முக்கியமான சர்வதேச நாடுகள் தலையிட்டு ஒரு நடுவர் மன்றமாக (Arbitration) செயல்பட்டு பேச்சுவார்த்தை மூலம் தமிழ் மக்களுக்கான முழுமையான அரசியல் தீர்வை உருவாக்கி அதை சிறிலங்காவில் நடைமுறைப்படுத்துவதற்கு உத்தரவாதமளிக்க வேண்டுமென இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச சமூகத்தை கேட்டுக் கொள்கிறோம்.என பிரித்தானிய தமிழர்பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஐ.நா.மனித உரிமை கழக தீர்மானமும் முன்னோக்கிய பாதையும்என்ற தனது புதிய அறிக்கையில் இதனை தெரிவித்துள்ள பிரித்தானிய தமிழர் பேரவை மேலும் தெரிவித்துள்ளதாவது
ஒவ்வொரு வகை குற்றங்கள் தொடர்பான தரவுகள் திரட்டல் மற்றும் நிரல்படுத்தப்பட்ட அறிக்கைகள் தாயகத்திலுள்ள அரசியல், சமூக மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் அமைப்புகள் தொகுத்து வழங்குவது போதுமான அடிப்படையில் தொடர்ச்சியாக பொது வெளிக்கு வருவது இல்லை. குறிப்பாக உலகின் கவனத்தை ஈர்க்கக் கூடிய காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான முழுமையான ஆதாரபூர்வமான தகவல் அறிக்கை மற்றும் நில ஆக்கிரமிப்பு போன்றன பதிவிடப்பட வேண்டியது தமிழ் மக்களின் நீதிக்காக உலகளாவியரீதியில் குரல் கொடுப்போருக்கு கை கொடுக்கும்.
சர்வதேச சட்டங்களுக்கெதிரான பாரதூரமான குற்றங்கள் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்டிருப்பதனை ஆதாரபூர்வமான பதிவுகள் தொடர்ச்சியாக பொது வெளிக்கு கொண்டு வரப்படாவிடின் தமிழ் மக்களின் மீதான தொடரும் இனஅழிப்பு சர்வதேசத்தின் நிகழ்ச்சி நிரலில் பின் தள்ளி விடப்படும்..
இலங்கையின் தற்போதைய இக்கட்டான நிலைக்கான உண்மையான காரணத்தை அறியாமல், அது பாரதூரமான பொருளாதார வீழ்ச்சிக்கு உள்ளாகும்போது, அதற்கு எதிராக கடுமையான தீர்மானத்தை சுமத்துவது நியாயமற்றது என்ற இலங்கையின் பாசாங்குக்கு பெரும்பாலான வளர்ச்சி அடைந்து வரும் நாடுகள் (Developing countries) அனுதாபம் தெரிவித்தன.
ஏழு தசாப்தகால சிங்கள பௌத்த மேலாதிக்கம், தண்டனையிலிருந்து விடுபடுதல் (Impunity), தொடரும் வன்முறைச் சுழற்சிகள் (Cycles of Violence), மோதல்களை தூண்டி விடும் இனவாத அரசியல் நிகழ்ச்சி நிரல், இறுக்கமாக அதிகாரம் மையப்படுத்தப்பட்ட அரச நிறுவனங்கள் போன்றன உள்ளிட்ட மூல காரணங்களே (root causes) தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு இட்டுச் சென்றிருப்பதை இந்த நாடுகள் புரிந்து கொள்ள தமிழர் தரப்பு காத்திரமான முறையில் செயல்பட வேண்டும்.
தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் தொடர்பான நன்கு ஆவணப்படுத்தப்பட்ட பல்லாயிரக்கணக்கான சான்றுகள் இருந்தும் கூட அரசியல் விருப்பு (Political will) மற்றும் புவிசார் அரசியல் நலன்கள் காரணமாக சர்வதேச குற்றவியல் நீதிப் பொறிமுறையை நிறுவுவதற்கான வழிவகைகளை ஐநா உறுப்பு நாடுகள் முன்னெடுக்க தவறி வருகின்றன. ஐ.நா, உறுப்பு நாடுகள் (அ) இந்த குற்றங்களை ஏனைய ஐ.நா பொறிமுறைகளுக்கு அறிக்கையிடுதல் (ஆ) பொதுச் சபைக்கு சர்வதேச குற்றவியல் நீதிப் பொறிமுறைக்கான பரிந்துரையினை மேற்கொள்ளல் என்பனவற்றினை தாமதமின்றி நிறைவேற்றியிருக்க வேண்டும்.
பெரும்பாலும் நாடுகள் தம் தலைநகரத்தில் எடுக்கப்படும் அரசியல் முடிவுகளின் அடிப்படையிலேயே மனித உரிமைக் கழக தீர்மானங்களில் வாக்குகள் பதியப்படுகின்றன. ஐ.நா.வின் பொதுச் சபை மற்றும் ஐ.நா. மனித உரிமை கழகத்தில் பெரும்பான்மை நாடுகளின் ஆதரவு தமிழர் தரப்பிற்கு திரட்டப்பட வேண்டும் என்ற மூலோபாயத் தெரிவொன்றினை கடந்த பத்தாண்டுகளாக தாயகப் பிரதிநிதிகளுக்கும் புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கும் நாம் தொடர்ச்சியான வேண்டுகோள் விடுத்து வருகின்றோம். ஆயினும் இதனை புரிந்து கொண்டு வினைத்திறனுடன் செயல்படுவோர் ஒரு சிலர் மட்டுமே.
இந்த வகையில் 2022 செப்டம்பர் மாத கால மனித உரிமை கூட்டத் தொடர் ஆரம்பிக்க முன்னரும் கூட்டத் தொடர் இடம்பெற்ற வேளையிலும், பிரித்தானிய தமிழர் பேரவை பல்வேறு நாட்டு பிரதிநிதிகளையும் சர்வதேச அரசு சாரா நிறுவனங்களையும் நேரடியாக சந்தித்து இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை வலுப்படுத்த கோரி அதற்கான அடிப்படைகளை விளக்கியிருந்தனர்.
செப்டம்பர் 2022 இல், இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட புதிய தீர்மானத்தில் இரு விடயங்கள் முக்கியத்துவம் பெறுகின்றது. முதலாவதாக 2021 மார்ச் தீர்மானத்தில் கொண்டு வரப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான சாட்சியங்கள் திரட்டடப்பட்டு அவை தொடர்பான குற்ற வழக்கு கோப்புகள் தயாரிக்கும் பொறிமுறை 2022 செப்டம்பரில் நீட்டிக்கவும் வலுப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டு அதற்காக $6.09 மில்லியன் பணமும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபை இதற்காக இரு வருட காலத்திற்கு இப் பொறிமுறை உரிய முறையில் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்துள்ளது.
இரண்டாவது முக்கிய விடயமாக, செயற்பாட்டு பத்தியில் (Operative Paragraph) கொண்டு வரப்பட்ட அரசியல் தீர்வு மற்றும் அதிகாரப் பகிர்வு போன்ற விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது. சிறிலங்காவில் அதிகாரப் பகிர்வு குறித்த சர்வதேச தீர்மானம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதால் எமக்கான உரிமைகள் முழுமையாகக் கிடைப்பதற்கான வழி முறைகளை சர்வதேச நாடுகளின் தலையீட்டுடன் (arbitration) பலப்படுத்தி வெற்றி ஈட்டும் உத்திகளை வகுத்து செயல்பட வேண்டும் என்னும் கோரிக்கையை தமிழ் அமைப்புக்களிடமும் தமிழ் அரசியல் கடசிகளிடமும் பிரித்தானிய தமிழர் பேரவை வேண்டிக் கொள்கின்றது.
இன்னொரு முக்கிய விடயமாக, இந்தியா இவ் வாக்கெடுப்பு தொடர்பில் நடுநிலைமையான முடிவை எடுத்திருப்பினும், தமிழர்களின் அரசியல் தீர்வு தொடர்பில், தமிழர்களின் நியாயமான அபிலாசைகளை நிறைவேற்றுவது தொடர்பாக தீர்க்கமான அறிக்கையை வெளியிட்டிருந்தமை தமிழர்களை பொறுத்த வரையில் ஒரு முக்கிய விடயமாக அமைந்திருந்தது. இது தொடர்பாகவும் பிரித்தானிய தமிழர் பேரவை தமிழக மக்கள் மற்றும் தமிழக அரசியல் கட்சிகளின் ஆதரவினையும் கோரி இந்திய அரசுக்கு மேலதிக அழுத்தங்களை தொடர்ச்சியாக கொடுக்க வேண்டும் எனவும் கோரிக்கையையும் முன்வைத்துள்ளது.
46/1 & 51/1 தீர்மானங்கள்
தமிழ் மக்கள் மீது நடத்தப்படும் இனப் படுகொலை பற்றி ஆர்வமாகக் கதைக்கும் பலர், 46/1 மற்றும் 51/1 தீர்மானங்களில் உள்ள சாட்சியங்களை சேகரிக்கவும், ஒருங்கிணைக்கவும், பகுப்பாய்வு செய்யவும் மற்றும் பாதுகாக்கவும் எதிர்கால நீதி விசாரணைப் பொறிமுறைகளுக்கான சாத்தியமான உத்திகளை உருவாக்குவதற்குமான இலங்கை பொறுப்புக்கூறல் திட்டம் (Sri Lanka Accountability Project) என்கின்ற பொறிமுறை பற்றி எதுவும் குறிப்பிடுவதில்லை.
கடந்த மார்ச் 2021 ஐ.நா. மனித உரிமை கழக கூட்டத் தொடரில் இப் பொறிமுறையின் அத்தியாவசியத் தேவையை பிரித்தானிய தமிழர் பேரவையும் அதன் சகோதர அமைப்புகளும் உறுப்பு நாடுகளுக்கு முன்மொழிந்து அதனை தீர்மானத்தில் கொண்டு வர எடுத்த பாரிய முன்னெடுப்பின் பயனாக சிறிலங்காவின் ஆதரவு நாடுகளின் கடும் எதிர்ப்பை முறியடித்து இப் பொறிமுறை 46/1 தீர்மானத்தில் முக்கிய செயல்பாட்டு விடயமாக கொண்டு வரப்பட்டது.
சிறிலங்கா சார்பு நாடுகள் ஐ.நா. நிதி ஒதுக்கீட்டு நடைமுறைகளைப் பயன்படுத்தி இதற்கான நிதியை வழங்க விடாமல் இழுத்தடித்து கடந்த ஏப்ரல் மாதமளவிலேயே இப் பொறிமுறை செயல்படத் தொடங்கியது.
மார்ச் 2021 தீர்மானம் 46/1 இன் பிரதான உள்ளடக்கம்
ஆதாரங்களை சேகரித்தல், பாதுகாத்தல், பகுப்பாய்வு செய்தல், எதிர்காலத்திற்கான சாத்தியமான உத்திகளை உருவாக்குதல், சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கடுமையான மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிர் பிழைத்தவர்களுக்காக (victims and survivors) வாதிடுவது, திறமையுள்ள அதிகார வரம்பு கொண்ட உறுப்பு நாடுகள் உட்பட, உலகளாவிய நீதி விசாரணைகளை ஆதரித்து செயல்படுவது.
செப்டம்பர் 2022 தீர்மானம் 51/1 இக் குறிப்பிட்ட பொறிமுறிக்காக ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலகத்தின் திறனை விரிவுபடுத்துதல் மற்றும் வலுப்படுத்துதல் (extend and reinforce the capacity) என்ற முடிவை அறிவித்துள்ளது.
செப்டம்பர் 2021, மார்ச் 2022 மற்றும் ஜூன் 2022 மனித உரிமைக் கழக கூட்டத் தொடர்களின் போதும் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலகத்துடனான எமது நேரடிப் பேச்சுவார்த்தைகளின் போதும் மேற்படி 46/1 தீர்மானத்தின் சரியான விளக்கம் குறித்து வலியுறுத்தி வாதாடினோம். இத் தீர்மானம் (i) முன்னைய தீர்மானங்கள் போல LLRC கமிஷன் விசாரணைக்கான 2002 – 2009 காலப் பகுதிக்குள் (Time limit) முடக்கப்படவில்லை. மாறாக இலங்கை சுதந்திரம் பெற்ற 1948இலிருந்தான தமிழ் மக்களுக்கெதிரான குற்றங்களை சாட்சியப்படுத்த வேண்டும், (ii) சர்வதேச சட்டங்களால் வரையறுக்கப்பட்ட தமிழ் மக்களுக்கெதிரான அனைத்து விதமான குற்றங்கள், குறிப்பாக இன அழிப்பு குற்றங்கள் என்பன சாட்சிய திரட்டில் உள்ளடக்கப்பட வேண்டும் என்ற எம் தரப்பு சட்ட வியாக்கியானம் தற்போது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
எனவே நீண்ட கடும் பிரயத்தங்களின் பின் 46/1 தீர்மானத்தில் எம்மால் கொண்டு வரப்பட்ட சாட்சியங்கள் திரட்டும் பொறிமுறையை உலகளாவிப் பரந்து வாழும் எம் தமிழ் மக்கள் இந்த வரைவிலக்கணத்தின் அடிப்படையை பயன்படுத்தி எம் மக்களுக்கெதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட ஆதாரபூர்வமான முக்கியமான சாட்சியங்கள் மற்றும் ஆவணங்களை திரட்டி வழங்க வேண்டும் என்று உரிமையுடன் வேண்டிக் கொள்கின்றோம். பல்வேறு கொடுமைகளை அனுபவித்த எம் இனத்தின் ஆயிரக்கணக்கான உண்மைப் பதிவுகள் இருக்கையிலே, பொய்யான விடயங்கள் முற்றாக தவிர்க்கப்பட வேண்டும்.
தமக்கு நிகழ்த்தப்பட்ட இன அழிப்பு சாட்சியங்களை திரட்ட யூத மக்கள் எவ்வாறு நிறுவனமயப்படுத்தப்பட்ட கட்டமைப்பை ஏற்படுத்தினார்களோ அது போன்ற நிறுவனம் ஒன்றினை தமிழர் தரப்பு ஒருங்கினைத்து வினைத்திறனாக செயல்பட முன்வர வேண்டும்.
முன்னோக்கி செல்லும் வழித் தடம்
எதிர் வரும் ஐ.நா. கூட்டத் தொடர்களில் இடம்பெறவுள்ள ஐ.நா மனித உரிமை கழக ஆணையாளரின் வாய்மூல மற்றும் எழுத்து மூல அறிக்கைகைகளிலே (Oral and Written reports) இப் பொறிமுறையின் உள்ளீடு மிகக் காத்திரமானதாக அமைவதனை செயல் திறமையுள்ள தமிழ் அமைப்புகள் உறுதிப்படுத்த வேண்டுமாயின் உடனடியாக இவ் வேலைத் திட்டங்களில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட முன்வர வேண்டும். பாரதூரமான குற்றங்களை இப் பொறிமுறை சட்டரீதியாக ஆதாரபூர்வமாக உறுதிப்படுத்துவதன் மூலம் சர்வதேச நீதி விசாரனைப் பொறிமுறையை உருவாக்குவதற்கான அடிப்படையை வலுப்படுத்த முடியும்.
முக்கியமான சர்வதேச நாடுகள் தலையிட்டு ஒரு நடுவர் மன்றமாக (Arbitration) செயல்பட்டு பேச்சுவார்த்தை மூலம் தமிழ் மக்களுக்கான முழுமையான அரசியல் தீர்வை உருவாக்கி அதை சிறிலங்காவில் நடைமுறைப்படுத்துவதற்கு உத்தரவாதமளிக்க வேண்டுமென இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச சமூகத்தை கேட்டுக் கொள்கிறோம்.