இலங்கையுடன் பேச்சுவார்த்தைகளை சர்வதேச நாணயநிதியம் ஆரம்பிக்கவுள்ளது-கெரி ரைஸ்

இலங்கைக்கு ஆதரவளிப்பதற்கான திட்டமொன்று குறித்து இலங்கையுடன் பேச்சுவார்த்தைகளை சர்வதேச நாணயநிதியம் ஆரம்பிக்கவுள்ளது என அதன் பேச்சாளர் கெரி ரைஸ் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், நுண்பொருளாதார ஸ்திரத்தன்மையை மீண்டும் ஏற்படுத்துவதற்கும்,கடன் ஸ்திரதன்மையை உறுதி செய்வதற்கும் வலுவூட்டப்பட்ட சமூகப்பாதுகாப்பின் மூலம் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளவர்களை பாதுகாப்பதற்கும் நம்பகதன்மை மிக்க ஒத்திசைவான மூலோபாயத்தை உடனடியாக நடைமுறைப்படுத்தவேண்டியதன் அவசியத்தையும் சர்வதேச நாணயநிதியம் தெரிவித்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இலங்கை தொடர்பான அனைத்து சாத்தியப்பாடுகள் குறித்தும் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கு நாங்கள் தயாராக உள்ளோம் என ரைஸ் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணயநிதியம் சமீபத்தில் இலங்கையுடனான தனது கலந்தாலோசனைகளை மேற்கொண்டுள்ளது.

இலங்கை வெளிநாட்டு நாணய இருப்பினை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக சந்தையால் தீர்மானிக்கப்பட்ட நெகிழ்வான நாணயமாற்று வீதத்தை பின்பற்றவேண்டும் என அதன் நிறைவேற்று சபை தெரிவித்துள்ளது.

காகித தட்டுப்பாடு: பரீட்சைகளை நடத்துவதில் சிக்கல்

காகிதம் மற்றும் மூலப்பொருட்களுக்கு நிலவும் தட்டுப்பாட்டினால் மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகளுக்கான இறுதி தவணை பரீட்சைகளை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பில் தௌிவுபடுத்தி, அனைத்து வலய கல்விப் பணிப்பாளர்களுக்கும் விசேட கடிதமொன்றை மாகாண கல்வி பணிப்பாளர் ஶ்ரீலால் நோனிஸ் அனுப்பி வைத்துள்ளார்.

6, 7, 8 ஆம் வகுப்புகளுக்கான ஆண்டு இறுதி மதிப்பீட்டு நடவடிக்கைகள் தொடர்பில் குறித்த கடிதத்தில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதனடிப்படையில், மேல் மாகாண கல்வி திணைக்களத்தின் வினாத்தாள்களுக்கு அமைவாக, தவணைப் பரீட்சையை நடத்த முடியுமான அனைத்து பாடசாலைகளிலும் பரீட்சை அட்டவணைக்கமைய பரீட்சைகளை நடத்த முடியும்.

பரீட்சைகளை நடத்துவதில் சிக்கலை எதிர்நோக்கும் பாடசாலைகளில், வினாத்தாள்கள் மற்றும் பரீட்சை அட்டவணை என்பனவற்றை பாடசாலை மட்டத்தில் தயாரித்து பரீட்சைகளை நடத்த முடியுமென குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 04, 09, 10, 11 ஆம் வகுப்புகளுக்கான பரீட்சைகளை ஏப்ரல் மாத விடுமுறையின் பின்னர் நடத்தவும் மேல் மாகாண கல்வி பணிப்பாளரினால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் ஆளுநர் உடனடியாக பதவியில் இருந்து விலக வேண்டும் – நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி

ஜனாதிபதி, பிரதமர், நிதியமைச்சர் மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் ஆகியோர் உடன் அமுலுக்கு வரும் வகையில் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சி கோரியுள்ளது.பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வு காணத் தவறிவிட்டதாக பாராளுமன்ற உறுப்பினரான ஹெக்டர் அப்புஹாமி தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதார நெருக்கடி உட்பட அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை வழங்க இவர்கள் தவறியுள்ளனர். இந்த நாட்டு மக்களுக்காக நிதியமைச்சர் உடனடியாக தனது நற்காலியில் இருந்து எழுந்து செல்ல வேண்டும்.தொடர்ந்தும் பதவியில் இருக்க அவருக்கு உரிமையில்லை. அவர் நாற்காலியில் இருந்து எழுந்திருக்கவில்லை என்றால், மக்கள் அந்த இடத்திற்கு வருவார்கள். அது மாத்திரமல்ல இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் உடனடியாக அந்த பதவியில் இருந்து விலக வேண்டும்.

தொடர்ந்தும் மக்களை நெருக்குவாரங்களுக்கு உட்படுத்தி அழிக்க இடமளிக்க முடியாது. அவருக்கும் அந்த பதவியில் தொடர்ந்தும் இருக்க உரிமையில்லை. நிபுணர்கள், புத்தி ஜீவிகள் அடங்கிய அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கும் சுயாதீன நிறுவனமாக இலங்கை மத்திய வங்கி மாற்றியமைக்கப்பட வேண்டும்.

இலங்கை மத்திய வங்கி தற்போது, அரசாங்கத்தின் அல்லது சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சி அலுவலகமாக செயற்பட்டு வருகிறது. இதனால், அரச தலைவர், பிரதமர் மற்றும் நிதியமைச்சர் ஆகியோர் பதவி விலகி, நாட்டிற்கு சிறந்த அரசாங்கம் ஒன்றை உருவாக்க இடமளிக்க வேண்டும் என கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

போராட்டங்களை முன்னெடுப்பதன் ஊடாக ஆட்சியினை கவிழ்க்க முடியாது – பிரதமர் மஹிந்த

போராட்டங்களை முன்னெடுப்பதன் ஊடாக ஆட்சியினை கவிழ்க்க முடியாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.ஏனெனில், 69 இலட்சம் மக்களின் ஆணையுடனேயே இந்த ஆட்சி அமைக்கப்பட்டது. இதை எதிரணியினர் கவனத்தில்கொள்ள வேண்டும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு எமது அரசு காரணம் அல்ல. தற்போதைய எதிரணியினர்தான், கடந்த ஆட்சியில் நல்லாட்சி என்ற பெயரில் நாட்டைச் சீரழித்தனர்.அதன் விளைவுகளை இன்று அனைவரும் அனுபவிக்கின்றோம். இதை எமக்கு ஆணை வழங்கிய 69 இலட்சம் மக்களும் புரிந்துகொள்வார்கள் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

ஆட்சியைக் கவிழ்க்க எதிரணியினர் படாதபாடுபடுகின்றனர். அவர்கள், தமது ஆதரவாளர்களை பஸ்களில் ஏற்றிவந்து ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட வைத்துள்ளனர். இதனால் என்ன பயனை அவர்கள் அடைந்தார்கள் எனவும் பிரதமர் கேள்வி எழுப்பியுள்ளார்.எதிரணியினர்,

ஜனாதிபதியின் செயலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் செய்வதால் எமது ஆட்சியைக் கவிழ்க்கவே முடியாது என எதிர்கட்சியினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் போராட்டங்கள் குறித்து கருத்து வெளியிடும் போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

பிச்சை எடுக்கும் அரசிற்கு எதற்கு ஆட்சி அதிகாரம்: கேள்வியெழுப்பியுள்ள அனந்தி சசிதரன்

சர்வதேசத்திடம் பிச்சை எடுக்கும் அரசாங்கத்திற்கு எதற்கு ஆட்சி அதிகாரம் தேவை என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அனந்தி சசிதரன் கேள்வியெழுப்பியுள்ளார்.

நேற்று நடைபெற்ற ஜனாதிபதியின் விசேட உரை தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்றைய இந்த நிலைக்குக் காரணத்தைப் பார்த்தால் சரியான பொருளாதாரக் கொள்கை நாட்டில் இல்லை. இதற்கு முன்னர் இவர்களுடைய திவிநெகும மோசடி தொடங்கி கடந்தகால ஆட்சியாளர்களின் மத்திய வங்கி பிணை முறி மோசடியில் ஆரம்பித்து கடந்தகால மோசடிகளால் தான் இதுவரை சரியான பொருளாதார கொள்கைகள் வகுக்கப்படாமல் இருக்கின்றது.

மத்திய வங்கியின் ஆளுநராக இருக்கின்ற இவரின் கடந்த காலங்கள் கூட மிகவும் மோசமாக இருக்கின்ற பக்கத்தில் அவரை மீண்டும் ஆளுநராகப் போட்டிருக்கின்றார்கள். வாரம்தோறும் காசுகள் அச்சடிக்கின்ற நிலைமையைப் பார்க்கின்றோம். இவையெல்லாம் நாட்டின் சரியான பொருளாதார கொள்கைகளாக இல்லை. இலங்கை முற்று முழுதாக கடனுக்குள் மூழ்கிப் போய்விட்டது.

யுத்தம் 2009இல் முடிவடைந்து இன்று 13 வருடங்கள் ஆகியும் பொருளாதார ஸ்திரத்தன்மை இல்லாத நிலையை இந்த 13 வருட கால ஆட்சியாளர்களும் பார்க்கவேண்டும். காரணம் இன்றி பெருமளவு பணம் பாதுகாப்பு செலவுகளுக்காக ஒதுக்கப்படுகின்றன.

மிகப்பெரிய ஒரு தாக்குதல் நடத்தப்போவதாக அல்லது ஒரு நாட்டை ஆக்கிரமிக்கப் போவதாக நினைத்துத் தான் குறித்த தொகை ஒதுக்கப்படுவதாகப் பார்க்க வேண்டியுள்ளது. இன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் அனைவரும் வசதியாக வாழ்கின்றனர்.

அவர்களுக்கு எரிபொருள் தட்டுப்பாடு, உணவு தட்டுப்பாடு எதுவுமில்லை. இன்று இலங்கையில் என்ன வளம் இல்லை, எல்லா வளமும் உண்டு. ஆனால் ஏன் இவ்வாறு ஒரு அதளபாதாள பொருளாதார வீழ்ச்சிக்குப் போனது என்று காரணத்தைத் தேடினால் இவற்றிற்கு ஆட்சியாளர்களே முழுப் பொறுப்பு கூறவேண்டும்.

இன்று இந்த நாட்டின் ஜனாதிபதி குறித்த பொறுப்பிலிருந்து விலகுவது போல நான் ஒன்றும் செய்ய முடியாது எனக் கூறுகின்றார். அப்படிக் கூறுபவர் ஆக இருந்தால் நீங்கள் ஏன் ஜனாதிபதியாக இருக்கின்றீர்கள்.

நாங்கள் இன விடுதலைக்காகச் சுயநிர்ணயத்திற்காகப் போராடிய போது எல்லா நாடுகளின் உதவியுடனும் நாம் அழிக்கப்பட்டோம். தமிழீழ விடுதலைப் புலிகளுடைய அந்த கட்டுப்பாட்டின் கீழ் நாம் வாழ்ந்த வாழ்வை சுய பொருளாதார நிலையில் தன்னிறைவு பொருளாதாரத்தை நாம் அடைந்து இருந்தோம்.

இன்று இலங்கை அரசாங்கமும் யுத்தம் நடக்கும் ரஷ்யாவிடம் கூட பிச்சை எடுக்கிற நிலைமையில் காணப்படுகின்றது. அன்று ஒவ்வொரு மக்களும் கொடூரமாகக் கொல்லப்பட்ட போது விட்ட கண்ணீரும், அவர்களின் ஏக்கமும் இன்று இலங்கையை ஒரு நட்டாற்றில் கொண்டு வந்துவிட்டு இருக்கின்றது.

இந்த அழிவிற்கு உடந்தையாக இருந்த அத்தனைப்பேரும் இதற்குப் பொறுப்பாளிகள் ஆகவேண்டும். இன்று இலங்கையினுடைய கடனை அடைப்பதற்கு இன்றைய ஆட்சியாளர்களின் சொத்துக்களை விற்றாலே போதும் இலங்கையின் கடனை அடைத்துக் கொள்ள முடியும்.

இன்று வடக்கு, கிழக்கு மக்களுடைய இனப்பிரச்சினைகளை இவர்கள் தீர்ப்பார்களாக இருந்தால் புலம்பெயர் வாழ் தமிழ்மக்களே இவர்களுடைய கடனை ஈடு செய்யக் கூடியதாக இருக்கும். ஒட்டுமொத்த தமிழர்களும் நினைத்தால் இந்த இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கான கடனை தீர்க்கக் கூடிய வழி உள்ளவர்களாக இருக்கின்றார்கள்.

ஆனால் எங்களை அழித்துவிட்டு எங்களுக்கான அரசியல் உரிமை மறுக்கப்பட்டு நாம் அடிமையாக இருக்கின்றோம் இவ்வாறான நிலையில் அன்று கண்ணீருடன் போராட்டங்களை முன்னெடுக்கின்ற நிலையை நாம் பார்க்கின்றோம். சாதாரண பொதுமக்கள் தெருவில் நின்று டீசல், பெட்ரோலுக்கு வரிசையில் நிற்பது உணவுப் பொருட்களுக்குக் கடை கடையாக ஏறி இறங்குவதும் எல்லாமே மக்களை மிக மோசமான நிலைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.

ஐநாவில் தாங்கள் நல்லவர்கள் எனக் காட்டிக் கொண்டு இருக்கின்ற இந்த ஆட்சியாளர்கள் சர்வதேசத்திடம் பிச்சை எடுக்கின்றனர். இந்த பிச்சைக்காரர்களுக்கு ஆட்சி அதிகாரம். நாம் இந்த கொடிய யுத்த சூழலில் வாழப் பழகிக் கொண்டவர்கள்.

ஆனால் சிங்கள மக்கள் தாங்கிக் கொள்ள முடியாதவர்களாக இருக்கின்றனர். ஒரு சில வாரங்களுக்கு உள்ளேயே இந்த சிங்கள மக்கள் தெருவிற்கு வந்திருக்கின்றார்கள் என்றால் நாங்கள் பல வருடங்களாக இந்த பொருளாதாரத் தடைகளால் என்னவெல்லாம் கஷ்டப்பட்டு இருப்போம். எனவே இந்த அரசு விதைத்ததை அறுவடை செய்கின்றது.

ஏழை சிந்திய கண்ணீர் கூரிய வாளை ஒக்கும் என்று சொல்வார்கள் அதே வார்த்தையை இந்த இடத்தில் நினைவு கூறுகின்றோம். இன்னும் ஒரு மோசமான நிலையை இவர்கள் தாக்குப்பிடிக்க முடியாமல் இந்த ஆட்சி அதிகாரத்தை விட்டு ஒதுங்கும் நிலை கடவுளால் வழங்கப்படும்” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சந்தர்ப்பத்தை சாதுரியமாக பயன்படுத்த வேண்டியது எமது கடமை: தர்மலிங்கம் சித்தார்தன்

அரசாங்கம் தற்போது பலவீனப்பட்டுக் காணப்படும் நிலையில் தமிழ் மக்களாகிய நாங்கள் பலப்பட்டுக் காணப்படுகிறோம், இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளமையை சாதுரியமாகப் பயன்படுத்த வேண்டியது எமது கடமை என புளொட் அமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஆட்சிக்கு வந்து மூன்று வருடங்களை எட்டிவிட்ட நிலையில் தனக்கும் தன்னுடைய அரசாங்கத்துக்கும் சர்வதேச ரீதியாகவும் உள்ளூர் முறையிலும் ஏற்பட்டிருக்கும் நெருக்கடியைச் சமாளிக்கவும் சர்வதேசத்தை ஏமாற்றவும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பை திடீரென பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார். இந்த சந்திப்பைத் தமிழ் தரப்பினர் பலர் விரும்பவில்லை. இது தொடர்பில் தங்கள் கருத்து என்ன? என வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி தானாக எங்களைப் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. சர்வதேசம் தொடர்ந்து கொடுத்துவரும் அழுத்தம், மனித உரிமை பேரவையின் மறைமுகமான அழுத்தங்கள், அறிக்கைகள் மற்றும் இந்தியத் தரப்பினரின் வலியுறுத்தல் காரணமாகவும் தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார மற்றும் ஆட்சி நெருக்கடி காரணமாகவே அதைச் சமநிலைப்படுத்த ஜனாதிபதி கூட்டமைப்பைப் பேச்சு வார்த்தைக்கு அழைத்துள்ளார்.

இது தவிர கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவியேற்ற காலத்திலிருந்து சந்திப்பதற்கான நேரத்தை ஒதுக்கித்தரும்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கடிதம் மூலம் கோரிக்கை விட்டிருந்தார்.

அதுவுமன்றி அண்மையில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து ஜனாதிபதி மாளிகை முன்பாக காணி அபகரிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று செய்திருந்தோம். அவ்வேளையிலும் ஜனாதிபதியைச் சந்திக்கும் முயற்சியை மேற்கொண்டோம்.

இவ்வாறான சூழ்நிலைகளே கூட்டமைப்பை ஜனாதிபதி பேச்சுக்கு அழைக்கக் காரணங்களாகும். மிக நீண்டகாலத்துக்குப் பின்பு இந்தியா – இலங்கை அரசாங்கத்துக்கு ஒரு ஆலோசனையை முன்வைத்திருந்தது. அது மிகவும் முக்கியம் வாய்ந்ததாகும்.

13ஆவது திருத்தத்துக்கு அப்பால் சென்று இலங்கை தமிழ் மக்களுடைய நீண்ட காலப் பிரச்சினைக்குத் தீர்வு காணுங்கள். அதுவே பிரச்சனையைத் தீர்ப்பதற்கான ஒரே வழி என்பதை எடுத்துக் கூறியுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் எந்த தீர்மானத்தையும் நிறைவேற்றமாட்டேன் என்று ஜனாதிபதி பிடிவாதம் பிடித்துவருகிறார். இது சர்வதேச ரீதியாக எமக்கு சாதகமாகவுள்ளது. நாட்டினுடைய இன்றைய பொருளாதார அரசியல் நெருக்கடிகள் எமக்கு சாதகமாகவுள்ளது.

ஜனாதிபதி எப்போது பலவீனப்பட்டுக் காணப்படுகிறாரோ அப்போதுதான் நாம் அவருடன் பேசமுடியும். அவர் தற்போது சகல வகையிலும் பலவீனப்பட்டுக் காணப்படுகிறார்.

குறிப்பாகப் பொருளாதார நெருக்கடிகளுடன் சேர்ந்து ஆட்சியின் உள்ளக நெருக்கடிகள் அவரை கதிகலங்க வைத்துள்ளது. நாம் இப்போது பலப்பட்டு நிற்கின்றோம், அவர் பலவீனப்பட்டு நிற்கின்றார்.

இந்த சந்தர்ப்பத்தை நாம் சரியாகப் பயன்படுத்தவேண்டும். சர்வதேசமும், மறைமுகமாக மனிதவுரிமை பேரவையும், இந்தியாவும் தமிழ் மக்களுடன் பேசி பிரச்சனைக்குத் தீர்வுகாணுங்கள் என்று அழுத்தங்களைப் பிரயோகத்து வருகிற நிலையில், நாம் ஜனாதிபதியுடன் பேசவில்லையாயின் அவர்கள் கொடுத்த அழுத்தத்துக்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும்.

எனவேதான் பேசவேண்டுமென்ற முடிவை எடுத்திருக்கிறோம். எது எவ்வாறு இருந்தபோதும் தமிழ் மக்களுடைய பிரச்சனைக்குத் தீர்வு காணப்படவேண்டுமாயின் ஜனாதிபதியுடன் பேச வேண்டியது அவசியமானது. மக்களில் பலரும் சில தமிழ்க்கட்சிகளின் தலைவர்களும் இப்பேச்சுவார்த்தையை விரும்பவில்லை விசனத்தைத் தெரிவித்து வருகிறார்கள் என்பதை ஏற்றுக்கொள்கிறேன்.

மக்களின் கருத்தில் நியாயம் இருக்கிறதென்பது உண்மையே. காரணம் தமிழ் மக்களின் பிரச்சனையைத் தீர்ப்பதில் ஜனாதிபதியோ அவருடைய அரசாங்கமோ ஆர்வம் காட்டவில்லை, உதாசீனம் செய்துவருகிறதென்பது உண்மையே.

இருந்தபோதிலும் தற்போது கூட்டமைப்பை ஜனாதிபதி பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார் என்ற நிலையில் நாம் அதை புறக்கணிப்பது பொருத்தமான விடயமல்ல. அவருடன் பேசினால் மட்டுமே அவர் தமிழ் மக்களுக்கான தீர்வு தொடர்பில் என்ன நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறார் என்பதைத் தெரிந்து கொண்டு கூட்டமைப்பு தனது அடுத்த நிகழ்ச்சி நிரலைத் தயாரிக்க முடியும்.

அண்மையில் இந்தியா சென்று நிரம்பியுள்ள இலங்கையின் வெளி விவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தார். ஜனாதிபதிக்கும் கூட்டமைப்புக்கு இடையிலான பேச்சு தமிழ் மக்களின் நீண்ட காலப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வு தொடர்பாக இருக்கும்.

எனவே எமது பிரச்சனையை நாமே பேசித்தீர்ப்போம் என்ற வழி முறைக்கு அரசாங்கம் வந்திருக்கிறதென்ற சமிஞ்சையை காட்டியுள்ளார். எனவே வாய்ப்பை பயன்படுத்திப் பார்ப்போம் என குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

மலையக தமிழர் அபிலாசைகள் ஆவணம் ஜப்பானிய தூதுவரிடம் கையளிப்பு

மலையக தமிழர் அபிலாசைகள் ஆவணம் ஜப்பானிய தூதுவர் ஹிடேக்கி மிஸுகோஷியிடம், இன்று தமிழ் முற்போக்கு கூட்டணியினால் கையளிக்கப்பட்டது.

ஜப்பானிய தூதுவரின் இல்லத்தில் நிகழ்ந்த இந்நிகழ்வில் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர்கள் பழனி திகாம்பரம், வே. இராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கு பற்றி ஆவணத்தை தூதுவரிடம் கையளித்தனர்.

மலையக தமிழர் அபிலாசைகள் ஆவணத்துடன், மலையக கல்வி தொடர்பான கோரிக்கைகளும் தூதுவரிடம் கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் ஜப்பானிய அரசையும், மக்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் ஜப்பானிய தூதுவர் ஹிடேக்கி மிஸுகோஷி, அரசியல் துறை மற்றும் முதலாம் செயலாளர் தகேசி ஒசாகி, அரசியல் துறை ஆய்வாளர் கநா மொரிவகி ஆகியோர் பங்கு பற்றினர்.

மலையக தமிழர் எதிர்நோக்கும் சவால்கள், இலங்கையின் தற்போதைய அரசியல் நிலவரம், ஐநா மனித உரிமை ஆணையகம் பற்றி கலந்துரையாடப்பட்டது. அதை தொடர்ந்து, வடக்கு மாகாணத்தில் வாழ்கின்ற தமிழ் மக்களை பற்றியும் ஏனைய சமூகங்களை பற்றியும் ஓரளவு அறிந்துள்ளதாகவும், இனிமேல் மலைநாட்டு தமிழ் மக்களை பற்றி மென்மேலும் அறியவும், அவர்களுக்கு உதவிடவும் ஜப்பானிய அரசும், மக்களும் விரும்புவதாக ஜப்பானிய தூதுவர் ஹிடேக்கி மிஸுகோஷி, தமுகூ தலைவர்களிடம் கூறியுள்ளார்.

இலங்கையில் வாழும் நான்கு பிரதான இனக்குழுக்களில், மலையக தமிழரையும் தனித்துவம் கொண்ட ஒரு இனக்குழுவினராக தாம் இனிமேல் குறித்துக்கொள்வதாகவும், ஜப்பானிய தூதுவர் ஹிடேக்கி மிஸுகோஷி, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர்கள் பழனி திகாம்பரம், வே. இராதாகிருஷ்ணன் ஆகியோரிடம் உறுதியளித்தார்.

ஐநா மனித உரிமை அறிக்கையில் மலையகம் பற்றி இன்னமும் முறையாக போதியளவு குறிப்பிடப்படாமை பற்றியும் தூதுவர் ஹிடேக்கி மிஸுகோஷி வினவினார்.

தமிழ் முற்போக்கு கூட்டணி, தற்போது ஒரு அரசியல் தலைமையாக செயற்பட ஆரம்பித்துள்ளது. இந்த படிவரிசையில் நாம் மலையக விவகாரங்களை படிப்படியாக சர்வதேச மயப்படுத்தி வருகிறோம். அந்த அடிப்படையிலேயே மலையக தமிழர் அபிலாசைகள் ஆவணம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்படியே இந்த சந்திப்பு நிகழ்கிறது. ஏனைய சர்வதேச நட்பு நாடுகளின் பிரதிநிதிகளையும், ஐநா வதிவிட பிரதிநிதியையும் சந்திக்க நாம் தீர்மானித்துள்ளோம் என தூதுவர் ஹிடேக்கி மிஸுகோஷிக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

ஜப்பான் எப்போதுமே இலங்கை மக்களால் பெரிதும் விரும்பப்படும் நட்பு நாடு என்ற முறையில் எமது மக்கள் தொடர்பில் ஜப்பானிய தூதுவரின் கருத்துகளை தாம் முழுமனதுடன் வரவேற்றதாகவும், அதேவேளை இலங்கை அரசுடன் இருக்கின்ற நட்புறவை பயன்படுத்தி, மலையக மக்களின் விவகாரங்கள் தொடர்பில் அக்கறையை அதிகரிக்கும்படி இலங்கை அரசை வலியுறுத்தும்படி தாம் ஜப்பானை கேட்டுக்கொண்டதாகவும், மலையக மக்கள் தொடர்பில் கல்வி வளர்ச்சி திட்டங்களை முன்னெடுக்கும்படி ஜப்பானிய அரசை கோரியதாகவும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் ஊடகங்களுக்கு கூறியுள்ளார்.

Posted in Uncategorized

இந்தியாவிடம் இருந்து இலங்கைக்கு ஒரு பில்லியன் டொலரை கடனாக பெறுவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்து

இந்தியாவிடம் இருந்து, இலங்கைக்கு ஒரு பில்லியன் டொலரை கடனாக பெறுவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.அத்துடன் இந்த ஒப்பந்தத்தில், எரிபொருளுக்கான தொகையை, 750 மில்லியன் டொலராக அதிகரிக்குமாறு, இந்தியாவிடம் இலங்கை கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கும், இந்திய அரசாங்கத்தின் பிரமுகர்களுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இதேவேளை மருந்து உணவு எரிபொருள் உட்பட அத்தியாவசியப்பொருட்களிற்கு மோசமான பற்றாக்குறை நிலவுவதை முடிவிற்கு கொண்டுவருவதற்காக இந்தியாவிடமிருந்து ஒரு பில்லியன் டொலர் கடனுதவியை பெறும் உடன்படிக்கையில் நிதியமைச்சர் கைச்சாத்திட்டுள்ளார் என அரச அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இந்தியா இலங்கைக்கு ஆதரவாக உள்ளது என இந்திய வெளிவிவகார அமைச்சர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கி ஆளுநரை பதவி விலகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதா?

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலை பதவி விலகுமாறு எந்த அறிவித்தலும் விடுக்கப்படவில்லை என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் அவரை பதவி விலகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கி ஆளுநரை பதவி விலகுமாறு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டுள்ள நிலையிலேயே ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

மத்திய வங்கி ஆளுநர் தொடர்பில் தான் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளதாகவும், அவர் பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுக்க தமக்கு பலமாக இருக்கின்றார் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இலங்கை தொடர்பில் பிரிட்டனின் பயண ஆலோசனை தவறானது: பீரிஸ்!

இலங்கைக்கான பயண எச்சரிக்கையை விடுத்து பிரிட்டன் விடுத்துள்ள அறிவிப்பில் தவறுகள் காணப்படுவதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

உலகளாவிய கொவிட் தொற்றுநோயின் விளைவாக நாட்டின் சுற்றுலாத் துறை புத்துயிர் பெறத் தொடங்கியுள்ள மற்றும் அதன் பொருளாதாரத்தை மறுசீரமைக்க வெளிநாட்டுப் பணம் தேவைப்படும் வேளையில், பயண ஆலோசனையில் தவறான தன்மைகள் நிலவும் பொருளாதார பாதிப்புகளை அதிகரிக்கக்கூடும் என்று அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால் இலங்கையிலுள்ள நடைமுறை யதார்த்தங்களை பிரதிபலிக்கும் வகையில் இலங்கை தொடர்பான பயண ஆலோசனையை திருத்துமாறும் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கொழும்பிலுள்ள பிரிட்டன் உயர் மட்ட அதிகாரிகளை சந்தித்து அமைச்சர் பீரிஸ் இதனை கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Posted in Uncategorized