இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிற்குள் வந்த ஜனாதிபதி செயலம் – பிரித்தானியா வெளியிட்ட தகவல்

கொழும்பு காலி முகத்திடலில் இடம்பெற்று வரும் போராட்ட களத்திற்குள் இராணுவத்தினர் நுழைந்து போராட்டக்காரர்கள் மீது கடுமையான தாக்கதல் மேற்கொண்டுள்ளனர்.

கடந்த சில நாட்களாக ஆர்ப்பாட்டக்காரர்களினால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த ஜனாதிபதி செயலகமும் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

மூன்று ஊடகவியலாளர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் குழுவும் பாதுகாப்புப் படையினரால் தாக்கப்பட்டனர். மோதலில் ஈடுபட்ட 8 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதேவேளை, காலி முகத்திடல் போராட்டப் பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலைமை தொடர்பில் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹோல்டன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் காலிமுகத்திடல் போராட்டப் பகுதியில் இடம்பெற்று வரும் செயற்பாடுகள் தொடர்பில் தாம் உன்னிப்பாக அவதானம் செலுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அமைதிப் போராட்டத்திற்கான மக்களின் உரிமை தொடர்பில் கவனம் செலுத்துவதாக அவரது பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இலங்கைக்கு தேவையான உதவிகளை செய்வதாகவும் புதியதாக ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுவதாக அவர் நேற்று அறிவித்திருந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முப்படையினருக்கும் உத்தரவு பிறப்பித்துள்ள ஜனாதிபதியின் விசேட வர்த்தமானி அறிவிப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாடு முழுவதும் பொது அமைதியை பேணுமாறு முப்படையினருக்கும் அழைப்பு விடுக்கும் அதிவிசேட வர்த்தமானியை வெளியிட்டுள்ளார்.

பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 12ம் பிரிவினால் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள தத்துவங்களின் பயனைக்கொண்டு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Posted in Uncategorized

அழைப்பு விடுத்தால் பிரதமர் பதவி தொடர்பில் ஆராய தயார் என்கிறது சஜித் தரப்பு!

பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டால், அது குறித்து ஐக்கிய மக்கள் சக்தி ஆராய்ந்து தீர்மானம் எடுக்கும் என கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இன்று தெரிவித்தார்.

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

சர்வகட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்கும் பட்சத்தில், அரசாங்கத்திற்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்க ஐக்கிய மக்கள் சக்தி தயாராகவுள்ளதாக ரஞ்சித் மத்தும பண்டார கூறினார்.

பிரதமர் பதவிக்கான அழைப்பு விடுக்கப்படும் பட்சத்தில், கட்சியின் செயற்குழு கூடி அது குறித்து கலந்து ஆலோசிக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

கட்சியின் முன்னேற்றம் குறித்து சிந்திக்காது, நாடு தொடர்பில் சிந்தித்து தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார சுட்டிக்காட்டினார்.

Posted in Uncategorized

“கோ-ஹோம்-ரணில்” போராட்டத்தை, தடையின்றி நடத்த கொழும்பு விஹாரமகாதேவி பூங்கா – ஜனாதிபதி ரணில்

பாராளுமன்றம், புது ஆரம்பத்துக்காக 24மணி நேரம் ஒத்தி வைக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க
கட்சி தலைவர்களுடன் நடத்திய விசேட சந்திப்பில் கூறினார்.

பாராளுமன்றம் 24 மணித்தியாலம் ஒத்தி வைக்கப்பட்டு மீள ஆரம்பிக்கப்படுவதன் மூலம் தனது அரசாங்கத்தின் கொள்கை உரையை ஆற்ற ஜனாதிபதி விரும்புவதாக கூறப்படுகின்றது.

இதேவேளை போராட்டக்காரர்கள் தமது “கோ-ஹோம்-ரணில்” போராட்டத்தை, தடையின்றி நடத்த கொழும்பு விஹாரமகாதேவி பூங்கா பிரதேசம் ஒதுக்கி தரப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தமது நல்லாட்சி காலகட்ட அசல் 19ம் திருத்த ஆவணம், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரமாக அரசியலமைப்புக்குள் கொண்டு வர விரும்புவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மேலும் அரசாங்கத்தையும், பாராளுமன்றத்தையும், எம்பீக்களை கொண்ட துறைசார் குழுக்களை அமைத்து நடத்த விரும்புவதாகவும் கூறினார்.

போராட்டம் எனும் போர்வையில் ஜனாதிபதி, பிரதமர் செயலகத்தை கைப்பற்றியவர்கள் மீது சட்ட நடவடிக்கை – ஜனாதிபதி

போராட்டம் எனும் போர்வையில் ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமர் செயலகம் ஆகியவற்றை கைப்பற்றுவது சட்டவிரோதமானது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார். 

எட்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க நேற்று(20) தெரிவு செய்யப்பட்டார். 

பாராளுமன்றத்தில் நேற்று(20) நடைபெற்ற இரகசிய வாக்கெடுப்பில், 52 மேலதிக வாக்குகளால் வெற்றி பெற்று புதிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்.

ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவாக 134 வாக்குகள் அளிக்கப்பட்டிருந்த நிலையில், மற்றைய வேட்பாளர்களான டலஸ் அழகப்பெரும 82 வாக்குகளையும் அனுர குமார திசாநாயக்க 03 வாக்குகளையும் பெற்றிருந்தனர். 

Posted in Uncategorized

ரணில் ஜனாதிபதியாக தெரிவு- தீவிரமடையும் காலிமுகத்திடல் போராட்டம்

கொழும்பு காலிமுகத்திடலில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள்,  ரணில் புதிய ஜனாதிபதியாக தெரிவானதை  தொடர்ந்து தமது போராட்டத்தை  தீவரப்படுத்தியுள்ளனர்.

இதேவேளை காலிமுகத்திடல் கோட்டா கோ கம போராட்டக்காரர்கள், ஜனாதிபதி செயலகத்தின் முன்பாக உள்ள பண்டாரநாயக்க உருவச்சிலையை சுற்றியுள்ள 50 மீற்றர் சுற்றுவட்டத்திற்குள் நுழையக்கூடாது என கோட்டை நீதிவான் நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

Posted in Uncategorized

புதிய ஜனாதிபதி பதவியேற்பு நிகழ்வு நாளை!

புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ரணில் விக்கிரமசிங்க நாளை (21) பதவியேற்கவுள்ளார்.

பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நாளை முற்பகல் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.

இதன்போது அவர் பிரதம நீதியரசர் முன்னிலையில் பதவியேற்கவுள்ளார்.

இதேவேளை இவர் பதவியேற்ற பின்னர், புதிய பிரதமர் நியமனமும் இடம்பெறவுள்ளதாக கூறப்படுகின்றது.

இலங்கையுடனான பேச்சுக்களை துரிதப்படுத்த ஐஎம்எப் எதிர்பார்ப்பு

இலங்கையுடனான நிதி மீட்புப் பேச்சுக்களை முடிந்தவரை விரைவாக முடிக்கமுடியும் என்று சர்வதேச நாணய நிதியம் நம்பிக்கை கொண்டிருப்பதாக நிதியத்தின் நிர்வாகப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா தெரிவித்துள்ளார்.

நெருக்கடியால் பாதிக்கப்பட்ட இலங்கையில் புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்வதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னர் அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

டோக்கியோவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர், இலங்கையில் உள்ள மக்களின் நல்வாழ்வில் தமது நிதியம் மிகவும் ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளது என்று கூறினார் . இலங்கை, எரிபொருள் உணவு மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களின் கடுமையான பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ளதாகவும் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா குறிப்பிட்டுள்ளார்.

பிரிந்து செயற்பட்டது போதும்; அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என புதிய ஜனாதிபதி அழைப்பு!

இலங்கையில் நிலவரத்தைப் புரிந்துக் கொண்டு, இனியும் பிரிந்து செயற்படாமல் அனைவரும் ஒன்றிணைந்து பிரச்சினைகளுக்குத் தீர்வினைக் காண முன்வரவேண்டும் என்று இலங்கையின் புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதை அடுத்து, நாடாளுமன்றில் அவர் ஆற்றிய விசேட உரையின்போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக மேலும் கருத்து வெளியிட்ட அவர், நாடு இன்றுள்ள நிலைமை தொடர்பாக நாம் அனைவரும் நன்றாக அறிவோம்.

எனவே, என்னுடன் இணைந்து போட்டியிட்ட டளஸ் அழகப்பெரும மற்றும் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு நான் இணைந்து பணியாற்ற வருமாறு பகிரங்கமாக அழைப்பு விடுக்கிறேன்.

அதேபோன்று, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் நாம் அழைப்பு விடுக்கிறோம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்டவர்களுக்கும் அழைப்பு விடுக்கிறேன்.

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் அழைப்பு விடுக்கிறேன்.

நாம் பிரிந்து செயற்பட்ட காலம் இத்தோடு முடிவுற்றுவிட்டது. நாம் இனிமேல் ஒன்றாக பயணிக்க வேண்டும்.

நாளை முதல் அனைத்துத் தரப்பினருடனும் பேச்சு நடத்த நாம் தயாராகவே உள்ளோம்- என்றார்.

Posted in Uncategorized

பண்டாரநாயக்க சிலை அருகே ஒன்றுகூடல்களுக்கு தடை!

கொழும்பு காலி முகத்திடலிலுள்ள பண்டாரநாயக்க உருவச்சிலையை சூழவுள்ள 50 மீட்டர் பிரதேசத்திற்குள் ஒன்றுகூடுவதற்கு தடைவிதித்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோட்டை பொலிஸாரின் கோரிக்கையை பரிசீலித்ததை அடுத்து, கோட்டை நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

பண்டாரநாயக்க உருவச்சிலையை சேதமாக்குவதற்கு சிலர் தயாராவதாகக்  கிடைத்த தகவலுக்கமைய, பொலிஸார் இது குறித்து நீதிமன்றத்தில் விடயங்களை சமர்ப்பித்திருந்தனர்.

இதற்கமைய, பண்டாரநாயக்க உருவச்சிலையை சூழவுள்ள 50 மீட்டர் பிரதேசத்திற்குள் ஒன்றுகூடுவதற்கு தடை விதிக்குமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதனை ஆராய்ந்த கொழும்பு கோட்டை நீதவான், பொலிஸாரின் கோரிக்கைக்கு இணங்க தடை விதித்துள்ளார்.

Posted in Uncategorized