புதிய மத்திய வங்கி ஆளுநர் நியமனம்

இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக கலாநிதி நந்தலால் வீரசிங்கவும், நிதி அமைச்சின் புதிய செயலாளராக கே.எம்.எம் சிறிவர்தனவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த நியமனக் கடிதங்கள் நேற்று, (07) பிற்பகல் ஜனாதிபதியினால் வழங்கப்பட்டது.

நிதித் துறையில் அனுபவமிக்க கலாநிதி வீரசிங்க, சர்வதேச நாணய நிதியத்தின் மாற்று நிறைவேற்றுப் பணிப்பாளர், இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார ஆய்வுப் பணிப்பாளர், துணை ஆளுநர் மற்றும் சிரேஷ்ட பிரதி ஆளுநர் பதவிகளை வகித்துள்ளார்.

நந்தலால் வீரசிங்க, கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் முதுமானி பட்டப் பாடநெறிக்கான வருகைதரு விரிவுரையாளராகவும் மலேசியாவின் சியசன் மத்திய நிலையத்தின் வருகைதரு ஆராய்ச்சி பொருளியலாளராகவும் பணிபுரிந்துள்ளார்.

அவர் அவுஸ்திரேலியாவின் தேசிய பல்கலைக்கழகத்தின் க்ரோஃபர்ட் இல் பொதுக்கொள்கை, பிரயோகப் பேரினப் பொருளியல் பகுப்பாய்வு மையத்தின் ஆலோசகர் குழு உறுப்பினராகவும் உள்ளார்.

கே.எம்.எம். சிறிவர்தன, சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை, இந்தியா, பங்களாதேஷ் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளுக்கான மாற்று நிறைவேற்றுப் பணிப்பாளராக பணிபுரிந்துள்ளார்.

நிதி அமைச்சின் அரச நிதி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாகவும் தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகமாகவும் கடமை புரிந்துள்ளார்.

சிறிவர்தன அவர்கள், பேரினப் பொருளாதார முகாமைத்துவம், பேரினப் பொருளாதார முன்கணிப்பு, நிதிக் கொள்கை, மத்திய வங்கியியல், அரச நிதி மேலாண்மை, அரச கடன் முகாமைத்துவம், நிதி செயற்பாட்டியல் போன்ற பல்வேறு துறைகள் தொடர்பாக சர்வதேசப் பயிற்சியைப் பெற்றுள்ளார்.

Posted in Uncategorized

இனம் மதம், அரசியல் பேதங்களை மறந்துதான் மக்கள் இன்று வீதிக்கு இறங்கியுள்ளனர் – சஜித் பிரேமதாச

வங்குரோத்தடைந்த சில அரசியல்வாதிகள், தமது அரசியல் இருப்பை தக்கவைத்துக்கொள்வதற்காக மீண்டும் இனவாதத்தையும், மதவாதத்தையும் கையில் எடுத்துள்ளனர். இனம் மதம், அரசியல் பேதங்களை மறந்துதான் மக்கள் இன்று வீதிக்கு இறங்கியுள்ளனர். எனினும், மக்களின் போராட்டத்துக்கு முத்திரை குத்தப்படுகின்றது. எனவே, இனவாதத்தையும், மதவாதத்தையும் தோற்றுவிப்பவர்களை, தோற்கடிப்பதற்காக நாம் அறவழியில் எழுந்து நிற்போம் என தலவாக்கலையில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது எமது நாடு, நாட்டு வளங்களை, சொத்துகளை காக்க வேண்டிய பொறுப்பு எமக்கு உள்ளது. எனவே, தேசிய சொத்துகளுக்கு சேதம் விளைவிக்காத வகையிலேயே போராட்டங்கள் இடம்பெற வேண்டும். ஒழுக்கம் உள்ள மக்கள் என்ற வகையில் போராட்டத்தில் பங்கேற்பவர்கள் அதனை பின்பற்றுகின்றனர் என உறுதியாக நம்புகின்றேன்.

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள், சிறுதோட்ட உரிமையாளர்களாக்கப்படுவார்கள். பயிரிடப்படாத நிலங்கள் பகிர்ந்தளிக்கப்படும். சிறு தேயிலை தோட்டங்கள் அதிகரிக்கும் பட்சத்தில், ஏற்றுமதி அதிகரிக்கும், ஏற்றுமதி அவ்வாறு அதிகரித்தால் வருமானம் கூடும். அந்த வழிமுறையை நாம் கையாள்வோம். அதேபோல லயன் யுகத்துக்கும் முடிவு கட்டப்படும். மலையக மக்களின் எழுச்சிக்காக தமிழ் முற்போக்கு கூட்டணியுடன் இணைந்து காத்திரமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

நிறைவேற்று ஜனாதிபதி முறைமை இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்ற யோசனையை நாம் முன்வைத்துள்ளோம். தனி நபரிடம் அதிகாரம் இருக்ககூடாது. சர்வாதிகார ஆட்சியும் வேண்டாம். எனவே, நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை இல்லாதொழிக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு, தொடர் மின்வெட்டு, பொருட்கள் விலையேற்றம் ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்நிலைமையை உருவாக்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு பதவி விலக வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பொருளாதார வீழ்ச்சியாக மாறிய பொருளாதார வளர்ச்சி-ஆசிய அபிவிருத்தி வங்கி

2022 இல் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 2.4% ஆக குறையும் என ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) கணித்துள்ளது.

இது கடந்த ஆண்டை விட 1.3 சதவீதம் குறைவு. 2021ல் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 3.7 சதவீதமாக இருக்கும். கடன், குறைந்த அன்னிய கையிருப்பு மற்றும் கொரோனா தொற்று ஆகியவை சரிவுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையில், ஆசிய வளர்ச்சி வங்கி (ADB) அடுத்த ஆண்டு 2.5% சிறிதளவு முன்னேற்றம் இருக்கும் என்று கணித்துள்ளது

ஜனாதிபதி இராஜினாமா செய்யும்வரை எந்தப் பிரேரணையையும் ஏற்கத் தயாராக இல்லை-அனுரகுமார

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்யும் வரை இடைக்கால அரசாங்கம் போன்ற எந்தவொரு பிரேரணையையும் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை என தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ராஜபக்ஷ ஆட்சியில் இருக்கும் போது செய்யப்படும் எந்தவொரு பிரேரணையும் மக்களின் வன்முறைப் போராட்டங்களைத் தணிக்காது, ஏனெனில் மக்களின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்று ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று அவர் பாராளுமன்றத்தில் கூறினார்.

Posted in Uncategorized

பெரும்பான்மையை தக்கவைக்க பஷில் கடும் பிரயத்தனம் – கொழும்பில் தொடர் பேச்சுகள் முன்னெடுப்பு?

நாடாளுமன்றத்தில் சாதாரணப் பெரும்பான்மையை வைத்துக்கொள்வதற்கு அரசாங்கம் கடும் பிரயத்தனத்தில் ஈடுபட்டுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பில் அரசியல் கட்சி பிரமுகர்களுடன் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பஷில் ராஜபக்ச ஆகியோர் தொடர் பேச்சுக்களில் ஈடுபட்டுவருகின்றனர்.

அந்தவகையில் சுயாதீனமாக இயங்குவார்கள் என இன்று(செவ்வாய்கிழமை) அறிவிக்கப்பட்ட 43 பேரில் மூவர், தாம் இன்னும் அவ்வாறானதொரு முடிவை எடுக்கவில்லை என அறிவித்துள்ளனர்.

அருந்திக்க பெர்ணாண்டோ (அனுர பிரியதர்சன யாப்பா அணி), ரொஷான் ரணசிங்க (அனுர பிரியதர்சன யாப்பா அணி), கயான் (விமல் அணி) ஆகிய மூவரே இவ்வாறு அறிவித்துள்ளனர்.

அரசிலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த ரிஷாட் கட்சி ஊடாக நாடாளுமன்றம் தெரிவான முஷாரப் சுயாதீனமாக இயங்கப்போவதாக இன்று சபையில் அறிவித்தார்.

ஆனால் இசாக் ரஹ்மான், அலி சப்ரி ஆகியோர் தமது முடிவுகளை அறிவிக்கவில்லை.

அதேபோன்று முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வரும், தற்போது மௌனம் காத்துவருகின்றனர்.

எதிரணியில் இருந்து 20 ஆவது திருத்தச்சட்டத்திற்கு ஆதரவளித்து அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட அரவிந்தகுமார், டயானா ஆகியோரும் தமது முடிவை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. எனவே, இவர்களின் ஆதரவும் தமக்குதான் என அரசாங்கம் கருதுகின்றது.

பொதுத்தேர்தலில் போட்டியிட்ட மொட்டு கட்சிக்கு 17 போனஸ் ஆசனங்கள் சகிதம் 145 ஆசனங்கள் கிடைக்கப்பெற்றன. பங்காளிகளின் ஆதரவு கிடைத்தது. 20 ஐ ஆதரித்து முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் நேசக்கரம் நீட்டினர்.

இதற்கமைய, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 145, ஈபிடிபி – 02, தேசிய காங்கிரஸ் – 01, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி – 01, எமது மக்கள் சக்தி – 01, ஶ்ரீங்கா சுதந்திரக்கட்சி – 01, முஸ்லிம் காங்கிரஸ் – 04, மக்கள் காங்கிரஸ் – 02, அலிசப்ரி (புத்தளம்) – 01, அரவிந்தகுமார் – 01, டயானா – 01 என அரசாங்கத்திற்கு ஆதரவாக (சபாநாயகர்தவிர) நாடாளுமன்றத்தில் 159 ஆசனங்கள் இருந்தன.

இந்தநிலையில் நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்கபோவதாக இன்று 40 பேர் அறிவித்தனர். (முடிவை மாற்றிய மூவர் உள்ளடக்கப்படவில்லை.)

எனவே 159 – 40 = 119, விஜயதாச ராஜபக்ச ஏற்கனவே ஆதரவை விலக்கிக்கொண்டுள்ளார். 119 – 01 = 118, இதில் சுயாதீனமாக செயற்படபோவதாக முஷாரப் இன்று அறிவித்தார்.

இதன்காரணமாக 118 – 01 = 117, முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் முடிவு இன்னும் வெளியாகவில்லை. அரசுக்கு ஆதரவு வழங்கக்ககூடாதென கிழக்கு மாகாண மக்கள் வலியுறுத்த ஆரம்பித்துள்ளனர்.

மக்கள் கோரிக்கையை அவர்கள் ஏற்றால் 117 – 04 = 113, அரவிந்தகுமார், அலி சப்ரி, இசாக் ரஹ்மான் ஆகியோர் சுயாதீனமாக இயங்கும் முடிவை எடுத்தால் 113 -03 = 110 அரசு சாதாரண பெரும்பான்மையை இழந்துவிடும்.

அரசு கூறுவதுபோல இவர்களின் ஆதரவு தொடர்ந்தால் சாதாரண பெரும்பான்மை தக்கவைத்துக்கொள்ளப்படும்.

அதேவேளை, நாட்டில் தற்போதைய அரசியல் நெருக்கடி தொடர்பில் நாடாளுமன்றத்தில் நாளையும், நாளை மறுதினமும் விவாதம் இடம்பெறவுள்ளது என்பதுக் குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

இலங்கை:ஆட்சி மாற்ற போராட்டங்களில் தமிழ் மக்களை பகடைக்காய்களாக பயன்படுத்த முயற்சி

எமது மக்களையும் இளையவர்களையும் சிலர் தவறாக வழிநடத்தி சிங்கள தேசத்தின் ஆட்சி மாற்ற போராட்டங்களின் பகடைக்காய்களாக பயன்படுத்த விளைகின்றார்கள் #P2P பேரெழுச்சி இயக்கம் குற்றம்சுமத்தியுள்ளது.

இது தொடர்பில் #P2P இயக்கம் இன்று வெளியிட்டுள்ள (05.04) ஊடக அறிக்கையில்,

“சிங்கள தேசத்தின் ஆட்சியாளர்களின் மக்கள் நலன் சாராத ஆட்சி முறைமையினால் ஏற்பட்ட பொருளாதார சரிவினால், இன்று பாரிய அரசியல் கிளர்ச்சியினை சிங்கள தேசம் எதிர்நோக்கியுள்ளது. ஆட்சி மாற்றத்திற்காக சிங்கள மக்கள் இன்று வீதியில் இறங்கி போராடிக்கொண்டிருக்கின்றார்கள். அறுபத்தி ஒன்பது லட்சம் சிங்கள வாக்குகளால் வெற்றி பெற்றதாக மார்தட்டிய சிங்கள ஜனாதிபதியை இன்று அதே மக்கள் வீட்டுக்கு போ என வீதியில் இறங்கி கோஷமிடுகின்றார்கள்.

தமிழராகிய நாமும் சிங்கள தேசத்தினால் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர் தேசமும் இந்த பொருளாதார நெருக்கடியால் மிகக்கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஆயினும் இந்த பொருளாதார நெருக்கடிக்கான மூலகாரணமாக எம்மீது நடத்தப்பட்ட ஆக்கிரமிப்பு இனவழிப்பு யுத்தத்திற்காக உலக நாடுகள் எங்கும் வாங்கிக்குவித்த கடனே ஆகும். இக்கொடிய ஆக்கிரமிப்பு யுத்தத்தின் வடுக்களை தாங்கி நிற்கும் நாம் அந்த யுத்தத்தின் கடன் பளுவையும் சுமந்து நிற்கின்றோம்.

தமிழருக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை கருத்திற் கொண்டு இந்திய அரசின் அனுசரணையுடன் தொப்புள் கொடி உறவுகளாகிய தாய் தமிழகமும், தமிழக அரசும் முன்னெடுத்துள்ள பொருளாதார உதவித் திட்டத்தை அன்புடன் வரவேற்கின்றோம். இவ்வுதவிகளை உங்களையும் எம்மையும் பிரிக்கும் கடலை தாண்டி நேரடியாகவே எமது மண்ணில் இந்திய நடுவண் அரசின் உதவியுடன் கொண்டுவந்து சேர்ப்பதுடன் தமிழ் மக்களின் கைகளிலேயே நேரடியாக கிடைப்பதற்கான வழிமுறைகளை ஏற்படுத்தும்படி உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம். அத்துடன் தமிழ் மக்களிற்கான நிரந்தர அரசியல் தீர்வுக்கான அழுத்தத்தை கொடுக்குமாறும் வேண்டுகின்றோம்.

சிங்கள தேசத்தில் எந்த ஆட்சி மாற்றமும் தமிழ் மக்களிற்கு எவ்விதமான விடிவையும் தரப்போவதில்லை. எமது பட்டறிவில், ஆட்சிக்கட்டில் ஏறும் எந்த சிங்கள அரசுமே எமது உரிமைகளை பறிப்பதிலும், எமது நிலங்களை அபகரிப்பதிலும், எமது வளங்களை சுரண்டுவதிலும், தமிழரின் குடிசன பரம்பலை மாற்றியமைப்பதிலும் பின் நிற்கப்போவதில்லை.

நாம் பொருளாதார மீட்சிக்காக போராடவில்லை. மாறாக எமது பிறப்புரிமைக்காகவே போராடிக்கொண்டிருக்கின்றோம். இழந்த எமது இறைமையை மீட்கவே போராடிக் கொண்டிருக்கின்றோம். நாம் 20 வருடங்களுக்கு மேல் மின்சாரமின்றி, எரிபொருட்கள் இன்றி, அடிப்படையான அத்தியாவசியமான மருந்துகள் உட்பட்ட பொருட்கள் கூட இன்றி மிகக்கடுமையான பொருளாதார தடைகள் மத்தியிலும் சுதந்திர மனிதர்களாக, தன்னிறைவான தற்சார்பு பொருளாதாரத்துடன், சிறப்பான தலைமையை கொண்ட நடைமுறை அரசிலேயே வாழ்ந்து வந்தோம்.

இப்பொருளாதார நெருக்கடி எமக்கு ஒன்றும் புதியல்ல. ஆயின் தற்போது ஏற்படுள்ள நிலைமைகளை பயன்படுத்தி எமது மக்களையும் இளையவர்களையும் சிலர் தவறாக வழிநடத்தி சிங்கள தேசத்தின் ஆட்சி மாற்ற போராட்டங்களின் பகடைக்காய்களாக பயன்படுத்த விழைகின்றார்கள். இது தொடர்பாக அனைத்துத் தமிழ் மக்களும் விழிப்புடன் செயல்படுமாறு வேண்டுகின்றோம். அவர்களை சர்வதேச விசாரணையூடாக கூண்டில் ஏற்றவேண்டும்.
இன்று ஏற்பட்டுள்ள நிலைமைக்கான மூல காரணங்களை ஆராயாது, சிங்கள தேசம் ஆட்சியாளர்களை மாற்றுவதன் மூலம் தீர்க்க விளைகின்றது. அதை விடுத்து, சிங்கள தேசம் தமிழ் மக்களின் நியாயமான உரிமை போராட்டத்தினை ஏற்றுக்கொள்வதுடன், எம்மீதான இனவழிப்புக்கு சர்வதேச நீதி பொறிமுறையினூடாக நீதி பெற வழிசமைப்பதுடன், இறைமையுள்ள வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தேசத்தை அங்கீகரிப்பதனூடாகவே மீட்சி அடைய முடியும் என்பதனையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச எதிர்ப்பு போராட்டங்களில் எமது விசேட பிரச்சினைகளையும் நாம் வலியுறுத்த வேண்டும் – மனோ கணேசன்

அரசு எதிர்ப்பு போராட்டங்களில் ஈழத்தமிழ், மலையக, முஸ்லிம் மக்கள் குறிப்பாக இளைஞர்கள், எமது இன மக்கள் எதிர்நோக்கும் விசேட பிரச்சினைகளையும் வலியுறுத்த வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவரது முக நூல் பதிவில்,

‘தென்னிலங்கை சிங்கள மக்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் கோஷங்களை எழுப்பி, அரசை எதிர்த்து போராடுகிறார்கள். ஆகவே நாமும் போராடுவோம் என அவர்கள் எழுப்பும் அதே கோஷங்களை மாத்திரம் எழுப்பி போராடுவது உசிதமானதல்ல.

கோட்டாபய உட்பட அனைத்து ராஜபக்சர்களும் வெளியேற வேண்டும் என்பதில் எவரையும்விட நாம் மிக உறுதியாக இருக்கிறோம். அதேபோல், ராஜபக்சர்கள் வெளியேறுவதால் மாத்திரம், தமிழ் பேசும் மக்களின் எல்லா பிரச்சினைகளும் முடிவுக்கு வந்து, நமது வீடுகளிலும், நகரங்களிலும், கிராமங்களிலும் பாலுந்தேனும் ஓடப்போவதில்லை என்பதிலும் நான் உறுதியாக இருக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

அரச தலைவர் உள்ளிட்ட ஒட்டுமொத்த அரசாங்கமும் பதவி விலகவேண்டும் – அநுரகுமார திஸாநாயக்க

மக்களின் கோரிக்கைக்கு அமைய அரச தலைவர் உள்ளிட்ட ஒட்டுமொத்த அரசாங்கமும் பதவி விலகவேண்டுமென மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை தொடர்பில் நேற்றையதினம் கருத்து வெளியிடுகையில் இவ்வாறு கூறியிருந்தார்.

அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச முதலில் தனது பதவி விலகலை சமர்ப்பிக்க வேண்டுமெனவும், அதன் பின்னர் தற்போதைய நெருக்கடியை தீர்ப்பது எவ்வாறு என்பது தொடர்பில் விவாதிக்கலாமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தேர்தல் நடத்தி, பொதுமக்களால் அங்கீகரிக்கப்பட்ட அரசை அமைக்கலாமெனவும் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இடைக்கால அரசாங்கத்தை அமைக்குமாறு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச விடுத்த அழைப்பை ஏற்க மறுத்த மக்கள் விடுதலை முன்னணி, இடைக்கால அரசாங்கத்தில் இணையப்போவதில்லையெனவும் அறிவித்துள்ளது.

இலங்கை தூதரகங்கள் சில மூடப்பட்டன!

வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்கள் மற்றும் துணை தூதரகங்கள் சிலவற்றை தற்காலிகமாக மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அமைச்சரவை தீர்மானத்திற்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, நோர்வேயின் ஒஸ்லோ மற்றும் ஈராக்கின் பாக்தாத் ஆகிய இடங்களில் உள்ள தூதரகங்களையும், அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள துணை தூதரகத்தையும் ஏப்ரல் 30 ஆம் திகதி முதல் தற்காலிகமாக மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அவசரகால சட்டம் இரத்துச் செய்யப்பட்டது!

அவசரகால சட்டத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ இரத்து செத்துள்ளார்.

ஏப்ரல் 5 ஆம் திகதி நள்ளிரவு முதல் இது இரத்து செய்யப்பட்டுள்ளது.

ஏப்ரல் 01 ஆம் திகதி முதல் அமுக்குக்கு வரும் வகையில் இலங்கையில் அவசர கால நிலையினை ஜனாதிபதி பிரகடனப்படுத்தியிருந்தார்.

மக்களின் பாதுகாப்பு, நாட்டின் அமைதியை உறுதிப்படுத்தும் நோக்கிலேயே இந்த சட்டத்தை அமுல்படுத்துவதாக, அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி கூறியிருந்தார்.

இந்நிலையில் இதற்கு பலரும் எதிர்ப்பு வெளியிட்ட நிலையில் ஜனாதிபதி அந்த சட்டத்தை வாபஸ் பெற்றுக்கொள்ள தீர்மானித்துள்ளார்.