நாளை முதல் மூன்று நாட்களுக்கு தொடர்ந்து போராட்டம்

ஆட்களை தன்னிச்சையாக கைது செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை (18) முதல் மூன்று நாட்கள் போராட்டம் நடத்தப்படும் என தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையம் தெரிவித்துள்ளது.

அந்த போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையத்தின் இணை அழைப்பாளர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“இலங்கை மனித உரிமை மீறல்களை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவால் மேஜிக் செய்து மாற்ற முடியாது” – அம்பிகா சற்குணநாதன்

பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுக்கொண்டார் என்பதற்காக இலங்கையில் இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல்களை மாயாஜால வித்தைகளை செய்து மாற்றிவிட முடியாது என, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையர் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்.

“மனித உரிமை நிலவரங்களில் ஏற்படும் முன்னேற்றங்கள் தனிமனிதரில் தங்கியிருப்பதில்லை. புதிய ஒருவர் பதவிக்கு வருவதால் மாத்திரம் நிலைமைகளில் முன்னேற்றம் ஏற்படாது.

பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுக்கொண்டார் என்பதற்காக மாயாஜால வித்தைகளை செய்து மனித உரிமைகள் செயற்பாடுகளில் அவரால் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. ” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

ஜோன்ஸ்டன், சனத் நிஷாந்த உள்ளிட்ட 24 பேரை கைது செய்ய உத்தரவு!

காலி முகத்திடல் மற்றும் அலரி மாளிகைக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடந்த 9 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் உள்ளிட்ட 22 பேரை கைது செய்யுமாறு குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு சட்டமா அதிபர் திணைக்களம் பணிப்புரை விடுத்துள்ளது.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்து சட்டமா அதிபர் இந்த பணிப்புரையை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, சனத் நிஷாந்த, சஞ்சீவ எதிரிமான்ன, மிலான் ஜயதிலக்க மற்றும் மேல் மாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட 22 பேரை கைது செய்யுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த 22 சந்தேக நபர்கள் தொடர்பில் நேரடி, சூழ்நிலை மற்றும் தொழில்நுட்ப சாட்சியங்கள் இருப்பின் அவர்களை உடனடியாக கைது செய்யுமாறு சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு கைது செய்யப்படும் சந்தேக நபர்களுக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யுமாறு சட்டமா அதிபர் திணைக்களம் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு பணிப்புரை விடுத்துள்ளது.

மற்றுமொரு ராஜபக்ஷவிற்கு பாராளுமன்றில் முக்கிய பதவி

பிரதி சபாநாயகராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் பரிந்துரைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் ராஜபக்ச தெரிவு செய்யப்பட்டார்.

அஜித் ராஜபக்ச 109 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் ரோஹினி கவிரத்ன 78 வாக்குகளை மட்டுமே பெற்றார்.

23 பேர் செல்லுபடியற்ற வாக்குகளை செலுத்தியுள்ளனர்.

ஜனாதிபதிக்கு அதிருப்தி தெரிவிக்கும் பிரேரணையை விவாதத்திற்கு எடுக்க தீர்மானம்

ஜனாதிபதிக்கு அதிருப்தி தெரிவிக்கும் பிரேரணையை இன்று(17) விவாதத்திற்கு எடுப்பதற்கு கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு குறித்து இந்தியா கவனம் எடுக்க வேண்டியது அவசியம்-இரா.சம்பந்தன்

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு குறித்து இந்தியா அவதானம் செலுத்த வேண்டியது அவசியம் என்றும் இவ்விடயத்தில் இந்தியாவுக்கு இருக்கின்ற பொறுப்பை உரியவாறு நிறைவேற்ற வேண்டியது அவசியம் என்றும் இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லேவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லேவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று முன்தினம் கொழும்பு இல்லத்தில் நடைபெற்றது.

இந்திய தூதுவருடன் சுமார் ஒரு மணிநேரம் இடம்பெற்ற கலந்துரையாடலில் தமிழர்களுக்கான அரசியல் தீர்வை முன்னிறுத்திய நடவடிக்கைகள் தற்போது ஸ்தம்பித்துள்ளது என்று அவரிடம் சுட்டிக் காட்டியதாகவும் இவ்விடயத்தில் இந்தியாவுக்கு இருக்கின்ற பொறுப்பை உரியவாறு நிறைவேற்ற வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தியதாகவும் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

மேலும், “தற்போது நாட்டில் குழப்பகரமான சூழ்நிலை நிலவுவதால், தமிழ் மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என்பதால் இதுகுறித்து இந்தியா அவதானம் செலுத்த வேண்டும் என்றும் தூதுவர் கோபால் பாக்லேவுடம் சம்பந்தன் எடுத்துரைத்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள தூதுவர், இப்போது நாட்டில் இடம்பெற்று வரும் விடயங்களை உன்னிப்பாக அவதானித்துவருவதாகத் தெரிவித்துள்ளார். அதேவேளை இச்சந்திப்பின்போது புதிய பிரதமரின் நியமனம் தொடர்பில் தூதுவர் கோபால் பாக்லே ஏதேனும் தெரிவித்தாரா என்று எம்.ஏ.சுமந்திரனிடம் வினவியபோது, ‘இல்லை’ என்று பதிலளித்த அவர், இவ்விடயத்தில் தமது நிலைப்பாடு என்னவென்பதைத் தாம் தூதுவரிடம் தெளிவுபடுத்தியதாகக் கூறியுள்ளார்.

இறக்குமதி மற்றும் கடன்கள் மூலம் இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது- சி.சிறிதரன்

இறக்குமதி மற்றும் கடன்கள் மூலம் இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது எனவும், சுய பொருளாதாரத்தில் மக்களிற்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் அது சாத்தியமில்லை எனவும் பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் தெரிவித்துள்ளார்.

தமிழரசு கட்சி அலுவலகத்தில் இன்று முற்பகல் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் அரசியல் ஒழுங்குகள் வித்தியாசமான முறையில் பரபரப்புடன் சென்றுகொண்டிருக்கின்றது. முக்கியமாக இலங்கையின் பொருளாதாரம் மீளுமா உள்ளிட்ட முக்கியமான கேள்விகள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

70வதுகளில் இலங்கையில் ஏற்பட்ட பஞ்சம் பட்டினி போல அடுத்தடுத்த வாரங்களில் இலங்கையில் ஏற்படலாம் எனவும் கூறப்படுகின்றது. இந்த நிலையில்தான் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுள்ளார்.

முதலில் ராஜபக்ச குடும்பம் குறிப்பாக கோட்டாபய ராஜபக்ச பதவி விலகி செல்ல வேண்டும் என குரல் கொடுத்தவர்களில் ஒருவராக ஒரு ஆசனத்துடன் பாராளுமன்ற வந்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க அவர்கள் மிக பகிரங்கமாகவே இந்த கோரிக்கையை முன்வைத்து வந்தார்.

அவருடைய கோரிக்கைகள் இப்பொழுது காற்றிலே பறக்கவிடப்பட்டு அதே ராஜபக்ச அரசியல் பதவியேற்றிருக்கின்றார். ஆனால் அவரது காலத்தில் சிலர் பொருளாதார மாற்றங்கள் வரும் என்று நம்புகின்றார்கள். பசில் ராஜபக்ச பொறுப்பேற்ற காலத்திலும் இவ்வாறுதான் செய்திகள் வந்தன.

ஆனால் இலங்கையில் பொருளாதாரம் அதள பாதாளத்திற்குள் சென்றுள்ளது. அதனை கட்டியெழுப்ப நீண்ட காலங்கள் செல்லும். அதாவது மக்கள் தாம் வாழமுடியும் என்று நம்பிக்கை கொள்ளக்கூடிய சுய பொருளாதார சூழல் ஏற்பட வேண்டும். அதற்கான உரவகைகள் உள்ளிட்ட விடயங்களை மேற்கொண்டு கொடுக்கும்போதுதான் பொருளாதாரம் ஓரளவு முன்னிலையை கொடுக்கும்.

அதைவிடுத்து மசகு எண்ணையை இறக்கி அதனை சுத்திகரித்து ஏற்றுமதி செய்வதோ அல்லது, துணியை இறக்குமதி செய்து புடவையாக ஏற்றுமதி செய்வதோ முடியாத ஒன்றாகும். அதேவேளை சுற்றுலா உள்ளிட்ட விடயங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கடன்களை நம்பி பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது.

அந்த வகையில் ரணில் விக்ரமசிங்கவின் வருகை ஆரோக்கியமானதாக இருக்கும் என்று குறிப்பிட விரும்பவில்லை. அவருடைய அரசு தக்கவைக்கப்படுமா அல்லது கொண்டுசெல்லப்படுமா என்பதை எதிர்வரும் நாட்கள்தான் தீர்மானிக்கும்

இந்த நிலையில் போராட்டங்களும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. எங்களது மக்களின் சுய பொருளாதாரம் தொடர்பில் நாங்கள் கவனம் செலுத்தி அதனை கட்டியெழுப்ப கடும் முயற்சிகளை நாங்கள் மேற்கொண்டு வருகின்றோம் என தெரிவித்தார்.

Posted in Uncategorized

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலினை தொடர்ந்து விசாரணைகளிற்கு பிரதமர் இடமளிக்கக்கூடாது-அருட்தந்தை மா.சத்திவேல்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை தொடர்ந்து விசாரணைகளிற்கு புதிய பிரதமர் இடமளிக்கக்கூடாது என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவரால் இன்று (14) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

முள்ளிவாய்க்கால் கஞ்சி வார்ப்போடு முள்ளிவாய்க்கால் வாரம் ஆரம்பமாகியுள்ளது. எதிர்வரும் 18ஆம் திகதி முள்ளிவாய்க்காலிலும் தமிழர் தாயகத்தின் பல்வேறு இடங்களிலும் யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களுக்கு மிகவும் உணர்வு பூர்வமாக ஈகை சுடரேற்றும் நிகழ்வு நடாத்தபடவுள்ளது. அந்நாளில் அரசியல் பிரகடனமும் செய்யப்படும். இதற்கு

எந்த வகையிலும் எவராலும் தடைகளோ, அதனை நடத்துகின்றவர்களுக்கு நிகழ்வை தொடர்ந்து விசாரணைகள் இடம்பெறுவதற்கோ புதிய பிரதமர் இடமளிக்கக்கூடாது. “கோட்டா கோ கம ( கோட்டா போ கிராமம்) போராட்டத்திற்கு தடை ஏற்படாது” என கூறியதைப் போன்று முள்ளிவாய்க்கால் சுடரேற்றும் நிகழ்வுக்கும் தடைகள் ஏற்படாது அதனை நடத்துவதற்கு இடம் அளிப்பது ஜனநாயகமாகும்.

கடந்து 2015ஆம் ஆண்டைத் தொடர்ந்து மைத்திரி மற்றும் தற்போதைய பிரதமர் ரணில் தலைமையிலான நல்லாட்சிக் காலத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு பாரியதடைகள் இருக்கவில்லை. ஆனால் 2019 ஆம் ஆண்டிலிருந்து கோத்தா ராஜபக்ச தலைமையிலான ஆட்சியில் இராணுவம் மற்றும் புலனாய்வு பிரிவினரால் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலேயே முள்ளி வாய்க்கால் நினைவேந்தல் நடந்தது.

இதனை ஒழுங்கு செய்தவர்கள், பங்கேற்றவர்கள் என பல்வேறு தரப்பினருக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதோடு காரணமின்றி விசாரணைக்கும் அழைக்கப்பட்டனர். இது போரில் கொத்துக்கொத்தாக கொல்லப்பட்டவர்களை கூட்டாக நினைவு கூறுவதையும் வலி சுமக்கும் மக்கள் ஆறுதல் அடைவதையும் தடுக்கும் அநாகரிக செயலாயும் அமைந்தது. இது இனியும் நடக்கக் கூடாது என்பதே தமிழர்களின் எதிர்பார்ப்பாகும்.

ஏனெனில் தற்போது நாட்டில் நிலவுகின்ற பொருளாதார நெருக்கடிகளை தொடர்ந்து கொந்தளிக்கும் அடித்தட்டு மக்கள் பல்வேறு பிரதேசங்களிலும் போராட்டம் நடத்துவதோடு கொழும்பில் காலிமுகத்திடலில் இளைஞர்களால் தொடர் போராட்டம் நிகழ்த்தப்படுகின்றது.

அவசரகால சட்டம், ஊரடங்கு சட்டம் அறிவித்த நிலையிலும் போராட்டம் தொடர்வதை தமிழ் மக்கள் அவதானித்து வருகின்றனர். இவற்றிற்கு பாரிய அளவில் நேரடியாக அச்சுறுத்தல் விடுக்கப்படவில்லை முன்னால் பிரதமரின் அடவாடித்தனத்தைத் தவிர நடத்துபவர்களை விசாரணை என அழைக்கவில்லை.

இதனைவிட தற்போதைய புதிய பிரதமர் “கோட் கோ கம” ( கோட்டா போ கிராமம்) மீது கை வைக்க மாட்டேன்” என பகிரங்கமாக அறிவித்துள்ளார். இது அவரின் அடுத்த கட்ட அரசியல் இராஜதந்திர செயற்பாடாக இருக்கலாம். எனினும் இக் கூற்று போராட்டக்காரர்களுக்கு பாதுகாப்பு கவசமாக அமைந்துள்ளது. போராட்ட சுதந்திரத்தையும் அளித்துள்ளது. இது வரவேற்கத்தக்கதே.

காலிமுகத்திடல் நடக்கும் போராட்டமும் அதனையொட்டி நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் நடக்கும் போராட்டம் வயிறு மற்றும் பொருளாதாரம் சார்ந்தது. மக்களின் அன்றாட தேவைகளை நிறைவேற்றிவிட்டால் போராட்டம் நகரும், அதற்கு ஆயுள் இல்லை என பிரதமர் நினைத்திருக்கலாம். ஆதலால் போராட்டத்திற்கு அனுமதி அளித்திருக்கலாம்.

ஆனால் வடகிழக்கு மக்களின் போராட்டம் தமிழர்களின் வாழ்வோடும், உயிரோடும், இரத்தத்தோடும் கலந்த நீண்டகால அரசியல் போராட்டமாகும். இன அழிப்பு, இனப்படுகொலை, உடைமைகள் இழப்பு, அவர் இழப்பு என்பவற்றிற்கு முகங்கொடுத்த மக்கள், இலட்சத்திற்கும் மேற்பட்டோரின் கொலைகளை நேரில் பார்த்தனுபவித்தவர்கள் அரசியல் இலக்கை அடைவதில் உறுதியோடு மக்கள் சக்தியாக திரண்டு வருடா வருடம் மே பதினெட்டில் ஈகைச்சுடர் ஏற்றுகின்றனர். இது தமிழர்களின் அரசியல்.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு வித்திட்டு ஆதரவளித்தவரும் தற்போதைய பிரதமரே இவர் பிரதமராக தலைமையேற்று இருக்கும் இக் காலகட்டத்தில் ஆர்ப்பாட்டமோ, ஊர்வலமோ, கோசங்களோ இன்றி அமைதியான முறையில் உயிர்த்தியாகமானவர்களை நினைந்து அவர்களுக்கு ஈகைச் சுடரேற்றுவதற்கு தடைகளை ஏற்படுத்துவது ஏற்படுத்துவதற்கும் இடமளிப்பது எந்த வகையிலும் நியாயமில்லை. ராஜதந்திர ரீதியில் தமிழ் மக்களை அணுகவும் இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தெற்கின் மக்களுக்கு இருக்கும் சுதந்திரம் வடக்கின் மக்களுக்கு கிடைக்க வழி ஏற்படுத்த வேண்டும். தற்போதைய சூழ்நிலையில் தமிழ் மக்கள் தம்முடைய துயர் போக்கவும் வலிகளை ஆற்றிக் கொள்வதற்கும் துணை நிற்க வேண்டும் என மேலும் தெரிவித்தார்.

Posted in Uncategorized

”அரசாங்கத்தை ஆதரிக்கப் போவதில்லை”: ஜனாதிபதிக்கு சஜித் கடிதம்!

ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்தவர்கள் அமைச்சரவையில் அங்கம் வகிக்க மாட்டார்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச,  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கு அறிவித்துள்ளார்.

நேற்று (12) ஜனாதிபதி அனுப்பியிருந்த கடித்திற்கு பதில் வழங்கும் வகையில், எதிர்க்கட்சித் தலைவர் இதனைக் கூறியுள்ளார்.

மே மாதம் 12 ஆம் திகதி ஜனாதிபதிக்கு எதிர்க்கட்சித் தலைவர் அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு உடன்பட்டு ஸ்தாபிக்கப்படும் அரசாங்கத்தில் பிரதமராக மக்களுக்கு பணியாற்ற அர்ப்பணிப்பு செய்வதாக குறிப்பிட்டிருந்தார்.

பிரதமர் பதவியை ஏற்குமாறு அழைப்பு விடுத்தபோது, அதனை ஏற்றுக்கொள்ள  விருப்பமில்லையென்று கூறவில்லையென்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஜனாதிபதிக்கு நினைவுபடுத்தியுள்ளார்.

மக்களின் விருப்பத்திற்கு மாறாக, ஜனாதிபதி தொடர்ந்தும் பதவியில் இருப்பதற்கு மேற்கொள்ளப்படும் திட்டங்கள் மக்களின் இறையாண்மை மீது மேற்கொள்ளப்படும் தாக்குல் என்பது ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு எனவும் சஜித் பிரேமதாச  ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரவைக்கு வாருங்கள்: அழைத்தார் புதிய பிரதமர்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் தலைமைத்துவத்தில்  அமைக்கும் புதிய அமைச்சரவையில் அமைச்சுப்பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலையில் இருந்து மீட்டெடுக்க ஒத்துழைப்பு வழங்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல அரசியல் கட்சிகளுக்கும் தனித்தனியே அழைப்பு விடுத்துள்ளார்.

புதிய பிரதமராக பதவியேற்ற ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, நேற்றைய தினம் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். இந்நிலையில் ஐக்கிய மக்கள் சக்தி, மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி, பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் விமல்,உதய, வாசு தலைமையிலான அணியினர், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி உள்ளிட்ட ஏனைய மலையகக் கட்சிகளுக்கு தனித்தனியே அழைப்பு விடுத்துள்ளார்.

ஒரு சிலருடன் நேரடியாக தொலைபேசியிலும் உரையாடியுள்ளார்.  எனினும் ரணிலின் அழைப்பை பிரதான கட்சிகள் நிராகரித்துள்ளதுடன் ஒரு சிலர் மறைமுகமாக ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

Posted in Uncategorized