ஜி20 நாடுகளை அணிதிரட்டுவதில் இந்தியாவின் ஆதரவை கோரும் ஐநா தலைவர்!

கடனில் சிக்கித் தவிக்கும் வளரும் நாடுகளுக்கு உதவ ஜி20 நாடுகளை அணிதிரட்டுவதில் இந்தியாவின் ஆதரவை ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் அன்டோனியோ குட்டரெஸ் கோரியுள்ளார்.

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இந்தியாவின் மூன்று அண்டை நாடுகள் ஏற்கனவே சர்வதேச நாயண நிதியத்தின் கடனை எதிர்ப்பார்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொவிட் 19 பாதிப்பு மற்றும் எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார சேதங்களில் இருந்து மீள்வதற்காக இலங்கை, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகள் கடந்த சில மாதங்களாக சர்வதேச நாணய நிதியத்தின் கடனை கோரி வருகின்ற நிலையில் அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் ஒரு வருடத்திற்கு இந்தோனேசியாவிடம் இருந்து ஜி20 தலைவர் பதவியை இந்தியா ஏற்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

”நேரடி வரிகளை உயர்த்த வேண்டும் – கடுமையான தீர்மானங்களை எடுக்க வேண்டும்”

நேரடி வரிகளை உயர்த்தி, நாட்டின் வருமானத்தை அதிகரிக்காவிட்டால், மீண்டும் வரியில் காத்திருக்கும் யுகம் உருவாகலாம் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடன் மறுசீரமைப்பை வெற்றிகரமாக முன்னெடுத்து சரியான பொருளாதார முகாமைத்துவத்தை உருவாக்க அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வரிக் கொள்கை தொடர்பில் ஜனாதிபதி இன்று வெளியிட்ட விசேட அறிக்கையிலேயே அசர் இதனை கூறியுள்ளார்.

ஜனாதிபதியின் விசேட அறிக்கை வருமாறு,

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தில் ஒரு முக்கியமான முன்னெடுப்பு கடந்த வாரம் நடைபெற்றது. சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்த (அக்டோபர் 07) கூட்டத்தில், எமது நிதி இராஜாங்க அமைச்சர் உள்ளிட்ட குழுவொன்று பங்குபற்றியது. அதன்போது சர்வதேச நாணய நிதியத்தின் தலைமையில் இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகள் மற்றும் கடன் வழங்கிய சில தனியார் நிறுவனங்களுடனான சந்திப்பொன்று நடைபெற்றது.

75க்கும் மேற்பட்டோர் இந்தக் கூட்டத்தில் நேரடியாகவும், சூம் தொழில்நுட்பம் மூலமாகவும் கலந்து கொண்டனர். இலங்கைக்கு கடன் வழங்கிய ஜப்பான், சீனா, இந்தியா ஆகிய 03 பிரதான நாடுகளுடன், பொதுவான ஒரு இடத்தில் கூடி, சலுகை வழங்குவதற்கு எடுக்க வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதே இதன் முதன்மை நோக்கமாகும்.

இச்சந்திப்பில், பொதுவான மேடை ஒன்றின் அவசியத்தை சர்வதேச நாணய நிதியமும் இலங்கையும் சுட்டிக்காட்டியிருந்தன. இந்தியாவும் சீனாவும் இது தொடர்பில் ஆராய்ந்து பதில் அளிப்பதாக அறிவித்துள்ளன. இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடத்த வேண்டியிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் மேலும் பல நாடுகள் கலந்து கொண்டன. குறிப்பாக அமெரிக்க திறைசேரியின் உதவிச் செயலாளர் இங்கு வருகை தந்திருந்தார். சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்தாலோசித்து அங்கு எடுத்த முடிவுகளை நடைமுறைப்படுத்துவதால் தான் எமக்கு இவற்றை செய்யும் வாய்ப்பு கிடைத்தது.

இலங்கை அரசாங்கத்தின் வருமானம் தொடர்பில் முக்கிய விடயமொன்று இருக்கிறது. 2015ஆம் ஆண்டு சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இலங்கைக்கு வந்தபோது ஆரம்ப வரவு செலவுத் திட்டத்தில் மிகையிருக்க வேண்டும் என எமக்குக் கூறப்பட்டது. அந்த மிகையை 2017-2018ல் காண்பித்தோம். எனினும், 2019 உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பால் அது குறைவடைந்தது. எனினும், அதனால் பாரிய பிரச்சினை எதுவும் ஏற்படவில்லை. ஆரம்ப வரவு செலவுத்திட்டத்தில் மிகையிருப்பதால் எமது வருவாயை அதிகரிக்க முடியும் என்று அவர்கள் நம்பினார்கள்.
அந்த சமயம் நமது வருமானம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 14.5% – 15% வரை இருந்தது. ஆனால் இதை படிப்படியாக 17%-18% ஆக அதிகரிக்க முடியுமென்று நாம் அறிவித்தோம்.
எனினும், 2019 நவம்பர் மாதமளவில் நமது நாட்டில் வரிகள் வெகுவாகக் குறைக்கப்பட்டன. இதனால் அரசின் வருவாய் 8.5% மாக குறைவடைந்தது. ஒப்பந்தத்திற்கு முரணாக செயற்பட்டதால் சர்வதேச நாணய நிதியம் உதவிகளை வழங்க முடியாது என அறிவித்தது.

அந்த ஆண்டு சுமார் 600, 700 பில்லியன் ரூபாய்களை இழக்க நேரிட்டது. அதே நேரத்தில், நாங்கள் கோவிட் தொற்றுநோயை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இந்த நிலைமையே இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைய முக்கிய காரணிகளாக அமைந்தன.

நமது ஆரம்ப வரவுசெலவுத் திட்டத்தில் மிகையை காண்பிக்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் எங்களுக்கு அறிவித்திருந்தது. அவர்களின் ஒத்துழைப்பு எங்களுக்கு தேவை என்பதால் நாங்கள் அதற்கு உடன்பட்டிருந்தோம்.

அடுத்து, நாட்டின் வருமானத்தை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8.5% இல் இருந்து 14.5% ஆக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டது. இதனை ஒரேயடியாகச் செய்வது சாத்தியமில்லை. 2026ஆம் ஆண்டுக்குள் நாட்டின் வருமானத்தை நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 14.5% ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளோம்.

முதலில் நமது வருமானத்தை எப்படி அதிகரிப்பது என்று சிந்திக்க வேண்டும். வருமானம் குறைந்ததால்தான் பணம் அச்சடிக்கப்பட்டது.கடந்த இரண்டு வருடங்களில் 2300 பில்லியன் ரூபா அச்சிடப்பட்டுள்ளது. இதனால் பணவீக்கம் 70% – 75% வரை உயர்ந்துள்ளது. மேலும் உணவுப் பணவீக்கம் அதனை விடவும் அதிகரித்துள்ளது.

இவற்றையும் கட்டுப்படுத்த வேண்டும். அதேபோன்று வருமானத்தை ஈட்டவும் வேண்டும். எனவே, இந்த பேச்சுவார்த்தைகளின் போது புதிய வரி முறை முன்வைக்கப்பட்டது. குறிப்பாக ஏற்றுமதி கைத்தொழில்களிடமிருந்து வரி அறிவிட வேண்டும் என்றும் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்திருந்தது.

குறிப்பாக, ஏற்றுமதி பொருளாதாரம் உள்ள நாடுகளில் வரி செலுத்தப்படுவதாகச் சுட்டிக்காட்டப்பட்டது. மேலும் எமது பிரதான ஏற்றுமதிப் பொருளாதாரம் பெருந்தோட்டக் கைத்தொழில் என அவர்கள் சுட்டிக்காட்டினர். பிரித்தானிய ஆட்சிக் காலத்தில் தேயிலை, தேங்காய், இறப்பர் போன்றவற்றுக்கும் வரி விதிக்கப்பட்டது.
எனவே, அந்த இலக்கை நோக்கி செல்வதற்கு வரி செலுத்த வேண்டும் என முடிவு செய்தோம். ஏற்றுமதி துறை தற்போது கேள்விக் குறியாகியுள்ளது. அவ்விடயங்கள் சர்வதேச நாணய நிதியத்திற்கு சமர்ப்பிக்கப்படும். அது தொடர்பில் விளக்கமளிப்பது தொடர்பாக கவனம் செலுத்தியுள்ளோம்.

இரண்டாவது விடயம் தனிநபர் வரி. நாம் பெரும்பாலும் மறைமுகமாகவே வரியைப் பெற்றிருந்தோம். நாட்டின் பெரும்பான்மையான ஏழை மக்களுக்கு மறைமுக வரிகளைச் செலுத்த வேண்டி ஏற்பட்டுள்ளது. தற்போது நமது நேரடி வரி வருமானம் 20 சதவீதம் ஆகும். 80 சதவீதம் மறைமுகமான வரி வருமானமாகப் பெறப்படுகிறது.

எனினும், இவ்விடயம் தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் பிரச்சினை ஒன்றை சுட்டிக்காட்டியுள்ளது. நேரடி வரி மூலம் பெறப்படும் வருமானம் 20 சதவீதத்திலும் அதிகமாக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டது. இல்லையேல் எமது இலக்கு வெற்றியளிக்காது என்றும் இந்நாட்டிலுள்ள சாதாரண மக்களுக்கும் வரிச் செலுத்த நேரிடும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

எனவே இதனடிப்படையில், 2026 ஆம் ஆண்டை இலக்காகக் கொள்வதற்காக,02 இலட்சம் வருமானம் பெறுவோருக்கு மட்டும் இந்த வரி அறவீட்டை மட்டுப்படுத்த முடியுமா என்பது தொடர்பில் திறைசேரியும் சர்வதேச நாணய நிதியமும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. எனினும் அந்த நோக்கம் நிறைவேற்றப்படவில்லை.

இதன் விளைவாக இறுதியில் ஒரு இலட்சத்தை விடவும் கூடுதலான வருமானத்தைப் பெறுபவர்களிடமிருந்து வருமான வரி அறவிட நேர்ந்தது. இதன் காரணமாக நாட்டில் பாரிய பிரச்சினை எழுந்துள்ளது.

இந்தப் பின்னணியின்படி, இவ்வாறான வரி அறவீட்டு முறையொன்று இல்லாவிட்டால் எமது இலக்கை அடைய முடியாமல் போகலாம் என்பதை நான் கூற விரும்புகின்றேன். 2026 ஆம் ஆண்டுக்குள் எமது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 14.5 சதவீதம் தொடக்கம் 15 சதவீதம் வரையிலான சதவிகிதத்தை வருமானமாக பெறுவதே எமது இலக்காகும். எனவே நாம் இந்த வேலைத் திட்டத்திலிருந்து ஒதுங்கினால், சர்வதேச நாணய நிதியத்திடமிருந்தும் எமக்கு உதவி கிடைக்காமல் போய்விடலாம்.

சர்வதேச நாயண நிதியத்தின் உத்தரவாதம் கிடைக்காமல் போனால், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்கள் மற்றும் உதவி வழங்குவதாக கூறும் நாடுகளிடமிருந்து எமக்கு உதவிகள் கிடைக்காமல் போய்விடும். அவ்வாறு நிகழ்ந்தால், மீண்டும் வரிசைகளில் காத்திருக்கும் யுகத்துக்கே நாம் செல்ல நேரிடும்.

இதைவிடவும் மிக கஷ்டமான காலத்தை எமக்கு எதிர்காலத்தில் சந்திக்க நேரிடும். இந்தக் கடன்களைப் பெற்றுக் கொண்டு, கடன் மறுசீரமைப்புத் திட்டத்தை நாம் செயல்படுத்த வேண்டும். இவற்றை நாம் விரும்பிச் செய்யவில்லை.

விருப்பமில்லாவிட்டாலும் கூட சில விடயங்களை எமக்கு செய்ய நேரிடுகிறது. என்றாலும் அந்த முடிவுகளை நாம் அவ்வப்போது பரிசீலித்து வருகின்றோம்.
கடன் மறுசீரமைப்புத் திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுக்கும் அதேநேரம், பெரும்போகத்தில் மிகச் சிறந்த அறுவடையும் கிடைக்குமாக இருந்தால் அதன் மூலம் சிறந்த பொருளாதார நன்மைகளை ஈட்டிக்கொண்டு நாம் முன்னோக்கிச் செல்ல முடியும். அப்போது எமக்கு ஏற்பட்டிருக்கும் பொருளாதார அழுத்தம் குறைவடையும்.

அதேபோன்று நாம் வெளிநாட்டுக் கையிருப்பை அதிகரித்துக் கொள்வது தொடர்பிலும் கலந்துரையாடியுள்ளோம். இந்தச் செயற்பாடுகள் யாவற்றையும் முன்னெடுப்பதன் மூலம் எமக்கு முன்னோக்கிச் செல்லக்கூடியதாக இருக்கும்.

நாங்கள் தற்போது கடினமான கால கட்டத்திலேயே இருக்கிறோம்.இதுபோன்ற கடினமான காலத்தில் நாம் கடினமான முடிவுகளையும் எடுக்க நேரிடும். வேறு யாரும் முன்வராத நிலையிலேயே நான் இந்த கடினமான பொறுப்பை ஏற்றிருக்கிறேன். எனவேதான் இது தொடர்பில் அனைவருக்கும் விளக்களிக்க வேண்டியது எனது கடமையென்பதை நான் உணர்ந்தேன். இது தொடர்பில் மேலும் பேச்சுவார்த்தைகளை நடத்த அரசாங்கம் தயாராக உள்ளது.

சீனர்களின் நடமாட்டத்தைக் குறைத்து இந்திய முதலீட்டாளர்களைப் பயன்படுத்த வேண்டும் – பா.உ. ஜனா

கடந்த பொருளாதார நெருக்கடி நிலையில் இந்தியா நான்கு பில்லியன் டொலருக்கும் அதிகமான தொகையினை உதவியாகத் தந்திருந்தது. அப்படியானவர்களைப் பகைத்க் கொள்ளாமல், வடக்கில் சீனர்கள் நடமாடுவதைக் குறைத்துக் கொண்டு, இந்திய முதலீட்டாளர்களை பயன்படுத்த வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பெற்றோலியப் பொருட்கள் (விசேட ஏற்பாடுகள்) (திருத்தம்) சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் (18) கலந்து கொண்டு உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர்,

உண்மையிலேயே என்னுடைய மட்டக்களப்பு மாவட்டம் குறிப்பாக, மீன்பிடி, விவசாயம், கால்நடை போன்றவற்றை கூடுதலாக செய்து அவைகளில் தங்கிவாழும் மாவட்டம். முதலாவதாக அமைச்சர் அவர்களுக்கு நன்றி கூற வேண்டும். விவசாயத்துக்குத் தேவையான டீசல் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் விநியோகிக்கப்பட்டுக்கொண்டு வருகிறது. கடந்த போகத்தில் கூட விவசாயிகள் பெருமளவில் நஸ்டமடைந்திருந்தாலும், அந்த அறுவடைக்குத் தேவையான டீசல் கூட சிரமம் இல்லாமல் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்ததாக விவசாயிகள் கூறுகிறார்கள்.

நீண்ட நெடிய கடல் பரப்பைக் கொண்ட எங்களது மாவட்டத்தில் மீன்பிடிக்குச் செல்லும் எங்களது மீனவர்கள் மண்ணெண்ணை இல்லாத காரணத்தினால் மிகவும் கஸ்ரமான சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்குக் கிடைக்கும் மண்ணெண்ணை கோட்டாவின் அடிப்படையினால் ஒரு வாரத்தில் இரண்டு நாள், அல்லது மூன்று நாட்களுக்கு மேல் தொழிலைச் செய்யமுடியாத நிலையில் இருக்கிறார்கள். அங்கு மண்ணெண்ணை, எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக செய்யக் கூடியதாக இல்லாத நிலையில் வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகம், களுவன்கேணி மீன்பிடி சங்கங்களின் ஊடாக விநியோகிக்கப்பட்டாலும் போதுமான அளவு அங்கு விநியோகம் இடம்பெறாமலிருப்பதை அமைச்சர் கவனத்திலெடுத்து சீராக மண்ணெண்ணை விநியோகத்தைச் செய்வதற்கு முயற்சி எடுக்கவேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றேன்.
இன்று காலையில் எதிர்க்கட்சித் தலைவர், விவசாய் சம்பந்தமாக 27-2 கீழான பிரேரணையின் மூலமாகச் சுட்டிக் காட்டியிருந்தார். உண்மையில் கடந்த போகங்களில் எங்களது விவசாயிகள் மிகவும் நஸ்டமடைந்த விவசாயிகளாக, அந்த சிறுபோகத்தில் கிடைத்த விளைச்சல்களை கூட நெல் சந்தைப்படுத்தும் சபை பெற்றுக் கொண்டிருந்தாலும் அதற்குரிய பணம் முழுமையாக வழங்கப்படாமலிருக்கும் அதே வேளை, தற்போது மேலதிகமான நெற்களை அவர்கள் கொள்வனவு செய்வதற்கு பணம் இல்லையென்று தயங்குகின்றார்கள்.

ஆனால், விவசாயிகள் தங்களது நெல்லை விற்றால்தான் விவசாயத்தை தங்களினால் செய்ய முடியும். கடந்த பாராளுமன்ற அமர்வுகளில் எமது மட்டக்களப்பு அமைச்சர் நசீர் அகமட் உட்பட இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் உட்பட விவசாய அமைச்சில் அமைச்சர், அமைச்சின் செயலாளர்கள், மட்டக்களப்பிலிருந்து வருகைதந்த விவசாயிகளுடன் யூரியா விநியோகம் தொடர்பில் பேசியிருந்தோம். அதன்போது 2500 மெக்ரிக்தொன் தருவதாக கூறியிருந்தார்கள், ஆனால் விவசாயிகள் 5000 மெக்றிக்தொன் கோரியிருந்தார்கள். இடையில் 4000 மெக்றிக்தொன் உடனடியாக விநியோகிப்பதாக ஒரு உடன்பாடு வந்தது. ஆனால், இதுவரை 1840 மெக்றிக்தொன் மட்டக்களப்பு வந்திருக்கிறது. அதற்குக் கூறும் காரணம் என்னவென்றால் முதல் தடவை பாவிப்பதற்குரிய யூரியா 1943 மெக்றிக் தொன். ஆனால், 1840 மெக்றிக் தொன் தான் இதுவரை கிடைத்திருக்கிறது. 70 வீதம் யூரியாவும், 30 வீதம் சேதனப்பசளையும் வயல்களுக்கு இடவேண்டும் என்று கூறிக் கொண்டிருக்கும் போது அந்த 70 வீதமே மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 9785 மெக்றிக்தொன் தேவையாக இருக்கிறது.

ஆனால் காலையில் விவசாய இராஜாங்க அமைச்சர் கூறும் போது ஒருலட்சத்து 20 ஆயிரம் மெக்றிக் தொன் யூரியா நவம்பர் மற்றும் டிசம்பரில் வர இருப்பதாகக் கூறுகின்றார். ஆனால் நான் வேண்டிக் கொள்வது மட்டக்களப்பு, அம்பாரை – கிழக்கு விவசாயிகள் பொலநறுவை, அனுராதபுரம் குருநாகல் விசாயிகளை விட ஒரு மாதம் முன்னதாக விதைப்பைத் தொடங்குவதனால் டிசம்பரில் வர இருக்கும் யூரியா அவர்களுக்குப் பிரயோசனமற்றதாக இருக்கும். எனவே நவம்பரில் வர இருக்கும் யூரியாவில் தேவையான யூரியாவை மட்டக்களப்பு மாவட்டத்திற்குக் கொடுக்க வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கின்றேன்.

அதே வேளையில் சேதனப் பசளையைப் பொறுத்தமட்டில், மட்டக்களப்பு மாவட்ட மக்கள் தங்களுக்கு சேதனப் பசளை வேண்டாமென்று கூறுகின்றார்கள். தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் அதற்குரிய நிவாரணப்பணத்தைக் கொடுப்பனவாக வழங்குமாறு கோருகின்றார்கள். அதே போல நெற்களுக்கு நாட்டில் விலை நிர்ணயம் செய்யப்படுகின்ற வேளையில் அதற்கான உள்ளீடான யூரியாவுக்கும் விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்பது எங்களுடைய அவா.

அமைச்சர் அவர்கள் கூறும் போதும் கூறியிருந்தார். திருகோணமலையிலிருக்கும் எண்ணைத் தாங்கிகளை ஐந்து வருடத்துக்கு முன்னரே இந்தியாவுக்குக் கொடுத்திருந்தால் இந்த நாட்டில் ஏற்பட்டிருக்கும் எண்ணைத் தட்டுப்பாடு இருந்திருக்காது என்று ஜனாதிபதி அவர்கள் திருகோணமலைக்குச் செல்லும் போதும் கூறியிருந்தார்கள்.
ஆனால் வடக்கில் இந்தியாவுக்கெதிராக சீனர்கள் களம் இறங்கியிருக்கிறார்கள். ஊர்காவல் துறையில் பருத்தித் தீவு என்னும் இடத்தில் சட்ட விரோதமாக கடலட்டைப் பண்ணை சீனர்களால் நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதாக வடக்கு மீனவர் சங்கத் தலைவர் கூறியிருக்கின்றார். இது இந்தியாவுக்கு ஆபத்து என்று தமிழ்நாட்டுப் புலனாய்வுத் துறையினர் கூறியிருக்கின்றனர். சீனர்கள் செய்யும் கடலட்டைப் பண்ணைகளுக்கு யாரிடம் அனுமதி பெற்றார்கள். கடந்த வாரம் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தவானந்தா அவர்கள் இந்திய தமிழ் நாட்டு முதலீட்டாளர்களை அழைத்துவந்து அங்கு கடலட்டைப் பண்ணைகளைச் செய்ய முதலீடுகளைக் கொண்டு வருவதற்கு பேச்சுவார்த்தைகளை செய்திருந்தார். ஆனால் தற்போது அனுமதியில்லாமல் சீனர்கள் அங்கு நிரம்பி வழிவதாகவும், புதிய புதிய தொழில்நுட்பங்களை அவர்கள் பயன்படுத்துவதாகவும் கூறுகின்றார்கள். கடந்த பொருளாதார நெருக்கடி நிலையில் இந்தியா நான்கு பில்லியன் டொலருக்கும் அதிகமான தொகையினை உதவியாகத் தந்திருந்தார்கள். அப்படியானவர்களைப் பகைத்க் கொள்ளாமல், சீனர்கள் அங்கு நடமாடுவதைக் குறைத்துக் கொண்டு, இந்திய முதலீட்டாளர்களை பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.

கடன் வழங்கிய நாடுகளிடம் இலங்கை தமது கடனை மறுசீரமைக்குமாறு கோரிக்கை

கடனை பெற்றுக் கொண்ட பல நாடுகளிடம், இலங்கை தமது கடனை மறுசீரமைக்குமாறு கோரிக்கை விடுத்து வருகின்றது.

இலங்கை பெருமளவிலான கடனை சீனாவிடமிருந்து பெற்றுக்கொண்டுல்ளதால் அது பற்றியே அதிக அளவில் பேசப்பட்டு வருகின்றது. இது தொடர்பாக சமீபத்தில் சீன நிதி அமைச்சருடன், இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்.

இலங்கை கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சீன நிதி அமைச்சருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை வெற்றியளிக்கும் என எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கைக்கு கடன் உதவிகளை வழங்கிய பிரதான மூன்று நாடுகளுடனான பேச்சுவார்த்தைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, சீனா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய மூன்று நாடுகளுடன் இலங்கை தரப்பினர் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளனர். அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் இந்த பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கை நிதி அமைச்சர் அலி சப்ரி தலைமையிலான குழுவினர், இந்த பேச்சுவார்த்தைகளை கடந்த 15ம் திகதி ஆரம்பித்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் மற்றும் சீனா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளுடன் இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிக்கு உடனடி தீர்வு மற்றும் உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் முக்கிய நோக்கம் என ஜனாதிபதி கூறியுள்ளார்.

சியம்பலாண்டுவ பகுதிக்கு கள விஜயமொன்றை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அங்கு கருத்துரைத்த போதே இந்த விடயங்களை தெளிவூட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

இலங்கையில் வறுமை-இறைச்சி மீன்களை தவிர்க்கும் குடும்பங்கள்

இலங்கையிலுள்ள வறுமையான குடும்பங்கள் தமது உணவிலிருந்து இறைச்சி வகைகளை குறைத்துள்ளதாக இலங்கை செஞ்சிலுவை சங்கம் மற்றும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் ஆகியன நடத்திய ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

இலங்கை சுதந்திரத்தின் பின்னர் பாரிய பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ள நிலையில், நோயாளர்களும் குறைந்தளவிலான மருந்துகளையே பயன்படுத்தி வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதி 2022 ஆம் ஆண்டு 200 ரூபாவிலிருந்து 360 ரூபாவாக வீழ்ச்சியடைந்த நிலையில் உணவு பொருட்களின் விலை 50 வீதத்தாலும், ஏனைய பொருட்களின் விலை 70 வீதத்தாலும், உயர்ந்துள்ளன.

50 வீதமான குடும்பங்கள் தமது உணவில் இறைச்சி மற்றும் மீன்களை கைவிட்டுள்ளன.

11 வீதமானோர் புரத உணவை முற்றிலும் தவிர்த்துள்ளனர். இதில் பெருந்தோட்ட துறையினர் முழுமையான பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளார்கள். கடற்றொழில் சமூகமும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நெருக்கடியின் போதும் ஒரு வாய்ப்பு கிடைக்கும் அதனை வீணடிக்க முடியாது-உலக வங்கி அதிகாரி

இலங்கையின் நிதி நெருக்கடி நம்பகதன்மை மிக்க நிதிதிட்டத்தை செயற்படுத்துவதற்கான வாய்ப்பை இலங்கைக்கு வழங்கியுள்ளது என உலக வங்கியின் இலங்கைக்கான இயக்குநர் பாரிஸ் ஹடாட் ஜெர்வோஸ் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு நெருக்கடியின் போதும் ஒரு வாய்ப்பு கிடைக்கும் அதனை வீணடிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

கொவிட்பெருந்தொற்று நிலைமை உருவாகும் வரை இலங்கை மோசமான வறுமையை இல்லாதொழிக்கும் நிலையை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடி நாட்டை பெரும் குழப்பத்தில் தள்ளியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியானது உறுதியான மற்றும் நம்பகத்தன்மை மிக்க நிதி கட்டமைப்பு சீர்திருத்த வேலை திட்டத்தை உறுதி செய்வதற்கும் நடைமுறைப்படுத்துவதற்கும் நிலையான வளர்ச்சிப்பாதையில் திரும்புவதற்குமான ஒரு வாய்ப்பு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

2006 முதல் 2016 முதல் மிகமோசமான வறுமையை ஒழிப்பதை நோக்கி இலங்கை சென்றுகொண்டிருந்தது 11 வீதத்திலிருந்து 1.3 வீதமாக குறைந்து காணப்பட்டது 2 மில்லியன் மக்கள் வறுமையிலிருந்துமீட்கப்பட்டனர் எனவும் உலக வங்கியின் அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஆனால் இன்று இலங்கை முழுவதும் விவசாயிகள் முச்சக்கர வண்டி சாரதிகள் வீதியோர வியாபாரிகள் அரசஊழியர்கள் தனியார் உரிமையாளர்கள் என அனைவரும் வாழ்க்கையை கொண்டு செல்வதில் கடும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர்,இந்த பொருளாதார நெருக்கடி பல வருட முன்னேற்றத்தை பாதித்துள்ளது,நாடு 2009 இன் பின்னர் அதிகளவான வறுமையை எதிர்கொண்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

நல்லிணக்கம் தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் அமைச்சரவை உபகுழு!

இலங்கையில் வாழும் பல்லின மக்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதற்காக மற்றும் வடக்குக் கிழக்கு மோதல்களின் பின்னர் மீள்குடியமர்த்தல், காணி மற்றும் காணாமல் போன ஆட்கள் பற்றி மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதற்காக  ஜனாதிபதி  தலைமையில் அமைச்சரவை உப குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
 நல்லிணக்கம் தொடர்பான அமைச்சரவை உபகுழுவை நியமிப்பதற்காக ஜனாதிபதி  சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதன்படி குழுவின் ஏனைய உறுப்பினர்களாக பிரதமர் தினேஷ் குணவர்த்தன,  டக்ளஸ் தேவானந்தா, விஜயதாச ராஜபக்ஷ, அலி சப்ரி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Posted in Uncategorized

நீண்ட காலமாக சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் வடமாகாண ஆளுநரை சந்தித்தனர்

நீண்ட காலமாக சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் விபரங்கள் தொடர்பில் குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் இணைப்பாளர் முருகையா கோமகன் வடமாகாண ஆளுநருக்கு விளக்கமளித்தார்.தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் 22 பேருக்கு வழக்கு நடைபெறுகின்ற நிலையில் 24 பேர் தண்டனை வழங்கப்பட்டவர்களும் மற்றும் மேல்முறையீடு செய்தவர்களும் உள்ளனர்.

இதில் தீர்ப்புகளுக்காக தவணை இடப்பட்டவர்களும் உள்ள நிலையில் தீர்ப்பு வழங்காது வழக்கை ஒத்தி வைக்கும் செயற்பாடுகள் இடம் பெற்றுக் கொண்டிருக்கிறது.பெரும்பாலான வழக்குகள் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து தீர்ப்புகளும் தண்டனைகளும் வழங்கப்பட்டுள்ள நிலையில் குறைந்தபட்சம் அவர்களை புனர் வாழ்வு ஊடாக விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.அத்துடன் கோமகன் மேலும் விளக்கமளிக்கையில், 10 தொடக்கம் 26 ஆண்டுகள் சிறைச்சாலைகளில் 46 தமிழ் அரசியல் கைதிகள் உள்ளனர்.அவர்களை விரைவாக விடுவிப்பதற்கு ஆவணை செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

இதேவேளை குறித்த சந்திப்பில் மெய்நிகர் வழியாக இணைந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சி.வி விக்னேஸ்வரன் வட மாகாண ஆளுநர் மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு பக்கபலமாக செயல்படத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் நாங்கள் எடுக்கும் நடவடிக்கைக்கு மேலாக ஆளுநர் நடவடிக்கை எடுக்கும் போது அது சிறப்பாக இருக்கும்.

அரசியல் கைதிகளின் விடுதலையைத் துரிதப்படுத்துவதற்கு அவர்களின் வழக்கு நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்கு குழு ஒன்றை அமைக்க ஜனாதிபதியை கோருமாறு ஆளுநரிடம் கோரிக்கை விடுத்தார்.அத்துடன் , அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில், பிரேரிக்கப்பட்டதான அசோகா டீசில்வா ஆணைகுழு அறிக்கையை பார்த்தேன் குறித்த அறிக்கை தமிழ் அரசியல் கைதிகளின் முற்று முழுதாக விடுவிக்கப்பட வேண்டும் என கூறப்படவில்லை.ஜனாதிபதிக்கு தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு எழுத்து மூலம் கடிதம் அனுப்பியுள்ளேன் என தெரிவித்தார்.

இதன் போது, கருத்து தெரிவித்த குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் இணைப்பாளர் கோமகன் ஏற்கனவே தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் பல ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் திருப்திகரமான நடவடிக்கைகள் ஏதும் இடம் பெறவில்லை.கடந்த மாதம் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள், ஆளுநர் செயலகம் முன்பு போராட்டம் நடத்திய போது அவர்களை விரைவில் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் உறுதி அளித்தார்.

அதன் பிரகாரம் சிறைகளில் உண்ணாவிரதம் இருந்தவர்களையும் நேரில் சென்று உண்ணாவிரதத்தை கைவிடுமாறு நம்பிக்கை அளித்துச் சென்றார்.அதன்பின் குறுகிய காலத்தில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் நான்குக்கும் மேற்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

ஆகவே வடமாகாண ஆளுநர் அரசியல் கைதிகளின் விடயத்தில் கரிசனை கொண்டு செயல்படுகின்ற நிலையில் நீண்ட காலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு உதவ வேண்டும் என மேலும் தெரிவித்தார்.இதற்கு பதில் அளித்த ஆளுநர் குறித்த விடயம் தொடர்பில் விரைவாக ஜனாதிபதிக்கு எழுத்து மூலமாக கடிதத்தை அனுப்புவதாகவும் அதன் பிரதியை அனுப்புவதாகவும் தெரிவித்தார்.

Posted in Uncategorized

இந்த வார அமைச்சரவைத் தீர்மானங்கள்

2022.10.17 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்
2022 ஆம் ஆண்டு நிதி ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டத் திருத்தம் செய்வதற்காக கௌரவ ஜனாதிபதி அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட உரையில் பொருளாதாரத்தை திடமாகக் கட்டியெழுப்புதல், அரச சேவையை வினைத்திறனாக விருத்தி செய்தல் மற்றும் அரச வளங்களை பயனுள்ள வகையில் முகாமைத்துவம் செய்யும் நோக்கத்துடன் புதிய சட்டங்கள் சிலவற்றை அறிமுகப்படுத்தல் மற்றும் தற்போது காணப்படுகின்ற ஒருசில சட்டங்களின் ஏற்பாடுகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய தேவைகளும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதற்கமைய, திறைசேரியின் கீழ் காணப்படும் கட்டுப்பாட்டாளர் தலைமையதிபதி அலுவலகத்தின் பணிகளை விரிவாக்கம் செய்து அதற்குரிய சட்ட அங்கீகாரம் வழங்குவதற்கும், தேசிய சொத்துக்கள் ஆவணத்தைத் தயாரிப்பதற்கும் மற்றும் அரச சொத்துக்கள் தொடர்பாக மையப்படுத்திய தரவுத்தொகுதியை அறிமுகப்படுத்துவதற்கும் இயலுமாகும் வகையில் பொருத்தமான ஏற்பாடுகளை உள்வாங்கி அரச சொத்துக்கள் முகாமைத்துவத்திற்காக புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்காக சட்டமூலமொன்றை தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்கு நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
02. ஆயுள்வேத சட்டத்தை திருத்தம் செய்தல்
1961 ஆம் ஆண்டின் 31 ஆம் இலக்க ஆயுள்வேத சட்டம் இதற்கு முன்னர் ஒருசில சந்தர்ப்பங்களில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதுடன், நிலைபெறுதகு அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு இயலுமாகும் வகையிலும் மற்றும் சமகாலத் தேவைகளுக்குப் பொருத்தமான வகையிலும் குறித்த சட்டத்தை மேலும் திருத்தம் செய்ய வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, சுதேச மருத்துவத் துறையின் மேம்பாட்டுக்காக ஆயுள்வேத திணைக்களத்தின் சேவைகளை விரிவாக்கம் செய்வதற்காக மற்றும் ஆராய்ச்சி மூலிகைப் பூங்காக்களை உருவாக்கல் போன்ற பணிகளுக்குப் பொருத்தமான ஏற்பாடுகளை உள்வாங்கி ஆயுள்வேத சட்டத்தை திருத்தம் செய்வதற்காக சுகாதார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
03. குத்தகை அடிப்படையில் வழங்கப்படும் வளாகங்களின் உடமையை மீளப் பெற்றுக்கொள்ளும் (விசேட ஏற்பாடுகள்) சட்டம் 
குத்தகை அடிப்படையில் வழங்கப்படும் வளாகங்களின் உடமையை மீளப் பெற்றுக்கொள்ளும் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமொன்றை விதிப்பதற்காக சட்டமூலமொன்றைத் தயாரிப்பதற்காக 2021 செப்ரெம்பர் மாதம் 27 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்;டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது. குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காகவும் நீதி, சிறைச்சாலைகள் விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
04. பங்கேற்பு ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்காக ‘ஜன சபை முறைமையை’ நிறுவுவதற்காக ‘தேசிய ஜன சபை தேசிய செயலகத்தை’ தாபித்தல்
இலங்கையில் இதுவரை நடைமுறையிலுள்ள பிரதிநிதித்துவ ஜனநாயகக் கட்டமைப்பின் மூலம் மக்களின் உண்மையான பிரச்சினைகள் போதியளவு விழித்துக் கூறப்படாமையால், இம்முறைமையில் ஆட்சி மையம் மற்றும் மக்களுக்கும் இடையில் காணப்படுகின்ற தொடர்புகள் விலகிச் சென்று கொண்டிருப்பதால், கொள்கைத் தீர்மானங்களை எடுக்கின்ற செயன்முறையில் பொதுமக்களின் கருத்துக்களுக்கு போதுமானளவு செவிமடுக்காமையாலும், அது தொடர்பாக சமூகத்தில் விமர்சனங்களும் உருவாகி வருகின்றமையாலும், குறித்த விமர்சனங்களின் அடிப்படையில் சமூகத்தில் பிரதிநிதித்துவ ஜனநாயகத்திற்கு எதிரான கருத்துக்கள் மற்றும் எதிர்ப்புக்கள் உருவாகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலைமையில் கிராமிய மட்டத்தில் பங்கேற்பு ஜனநாயகப் பண்புகளுடன் இயங்குகின்ற நிறுவனக் கட்டமைப்பொன்றில், அரச அலுவலர்களும் மற்றும் பொது மக்களும் இணைந்து கிராமத்திலுள்ள பிரச்சினைகளைக் கலந்துரையாடக் கூடிய, அபிவிருத்தி முன்னுரிமைகளைத் தீர்மானிக்கக் கூடிய மற்றும் கிராமிய மக்களுக்கு தீர்மானமெடுக்கின்ற செயன்முறையில் பங்கேற்கக் கூடிய பலம்வாய்ந்த பொறிமுறையொன்று தேவையாகும்.
அரச கொள்கை வகுப்புக்காக மக்களுக்கு தமது கருத்துக்களை முனைப்பாக வழங்கக் கூடியதாக இருக்கின்ற மற்றும் சமூகப் பங்கேற்புடன் குறித்த கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு இயலுமாகும் வகையிலான ஏற்பாடுகள் அடங்கிய பொறிமுறையின் மூலம் அதிகாரிகள்வாதம் மற்றும் தன்னிச்சையான அரசியல்மயப்படுத்தல் மூலம் நிகழக்கூடிய பொதுமக்கள் அழுத்தங்களை பயனுள்ள வகையிலும் வினைத்திறனாகவும் தடுப்பதற்கு இயலுமாகும். அதற்கமைய, அரச கொள்கை வகுப்பு மற்றும் குறித்த கொள்கையை வெற்றிகரமாக அமுலாக்குவதற்காக பொதுமக்களின் பங்கேற்புடன் பெற்றுக்கொள்ளக் கூடிய சுயாதீன நிறுவனக் கட்டமைப்புடன் கூடிய நியாயமான சமூகத்திற்கான தேசிய இயக்கத்தின் தலைமையில் ‘ஜன சபை முறைமை’ தொடர்பான கொள்கைப் பத்திரமொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த கொள்கைப்பத்திரத்தின் மூலம் நாட்டிலுள்ள அனைத்து கிராம அலுவலர் பிரிவுகளையும் உள்ளடக்கியதாக ‘கிராமிய ஜன சபை’ நிறுவுவதற்கும், தேசிய மட்டத்தில் ‘தேசிய ஜன சபை’ நிறுவுவதற்கும் முன்மொழியப்பட்டுள்ளது. குறித்த கொள்கைப்பத்திரத்தின் மூலம் முன்மொழியப்பட்டுள்ள ‘ஜன சபை முறைமை’ அரசானது அடிப்படை கொள்கையாக ஏற்றுக்கொள்வதற்கும், ‘ஜன சபை முறைமை’ நிறுவுவதற்காக தேசிய மட்டத்தில் சுயாதீன கேந்திர நிறுவனமாக ‘தேசிய ஜன சபை செயலகம்’ தாபிப்பதற்கும் கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
05. நல்லிணக்கம் தொடர்பாக அமைச்சரவை உபகுழுவொன்று நியமித்தல்
இலங்கையில் வாழும் பல்லின மக்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதற்காக மற்றும் வடக்குக் கிழக்கு மோதல்களின் பின்னர் மீள்குடியமர்த்தல், காணி மற்றும் காணாமல் போன ஆட்கள் பற்றி மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதற்காக கௌரவ ஜனாதிபதி அவர்களின் தலைமையில் மற்றும் கீழ்க்குறிப்பிட்டுள்ள அங்கத்தவர்களுடன் கூடியதாக நல்லிணக்கம் தொடர்பான அமைச்சரவை உபகுழுவை நியமிப்பதற்காக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
• கௌரவ தினேஷ் குணவர்த்தன அவர்கள் – பிரதமர்
• கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள் – கடற்றொழில் அமைச்சர்
• கௌரவ (கலாநிதி) விஜயதாச ராஜபக்ஷ அவர்கள்
நீதி, சிறைச்சாலைகள் விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர்
• கௌரவ அலி சப்ரி அவர்கள் – வெளிவிவகார அமைச்சர்

இழப்பீடு வேண்டாம் சர்வதேச விசாரணையே வேண்டும் – கொழும்பில் உறவுகள் போராட்டம்

வடக்கு மற்றும் கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஐ.நா அலுவலகத்திற்கு முன்பாக நீதி கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வடக்கு மற்றும் கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கான சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் இடம்பெற்று வருகின்றது.

காணாமல் போனோர் அலுவலகம் ஊடாக வழங்கப்படும் இழப்பீடு தமக்கு வேண்டாம் என்றும் சர்வதேச விசாரணையே தேவை என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு மேலதிகமாக ஒரு இலட்சம் ரூபாயை இழப்பீடாக வழங்குவதாக கடந்த வாரம் அரசாங்கம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.