21வது திருத்த சட்ட விடயத்தில் தமிழ் பேசும் தரப்புக்கள் எப்படியான அணுகுமுறையை கையாள்வது என்பதில் ஒருமித்த நிலைப்பாட்டை எடுக்க முடியுமா, அப்படியொரு நிலைப்பாட்டை எடுத்தால் எவ்வாறான நகர்வை மேற்கொள்வது என்பதில் இறுதி தீர்மானம் எடுக்க தமிழ் பேசும் கட்சிகள் இன்று(6)தமது மூன்றாவது சுற்று கலந்துரையாடல் மேற்கொள்ளவுள்ளன.
தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி, தமிழ் மக்கள் கூட்டணி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகளே இன்று சந்தித்து பேசவுள்ளனர்.
இணையவழி கலந்துரையாடலாக இன்றைய கலந்துரையாடல் அமையும்.
இந்த விவகாரம் குறித்து மேற்படி தரப்புக்கள் ஏற்கனவே இரண்டு முறை கலந்துரையாடினர்.
கடந்த மே 30, ஜூன் 1 ஆகிய திகதிகளில் அந்த கலந்துரையாடல் நடந்தது.
செல்வம் அடைக்கலநாதன்,மாவை சேனாதிராசா,த.சித்தார்த்தன், மனோ கணேசன்,க.வி.விக்னேஸ்வரன்,ஜீவன் தொண்டமான்,செந்தில் தொண்டமான், சுரேஷ் பிரேமச்சந்திரன், என்.சிறிகாந்தா,கோவிந்தன் கருணாகரம், வினோ நோகராதலிங்கம்,எம்.ஏ.சுமந்திரன்,சி.சிறிதரன்,ரெலோ ஊடக பேச்சாளர் சுரேந்திரன் உள்ளிட்டவர்கள் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்தனர்.
இன்றைய கலந்துரையாடலிலும் இவர்கள் கலந்து கொள்வார்கள்.
21வது திருத்த சட்ட விவகாரத்தில் தமிழ் தரப்புக்கள் எவ்வாறான அணுகுமுறை மேற்கொள்வது, திருத்த யோசனைகள் ஏதும் சமர்ப்பிக்க வேண்டுமா?, அதை ஒன்றாக சமர்ப்பிக்க முடியுமா என்பது தொடர்பில் கலந்துரையாடி இன்று இறுதி முடிவிற்கு வருவார்கள்.