சர்வகட்சி மாநாட்டில் ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்காது

மார்ச் 23ஆம் திகதி நடைபெறவுள்ள சர்வகட்சி மாநாட்டில் ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்காது என அதன் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஆளும்கட்சியின் பங்காளி கட்சிகளான பிவிதுறு ஹெல உருமய, தேசிய சுதந்திர முன்னணி மற்றும் நவ சமசமாஜக் கட்சி ஆகியனவும் பங்குபற்றாது என அறிவித்துள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்பதாக கூறியுள்ள அதேவேளை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பங்கேற்கப்போவதில்லை என அறிவித்துள்ளது.அரசாங்கத்தின் பங்காளி கட்சிகள் 11 இல் இருந்து இரு கட்சிகள் மட்டுமே சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்கும் என அறிவித்துள்ளன.

இதேவேளை சர்வகட்சி கட்சி மாநாட்டில் கலந்து கொள்ளப் போவதில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவும் தெரிவித்துள்ளார்.

மகிந்த நல்லூருக்கு விஜயம்-எதிர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் நல்லூர் ஆலய விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நல்லூர் ஆலய முன்றலில் இன்றைய தினம் காலை 10 மணிக்கு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கம் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கம் ஆகியன இணைந்து இன்று நடாத்திய ஊடக சந்திப்பின்போதே இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வேலன் கருத்து தெரிவிக்கையில், இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எங்களுடைய நிலத்திலே வந்து தமிழினத்துக்கு எதிராக நடவடிக்கைகளை செய்வதற்கு ஒருபோதும் அனுமதிக்க முடியாது. நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் வழிபாட்டுக்கு வருவதாக ஏற்பாடாகி இருக்கின்றது. தமிழின அழிப்பை மேற்கொண்டிருக்ககூடிய மஹிந்த ராஜபக்ச எங்களுடைய மண்ணுக்கு வருவதை முற்றுமாக எதிர்க்கின்றோம்.

இதற்காக நாளை காலை 10 மணியளவில் நல்லூர் ஆலய முன்றலில் எங்களுடைய உறவுகள் எதிர்ப்பை வெளிக்காட்டும் முகமாக ஒன்று கூடுமாறு நாங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றோம். இன்றைய இந்த காலகட்டத்தில் மக்கள் துன்பப் பட்டுக் கொண்டிருக்கின்ற நேரத்திலேயே எங்களுடைய மரபுவழித் தாயகமான வடக்கு கிழக்கு பகுதியிலேயே காணி அபகரிப்புகள் மிகவும் ரகசியமாக வேகமாக நடைபெற்று வருகின்றன. தொல்பொருள் திணைக்களம் வன இலாகா திணைக்களம் என அனைத்துமே மக்களுடைய காணிகளை அபகரிப்பு வருகின்றது.

எங்களுடைய காணிகளை அபகரித்து சிங்கள குடியேற்றங்களை முன்னெடுக்கின்ற திட்டம் இடம்பெற்று வருகின்றன. பௌத்தமயமாக்கல் என்ற திட்டத்தில் இன்றும்கூட கந்தரோடையில் விகாரை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு ஏற்பாடாகி இருக்கிறது. இவ்வாறு ஒவ்வொரு இடங்களிலும் விகாரைகளை அமைத்து தமிழர்கள் பாரம்பரியமாக வழிபட்டு வந்த வழிபாட்டு இடங்கள் எல்லாம் பௌத்த மதஸ்தலங்களாக மாற்றி எடுக்கின்ற முயற்சிகளை ஏற்க முடியாது.

தென்னிலங்கையிலே எங்கு சென்றாலும் எதிர்ப்பு இருக்கக் கூடிய சூழலில் எங்கும் போக முடியாமல் எங்களிடம் வந்து தஞ்சம் புகுந்து அரசியல் நடத்துவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. 13 வருடங்களில் தொட்டுக்கொண்டு இருக்க கூடிய நிலையில் 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற இன அழிப்புக்கு எந்த நீதியையும் வழங்காமல் எங்களையும் அனைவரையும் சர்வதேசத்தை ஏமாற்றிக்கொண்டு இப்படி ஒரு இனப்படுகொலையை செய்திருக்கக்கூடிய அரசியல்வாதி எங்களுடைய நிலத்தில் காலடி எடுத்து வைக்க முடியாது. அனைத்து மக்களும் இதனை உணர்ந்து இந்த எதிர்ப்பை வெளியிட வேண்டும்.

அரசியல் கட்சித் தலைவர்கள், சிவில் சமூகத்தினர், மாணவர் அமைப்புகள் மகளிர் அமைப்புகள், பாதிக்கப்பட்ட தரப்புகள், பொதுமக்கள்,இளைஞர் மன்றங்கள் என அனைத்து தரப்பினரும் நாளைய தினம் காலை 10 மணியளவில் நல்லூர் முன்றலில் ஒன்றுகூடி ஒட்டுமொத்த எதிர்ப்பை காட்டவேண்டும். பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கம் இந்த போராட்டத்திற்கு முழுமையான ஆதரவை வழங்கி நிற்கின்றது- என்றார்.

பயங்கரவாதத்தின் இன்னுமொரு திட்டமே காணாமல் போனோருக்கான மரண சான்றிதழ்-அருட்தந்தை மா.சத்திவேல்

பயங்கரவாதத்தின் இன்னுமொரு திட்டமே காணாமல் போனோருக்கான மரண சான்றிதழ் அல்லது காணாமல் போனமைக்கான சான்றிதழ் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

ஊடகத்திற்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

தற்போது நாட்டில் நிலவும் பொருளாதார பிரச்சினைக்கு மத்தியில் வறுமைக்குள் தள்ளப்பட்டுள்ள மக்கள் அடுத்த வேளை உணவிற்கே கையேந்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இப்பொருளாதார சிக்கலுக்கு முகம் கொடுத்து கொண்டிருக்கும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை தனது நரி நாடகத்தில் சிக்க வைக்கும் முயற்சியாகவே ஒரு லட்சம் ரூபா கொடுப்பதாக ஆட்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.

மேலும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் வறுமை நிலையை பயன்படுத்தி மரணச் சான்றிதழ் அல்லது காணாமல் போனதற்கான சான்றிதழை கொடுத்து போராட்டத்தை சிதைக்கவும் அமைப்புக்குள் கருத்து மோதலை உருவாக்கவும் ஆட்சியாளர்கள் காய் நகர்த்துகின்றனர்.

இதுவரைக்கும் காணாமல் ஆக்கப்பட்டோரின் பட்டியலில் அடையாளம் காணப்பட்டதாக கூறப்படுவோர்க்கு காணாமல் போனமைக்கான சான்றிதழ் அல்லது இறப்பு சான்றிதழும் கொடுக்கப்படும் இழப்பீட்டுத் தொகையும் காணாமல் போனதாக கூறப்படும் இராணுவத்தினரின் குடும்பங்களுக்கு சிலவேளை மகிழ்ச்சியைத் தரலாம். புது வருடத்திற்கான உதவித் தொகையாகவும் அமையலாம்.

ஆனால் வட, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தமது உறவுகளை தேடி 2009 ஆம் ஆண்டு அதைத் தொடர்ந்து நீண்ட போராட்டம் நடத்தியதோடு தற்போது ஐந்து வருடங்களை கடந்தும் தொடர் போராட்டம் நடத்துவது அரசு அறிவிக்கும் ஒரு லட்ச ரூபா பிச்சை பணத்தை பெற்றுக் கொள்வதற்கு அல்ல. தமிழ் உயிருக்கு உயிரான உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை அறிவதற்கும் அதற்கான நீதியை பெற்றுக் கொள்வதற்குமாகும். இதனை கொச்சைப்படுத்துவதை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது. இதற்கு காணாமல் ஆக்கப்பட்டோரை தேடும் உறவுகளே “நாங்கள் உங்களுக்கு பணம் தருகிறோம் எங்கள் உறவுகளுக்கு என்ன நடந்தது என்று கூறுங்கள்” என்று பதிலடி கொடுத்துள்ளனர்.

நாட்டின் சுதந்திர தினத்தை கரி நாளாகவும், சர்வதேச பெண்கள் தினத்தினையும் அவ்வாறே அறிவித்து சர்வதேசத்தின் நீதிக்கதைகளை தட்டிக் கொண்டிருக்கும் நேரத்தில் ரூபா ஒரு லட்சம் தருகிறோம் எனக் கூறுவது போராட்டத்தை அசிங்கப்படுத்தும் செயல் மட்டுமல்ல நீதிக்காக போராடும் ஒட்டுமொத்த தமிழர்களையும் இழிவுபடுத்தும் செயலுமாகும்.

அரசு ஒடுக்குமுறை இயந்திரத்தினால் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள். அவர்கள் சார்ந்த குடும்பத்திற்கு உயிருக்கு உயிரானவர்கள், அவர்கள் தமிழர் தேசத்தின் வாழ்வு காவலர்கள். இவர்களைத் தேடியே நூற்றுக்கும் அதிகமானோர் நோயில் விழுந்து மரணத்தை தழுவியுள்ளனர். இதுவும் சாட்சியங்களை மறைக்கும் அல்லது இல்லாதொழிக்கும் அரசின் கொலை. எனவே நாம் கருதுகின்றோம், இக்கொலையும் பயங்கரவாதத்தின் இன்னுமொரு திட்டமே, காணாமல் போனோருக்கான மரண சான்றிதழ் அல்லது காணாமல் போனமைக்கான சான்றிதழ் எனலாம் என மேலும் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறுவது அரசாங்கத்தின் விவேகமான முடிவு – ரணில் விக்ரமசிங்க

சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறுவது அரசாங்கத்தின் விவேகமான முடிவு என ஐக்கிய தேசியக் கட்சி யின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.காலியில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் பேசிய அவர், குறித்த தீர்மானத்தை எட்டுவதற்கு அரசாங்கம் ஒரு வருட காலத்தினை தாமதப்படுத்தியுள்ளது என சாடினார்.

இதன் காரணமாகவே தற்போதைய நிலைமை மேலும் மோசமாகியுள்ளது என வஜிர அபேவர்தன குற்றம் சாட்டினார்.

இதேவேளை காலதாமதமாக வந்தாலும், அதன் உதவியைப் பெறுவதற்கு ஜனாதிபதி எடுத்த முடிவு குறித்து தாம் மகிழ்ச்சியடைவதாக அக்கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன கூறினார்.

இந்நிலையில் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாட அரசாங்கம் எடுத்த தீர்மானத்தை ஐக்கிய தேசியக் கட்சி வரவேற்றுள்ளது.

Posted in Uncategorized

அமெரிக்க புலனாய்வு அறிக்கையும், இலங்கை விவகாரமும் – உண்மையும் கற்பனையும்

யதீந்திரா

உலகளாவிய புவிசார் அரசியல் போட்டியில் இலங்கை ஒரு முக்கிய விடயமாக நோக்கப்படுவதான, ஒரு கதை நம்மவர்கள் மத்தியிலுண்டு. ஒரு குறிப்பிட்ட தரப்பினர் இப்படியான பார்வைகளை முன்வைத்து வருகின்றனர். குறிப்பாக சீனாவின் பிரசண்ணம் இலங்கைத் தீவில் அதிகரித்து வருவதாகவும் – இதனால் இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு நெருக்கடியிருப்பதாகவும் இவர்கள் கூறுவதுண்டு. இன்னொரு தரப்பினரோ – சற்று ஒரு படிமேல் சென்று, இந்தச் சூழலை கையாளுவதற்கு வேறு வழியின்றி, இந்தியா ஈழத் தமிழர்களை நோக்கி வரவேண்டிவரும் என்றவாறு, கற்பனை செய்வதுமுண்டு. உண்மையில், இவ்வாறான பார்வைகளுக்கு அமைவாகத்தான் விடயங்கள் இடம்பெறுகின்றனவா?

அமெரிக்க தேசிய புலனாய்வு பணியகத்தின் இந்த ஆண்டுக்கான – உலகளவிலான அச்சுறுத்தல் தொடர்பான அறிக்கை வெளியாகியிருக்கின்றது. அமெரிக்க அவதானத்தில் உலகளவிலான அச்சுறுத்தல்கள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. இதில் முதலாவது அச்சுறுத்தலாக, சீனா குறிப்பிடப்பட்டிருக்கின்றது. இரண்டாவதாக ரஸ்யாவும் மூன்றாவதாக ஈரானும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. தெற்காசியாவின் அச்சுறுத்தல்கள் தொடர்பிலும் குறித்த அறிக்கையில் ஆராயப்பட்டிருக்கின்றது. தெற்காசியாவின் அச்சுறுத்தல்களாக ஆப்கானிஸ்தான் விவகாரம் முதலாவதாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது. இரண்டாவதாக பாக்கிஸ்தானுக்கும் இந்தியாவிற்கும் இடையிலான பிரச்சினை சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது. மூன்றாவதாக, இந்திய-சீன எல்லைப்புற இராணுவ நெருக்கடிகள் தொடர்பில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. இது தவிர தெற்காசியாவிலுள்ள வேறு எந்தவொரு நாடுகள் தொடர்பிலும் குறிப்பிடப்படவில்லை. ஏனெனில் தெற்காசியாவிலுள்ள இலங்கை உட்பட்ட, சிறிய நாடுகள் அமெரிக்க அவதானத்திலேயே இல்லை.

இதிலிருந்து ஒரு விடயம் வெள்ளிடைமலை. அதாவது, இந்தியா-பாக்கிஸ்தான் முரண்பாடுகளின் வழியாகவும், இந்திய-சீன பதட்டங்களின் வழியாகவும்தான் தெற்காசிய விவகாரங்களை, அமெரிக்கா உற்று நோக்குகின்றது. தெற்காசியா தொடர்பான அமெரிக்க புரிதலும், அணுகுமுறையும் இந்தியாவை அடிப்படையாகக் கொண்டதென்பது தெளிவாகின்றது. தெற்காசியாவிலுள்ள நாடுகள் இந்தியாவுடன் ஏற்படுத்திக் கொள்ளும் உறவு மற்றும் முரண்பாடுகளின் அடிப்படையில்தான், தெற்காசியாவின் உலக முக்கியத்துவம் தீர்மானிக்கப்படும். இந்த பின்புலத்தில் நோக்கினால், அமெரிக்காவின் தெற்காசிய கொள்கை முடிவுகள் அனைத்தும், புதுடில்லியின் முடிவுகளின் அடிப்படையில்தான் அமைந்திருக்கும். புதுடில்லியின் தீர்மானங்களுக்கு அப்பால் சென்று செயற்படுமளவிற்கு, அமெரிக்க மூலோபாய சமூகத்திற்கு எந்தவொரு அவசியமும் இல்லை.

தெற்காசியாவில் இந்தியாவின் முடிவுகளே பிரதானமானது. இந்த பின்புலத்தில் சிந்தித்தால், இலங்கை விடயத்தில் அமெரிக்க ஈடுபாட்டின் எல்லைக்கோடு என்பது எப்போதுமே, இந்தியாவின் ஆர்வங்களுக்கு அமைவாகவே அமைந்திருக்கும். இந்தியாவின் அனைத்து அகுமுறைகளும் அமெரிக்காவிற்கு உகந்தல்ல என்பது உண்மைதான். உதாரணமாக ரஸ்ய – உக்ரெயின் யுத்தத்தின் போது – முழு மேற்குலகும் ரஸ்யாவிற்கு எதிராகவே திரும்பியது. ஆனால் இந்தியா மேற்குலகத்தின் தீர்மானங்களுக்கு ஒத்துழைக்கவில்லை. ரஸ்யாவிற்கு எதிராக ஜ.நா பாதுகாப்புச் சபையில் தீர்மானம் கொண்டுவரப்பட்ட போது, இந்தியா அதில் பங்குகொள்ளவில்லை. ஏனெனில் இந்தியாவிற்கும் ரஸ்யாவிற்கும் நெருங்கிய நட்புறவுண்டு. ரஸ்யாவுடன் நிற்க வேண்டிய தேவை இந்தியாவிற்குண்டு.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் முரண்பாடுகள் இருந்தாலும் கூட, ரஸ்ய விடயத்தில் இந்தியாவும் சீனாவும் அவரவர் நலன்களின் அடிப்படையில் ஒரு புள்ளியில்தான் நின்றனர். சர்வதேச அரசியலிலுள்ள சிக்கலான பக்கம் இதுதான். ஏனெனில் இங்கு அனைத்துமே நலன்களின் அடிப்படையில்தான் நிறுத்துப்பார்க்கப்படுகின்றன. நீதியின், நியாயத்தின், தர்மத்தின் அடிப்படையில் இங்கு எதுவும் நோக்கப்படுவதில்லை. நோக்கவும் முடியாது. எனவே சர்வதேச அரசியல் தொடர்பில் கற்பனை செய்வதைவிடுத்து, அதனை இரத்தமும் சதையுமாக புரிந்துகொள்வதே அவசியமானது.

இலங்கையின் ஆட்சியாளர்கள் தொடர்பில் இந்தியா அறியாத விடயங்கள் எதுவுல்லை. இந்தியாவை பொறுத்தவரையில், இலங்கை விடயத்தில், சிங்களவர், ஈழத் தமிழர் ஆகிய இரண்டு இனக் கூட்டத்திடமிருந்தும் அவமானகரமான அனுபவங்கள் கிடைத்திருக்கின்றன. இலங்கை தொடர்பில் ஒவ்வொரு முடிவுகளை எடுக்கும் போதும், இந்திய இராஜதந்திர சமூகம் இதனை கருத்தில் கொள்ளும். எனவே இந்தியாவிற்கு புதிதாக கதைகள் சொல்லுவதாக எவரேனும் நினைத்துக் கொண்டால் – அது தவறானது.

உலகில் எந்தவொரு நாடும் அதன் நலன்களை நிறுத்துப் பார்த்துத்தான், வெளிநாட்டு உறவுகளை தீர்மானிக்கும். இந்தியாவின் தலையீடும் அதன் நலன்களிலிருந்துதான் தீர்மானிக்கப்பட்டது. அன்றிருந்த அரசியல் சூழல்நிலைகளினால் அவ்வாறான முடிவுகளை எடுக்க வேண்டிய நிர்பந்தம் இந்தியாவிற்கு ஏற்பட்டது. தனிநாட்டு கோரிக்கையை இந்தியா ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், இந்தியாவில் இருப்பது போன்றதொரு நியாயமான தீர்வை தமிழ் மக்களுக்கு பெற்றுக் கொடுப்பதில் இந்தியா அக்கறையுடன் இருந்தது. ஆனால் இந்தியாவுடன் இணைந்து பயணிக்க விடுதலைப் புலிகள் இயக்கம் உடன்படவில்லை. பிரபாகரன், இந்தியாவிற்கு எதிரான பாதையில் பயணித்தார். ஈழத் தமிழர்களுக்கும் இந்தியாவிற்கும் இடையிலான பலமான நட்புறவு பாதிக்கப்பட்டது. இப்போது நட்பு அறுந்திருக்கும் சூழலில்தான், தமிழ் கட்சிகள் இந்தியாவின் தயவை, தலையீட்டை கோருகின்றன.

ஆனால் இது எழுதுவது போன்று – பேசுவது போன்று – இலகுவானதொரு விடயமல்ல. ஏனெனில் அரசியல் சூழ்நிலைகள் எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. இலங்கை தொடர்பான இந்தியாவின் பார்வைகள் கணிசமாக மாறிவிட்டது. இந்த நிலையில், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் எச்சமாக இருக்கின்ற 13வது திருத்தச்சட்டத்தை வலியுறுத்தக் கூடிய நிலையில்தான் இந்தியாவின் ஈடுபாடு மட்டுப்பட்டுள்ளது. ஏனெனில் இந்தியா ஒரு பிராந்திய சக்தி. இந்தியாவிற்கு உள்ளுக்குள்ளும், எல்லைகளிலும், அயல்நாடுகளிலும் ஏராளமான பிரச்சினைகள் உண்டு. இந்த ஏராளமான பிரச்சினைகளில் இலங்கையும் ஒன்று. ஆனால் தனது உடனடி அயல்நாடு என்னும் வகையில், இலங்கையின் உள்-விவகாரங்களில் தலையீடு;ம் ஆற்றலை இந்தியா கொண்டிருப்பது உண்மை. ஆனால் அதற்காக, எழுந்தமானமான முடிவுகளை, இந்தியா எடுக்கப் போவதில்லை. ஏற்கனவே விரல்களை சுட்டுக் கொண்ட அனுபத்திலிருக்கும் இந்தியா, ஒவ்வொரு விடயங்களையும் நிறுத்துப் பார்த்துத்தான் விடயங்களை முன்னெடுக்கும் வாய்ப்புள்ளது.

இந்த பின்புலத்தில் சிந்தித்தால் இலங்கையின் மீதான சர்வதேச அவதானம் என்பது இந்தியாவை தாண்டிச் செல்லக் கூடிய ஒன்றாக எப்போதுமே இருக்கப் போவதில்லை. நான், இங்கு சுட்டிக்காட்டும் அமெரிக்க புலனாய்வு அறிக்கை அதற்கொரு தெளிவான சான்று. அதாவது, மேற்குலகத்தின் தெற்காசியா தொடர்பான எந்தவொரு தீர்மானமும் இந்தியாவை அனுசரித்துச் செல்வதாகவே இருக்கும். அதே போன்று, இந்தியாவின் தீர்மானங்கள், கருத்துக்களே உலக அரங்கில் உற்று நோக்கப்படும். ஏனெனில் உலக அரசியல் போக்கில் இந்தியாவிற்கு ஒரு பிரதான இடமுண்டு. குறிப்பாக அமெரிக்காவை பொறுத்தவரையில், அதன் முதன்மையான அச்சுறுத்தலை எதிர்கொள்ளுவதற்கு இந்தியாவின் ஆதரவும் ஒத்துழைப்பும் கட்டாயமானது. அதே போன்று, இந்து சமூத்திர பிராந்தியத்தில் சீனாவின் எழுச்சியை ஒரு எல்லைக்குள் முடக்குவதற்கு அமெரிக்காவின் ஒத்தாசை இந்தியாவிற்கு தேவை. இந்தியா, அமெரிக்காவுடனான, சுதந்திர பாதுகாப்பு உடன்பாட்டை கொண்டிருக்கின்றன. அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், இந்தியாவின் கடல்வழியை, இந்தியாவின் படைத்தளங்களை அமெரிக்கா பயன்படுத்த முடியும். அதே போன்று, பிரித்தானியாவுடன் இந்தியா சுதந்திர பாதுகாப்பு உடன்பாட்டை கொண்டிருக்கின்றது. இவ்வாறான உடன்பாடுகளும் நட்புறவும் இருந்தாலும் கூட,

இந்தியா உலக விடயங்களில் முற்றிலுமாக அமெரிக்காவுடன் இல்லை. இந்தியா இப்போதும், நேருகால அணிசாரா கொள்கைப் பாரம்பரியத்தின் அடிப்படையிலேயே அதன் வெளியுறவுகளை தீர்மானிக்கின்றது. இந்தியாவில் எவர் ஆட்சியில் இருந்தாலும் இதுதான் இந்திய வெளிவிவகார கொள்கையின் அஸ்திபாரம். அணுகுமுறைகள் வேண்டுமனால் மாறலாம் ஆனால் அடிப்படை ஒன்றுதான். எனவே சீனாவின் பிரசண்ணத்தின் அடிப்படையில் இலங்கையின் மீது அமெரிக்காவும் இந்தியாவும் பெரியளவில் பதட்டமடைந்திருப்பதாக கற்பனை செய்வது அர்த்தமற்ற ஒன்று. அதே வேளை, இந’தியா வேறு வழியில்லாமல் ஈழத் தமிழர்களை நோக்கிவரும் என்றவாறு கற்பனை செய்தால், அது ஒருவரின் அரசியல் கற்றுக்குட்டித்தனமாகவே இருக்க முடியும். அவ்வாறானவர்கள் தங்களுக்குள் இப்படியொரு கேள்வியை கேட்டுக் கொள்வது நல்லது. அதாவது, சிங்களவர்கள் இந்தியாவிற்கு தேவையான அனைத்தையும் செய்துகொடுத்து. சரணாகதியடைந்தால், ஈழத் தமிழர்கள் விடயத்தை இந்தியா கைவிடலாம்தானே! ஒரு வேளை அப்படி நடந்தால், ஈழத் தமிழர்களின் அரசியல் தீர்விற்காக பேசுகின்ற ஒரேயொரு நாடான, இந்தியாவும் கூட, ஈழத் தமிழர்களுக்கு இல்லையென்றாகலாம். ஆனால் அவ்வாறு நடக்காதென்றே – நாம் நம்புகின்றோம். ஆனால் இந்த நம்பிக்கை எப்போதும் கைகொடுக்கும் என்றில்லை. எனவே தமிழ் அரசியல் சமூகம், வாய்ப்புக்கள் இருக்கின்ற போது, அதனை பயன்படுத்திக் கொள்ளும் அரசியலை பழக வேண்டும்.

Posted in Uncategorized

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் யாழ். விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் யாழ். விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன்பாக  சனிக்கிழமை காலை குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகர் சுகாஸ் உட்பட கட்சியின் உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்

இதன் போது போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள்,மஹிந்த ராஜபக்ஷவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்து, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கு, அரசியல் கைதிகளை விடுதலை செய், காணாமலாக்கப்பட்டோரை கண்டறிய சர்வதேச விசாரணை வேண்டும், இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி வேண்டும், கந்தரோடையில் புத்தர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டாதே, நாவற்குழி சிங்கள குடியேற்றத்தை தடுத்து நிறுத்து போன்ற பல்வேறு கோஷங்கள் எழுப்பியவாறு எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

மேலும் காணாமல் ஆக்கப்பட்டோரை கண்டறிய சர்வதேச விசாரணை வேண்டும், இனப் படுகொலைக்கு சர்வதேச நீதி வேண்டும், கந்தரோடையில் புத்தர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டாதே, நாவற்குழி சிங்கள குடியேற்றத்தை தடுத்து நிறுத்து போன்ற பல்வேறு கோஷங்களும் எழுப்பப்பட்டது.இந்த எதிர்ப்பு போராட்டத்தை  யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன்பாக 9.30 மணியளவில் மேற்கொண்டனர்.

அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நூலண்ட் இலங்கை வருகிறார்

அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நூலண்ட் இன்று முதல் எதிர்வரும் 23 ஆம் திகதி வரையில் ஆசிய நாடுகளுக்கு விஜயம் செய்யவுள்ளார்.அதன்படி பங்களாதேஷ் மற்றும் இலங்கையிலும் புதுடில்லியில் வெளிவிவகார அதிகாரிகளுடன் அவர் கலந்துரையாடல்களையும், ஆலோசனைகளையும் நடத்தவுள்ளார்.

இதேவேளை குறித்த தூதுக்குழுவில் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் டொனால்ட் லூ மற்றும் கொள்கை துணைப் பாதுகாப்புச் செயலாளர் அமண்டா டோரி ஆகியோரும் அடங்குவதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த விஜயங்களின்போது, சிவில் சமூகம் மற்றும் வர்த்தக தலைவர்களையும் சந்தித்து பொருளாதார கூட்டணியை வலுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளனர்.இந்திய பசுபிக் கூட்டமைப்பிற்கு, அமெரிக்காவின் அர்ப்பணிப்பு மற்றும் ஒத்துழைப்பை காட்டும் நோக்கில் இந்த விஜயம் அமையவுள்ளது.

Posted in Uncategorized

சர்வதேச நீதி பொறிமுறை முன் இலங்கை அரசை பாரப்படுத்துவதன் மூலமே தமிழ் மக்களுக்கான நீதியை பெற முடியும்: சுரேந்திரன்

சர்வதேச நீதிப் பொறிமுறை முன் இலங்கை அரசை பாரப்படுத்த செயற்படுவதன் மூலம்தான் தமிழ் மக்களுக்கான ஒரு பரிகார நீதியையும், மீள நிகழாமையையும், உறுதிப்படுத்த முடியும் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் குருசுவாமி தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் அமர்வு தொடர்பாகக் கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் கருத்து தெரிவிக்கையில்,

மனித உரிமைப் பேரவையின் அண்மையில் நடந்த அமர்வில் இலங்கையின் வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் ஆற்றிய உரை ஒரு கேளிக்கை விருந்தாகவே அமைந்துள்ளது.

அரசியல் யாப்பில், மனித உரிமை பாதுகாப்பதற்கான விடயங்கள் உள்வாங்கப்பட்டிருப்பதாகவும், சுயாதீன நீதி பொறிமுறையினால், அவை நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

அரசியல் யாப்பிலே உள்வாங்கப்பட்ட விடயங்கள் எவற்றை அவர்கள் நடைமுறைப்படுத்தி இருக்கிறார்கள் என்பதை அவர் கூற தவறிவிட்டார்.

யுத்தக் குற்றங்களுக்கான தண்டனையின்மை நீடிக்கிறது. விசாரணைகள் நடத்தப்படவில்லை. குறிப்பாக, அரசியல் யாப்பிலே அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான பொது மன்னிப்பு பொறிமுறை ஒன்று ஜனாதிபதியின் அதிகாரத்திற்குக் கீழ் வருகின்றது.

அதில் பல்லாண்டு காலமாக இருக்கக்கூடிய எங்களுடைய அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்குப் பலமுறை கோரிக்கைகள் வைத்தும் அவர்களை விடுதலை செய்யாமல் யுத்த குற்றங்களால் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளை பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்திருக்கிறார்கள்.

இதுதான் மனித உரிமையைப் பேணுவதற்கு அரசியல் யாப்பிலே உள்ள ஏற்பாடா? அல்லது அதன் அடிப்படையில்தான் மனித உரிமை கோட்பாடுகளை அரசாங்கம் மதித்து நடப்பதற்கான எடுத்துக்காட்டா? என்ற கேள்வி சர்வதேச சமூகம் முன் எழுகின்றது.

அடுத்ததாக யுத்தத்துக்குப் பின்னரான பரிகார நடவடிக்கைகளை தாங்கள் முன்னெடுத்து வருவதாகவும், பொறுப்புக் கூறல், நல்லிணக்க நடவடிக்கைகள், உள்ளக பொறிமுறை ஊடாக நடைமுறைப்படுத்தி வருவதாகவும் கூறி இருக்கிறார்.

உள்ளக பொறிமுறையின் ஊடாக அரசாங்கம் முன்னெடுத்த நல்லிணக்க நடவடிக்கைகள் என்ன? பொறுப்புக் கூறல் நடவடிக்கை என்ன? என்பதை அவர் தெளிவாகக் குறிப்பிடத் தவறியுள்ளார்.

எந்த விதமான நல்லிணக்க நடவடிக்கைகளோ, பொறுப்பு கூறலுக்கான எந்தவித ஆரம்பக்கட்ட முயற்சியோ, அரசாங்கத்தால் கொள்ளப்படவில்லை.

மாறாக நினைவேந்தல் நிகழ்வுகளையும் நீதி கோரி அமைதியாக நடத்தப்பட்ட ஜனநாயக போராட்டங்களையும் கொடூரமான முறையில் அரசால் தடுக்கப்படுவது நல்லிணக்க நடவடிக்கையா? மேலும் சர்வதேச சமூகம் வலியுறுத்திய பல விடயங்களை அரசாங்கம் முன்னெடுக்காமல், தவிர்த்து வருகிறது.

குறிப்பாக ஐ.நாவோடு தாங்கள் ஒன்றிணைந்து செயலாற்றத் தயார் என கருத்துக்களைத் தெரிவித்திருக்கின்ற ஜி.எல்.பீரிஸ் ஐ.நா தங்களுக்குச் சிரமத்தை ஏற்படுத்துகின்ற பிரேரணையில் உள்ள சரத்துக்களை தாங்கள் முற்று முழுதாக நிராகரிப்பதாக அதே உரையிலேயே கருத்து தெரிவித்திருக்கிறார்.

குறிப்பாக இலங்கையினுடைய விருப்பம் இல்லாமலேயே கடந்த நாற்பத்தியாறு பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், ஆதாரங்களைத் திரட்டும் நடவடிக்கையை தாங்கள் நிராகரிப்பதாகவும், அது உள்ளக பொறிமுறையின் ஊடாக பொறுப்பு கூறல் நல்லிணக்க முயற்சியைப் பாதிக்கிறது என்பதையும் அவர் தன்னுடைய உரையிலே கூறியிருக்கிறார்.

இது மிகவும் வேடிக்கையானது மாத்திரமல்ல ஐநா மனித உரிமை பேரவையிலே அங்கத்துவம் வகிக்கின்ற நாடுகளைக் கூட ஒரு கேளிக்கையாக எள்ளி நகையாடி இருப்பதாகவே நாங்கள் கருதுகிறோம்.

எந்த விதமான பொறுப்புக் கூறலையும், நல்லிணக்க நடவடிக்கைகளையும் முன்னெடுக்காத அரசாங்கம் யுத்தக் குற்றங்கள், மனித உரிமை மீறல்களுக்கான ஆதாரங்களைத் திரட்டுகின்ற தாங்கள் நிராகரிப்பதாகக் கூறி இருக்கிறார்.

யுத்த குற்றங்கள் மனித உரிமை மீறல்கள் நடைபெறவில்லை என்றும் தெரிவிக்கின்றார். யுத்த குற்றங்களும், மனித உரிமை மீறல்களும் நடைபெறவில்லை என்றால், அதற்கான விசாரணை பொறிமுறையை எதிர்கொள்வதில் எதற்கு இவர்கள் தயக்கம் காட்ட வேண்டும்? என்ற கேள்வி எழுகிறது.

அமெரிக்கப் பதிவிடப் பிரதிநிதியிடம் வெளிநாட்டுத் தலையீடுகளை தாங்கள் விரும்பவில்லை என்றும், அந்த அழுத்தங்களை நிராகரிக்கிறோம் என்றும் கூறியிருக்கிறார்.

ஆகவே முன்னுக்குப் பின் முரணான கருத்துக்களைத் தனது உரையிலே கூறிக் கொண்டு மனித உரிமை யுத்த குற்றங்கள், மனித உரிமை மீறல், மற்றும் பொறுப்பு கூறல், நல்லிணக்கம் போன்ற முக்கியமான விடயங்களை ஐ.நா மனித உரிமை பேரவை பரிந்துரைத்தும் அவற்றை நிராகரித்ததோடு மாத்திரமல்ல அது சார்ந்து இவர்கள் எந்த விடயத்திலும் செயற்படவும் இல்லை என்பது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

இனிமேலும் அரசாங்கம் செயற்பட மாட்டார்கள் என்பதை தன்னுடைய உரையினூடாக வெளிநாட்டு அமைச்சர் தெளிவுபடுத்தியிருப்பது இலங்கையைத் தான் காப்பாற்றுவதாக அல்லது இலங்கை அரசாங்கத்தைக் காப்பாற்றுவதற்கான உரையாகத்தான் நிகழ்த்தியிருப்பது போன்று அவர் காட்டியிருப்பதுதான் வேடிக்கையாக இருக்கின்றது.

ஆகவே அவருடைய இந்த கருத்து இலங்கை அரசாங்கம் நல்லிணக்கம், பொறுப்புக் கூறல், மனித உரிமையைப் பேணுகின்ற நடவடிக்கைகள், அதே போன்று யுத்தக் குற்றங்கள் மனித உரிமை மீறலுக்கான, நீதிப் பொறிமுறையை இவர்கள் எப்போதும், உள்ளக பொறிமுறையின் ஊடாக வழங்கப் போவதில்லை என்பதற்குச் சர்வதேச சமூகத்துக்குச் சிறந்த ஒரு எடுத்துக்காட்டாக அமைகிறது.

தாமாக வலிந்து அவற்றைச் செயல்படுத்தப் போவதில்லை என்பதையும், சர்வதேச நாடுகளினுடைய தலையீடு இல்லாமல் அல்லது ஐநாவினுடைய தலையீடு இல்லாமல் சர்வதேச நீதி பொறிமுறைக்கு முன்னால் இலங்கையை நிறுத்தாமல் இவர்கள் எந்த நடவடிக்கைகளையும் முன்னெடுக்கப் போவதில்லை என்பதை அவருடைய உரை தெளிவாக எடுத்துக் காட்டி இருக்கிறது.

ஆகவே இதன் அடிப்படையில் சர்வதேச சமூகம் காத்திரமான, உறுதியான முறையிலே சர்வதேச நீதிப் பொறிமுறை முன் இலங்கை அரசை பாரப்படுத்த செயற்படுவதன் மூலம்தான் தமிழ் மக்களுக்கான ஒரு பரிகார நீதியையும், மீள நிகழாமையையும், உறுதிப்படுத்த முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

ஒரு இலட்சம் தானா எனது பிள்ளையின் பெறுமதி- கோகிலவாணி கேள்வி

ஒரு இலட்சம் தானா எனது பிள்ளையின் பெறுமதி என கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் சங்கத்தின் தலைவி இராமநாதன் கோகிலவாணி கேள்வி எழுப்பியுள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப உறவுகள் சங்க அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “இன்று எங்களுடைய போராட்டம் 5 வருடங்களையும் கடந்து வீதியில் இறங்கி போராடிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், ஒரு இலட்சம் ரூபா வாழ் வாதாரமும், மரணச்சான்றிதழும் மரணச்சான்றிதழை பெற்றுக்கொள்ள விரும்பாதவர்களிற்கு காணாமல் போனோர் சான்றிதழ் வழங்குவதாகவும் நீதி அமைச்சர் கூறியிருக்கின்றார்.

எங்களது உறவுகள் கிடைக்கும் வரை போராடிவரும் எமது போராட்டத்தை மழுங்கடிக்கவே இந்த தீர்வை அவர்கள் கொண்டு வந்திருக்கின்றார்கள். பொருட்களின் விலைகள் அதிகரித்து உணவின்றி மக்கள் உயிரிழக்கும் வேளையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளிற்கு ஒரு இலட்சம் ரூபா வாழ்வாதாரம் வழங்க முன்வந்திருக்கின்றார்.

இந்த வேளையில் அவர் இவ்வாறான வாழ்வாதாரத்தை கொடுக்க முன்வந்திருப்பது தொடர்பில் எமக்கு விளங்கவில்லை. எமது போராட்டத்தை மழுங்களிடிக்கவே இவ்வாறு உதவ முன்வந்துள்ளதாக நாங்கள் விளங்கிக்கொண்டிருக்கின்றோம். எமது உறவுகள் இவர்களது ஒரு லட்சம் ரூபாவை வாங்குவதற்கும், மரணச் சான்றிதழை பெற்றுக் கொள்ளவும் தயாராக இல்லை. இவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகளை மீட்டுத்தர வேண்டும். இவர்களால் தரமுடியாதுப போனால் சர்வதேசம் எமது உறவுகளை கண்டுபிடித்து தர வேண்டும்” என்றார்

நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் கோட்டாவுடன் பேசுங்கள் – சுரேஷ் பிரேமச்சந்திரன்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பேசவுள்ள விடயங்கள் தொடர்பில் நிகழ்ச்சி நிரல் ஒன்றைத் தயாரிக்க வேண்டும் என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில்   இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு கௌரவமான தீர்வு வழங்க இந்த அரசாங்கம் தயாராக இல்லை. தமிழ் மக்களை இந்த அரசாங்கத் தரப்பினர் மிகவும் மோசமாகத் தான் நடத்துகின்றனர். ஒரு பேச்சுவார்த்தைக்கான சரியான ஒரு சூழலைக்கூட இந்த அரசாங்கத்தால் உருவாக்க முடியவில்லை.

ஒரு பக்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பேச்சுவார்த்தைக்கு அழைத்துக் கொண்டு மறுபக்கம், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களிடம் மரணச் சான்றிதழும், ஒரு இலட்சம் ரூபா பணமும் வழங்க இந்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இந்த நடவடிக்கை பாதிக்கப்பட்ட மக்களை மேலும் மேலும் துன்பத்திற்கு உள்ளாக்கக் கூடிய விடயம்.

எனவே, காணி கபளீகரம், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விவகாரம், பொருளாதார நெருக்கடி குறித்தும் ஜனாதிபதியுடன் பேச்சுக்கு செல்லவுள்ள தரப்பினர் கவனம் செலுத்த வேண்டும். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பேசவுள்ள விடயங்கள் தொடர்பில் நிகழ்ச்சி நிரல் ஒன்றைத் தயாரிக்க வேண்டும்.

என்னென்ன அமைச்சு சார்ந்த விடயங்களில் பிரச்சினைகள் உள்ளது என்பதை தீர்மானித்து முன்னரே ஜனாதிபதியிடம் அறிக்கையாக கொடுக்கும்போது அது சார்ந்த அமைச்சர்களும் பேச்சுவார்த்தையில் பங்கேற்று ஒரு தீர்க்கமான முடிவொன்றை பேச்சுவார்த்தையில் பெற்றுக்கொள்ள முடியும்” என்றார்.

கடந்த 15ஆம் திகதி கூட்டமைப்பினருடான சந்திப்பு ஏற்படுத்தப்பட்டிருந்த நிலையில் திடீரென் குறித்த சந்திப்பு ஒத்திக்கவைக்கப்படுவதாக ஜனாதிபதி செயலகத்தினால் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கோட்டாபய ராஜபக்சவுக்கும் கூட்டமைப்பினருக்கும் இடையிலான சந்திப்பு எதிர்வரும் 25ஆம் திகதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச ரீதியாக ஏற்பட்டிருக்கும் நெருக்குவாரங்களில் இருந்து தன்னை விடுவித்து கொள்வதற்கான சூழ்ச்சியாகவே இச்சந்திப்பு ஏற்படுத்தப்பட்டிருப்பதால் அதனை புறக்கணிக்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்டிய ரெலோ, இனப்பிரச்சினைக்கான தீர்வு உள்ளிட்ட தமிழர்கள் எதிர்நோக்கியுள்ள விவகாரங்கள் தொடர்பில் நிபந்தனை அடிப்படையில் பேச்சுக்கு செல்ல வேண்டும் எனவும் அவ்வாறு இல்லாதபட்சத்தில் தமது கட்சி புறக்கணிப்பதாகவும் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.