எட்டு இலங்கையர்கள் தனுஷ்கோடியை சென்றடைந்தனர்

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும்  பொருளாதார நெருக்கடி காரணமாக யாழ்பாணம் -வல்வெட்டித்துறையை சேர்ந்த 8 இலங்கை தமிழர்கள்  அகதிகளாக தனுஷ்கோடி சென்றுள்ளனர்.

இவர்களை    மீட்ட மரைன் பொலிஸார்,   ராமேஸ்வரம் மரைன் பொலிஸ் நிலயைத்துக்கு அழைத்துச் சென்று, விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணைக்கு பின்னர் 8 பேரையும் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்படுவார்கள்.

தற்போது வரை இலங்கை தமிழர்கள் 103 பேர் அகதிகளாக  தமிழகம் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.

Posted in Uncategorized

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பால் சபா மண்டபத்திலிருந்து வெளியேறினார் ஜனாதிபதி!

இன்று நாடாளுமன்றத்தில் பிரசன்னமாகிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்பையடுத்து, சபாமண்டபத்திலிருந்து வெளியேறிச் சென்றார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று நாடாளுமன்றத்தில் பிரசன்னமாகினார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு அருகில் உட்கார்ந்து, சபை நடவடிக்கைகளை அவதானித்துக் கொண்டிருந்தார். இதையடுத்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு எதிராக கோசமெழுப்பினர்.

கோட்டா கோ கோம் என எதிர்க்கட்சிகள் முழுங்கியதால் நாடாளுமன்ற அமர்வு ஒத்திவைக்கப்பட்டது. எனினும், எதிர்க்கட்சிகளின் போராட்டம் ஓயவில்லை. இதையடுத்து சபாமண்டபத்தைவிட்டுமண்டபத்திலிருந்து வெளியேறினார் ஜனாதிபதி.

கந்தகாடு மோதல்: விசாரணை அறிக்கை இன்று

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கையை பெற்றுக்கொள்ளவுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

அதனை பெற்றுக் கொண்ட பின்னர் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவிடம் கையளிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்பிக்க நான்கு பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது.

அமைதியின்மையின் போது தப்பியோடிய சுமார் 800 கைதிகளில் 701 கைதிகள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 27 பேரை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி வெளியிட்டுள்ள விஷேட வர்த்மானி அறிவிப்பு

அத்தியாவசிய பொதுச் சேவை சட்டத்தின் கீழ் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விஷேட வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதனடிப்படையில் மின்சார விநியோகத்துடன் இணைக்கப்பட்ட அனைத்து சேவைகளும், பெட்ரோலியம் மற்றும் எரிபொருளை வழங்குதல் அல்லது விநியோகிப்பது அத்தியாவசிய சேவைகளாக்கப்பட்டுள்ளன.

அத்துடன் வைத்தியசாலைகள், முதியோர் இல்லங்கள், மருந்தகங்கள் மற்றும் பிற ஒத்த நிறுவனங்களில் உள்ள நோயாளிகளின் வரவேற்பு, பராமரிப்பு உணவு மற்றும் சிகிச்சை நிலையங்களும் அத்தியாவசிய சேவையாக்கப்பட்டுள்ளன.

Posted in Uncategorized

எரிபொருள் நிலையத்தில் ஒருவரை காலால் உதைத்த இராணுவ அதிகாரி தொடர்பில் விசாரணை!

குருநாகல் யக்கஹபிட்டியவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இராணுவ அதிகாரி ஒருவரை காலால் உதைத்து தாக்கிய சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக இலங்கை இராணுவத்தினரால் உள்ளக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இராணுவ அதிகாரி ஒருவர் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நபர் ஒருவரை எட்டி உதைக்கும் காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டதுடன், பொதுமகனை தாக்கிய அதிகாரி இலங்கை இராணுவத்தின் லெப்.கேணல் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளர் மற்றும் அதிகாரிகளின் கூற்றுப்படி, எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்த ஒரு குழு  எரிபொருள் விநியோக நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்ததாக அவர் கூறியுள்ளார்.

மேலும் பணியில் ஈடுபட்டிருந்த இராணுவம் மற்றும் பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாகவும் அவர்கள் தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்த குழு வேண்டுமென்றே எரிபொருள் நிலையத்தில் அமைதியின்மையை உருவாக்கி மோதலுக்கு அழைப்பு விடுத்திருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள்கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

சஜித் – மைத்திரி திடீர் சந்திப்பு!

எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான விசேட சந்திப்பு இன்று நடைபெற்றது.

கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெறுகின்றது.

இந்த சந்திப்பில் சிவில் செயற்பாட்டாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலர் கலந்துகொண்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

சர்வ கட்சி அரசாங்கம், அரசியலமைப்புத் திருத்தம் உள்ளிட்ட சில முக்கிய அரசியல் விடயங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

”இலங்கைக்கு அவுஸ்திரேலியா உதவும்”

இலங்கையின் பொருளாதார, சமூக மற்றும் கடல்சார் துறைகளின் முன்னேற்றத்திற்கு ஆதரவளிப்பதாக அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஹோலி தெரிவித்துள்ளார்.

இன்று (04) பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற சந்திப்பில் டேவிட் ஹோலி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதாரப் பிரச்சினை குறித்து அவுஸ்திரேலியா நன்கு அறிந்துள்ளதா‌க அவர் குறிப்பிட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனி நாடொன்று இலங்கைக்கு வழங்கிய மனிதாபிமான உதவிகளில் அதிகூடிய தொகையை அந்நாட்டினால் வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“இது ஆரம்பம் மட்டுமே. எதிர்காலத்தில் ஏனைய துறைகளுக்கும் இலங்கைக்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவை வழங்குவோம்” என அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் இதன்போது தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

குண்டுத் தாக்குதல் நடத்தத் திட்டமா?: அனுரகுமார பரபரப்புத் தகவல்!

வடக்கிலோ அல்லது தெற்கிலோ ஜுலை 5 அல்லது 6 ஆம் திகதியில் குண்டுத் தாக்குதல் நடத்தப்படலாம் என்று தகவல் கிடைத்துள்ளதாக அறிவித்து பொலிஸ் மா அதிபரினால் பாதுகாப்பு செயலாளருக்கு கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கரும்புலிகள் நினைவு தினத்தை இலக்காகக் கொண்டு வெளிநாட்ட உளவுப் பிரிவின் ஒத்துழைப்புடன் குறித்த தாக்குதலை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியதை போன்று காட்ட முயற்சிக்கப்படுவதாகவும் அனுரகுமார திஸாநயக்க தெரிவித்துள்ளார்.

இன்று கொழும்பில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் வடக்கில் உள்ள முக்கிய நிறுவனங்களின் பிரதானிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் இது தொடர்பான கடிதம் தொடர்பில் தமக்கு சந்தேகம் நிலவுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் அந்தக் கடிதத்தில் உள்ள தகவல்கள் எவ்வாறு கிடைத்தன என்ற சரியான தகவல்களை அரசாங்கம் வெளியிட வேண்டும் என்றும் அனுரகுமார கேட்டுக்கொண்டுள்ளார்.

ஜப்பான் நிறுவனத்திடம் கொமிஷன் கேட்ட அமைச்சர்!

இலங்கை அரசியல்வாதிகளின் ஊழல் காரணமாக இலங்கைக்கு உதவிகளை வழங்க மாட்டோம் என எதிர்கட்சி அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் குழுவுடன் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் தெரிவித்துள்ளார்.

இந்தச் செய்தியைப் பார்த்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இலங்கையில் உள்ள ஜப்பானிய தூதரகத்தை தொடர்பு கொண்டு, அவர் ஏன் அப்படி ஒரு கருத்தை வெளியிட்டார் என்று கேட்டார்.

ஜப்பான் தூதரகம் தன்னிடம் ஆதாரம் உள்ளதால் இப்படியொரு கருத்தை தெரிவித்ததாக கூறியுள்ளது.

எவ்வாறாயினும், இது தொடர்பில் ஊடகங்களில் வெளியிடப்பட்டமையினால் இலங்கை அரசாங்கத்திற்கு ஏற்படும் அசௌகரியங்களை கருத்திற் கொண்டு, இது தொடர்பில் ஏனைய நடவடிக்கைகளை மேற்கொள்ள தாம் தயார் எனவும் தெரிவித்துள்ளனர்.

அதனையடுத்து, தமது சாட்சியங்களை வெளிப்படுத்திய அவர்கள், கட்டுநாயக்க, பண்டாரநாயக்க விமான நிலையங்களின் விஸ்தரிப்புப் பணிகளைச் செய்துவரும் ஜப்பானிய நிறுவனமான Taisei நிறுவனத்திடம் இந்த நாட்டின் அமைச்சரவை அமைச்சர் ஒருவர் மில்லியன் கணக்கான டொலர்களை கொமிஷன் கோரியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

அந்த நிறுவனம் கொமிஷன் தொகையை செலுத்த மறுத்ததாக ஜப்பானிய தூதரகம் ஜனாதிபதிக்கு அறிவித்தது.

மறுபுறம், அழைப்பு கிடைத்தவுடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அமைச்சருக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய அமைச்சர் ஊவா மாகாணத்தின் கொழுத்த அமைச்சர் எனவும் அவர் சுமார் இரண்டு தசாப்தங்களாக சுதந்திரமாக செயற்பட்டு எந்த அரசாங்கம் வந்தாலும் அமைச்சுப் பதவியை பெற்றுக் கொள்வார் எனவும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

நாட்டை நாசமாக்கிய பெருமை தற்போதைய ஆட்சியாளருக்கே என்கிறார் யாழ். ஆயர்.

நமது நாட்டை பிச்சைக்கார நாடாக மாற்றிய பெருமை தற்போதைய ஆட்சியாளர்களையே சேரும் என யாழ். மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் பேனாட் ஞானபிரகாசம் தெரிவித்தார்

தற்போதைய பொருளாதார  நெருக்கடி நிலைமைகள் தொடர்பில்  கருத்து தெரிவிக்கும் போதே  மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் யாழ். மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் பேனாட் ஞானபிரகாசம் மேலும் கருத்து  தெரிவிக்கையில்,

74 ஆண்டுகள் இந்த நாட்டை ஆண்டவர்கள் மக்களை தம்முடைய வாக்குகளுக்காக பாவித்தார்கள். ஆனால் இந்த நாட்டிலிருந்த வளத்தை எல்லாம் சுரண்டி விட்டார்கள். ஒருவிதமாக கடைசியில் மிக பாரதூரமான சுரண்டல்களுடன் இன்று  நாடு பிச்சை எடுக்கின்ற நாடாக வந்துவிட்டது.

இந்து சமுத்திரத்தின் முத்து என்று சொல்லப்பட்ட இந்த இலங்கை  நாடு இன்று பிச்சை எடுக்கின்ற இலங்கை நாடாக மாறி உள்ளது. இதற்கு காரணமான அனைவருமே மறுமொழி சொல்ல வேண்டியவர்களாகவே  இருக்கின்றார்கள்.

ஏனென்றால் மக்களை இந்த நாட்டின் குடிமக்களாக பார்க்கவில்லை. தமது வாக்குகளிற்காக  பாவித்துள்ளார்கள். இந்த நாட்டின் பிரதிநிதிகள் என்று கூறினால் எங்களுடைய பிரச்சனை எல்லாம் தீர்ப்பதற்கு வழிமுறை உள்ளது. அவற்றைச் செய்யாமல் மக்களை வாக்குகளுக்காக அவர்கள் பாவித்து இருக்கின்றார்கள்.

மக்களை ஏமாற்றி வாக்கினை பெற்றிருக்கின்றார்கள். அவ்வாறு நாட்டு மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்று நாடு  சுரண்டப்பட்டதனால்  இன்றைய நாடு இவ்வாறு படுகுழியில் போய் உள்ளது.

அண்மையில் IMF நிறுவனம் இலங்கையிடம்  பல கேள்விகளை கேட்க இருந்தது. அதேபோன்று  முன்னாள் பிரதம மந்திரியிடம் 37 கேள்விகள் ஐ.எம்.எவ்வால்  கேட்கப்பட இருந்தது. அதாவது ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பிலேயே அவர்கள் கேள்வி  கேட்க இருந்தார்கள்.

ஆனால், அவர் வைத்தியசாலையில் அனுமதி ஆகிவிட்டார். அதனால் அவர்கள் ஐ.எம்.எவ்  கேட்க வேண்டிய கேள்வியினை கேட்காது துரும்பிச்  சென்று விட்டார்கள்.

எந்த நாடும் எமக்கு உதவி செய்ய தயாராக இருக்கின்றார்கள். ஆனால் மோசடி, ஊழல் நிறைந்த இந்த நாட்டு அரசாங்கத்தை நம்பி எந்த நாடும் நமக்கு உதவுவதற்கு தயாராக இல்லை.இதனை முதலில் நிவர்த்தி செய்தால் மாத்திரமே எமக்கு ஏனைய நாடுகளின் உதவி கிடைக்கும். அதற்கு பொறுப்பானவர்கள் ஓடி ஒளிந்து விட்டார்கள். இந்த நாட்டின் தற்போதைய ஆட்சியாளர்களின் பெருந்தன்மையால் இந்த நாடு ஒரு பிச்சைக்கார நாடாக மாறிவிட்டது.- என ஆயர்  தெரிவித்தார்.

Posted in Uncategorized