எங்கள் உறவுகளை கொன்றொழித்தவர்கள் இன்று சொந்த நாட்டுக்குள்ளேயே பாதுகாப்புத் தேடி ஒழிந்துகொண்டிருக்கின்றார்கள்… – த.செல்வராணி

தமிழர்கள் விட்ட கண்ணீர் இன்று இந்த அரசை ஆட்டிப் படைக்கின்றது. எங்களது உறவுகளை அழித்தவர்கள் இன்று தங்களது சொந்த நாட்டிற்குள்ளே பாதுகாப்புத் தேடி ஓடிக் கொண்டிருக்கின்றார்கள் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க அம்பாறை மாவட்டத் தலைவி த.செல்வராணி தெரிவித்துள்ளார்.

‘உப்பில்லாக் கஞ்சி பரிமாறுவோம் முள்ளிவாய்க்கால் வலி சுமந்த கதை பகிர்வோம்’ என்ற தொனிப்பொருளில் முள்ளிவாய்க்கால் அவல நிலையை நினைவு கூரும் முகமாக வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வின் இரண்டாம் நாள் இன்றைய தினம் அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் பிரதேசத்தில் அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போதே அவர் மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசன் அன்றறுப்பான் தெய்வம் நின்றறுக்கும் என்பது இன்று பதின்மூன்று வருடங்களின் பின்னர் இலங்கையில் நிரூபிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. எங்களது சொந்தங்களை, உறவுகளை, உடமைகளை அழித்தவர்கள் இன்று தங்களது சொந்த நாட்டிற்குள்ளே பாதுகாப்புத் தேடி ஓடிக் கொண்டிருக்கின்றார்கள். இருப்பதற்கு தக்க இடமில்லாமல், ஒழிப்பதற்குக் கூட இடமில்லாமல் தவித்துக் கொண்டிருக்கின்றார்கள். தமிழர்கள் விட்ட கண்ணீர் இன்று இந்த அரசை ஆட்டிப் படைக்கின்றது என்று தெரிவித்தார்.

இந்நிகழ்வில் சங்கத்தின் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டு ‘முள்ளிவாய்க்கால் உப்பிலாக் கஞ்சி’ தயார் செய்து பிரதேச பொதுமக்களுக்கு வழங்கினர். இதனைப் பொதுமக்;களும் பெரும் ஆவலுடனும், உணர்வு பூர்மாகவும் அருந்திக் கொண்டனர்.

2009ம் ஆண்டு இறுதி யுத்த காலப் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் நினைவாகவும், அவ்வுறவுகள் பட்ட அவலங்களை பறைசாற்றும் முகமாகவும் முள்ளி வாய்க்கால் கஞ்சிவாரம் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது. குறித்த நிகழ்வானது மே 12 தொடக்கம் மே 18 வரையான காலப்பகுதிகளில் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் அனைத்து மாவட்டங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அரசுடன் இணைந்து பணியாற்றுவோம்: கொழும்பில் உள்ள இந்திய தூதர்

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்றதும் அரசியல் ஸ்திரதன்மை ஏற்படும் நம்பிக்கை வந்துள்ளதாக இந்திய உயர் ஆணையரகம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல், பொருளாதார நெருக்கடியையடுத்து மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியை ராஜிநாமா செய்ததையடுத்து  புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க இன்று பதவி ஏற்றுக் கொண்டுள்ளார்.

இந்நிலையில், இலங்கைக்கான இந்திய உயர் ஆணையரகம் (தூதரகம்) தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இலங்கையில் ஜனநாயக வழிமுறைகளின்படி பிரதமர் பதவி ஏற்றுள்ளார். இதன் மூலம் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்படும் என்கிற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இலங்கை அரசுடன் இணைந்து பணியாற்றுவோம்,’ என்று தெரிவித்துள்ளது.

மஹிந்தவுக்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடையுத்தரவு!

காலிமுகத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட 17 பேருக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

சட்டத்தரணிகள் குழுவொன்றினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கொன்னை அடிப்படையாகக் கொண்டே இவர்களுக்கு வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

மகிந்த ராஜபக்‌ஷ, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, நாமல் ராஜபக்‌ஷ, சனத் நிஷாந்த, ரோஹித அபேகுணவர்தன, பவித்திரா வன்னியாராச்சி உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இவ்வாறு வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பொதுஜன பெரமுனவின் உள்ளூராட்சி அரசியல்வாதிகள், தொழிற்சங்க பிரதிநிதிகள் சிலருக்கும் வெளிநாடு செல்ல நீதிமன்றத்தினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

”பிரபலமான அமைச்சு பதவிகளை நாங்களும் பெறலாம்”: மனோ

இந்த நிமிடம்கூட, கட்சியாக நாம் முடிவு செய்தால், மிக பிரபலமான அமைச்சு பதவிகளை பெற்று ஆட்சியில் நாம் பங்கு பெறலாம் என்று மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
தனது பேஸ்புக் பக்கத்திலேயே மனோ கணேசன் இதனை தெரிவித்துள்ளார்.
அவரின் அந்தப் பதிவு வருமாறு,
ரணில் விக்கிரமசிங்க தனிநபராக சபைக்கு வந்தார். இப்போது பிரதமர்.
எதிர்வரும் தினங்களில், அவர் ஆட்சியமைத்து, கபினட் அமைத்தால், அவருக்கு 113+ கிடைக்கலாம். அப்போது அவர் தனிநபர் அல்ல. ஆகவே ஆளட்டும்.
அவருக்கு எமது பண்பான வாழ்த்துகள்.
ரணிலுக்கு இழக்க எதுவுமில்லை. எமது ஐக்கிய மக்கள் கூட்டணி, ஆட்சி பொறுப்பை ஏற்காமைக்கு காரணம், பிரதான எதிரணியான எமது கொள்கை கோட்பாடுகள்.
நமது கட்சி, தமிழ் முற்போக்கு கூட்டணி, சிறுபான்மை கட்சி. இந்த நிமிடம்கூட, கட்சியாக நாம் முடிவு செய்தால், மிக பிரபலமான அமைச்சு பதவிகளை பெற்று ஆட்சியில் நாம் பங்கு பெறலாம். அதற்கான அழைப்பு எமக்கு எப்போதும் இருக்கிறது.
ஆனால், அதை நாம் செய்யவில்லை. மாறாக வெளியிலிருந்து பிரதமரை, எமது “முன்னாள் பிரதமரை” வாழ்த்துகிறோம்.
தற்சமயம், தமிழ் முற்போக்கு கூட்டணியாக, நாம் எதிரணியில் இருக்கிறோம். நடப்புகளை அவதானித்து பொறுப்புடன் கட்சியாக பயணிக்கிறோம்.
Posted in Uncategorized

பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவிப்பிரமாணம்!

இலங்கையின் புதிய பிரதமராக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

கடந்த 9 ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட அசாதார சூழ்நிலையை அடுத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகினார்.

இதனை அடுத்து அமைச்சரவையும் கலைக்கப்பட்ட நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் சற்று முன்னர் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

இதே வேளை, புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்கிரமசிங்கவுக்கு முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வாழ்த்து தெரிவித்துள்ளார்.

டுவிட்டர் பதிவு ஒன்றின் ஊடாக அவர் தனது வாழ்த்துச் செய்தியினை தெரிவித்துள்ளார்.

நாடு எதிர்நோக்கும் நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து மீண்டு வர வேண்டும் எனவும் அவர் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

பொய்ப் பிரச்சாரத்தின் மூலம் பொதுமக்களை தவறாக வழிநடத்தும் முயற்சியை வன்மையாகக் கண்டிக்கிறேன் – சரத் பொன்சேகா

தற்போதைய ஜனாதிபதியின் கீழ் அரசாங்கத்தில் எந்தவொரு பதவியையும் ஏற்கத் தயாராக இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

பிரதமர் பதவியை வழங்குவதற்காக, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தொடர்புகொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவித்திருந்தன.இந்த நிலையிலேயே தனது உத்தியோகபூர்வ முகநூல் கணக்கின் பதிவில் சரத் பொன்சேகா இதனைத் தெரிவித்துள்ளார்.

பொய்ப் பிரச்சாரத்தின் மூலம் பொதுமக்களை தவறாக வழிநடத்தும் முயற்சியை தான் வன்மையாகக் கண்டிப்பதாகவும், கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தில் எந்தவொரு பதவியையும் திட்டவட்டமாக ஏற்கப்போவதில்லையெனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரச தலைவரின் கீழுள்ள அரசாங்கத்தில் எந்தவொரு பதவியையும் ஏற்கத் தயாராக இல்லை என அந்த பதிவில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

“கஞ்சி பரிமாறுவோம் முள்ளிவாய்க்கால் வலிசுமந்த கதை பகிர்வோம்”,என்னும் தலைப்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

முள்ளிவாய்க்காலை படுகொலை வாரம் வடக்கு கிழக்கில் இன்று ஆரம்பமானது.2009ஆம் ஆண்டு நடைபெற்ற யுத்த காலத்தில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் நினைவாக மே மாதம் 12ஆம் திகதி தொடக்கம் 18ஆம் திகதி வரையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி நினைவேந்தல் வாரம் கடைப்பிடிக்கப்படுகின்றது.

“கஞ்சி பரிமாறுவோம் முள்ளிவாய்க்கால் வலிசுமந்த கதை பகிர்வோம்”,என்னும் தலைப்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் கடைப்பிடிக்கப்படுகின்றது.
இறுதிக் காலப்பகுதியில் முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்கள் எதிர்கொண்ட மனித பேரவலத்தையும் கொடுமையினையும் இலங்கையில் உள்ள அனைத்து மக்களுக்கும் சர்வதேசத்திற்கும் கொண்டு செல்லும் வகையில் இந்த முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரம் கடைப்பிடிக்கப்படுகின்றது.

வடக்கு கிழக்கு மாகாண வலிந்து காணாமல்ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வார நிகழ்வுகள் ஆரம்பித்துவைக்கப்பட்டன.

மட்டக்களப்பு காந்திபூங்கா அருகில் உள்ள படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபி அருகே கஞ்சிப்பானை வைத்து அமைத்து அவற்றினை மக்களுக்கு வழங்கி முள்ளிவாய்க்கால் துயரினையும் எதிர்கொண்ட அழிவுகளையும் மக்களுக்கு எடுத்துக்கூறப்பட்டது.

அனைத்து பொய் குற்றச்சாட்டுகளையும் நேர்மையாக நாம் சந்திக்க தயார் – நாமல் ராஜபக்ஷ

கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற துரதிஷ்டவசமான நிகழ்வுகள் தொடர்பாக நடைபெறும் எந்தவொரு விசாரணைக்கும் எனது முழு ஒத்துழைப்பை வழங்குவேன்.

எனது தந்தை மஹிந்த ராஜபக்ஷலுக்கோ எனக்கோ நாட்டை விட்டு வெளியேறும் எண்ணம் அறவே இல்லை.

அனைத்து பொய் குற்றச்சாட்டுகளையும் நேர்மையாக நாம் சந்திக்க தயார் என என முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ருவிட்டரில் தமிழில் பதிவிட்டுள்ளார்.

Posted in Uncategorized

1989இல், இராணுவ ஒருங்கிணைப்பாளராக கோட்டாபய பதவி வகித்தபோது, 700 இற்கும் மேற்பட்ட சிங்கள மக்கள் காணாமலாக்கப்பட்டனர்- ITJP

இலங்கையில் ராஜபக்ச குடும்பம் மீது முன்னொருபோதும் நிகழ்ந்திராத கோபநிலை தற்போது ஏற்பட்டுள்ள நிலையில், 1989 இல் நடந்த பலவந்தமாக காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான வழக்கின் மீது அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் வெளிவந்த சந்தேகநபர்களைக் கொண்ட இரகசியப்பட்டியலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பெயரும் இருந்ததாக  ITJP யின்அறிக்கையொன்று தெரிவிக்கின்றது.

1989இல், மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள மாத்தளை மாவட்டத்தின் மாவட்ட இராணுவ ஒருங்கிணைப்பாளராக கோட்டாபய ராஜபக்ச பதவி வகித்தபோது, இவரது கட்டளையின் கீழ் செயற்பட்ட பாதுகாப்புப் படையினரால் 700 இற்கும் மேற்பட்ட சிங்கள மக்கள் பலவந்தமாக காணாமலாக்கப்பட்டனர் என குற்றம் சாட்டப்பட்டது.

”நாட்டை பொறுப்பேற்கத் தயார்”: அனுரகுமார அறிவிப்பு!

நெருக்கடிகளை தீர்த்து நாட்டை பொறுப்பேற்பதற்கு தாம் தயாராகவே இருப்பதாக ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது நெருக்கடிகளை தீர்ப்பதற்காக செய்ய வேண்டிய வேலைத்திட்டங்களை முன்வைத்தார்.

01. நிகழ்கால ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உடனடியாக தனது பதவியில் இருந்து விலக வேண்டும்.

02. தற்போது பிரதம அமைச்சர் ஒருவர் இல்லாத நிலையில் சபாநாயகர் தற்காலிக பதில் ஜனாதிபதியாக செயலாற்ற வேண்டும்.

03. நிகழ்கால அரசாங்கமும் நடப்பு பாராளுமன்றத்தின் உள்ளடக்கமும் தொடர்ந்தும் மக்கள் ஆணை கட்டளையை பிரதிநிதித்துவம் செய்யாததால் அரசாங்கம் மீதான மக்களின் நம்பிக்கை சிதைவடைந்துள்ளமையாலும் இந்தப் பாராளுமன்றத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற எந்தவொரு மாற்றத்தையும் மக்கள் ஏற்றுக்கொள்வதில்லை என்பதாலும் 06 மாதங்களுக்குள் புதிய மக்கள் ஆணை கட்டளையைக் கொண்டதாக அரசாங்கமொன்று ஸ்தாபிக்கப்படல் வேண்டும். அதற்கு இடைப்பட்ட காலப்பகுதிக்கான தற்காலிக ஆட்சி கட்டமைப்பு என்ற வகையில்>

அ) நிகழ்கால அரசியல் நெருக்கடி மற்றும் அராஜக நிலைக்கு முற்றுப்புள்ளி வைத்து நாட்டை புதிய வழியில் இட்டுச் செல்வதற்கான பொறுப்பினை ஏற்றுக்கொள்ள தேசிய மக்கள் சக்தி தயாராக இருக்கின்றதென்பதால் தேசிய மக்கள் சக்தி முதன்மை பொறுப்பினை வகித்து பாராளுமன்றத்தினூடாக தற்காலிக இடைக்கால அரசாங்கமொன்றை எந்தவிதமான தடையுமின்றி நியமித்து கொள்வதற்கான வாய்ப்பினை தேசிய மக்கள் சக்திக்கு வழங்குதல்.

ஆ) அவ்வாறு இல்லாவிட்டால் குறுகிய காலப்பகுதிக்காக நிகழ்கால பாராளுமன்றத்தில் இடைக்கால அரசாங்கமொன்றை நிறுவிக்கொள்ளுதல். அதன்போது தேசிய மக்கள் சக்தி அதன் பங்காளியாக அமையாமல் எதிர்கட்சியில் இருந்துக்கொண்டு அதற்கான ஒத்துழைப்பினை வழங்குவார்கள்.

04. மேற்படி இரண்டு தீர்வுகளில் ஏதேனும் ஒரு வழியில் நியமிக்கப்படுகின்ற தற்காலிகமான இடைக்கால அரசாங்கம் கீழ் காணும் பணிகளை ஈடேற்ற வேண்டும்.

i. ஜனாதிபதியின் தத்துவங்களை மட்டுப்படுத்துகின்ற மற்றும் நிகழ்கால ஜனாதிபதியின் பதவிக்காலத்தை மட்டுப்படுத்துகின்ற அரசியலமைப்புக்கான 21 ஆவது திருத்தத்தை உடனடியாக பாராளுமன்றத்திற்கு சமர்ப்பித்து நிறைவேற்றிக்கொள்ள வேண்டும்.

ii. நிகழ்காலத்தில் மக்கள் எதிர்நோக்கியுள்ள கடுமையான பொருளாதார அழுத்தங்களை குறைப்பதற்கான அத்தியாவசிய நிவாரணங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.

iii. நிறைவேற்று ஜனாதிபதி முறையை இல்லாதொழிப்பதற்கான அரசியல் அமைப்பு திருத்தமொன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்றிக்கொள்ளல் வேண்டும்.

iv. தற்காலிக அரசாங்கமொன்று நிறுவப்பட்டு 06 மாதக்காலப்பகுதிக்குள் புதிய ஆட்சியொன்றை நிறுவுவதற்கு ஏதுவாக அதற்கான பொதுத் தேர்தலையும் நிகழ்கால ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கான அரசியலமைப்பு திருத்தத்தையும் உள்ளடக்கியதாக மக்கள் கருத்துக் கணிப்பு ஒன்று நடாத்தப்படல் வேண்டும்.

v. தற்காலிக அரசாங்கத்தின் பணிகள் உடன்பட்ட வகையில் இடம்பெறுகின்றனவா என்பதை கண்காணிப்பதற்கான கண்காணிப்பு சபையொன்று நியமிக்கப்படல் வேண்டும். அது நிகழ்கால மக்கள் போராட்டத்துடன் தொடர்புபட்டுள்ள தொழிற்சங்க பிரதிநிதிகளை உள்ளிட்ட போராட்டத்தின் பிரதிநிதிகள், சமயத் தலைவர்கள், பல்வேறு தொழில்வாண்மை அமைப்புகள் மற்றும் சிவில் அமைப்புகளில் பிரதிநிதிகளை உள்ளடக்கியதாக அமைதல் வேண்டும்.