மேல் மாகாணத்தில் பல பகுதிகளிலும் ஊரடங்கு அமுல்!

ஜனாதிபதிக்கு எதிராக நாளை போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், மேல் மாகாணத்தில் பொலிஸ் பிரிவுகள் பலவற்றில் இன்று இரவு 9 மணி முதல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, கொழும்பு மத்தி ஆகிய பிரதேசங்களிலும் மற்றும் நீர்கொழும்பு, களனி, நுகேகொட, கல்கிசை ஆகிய பொலிஸ் பிரிவுகளிலும் ஊரடங்கு அமுலாகிறது.

மறு அறிவித்தல் வரையில் ஊரடங்கு தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் காலப்பகுதியில் அனைவரும் வீடுகளில் இருக்க வேண்டும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.

Posted in Uncategorized

”நெருக்கடிகள் சில தினங்களில் தீரும்”: ஜனாதிபதி அறிக்கை!

எதிர்வரும் தினங்களில் நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைகள் தீரும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

இதன்படி எரிபொருள், எரிவாயு, மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை விநியோகிப்பதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

நாடு எதிர்நோக்கும் பொருளாதார சவால்களை முறியடித்து, ஏற்றுமதி மற்றும் விவசாயப் பொருளாதாரத்திற்கு முன்னுரிமை அளித்து புதிய முதலீடுகளுடன் வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் நோக்கமாக இருக்கின்றது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், முழு உலகமும் எதிர்கொள்ளும் கொரோனா வைரஸ் பரவல் நிலைமை அனைத்து நாடுகளையும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு இட்டுச் சென்றுள்ளதாகவும், அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் தற்போதுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகளைத் தேடுவதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களாக அரச தலைவர்களுடன் தொலைபேசி மூலமாகவும், பல நாடுகளின் தூதுவர்களுடனும் கலந்துரையாடல்களை மேற்கொண்டதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீண்ட மற்றும் நன்கு திட்டமிடப்பட்ட முயற்சிக்குப் பிறகு, நாடு இப்போது அதன் முடிவுகளைப் பெற்றுள்ளது.

அத்தியாவசிய மருந்துகளின் இருப்பு ஏற்கனவே பெறப்பட்டுள்ளது.

இந்திய கடன் வசதிகளின் கீழ் 65,000 மெற்றிக் தொன் உரம் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், 44,000 மெற்றிக் தொன் உரங்களை ஏற்றிச் செல்லும் முதலாவது கப்பல் நாளை (09) நாட்டை வந்தடைய உள்ளது.

ஜூலை 12 முதல் எரிபொருள், எரிவாயு மற்றும் முன்பதிவு செய்யப்பட்ட அத்தியாவசிய பொருட்கள் தொடர்ந்து பெறப்படும், மேலும் பல்வேறு விவசாய திட்டங்களின் கீழ் நாட்டில் உணவு பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

வெற்றிகரமான தீர்வுகள் கிடைத்துள்ள இவ்வேளையில் எதிர்க்கட்சி அரசியல் குழுக்கள் மக்களை தவறாக வழிநடத்துவது மிகவும் வருத்தமளிப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

இது நாட்டை மீண்டும் பின்னோக்கி செல்ல வைக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சரியான பொருளாதார வேலைத்திட்டத்தின் ஊடாக நாட்டின் எதிர்கால சந்ததியினருக்கு நல்லதொரு நாட்டை கட்டியெழுப்புவதற்கு உறுதுணையாக இருப்பது மக்களின் பொறுப்பும் கடமையும் ஆகும், தற்போதைய நிலைமையை சரியாக புரிந்து கொண்டு அமைதியாகவும் புத்திசாலித்தனமாகவும் செயற்படுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

”எரிபொருள் விலைகளை 200 ரூபா குறைவாக விற்க முடியும்”: கோப் குழுவில் வெளியான தகவல்!

தரவுகளை ஆராயும்போது பெற்றோல் மற்றும் டீசலை ஏறத்தாழ 250 ரூபா விலைக்கு இலங்கைக்குள் விற்பனை செய்ய முடியும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னாயக தெரிவித்தார்.

இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் 2018, 2019 வருடங்களக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் அதன் தற்போதைய செயலாற்றுகை குறித்து ஆராயும் நோக்கில் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு அதன் தலைவர் பேராசிரியர் கௌரவ சரித ஹேரத் தலைமையில் கூடியபோதே அவர் தனது தனிப்பட்ட கருத்தை முன்வைத்தார்.

எரிபொருள் கொள்வனவின் போது அவற்றின் இறக்குமதிக்கான செலவு மற்றும் அரசாங்கம் அறவிடும் வரித் தொகை தொடர்பான புள்ளிவிபரங்களை சரியான முறையில் ஆராயும்போது இது தொடர்பான விபரங்கள் தெரியவருவதாக ரத்நாயக்க மேலும் தெரிவித்தார். இதற்கமைய பெற்றோல் மற்றும் டீசல் ஆகியவற்றை தற்போதைய விலையைவிட 200 ரூபா குறைவாக விற்பனை செய்ய முடியும் எனவும் குறிப்பிட்டார். எனவே, ஏறத்தாழ 250 ரூபாவிற்கு பெற்றோல் மற்றும் டீசலை இந்நாட்டுக்குள் விற்பனை செய்ய முடியும் எனச் சுட்டிக்காட்டிய அவர், கடந்த ஜூலை முதலாம் திகதி இறக்குமதி செய்யப்பட்ட டீசலில் ஒரு லீட்டருக்கு 280 ரூபாவை அரசாங்கம் வரியாக அறவிட்டிருப்பதாகவும் கூறினார்.

இது தனது தனிப்பட்ட கருத்து என்றும், தரவுகள் மற்றும் புள்ளிவிபரங்களை ஆராய்ந்த பின்னர் தான் இந்தக் கருத்தை முன்வைப்பதாகவும் அவர் தெரிவித்தார். இது தொடர்பில் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் அறிந்துள்ளனரா என கோப் குழுவின் உறுப்பினர்கள் கேள்வியெழுப்பினர். எனினும், தாம் இது பற்றி அறிந்திருக்கவில்லையென பணிப்பாளர் சபையின் உறுப்பினர்கள் பதிலளித்தனர். அதேநேரம், நிதி அமைச்சுக்கும் இதுபற்றி உரிய முறையில் தெரிவிக்கப்படவில்லையென்றும் இங்கு தெரியவந்தது.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவராக நியமிக்கப்படுவதற்கு அவருக்குக் காணப்படும் தகுதிகள் குறித்தும் கோப் குழுவின் உறுப்பினர்கள் ரத்னாயக்கவிடம் கேள்வியெழுப்பியிருந்தனர். கல்வித் தகைமையாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் அரசாங்க நிர்வாகம் குறித்த விசேட பட்டமும், கொழும்பு பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டமும் காணப்படுவதாக அவர் பதிலளித்தார். மேலும் ஹாவார்ட் பல்கலைக்கழகத்தில் தான் கற்றிருப்பதாகவும் கூறினார். அதேநேரம், தனது அரசியல் தகுதியாக 2005ஆம் ஆண்டு முதல் அரசாங்கங்கள் அமைப்பதற்கு ராஜபக்ஷக்களுக்கு விசேடமாக ஒத்துழைப்பு வழங்கியதாகவும் ரத்னாயக்க தனது பதிலில் குறிப்பிட்டார்.

எரிபொருள் கொள்வனவு தொடர்பில் ஆணைக்குழுவின் தலைவர் கூறிய இந்தக் கருத்துக்கள் மிகவும் பாரதூரமானவை என்றும், இது நாட்டின் கவனத்தை ஈர்த்திருப்பதாகவும் கோப் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.  எனவே, இது தொடர்பில் மின்சக்தி மற்றும் எரிசக்திவலு அமைச்சின் அதிகாரிகள் மற்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஆகியோரை அழைத்து எதிர்காலத்தில் விசாரணை நடத்துவதற்கு எதிர்பார்ப்பதாக கோப் குழுவின் தலைவர் தெரிவித்தார்.

அதேநேரம், இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் 2021 டிசம்பர் 07ஆம் திகதி முதல் ஒரு வருட காலத்துக்கு எவ்வித ஒப்பந்தங்களும் செய்து கொள்ளாமல் 2005ஆம் ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட பென்ஸ் ரக வாகனத்தை ஜெனரல் பிஸ்னஸ் (தனியார்) நிறுவனம் என்ற நிறுவனத்திடமிருந்து எரிபொருள் அல்லது சாரதி இன்றி மாதாந்த வாடகைக்குப் பெற்றுக் கொள்ளப்பட்டமை குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

இதற்கமைய இந்த வாகனத்துக்காக வருடாந்த வாடகையாக 4,500,000 ரூபாவாக அமைந்திருப்பதுடன், 2022 மே 31ஆம் திகதி குறித்த நிறுவனத்துக்கு 2,187,500 ரூபா செலுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதும் இந்த வாகனத்தைப் பெற்றுக்கொள்வது தொடர்பான ஆவணங்கள் கணக்காய்வுக்காக வழங்கப்படாமை, 15 வருடங்கள் பழமையான வாகனத்தைப் பெற்றுக் கொள்வதற்கு பணிப்புரை வழங்கப்பட்டமை, இதனைப் பெறுவதற்கான விலைமனுக் கோரலில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளமை, இந்த வாகனத்துக்கான வாடகைப் பணம் செலுத்தும்போதான வெளிப்படைத்தன்மை போன்ற விடயங்கள் குறித்தும் கோப் குழுவில் வினவப்பட்டன.

குறிப்பாக, இந்த நிறுவனத்திற்குப் பணம் வழங்குவதற்கான ஒப்புதலில் கையெழுத்திடும் அதிகாரி பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும் கோப் குழு அறிவுறுத்தியது.

இது தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தி அதன் அறிக்கையை குழுவிடம் சமர்ப்பிக்குமாறு கோப் குழுவின் தலைவர் கணக்காய்வாளர் திணைக்களத்தின் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.

மேலும், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் நிறுவன அமைப்பு மற்றும் சம்பளக் கட்டமைப்பு என்பன தேசிய சம்பளம் மற்றும் பணியாளர்கள் ஆணைக்குழுவின் பரிந்துரை, முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும் என்றும், நிதி அமைச்சின் ஊடாக அமைச்சரவைக்குத் திருத்தங்கள் சமர்ப்பிக்கப்பட்டு அவை அனுமதிக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தபோதும், 2021 ஆம் ஆண்டின் இறுதிக்குள் அனுமதி பெறப்படாது சில செயற்பாடுகளுக்கு செலவு செய்யப்பட்டமை குறித்தும் இங்கு விவாதிக்கப்பட்டது.

விசேடமாக,  நிறுவனத்தின் பணியாளர்களுக்கு 11 வகைான கொடுப்பனவுகளின் கீழ் 45,873,483 ரூபா வழங்கப்பட்டிருப்பதுடன், மக்களை விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சிகளுக்காக முழுமையான நடவடிக்கைக்கான தொகையான 86,808,538 ரூபாவில் அதாவது, மொத்தத் தொகையில் 49 வீதம் செலவு செய்யப்பட்டுள்ளமை குறித்தும் கோப் குழு கவனம் செலுத்தியது.

கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சித் தலைவருடன் முக்கிய சந்திப்பு

எதிர்க்கட்சித் தலைவருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதான அங்கத்துவக் கட்சியான தமிழ் ஈழ விடுதலை இயக்கத்திற்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நேற்று மதியம் 12.30 மணியளவில் நடைபெற்றது.

எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் இச்சந்திப்பு நடைபெற்றது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் நாயகம் ரஞ்சித் மத்துமபண்டார மற்றும் கொரடா புத்திக பத்திரன ஆகியோரும் கூட்டமைப்பின் தரப்பில் தமிழ் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், செயலாளர் நாயகம் கோவிந்தன் கருணாகரம் மற்றும் தேசிய அமைப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான குருசுவாமி சுரேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு மேல் நடைபெற்ற சந்திப்பில் நாட்டில் எழுந்திருக்கும் தற்போதைய கடுமையான பொருளாதார சிக்கல், அரசியல் சூழ்நிலை, அரசியல் மாற்றத்திற்கான முயற்சிகள், தமிழ்மக்கள் எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகள், அரசியல் யாப்பு விடயங்கள், நாட்டின் நிரந்தர மீட்சிக்கு அரசியல் தீர்வின் முக்கியத்துவம், தொல்லியல் நடவடிக்கைகளினால் ஏற்படும் இன முரண்பாடு என முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

Posted in Uncategorized

ஜனாதிபதி ஒரு முக்கிய முடிவை எடுக்க வேண்டும் – ஜனா

2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் ஒரு லட்சத்து 40ஆயிரத்துக்கு மேற்பட்ட உயிர்களைப் பலியெடுத்தவர் இன்று நாட்டின் 22 மில்லியன் மக்களையும் ஒரே சவக்குளிக்குள் கொன்று குவிக்கும் ஒரு நிலைக்குக் கொண்டுவந்திக்கின்றார். இந்த நாட்டின் நிலையைக் கருத்தில் கொண்டு அவர் ஒரு முக்கியமான முடிவை எடுக்கவேண்டும் என்று தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் தற்போதைய நாட்டின் சூழ்நிலை தொடர்பான ஒத்திவைப்புப் பிரேரணையில் இன்றைய தினம் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம்,

தற்போது நாடு உள்ள சூழ்நிலை எல்லோருக்கும் தெரியும். இலங்கை என்பதற்குப் பதிலாக எதுவுமே இல்லாத இல்லங்கை என்று பெயர் சூட்டக்கூடிய நிலையில் நாடு இருக்கிறது. பெற்றோல் இல்லை. டீசல் இல்லை. எரிவாயு இல்லை. மின்சாரம் இல்லை. அத்தியாவசியப் பொருட்கள் எதுவுமே இல்லை. எரிபொருள் இல்லாத நிலையில் இந்த நாட்டில் எந்த வித பிரச்சினையும் இல்லாத போதும் ஊரடங்குச் சட்டம் போன்று வீதிகள் எல்லாம் வெறிச்சோடிக்கிடக்கின்றது. அதே போல் 40 வருடங்களுக்கு முன்பு பைசிக்கிளைக் கண்டவர்கள் பழைய பைசிக்கின்களைத் திருத்தி வீதிகளில் செல்கின்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.

இதே வேளை எமது மாவட்டம் பற்றிச் சில விடயங்களைக் கூறலாம் என்று நினைக்கிறேன். உண்மையில் இலங்கையின் அரசி உற்பத்தியில் முக்கியமாக வலுச்சேர்க்கும் மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் இருக்கின்றது. பிரதான தொழிலாக விவசாயமும் மீன்பிடியும் இருக்கிறது. எரிபொருள் இல்லாத காரணத்தினால் மீன்பிடியும் இல்லாமல் இருக்கின்றது. அத்துடன் மீன்பிடிக்குச் செல்பவர்கள் நாளாந்த வாழ்க்கையைக் கூடக் கொண்டு செல்ல முடியாமலிருக்கின்றது.

இலங்கையின் அரிசி உற்பத்திக்கு வலுச்சேர்க்கும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டு லட்சம் ஏக்கரில் விவசாய செய்கின்றார்கள். வருடத்துக்கு அதில் 80 ஆயிரம் ஏக்கரில் இரு போக வேளாண்மை செய்கின்றார்கள். இப்போது சிறுபோக அறுவடை 80 ஆயிரம் ஏக்கரில் நடந்து கொண்டிருக்கிறது. வேளாண்மை வெட்டும் இயந்திரத்துக்காக ஒரு ஏக்கர் அறுவடைக்காக 15 லீற்றர் டீசல் தேவைப்படுகிறது. அந்த வேளையில் சில ஐ.ஓ.சி. எரிபொருள் நிலையங்கள் ஊடாக டீசல் கொடுக்கப்பட்டாலும், அந்த ஐ.ஓ.சி எரிபொருள் நிலைய முதலாளிமார் விவசாயிகளுக்கு முன்னுரிமை கொடுப்பதனால் நான் அவர்களைப் பாராட்ட வேண்டும்.

இந்தப் போகத்தில் 40ஆயிரத்துக்கும் அதிக பணம் கொடுத்து யூரியா பெற்றிருக்கிறார்கள். 20ஆயிரத்துக்கு மேல் கொடுத்து களைநாசினிகளைப் பெற்றிருக்கிறார்கள். ஒரு ஏக்கருக் அவர்களுக்குரிய செலவுதானம் இரண்டு லட்சத்தைத் தாண்டியிருக்கிறது. இந்த நிலையில் நெல்லின் விலையை அரசாங்கம் நிர்ணயிக்கவேண்டும். நெல் சந்தைப்படுத்தும் சபை ஊடாக ஒரு மூடை நெல்லின் விலையை 10ஆயிரத்துக்கு மேல் நிர்ணயித்தால் தான் விவசாயிகள் நட்டத்திலிருந்து மீண்டுகொள்வார்கள். விவசாயிகளிடமிருந்து நெல்லை 10ஆயிரம் ரூபாவுக்கு மேல் பெற்று அரிசை மானியமாகக் கொடுக்கலாம்.

தற்போது பொலநறுவை, அனுராதபுர மாவட்டங்களில் விவசாய நடவடிக்கைகளைத் தொடங்கியிருக்கிறார்கள். தற்போது விவசாய அமைச்சர் அவர்கள் 10ஆயிரம் ரூபாவுக்கு யூரியா கொடுக்கவிருப்பதாகக் கூறியிருக்கிறார். 10ஆயிரம் ரூபாவுக்கு யூரியா பெறுபவர்கள் அதிகமான லாபத்தைப் பெறுவார்கள். அனுராதபுரம் பொலநறுவை மாவட்டங்களின் அறுவடை காலத்தை வைத்தே நீங்கள் நெல்லின் விலையைத் தீர்மானிக்கின்றனர். அவ்வாறில்லாமல் தற்போதைய அறுவடைக்காலத்தில் நெல்லின் விலையைத் தீர்மானித்தால் எங்களது விவசாயிகள் பலனடைவார்கள்.

நாட்டின் இந்த நிலைமையைக் கொண்டுவந்தவர் இன்றைய ஜனாதிபதி கோட்டபாய என்பது அனைவருக்கும் தெரியும். அவர் ஜனாதிபதியாக வந்த காலத்தில் எடுத்த மடத்தனமான முடிவுகளினால் நாடு இந்த நிலைக்கு சென்றிருக்கிறது. 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் ஒரு லட்சத்து 40ஆயிரத்துக்கு மேற்பட்ட உயிர்களைப் பலியெடுத்தவர் இன்று நாட்டின் 22 மில்லியன் மக்களையும் ஒரே சவக்குளிக்குள் கொன்று குவிக்கும் ஒரு நிலைக்குக் கொண்டுவந்திக்கின்றார். அந்த நிலைமையில் அவரை ஒரு லட்சத்து 40ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆவிகள் துரத்துகின்றன. நேற்று இந்தப் பாராளுமன்றத்துக்கு வந்திருந்தார். இந்தப் பாராளுமன்றத்தில் துரத்தப்பட்டிருக்கிறார். அவருக்கு வாக்களித்த இந்த நாட்டின் 69 லட்சம் மக்களுமே அவரைத்துரத்துகிறார்கள். இந்த நாட்டின் நிலையைக் கருத்தில் கொண்டு அவர் ஒரு முக்கியமான முடிவை எடுக்கவேண்டும்.

Posted in Uncategorized

தெற்கின் சமூகம் உணர்ந்தால் மட்டுமே வடக்கின் சமூகத்தோடு கைகோர்க்க முடியும்-அருட்தந்தை மா.சத்திவேல்

தெற்கின் சமூகம் உணர்ந்தால் மட்டுமே வடக்கின் சமூகத்தோடு கைகோர்க்க முடியும். புதிய அரசியல் கலாச்சாரத்தை கட்டி எழுப்ப முடியும். எதிர்காலம் எதிர் கால சந்ததியினர் சுதந்திரத்தை அனுபவிக்க முடியும் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவரால் இன்று (05) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

குருநாகல் ஐஓசி பெட்றோல் நிலையத்தில் இராணுவ அதிகாரி பொதுமகன் மீது நடத்திய மிலேச்சதனமான தாக்குதல் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று மட்டுமல்ல நீதியின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படவும் வேண்டும். இராணுவ அதிகாரியின் செயற்பாட்டை அமைதியுடன் அனுமதித்து நின்ற ஏனைய இராணுவத்தினரும் காவல்துறையினரும் தண்டனைக்குரியவர்களே. இதே இராணுவம் வடக்கு கிழக்கில் நிகழ்த்திய கொடுமைகளுக்கு நீதி கேட்கும் குரலும் தெற்கின் சமூகத்தின் காதுகளுக்கும் எட்டவேண்டும். உணர வேண்டும். அது இதுவரை உணரப்படவில்லை.

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மக்கள் குடும்பமாக வீதிக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர். அரசு நாட்டின் வளங்களையும், பொருளாதாரத்தையும் சரியான வழியில் முகாமைத்துவம் செய்யாமையே இதற்கு காரணம். தன்னுடைய பிழைகளை திருத்திக் கொள்வதற்கு பதிலாக இராணுவத்தை வீதியில் இறக்கியிருப்பதும் அவர்கள் தமது படைபலத்தை பொதுமக்கள் மீது காட்டுவதும் அதிகரித்துள்ளன. இது இன்னும் ஒரு இரத்தம் சிந்துதலுக்கு வழி வகுத்து விடுமோ எனும் பயம் மக்கள் மத்தியிலே எழுந்துள்ளது.

வடக்கு கிழக்கில் இராணுவத்தினர் பொதுமக்களுக்கு எதிராக நிகழ்த்திய வன்முறை சம்பவங்களே 30 வருட யுத்தத்திற்கு காரணம். அது மட்டுமல்ல அதே இராணுவம் யுத்த குற்றங்களையும் இழைத்துள்ளது. இன அழிப்பையும் அரச ஆதரவோடு நிகழ்த்தியுள்ளது. இதுவே தமிழர்களின் குற்றச் சாட்டு.

வடக்கு கிழக்கு எங்கும் பலவந்த கைதுகளும், காணாமல் ஆக்குதலும் மட்டுமல்ல சமூக கொலைகளும் நிகழ்த்தப்பட்டுள்ளன. இராணுவத்தினர் அதனை நிகழ்த்தியுள்ளனர் என்பது நிரூபிக்கப்பட்டும் உள்ளது உதாரணமாக செம்மணி, மிருசுவல் படுகொலைகளை நாம் குறிப்பிடலாம். இக்குறைகளுக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படவும் இல்லை நீதிமன்றம் மரண தண்டனை கொடுத்த போது கூட அந்த மரணதண்டனையில் இருந்து விடுவிக்கப்பட்டிருக்கின்றார் அத்தோடு குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட இராணுவத்தினர் பதவி உயர்வு கொடுக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டிருக்கும் இதையெல்லாம் தெற்கின் சமூகம் பார்த்து மகிழ்ந்தது. வீரப்படையினர் என கொண்டாடினர்.

இறுதி யுத்தத்தின் பின்னர் இராணுவத்திடம் தனது உறவுகளை கையளித்த அன்னையர் கடந்த 13 வருட காலமாக எங்கள் பிள்ளைகளுக்கு, எங்கள் உறவுகளுக்கு என்ன நடந்தது என கேட்கின்றனர். அது தெற்கு சமூகத்தின் காதுகளுக்கு எட்டவில்லை. நீதி கேட்போர் தேசத் துரோகிகளாகவும் பயங்கர வாதிகளாகவும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.

அது மட்டுமல்ல 1971, 1988/89 காலப்பகுதியில் இராணுவத்தின் முகம் என்னவென்று தெற்கின் சமூகத்திற்கு தெரிந்தும் இராணுவம் வடக்கில் நடத்திய வன் கொடுமைகளை அனுமதித்த பௌத்தப்பிக்குகள் ஆசீர்வதித்தனர். வடக்கு கிழக்கில் நடந்த உண்மையின் நேரடி சாட்சிகள் முன்வைக்கப்பட்ட போதும் அவற்றை ஏற்றுக் கொள்வதற்கு தெற்கின் சமூகம் ஆயத்தமாக இருக்கவில்லை.

இப்போது அதே இராணுவம் தெற்கில் ஆயுதங்களை தூக்கி நிற்கின்ற போது, நெஞ்சில் உதைக்கும் போது வலிக்கிறது. இதனைத் தான் அரசியல் கைதியான குட்டிமணி 1982ல் வெளிப்படையாக அறிவித்தார். வடக்கிலே இராணுவம் எதனை செய்கின்றதோ அது தெற்கிலும் நடக்கும் எனும் பொருள்பட கருத்துரைத்தார். அது நிதர்சனமாக நடந்து கொண்டிருக்கின்றது.

கடந்த 74 ஆண்டுகளாக இந்நாட்டை ஆட்சி புரிபவர்கள் மக்களுக்கு எதிரானவர்கள் என்பதை தமிழர்கள் பல தசாப்தங்களாக கூறி வந்தார்கள்.பேரினவாத போதை ஊட்டப்பட்டதால் தெற்கு அதனை ஏற்கவில்லை. இப்போது அதை அரசு பசியையும், பட்டினியையும் நாட்டுக்கு தந்துள்ளது. ஆட்சியாளர்கள் தங்கள் பதவிகளில் மட்டும் நோக்காக கொண்டு செயல்படுகின்றார்.

தமிழர்களுக்கு எதிராக இராணுவம் புரிந்த பாரிய யுத்த குற்றங்களுக்கான நீதி தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டும். அரசியல் நீதியும் தமிழ் மக்களுக்கு உரியது. இதனையும் தெற்கின் சமூகம் உணர்ந்தால் மட்டுமே வடக்கின் சமூகத்தோடு கைகோர்க்க முடியும். புதிய அரசியல் கலாச்சாரத்தை கட்டி எழுப்ப முடியும். எதிர்காலம் எதிர் கால சந்ததியினர் சுதந்திரத்தை அனுபவிக்க முடியும்.

நாடு முழுவதும் தற்போது மக்கள் முகம் கொடுக்கின்ற பொருளாதார நெருக்கடிக்கு, நாட்டில் நீண்ட காலம் நிலவிய யுத்தமும் அதற்காக பல்வேறு நாடுகளால் கொடுக்கப்பட்ட அல்லது வாங்கி குவிக்கப்பட்ட இராணுவ தளபாடங்களும் அவற்றின் பராமரிப்பும் நாட்டின் அபிவிருத்திக்கு எவ்வகையிலும் தொடர்பற்ற இராணுவத்தை கொண்டிருகின்றமையுமே அடிப்படை காரணம். இதனை தெற்கு உணர வேண்டும்.உலகின் அதி கூடிய இராணுவத்தை கொண்டிருக்கின்ற நாடுகளின் பட்டியலில் இலங்கை 14 ம் இடத்தை தமதாக்கியுள்ளது. இந்த சுமையே மக்களை வீதிக்கு தள்ளியுள்ளது. அதற்கு சொந்தக்காரர்களே இன்று வரை நாட்டை ஆள்கின்றனர். முற்படையினர் சர்வாதிகாரத்தினதும் முதலாளித்துவத்தினதும் காவலர்களே என்பதை தெற்கு உணர்கின்ற காலமிது” என்றுள்ளது.

Posted in Uncategorized

”ஒன்றிணைந்து நாட்டை மீட்போம்”: சஜித் அரசியல் கட்சிகளுடன் சந்திப்பு!

நாடு தற்போது பெரும் பாதாளத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் இதிலிருந்து மீள்வதற்கு அனைவரும் ஒன்றிணைந்து சமூக,பொருளாதார மற்றும் அரசியல் மறுசீரமைப்புக்குச் செல்ல வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

சர்வாதிகாரம் இன்றி அனைவரது கருத்துக்களுக்கும் செவிசாய்க்கும் சமூக சீர்திருத்தத்தின் மூலம் நாட்டை கட்டியெழுப்ப முடியும் எனவும், அதற்காக முற்போக்குக் கட்சிகளின் முன்மொழிவுகளையும் யோசனைகளையும் செவிமடுப்பதாகக் கூறிய எதிர்க்கட்சித் தலைவர், பன்முகப்படுத்தப்பட்ட யோசனைகளை ஒன்றிணைக்கக்கூடிய பொதுவான தேசிய நிகழ்ச்சி நிரலின் மூலம் இறுதியில் நாட்டை மீளக் கட்டியெழுப்புவதே எதிர்க்கட்சியின் நோக்கமாகும் எனவும் அந்த நிகழ்ச்சி நிரலின் ஊடாக நாட்டு மக்கள் இழந்த மூச்சை மீண்டும் வழங்க முடியும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

பாரிய வீழ்ச்சியடைந்துள்ள நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான “தேசிய மறுசீரமைப்பு மற்றும் அடுத்தக்கட்ட பயணம்” என்ற வேலைத்திட்டத்தின் தீர்மானமிக்க கூட்டம் நேற்று (04) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம் பெற்றது.

இந்நிகழ்வுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, தவிசாளர் சரத் பொன்சேகா, வைத்தியர் ராஜித சேனாரத்ன, மனோ கணேசன், ரவூப் ஹக்கீம், சி.வி.விக்னேஸ்வரன், பி.திகாம்பரம் உட்பட அரசியல் தலைவர்கள், சிரேஷ்ட ஊடகவியலாளர் விக்டர் ஐவன், ஜனரஞ்சன, காமினி வியங்கொட, ரொஹான் சமரஜீவ உட்பட சிவில் செயற்பாட்டாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Posted in Uncategorized

இராஜினாமா செய்ய தயார் : ரணில்

அனுரகுமார திஸாநாயக்கவிடம் நல்ல திட்டங்கள் இருக்குமாக இருந்தால் பிரதமர் பதவியை அவரிடம் ஒப்படைக்கத் தயார் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று விசேட உரையாற்றும் போதே ரணில் விக்கிரமசிங்க இதனை கூறியுள்ளார்.
அவரின் உரை வருமாறு,
இன்று, இந்தச் சபை மற்றும் இந்த நாட்டின் குடிமக்கள் முன்னிலையில், வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க நாங்கள் பின்பற்றும் பாதை வரைபடத்தை கோடிட்டுக் காட்ட நான் தயாராக இருக்கிறேன்.
 சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளை எங்களால் வெற்றிகரமாக தொடர முடிந்தது.
 இதற்கு முன்னரும் பல தடவைகள் சர்வதேச நாணய நிதியத்துடன் எமது நாடு பேச்சுக்களை நடத்தியிருக்கின்றது.  ஆனால் இம்முறை நிலைமை முந்தைய எல்லா நிகழ்வுகளிலிருந்தும் வேறுபட்டது.  கடந்த காலங்களில் நாம் அபிவிருத்தியடைந்து வரும் நாடு என்ற வகையில் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளோம்.  அத்தகைய சூழ்நிலையில், இரு தரப்பினரும் EFF அல்லது நீட்டிக்கப்பட்ட கடன் வசதியில் உடன்பாட்டை எட்ட வேண்டும்.  இது ஒரு நேர்கோட்டில் நகர்வதைப் போன்றது.
 ஆனால் இப்போது நிலைமை வேறு.  நாங்கள் இப்போது திவாலான நாடாக பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறோம்.  எனவே, முந்தைய பேச்சுவார்த்தைகளை விட கடினமான மற்றும் சிக்கலான சூழ்நிலையை நாங்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.  ஊழியர்கள் அளவிலான உடன்பாடு எட்டப்பட்டவுடன், இது IMF இயக்குநர்கள் குழுவின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும்.  ஆனால், நமது நாடு திவாலான நிலையில் இருப்பதால், நமது கடன் நிலைத்தன்மை குறித்த திட்டத்தை தனித்தனியாக அவர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும்.  அந்தத் திட்டத்தில் அவர்கள் திருப்தி அடைந்தால்தான் ஊழியர்கள் மட்டத்தில் உடன்பாடு எட்ட முடியும்.  இது ஒரு நேரடியான செயல்முறை அல்ல.
 ஆனால் இந்த சிரமங்களுக்கு மத்தியிலும் விவாதத்தை திறம்பட முடிக்க முடிந்தது.  IMF இன் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, “ஆதரவான பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் சீர்திருத்தங்கள் குறித்து நேர்மறையான மற்றும் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடத்தப்பட்டன. குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எட்டப்பட்டது.”
 இப்போது அடுத்த கட்டமாக கடன் மறுசீரமைப்பு மற்றும் நிலைத்தன்மை குறித்த திட்டத்தை அவர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும், இது நிதி மற்றும் சட்ட வல்லுநர்களான லாசார்ட் மற்றும் கிளிஃபோர்ட் சான்ஸ் ஆகியோரால் தயாரிக்கப்படுகிறது.  ஆகஸ்ட் மாதத்திற்குள் இந்த அறிக்கையை சர்வதேச நாணய நிதியத்திடம் சமர்பிப்போம் என்று நம்புகிறோம்.
 இது முடிந்ததும் நாங்கள் ஒரு உடன்பாட்டை எட்ட முடியும்.  இருப்பினும், இந்த ஒப்பந்தத்திற்குப் பிறகும், அது IMF இயக்குநர்கள் குழுவின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட வேண்டும்.  இந்தத் திட்டத்திற்கான ஒப்புதல் வழங்கப்பட்ட பிறகு, 4 ஆண்டுகளுக்கு ஒரு விரிவான கடன் உதவித் திட்டம் தயாரிக்கப்படும்.  நாங்கள் இப்போது அந்த பாதையில் இருக்கிறோம்.
 ஊழியர்கள் அளவிலான ஒப்பந்தத்தைப் பெற்ற பிறகு, இந்தியா, சீனா மற்றும் ஜப்பான் போன்ற கடன் உதவி வழங்கும் நட்பு நாடுகளை ஒன்றிணைத்து நன்கொடையாளர்-உதவி மாநாட்டை ஏற்பாடு செய்வோம்.  பொதுவான உடன்படிக்கையின் மூலம் கடன் உதவிகளைப் பெற்றுக்கொள்ளும் முறையை உருவாக்குவோம் என நம்புகிறோம்.
இன்று நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் முதன்மையான பிரச்சினை எரிபொருள் நெருக்கடி.  அதே சமயம், உணவு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.  எரிபொருள் மற்றும் உணவு விஷயத்தில், நம் நாடு ஒரு கட்டத்தில் இந்த நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.  எரிபொருள் பற்றாக்குறையாக இருந்தது.  உணவுப் பொருட்களின் விலை உயர்ந்தது.
 சமீபகால உலக நெருக்கடிகளால் இந்நிலை மேலும் தீவிரமடைந்து நாங்கள் அடுப்பில் விழுந்தோம்.  உக்ரைன்-ரஷ்யா போர் காரணமாக, எங்கள் பிரச்சனை இன்னும் மோசமாகிவிட்டது.  இப்போது நடந்திருப்பது நமது நெருக்கடியின் மேல் ஒரு சர்வதேச நெருக்கடியைச் சேர்த்ததுதான்.  இந்த நிலை நமக்கு மட்டும் அல்ல.  இது மற்ற நாடுகளையும் பாதிக்கிறது.  இந்த உலகளாவிய நெருக்கடியால் இந்தியாவும் இந்தோனேசியாவும் பாதிக்கப்பட்டுள்ளன.  எனவே, அவர்கள் எங்களுக்கு வழங்கிய கடன் உதவியை இந்தியா மட்டுப்படுத்த வேண்டியுள்ளது.
 இந்த நிலை உலகம் முழுவதையும் சமமாக பாதிக்கிறது.  இதனால், வளர்ந்த நாடுகளுக்கும், வளர்ச்சியடையாத நாடுகளுக்கும் இடையிலான இடைவெளி அதிகரிக்கும் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  ஒரு நாட்டிற்குள்ளேயே மேல்தட்டு வர்க்கத்தினருக்கும் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கும் இடையிலான இடைவெளி அதிகரிக்கலாம் என்றும் எச்சரிக்கிறார்.  உலகில் எந்த நாடும் இந்த உலக நெருக்கடியில் இருந்து தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள முடியாது.  இதை நாம் அனைவரும் எதிர்கொள்ள வேண்டும்.
 எங்களை எதிர்கொள்ளும் அனைத்து உள்நாட்டு மற்றும் உலகளாவிய சவால்களையும் கருத்தில் கொண்டு இந்த சாலை வரைபடத்தை நாங்கள் தயாரித்துள்ளோம்.  நம் வழிகளை மாற்ற மறுக்கலாம்.  ஆனால் நிலைமை மாறவில்லை என்றால், முழு நாடும் சிதைந்துவிடும்.
 எனவே, இந்தப் பாதையில் முன்னேற நாம் பாடுபட வேண்டும்.  இது எளிதான பயணம் அல்ல.  அதை நான் அவ்வப்போது உங்களுக்கு நினைவூட்டியிருக்கிறேன்.  இது கடினமான மற்றும் கசப்பான பயணமாக இருக்கும்.  ஆனால் இந்தப் பயணத்தின் முடிவில் நமக்கு நிம்மதி கிடைக்கும்.  முன்னேற்றம் அடைய முடியும்.
 நமது பொருளாதாரம் தற்போது சுருங்கி வருகிறது.  நாங்கள் அதை மாற்ற முயற்சிக்கிறோம்.  மத்திய வங்கி புள்ளிவிவரங்களின்படி, நமது தற்போதைய பொருளாதார வளர்ச்சி விகிதம் எதிர்மறை நான்கு மற்றும் எதிர்மறை ஐந்து இடையே உள்ளது.  IMF புள்ளிவிவரங்களின்படி, எதிர்மறை ஆறு மற்றும் எதிர்மறை ஏழு இடையே உள்ளது.  இது ஒரு தீவிரமான நிலை.  இந்தச் சாலை வரைபடத்தில் உறுதியான பயணத்தை மேற்கொண்டால், 2023ஆம் ஆண்டு இறுதிக்குள் எதிர்மறையான பொருளாதார வளர்ச்சி விகிதத்தை எட்ட முடியும்.
 2025க்குள், முதன்மை பட்ஜெட்டில் உபரியை உருவாக்குவதே எங்கள் நோக்கம்.  பொருளாதார வளர்ச்சி விகிதத்தை நிலையான நிலைக்கு உயர்த்துவதே எங்கள் முயற்சி.  2026 ஆம் ஆண்டளவில் நிலையான பொருளாதார அடித்தளத்தை ஏற்படுத்துவதே எமது எதிர்பார்ப்பு.
 இதுவரை நாங்கள் செலுத்த வேண்டிய கடனைப் பற்றி உங்களுக்கு ஒரு யோசனை சொல்ல விரும்புகிறேன்.  இந்த ஆண்டு ஜூன் முதல் டிசம்பர் வரை $3.4 பில்லியன்.  2023ல் $5.8 பில்லியன். 2024ல் $4.9 பில்லியன். 2025ல் $6.2 பில்லியன். 2026ல் $4.0 பில்லியன். 2027ல் $4.3 பில்லியன்.
 2021 ஆம் ஆண்டின் இறுதியில் அரசாங்கத்தின் மொத்தக் கடன் சுமை 17.5 டிரில்லியனாக இருந்தது, மார்ச் 2022 இல் அது 21.6 டிரில்லியனாக அதிகரித்துள்ளது.
 இதுதான் உண்மை நிலை.  மேலும், கடந்த இரண்டு அல்லது மூன்று வருடங்களில் மோசமாகிவிட்ட பல பிரச்சனைகளின் விளைவுகளை நாம் சந்தித்து வருகிறோம்.  இவை இரண்டு நாட்களில் தீரும் பிரச்சனைகள் அல்ல.  பல ஆண்டுகளாக நம் நாட்டில் பின்பற்றப்பட்டு வரும் சில பாரம்பரிய சிந்தனைகளின் விளைவுகளால் நாம் அவதிப்பட்டு வருகிறோம்.  எனவே, நான் முன்னர் குறிப்பிட்டது போன்று 2023ஆம் ஆண்டிலும் நாம் சிரமங்களை எதிர்நோக்க வேண்டியிருக்கும்.  இது தான் உண்மை.  இதுதான் யதார்த்தம்.  மக்களுக்கு பொய்யான பிம்பத்தைக் காட்டி இந்த யதார்த்தத்தை மறைக்க சிலர் முயற்சிக்கலாம்.  ஆனால் இந்த உண்மை காலப்போக்கில் உறுதிப்படுத்தப்படும்.
 பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதே எங்கள் திட்டம்.  இந்த ஆண்டு இறுதிக்குள் பணவீக்கம் 60% ஆக உயரும்.  உலகில் பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியே இதற்கு முக்கிய காரணமாகும்.
 தற்போதைய பணவீக்கத்தால், ரூபாயின் மதிப்பு சரிவினால், ஊழியர் வருங்கால வைப்பு நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தில் உள்ள பணத்தின் மதிப்பு 50% குறைந்துள்ளதுடன், ஓய்வூதியத்தின் உண்மையான மதிப்பும் 50% குறைந்துள்ளது.  இந்த நிலை நமது மூத்த குடிமக்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதை சிந்தித்துப் பாருங்கள்.  இவர்கள் அனைவரிடத்திலும் ஏழ்மை பரவி வருகிறது.  அவர்கள் பெறும் பணத்தின் மதிப்பு 50% குறைந்துள்ளது.  அவர்களின் வாங்கும் திறன் சுமார் 50% குறைந்துள்ளது.  நேர்மறையான கருத்துக்களை முன்வைப்பது எளிது.  ஆனால் இந்த பிரச்சனைகளுக்கு விடை காண்பது கடினம்.
 இதற்கு என்ன தீர்வு?  கூடிய விரைவில் ரூபாயை நிலைப்படுத்துதல், வீழ்ச்சியடைய விடாமல் ரூபாயை வலுப்படுத்துதல்.  அந்த நோக்கத்திற்காக, எதிர்காலத்தில் பணம் அச்சிடுவதை மட்டுப்படுத்தும் திட்டத்தை செயல்படுத்தியுள்ளோம்.
2023ல், பல சந்தர்ப்பங்களில் கட்டுப்பாடுகளுடன் பணத்தை அச்சிட வேண்டியிருக்கும்.  ஆனால், 2024-ம் ஆண்டு இறுதிக்குள், பணம் அச்சிடுவதை முற்றிலுமாக நிறுத்த வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.
 2025ஆம் ஆண்டுக்குள் பணவீக்க விகிதத்தை 4 முதல் 6 சதவீதம் வரை குறைக்க இலக்கு வைத்துள்ளோம்.
 வங்கி மற்றும் நிதி அமைப்பைப் பாதுகாப்பதே எங்களுக்கு மற்றொரு முதன்மையான முன்னுரிமை.  பொருளாதார நெருக்கடியின் போது இந்த அமைப்புகளின் மீதான அழுத்தத்தை இந்த சபைக்கு புதிதாக விளக்க வேண்டிய அவசியமில்லை.  ஆனால் இந்த அழுத்தம் காரணமாக, மோசமான கொள்கைகளால் வங்கி அமைப்புக்கு அழுத்தம் கொடுப்பதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.  வங்கி மற்றும் நிதி அமைப்பை வலுப்படுத்துவதற்கு அரசு முன்னுரிமை அளித்துள்ளது.
 இதற்கிடையில், நாங்கள் அரச வங்கிகளுக்கு சிறப்பு கவனம் செலுத்துகிறோம்.  இரு தரப்பிலும் அவர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.  ஒருபுறம் பொருளாதார நெருக்கடி, மறுபுறம் அரசு நிறுவனங்களுக்கு அவர்கள் கொடுத்த பெரும் தொகை கடன்.
 மார்ச் 31, 2021 வரை, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ரூ.  541 பில்லியன் மே 31, 2022 நிலவரப்படி, மின்சார வாரியம் ரூ.  418 பில்லியன்.  பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ரூ.  1.46 டிரில்லியன்.
 பொதுத்துறை நிறுவனங்கள் தொடர்ந்து நஷ்டத்தை சந்திக்கும் போது, ​​ஒட்டுமொத்த குடிமக்களும் பாதிக்கப்படுகின்றனர்.  வாழ்நாளில் இதுவரை விமானத்தில் பயணிக்காதவர்கள் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் இழப்பால் தவித்து வருகின்றனர்.  வாழ்நாள் முழுவதும் எரிபொருளுக்கு பணம் கொடுத்த மக்கள் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் இழப்பினால் தவித்து வருகின்றனர்.  பல மணிநேரம், நாட்கள், நாட்கள் வரிசையில் காத்திருந்து எரிபொருளைப் பெற்றுக் கொண்டு, நிறுவனத்தின் நஷ்டத்தை ஈடுகட்ட எண்ணெய் நிறுவனத்திடம் இழப்பீடு செலுத்துகின்றனர்.  வாழ்நாள் முழுவதும் பணம் கொடுத்து மின்சாரம் பெறும் மக்கள், தினமும் பல மணி நேரம் இருளில் அமர்ந்து மின் வாரியத்தை இழந்து தவிக்கின்றனர்.
 மக்கள் படும் துன்பங்கள், துன்புறுத்தல்கள், தொல்லைகள் மற்றும் நிறுவனங்களின் இழப்புகளுக்கு வழங்கப்படும் இழப்பீடுகளை மறைப்பதற்கு நீண்ட காலமாக சாக்குப்போக்கு பயன்படுத்தப்படுகிறது.  மக்களின் வளங்கள், மக்களின் சொத்துக்கள் என அந்தந்த நிறுவனங்களின் தோல்வியும் இந்த முகமூடியால் மறைக்கப்படுகிறது.  இவை உண்மையான மக்களின் சொத்துக்களாகவும், மக்களின் வளங்களாகவும் இருந்தால், மக்களுக்கு நிவாரணம், வசதி, வசதி, லாபம் ஆகியவற்றை வழங்க வேண்டும்.  ஆனால் இந்த நிறுவனங்களால் மக்கள் துன்பங்கள், தொல்லைகள் மற்றும் இழப்புகளை மரபுரிமையாக பெற்றுள்ளனர்.
… பிரமரின் உரை (2)
எனவே நாட்டுக்கும் மக்களுக்கும் சுமையாக மாறியுள்ள இவ்வாறான நிறுவனங்கள் தொடர்பில் நாம் புதிதாக சிந்திக்க வேண்டும்.  இப்படி முப்பது நாற்பது வருடங்களாக மக்கள் மீது சுமையை ஏற்றுவது நியாயமா?  தொடர்ந்து மக்கள் மீது சுமையை ஏற்றி இந்த நிறுவனங்களை நடத்த வேண்டுமா?  இந்த நிறுவனங்கள் வழங்கும் சேவைகளை ஏன் மக்களுக்குச் சுமையின்றி வழங்க முடியாது?  இந்த சேவைகளை வழங்க வேறு வழிகள் இல்லையா?  இந்த அனைத்து உண்மைகளையும் கருத்தில் கொண்டு, இந்த நிறுவனங்களை மறுசீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகிறோம்.  அவை நாட்டுக்கு சுமை ஏற்படாத வகையில் பராமரிக்கப்படுவது உறுதி செய்யப்படும்.
 தற்போதைய சவால்களை முறியடிப்பதற்கான நமது முன்னோக்கிப் பயணத்தில் இன்னும் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும்.
 ஒன்று, உணவுப் பற்றாக்குறையின்றி கிடைப்பதற்கும், உணவுப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுக்குள் வைத்திருப்பதற்கும் பின்னணியைத் தயார் செய்வது.
 மறுபுறம், உணவு கிடைப்பதை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கிறது.  அடுத்த பருவத்தின் வெற்றிகரமான அறுவடைக்கு தேவையான பின்னணியை நாங்கள் இப்போது தயார் செய்துள்ளோம்.  ரசாயன உரங்கள் தட்டுப்பாடு இல்லாமல் வழங்க அனைத்து நடவடிக்கைகளும் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளன.  விதைகள் மற்றும் நடவுப் பொருட்களுக்கான ஒதுக்கீடுகள் இடைக்கால பட்ஜெட் மூலம் ஒதுக்கப்படுகின்றன.
 மேலும், உலக உணவுத் திட்டம் மற்றும் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து உணவு கிடைப்பதை அதிகரிக்கும் திட்டத்தைத் தொடங்கியுள்ளோம்.  தற்போது, ​​அவர்களது பிரதிநிதிகள் குழு இலங்கையின் உணவு நெருக்கடி குறித்து ஆய்வு செய்து வருகிறது.  எனது அழைப்பின் பேரில் உணவு மற்றும் விவசாய அமைப்பின் தலைவர் அடுத்த வாரம் இலங்கை வரவுள்ளார்.
 எவ்வளவோ பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்தாலும், உணவு விஷயத்தில் சமூகத்தின் ஏழ்மையான பிரிவினர் சந்திக்கும் பிரச்னைகளை மறக்க முடியாது.  வரவிருக்கும் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் சமூகத்தின் உயர்ந்த பிரிவினருக்கு குறுகிய கால நிவாரணம் வழங்க நிதி ஒதுக்கப்படும்.  சமூக நலச் சலுகைகள் சட்டத்தின் கீழ் இந்த நிவாரணம் மக்களுக்கு வழங்கப்படும்.
 உணவுப் பற்றாக்குறையால் ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாட்டைத் தடுக்கும் நடவடிக்கைகளையும் நாங்கள் தொடங்குகிறோம்.
 இந்த நடவடிக்கைகளுக்கு இணையாக, சாகுபடிக்கு தேவையான ஊக்கத்தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.  வசதிகள் செய்து தரப்படுகின்றன.  விவசாய அமைச்சு மற்றும் ஏனைய தொடர்புடைய அமைச்சுகளுடன் இணைந்து பிரதமர் அலுவலகத்தின் தலையீட்டுடன் நாடளாவிய ரீதியில் பயிர்ச் செய்கை வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படுகிறது.  இந்த திட்டத்தின் நோக்கம் பரவலாக்கப்பட்ட அளவில் உணவு கிடைப்பதை அதிகரிப்பதாகும்.  இது தொடர்பாக, பொறுப்புள்ள நிறுவனங்கள் வாரந்தோறும் கூடி, தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.  அடுத்த ஆறு முதல் ஏழு மாதங்களில் ஒட்டுமொத்த உணவு உற்பத்தியை அதிகரிக்கும் என நம்புகிறோம்.
ஏற்றுமதி பொருளாதாரத்தை உயர்த்த பல கொள்கை முடிவுகளை எடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.  வரவிருக்கும் இடைக்கால பட்ஜெட் அது பற்றிய விரிவான தகவல்களை உள்ளடக்கும்.
 இந்த திட்டமிட்ட பாதையில் நாம் தொடர்ந்தால், ஒளிமயமான எதிர்காலத்தை நாம் நம்பலாம்.  இந்தப் பணியை நாம் அனைவரும் ஒற்றுமையாகச் செய்ய வேண்டும்.  சிக்கியிருக்கும் வலையைத் தூக்கிப் பறக்க நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
 அப்படிச் செய்தால் 2019ல் இருந்த நிலையை 2025க்குள் அடையலாம் என்ற எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியும்.அங்கிருந்து இந்தப் பயணத்தை நிறுத்த முடியாது.  புதிய பொருளாதாரத்தை உருவாக்கும் வரை இந்தப் பயணத்தைத் தொடர வேண்டும்.
 இடைக்கால வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் இந்த முன்னேற்றத்திற்கு தேவையான பின்னணியை தயார்படுத்துவோம் என நம்புகிறோம்.
 நான் பிரதமராக பொறுப்பேற்றதும், இந்த கடினமான மற்றும் நெருக்கடியான சூழ்நிலையில் நாட்டிற்காக ஒன்றிணைந்து செயல்பட முன்வருமாறு எதிர்க்கட்சிகளிடம் எழுத்துப்பூர்வமாக கோரிக்கை விடுத்தேன்.  அப்போது கிடைத்த பதில்கள் பற்றி உங்கள் அனைவருக்கும் தெரியும்.
 இந்த ஒற்றுமையின் முக்கியத்துவம், இக்கட்டான காலத்திலிருந்து வெளியேற வேண்டியதன் முக்கியத்துவத்தை, நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் அவ்வப்போது சுட்டிக்காட்டி வருகின்றனர்.
 அதனை நினைவுகூர்ந்து இந்தச் சவாலை முறியடிக்க இச்சபையில் உள்ள அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளும் ஒன்றிணையுமாறு மீண்டும் ஒருமுறை கேட்டுக்கொள்கிறேன்.
 எங்கள் இறுதி இலக்கு மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த சமூக சந்தைப் பொருளாதாரத்தை உருவாக்குவதாகும்.  சீனா, வியட்நாம் போன்ற நாடுகளில் இருந்தும் எடுக்க வேண்டிய எடுத்துக்காட்டுகள் இங்கே உள்ளன.  போட்டித்தன்மை வாய்ந்த சோசலிச சந்தைப் பொருளாதாரங்களை வெற்றிகரமாகப் பராமரிக்கும் நாடுகள் அவை.
 எனக்குத் தெரிந்தவரை நமது இலக்குகளை அடைய குறுக்குவழிகள் எதுவும் இல்லை.  மந்திரமோ, பரிகாரமோ இல்லை.  கலாநிதி ஹரிணி அமரசூரிய எம்.பியும் கடந்த நாள் வலியுறுத்தினார். “எங்களுக்கு ஒரு காலி பானை கிடைக்கிறது, இது எளிதானது அல்ல, நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் எல்லாம் தீர்க்கப்படும் என்று நாங்கள் நினைக்கவில்லை, ஆட்சிக்கு வந்ததால் எல்லாம் தீர்க்கப்படாது. பல விஷயங்கள் இருக்க வேண்டும்.  முடிந்தது. இதை சரியாகப் பெற நேரம் எடுக்கும். இது நம் அனைவருக்கும் கடினமான காலமாக இருக்கும். நீங்கள் அர்ப்பணிப்புகளைச் செய்ய வேண்டும். நீங்கள் மிகவும் கடினமாக உழைக்க வேண்டும்.”
 பாராளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய கூறியது போல், இந்த நெருக்கடியானது சில நாட்களில் அல்லது சில மாதங்களில் தீர்க்கக்கூடிய ஒன்றல்ல.  இன்னும் தீவிரமான ஒன்று.
 ஆனால் நாங்கள் முன்வைத்த திட்டத்தை விட பயனுள்ள திட்டம் இருந்தால், வேகமான திட்டம் இருந்தால், அதை முன்வைக்கவும்.  நாம் அதை விவாதிக்கலாம்.  மீட்புக்கு மிகவும் பயனுள்ள பாதை என்றால் அதை இயக்கவும்.
 தம்மை ஒப்படைத்தால் ஆறு மாதங்களில் நாட்டை மீட்டெடுக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.  உண்மையில், அதைச் செய்ய முடிந்தால் அது மிகவும் நல்ல விஷயம்.  பொருளாதார வளர்ச்சி எதிர்மறை ஆறு அல்லது ஏழாகச் சரிந்த ஒரு நாட்டை ஆறு மாதங்களில் நேர்மறையான பொருளாதார வளர்ச்சி விகிதத்திற்குக் கொண்டு செல்வது உலகில் எந்த நாட்டிலும் நடக்காத செயல்.  ஆனால் இதுவரை அது நடக்கவில்லை என்ற திரு அனுரகுமார திஸாநாயக்கவின் கருத்தை நாம் நிராகரிக்க முடியாது.  ஆறு மாதங்களுக்குள் நாட்டை மீட்டெடுக்கும் திட்டம் அவருக்கு இருந்தால் நன்றாக இருக்கும்.  அத்தகைய திட்டத்தால், குறுகிய காலத்தில் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும்.  அதுமட்டுமின்றி உலகிற்கு ஒரு நல்ல முன்னுதாரணமாகவும் அமைகிறது.
 எனவேதான் இந்த திட்டத்தை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்கவிடம் கேட்டுக்கொள்கின்றேன்.  நீங்கள் ஜனாதிபதியிடம் செல்ல விரும்பவில்லை என்றால் இந்த பாராளுமன்றத்தில் முன்வையுங்கள்.  அதை இந்த நாடாளுமன்றத்தில் விவாதிப்போம்.  அந்தத் திட்டம் இப்போது செயல்படுத்தும் திட்டத்தை விட சிறப்பாகவும் பயனுள்ளதாகவும் இருந்தால் அதைச் செயல்படுத்துவோம்.  அத்தகைய திட்டம் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை வெல்லும் அளவுக்கு புத்திசாலித்தனமாக இருக்கும்.
ஏற்றுமதி பொருளாதாரத்தை உயர்த்த பல கொள்கை முடிவுகளை எடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.  வரவிருக்கும் இடைக்கால பட்ஜெட் அது பற்றிய விரிவான தகவல்களை உள்ளடக்கும்.
 இந்த திட்டமிட்ட பாதையில் நாம் தொடர்ந்தால், ஒளிமயமான எதிர்காலத்தை நாம் நம்பலாம்.  இந்தப் பணியை நாம் அனைவரும் ஒற்றுமையாகச் செய்ய வேண்டும்.  சிக்கியிருக்கும் வலையைத் தூக்கிப் பறக்க நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
 அப்படிச் செய்தால் 2019ல் இருந்த நிலையை 2025க்குள் அடையலாம் என்ற எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியும்.அங்கிருந்து இந்தப் பயணத்தை நிறுத்த முடியாது.  புதிய பொருளாதாரத்தை உருவாக்கும் வரை இந்தப் பயணத்தைத் தொடர வேண்டும்.
 இடைக்கால வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் இந்த முன்னேற்றத்திற்கு தேவையான பின்னணியை தயார்படுத்துவோம் என நம்புகிறோம்.

இராஜினாமா செய்யுங்கள்: பேராயர் கோரிக்கை

ராஜபக்ஷ குடும்பம் தொடர்ந்தும் ஆட்சியில் இருப்பது, தற்போதைய துரதிஷ்டமான சூழ்நிலையில் இருந்து நாட்டை விடுவிப்பதற்கு மிகப் பெரிய தடையாக உள்ளதாக கொழும்பு மறை மாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

புதிய பிரதமரின் நியமனம் குறித்து மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு அடிபணிந்து சிறிது காலம் மௌனம் காத்த போதிலும் சமயத் தலைவர் மற்றும் பொறுப்புள்ள பிரஜை என்ற ரீதியில் தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு தன்னால் அமைதியாக இருக்க முடியாது எனவும் பேராயர் தெரிவித்தார்.

பேராயர் இல்லத்தில் இன்று (05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தற்போதைய சூழ்நிலையில் ஆட்சியில் இருப்பதற்கு ஜனாதிபதிக்கும் அரசாங்கத்துக்கும் தார்மீக உரிமை இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே, நாட்டில் ஏற்பட்டுள்ள அவல நிலைக்கு பொறுப்பேற்று பதவிகளை இராஜினாமா செய்து நாட்டின் எதிர்காலத்தை மக்களிடம் ஒப்படைக்குமாறு கோரிக்கை விடுப்பதாகவும் பேராயர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்பின்னர், மக்கள் எதிர்பார்க்கும்அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த இடைக்கால சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்கலாம் என்று கூறிய பேராயர், தொழில்நுட்ப மற்றும் புத்திஜீவிகள் குழு மூலம் நிபுணத்துவ ஆலோசனை பெற்று, தற்போதுள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றார்.

நாட்டில் நிலைமை சீரடைந்தவுடன் விரைவில் பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்றும், இந்த நிலையில் இருந்து நாட்டை மீட்டெடுக்க அனைத்து எதிர்க்கட்சி அரசியல் தலைவர்களும் முன்வர வேண்டுமென கேட்டுக் கொள்வதாகவும் பேராயர் தெரிவித்தார்.

Posted in Uncategorized

எட்டி உதைத்த அதிகாரி இடைநிறுத்தம்

குருநாகல், யக்கபிட்டியவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொதுமகன் ஒருவரை எட்டி உதைத்த இராணுவ அதிகாரி அனைத்து கடமைகளில் இருந்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் இன்று (05) தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் முடியும் வரை லெப்டினன்ட் கேணல் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இராணுவம்  வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகேவின் பணிப்புரைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

5 பேர் கொண்ட விசாரணை நீதிமன்றத்தின் பரிந்துரைகள் வரும் வரை குற்றம் சாட்டப்பட்ட இராணுவ அதிகாரி அனைத்துப் பணிகளில் இருந்தும் உடனடியாக இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

இராணுவ அதிகாரி ஒருவர், பொதுமகன் ஒருவரை எட்டி உதைத்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவியதை அடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்த ஒரு குழு நிலையத்தின் நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்ததாக எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளர் மற்றும் அதிகாரிகளின் கூற்றுப்படி தெரியவந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்திருந்தார்.

பணியில் ஈடுபட்டிருந்த இராணுவம் மற்றும் பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாகவும் அவர்களை தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குழு வேண்டுமென்றே எரிபொருள் நிலையத்தில் அமைதியின்மையை உருவாக்கி மோதலுக்கு அழைப்பு விடுத்திருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர் என்றும் சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பேச்சாளர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.