ஜனாதிபதி மாளிகைக்குள் இருந்து மீட்கப்பட்ட பணம் படையினரிடம் ஒப்படைக்கப் பட்டதாக தகவல்

கோட்டையிலுள்ள ஜனாதிபதியின் வாசஸ்தலத்தை நேற்று முற்றுகையிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், மாளிகைக்குள் இருந்த பெருந்தொகை பணத்தை மீட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

கண்டெடுக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளை போராட்டக்காரர்கள் எண்ணும் வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

மீட்கப்பட்ட பணம் பாதுகாப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பந்தப்பட்ட உண்மைகளை ஆராய்ந்த பின்னர் நில நிலைமையை அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

தீ வைக்கப்பட்ட ரணிலின் பாரம்பரிய வீட்டில் இலங்கையில் எங்கும் கிடைக்காத அரிய புத்தகங்கள் இருந்ததாக தகவல்

நாட்டிலேயே அதிக தடவைகள் பிரதமர் பதவியை வகித்தவர் ரணில் விக்ரமசிங்க என்ற போதிலும், பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமாக இருந்த கொழும்பு அலரி மாளிகைக்கு அவர் ஒருபோதும் இடம் பெயர்ந்ததில்லை எனவும் உத்தியோகபூர்வ வேலைக்காக அலரி மாளிகைக்கு சென்றாலும், இந்த வீட்டிலேயே தனது வாழ்க்கையைக் கழித்தார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை இந்த வீடு பிரதமரால் மரபுரிமையாக பெறப்பட்டு பழைய கட்டிடக்கலைப்படி நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அத்துடன் ரணிலின் பாரம்பரிய வீட்டில் மிகப்பெரிய நூலகம் அமைந்திருந்தது.இங்கு பொருட்களை விட அதிகளவிலான நூல்களே காணப்பட்டுள்ளன. இலங்கையில் எங்கும் கிடைக்காத அரிய புத்தகங்கள் இந்த நூலகத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் போல் மாறுவேடமிட்ட நாசகாரர்கள் குழுவொன்று கொழும்பில் அமைந்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு சொந்தமான பழங்கால பொருட்கள் கொண்ட வீட்டிற்கு தீ வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தனக்குப் பின்னர் கொழும்பு றோயல் கல்லூரிக்கு இந்த வீட்டை நன்கொடையாக வழங்குவதற்கான கடைசி உயிலையும் பிரதமர் வெளியிட்டுள்ளார்.பிரதமர் மற்றும் அவரது மனைவி பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவும் இந்த வீட்டில்தான் தனது வாழ்நாளைக் கழித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

மக்கள் போராட்டத்தை தொடர்ந்து அமைச்சர்கள் சிலர் பதவி விலகினர்!

கமத்தொழில், வனசீவராசிகள் அமைச்சரான மஹிந்த அமரவீர தனது அமைச்சு பதவியில் இருந்து இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

இந்திய கடனுதவியின் கீழ் நாட்டிற்கு கொண்டுவரப்படும் உரத்தை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றதன் பின்னர் அமைச்சர் பதவியில் இருந்து இராஜினாமா செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அமைச்சர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் தமது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்வதாக நேற்றிரவு அறிவித்தனர்.

அதேபோல், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பதவிகளில் இருந்தும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இருந்தும் தான் விலக தீர்மானித்துள்ளதாக கலாநிதி பந்துல குணவர்தன நேற்று அறிவித்திருந்தார்.

மேலும் பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட தீர்மானித்துள்ளதாகவும் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்..

புதிய சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை அமைப்பது பெரும்பான்மையான இலங்கை மக்களினதும் மதத் தலைவர்களினதும் எதிர்பார்ப்பாக மாறியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்க தனது பங்களிப்பை செலுத்த உள்ளதாகவும் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

போரட்டத்தின் போது பலர் காயம்!

கொழும்பில் நேற்று முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது காயமடைந்த 56 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களுள் மூவரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

அவர்களில் ஒருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

காயமடைந்தவர்களில் 05 பெண்களும் அடங்குகின்றனர்.

பாதுகாப்பு பிரிவை சேர்ந்த இருவரும் இதன்போது காயமடைந்துள்ளனர்.

Posted in Uncategorized

இலங்கையின் அரசியல் கொந்தளிப்புக்கு ஒரு தீர்வு கிடைக்கும் -IMF நம்பிக்கை

சர்வதேச நாணய நிதியம் (IMF) இலங்கையின் அரசியல் கொந்தளிப்புக்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்று நம்புவதாகக் கூறியுள்ளது.

இலங்கையில் நடைபெற்று வரும் நிலைமை களை உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் கூடிய வேலைத்திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தையை மீள ஆரம்பிக்க அனுமதித்து தற்போதைய நிலைமைக்கு தீர்வு காண முடியும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளது.

அகதிகளை அவுஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்லுங்கள் என வலியுறுத்தும் ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு

நவுருத்தீவில் மீள்குடியேற்றத்திற்காக காத்திருக்கும் அகதிகள் மற்றும் தஞ்சக்கோரிக்கையாளர்கள் பாதுகாப்பற்ற சூழலில் வாழ்ந்து வரும் நிலையில், அவர்களை உடனடியாக அவுஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என மனித உரிமை அமைப்பான ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் வலியுறுத்தியுள்ளது. 

நவுருத்தீவில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று, அந்நாட்டில் உள்ள 40 சதவீத மக்களை பாதித்துள்ளது. இந்த தொற்று சூழலால் அங்கு 9 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவைக்கப்பட்டுள்ள 112 அகதிகள் மற்றும் தஞ்சம் கோரியவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

Posted in Uncategorized

ஜனாதிபதி கோட்டாபய பதவி விலகத் தீர்மானித்தார்!

மக்கள் போராட்டங்களை தொடர்ந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ பதவி விலகுவதற்கு தீர்மானித்துள்ளார்.

இதன்படி எதிர்வரும் 13 ஆம் திகதி தான் பதவி விலகுவதாக அவர் அறிவித்துள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில், அந்தத் தீர்மானத்தை சபாநாயகர், ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்திருந்தார்.

இதனை தொடர்ந்து ஜனாதிபதி இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.

பிரதமரின் இல்லத்திற்கு தீ வைப்பு!

கொள்ளுபிட்டியில் அமைந்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு தீ வைக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் இல்லத்திற்கு முன்னால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது, அங்கே தீ வைத்துள்ளது.

இதனால் வீட்டுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கிடையில், பிரதமரின் இல்லத்திற்கு வெளியே நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Posted in Uncategorized

பதில் ஜனாதிபதி யார்?: கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவி விலக வேண்டும் என அனைத்து கட்சித் தலைவர்களும் தீர்மானித்துள்ளனர்.

இன்று (09) மாலை சபாநாயகர் இல்லத்தில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு, பிரதமர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், அநுர குமார திஸாநாயக்க ஆகியோர் ஷூம் தொழில்நுட்பத்தின் ஊடாக கலந்து கொண்டனர்.

இக்கலந்துரையாடலில் அரசியலமைப்புக்கு அமைவாக இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக தற்போதைய சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன பதவியேற்பார் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவல்களை பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தனது டுவிட்டர் தளத்தில் பதிவு ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பல்கலைக்கழக மாணவர்களின் பேரணி மீது பொலிஸார் தாக்குதல்!

கொழும்பில் பேரணி நடத்திய பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

மாணவர்கள் கோட்டையில் ஜனாதிபதி மாளிகை பகுதிக்கு செல்ல முயற்சித்த போது உலக வர்த்தக மையத்திற்கு அருகில் அவர்கள் மீது கண்ணீர் புகை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதனால் அங்கு அமைதியின்மை நிலவி வருகின்றது.