இந்திய – இலங்கை உறவு சிறந்த முறையில் உள்ளது: கோபால் பாக்லே

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் வர்த்தக முதலீட்டு உறவுகள் சிறந்த  முறையில் உள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் தேசிய தொலைகாட்சிக்கு வழங்கிய விசேட செவ்வியொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

துறைமுகம் , மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி, ஹைட்ரோ கார்பன் உட்கட்டுமான அபிவிருத்தி தொடர்பில் கரிசனை கொண்டுள்ளதாகவும் விவசாயம், பாலுற்பத்தி, தகவல்  தொழில்நுட்பம் மற்றும் உயர்  கல்வியிலும்  மேலதிக முதலீடுகளை மேற்கொள்ள வேண்டிய தேவையுள்ளதாகவும் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.

பல தசாப்தங்களாக பாரிய நிறுவனங்கள் இலங்கையில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தி  செயற்பட்டு வருவதுடன்,  காலி முகத்திடலில் பாரிய இந்திய நிறுவனங்கள் வர்த்தக நடவடிக்கைளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

ஹிட்லரின் தீர்வுகளை பொதுமக்கள் எதிர்பார்க்கவில்லை-ஓமல்பே சோபித தேரர் அரசாங்கத்திற்கு கண்டனம்

மக்கள் போராட்டத்துக்கு ஹிட்லரின் தீர்வுகளை பொதுமக்கள் எதிர்பார்க்கவில்லை என வண. ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

எம்பிலிப்பிட்டியவில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே தேரர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

காலி முகத்திடலை ஆக்கிரமித்த முப்படையினரால் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் இரக்கமற்ற மற்றும் நெறிமுறையற்ற செயல் எனவும் தேரர் தெரிவித்துள்ளார்.

பிற்பகல் 2 மணிக்குள் ஜனாதிபதி செயலகத்தை விட்டு வெளியேற ஆர்ப்பாட்டக்காரர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். இவ்வாறான சூழ்நிலையில் தாக்குதல் நடத்துவது வீண் என தேரர் தெரிவித்துள்ளார்.

உலகில் எந்த ஒரு நாடும் பலத்தைப் பயன்படுத்தி எதிர்ப்புகளை அடக்குவதற்கு மன்னிக்க முடியாது எனவும், சர்வதேச சமூகங்களும் இத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிராக அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்கியுள்ளன எனவும் தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.

புதிய அரசாங்கத்திற்கு உதவிகளை வழங்கத் தயார்-சீனா

புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு சீன ஜனாதிபதி Xi Jinping வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகப்பூர்வ ட்விட்டர் பக்க பதிவொன்றில், புதிய அரசாங்கம் இலங்கையை நெருக்கடி நிலையில் இருந்து மீட்டெடுக்கும் வகையில் செயற்படும் என தான் நம்புவதாக சீன ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதேவேளை புதிய அரசாங்கத்திற்கு உதவிகளை வழங்குவதற்கு சீனா தயாராகவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ரணிலின் இடத்துக்கு வஜிர நியமனம்!

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியானதன் பின் ஏற்பட்ட ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற ஆசன வெற்றிடத்துக்கு வஜிர அபேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான வர்த்தமானி தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ளது.

எமது பிள்ளைகள் உகண்டாவிலா?: காணாமல் போனோரின் உறவுகள் கேள்வி!

ராஜபக்‌ஷ குடும்பத்தினருக்கு சொந்தமானதாக கூறப்படும் உகண்டாவில் உள்ள தொழிற்சாலைகளில் இலங்கையில் காணாமல் போன எமது பிள்ளைகள் இருக்கின்றார்களா என்று உலகவாழ் உறவுகள் ஆராய்ந்து வெளிப்படுத்த வேண்டும் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சஙக தலைவி கலாரஞ்சினி தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அதன்போது அவர் மேலும் கூறுகையில்,

இந்த ஆட்சி மாற்றம் எங்களிற்கு பெரிதாக ஒன்றும் செய்யப்போவதில்லை. நாங்கள் சர்வதேசத்தின் ஊடாக நீதியை கேட்டு நிற்கின்றோம். இலங்கையில் என்ன நடக்கின்றது என்பதை சர்வதேசம் பார்த்துக்கொண்டிருக்கின்றது.

சர்வதேசம் இலங்கை தொடர்பில் அவதானித்து தமிழ் மக்களிற்கான அரசியல் தீர்வினையும், எமக்கான நீதியையும் பெற்றுத்தர வேண்டும் என கேட்டு நிக்கின்றோம். இதேவேளை உலகலாவிய ரீதியில் வாழ்கின்ற தமிழர்கள், ஒன்றிணைந்து போராட்டங்களை முன்னெடுத்து எமது போராட்டத்திற்கும், அரசியல் தீர்வுக்கும் முன்னின்று உழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம்.

இலங்கை அரசில் குடும்ப ஆட்சியும் இனவழிப்பும் நடந்து அவர்கள் கலைக்கப்பட்டு நாடு கடத்தப்பட்ட பின்னர் எங்களிற்கான தீர்வு சர்வஜன வாக்கெடுப்பின் ஊடாக மேற்கொள்ளப்பட வேண்டும் என நாங்கள் எதிர்பார்த்திருந்தோம்.

தற்பொழுது உள்ள ஜனாதிபதி பதவியை இழந்து நிற்கும்போது, எங்களுடைய மண்ணில் வந்து எங்களை சந்தித்தார். உங்களது பிள்ளைகள் காணாமல் ஆக்கப்பட்டிருக்கின்றார்கள் எனவும், தற்பொழுது நான் பதவியில் இல்லை. மகிந்தவின் மனைவியின் பிள்ளை காணாமல் ஆக்கப்பட்டிருந்தால் அவர்கள் தேடுவார்கள். அவர்களிற்கான சட்டத்தை பயன்படுத்துவார்கள். நான் இந்த பதவிக்கு வந்தால், நிச்சயமாக பிள்ளைகளை மீட்டுத்தருவேன் என்று கூறியிருந்தார்.

அவரோ அல்லது அவர் சார்ந்த எவருமோ எமக்கு எதுவும் செய்யப்போவதில்லை. இன்று ராஜபக்ச குடும்பத்தினர், நாடுகடத்தப்பட்டு அனாதைகளாக தெருத்தெருவாக திரிகின்ற இந்த வேளையில், உண்மையாக அந்த இனவழிப்பை செய்தவர்களை கைது செய்வதற்கு சர்வதேசம் முன்வரவேண்டும். அவ்வாறு கைது செய்து எமக்கான நீதியை பெற்றுத்தருவார்கள் என்று நம்புகின்றோம்.

உகண்டா எனும் நாட்டிலே, ராஜபக்ச குடும்பத்தினர்11 தொழிற்சாலைகளை அமைத்து அங்கு எமது பிள்ளைகளை சம்பளமில்லாத கூலித்தொழிலாளிகளாக வேலைக்கு வைத்திருக்கலாம் என்று நாங்கள் நம்புகின்றோம். எமது கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளிற்கு என்ன நடந்தது என்று கூற முடியாதவர்கள், எங்களுடைய பிள்ளைகளை கூலித்தொழிலாளர்களாக வைத்திருக்கலாம் என்று நம்புகின்றோம்.

அந்த தொழிற்சாலைகளை நிர்வகிக்கின்றவர் வேலுப்பிள்ளை கனநாதன் என்ற ஒரு தமிழர். அவருடன் உலக நாடுகளில் உள்ள எமது உறவுகள் தொடர்புகொண்டு, எவ்வாறு அந்த தொழிற்சாலைகள் இயங்குகின்றன என்பதையும், அங்கு எமது பிள்ளைகள் இருக்கின்றார்களா என்பதை அறிவதற்கும் முன்வரவேண்டும் என்றார்.

Posted in Uncategorized

காலிமுகத்திடல் போராட்டகாரர்கள் மீது தாக்குதல் – ஐ.நாவிடம் மனு கையளிப்பு

காலிமுகத்திடலில் இருந்த போராட்டகாரர்கள் மீது பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தியமைக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் விசேட மனு ஒன்றை கையளித்துள்ளனர்.

கொழும்பு 4 தும்முல்லையில் உள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பின் அலுவலகத்தில் இந்த மனு கையளிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களான நளின் பண்டார, முஜிபுர் ரஹ்மான்,ஹர்சன ராஜகருண ஆகியோர் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

அமைதியான போராட்டகாரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து கவனம் செலுத்தி, அது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்குமாறு இந்த மனு ஊடாக கோரிக்கை விடுத்துள்ளதாக முஜிபுர் ரஹ்மான் கூறியுள்ளார்.

Posted in Uncategorized

புதிய ஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்த்துள்ளோம்-அமெரிக்கா,ஐரோப்பிய ஒன்றியம் கருத்து

இலங்கையின் புதிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்த்துள்ளோம் என இலங்கைக்கான அமெரிக்கா தூதுவர் ஜூலி சுங் தெரிவித்துள்ளார்.

தமது உத்தியோகபூர்வ ட்விட்டர் பதிவிலே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கையின் நெருக்கடிகளுக்கு தீர்வுகாணக் கூடிய புதிய அரசாங்கம் வழிவகுக்கும் என எதிர்பார்ப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழு தனது ட்விட்டர் செய்தியில்,ரணில் விக்ரமசிங்க இன்று ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளார். அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுடன் கூடிய அனைவரும் அடங்கிய அரசாங்கத்தை அமைக்க இது வழிவகுக்கும் என ஐரோப்பிய ஒன்றியம் எதிர்பார்த்துள்ளது.

இலங்கைக்கு வேகமான பொருளாதார மறுசீரமைப்பு தேவைப்படுகிறது. அத்துடன் தனிநபர் சுதந்திரம் மற்றும் நல்லிணக்க முயற்சிகளை பாதுகாத்தலும் அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் புதிய ஜனாதிபதியானார் பழங்குடியின பெண்

இந்தியாவின் 15 ஆவது ஜனாதிபதியாக திரௌபதி முர்மு தெரிவாகியுள்ளார்.

மூன்று சுற்று வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு மொத்த வாக்கு மதிப்பில் 50 சதவீதத்திற்கு மேல் அவர் பெற்றுள்ளார்.

இந்தநிலையில் இந்தியா தனது இரண்டாவது பெண் மற்றும் முதல் பழங்குடி இன பெண் ஜனாதிபதியை தெரிவுசெய்துள்ளது.

எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா ​​தோல்வியை ஒப்புக்கொண்டார்.

இதனையடுத்து புதிய ஜனாதிபதியின் பதவியேற்பு நிகழ்வு ஜூலை 25 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் எதிர்வரும் 24 ஆம் திகதியுடன் நிறைவடைகிறது.

இந்தநிலையில் மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக ஒடிசாவை சேர்ந்த பிரபல பழங்குடியின தலைவரும் ஜார்கண்ட் மாநில முன்னாள் ஆளுநருமான திரௌபதி முர்மு போட்டியிட்டார்.

எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சரும் திரிணாமுல் காங்கிரசை சேர்ந்தவருமான யஷ்வந்த் சின்கா போட்டியிட்டார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க இராஜினாமா

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டதன் காரணமாக ஏற்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் வெற்றிடம் தொடர்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுத்துமூலம் அறிவிப்பு

பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியாகப் பதவியேற்றிருப்பதால் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் வெற்றிடம் ஏற்பட்டிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளார்.

இந்நாட்டின் ஜனாதிபதிப் பதவியை ஏற்றுக் கொண்டிருப்பதாகவும், இதனால் 2022 ஜூலை 21ஆம் திகதி முதல் அதாவது இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில்  தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்வதாகவும்  ரணில் விக்ரமசிங்க கடிதம் மூலம் தனக்கு அறிவித்திருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவித்தார்.

அரசியலமைப்பின் 66 (இ) உறுப்புரையின் பிரகாரம் ஒன்பதாவது பாராளுமன்றத்தில், உறுப்பாண்மையில் வெற்றிடமொன்று ஏற்பட்டுள்ளதனால் 1988ஆம் ஆண்டின் 35ஆம் இலக்க பாராளுமன்ற தேர்தல்கள் (சிறப்பேற்பாடுகள்) சட்டத்தினால் திருத்தப்பட்டவாறான 1981ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 64(5) பிரிவின் கீழ் பாராளுமன்ற செயலாளர் நாயகம், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு அறிவித்துள்ளார்.

Posted in Uncategorized

யாழில் இரு தமிழ் அமைச்சர்கள்! ரணிலின் அதிரடி முடிவுகள் –

புதிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்தின் கீழ் வடக்கில் இம்முறை டக்ளஸ் தேவானந்தா, சி.வி விக்னேஸ்வரன் ஆகிய இரு தமிழர்களும் அமைச்சு பதவிகளை பெற வாய்ப்புள்ளதாக இலங்கையில் இருக்கும் புலனாய்வுச் செய்தியாளரும், அரசியல் ஆய்வாளருமான எம்.எம்.நிலாம்டீன் தெரிவித்துள்ளார்.

தேசிய அரசை அமைப்பதற்கான முயற்சியில் தற்போது ரணில் தீவிரமாக செயற்பட்டு வரும் நிலையில்,முஸ்லிம் தரப்பினருக்கும்,தமிழர் தரப்பினருக்கும் அமைச்சு பதவி பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.
அதாவது,மொட்டுக்கட்சியை உடைத்து இரண்டாக பிரித்து ஒரு தரப்பினை புறம்தள்ளி சிரேஸ்ட தலைவர்களை மாத்திரம் ரணிலின் கட்சியின் கீழ் உள்வாங்கப்பட்டால் மொட்டுக்கட்சி இருந்த இடமே அடையாளம் தெரியாமல் காணாமல்போய்விடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு நிலவும் பட்சத்தில் மீண்டும் சஜித் பிரேமதாசவின் கட்சிக்கும்,கூட்டமைப்பிற்கும் இடையில் யார் எதிர்க்கட்சியினர் என்ற மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.