பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லம் எரிக்கப்பட்டமை தொடர்பிலான விசாரணைகள் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் ஏற்கனவே கொள்ளுப்பிட்டி பொலிஸார் 3 பேரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் கல்கிஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய ஒருவரும், கடவத மற்றும் காலி பிரதேசத்தைச் சேர்ந்த இருவருமே அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
ஏனைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்றிரவு (09) பிரதமரின் வீட்டிற்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் குழு ஒன்று பிரவேசித்ததை அடுத்து, தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த வீட்டில் இருந்த கலைப் பொருட்கள், மதிப்பு மிக்க புத்தகங்கள் என அனைத்தும் தீயில் எரிந்து நாசமானது.
இதேவேளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வீடு தீக்கிரையாக்கப்பட்ட போது, அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டமை தொடர்பில் விசேட விசாரணை நடத்தப்பட்டு வருவதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கொழும்பு பிரதேசத்தில் நேற்று (09) மாலை 6 மணிக்குப் பின்னர் திட்டமிடப்பட்ட வகையில் மின்வெட்டு எதுவும் இல்லை என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.