சகல சலுகைகளுடன் மீண்டும் இலங்கை வருகிறார் கோட்டா!

பதவி விலகிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அடுத்த மாதம் மீண்டும் இலங்கை வரவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கோட்டாபய ராஜபக்ஷ ஓய்வு பெற்ற ஜனாதிபதியின் சிறப்புரிமைகளைப் பெற உள்ளார். அதன்படி, கொழும்பில் உத்தியோகபூர்வ இல்லம், பாதுகாப்புப் படை, வாகனங்கள் உள்ளிட்ட பல சலுகைகள் அவர் மற்றும் அவரது மனைவிக்கு கிடைக்கும்.

தற்போது வெளிநாட்டில் உள்ள கோட்டாபாய ராஜபக்ஷவின் கோரிக்கையின் பேரில் இந்த வசதிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

பதில் ஜனாதிபதி பாதுகாப்பு தரப்பினருக்கு விடுத்த உத்தரவு!

ஜனாதிபதியை தெரிவு செய்வதில் பாராளுமன்ற உறுப்பினர்களின் சுதந்திரமாக வாக்களிக்கும் உரிமைக்கு சமூக வலைத்தளங்கள் ஊடாக செல்வாக்கு செலுத்துபவர்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

சமூக ஊடகங்கள் ஊடாக விடுக்கப்படும் அச்சுறுத்தல்களினால் சுதந்திரமாக வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர்கள் விடுத்த அறிவித்தலை கருத்திற்கொண்டு பதில் ஜனாதிபதி பாதுகாப்பு தரப்பினருக்கு இந்த பணிப்புரையை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, பாராளுமன்ற அதிகாரங்கள் மற்றும் சிறப்புரிமைகள் சட்டம் மற்றும் அது தொடர்பான குற்றவியல் சட்டங்களின் கீழ் இது தொடர்பான சம்பவங்களை விசாரிக்குமாறு அவர் அறிவித்துள்ளார்.

Posted in Uncategorized

அனைத்துக்கட்சி அரசாங்கத்தை அமைப்பதற்காக எதிர்க்கட்சிகளுடன் இணைந்து செயற்பட தீர்மானம் – டலஸ் அழகப்பெரும

அனைத்துக்கட்சி அரசாங்கத்தை அமைப்பதற்காக எதிர்க்கட்சிகளுடன் இணைந்து செயற்பட தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.பொதுஜன பெரமுனவின் தலைமை டலஸ் அழகப்பெருமவை கொண்டு வருவதில் முனைப்பு காட்டினாலும் கட்சியின் பொதுச்செயலாளர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.இந்நிலையில் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவிலேயே டலஸ் அழகப்பெரும இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

வரலாறாக மாறியுள்ள மோசடி அரசியல் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதே தனது பிரதான இலக்கு என நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதி வேட்பாளருக்கான போட்டியில் தானும் களமிறங்கவுள்ளதாக டலஸ் அழகப்பெரும அறிவித்திருந்தார்.

ரணிலுக்கு எதிராக திரும்பிய காலிமுகத்திடல் போராட்டம்

இலங்கையில் ஜனாதிபதியாக இருந்த கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகிய பின் பதில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதிவியேற்றிருக்கும் நிலையில், தற்பொது அவருக்கு எதிராக போராட்டம் தீவரமடைந்துள்ளது.

“ரணில் கோ ஹோம்’ என்ற ஆங்கில வாசகம் கொண்ட பட்டைகளை தலையில் கட்டிக்கொண்டு பலர் போராட்டத்தில் பங்கேற்றிருக்கின்றனர்.

எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் சஜித் பிரேமதாசவும் ஜனாதிபதியாக போட்டியில் இருப்பதால், ரணில் விக்கிரமசிங்க தன்னிச்சையாக ஜனாதிபதியாவற்கான வாய்ப்பு இல்லாமல் உள்ளது. அவர் ஜனாதிபதியாக வேண்டுமானால் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றாக வேண்டும்.

கோட்டாபயவின் கட்சி ரணிலுக்கு ஆதரவளிப்பதால் அவருக்கு வெற்றிபெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில், காலிமுகத்திடலில் ரணிலுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்து வருகின்றது.

Posted in Uncategorized

ரஞ்சன் ராமநாயக்கவை பொது மன்னிப்பில் விடுதலை செய்ய முடிவு!

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலையை துரிதப்படுத்துமாறு பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவிடம் அறிவித்துள்ளார்.

நேற்று  இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போதே இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரின் கோரிக்கைகளுக்கு அமைய பதில் ஜனாதிபதி இவ்வாறு அறிவுறுத்தியுள்ளார்.

இந்த செயன்முறை அவசரமாக எடுக்கப்படவுள்ளதால், ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலை தொடர்பான ஆவணங்கள் இரு வாரங்களுக்குள் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிராக சிங்கப்பூரிலும் மக்கள் போராட்டம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இலங்கையை விட்டு மாலத்தீவுக்கும் பிறகு சிங்கப்பூருக்கும் சென்றுள்ள நிலையில் அந்நாட்டு மக்கள் அவருக்கு எதிராக போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இலங்கையை விட்டு மாலத்தீவுக்கு சென்றிருந்த போதும் அவருக்கு எதிராக அங்குள்ள மக்களும் புலம்பெயர் இலங்கை மக்களும் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

அதே போல் சிங்கப்பூருக்கு சென்றுள்ள கோட்டாபயவுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் மற்றும் புலம்பெயர் இலங்கை மக்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

புதிய ஜனாதிபதி தெரிவு- ஒருவர் போட்டியிட்டால் 19 ஆம் திகதி அறிவிப்பு , பலர் போட்டியிட்டால் 20 ஆம் திகதி வாக்கெடுப்பு

சபாநாகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று கூடிய பாராளுமன்றம் எதிர்வரும் 19 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முற்பகல் 10 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க இன்றைய சபை அமர்வில் சில முக்கிய விடயங்களை அறிவித்தார்.

அதன்படி, பாராளுமன்றத்திலுள்ள எந்தவொரு உறுப்பினருக்கும் வெற்றிடமாகியுள்ள ஜனாதிபதி பதவிக்கான வேட்புமனுவை தாக்கல் செய்ய முடியும்.

வேட்புமனுவில் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் அந்த சந்தர்ப்பத்தில் சபை அமர்வில் கலந்து கொண்டிருக்க வேண்டியது அவசியம்.

ஒன்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் வேட்புமனு தாக்கல் செய்யுமிடத்து , 20 ஆம் திகதி வாக்கெடுப்பு இடம்பெறும்.

மாறாக ஒரேயொரு உறுப்பினர் மாத்திரம் வேட்புமனு தாக்கல் செய்யும் பட்சத்தில் 19 ஆம் திகதி சபை அமர்விலேயே குறித்த உறுப்பினரின் பெயர் வெற்றிடமாகியுள்ள ஜனாதிபதி பதவிக்கு தெரிவு செய்யப்படுவதாக என்னால் உறுதிப்படுத்தப்பட்டு அறிவிக்கப்படும்.

Posted in Uncategorized

இந்தியா முழுமையான ஆதரவை இலங்கைக்கு வழங்கும் இந்திய தூதரகம் தெரிவிப்பு

இலங்கையில் ஜனநாயகக்கோட்பாடுகளுக்கும் அரசியலமைப்பிற்கும் அமைவாக மிகவிரைவாக அரசியல் தீர்வு அடைந்துகொள்ளப்படுவதற்கு இந்தியா முழுமையான ஆதரவை வழங்கும் என்று இலங்கையிலுள்ள இந்திய தூதரகம் அறிவித்திருக்கின்றது.

முன்னாள் ஜனாதிபதி இலங்கையிலிருந்து வெளியேறுவதற்கோ அல்லது பயணிப்பதற்கோ ஏதேனுமொரு வகையில் இந்தியா உதவியதாக வெளியாகும் தகவல்களை முற்றாக மறுப்பதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை ஜனநாயகக்கோட்பாடுகள், ஜனநாயகக்கட்டமைப்புக்கள் மற்றும் அரசியலமைப்பு என்பவற்றுக்கு அமைவாக சுபீட்சம் மற்றும் அபிவிருத்தி ஆகியவற்றை இலக்காகக்கொண்ட மக்களின் அபிலாஷைகள் அடைந்துகொள்ளப்படுவதை முன்னிறுத்தி இந்தியா எப்போதும் இலங்கை மக்களுடன் உடன்நிற்கும் என்றும் இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
Posted in Uncategorized

நாட்டை வழிநடத்துவதற்கு சரியானவர் ரணில் விக்ரமசிங்க – பொதுஜன பெரமுன

ஜனாதிபதி பதவிக்கு பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க ஆளும்கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது.இருப்பினும் புதிய அபிவிருத்தியை கருத்தில் கொண்டு, அடுத்த ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான பாராளுமன்ற வாக்கெடுப்பில், பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் அனுபவம், சர்வதேச உறவுகள் மற்றும் திறமைகளை கருத்திற்கொண்டு அவர் நாட்டை வழிநடத்துவதற்கு சரியானவர் என அவர்கள் கருதுவதாக அவர் கூறினார்.நீண்ட கலந்துரையாடலின் பின்னரே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர் ஒருவரை ஜனாதிபதி பதவிக்கு நியமித்தால், சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்கும் இலக்கை அடைய முடியாது என பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.எவ்வாறாயினும், ஜனாதிபதியை தெரிவு செய்யும் வாக்கெடுப்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து நாடாளுமன்ற ஒருவர் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள பொதுஜன பெரமுனவின் அடிப்படைக் கொள்கைக்கு இது ஒரு சவால் என சாகர காரியவசம் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி பதவிக்கு அனுரகுமார போட்டி!

புதிய ஜனாதிபதியை தெரிவு செய்ய பாராளுமன்றத்தில் நடக்கும் வாக்கெடுப்பில் வேட்பாளராக அனுரகுமார திஸாநாயக்க போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

கட்சியின் தலைமையகத்தில் இன்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

புதிய ஜனாதிபதிக்கான வேட்புமனு கோரல் எதிர்வரும் 19 ஆம் திகதியும் ஜனாதிபதிக்கான வாக்கெடுப்பு 20 ஆம் திகதியும் பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized