நாட்டின் நிதி நெருக்கடி தொடர்பில் எச்சரிக்கை விடுக்கும் நிதி அமைச்சர்!

நாட்டின் நிதி நெருக்கடி நிலைமையை தீர்க்க இப்போதே முடியாது என்றும், குறைந்தது இதற்கு இரண்டு வருடங்களாவது செல்லும் என்றும் நிதி அமைச்சர் அலி சப்ரி இன்று பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

பாராளுமன்றில் இன்று (04) விசேட உரையாற்றிய போது அமைச்சர் இதனை தெரிவித்தார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தீர்க்க சுமார் 2 வருடங்களுக்கும் அதிகமாக செல்லும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். இதற்கு அனைவரும் ஒன்றிணைந்தாலே தீர்க்க முடியுமாக இருக்கும். இதனால் 2 வருடங்களில் இந்த பிரச்சினையை தீர்ப்பதா அல்லது 5 முதல் 10 வருடங்கள் வரை இதனை நீடிப்பதா என்பது தொடர்பில் நாம் அனைவரினதும் கையில்தான் உள்ளது.

மேலும், இலங்கையின் தற்போதைய வெளிநாட்டு நாணயக் கையிருப்பு 50 மில்லியன் டொலர்களாகவே உள்ளது. இதனால் நெருக்கடி அதிகரிக்கின்றது. இதன் காரணத்தினால் வரிகளை அதிகரிக்க வேண்டிய கட்டத்தில் நாங்கள் இருக்கின்றோம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி வரி மறுசீரமைப்பை செய்து புதிய வரவு செலவுத்திட்டத்தை கொண்டு வர தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

பணம் இருந்தால் கூட பொருட்களை வாங்க முடியாது என்கிற நிலையை தற்போதைய நாட்டு நிலைமை – சி.வி.விக்னேஸ்வரன்

பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலையினை சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் பணம் இருந்தால் கூட பொருட்களை வாங்க முடியாது என்கிற தற்போதைய நாட்டு நிலைமை தொடர்பில் எடுத்துக் கூறியுள்ளேன். பொருளாதார ரீதியாக நன்மைகளை இந்தியா பெற்றுக்கொடுக்கும் என அவர் எனக்கு தெரிவித்திருந்தார் என தெரிவித்துள்ளார்.

பலாலி விமானத்தளத்தை மிக விரைவில் திறக்க வேண்டும் என்பதுடன் தென்னிந்தியாவிற்கும் வட இலங்கைக்கும் இடையில் படகு சேவைகளை மிக விரைவில் ஆரம்பிக்க வேண்டும். இவற்றினால் இரு நாடுகளிற்கும் கூடிய நெருக்கம் ஏற்படும் என்றேன்.இதற்கு தான் விமானத் தளத்தையும் படகு இறங்கு துறையையும் நேரில் சென்று தான் பார்த்தாக என்னிடம் தெரிவித்ததுடன் இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் தெரிவித்தார் என மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசினால் தரப்படும் அத்தியாவசிய பொருட்களை வடக்கு மாகாணம், கிழக்கு மாகாணம், மலையகம், தென்னிலங்கை என நான்கு பாகங்களாக பிரித்து வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளேன். அதனை அவர் பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளார்.இந்திய பிரதமருக்கு ஆறு தமிழ் கட்சிகள் இணைந்து 13ஆவது திருத்தச்சட்டத்தை அமல்படுத்தக்கோரி எழுதிய கடிதத்தை எழுதியமைக்கான காரணத்தை அவருக்கு தெளிவுபடுத்தினேன்.

மேலும் அவரிடம் கூறாத ஒரு விடயத்தை ஊடகங்கள் ஊடாக பொதுமக்களிடம் அவரிடமும் கூறவுள்ளேன். வடமாகாண முதலமைச்சராக நான் இருந்த போது வடக்கு மாகாணத்தையும், கிழக்கு மாகாணத்தையும் இணைக்கும் வகையில் முல்லைத்தீவிலிருந்து திருகோணமலை வரை ஒரு கரையோர பெரும் வீதியை அமைக்க வேண்டும் என திட்டமிட்டிருந்தேன்.

அது சம்பந்தமாக அப்போது இருந்த இந்திய உயர்ஸ்தானிகர் என்னிடமிருந்து முழுமையான விபரங்களை அறிந்து இருந்ததுடன், அந்த நேரத்தில் ஆயிரம் கோடி ரூபாய் செலவாகுமென கணித்து சகல விவரங்களையும் அவருக்கு வழங்கியிருந்தோம்.அதைப்பற்றி இந்திய அரசாங்கத்துடன் பேசி ஒரு நடவடிக்கை எடுக்கலாம் இந்திய உயர்ஸ்தானிகர் கூறியிருந்தார். இந்த சந்திப்பில் அதனை கூற எனக்கு மறந்து விட்டது. இதனை ஊடகங்கள் வாயிலாக அவரிடம் கோரிக்கையாக முன்வைக்கின்றேன் என தெரிவித்துள்ளார்

ஜனாதிபதிக்கு எதிராக கூட்டமைப்பு கொண்டுவரும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு – ரணில்

ஜனாதிபதிக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொண்டுவரும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிப்பதாக ஐக்கியத் தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. காணொளி தொழில்நுட்பம் தொடர்பான கலந்துரையாடலின் போது கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ளார்.

இதேநேரம், நம்பிக்கையில்லாப் பிரேரணையை தாம் எதிர்க்கவில்லை என தெரிவித்த அவர்,

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையின் பின்னர் என்ன நடக்கும் என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சிக்கு மாத்திரமல்ல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பி ஆகிய கட்சிகளுக்கும் இதே பிரச்சினை இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மே 6 ஆம் திகதி நாடு தழுவிய ஹர்த்தாலுக்கு அழைப்பு

மக்களின் போராட்டத்தை வலுப்படுத்தும் முகமாக மே 6ஆம் திகதி நாடு தழுவிய ஹர்த்தாலை நடத்த தொழிற்சங்கங்கள் திட்டமிட்டுள்ளன.

இந்த விடயம் குறித்து ஊடகங்களுக்கு தெரிவித்த தேசிய தொழிற்சங்க கூட்டமைப்பின் உறுப்பினர் கே.டி. லால்காந்த, யார் போராடினாலும் மக்களுக்கு தேர்தலை வழங்குவதும் அரசியலில் ஈடுபடுவதற்கான புதிய வாய்ப்பை வழங்குவதும் நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த புதிய நிர்வாகத்தை வழங்குவதுமே யதார்த்தம் என தெரிவித்துள்ளார்.

இலங்கைக்குள் பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைவதற்கான ஒரே தீர்வு அரசியல் ஸ்திரத்தன்மையே என அவர் வலியுறுத்தியுள்ளார்.அதேபோல மக்களின் வெற்றியை எதிர்பார்த்து இந்த ஹர்த்தால் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய தொழிற்சங்க மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, மக்களை மேலும் ஒடுக்காமல் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்பதே மக்களின் ஒரே கோரிக்கை என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் உழைக்கும் மக்கள் ஒற்றுமையாக இருக்கிறோம் என்பதை முழு நாட்டு மக்களுக்கும் தெரிவிக்கும் செய்தியாக மே 6ஆம் திகதி நடைபெறும் ஹர்த்தால் அரசாங்கம் பதவி விலகும் வரை போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் என அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் சந்தன சூரியாராச்சி தெரிவித்தார்.

இதேநேரம், தொழிற்சங்கப் பிரிவின்றி சுகாதார ஊழியர்களும் எதிர்வரும் 6ஆம் திகதி ஹர்த்தாலில் ஈடுபடவுள்ளதாக அகில இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஜயந்த பண்டார மேலும் தெரிவித்தார்.

Posted in Uncategorized

சரத் பொன்சேகாவின் Facebook பதிவு

அலரி மாளிகைக்கு முன்பாக அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை தாக்குவதற்கும் அவர்களை அங்கிருந்து விரட்டியடிப்பதற்கும் பாதுகாப்பு தரப்பினர் திட்டமிட்டுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகியுள்ளதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

அடக்குமுறை மற்றும் பொலிஸாரின் அதிகாரம் மூலம் மக்களின் இறையாண்மை ஒடுக்கப்படுவதை மக்கள் எதிர்க்க வேண்டும் என அவர் முகப்புத்தகம் (FaceBook) ஊடாக வலியுறுத்தியுள்ளார்.

”போராட்டக்காரர்களே ஒன்றிணையுங்கள், போராடுங்கள்” எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அமைதியான முறையில் போராடுபவர்கள் மீது அவ்வாறான நடவடிக்கை எடுக்கும் எதிர்பார்ப்பில்லை என பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் நியூஸ்பெஸ்ட் வினவியபோது அவர் இதனை கூறியுள்ளார்.

Posted in Uncategorized

தேர்தல் வெற்றிக்காக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான தகவல்கள் மறைக்கப்பட்டன – கொழும்பு பேராயர்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான தகவல்களை அறிந்திருந்தும் தேர்தல் வெற்றிக்காக அவை மறைக்கப்பட்டதாக கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

இத்தாலியில்  இடம்பெற்ற விசேட ஆராதனையொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிபோதே கர்தினால் ஆண்டகை இதனைக் கூறினார்.

இந்த விசேட ஆராதனையில் இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் ஆயர்கள், உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.

Posted in Uncategorized

சுமந்திரனுக்கு எவ்வித அருகதையும் கிடையாது

இலங்கை தொழிலாளர் காங்கிரஸை விமர்சிப்பதற்கு சுமந்திரனுக்கு எவ்வித அருகதையும் இல்லாத நிலையில், எம்மை மீண்டும் சீண்டினால் பதில் கூற முடியாத கேள்விகளை அவர் கேட்க வேண்டி வருமென இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மஹிந்த ராஜபக்ச ஆட்சி முடிவுறும் தருவாயில் உள்ள நிலையில் அரசாங்கத்தில் இருந்து வெளியேறியதாக சுமந்திரன் எம்.பி. தெரிவித்திருந்த கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக, யாழ் ஊடக அமையத்தில் நேற்று (01) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே செந்தில் தொண்டமான் இதனைத் தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸை விமர்சிப்பதற்கு சுமந்திரனுக்கு அரசியல் தொலைநோக்கு தெரியாது. பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனைப் போல் வாயில் அரசியல் பேசுபவர்கள் நாங்கள் கிடையாது.

யாழ். பொது நூலகத்தை எரித்த ஐக்கிய தேசிய கட்சியுடன் ஒன்றிணைந்து, ஆட்சியை அமைக்க ஆதரவு வழங்க முடியும் என்றால், அதைவிட தற்போதைய அரசாங்கத்திலிருந்து நாங்கள் வெளியேறியமை பெரிய விடயமாக அமையாது. ஜீவன் தொண்டமானை மக்கள் பாராளுமன்றம் அனுப்பியது மக்களுக்கு வேலை செய்வதற்கே தவிர அரசாங்கத்தில் இருந்து வேடிக்கை பார்ப்பதற்கு அல்ல.

தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் 15 வருடகாலம் இணைந்து பணியாற்றியுள்ளார். அதேபோல் ஐக்கிய தேசிய கட்சியுடன் 20 வருடங்கள் பணியாற்றியுள்ளோம். எமது கொள்கை மக்களுக்கான தேவைகளை நிறைவேற்றுவதே தவிர ஆட்சியாளர்கள் யார் என்பதை கருத்தில் எடுப்பதில்லை.

அந்த வகையில் பிரதமர் தலைமையிலான அரசாங்கத்துடன் இணைந்து நமது மக்களுக்கு தொடர்ந்தும் பணியாற்ற முடியாத சூழ்நிலையில், நேரடியாக பிரதமர் மற்றும் ஜனாதிபதியுடன் கலந்துரையாடிய பின்னர் அரசாங்கத்திலிருந்து வெளியேறினோம்.

சுமந்திரனுக்கு நான் பகிரங்கமாக சவால் விடுகிறேன். நீங்கள் உங்கள் மக்களுக்கு ஆற்றிய சேவையை, நான் மாகாணசபை அமைச்சராக இருந்து ஆற்றிய சேவையுடன் முடிந்தால் ஒப்பிட்டு பார்க்க வாருங்கள். 12 வருட காலமாக 13ஆவது திருத்தச் சட்டத்தை பற்றி பேசுகிறீர்கள். அதனை நிறைவேற்ற முடியவில்லை. சிறையில் அரசியல் கைதிகள் வாழ்கின்றார்கள். அவர்களை கூட கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் விடுவிக்க முடியவில்லை. இரவில் பிரதமரையும் ஜனாதிபதியும் சந்திக்கும் சிலரால் மக்களின் தேவைகளை பற்றி பேச முடியாமை கவலை அளிக்கிறது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸை விமர்சிப்பதற்கு சுமந்திரனுக்கு எவ்வித அருகதையும் இல்லாத நிலையில், எம்மை மீண்டும் சீண்டினால் பதில் கூற முடியாத கேள்விகளை சுமந்திரனிடம் கேட்க வேண்டிய சூழ்நிலை உருவாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Posted in Uncategorized

புதிய அரசியலமைப்பு வரைபை தயாரிக்க விசேட நிபுணத்துவக் குழு!

புதிய அரசியலமைப்பு வரைபை தயாரிப்பதற்காக ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் த சில்வாவின் தலைமையில் சட்டத்துறை நிபுணர்கள் அடங்கிய குழுவொன்றை நியமிப்பதற்கு 09.09.2020 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, இக்குழுவின் ஆரம்ப அறிக்கை 25.04.2022 அன்று ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் உள்ளடங்கியுள்ள விடயங்களை ஆராய்ந்து உகந்த பரிந்துரைகளை அமைச்சரவைக்கு முன்வைப்பதற்காக கீழ்க்காணும் அமைச்சர்களுடன் கூடிய உபகுழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
பேராசிரியர். ஜீ.எல். பீரிஸ்
வெளிவிவகார அமைச்சர் – (தலைவர்)
தினேஷ் குணவர்த்தன
அரச பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண மற்றும் உள்ளுராட்சி அமைச்சர்
டக்ளஸ் தேவானந்தா
கடற்றொழில் அமைச்சர்
வைத்தியர். ரமேஷ் பத்திரன
கல்வி அமைச்சர் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர்
அலி சப்ரி
நிதி அமைச்சர் மற்றும் நீதி அமைச்சர்

இலங்கையில் நாளைய தினம் அரசாங்கத்தில் மாற்றம் ஏற்படும் என அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிப்பு

இலங்கையில் நாளைய தினம் அரசாங்கத்தில் மாற்றம் ஏற்படும் என அரசியல் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.இந்நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி நாளையதினம் அவர் நாடாளுமன்றத்தில் அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.பிரதமர் பதவி விலகினால் அமைச்சரவையும் கலைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனடிப்படையில், பிரதமர் பதவி விலகினால், அமைச்சரவையும் கலைந்து விடும். இதன் பின்னர் புதிய பிரதமரின் கீழ் புதிய அமைச்சரவை இந்த வாரத்திற்குள் பதவியேற்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.அமைக்கப்படவுள்ள இடைக்கால அரசாங்கத்தில் அமைச்சரவையின் அமைச்சர்களாக 10 பேரை மாத்திரம் நியமிக்க இணக்கம் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பிரதமர் மற்றும் அமைச்சரவையை விசேட சபையின் மூலம் தெரிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படடுள்ளது.இதனிடையே தேசிய இணக்கப்பாட்டு அரசாங்கத்தை அமைப்பது தொடர்பான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக இயங்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடையில் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இணக்கம் காணப்பட்டுள்ளது.இதேவேளை, நாளையதினம் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

Posted in Uncategorized

2009ல் தலையில் தூக்கி வைத்து பாற்சோறு கொடுத்து கொண்டாடியவர்களே இன்று போராட்டம் நடத்தி தூற்றும் நிலை – ஜனா

2009ம் ஆண்டு யுத்தம் மௌனிக்கப்பட்ட பின்னர் வடக்கு கிழக்கிற்கு வெளியில் வீதியெங்கும் பாற்சோறு கொடுத்து கொண்டாட்டங்கள் இடம்பெற்றன. இன்று அதே வீதிகளில் 2009ல் கொண்டாடிய தலைவர்களுக்கு எதிராக கோசமிட்டுப் போராட்டங்கள் இடம்பெறுகின்றன. இந்த உலகத்திலேயே மிகக் குறுகிய காலத்தில் அதிகமாகப் போற்றப்பட்ட, மிக மிக இழிவாகத் தூற்றப்பட்ட தலைவர் கோட்டபாயவாகத் தான் இருப்பார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோ.கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மேதின நிகழ்வில் ஆற்றிய உரையின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தொழிலாளர்கள் கொண்டாடிக் கொண்டிருக்க வேண்டிய இந்தத் தொழிலாளர் தின காலகட்டத்திலே இன்று தொழிலாளர்கள் திண்டாடிக் கொண்டிருக்கின்றார்கள். தொழிலாளர்கள் உட்பட மக்களும் இன்று அத்தியாவசியப் பொருட்களுக்காக வீதியிலே திண்டாடுகின்றார்கள். அவ்வாறு திண்டாடும் மக்கள் சாப்பாடு மாத்திரமல்ல, அவர்களுக்கான மருந்துப் பொருட்கள், எரிபொருள்கள், எரிவாயு, அதற்கும் மேலாக மீனவர்கள் இன்று தங்களது தொழிலை இந்த எரிபொருள் பிரச்சினையால் செய்ய முடியாமலும் இருக்கிறார்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் முதுகெலும்பாக இருக்கும் விவசாயிகள் உரப்பிரச்சினையால் இன்று நடுவீதிக்கு வந்திருக்கிறார்கள். இன்று மேதினக் கொண்டாட்டம் நடக்கவேண்டிய இந்த நாட்டிலே வீதிப் போராட்டங்கள்தான் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. காலிமுகத்திடலில் பெருமளவான போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.

இதே காலிமுகத்திடலில் 1956ஆம் ஆண்டு எங்களது மூத்த தமிழ் தலைவர்கள் மொழியுரிமைக்காக சிங்களம் மட்டும் என்ற சட்டத்தை பாராளுமன்றத்தில் கொண்டு வந்ததற்கெதிராக போராடியபோது தலைகளை உடைத்தார்கள், ஏன் இலங்கை இராணுவப்படைகள் பார்த்திருக்கும் போது காடையர்களை ஏவிவிட்டு அச்சுறுத்தினார்கள். அவர்கள் பாராளுமன்றம் சென்றபோது எள்ளி நகையாடினார்கள். ஆனால், இன்று என்ன நடக்கிறது. இதே காலிமுகத்திடலில் இந்த நாட்டின் நடுத்தர வர்க்கத்தினர் தங்களது அன்றாடத் தேவைகளுக்காக போராடிக்கொண்டிருக்கிறார்கள். இந்த ராஜபக்க தரப்பினர் இந்த நாட்டினை எத்தனை தடவைகள் ஆண்டிருக்கிறார்கள். இந்த ராஜபக்ச சகோதரர்களை தமிழ் மக்களாகிய நாங்கள் கடந்த காலங்களில் வேண்டாமென்று கூறியிக்கிகன்றோம். 2010ம் ஆண்டு இந்தப் போரை ராஜபக்ச சகோதரர்களின் கட்டளையை ஏற்று நடத்திய சரத் பொன்சேகா அவர்களை ஆதரிக்கும் அளவிற்கு தமிழ் மக்கள் ராஜபக்ச சகோதரர்களை வெறுத்திருந்தார்கள்;. இந்த கோட்டபாய ராஜபக்ச அவர்களை தமிழ் மக்கள் 2019லேயே வேண்டாம், வீட்டுக்குப் போ என்று கூறியிருந்தார்கள்.

இந்த நாடு பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள காரணத்தினால் தான் இன்று சிங்கள இளைஞர்கள் போராட்த்திற்கு வந்திருக்கின்றார்கள். நாங்கள் எங்களது உரிமைகளைப் பெறுவதற்காக போராடிக் கொண்டு வருகின்றோம். 1957ல் தந்தை செல்வாவுடன் பண்டாரநாயக்கா செய்து கொண்ட ஒப்பந்தத்திற்கு எதிராக இன்றைய எதிர்க்கட்சித் தலைவரின் முன்னாள் தலைவர் ஜே.ஆர்.ஜெயவர்த்தன அவர்கள் புத்த மதகுருமார்களுடன் இணைந்து கொழும்பில் இருந்து கண்டிக்கு யாத்திரை தொடங்கினார். அதற்குப் பயந்து பண்டாரநாயக்கா அந்த ஒப்பந்தத்தைக் கிழித்தெறிந்தார். அதன் விளைவு இத்தனை உயிர்களை இழந்தது மட்டுமல்லாமல் இன்றைய இத்தகைய பொருளாதார பின்னடைவிற்கும் அதுவே முதற் காணமாக இருக்கின்றது. இன்று இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் பொருளாதாரப் பிரச்சனையை முகங்கொடுத்துக் கொண்டிருப்பது மாத்திரமல்லாமல் ஒருவர் தலையில் பத்து இலட்சம் கடன் சுமத்தப்பட்டிருக்கின்றது. இந்த நிலைமைக்கான காரணம் பற்றி சிந்திக்க வேண்டும். பண்டா செல்வா ஒப்பந்தம் நிறைவேற்றப்;பட்டிருந்தால் இந்த நாட்டில் போர் மூண்டிருக்காது. போருக்காக பில்லியன் டொலர் கணக்கில் நிதியினை இரைத்திருக்கத் தேவையில்லை.

2009ம் ஆண்டு யுத்தம் மௌனிக்கப்பட்ட பின்னர் வடக்கு கிழக்கிற்கு வெளியில் வீதியெங்கும் பாற்சோறு கொடுத்து கொண்டாட்டங்கள் இடம்பெற்றன. இன்று அதே வீதிகளில் 2009ல் கொண்டாடிய தலைவர்களுக்கு எதிராக கோசமிட்டுப் போராட்டங்கள் இடம்பெறுகின்றன. இந்த ராஜபக்ச சகோதரர்கள் இந்த நாட்டைக் கூறுபோட்டு விற்றுவிடுவார்கள் என்ற காரணத்தினால் தான் தமிழ் மக்கள் அவர்களை வெறுத்தார்கள். ஆனால் அவர்களை மகாராஜாக்களாகப் போற்றியவர்கள் இன்று மிக இழிவாகத் தூற்றுகின்றார்கள். இந்த உலகத்திலேயே மிகக் குறுகிய காலத்தில் அதிகமாகப் போற்றப்பட்ட, மிக மிக இழிவாகத் தூற்றப்பட்ட தலைவர் கோட்டபாயவாகத் தான் இருப்பார்.

இன்று பாரிய போராட்டங்கள் இடம்பெறுகின்ற எதிர்த்தரப்பினால் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்படுகின்றது, கோட்டபாயவுக்கு எதிராக குற்றப் பிரேரணை கொண்டுவரப் படுகின்றது. நிச்சயமாக கோட்டபாயவுக்கு எதிராக குற்றப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும். ஏனெனில் அவர் ஒரு பொருளாதாரக் குற்றவாளி மாத்திரமல்ல. தமிழ்த் தேசிய மக்கள் மனதில் அவர் ஒரு போர்க்குற்றவாளியாகவே இருக்கின்றார்.

ஆனால் பாராளுமன்றத்திலே நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வரும் எதிர்த்தரப்பினர் இந்த அரசு மாறினால் வரப்போகும் அரசாங்கம் தமிழ் மக்களின் நீண்டகால புரையோடியுள்ள பிரச்சனைக்கு என்ன தீர்வைத் தரப் போகின்றீர்கள். பொருளாதார ரீதியாக சிங்கள மக்கள் வீதியில் நிற்கிறார்கள். வயிற்றுப் பசிக்காக, மின்சாரத்துக்காக, எரிபொருளுக்காக, எரிவாயுவுக்காக, மருந்துப் பொருட்களுக்காக நிற்கின்றார்கள். ஆனால், தமிழர்கள் இவை அனைத்தையும் அனுபவித்தவர்கள், பழக்கப்பட்டவர்கள். நாங்கள் கேட்பதெல்லாம் இந்த நாட்டிலே நாங்களும் சம உரிமையுடன் எங்களை நாங்களே ஆளக்கூடிய ஒரு சுயாட்சியுடன் கூடிய இணைந்த வடகிழக்கில் சுதந்திரத்துடன் வாழ வேண்டுமென்றுதான் கேட்கிறோம்.

இன்று இந்த அரசாங்கத்தை இந்த நாட்டு மக்கள் மட்டுமல்ல உலகத்தில் எந்த நாட்டுத் தலைவர்களும் நம்பமாட்டார்கள். ஏனெனில் கடந்த காலங்களிலே பல உலகத் தலைவர்களை நம்ப வைத்து ஏமாற்றியவர்கள் இவர்கள். 2009ல் போரை முடிவுக்குக் கொண்டுவந்தபோது சர்வதேசத்துக்கு தமிழர்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய நியாயமான தீர்வைக் கொடுப்போம் என்று உத்தரவாதமளிக்கப்பட்டது. குறிப்பாக இலங்கை இந்திய ஒப்பந்தத்தினால் உருவாக்கப்பட்ட 13வது திருத்தச் சட்டத்துக்கு மேலாக 13பிளஸ், பிளஸ், பிளஸ் தருவதாகவும் கூறப்பட்டது. ஆனால் எதுவுமே இடம்பெறவில்லை. ஆகையால், இன்று யாரும் உங்களை நம்ப மாட்டார்கள். இன்று எந்த நாட்டுத் தலைவரும் இந்த நாட்டுக்கு வருவதற்குப் பயப்படுகிறார்கள். காரணம் வந்தால் கடன் கேட்டுவிடுவீர்களோ என்பதால். ஏனென்றால் அண்மையில் மாநாடொன்றுக்கு வந்த பங்களாதேஸ் நாட்டு வெளிநாட்டு அமைச்சரிடம் ஏற்கனவே பட்ட 200 மில்லியனுக்கு மேலாக அதற்கொரு தவணையும் இன்னுமொரு 250 மில்லியன் கடனும் கேட்கின்றீர்கள். அதனால் தான் வெளிநாட்டுத் தலைவர்கள் கூட இந்த நாட்டுக்கு வருவதற்குப் பயப்படுகின்றார்கள்.

இன்று இந்த நாட்டுக்குக் கைகொடுப்பது யார்? இந்திய அரசுதான் கைகொடுக்கின்றது. பில்லியன் கணக்கான டொலர்களைக் கொடுக்கின்றது. அத்தியாவசியப் பொருட்களைக் கொடுக்கின்றது. சர்வதேச நாணய நிதியத்திற்கு உங்களைச் சிபார்சு செய்கிறது. ராஜபக்ச சகோதரர்களே இது உங்களுக்காக அல்ல. ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். தன்னுடைய தொப்புள் கொடி உறவுகள், அண்டை நாடு, சிறிய நாடு பட்டிணியால் சாகக் கூடாது என்ற ஒரே எண்ணத்துக்காகவே இவையெல்லாம். அதுமட்டுமல்லாது இந்திய மத்திய அரசையும் மீறி கடந்த வாரம் தமிழ் நாட்டு மாநில அரசிலே தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள். சந்தேசமாக இருந்தது. 1982 காலப்பகுதிகளில் எங்களை இந்தியா பயிற்சிக்காக எப்படி அன்போடு அரவணைத்ததோ, எப்படி எங்களுக்கு ஆதரவு தந்ததோ, எப்படி எங்களுக்கு கைகொடுத்ததோ அந்த ஆதரவை தமிழ் மாநில சபையிலே ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எவ்வாறு, அரிசி 40ஆயிரம் மெற்றிக்தொன் என்றால் 25 கிலோ உடைய ஒரு கோடி 60 லட்சம் மூடைகள் அரிசி. 500 தொன் பால்மா, அதற்கு மேலாக மருந்துப் பொருள்கள், அத்தியாவசியப் பொருள்கள் போன்றன கொடுப்பதற்குத் தமிழ் நாட்டு அரசு உதவி செய்கின்றது. தமிழ் நாட்டு அரசு இலங்கைத் தமிழ் மக்களுக்குத்தான் உதவி செய்வதற்கு ஆயத்தமானார்கள். ஆனால், நாங்கள் எங்களுக்கு மாத்திரம் வயிறில்லை. எங்களுக்கு மாத்திரம் மருந்துத் தேவையில்லை என்று ஒட்டு மொத்த நாட்டுக்கும் கொடுக்குமாறு கேட்டோம். அதனை இன்று பெருமையுடன் பேசிக் கொள்கிறார்கள். தமிழர்கள் நாங்கள் அப்படியானவர்கள்.

இன்று யுத்தத்தில் தமிழீழ விடுதலை புலிகளுக்கெதிராகப் போராடிய இராணுவ வீரர்கள் கூட தமிழீழம் கிடைத்திருந்தால் அவர்களிடம் நாங்கள் கடன் வாங்கியிருக்கலாம் என்று கூறுகின்றார்கள். இதற்கும் மேலாக நாங்கள் உங்களிடம் எதைக் கேட்கின்றோம். நாங்கள் இந்த நாட்டின் பூர்வீக குடிகள். இந்த நாட்டில் சுந்திரமாக எங்களது பிரதேசத்தில் பாதுகாப்பாக வாழ்வதற்குத்தான் எங்களது உரிமையைக் கேட்கின்றோம். இன்றும் கேட்டுக் கொண்டிருக்கின்றோம். ஆனால் எந்த அரசும் தருவதற்குத் தயாராக இல்லை.

இன்று பௌத்த மத பீடங்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பௌத்த பிக்குகள் ஒன்றிணைந்து ஆட்சியை மாற்றுமாறு கூறுகின்றீர்கள். ஆட்சி மாற்றம் வேண்டும்தான். ராஜபக்ச சகோதரர்கள் எமக்கும் வேண்டாம். ஆனால், இதே பௌத்த பிக்குகள் இவர்களது சமாசம் இந்த நாட்டில் புரையோடிப்போயுள்ள இந்த இனப்பிரச்சினைக்கு ஒருதீரவைக் கொடுக்குமாறு கூறுவார்களா? கூறமாட்டார்கள். ஏதாவது ஒரு அரசு இந்த இனப்பிரச்சினைக்குத் தீர்வைக் கொடுக்க வேண்டுமெனக் கூறினால் கூட இந்த மகா சங்கத்தினர் கூடி அரசுக்கெதிராகத் தீர்மானம் எடுப்பார்கள். அதற்கும் மேலாக இன்று கண்டியிலிருந்து கொழும்புக்கு பாதயாத்திரை செல்லும் சஜித் பிரேமதாச கூட அவரது முன்னைய தலைவர்கள் போல சிலவேளைகளில் கொழும்பிலிருந்து கூட கண்டிக்கு பாத யாத்திரை செல்லக்கூடிய நிலை வரலாம். எனவே இன்றைய சூழ்நிலையில் நாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகவும் நிதானமாகச் சிந்திக்கிவேண்டிய நேரம்.

பல இடங்களில் போராட்டம் நடைபெறுகின்றன. பாராளுமன்றத்தில் மாற்றங்கள் ஏற்பட இருக்கிறன. நம்பிக்கையில்லாப் பிரேரணை, குற்றப்பிரேரணைகள் வர இருக்கின்றன. இந்த நேரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாத்திரமல்ல, தமிழ்த் தேசியப் பரப்பில் இருக்கும் அனைத்துக் கட்சிகளும் வடக்கு கிழக்கில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட தமிழ்த் தேசியத்தை விரும்பும் அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களும் சிந்தித்துச் செயற்பட வேண்டும். தம்பி சாணக்கியன் கூறினார் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸைச் சேர்ந்த இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சி அலுவலகத்தில் சென்று கையொப்பமிட்டார்களாம். இன்னுமொரு உண்மையையும் நான் கூறவேண்டும். அவர்கள் கையொப்பமிடும்போது அந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையே எழுத்துவடிவம் பெறவில்லை. என்ன இருக்கிறதென்றே தெரியாமல் வெறும் பேப்பரிலேயே கையொப்பமிட்டு வந்திருக்கிறார்கள். இந்த நிலை எங்களுக்கிருக்கக் கூடாது. நாங்கள் சிந்தித்துச் செயலாற்ற வேண்டும். எங்களுக்குள் ஒற்றுமை வேண்டும்.

2009க் முன்பு இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் இருக்க வேண்டும். எமது உரிமைகள் கிடைக்கும் வரை எமது மக்கள் சுதந்திரமாக வாழும் வரை நாங்கள் ஒன்றாக இருக்க வேண்டும்.

மட்டக்களப்பில் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மக்கள் தவறிழைத்திருக்கிறார்கள். 69ஆயிரம் வாக்குகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட வாக்குகள் தமிழ்த் தேசியத்துக்கு எதிராக மாத்திரமல்ல இந்த ராஜபக்ச சகோதர்களுக்கு ஆதரவாக வாக்களித்திருக்கின்றார்கள். இவர்கள் சிந்திக்க வேண்டும். இன்று என்ன நடக்கிறது. அவர்களுக்கு அளித்த வாக்குகள் இந்த நாட்டு மக்களை எப்படி வதைக்கிறது என்பதை அவர்கள் சிந்திக்க வேண்டும். சிந்தித்து, எதிர்காலத்தில் பிழை விட்டவர்கள் திருந்தி தமிழ்த் தேசியத்தின்பால் தமிழ் மக்களுக்கு உரிமை கிடைக்கும் வரை நாங்கள் ஒன்றாக இருக்க வேண்டுமென்று இந்த மேதினத்தில் சபதமேற்க வேண்டும் என்று தெரிவித்தார்.