அவசரகால நிலை பிரகடனத்தை நீக்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தல்

பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகால நிலை பிரகடனத்தை உடனடியாக நீக்க வேண்டுமென இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

அத்துடன், பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்துமாறும் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.கருத்து வௌியிடும் உரிமை, பேச்சுச் சுதந்திரம், சுதந்திரமாக ஒன்றுகூடுவதற்கான உரிமை உள்ளிட்ட வௌிப்படுத்துவதற்கான சுதந்திரத்தை உறுதிப்படுத்துமாறும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் பதில் ஜனாதிபதியை வலியுறுத்தியுள்ளது.

இவை மக்களின் இறைமை எனவும் அதனை அரசாங்கமோ, முகவர்களோ மீறுவதற்கு இடமளிக்க வேண்டாமெனவும் சங்கத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரணிலுக்கு எதிராக போராட்டத்தை தீவிரப்படுத்த நடவடிக்கை!

பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பதவி விலக வேண்டும் என்றும், இல்லையேல் விரட்ட நேரிடும் என்றும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இதன்படி நாளை 19ஆம் திகதியை எதிர்ப்பு தினமாகவும் பிரகடனப்படுத்தப்படவுள்ளதாக அதன் செயற்பாட்டாளர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக இன்று முதல் தமக்கு அருகில் உள்ள நகரங்களில் எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபடுமாறு மக்களை கேட்டுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷவை பதவியில் இருந்து நீக்கியது போல பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பதவியில் இருந்து நீக்குவதற்கு தொழிற்சங்கங்களும் வெகுஜன அமைப்புகளும் இணைந்து பாரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் இந்தப் போராட்டத்தையும் வெற்றியுடன் முடிக்க முடியும் என நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

காலி முகத்திடல் போராட்டத்தின் பிரதிநிதிகள் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து கலந்துரையாடல்

காலி முகத்திடல் போராட்டத்தின் பிரதிநிதிகள் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை சந்தித்தனர்.காலிமுகத்திடல் போராட்டத்தின் பிரதிநிதிகள் முன்வைக்கும் ‘செயற்திட்டத்தை’ எதிர்காலத்தில் எந்த அரசாங்கமும் கடைப்பிடிக்க வேண்டும் என அவர்கள் எதிர்க்கட்சி தலைவருக்கு வலியுறுத்தியதாக தெரிவித்தனர்.

இதேவேளை கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ரணில் விக்கிரமசிங்க பதவி விலக வேண்டும் என்பதே காலி முகத்திடல் போராட்டக்கார்களின் முக்கிய கோரிக்கையாக இருப்பதாக பிரதிநிதிகள் தெரிவித்தனர்.இது தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்காகவே இன்று எதிர்க்கட்சித் தலைவரைச் சந்தித்ததாகவும் போராட்டக்கார்களின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.(

Posted in Uncategorized

நாடு முழுவதும் அவசரகால நிலை பிரகடனம்!

நாடு முழுவதும் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தி பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்தப் பிரகடனம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாளை மறுதினம் பாராளுமன்றத்தில் ஜனாதிபதிக்கான வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ள நிலையிலேயே பதில் ஜனாதிபதி இந்தப் பிரகடனத்தை செய்துள்ளார்.

‘மக்கள் போராட்ட பிரஜைகள்’ கட்சி; போராட்டக்காரர்கள் தொடங்கும் புதிய கட்சி

‘மக்கள் போராட்ட பிரஜைகள்’ என்ற புதிய அரசியல் கட்சியை பதிவு செய்வதற்கான ஆவணங்களை தேர்தல் ஆணையத்திடம் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கட்சி சார்பற்ற செயற்பாட்டாளர்கள் சமர்ப்பித்துள்ளனர்.

தேர்தல் ஆணையத்துக்கு இன்று திங்கட்கிழமை சென்று அதன் தலைவரிடம் ஆவணங்களை ஒப்படைத்துள்ளதாக செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், அடுத்து வரப்போகும் தேர்தல்களில் இவர்கள் களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Posted in Uncategorized

ருவாண்டாவில் அகதிகளை சிறைப்படுத்தும் இங்கிலாந்தின் திட்டம் குறித்து அச்சம் தெரிவிக்கும் முன்னாள் அவுஸ்திரேலிய தடுப்பு முகாம் அகதி

இங்கிலாந்தில் தஞ்சமடையும் அகதிகளை அச்சுறுத்துவதற்காகவே ருவாண்டாவில் அகதிகளை சிறைப்படுத்தும் திட்டத்தை இங்கிலாந்து உள்துறை அமைச்சர் பிரீத்தி பட்டேல் நடைமுறைக்கு கொண்டு வந்திருக்கிறார் என முன்னாள் அவுஸ்திரேலிய தடுப்பு முகாம் அகதி குற்றம் சாட்டியிருக்கிறார்.

நவுருத்தீவில் அவுஸ்திரேலியா அகதிகளை சிறைப்படுத்தி வைத்திருந்தது போலவே இங்கிலாந்தும் முயற்சித்திருக்கிறது என அந்த அகதி தெரிவித்திருக்கிறார்.

எல்லி ஷகிபா முதன் முதலில் நவுருத்தீவுக்கு கொண்டு செல்லப்பட்ட போது இங்கு சிறிது காலமே இருப்போம் என எண்ணியிருக்கிறார். ஆனால், ஈரானிலிருந்து வெளியேறி இந்தோனேசியா வழியாக அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைந்த அவர் அத்தீவில் 6 ஆண்டுகள் ஆஸ்திரேலிய அரசால் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

“எங்களை உதாரணமாக காட்டுவதற்காகவே அவுஸ்திரேலியா நவுருத்தீவு முகாம் உருவாக்கியது. அவுஸ்திரேலியாவுக்கு படகு வழியாக வரும் அகதிகளுக்கு என்னவாகும் என்னாகும் என்பதை சொல்லும் விதமாக இம்முகாம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது,” எனக் கூறுகிறார் அமெரிக்காவில் தற்போது வசித்து வரும் முன்னாள் அகதியான எல்லி ஷகிபா.

“அவுஸ்திரேலியா செய்ததை தான், தற்போது இங்கிலாந்து உள்துறை அமைச்சர் பீரித்தி பட்டேல் செய்கிறார்,” என ஷகிபா கூறியிருக்கிறார்.

ஐரோப்பியாவிலிருந்து இங்கிலாந்தை படகு வழியாக சென்றடையும் தஞ்சக்கோரிக்கையாளர்களை ருவாண்டாவுக்கு அனுப்பும் புதியதொரு ஒப்பந்தம் இங்கிலாந்து- ருவாண்டா இடையே சமீபத்தில் கையெழுத்தானது. கடந்த ஆண்டு மட்டும் சிறிய படகுகள் வழியாக சுமார் 28 ஆயிரம் இங்கிலாந்தில் தஞ்சமடைந்திருக்கின்றனர், இந்த எண்ணிக்கை கடந்த 2020ல் 8500 ஆக இருந்தது.

தற்போதைய புதிய ஒப்பந்தத்தின் படி, இங்கிலாந்தில் சிறிய படகுகள் வழியாக தஞ்சமடைபவர்களை அந்நாட்டிலிருந்து 6400 கிலோ மீட்டர் அப்பால் உள்ள ருவாண்டாவுக்கு இங்கிலாந்து அரசு அனுப்பயிருக்கிறது. சட்டவிரோத புலம்பெயர்வை தடுப்பதற்கான நடவடிக்கையாக சொல்லப்படும் இதை இங்கிலாந்து எதிர்க்கட்சியினரும் அகதிகள் நல செயல்பாட்டாளர்களும் ‘மனிதாபிமானமற்றது, மக்கள் பணத்தை வீணடிப்பது’ என கடுமையாக விமர்சித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

பொருளாதார வீழ்ச்சியை நோக்கி ஐரோப்பிய ஒன்றியம் – அனைத்துலக நாணய நிதியம்

எரிபொருள் நெருக்கடி ஐரோப்பிய ஒன்றியத்தை மிகப்பெரும் பொருளாதார வீழ்ச்சியை நோக்கி தள்ளிவருவதாக அனைத்துலக நாணய நிதியத்தின் தலைவர் Kristalina Georgieva தெரிவித்துள்ளார்.

உக்ரைன் போர் ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்து வருகின்றது. இது 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளின் பொருளாதார வளர்ச்சியை கடுமையாக பாதிக்கும்.

பணவீக்கத்தை குறைப்பதற்கு நாடுகள் பல வழிமுறைகளை நாடுகின்றன. பணவீக்கம் பொருளாதார மீட்சியை பாதிப்பதுடன், மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் பாதிக்கும். எரிபொருள் மற்றும் உணவுப் பற்றக்குறையே பிரதான கராணமாக உள்ளது.

இதனை தடுக்கவேண்டுமெனில் நாடுகள் பொருளாதார மற்றும் ஏற்றுமதித் தடைகளை நீக்க வேண்டும் என்பதுடன் ஏனைய நாடுகளுக்கு உதவிகளையும் வழங்கவேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

கோட்டாபயவை கைது செய்யுமாறு பிரித்தானியாவின் லிபரல் ஜனநாயகக் கட்சி கோரிக்கை

கோட்டாபயவை கைது செய்ய வேண்டுமென பிரித்தானியாவின் லிபரல் ஜனநாயகக் கட்சியின் தலைவர் இட் டேவி  (Sir Ed Davey) வலியுறுத்தியுள்ளார்.

கோட்டாபய ராஜபக்ச இலங்கையை விட்டு தப்பிச் சென்றமை குறித்து பிரித்தானியாவின் லிபரல் ஜனநாயகக் கட்சியினால் கடுமையான எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது, கோட்டாபயவை கைது செய்யுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு கன்சர்வேட்டிவ் மற்றும் தொழிற் கட்சிகளும் ஆதரவு வெளியிட்டுள்ளன.

Posted in Uncategorized

தமிழ் சமூகத்தின் கருத்துக்களுக்கு செவிசாய்க்கும் தலைவருக்கே ஆதரவு – சி.வி.விக்னேஸ்வரன்

தமிழ் சமூகத்தின் கருத்துக்களுக்கு செவிசாய்க்கும் தலைவருக்கே ஆதரவு என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

30 வருடங்களுக்கு மேலாக நிலவும் இந்த பிரச்சினைகளுக்கு மக்கள் போராட்டத்தின் பின்னராவது தீர்வு காணப்பட வேண்டும் எனவும் ஆகவே தாம் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் வாக்கெடுப்பில் பக்கச்சார்பற்ற முறையில் செயற்படவுள்ளதாக சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் தமிழ் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு தீர்வுகாண பாடுபடும் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களிப்பேன் என்றும் எதிர்வரும் ஜூலை மாதம் 20ஆம் திகதி நடைபெறவுள்ள புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் வாக்கெடுப்பு தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

தற்போதைய அரசியல் நிலை குறித்து ஆறு தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் இணையவழிக் கலந்துரையாடல்

தற்போதைய அரசியல் நிலை குறித்து ஆறு தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் இணையவழிக் கலந்துரையாடல்  இன்றைய தினம் நடைபெற்றதாக தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஒருங்கிணைப்பாளரும் ரெலோ அமைப்பின் ஊடகப் பேச்சாளருமான  சுரேந்திரன் தெரிவித்தார்.

இதில் கட்சித் தலைவர்கள் நீதியரசர் விக்னேஸ்வரன், மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் ஸ்ரீகாந்தா ஆகியோர் கலந்து கொண்டனர்.  பயணம் காரணமாக சித்தார்த்தன் அவர்களால் கலந்து கொள்ள முடியவில்லை. எனினும் ஆதரவு தெரிவிக்கப்பட்டது

ஒருமித்த நிலைப்பாட்டில் உள்ள ஆறு தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் 17 ஞாயிறு காலை 11 மணிக்கு தற்போதைய அரசியல் சூழ்நிலை பற்றிய இறுதி நிலைப்பாடு சம்பந்தமாக இணைய வழியில் சந்தித்து உரையாடினர். கடந்த இரு வாரங்களாக தொடர்ச்சியாக தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் அரசியல் சூழ்நிலை, தமிழ் மக்கள் நிலைப்பாடு , இதை எப்படிக் கையாள்வது என்பது குறித்து இணைய வழியினூடாக பல சந்திப்புகள் நடைபெற்றன.

இறுதியாக 17 ஞாயிறுக் கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளர்கள், வரப்போகும் அரச தரப்பு, போராட்ட அமைப்புகள் ஆகியோரிடம் தமிழ் மக்கள் சார்பில் கோரிக்கை ஒன்றை முன்வைப்பதாக தீர்மானிக்கப் பட்டது. அக்கோரிக்கைள் சம்பந்தமான தயாரிக்கப்பட்ட வரைபும் பரிசீலிக்கப்பட்டது.

நாளை 18, திங்கள் காலை 11 மணிக்கு மீண்டும் கூடி இக் கோரிக்கையை இறுதி செய்வது எனத் தீர்மானிக்கப்பட்டது. இதற்கான சர்வதேச ஆதரவை ஒருங்கமைக்கவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் தமது எதிர்கால அரசியல் இருப்பை தீர்மானிக்க மீண்டும் கிடைத்துள்ள இச்சந்தர்ப்பத்தை தமிழர் தரப்பு ஒருமித்த நிலையில் கையாள்வதானது எமது மக்களுக்கான உறுதியான முக்கிய மாற்றங்களை ஏற்படுத்த வழி அமைக்கும்  என நம்பிக்கை வெளியிடப்பட்டது.

இந்நிலையில் எமது மக்கள் நலன் கருதி தமிழ் தேசிய மக்கள் முன்னணியிடமும் இம்முயற்சியில் இணைந்து கொள்வதற்கான  கோரிக்கை முன்வைக்க தீர்மானிக்கப் பட்டது.

தமிழ் தேசிய பரப்பிலே பயணித்துக் கொண்டிருக்கும் கட்சிகள் ஒருமித்த நிலைப்பாட்டில் தொடர்ச்சியாக முன்னெடுத்துவரும் கலந்துரையாடல்கள் மற்றும் செயல்பாடுகள் வெற்றிகரமாக நடைபெற்று வருவது அனைவரும் அறிந்ததே.