கொழும்பு: உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு − காவல்துறையினர் அறிவிப்பு

கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, மத்திய கொழும்பு மற்றும் நுகேகொட ஆகிய பிரிவுகளுக்கு காவல்துறையினரால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கை நுகேகொடை − மிரிஹான பகுதியிலுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சேவின் வீட்டை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர்.

இதையடுத்து அவர்களை கலைக்க காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி பிரயோகமும் செய்தும் உள்ளனர். இதில் 9 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றனது.

இலங்கையில் பல வாரங்களாக கடுமையான பொருளாதார நெருக்கடியால் அவதிப்பட்டு வரும் மக்கள் நேற்று மாலை தன்னிச்சையாகவே சிறிது, சிறுதாகவும் பிறகு ஆயிரக்கணக்கிலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சேவின் வீட்டிற்கு அருகில் உள்ள வீதியில், கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 5,000-க்கும் மேற்பட்டோர், பொருளாதார நெருக்கடியைத் தடுக்கத் தவறிய ஜனாதிபதி பதவி விலகக் கோரி கோஷமிட்டனர்.

அவர்களை கலைக்க வந்த காவல்துறையினருடன் பொதுமக்களில் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் வாகனங்கள், தாக்கப்பட்டதோடு வாகனங்களுக்கு போராட்டக்கார்களால் தீ மூட்டிய சம்பவங்களும் இடம்பெற்றுள்ளது.

இதையடுத்து போராட்டத்தை கட்டுக்கொண்டு வர காவல்துறையினர் குறித்த பகுதிகளில் ஊடரங்கு உத்தரவை பிறப்பித்துள்ளனர்.

Posted in Uncategorized

மாபெரும் கண்டன பேரணிக்கான ஆதரவு-#P2P இயக்கம்

கடந்த ஞாயிற்றுக்கிழமை(20.03) அன்று சிறீலங்காவின் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ யாழ்ப்பாணம் வந்தபோது, தங்கள் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உண்மை நிலையை அறியும் முகமாக கவனயீர்ப்பு போராட்டத்தை நடாத்த முற்பட்ட தாய்மார்கள, வயோதிபப் பெண்கள் மீது சிறீலங்காவின் காவற்துறையினர் மிலேச்சத்தனமான தாக்குதலை நடாத்தி அவர்களைக் காயப்படுத்தியமையை பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றது.

அத்துடன் இச்சம்பவத்தைக் கண்டித்தும் தங்களுக்கு நீதி கிடைக்க வேண்டியும் வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் மாபெரும் கண்டன போராட்டத்தை எதிர்வரும் 03.04.2022 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு யாழ் மத்திய பேரூந்து நிலையத்தில் நடாத்த இருப்பதை நாம் வரவேற்கின்றோம்.
மேலும் நீதிக்கான இப்போராட்டத்தில் மக்கள் இயக்கங்கள், சிவில் அமைப்புக்கள், மதத்தலைவர்கள், தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகள், மகளிர் அமைப்புக்கள், பல்கலைக்கழக மாணவர்கள், இளைஞர் அமைப்புக்கள், வர்த்தகர் சங்கங்கள், கிராமமட்ட அமைப்புக்கள், அரசசார்பற்ற நிறுவனங்கள், மீனவர் சம்மேளனங்கள், தனியார் போக்குவரத்து சங்கங்கள், முச்சக்கரவண்டிச் சங்கங்கள், விவசாய அமைப்புகள், ஆசிரியர் சங்கங்கள், பல்கலைக்கழக ஊழியர் சங்கங்கள், ஊடகவியலாளர்கள் என அனைத்து அமைப்புக்களையும் மக்களையும் பெரும் எழுச்சியாக பங்குபற்றுமாறு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் அன்புரிமையுடன் அழைத்து நிற்கின்றது.

இலங்கைத் தமிழர்களுக்கு உதவிகளை வழங்க பிரதமர் மோடியிடம் தமிழக முதலமைச்சர் கோரிக்கை

இலங்கைத் தமிழர்களுக்கு உதவிகளை வழங்குவதற்கு அனுமதிக்குமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

டெல்லியில் உள்ள இந்திய நாடாளுமன்ற வளாகத்தில் இன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து உரையாடிய போதே இக்கோரிக்கையை விடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத்தூதரகத்தின் ஊடாக இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் உதவிகளை செய்வதற்கு அனுமதிக்குமாறு இதன்போது மு.க..ஸ்டாலின் மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதரார நெருக்கடி நிலைகாரணமாக இலங்கையில் வாழமுடியாது படகு மூலம் தமிழ்நாட்டிற்கு சென்றுள்ள தமிழர்களை மண்டபம் அகதிகள் முகாமில் தங்கவைத்து பராமரிக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு உதவிகளை செய்ய முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதே நேரம் கச்சத்தீவு அருகே மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் தினமும் இலங்கை கடற்படையால் சிறைப்பிடித்து செல்வது பற்றியும் பிரதமரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கி கூறியதோடு தமிழக மீனவர்கள் பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில் நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

பாதாளத்தில் வீழ்ந்து கிடக்கும் நாட்டை மீட்க அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்! கரு ஜயசூரிய அழைப்பு

நாடு பொருளாதார மற்றும் சமூக ரீதியாக விழுந்துள்ள பாதாளத் திலிருந்து மீண்டு நாட்டு மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்று வதற்கு நாட்டிலுள்ள அனைத்து முன்னணி அரசியல் சக்திகளும் பொது இணக்கப்பாட்டுக்கு வர வேண்டும் என சமூகநீதிக்கான தேசிய அமைப்பின் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கை தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையி லேயே இவ்வாறு தெரிவிக்கப்பட் டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்படுள்ளவை வருமாறு,

இன்று அரசாங்கம் தோல்வியைடந்துள்ளது என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது. நாட்டை பின்னடை யச் செய்துள்ளனர். அதை உட னடியாக நிறுத்த வேண்டும். அதற்கு இந்த நாட்டில் உள்ள அனைத்து அரசியல் சக்திகளும் ஒருமித்த இணக்கப்பாட்டுக்கு வர வேண்டும். ஒவ்வொரு அரசியல் கட்சியும் தனித்தனியாக அரசியல் செய்வது எமக்குப் பிரச்சினை அல்ல.

ஆனால் நாடு விழுந்துள்ள இந்த படுகுழியிலிருந்து நாட்டை மீளக் கட்டியெழுப்ப வேண்டுமானால் அனைத்து அரசியல் கட்சிகளும் தலைவர்களும் ஒருமித்த பொது உடன்பாட்டுடன் செயற்பட வேண்டும். இன்று நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடி தீர்க்க முடியாத பிரச்சி னையல்ல. ஒரு கட்டத்தில் இந்தியாவும் இதே போன்ற நெருக்கடியை சந்தித்தது. ஆனால், இந்தியா அதை மிகத் துல்லியமான கூட்டு முயற்சியால் தீர்த்து வைத்தது.

நாம் அனைவரும் அத்தகைய அணுகுமுறையை எடுக்க வேண் டும். அதே சமயம் நாடாளுமன்றம் முக்கியப் பங்கு வகிக்க வேண்டும். எனவே, இந்த நாட்டில் உள்ள அனைத்து அரசியல் சக்திகளும் தனிமனித அதிகாரத்தை இல் லாதொழித்து மீண்டும் நாடாளு மன்ற மரபுக்குத் திரும்ப வேண்டும்.

அதற்குப் பொதுவான ஒருமித்த கருத்துடன் தெளிவான வேலைத்திட் டத்தை நோக்கி நகர வேண்டும். எந்த அதிகார நோக்கமும் இல்லாமல், மிகுந்த நேர்மையுடன் அதற்காக நாங்கள் நிற்கிறோம். அத்துடன் நாட்டுக்குள் ஏற்பட் டிருக்கும் அரசியல் சமூக, பொருளாதாரப் பிரச்சினைக்கு 20 ஆவது திருத்தச் சட்டமும் காரணமாகும். அதனால், துரிதமாக நாடாளுமன் றத்துக்கு பூரண அதிகாரம் வழங்க வேண்டும். 20 ஆவது திருத்தச் சட்டத்தை இரத்து செய்வதன் மூலம் பல பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணலாம் என்றார்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவர் உட்பட 45 பேர் கைது

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வீட்டின் முன்பாக நேற்று வியாழக்கிழமை இரவு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவர் உட்பட 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஏற்பட்ட கலவரத்தில் பொலிஸ் பேருந்து ஒன்றும், ஜீப் ஒன்றும், முச்சக்கரவண்டி ஒன்றும், 2 டிராஃபிக் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் இராணுவ பேருந்து ஒன்றும் ஆர்ப்பாட்டக்காரர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் உட்பட 5 பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

ஜனாதிபதியின் வீட்டுக்கு அருகில் மக்கள் போராட்டத்தால் பதற்றம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் வீட்டுக்கு அருகில் நேற்று இரவு மக்கள் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

மீரிஹானவில் உள்ள ஜனாதிபதியின் வீட்டுக்கு அருகில் இன்று இரவு கூடிய மக்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன், இதனால் அந்தப் பகுதியில் பதற்றமான நிலைமை உருவாகியுள்ளது.

எரிபொருள் நெருக்கடி மற்றும் மின்வெட்டு உள்ளிட்ட பிரச்சனைகளை அடிப்படையாகக் கொண்டே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது ஜனாதிபதியின் வீட்டுக்கு செல்லும் வீதியை வீதித்தடைகளை போட்டு பொலிஸார் மூடினர்.

இதனை தொடர்ந்து பிரதேசவாசிகளுக்கும் பொலிஸாருக்கும் இடையே முறுகல் நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதன்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

பிரித்தானியா, தென் கொரியா, எகிப்து ஆகிய நாடுகள் இலங்கைக்கு ஒத்துழைப்பு

நாட்டின் எரிசக்தி, சுற்றுலா, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட சில துறைகளை அபிவிருத்தி செய்வதற்கு பிரித்தானியா, தென் கொரியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் ஒத்துழைப்பு வழங்கியுள்ளன.

குறித்த நாடுகளின் பிரதிநிதிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை இன்று முற்பகல் சந்தித்தனர்.

பிரித்தானிய பாராளுமன்றத்தின் பிரபுக்கள் சபையின் உறுப்பினர் லார்ட் மைக்கல் நெஸ்பி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை சந்தித்த போது, மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி உற்பத்தியை மேற்கொள்வதற்கு அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை குறித்து தமது மகிழ்ச்சியை வௌிப்படுத்தியுள்ளார்.

சூரியசக்தி உள்ளிட்ட ஏனைய மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி மூலங்களூடாக மின்னுற்பத்தியை மேற்கொள்வதற்கு பிரித்தானியா ஒத்திழைப்பு வழங்க தயார் என பிரித்தானிய பாராளுமன்றத்தின் பிரபுக்கள் சபையின் உறுப்பினர் லார்ட் மைக்கல் நெஸ்பி கூறியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பணியாளர்களுக்கு அதிகளவில் தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொடுக்க தமது அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என தென் கொரியாவின் அரசாங்க கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் Koo Yun-cheol ஜனாதிபதியிடம் கூறியுள்ளார்.

சுற்றுலா வலயங்களை மேம்படுத்துவது குறித்து தமது அரசாங்கம் அதிகக் கவனம் செலுத்தியுள்ளதாக எகிப்து தூதுவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வே முக்கியமானது: இந்திய வௌிவிவகார அமைச்சர் தெரிவிப்பு

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள முயற்சிக்கும் இலங்கைக்கு இந்தியாவிடம் இருந்து விரைவாக உதவிகள் கிடைப்பதை உறுதிப்படுத்த மேலதிக நேரம் பணியாற்றுவதாக இந்திய வௌிவிவகார அமைச்சர் கலாநிதி S.ஜெய்சங்கர் தெரிவித்தார்.

அத்தியாவசிய பொருட்கள் கொள்வனவிற்காக வழங்கும் ஒரு பில்லியன் டொலர் கடன் உதவி விரைவில் கிடைக்க செயற்படுவதாகவும் இந்திய வௌிவிவகார அமைச்சர் தெரிவித்தார்.

அவர் நாடு திரும்புவதற்கு முன்னர் இலங்கையில் உள்ள இந்திய ஊடகவியலாளர்களை சந்தித்தபோதே இதனை தெரிவித்தார்.

இதேவேளை, உரிய நடைமுறையை பின்பற்றாமல் அதானி குழுமம் இலங்கையின் எரிசக்தி துறையில் பிரவேசித்துள்ளதாக முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் ஊடகவியலாளர்கள் இந்திய வௌிவிவகார அமைச்சரிடம் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த கலாநிதி S.ஜெய்சங்கர், இந்திய அரசாங்கம் தனியார் துறையின் முதலீடுகளுடன் தொடர்புபடவில்லை என குறப்பிட்டதாக ‘த ஹிந்து’ செய்தி வௌியிட்டுள்ளது.

இதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின்போது கவனம் செலுத்தப்பட்ட அரசியல் கைதிகளின் விடுதலை, காணிப் பிரச்சினை, காணாமலாக்கப்பட்டவர்கள் விவகாரம் மற்றும் அபிவிருத்தி ஆகிய நான்கு விடயங்களும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் நீண்டகால பிரச்சினைகள் என கலாநிதி S.ஜெய்சங்கர் கூறினார்.

இந்த விடயங்கள் தொடர்பாக முன்னெடுக்கப்படுகின்ற நடவடிக்கைகள் நல்லிணக்கம் மற்றம் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கு வழிவகுக்கும் என இந்திய வௌிவிவகார அமைச்சர் குறிப்பிட்டார்.

ஆனால், அது இந்த விடயங்கள் தொடர்பிலான கலந்துரையாடல்களின் முடிவாக அமையாது எனவும் அரசியல் தீர்வே முக்கியமானது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இ.தொ.கா சந்தா பெறாத தொழிற்சங்கமாக மாற்றியமைக்கப்படும்

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் சந்தா பெறாத தொழிற்சங்கமாக எதிர்காலத்தில் மாற்றியமைக்கப்படும் என தெரிவித்துள்ள இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் புதிய தலைவரும்,  பிரதம அமைச்சரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான், மலையக மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்தும் குரல் கொடுக்கும் என்றார்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபைக் கூட்டம் நேன்று முற்பகல் கொட்டகலையிலுள்ள சி.எல்.எவ் வளாகத்தில் நடைபெற்றது.

இதன் பின் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

” நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், எமது மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலைமையில் இருந்து அவர்களை மீட்டெடுப்பது தொடர்பில் தேசிய சபையில் ஆராயப்பட்டது. எமது மக்களின் உரிமைகளுக்காகவும், பொருளாதார எழுச்சிக்காகவும் நாம் தொடர்ந்து தீவிரமாக செயற்படுவோம்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் சந்தா பெறாத சங்கமாக மாறவேண்டும் என்பதே மறைந்த தலைவரின் இலட்சியமும்கூட. அதனை நாம் நிறைவேற்றுவோம். தற்போது சந்தா பெற்றாலும் கணக்கு விவரம் உரியவகையில் காண்பிக்கப்படுகின்றது.

அரசில் இருந்து வெளியேறுவது சம்பந்தமாக இன்று கலந்துரையாடப்படவில்லை. ” – என்றார்.

Posted in Uncategorized

ராஜீவ் கொலை வழக்கு : எழுவர் விடுதலை குறித்து விளக்கமளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் ஏழுபேரின் விடுதலைக் குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்துள்ளது.

குறித்த வழக்கு தொடர்பில் சிறையில் இருக்கும் நளினி, ஆளுநரின் முடிவுக்கு காத்திருக்காமல் தன்னை விடுதலை செய்யக்கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார்.

குறித்த வழக்கு புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டுள்ளது. இதன்போது இது குறித்து ஆளுநர் எவ்வித முடிவும் எடுக்காத நிலையில், நளினியை விடுதலை செய்வது குறித்து எவ்வாறு உத்தரவுப்பிறப்பிக்க முடியும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

அதேநேரம் இந்த விவகாரம் தொடர்பில் அமைச்சரவையின் தீர்மானம் குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது