இலங்கை தொடர்பான பாப்பரசரின் அறிவித்தல்!

இலங்கையில் நெருக்கடிகளை தீர்த்து அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்று புனித பாப்பரசர் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆளும் அரசியல் தலைவர்கள் பொது மக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பொதுமக்களின் அபிலாஷைகளுக்கு செவிசாய்த்து, மனித உரிமைகள் மற்றும் குடியியல் உரிமைகளுக்கு முழு மரியாதையை உறுதிப்படுத்தவேண்டும் என்று பொறுப்புகள் உள்ள அனைவரையும் தாம் கேட்டுக்கொள்வதாக பாப்பரசர் கோரியுள்ளார்.

வன்முறைக்கு அடிபணியாமல், அமைதியான அணுகுமுறையைப் பேணுமாறு அனைத்துத் தரப்பினரையும் வலியுறுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

முன்னாள் பிரதமர் மஹிந்த உள்ளிட்டவர்களை கைது செய்யுமாறு பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் சனத் நிஷாந்த மற்றும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஆகியோரை கைது செய்யுமாறு பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் மேல்மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தமது அதிகாரத்தை பயன்படுத்த தவறிய குற்றவியல் சட்டத்தின் 37 மற்றும் 38 ஆவது பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட வேண்டுமெனவும் அவர்கள் கோரியுள்ளனர்.

மேலும், தாக்குதலில் ஈடுபட்ட மற்றும் சிறைச்சாலை கட்டளைச் சட்டத்தை மீறிய அனைத்து சிறைச்சாலை அதிகாரிகளையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் சனத் ஆகியோரை குற்றவியல் அச்சுறுத்தல், குண்டர்களுக்கு உதவி செய்தல் மற்றும் குற்றவியல் சட்டத்தின் 486 மற்றும் 102 ஆகிய பிரிவுகளின் கீழ் கைது செய்யுமாறு கமல் விஜேசிறி, துசித குணசேகர, ராஜித லக்மால் உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழுவினால் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

எரிபொருள் விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தம்

எரிபொருள் விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை மற்றும் ஊரடங்குச் சட்டத்தை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த கூட்டுத்தாபனம் மேலும் தெரிவித்துள்ளது.

கோட்டாபயவின் அதிகாரங்களுக்கு அமைவாக மூன்று அமைச்சுக்களின் செயலாளர்கள் நியமனம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக மக்களின் இயல்பு வாழ்க்கையை பேணுவதற்காக மூன்று அமைச்சுக்களின் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று (10) முதல் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அரசாங்கம் விடுதலைப்புலிகளை காரணம் காட்டி எதையும் திசை திருப்பலாம்: தமிழ்மக்களுக்கு செல்வம் அடைக்கலநாதன் எச்சரிக்கை

“வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் மிக அவதானமாக இருக்க வேண்டும் எனவும் எங்களுடைய பங்களிப்பு தற்போதைய போராட்டங்களில் இருக்கின்ற போது விடுதலைப்புலிகளை காரணம் காட்டி திசை திருப்புகிற கெட்டித்தனம் இந்த அரசாங்கத்திடம் இருக்கின்றது” என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாடு மிகவும் கொந்தளிப்பான நிலையில் இருந்து கொண்டு இருக்கின்றது. சிங்கள தேசத்தில் போராட்ட வடிவில் பல விடயங்கள் நிகழ்ந்து கொண்டு இருக்கின்றது. மகிந்த ராஜபக்சவின் ஆரம்ப பிரச்சினையே இன்று பாரிய அளவில் வெடித்துள்ளது.

பொருளாதார பிரச்சினை பின்தங்கிய நிலையிலே இவ்வாறான ஒரு சூழலை உருவாக்கி மகிந்த ராஜபக்ச, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவருடைய அரசாங்கம் மிக மோசமான ஒரு சூழலை உருவாக்கி உள்ளது என்பதை பார்க்கும் போது இது ஒரு கண்டனத்திற்குரிய விடயமாக உள்ளது. வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ்மக்கள் மிக அவதானமாக இருக்க வேண்டும்.

எங்களுடைய பங்களிப்பு குறித்த விடயங்களில் இருக்கின்ற போது விடுதலைப்புலிகளை காரணம் காட்டி திசை திருப்புகிற கெட்டித்தனம் இந்த அரசாங்கத்திடம் இருக்கின்றது.

விடுதலைப்புலிகளை காரணம் காட்டி சிங்கள மக்களை திசை திருப்புகின்ற ஒரு நிலையை அவர்கள் ஏற்படுத்துவதற்கு நாங்கள் அனுமதிக்ககூடாது. காலச்சக்கரம் சுழன்று கொண்டு இருப்பதை பார்க்கின்ற போது இந்த மே மாதத்தில் தமிழ் மக்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்தார்கள். உயிர் அவலம் ஏற்பட்டது.

மே-18 இல் எமது மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். அவர்களின் சடலங்கள் புதைக்கப்பட முடியாத நிலையில், அனாதையாக கைவிடப்பட்டது. தனது தந்தை உறவுகள் உயிரிழந்து சடலமாக கிடக்கும் போது அதனை தாண்டி வருகின்ற அவலமான சூழ்நிலை ஏற்பட்டது. மே மாதம் என்பது எமது மக்களின் மனங்களில் நிலைத்து நிற்கின்றது.

எங்களுடைய மக்களுக்கு எதிராக செயல்பட்டவர்களுக்கு எதிராக இந்த மே மாதத்தில் நிலமைகள் மாறி இருப்பது கவலை தருகின்ற விடையமாக இருந்தாலும், இறைவன் ஒரு நியாயமான செயல்பாட்டை மேற்கொண்டுள்ளார் என்று நாங்கள் கருத முடியும்.

சிங்கள மக்கள் மத்தியில் நாங்கள் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம். அவர்களுக்கும் பாரிய பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது. சிங்கள மக்களால் ஆதரிக்கப்பட்ட சம்மந்தப்பட்டவர்கள் இன்று இந்த மக்களாலேயே துரத்தப்பட்டு பழிவாங்கப்படுகின்றனர்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டங்கள் உள்ளிட்ட எமது மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் இறைவனின் நாட்டம் எம் மக்களுடன் உள்ளது என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது.

எனவே தமிழர்களாகிய நாங்கள் முழுமையாக குறித்த போராட்டங்களில் இணைந்து கொண்டிருந்தோம் என்றால் இந்த அரசாங்கம், ஜனாதிபதி ஆகியோர் குறித்த போராட்டத்தை எமது பக்கம் திசை திருப்பி விடுதலைப்புலிகளின் மீளாக்கம் அல்லது விடுதலைப்புலிகள் குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்கள் என்று கூறுகின்ற ஒரு நிலைப்பாட்டை இலங்கை அரசாங்கம் ஏற்படுத்தி எங்களுக்கு எதிராக ஒரு வன்முறையை தூண்டி விடுகின்ற வாய்ப்புகள் இருக்கின்றது.

எனவே தமிழ் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். இக்காலகட்டத்தில் மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். ஊரடங்குச்சட்டம் நடைமுறையிலுள்ள நிலையில் நாடு முழுமையாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளது. அன்றாடம் உழைத்து உண்ணுகின்ற மக்கள் தற்போதைய சூழலில் கஷ்டத்தை எதிர்நோக்குகின்றனர். மேலும் எரிவாயு, எரிபொருட்கள் இல்லை.

இதனால் விவசாயிகள், கடற்தொழிலாளர்கள் ஏனைய கூலி தொழிலாளர்கள் பல்வேறு துயரங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

எனவே தலைவர்கள் நிதானமாக ஆரம்பத்தில் ஜனநாயக ரீதியில் போராட்டங்கள் இடம் பெற்ற போது அவர்கள் இராஜினாமா செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்ட அந்த சூழ்நிலையில் அந்த விடயத்தை அவர்கள் கையாண்டு இருந்தார்கள் என்றால் இன்று இந்த தலைவர்கள் மக்களினால் மதிக்கப்பட்டிருப்பார்கள்.

ஆனால் அவர்களின் இறுமாப்பு மற்றும் ஆயுதப்போராட்டத்தை எவ்வாறு அடக்கி விட்டோம் என்றது போல் சிங்கள மக்களின் இந்த போராட்டத்தையும் அடக்கலாம் என்று கற்பனையுடன் அவர்கள் செயற்பட்டுள்ளனர். அது இன்று வினையாக மாறியுள்ளது.

மகிந்த ராஜபக்ச மற்றும் ஜனாதிபதி ஆகியோர் காலம் கடந்து முடிவுகள் எடுப்பது தவறு. மக்கள் விரும்பவில்லை என்றால் அவர்கள் விட்டுச் செல்ல வேண்டும் என்பதே காலத்தின் நீதி. பிரச்சினைகளை ஏற்படுத்தி இன முருகலை தூண்டி விட்டு இழப்புக்களை சந்தித்த பின்பு தமது பதவிகளை ராஜினாமா செய்வது என்பது முட்டாள்தனம். மக்கள் இன்றும் பல பிரச்சினைகளை சந்திக்கின்றனர்.

எனவே ஜனாதிபதி இராஜினாமா செய்ய வேண்டும்.அப்போது தான் நாட்டில் ஏற்பட்டுள்ள மக்கள் புரட்சி யை முடிவுக்கு கொண்டு வர முடியும்” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

வன்முறைகளில் ஈடுபடாமல் பொதுமக்கள் அமைதியாக இருக்க வேண்டும் – ஜனாதிபதி கோட்டாபய

மக்களுக்கு எதிரான வன்முறை மற்றும் பழிவாங்கும் செயல்களை நிறுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கேட்டுக்கொண்டுள்ளார்.ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் பலவேறு இடங்களில் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்தும் பதிவாகி வருகின்றன.இந்நிலையில் வன்முறைகளில் ஈடுபடாமல் பொதுமக்கள் அமைதியாக இருக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கேட்டுக்கொண்டுள்ளார்.

பொருளாதார நெருக்கடியை தீர்க்கவும் அரசியல் ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்கவும் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

58 கைதிகள் காணாமல்போயுள்ளனர் – சிறைச்சாலைகள் ஆணையாளர்

புனர்வாழ்வுத் திட்டத்தின் ஒரு பகுதியாக கட்டுமானப் பணிகளுக்குச் சென்ற 58 கைதிகள் காணாமல் போயுள்ளனர்.சிறைச்சாலைக்கு மீண்டும் திரும்பும் வழியில் அவர்கள் காணாமல்போனதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

கைதிகளுக்கான புனர்வாழ்வு திட்டத்தின் ஒரு அங்கமாக இடம்பெறும் வெளிப்புற கட்டுமானப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்த குறித்த கைதிகள், நேற்றைய தினம் மீண்டும் வட்டரக்க சிறைச்சாலைக்கு அழைத்துவரப்பட்டனர்.

இதேவேளை, குறித்த கைதிகள் பயணித்த பேருந்துகள் மீது, ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும், அதனையடுத்து, 58 கைதிகள் காணாமல்போயுள்ளதாகவும் சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்

துப்பாக்கிச் சூடு நடத்த முப்படையினருக்கும் பாதுகாப்பு அமைச்சு அனுமதி!

பொதுச் சொத்துக்களை திருடுபவர்கள் மற்றும் நபர்கள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துமாறு முப்படையினருக்கு பாதுகாப்பு அமைச்சு உத்தரவிட்டுள்ளது.

இன்று மாலை பாதுகாப்பு அமைச்சு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

நேற்று முதல் நாட்டில் அரசுக்கு எதிரான வன்முறை தீவிரம் அடைந்துள்ள நிலையில் மக்கள் அரசியல்வாதிகளின் வீடுகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்நியிலேயே முப்படையினருக்கு துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி விடுத்துள்ள கோரிக்கை!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தனது டுவிட்டர் பக்கத்தில் விசேட கோரிக்கை ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில், இராணுவ ஆட்சிக்கு வழிவகுத்து விடவேண்டாம் என அனைத்து பிரஜைகளிடமும் கோரிக்கை விடுப்பதாக முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும், இராணுவ ஆட்சிக்கு வழி வகுப்பதற்காக நாசகார சக்திகள் வன்முறையை தூண்டுவதற்கு சந்தர்ப்பத்தை பயன்படுத்தலாம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும், இதை தடுப்பதற்காக மக்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதி தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

தந்தை நாட்டைவிட்டு ஓட மாட்டார் – மகன் நாமல் அதிரடி அறிவிப்பு

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாட்டை விட்டு ஓடவில்லை என அவரது மகன் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வௌிநாட்டு ஊடகம் ஒன்றிற்கு கருத்து வௌியிட்ட அவர், ““எனது தந்தை பாதுகாப்பாக இருக்கிறார், அவர் பாதுகாப்பான இடத்தில் இருக்கிறார், அவர் குடும்பத்துடன் தொடர்பு கொள்கிறார், நாட்டை விட்டு செல்லமாட்டார்” என்று கூறியுள்ளார்.