ஜனாதிபதி கோட்டாவின் பேஸ்புக் பதிவுகளுக்கு கருத்து தெரிவிக்க தடை!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பேஸ்புக் பதிவுகளுக்கு கருத்து தெரிவிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஒரு மில்லியனுக்கும் அதிக பின்பற்றுனர்களைக் கொண்ட இந்த பேஸ்புக் பக்கத்தில், கருத்து தெரிவிப்பதற்கு நேற்று (புதன்கிழமை) மாலை முதலே தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டு மக்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ள நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பேஸ்புக் பதிவுகளில் அதிகளவானவர்கள் தங்களது ஆதங்கங்களை வெளிப்படுத்தி வந்தனர் என்பதுக் குறிப்பிடத்தக்கது.

நாடு முழுமையாக மூடப்படும் அபாயம்

சில நாட்களேனும் நாட்டை முழுமையாக மூடிவிடுமாறு அரசாங்கத்திடம் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

எரிபொருள் தட்டுப்பாட்டால், மாணவர்களை பாடசாலைகளுக்கு அனுப்ப முடியாத நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது. மின் வெட்டால், வர்த்தக நடவடிக்கைகளை முறையாக முன்னெடுக்க முடியாத அச்சம் ஏற்பட்டுள்ளது. பல தொழில்துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

ஆகையால் சில நாட்களேனும் நாட்டை முழுமையாக மூடிவிடுவதற்கு நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசாங்கத்திடம் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாம் வாய் திறந்தால் நாடு பற்றியெரியும் – விமல்

இலங்கையில் இந்தியாவின் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கே, இலங்கைக் கேட்கும்போதெல்லாம் இந்தியா கடன் வழங்குவதாக தெரிவித்த முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச, லிற்றோ நிறுவனத்தை இந்தியாவுக்கு வழங்குவதற்கு முயற்சிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தொடர்பில் எமக்கு தெரிந்த விடயங்களை நாம் அம்பலப்படுத்தினால் நாடு பற்றியெறியுமென எனவும் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், இந்தியாவுக்கு சென்றுவிட்டு நாடு திரும்பிய நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் ஊடகவியலாளர்கள் எதிர்காலத்தில் என்ன நடக்குமென வினவினார்கள். இதற்கு சிரித்தப்படியே அதிகமாக சிந்திக்க வேண்டாமென பசில் கூறினார். அதாவது அதிகமாக நாட்டு மக்கள் சிந்திக்க ஆரம்பித்தால் பசிலை இங்கிருக்கவிடமாட்டார்கள் என்பதாலேயே  பசில் அவ்வாறு கூறினார் என்றார்.

பசிலின் பதவியைப் பறிப்பதால் மாத்திரம் நாட்டை நெருக்கடி நிலைமைகளில் இருந்து மீட்க முடியாது. பசில் என்கிற பல்லை பிடுங்குவதால் மாத்திரம் வாய் சுத்தமாகாது எனவும் தெரிவித்தார்.

இதேவேளை பசில் ராஜபக்ஷவின் இரு மகளில் ஒருவர் இந்தியா பிரஜையையும், மற்றொருவர் பிரித்தானிய பிரஜையையும் திருமணம் முடித்துள்ளனர். இந்தியாவில்  திருமணம் முடித்துள்ள பசிலின் மகளின் மாமனார் றோ உளவு அமைப்பின் பிரதானியின் மகன் எனவும் தெரிவித்தார்.

இலங்கைக் கேட்கும்போதெல்லாம் கடன்களை இலங்கைக்கு வாரி வழங்குவதற்கு இந்தியாவுக்குப் பைத்தியமா? இலங்கையில் நிறைவேற்றிக்கொள்ள வேண்டிய தேவைகள் இந்தியாவக்கு இருக்காதா? லிற்றோ நிறுவனத்தை இந்தியாவுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் தயாராக இருக்கிறது எனவும் தெரிவித்தார்.

Posted in Uncategorized

அடுத்தவாரம் முதல் ஒரு நாளைக்கு 10 மணித்தியாலங்களுக்கு மேல் மின்வெட்டு

மின்சார நெருக்கடி மிகவும் உச்சகட்டத்தை எட்டியுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.12 மணி நேர மின் துண்டிப்பு நடைமுறைப்படுத்த அனுமதி கோரப்பட்டது. எனினும், இந்த நிலைமை ஓரளவுக்கு குறைப்பதற்காக, கையிருப்புக்கு அவசியமான குறிப்பிடத்தக்க அளவான எரிபொருளைப் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருந்தது. தற்போது ஏற்படும் நிலைமை அவ்வளவு சிறந்ததாக இல்லை.

இலங்கை முழுவதும் காலை 8 மணி முதல் இரவு 12 மணி வரையான காலப்பகுதிக்குள் 10 மணிநேர மின்துண்டிப்பு நடைமுறைப்படுத்துவதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு விருப்பமின்றியேனும் மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.மின்சாரத்தை உற்பத்தி செய்யும் மின்னுற்பத்தி நிலையங்களில், 800 மெகாவாட் மின்சார உற்பத்திக்கான எரிபொருள் இன்மையால், மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய இயலுமை இல்லை. நிதி பிரச்சினை காரணமாகவே மின்சார பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இதேவேளை அடுத்த வாரத்தில் இருந்து இலங்கையில் ஒரு நாளைக்கு 10 மணித்தியாலங்களுக்கு மேல் மின்வெட்டு ஏற்படக்கூடும் என இலங்கை மின்சார சபையின் உள்ளக தகவல்களை மேற்கோள்காட் ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.மின் உற்பத்தி நிலையங்கள் தேவையான எரிபொருளைப் பெறாவிட்டால், ஒரு நாளைக்கு 10 மணி நேரத்திற்கும் மேலாக மின்வெட்டு நீட்டிக்கப்படலாம் என கூறப்படுகின்றது.

இந்தநிலையில் ஏனைய அனல்மின் நிலையங்கள் மூடப்படுவதைத் தடுக்க, எரிபொருளை அவசரமாக விநியோகிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.எரிசக்தி அமைச்சு தேவையான அளவு எரிபொருளை வழங்கத் தவறினால், அடுத்த வாரம் முதல் 10 மணி நேரத்திற்கும் மேலாக மின்வெட்டு நீடிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளதாக ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

Posted in Uncategorized

பாராளுமன்றத்தை எப்படி கலைக்கலாம்?: கம்மன்பில விளக்கம்!

பாராளுமன்றத்தை கலைத்து தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அதற்காக நாட்டின் அரசியலமைப்பில் காணப்படும் சந்தர்ப்பங்களை செயற்படுத்துவது தொடர்பில் அவர் விளக்கியுள்ளார்.

பாராளுமன்றத்தை கலைப்பதற்கு இரண்டு அல்லது இரண்டரை வருடங்கள் அவசியம் என சபாநாயகருக்கு கூறப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் விருப்பத்திற்கு அமைய பாராளுமன்றம் கலைக்கப்பட வேண்டுமானால் மாத்திரமே இரண்டரை வருடங்கள் தேவைப்படும்.

எனினும், பாராளுமன்றத்தின் தேவைக்கு அமைய, பாராளுமன்றத்தை எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் கலைக்க முடியும். அதற்கு அரசியலமைப்பின் 71 ஆவது சரத்தின் அ பிரிவு வழி சமைத்துள்ளது.

எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் பாராளுமன்றத்தை கலைக்க ஜனாதிபதியால் முடியும். பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஒருவரிடம் காணப்படும் பட்சத்தில், ஜனாதிபதி அல்ல பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை வைத்திருக்கும் நபரே பலம் மிக்கவராகக் கருதப்படுவார்

அரசாங்கத்திற்கு எதிராக பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான நம்பிக்கை இல்லா பிரேரணையை கொண்டு வந்து அரசாங்கத்தை தோற்கடிக்க வேண்டும். இது மிகவும் கடினமான விடயம் . அதனை மேற்கொள்ள மக்களின் பேராதரவு கட்டாயம் தேவை என உதய கம்மன்பில சுட்டிக்காட்டினார்.

இந்தியாவிடமிருந்து கடன் கிடைப்பதால், ஏப்ரல் மாதமளவில் தற்போதுள்ள நெருக்கடிகளுக்கு ஓரளவு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், கடன் வசதிகளுடாக கிடைக்கும் சலுகைகள் முடிவடைந்த பின்னர் மக்கள் வீதிக்கு இறங்கும்போதே பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து அரசாங்கத்திற்கு எதிராக தம்மால் நடவடிக்கை எடுக்க முடியும் என அவர் குறிப்பிட்டார்.

அவ்வாறு 113 பேர் ஒன்றிணைந்த பின்னரே நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வர முடியும் எனவும் அவர் கூறினார்.

இ.தொ.காவின் புதிய தலைவராக செந்தில் தொண்டமான்!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் புதிய தலைவராக செந்தில் தொண்டமான் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவிற்கு பின்னர் வெற்றிடமாக இருந்த இ.தொ.காவின் தலைமை பதவிக்கே செந்தில் தொண்டமான் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கொட்டகலை CLF வளாகத்தில் இன்று இ.தொ.காவின் தேசிய சபை கூடிய போதே செந்தில் தொண்டமான் கட்சியின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக

இதேவேளை, கட்சியின் நிதி செயலாளர் பதவியை வகித்த மருதபாண்டி ராமேஷ்வரன் தவிசாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Posted in Uncategorized

அரசாங்கத்திற்கு எதிராக ஒரே நாளில் 150 போராட்டங்கள்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக ஒரே நாளில் – ஒரே நேரத்தில் 150 போராட்டங்களை நாடு தழுவிய ரீதியில் நடத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் 07ஆம் திகதி தேர்தல் தொகுதிகள்வாரியாக குறித்த போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தியின் தொகுதி அமைப்பாளர்கள், மாவட்ட அமைப்பாளர்கள், மக்கள் பிரதிநிதிகள், கட்சியின் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இந்தபோராட்டங்களில் பங்கேற்று, தமது எதிர்ப்பை வெளிப்படுத்தவுள்ளனர்.

Posted in Uncategorized

இந்திய வெளிவிவகார அமைச்சருடன் எதிர்க்கட்சித் தலைவர் பேச்சு

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெயசங்கர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பொன்ற நேற்று பிற்பகல் இந்திய உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம் பெற்றது.

இந்நெருக்கடியான தருணத்தில் இந்தியா தனது சகோதரத்துவக் கரத்தை இலங்கைக்கு நீட்டியதற்கு நன்றி தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இதுவரை இலங்கைக்கு இந்தியா வழங்கிய ஆதரவிற்கும் நன்றி தெரிவித்தார். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நீண்டகால இரு தரப்பு உறவு மற்றும் அது எந்தளவிற்கு பொருளாதார, கலாச்சார மற்றும் சமூக ரீதியில் பரவியுள்ளது என்பதையும் எதிர்க்கட்சித் தலைவர் நினைவு கூர்ந்தார்.

இலங்கை மீண்டெழுவதற்கு முழுமையான ஆதரவையும் உதவியையும் வழங்குமாறு தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறான உதவிகளை மக்கள் மிகவும் பயனுள்ளதாகப் பயன்படுத்துவதற்கான திட்டத்திற்கு தேவையான ஆதரவை வழங்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார். இந்நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர், கலாநிதி ஹர்ஷ டி சில்வா, எரான் விக்கிரமரத்ன, வடிவேல் சுரேஷ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Posted in Uncategorized

புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மீதான தடை நீக்கப்பட வேண்டும்; ரணில்

இலங்கையில் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படுமானால் புலம்பெயர் தமிழர்களிடமிருந்து மட்டுமல்ல ஐரோப்பிய அரசுகள்கூட இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ளும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

அத்துடன், தமிழ் மக்களின் நியாயமான பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும், புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மீதான தடைநீக்கப்பட வேண்டும் என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கை நியாயமானது எனவும் ரணில் விக்கிரமசிங்க கூறினார்.

இது தொடர்பில் ரணில் விக்கிரமசிங்க மேலும் கூறியதாவது,

சில புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கு எமது ஆட்சியிலும் தடைவிதிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த ஆட்சி வந்த பிறகு பல அமைப்புகள் தடை செய்யப்பட்டன. எம்முடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்ட அமைப்புகளும் தடைபட்டியலில் இணைக்கப்பட்டன. அவைமீதான தடையை நீக்குமாறுதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. அந்த கோரிக்கை நியாயமானது.

எமது ஆட்சியில் வேலை வாய்ப்பு இருந்தது, வருமானம் இருந்தது, உண்பதற்கு உணவு இருந்தது, ஆனால் தேசிய வாதம் பற்றி கதைத்தனர், நாட்டை மீட்போம் என சூளுரைத்தனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பற்றி கதைத்தனர். இறுதியில் தற்போது என்ன நடந்துள்ளது? இனவாதத்தை உண்ண முடியுமா? இனவாதத்தால் ஒரு லீற்றர் டீசல் வழங்க முடியுமா?

எனவே, இவ்வாறான அரசியலை விட்டுவிடுவோம். தமிழ் மக்களின் நியாயமான பிரச்சினைக்கு தீர்வை வழங்குவோம். தேரர்களும் இதனை வலியுறுத்துகின்றனர்.

புலிகளின் கதை முடிந்துவிட்டது. அவர்களால் மீண்டெழமுடியாது. புலம்பெயர் அமைப்புகளிடம் தற்போது நிதி இல்லை, தனி நபர்களிடம்தான் பண பலம் உள்ளது. புலம்பெயர் அமைப்புகளின் முதலீடு வந்தால் நல்லதுதான். குறிப்பாக இனப்பிரச்சினை தீர்க்கப்படும் என்ற நிலைப்பாட்டை நாம் எடுத்தால் புலம்பெயர் தமிழர்களை விடவும் அதிக வெளிநாட்டு முதலீடுகள் வரும். ஐரோப்பிய அரசுகள்கூட முதலீடுகளை மேற்கொள்ளும்.

அதேவேளை, எமது ஆட்சியில் புதிய அரசமைப்புக்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. 7 மாகாண முதல்வர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள், மாகாணசபைகளுக்கு கூடுதல் அதிகாரம் வேண்டும் என யோசனை முன்வைத்தனர்.

இவர்கள் அனைவரும் சிங்களவர்கள், தீவிரவாதிகள் கிடையாது. அதேபோல முதல்வர்கள் ஐக்கிய தேசியக்கட்சியை சார்ந்தவர்களும் அல்லர். இந்த யோசனையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஏற்றது. இது பற்றி கலந்துரையாடலாம் எனவும் கூறியது. சுசில் பிரேம ஜயந்த தலைமையில் இது தொடர்பில் ஆவணம் தயாரிக்கப்பட்டது. அந்த ஆவணம் குறித்து கலந்துரையாடி தீர்வை முன்வைக்கலாம் என்றார்.

பேராதனை போதனா வைத்தியசாலை விவகாரம் – அவதானம் செலுத்தினார் எஸ்.ஜெய்சங்கர்!

பேராதனை போதனா வைத்தியசாலைக்கு எவ்வாறு உதவலாம் என ஆராயுமாறு இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், இந்திய உயர்ஸ்தானிகருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

பேராதனை போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளவிருந்த சத்திரசிகிச்சைகள் இடைநிறுத்தப்படுவதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து குறித்த செய்தியை அறிந்த இந்திய வெளிவிவகார அமைச்சர், தாம் மிகுந்த வருத்தமடைந்ததாக தமது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக இந்தியா உதவக்கூடிய வழிகள் குறித்து ஆராயுமாறு கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவிடம் இந்திய வௌிவிவகார அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மருந்துகளுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள காரணத்தினால் பேராதனை போதனா வைத்தியசாலையில் திகதியிடப்பட்டிருந்த அனைத்து சத்திரசிகிச்சைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

எவ்வாறாயினும், அத்தியாவசிய சத்திரசிகிச்சைகள் மாத்திரம் முன்னெடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டது.

விநியோகஸ்தர்களின் தாமதம் காரணமாகவே சத்திரசிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மருந்தொன்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக இது குறித்து ஔடத உற்பத்திகள், வழங்கல் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சின் செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

குறித்த மருந்தை விரைவில் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், பேராதனை வைத்தியசாலை உள்ளிட்ட பல வைத்தியசாலைகளில் குறித்த மருந்து மிகக்குறைந்தளவே கையிருப்பிலுள்ளதாக வைத்தியர் சமன் ரத்நாயக்க சுட்டிக்காட்டினார்.

இதனிடையே, 248 அத்தியாவசிய மருந்துகளை இறக்குமதி செய்வதற்கான பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், இவற்றில் 16 அத்தியாவசிய மருந்துகளுக்கான கடன் கடிதங்களை துரிதமாக வழங்குவதற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொற்றா நோய்கள், இருதய நோய்கள் உள்ளடங்கலாக பல நோய்களுக்கு பயன்படுத்தப்படும் 16 வகையான மருந்துகளும் இதில் அடங்குகின்றன.

இதேவேளை, தேவையான மருந்துகள் வழங்கப்படுமென மருந்து விநியோக பிரிவினால் உறுதியளிக்கப்பட்டதை அடுத்து இடைநிறுத்தப்பட்ட சத்திரசிகிச்சைகள் மீள ஆரம்பமாகியுள்ளதாக பேராதனை போதனா வைத்தியாலை தெரிவித்துள்ளது.