Author: Telobatti
ஜனாதிபதி செயலாளர், பாதுகாப்பு செயலாளர், பொலிஸ்மா அதிபர் ஆகியோருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு !!
நாட்டில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அவசரகால நிலைமை சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதன் பின்னணியில் ஜனாதிபதியின் செயலாளர் , பாதுகாப்பு செயலாளர் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோரை நாளைமறுதினம் திங்கட்கிழமை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற நீதியரசர் ரோஹிணி மாரசிங்க வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நாட்டில் அவசரகால நிலைமை சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமைக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கவலையைத் தெரிவித்துக் கொள்கிறது.
பொலிஸாரால் இலகுவாகக் கட்டுப்படுத்தப்படக் கூடியவாறு அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற இந்த சந்தர்ப்பத்தில் எதற்காக அவசரகால நிலைமை சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்பது நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்தப்பட வேண்டும்.
‘பேச்சு சுதந்திரம் மற்றும் ஒன்று கூடும் சுதந்திரம், கைது மற்றும் தடுப்புக் காவலுடன் தொடர்புடைய உரிமைகள் மற்றும் பிற அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரங்கள் அவசரகால நிலைமை சட்டத்தின் போது பாதிக்கப்படாது என நம்புகிறோம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மஹேலவிடம் இருந்து அதிரடி அறிவிப்பு..!
தயவுசெய்து அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் ராஜினாமா செய்து விட்டு வீட்டிலேயே இருக்கவும் என இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவர் மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் வாக்கெடுப்பின் மூலம் மீணடும் பிரதி சபாநாயகராக தெரிவு செய்யப்பட்ட ரஞ்சில் சியம்பலாப்பிட்டிய மீண்டும் பதவி விலகுவதாக நேற்றைய தினம் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், இது குறித்து இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன ட்விட்டர் பதிவொன்றை மேற்கொண்டுள்ளார்.
அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,
“இது நகைச்சுவை என்று நினைத்தீர்களா? நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு மத்தியில் இந்த நியமனம் முக்கியமானது போல் நேரத்தையும் பணத்தையும் வீணடித்து, மீண்டும் அவர் ராஜினாமா செய்கிறார். தயவுசெய்து அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் ராஜினாமா செய்து விட்டு வீட்டிலேயே இருக்கவும்.” இவ்வாறு அவர் தனது ட்விட்டில் தெரிவித்துள்ளார்.
நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு குறித்து வௌியான அறிவிப்பு
2022 ஆண்டு ஏப்ரல் மாதத்தின் இறுதியில் நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 1,827 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.
அதேபோல், வெளிநாட்டு நாணய கையிருப்பு 1,618 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என அறிக்கை ஒன்றை வௌியிட்டு மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
கடந்த மார்ச் மாத இறுதியில் கையிருப்பு சொத்துக்கள் 1,917 மில்லியன் அமெரிக்க டொலர்களாகவும், வெளிநாட்டு நாணய இருப்பு 1,702 மில்லியன் டொலர்களாகவும் பராமரிக்கப்பட்டிருந்ததாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
இலங்கையில் அவசரகாலச் சட்டம் அமுல்- அமெரிக்கா,கனடா கவலை
இலங்கையில் அவசரகாலச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தீர்மானம் குறித்து கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னன் கேள்வி எழுப்பியுள்ளார்.
“கடந்த வாரங்களாக, இலங்கை முழுவதும் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில், அமைதியான கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமையை அனுபவிக்கும் குடிமக்கள் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் இது நாட்டின் ஜனநாயகத்திற்கு கிடைத்த பெருமையாகும். அப்படியானால், அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்துவது ஏன் அவசியம் என்பதைப் புரிந்துகொள்வது கடினமானது” என கனேடிய உயர்ஸ்தானிகர் ட்வீட் செய்துள்ளார்.
இதேவேளை, நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்துள்ளது.
ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டவர்கள் உடன் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி மக்கள் போராட்டம் வெடித்துள்ள நிலையில், இன்று இரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதே நேரம் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் தனது ட்விட்டர் பக்கத்தில் அமைதியான முறையில் போராடும் மக்களின் கோரிக்கைகள் கேட்கப்பட வேண்டும் என்றும் மீண்டும் இலங்கையில் அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது கவலை அளிப்பதாகவும் நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி சபைகளின் பதவிக் காலத்தை நீட்டிக்கக்கூடாது எனக் கருத்து முன்வைப்பு
இலங்கையில் உள்ளுராட்சி சபைகளின் பதவிக் காலத்தை அரசாங்கம் நீட்டித்திருப்பதை இரத்துச் செய்து, உடனடியாக உள்ளுராட்சி சபைகள் அனைத்தையும் கலைக்க வேண்டும் என்றும், இதன் மூலம் பல கோடி ரூபாய் நிதியை மீதப்படுத்த முடியும் எனவும் பரவலாக கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
நாட்டில் மொத்தமாக 341 உள்ளூராட்சி சபைகள் உள்ளன. இவற்றுள் 24 மாநகர சபைகள், 41 நகர சபைகள், 276 பிரதேச சபைகள் இருக்கின்றன. இதில் 340 சபைகளுக்கான தேர்தல்கள் கடந்த 2018ஆம் ஆண்டிலும், எல்பிட்டி பிரதேச சபைக்கான தேர்தல் 2019ஆம் ஆண்டும் நடைபெற்றன.
இதற்கமைய மேற்படி உள்ளுராட்சி சபைகளின் பதவிக் காலங்கள், கடந்த பிப்ரவரி மாதம் நிறைவுக்கு வந்தன. இதனையடுத்து 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையில் இந்த சபைகளின் பதவிக் காலத்தை நீட்டிப்பதாக கடந்த ஜனவரி மாதம் அரசாங்கம் அறிவித்தது.
உள்ளூராட்சி சபைகள் அனைத்திலும் மொத்தமாக 8,690 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் 845 பேர் மாநகர சபை உறுப்பினர்கள், 483 பேர் நகர சபை உறுப்பினர்கள், 7,362 பேர் பிரதேச சபை உறுப்பினர்களாவர்.
நாட்டிலுள்ள உள்ளுராட்சி சபைகளில் 223 சபைகளின் அதிகாரங்களை மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொதுஜன பெரமுன கட்சி கைப்பற்றியிருந்த நிலையில், இந்த சபைகளின் பதவிக் காலங்கள் நீடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்ளூராட்சி சபைகளின் கூட்டங்கள் சாதாரணமாக ஒவ்வொரு மாதமும் நடைபெறும், தேவையேற்படும்போது விசேட கூட்டங்களும் நடத்தப்படும். மாநகர சபை கூட்டங்களில் கலந்து கொள்ளும் அதன் உறுப்பினர்களுக்கு 25 ஆயிரம் ரூபா கொடுப்பனவாக வழக்கப்படுகிறது. மாநகர சபையின் முதல்வருக்கு 30 ஆயிரம் ரூபாவும் பிரதி முதல்வருக்கு 25 ஆயிரம் ரூபாவும் கொடுப்பனவாக வழங்கப்படுகிறது.
இதே வேளை நகர சபை மற்றும் பிரதேச சபைக் கூட்டங்களில் கலந்து கொள்ளும் உறுப்பினர்களுக்கு கொடுப்பனவாக 15 ஆயிரம் ரூபா வழங்கப்படுகிறது. மேலும் இவற்றின் தவிசாளர்களுக்கு (தலைவர்கள்) 25 ஆயிரம் ரூபாவும், பிரதித் தவிசாளர்களுக்கு 20 ஆயிரம் ரூபாவும் கிடைக்கின்றது.
எனவே, தற்போது நீடிக்கப்பட்டுள்ள உள்ளுராட்சி சபைகளின் பதவிக் காலத்தை இரத்துச் செய்து – அவற்றினைக் கலைத்து விட்டால், பதவி நீட்டிக்கப்பட்டுள்ள காலத்துக்காக அந்த சபைகளின் உறுப்பினர்களுக்கு, வழங்கப்படவேண்டிய கொடுப்பனவு கிட்டத்தட்ட 152 கோடி ரூபாயை மிச்சப்படுத்த முடியும் எனக் கூறப்படுகின்றது.
இதேவேளை, ஒவ்வொரு சபைக் கூட்டங்களையும் நடத்துவதற்கான வேறு செலவுகள் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் உள்ளூராட்சி சபைகளைக் கலைத்தால் 150 கோடி ரூபாய்க்கு மேல் மிச்சப்படுத்த முடியும் என்றும் கூறப்படுகின்றது.
நன்றி -பிபிசி தமிழ்
அவசரகாலச் சட்ட பிரகடனம் – காரணங்களை பொதுமக்களுக்கு விளக்குமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தல்
அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டமைக்கான காரணங்களை பொதுமக்களுக்கு விளக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
அத்தோடு அவசரகால நிலையில் கருத்துச் சுதந்திரம் ஒன்று கூடல், கைது உள்ளிட்ட விடயங்களில் அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரங்கள் பாதிக்கப்படாது என நம்புவதாகவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
போராட்டங்கள் அமைதியானதாகவும், சாதாரண பொலிஸ் நடவடிக்கைகளின் வரம்பிற்குள்ளும் இருந்ததால் ஏன் அவசரகால சட்டம் பிறப்பிக்கப்பட வேண்டும் என்றும் கேள்வியெழுப்பிய இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு நாடுமுழுவதும் அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டமை குறித்து கவலையடைவதாகவும் தெரிவித்துள்ளது.
அவசரகாலச் சட்டம் அதிரடியாக அமுல்
இன்று நள்ளிரவு முதல் அவசரகாலச் சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ளது அதற்கான ஆணையை ஜனாதிபதி பிறப்பித்தார்.
அதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்று நள்ளிரவில் வெளியாகும்
பாராளுமன்றம் ஒத்திவைப்பு: ஆர்ப்பாட்டத்தை தற்காலிகமாக மாணவர்கள் கைவிட்டனர்!
பாராளுமன்றம் மே 17 ஆம் திகதி வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், பாராளுமன்ற வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதற்கு தீர்மானித்துள்ளனர்.
நேற்று முதல் மாணவர்கள் பாராளுமன்ற சுற்றுவட்ட பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், நேற்று மாலையும், இன்று பிற்பகலும் மாணவர்கள் மீது கண்ணீர்புகை தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்நிலையில் இது தொடர்பில் இன்று பாராளுமன்றத்தில் சர்ச்சை ஏற்பட்டதுடன், இதனால் சபையில் அமைதியின்மை ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபாநாயகரின் அலுவலகத்திற்குள் சென்று அவருடன் தர்க்கத்தில் ஈடுபட்டனர்.
இவ்வேளையில் ஏற்பட்டுள்ள நிலைமையை கருத்தில் கொண்டு பாராளுமன்றத்தை 17 ஆம் திகதி வரையில் ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.
இதனையடுத்து தாமும் ஆர்ப்பாட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு சென்றுள்ளனர்.
இலங்கைக்கு 200,000 யூரோக்களை வழங்கும் ஐரோப்பிய ஒன்றியம்!
மனிதாபிமான அடிப்படையில் இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் உதவ முன்வந்துள்ளது.
இதன்படி 200,000 யூரோக்களை ( 74 மில்லியன் இலங்கை ரூபாய்) இலங்கைக்கு வழங்கவுள்ளது.
இலங்கையின் 25 மாவட்டங்களிலும் உள்ள 80,000 குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அத்தியாவசிய உதவிகளுக்காக இந்த நிதி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.