிப்பு ஆகியவற்றின் பின்னர், சரத்துகளின் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதை அடுத்தே, அதனை அனுமதிக்க முடியும் என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளதாக சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சட்டத்தை பயன்படுத்தி, போராட்டக்காரர்களை நீண்ட காலம் முகாம்களுக்குள் தடுத்து வைப்பதற்கு அரசாங்கம் முயற்சித்து வருவதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்.

இலங்கையில் ஐந்தில் ஒரு பகுதி மக்களே போஷாக்கான உணவை உட்‍கொள்கின்றனர்

இலங்கையில் ஐந்தில் ஒரு பகுதி மக்கள் மாத்திரமே போஷாக்கான உணவை உட்‍கொள்வதாகவும், மக்களின் வருமானத்தில் 75 சதவீதத்ததை உணவுக்காக செலவிடப்படுவதாகவும் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவது தொடர்பான குறுகிய மற்றும் நடுத்தர கால திட்டங்களை அடையாளம் காணும் தேசிய சபை உப குழு கூட்டத்தில் கண்டறியப்பட்டுள்ளது.

சுமார் 10 வருடங்களாக நாட்டில் நிலவும் போஷாக்கின்மை நிலைமை, தற்போதைய பொருளாதார நெருக்கடியுடன் அதிகரித்துள்ள நிலையில், இந்நிலைமையை இல்லாமல் செய்வதற்கு மேற்கொள்ளக்கூடிய குறுகிய மற்றும் நடுத்தர கால நடவடிக்கைகள் குறித்து இந்தக் கூட்டத்தின்போது கலந்துரையாடப்பட்டது.

பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவது தொடர்பான குறுகிய மற்றும் நடுத்தர கால வேலைத்திட்டங்களை அடையாளம் காணும் தேசிய சபை உபகுழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையில் பாராளுமன்றத்தில்கூடிய போது இந்த விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு, உரங்களின் தேவை, எதிர்காலத்தில் விளைச்சல் குறைவு, ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் அதனால் ஏற்படக்கூடிய சமூக விளைவுகள் குறித்து நிபுணர்களின் கருத்துக்களைப் பெறுவதற்காக இந்தக் கூட்டம் கூட்டப்பட்டது. இந்தக் குழு நாட்டில் கடன் மறுசீரமைப்பு மற்றும் மருந்து பாவனை தொடர்பாக நிபுணர்களின் கருத்துக்களையும் ஏற்கனவே கேட்டிருந்தது.