தொப்புள்கொடி உறவு என்பது ஒரு மேடை பேச்சாக இருக்க கூடாது: யாழ் இந்திய துணைத்தூதுவர் பேச்சு

தொப்புள்கொடி உறவு என்பது ஒரு மேடை பேச்சாக இருக்க கூடாது, அதையும் தாண்டி இருக்க வேண்டும் என யாழ் இந்திய துணைத்தூதுவர் ஸ்ரீ ராகேஷ் நடராஜ் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஜெயபுரம் கடற்தொழில் சம்மேளனத்திலும் பூநகரி நக்ரா நிறுவனத்திலும் மற்றும் கௌதாரி முனை பொதுநோக்கு மண்டபத்திலும் யாழ் இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் கடற்தொழிலாளர்களுக்கு உதவிகள் வழங்கும் நிகழ்வு நேற்று (15) இடம்பெற்றுள்ளது.

இதன்போது இந்திய அரசாங்கத்திடமிருந்து மனிதாபிமான உதவிகள் என்ற வகையில் தலா 6000 ரூபா பெறுமதியான 200 உலருணவுப் பொதிகள் கடற்தொழிலாளர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே யாழ் இந்திய துணைத்தூதுவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கடற்றொழிலாளர்களின் தேவைகள் எதுவாக இருந்தாலும் துணைதூதரகத்திற்கு வருகை தாருங்கள் அதனை உங்களது வீடாக எடுத்துக்கொள்ளுங்கள்.

இந்திய அரசு தொடர்ந்தும் வடக்கு மாகாணத்தில் குறிப்பாக கடற்தொழிலாளர் சமூகத்தில் கொண்டுள்ள அக்கறை காரணமாக இவ் உதவிகளை வழங்கி வைக்கின்றது. எங்களது எண்ணங்கள் சிந்தனைகள் எப்பொழுதும் உங்களுடன் இருக்கும்.

இந்திய அரசு வடக்கில் குறிப்பாக கடற்தொழிலாளர் சமூகம் பயன்படுகின்ற வகையில் முதலீடுகளை மேற்கொள்ளும் எனவும் இதன்போது தெரிவித்துள்ளார்.

அமைச்சர்கள் தொடர்பில் நாமலுக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பு

சிரேஸ்ட அமைச்சர்களை கண்காணிக்கும் பொறுப்பு அமைச்சர் நாமல் ராஜபக்சவிற்கு வழங்கப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் விமல்வீரவன்ச தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் மேற்கண்டவாறு கூறினார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

2015 இல் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் மீது குடும்ப ஆட்சி குறித்து முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை விட அதிகளவில் தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக குடும்ப ஆட்சி குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

2015இல் ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்த மூன்று அமைச்சர்களே பதவி வகித்தனர் தற்போது அதனை விட அதிகமானவர்கள் பதவி வகிக்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவையை எத்தனை முறை மாற்றினாலும் நாமல் ராஜபக்சவிற்கு ஏதாவது பதவியை வழங்குவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பெரும்பாலான உறவுகள் மரணச் சான்றதழையோ, இழப்பீட்டையோ எதிர்பார்க்கவில்லை – தியாகி ருவன்பத்திரன

பெரும்பாலான உறவுகள் மரணச் சான்றதழையோ, இழப்பீட்டையோ எதிர்பார்க்கவில்லை என சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசிய பிராந்திய ஆய்வாளரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான தியாகி ருவன்பத்திரன தெரிவித்தார்.

காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தில் ‘காணக்கிடைக்கவில்லை’ எனும் சான்றிதழைப் பெற்றுக்கொண்டவர்களின் குடும்ப மீள்வாழ்விற்காக ஒருமுறை மாத்திரம் ஒரு இலட்சம் ரூபாயைச் செலுத்துவதற்கு அமைச்சரவை நேற்று அங்கீகாரம் வழங்கியது.

அரசாங்கத்தின் குறித்த முடிவு தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், உள்ளக மற்றும் சர்வதேச ரீதியில் அரசாங்கம் ஒன்றுக்கொன்று முரணான கருத்துக்களை வெளியிடுவதாக சுட்டிக்காட்டினார்.

காணாமல்போனோர் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்கான குழுக்கள் கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தினால் ஸ்தாபிக்கப்பட்டது என ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் அரசாங்கம் உறுதியளித்ததாக அவர் குற்றம் சாட்டினார்.

இருப்பினும் காணாமல்போனோரின் பெரும்பாலான குடும்பங்கள் மரண சான்றிதழையோ இழப்பீட்டையோ எதிர்பார்க்கவில்லை என்றும் மாறாக அவர்கள் தமது அன்பிற்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையையே எதிர்பார்க்கின்றார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

இதுவரையில் காணாமல்போனோர் தொடர்பாக கிடைக்கப்பெற்றிருக்கும் 14 ஆயிரத்து 988 முறைப்பாடுகள் பற்றிய விசாரணைகளை முடிவிற்குக் கொண்டுவருவதற்காக 25 விசாரணைக்குழுக்கள் நியமிக்க கடந்த வாரம் தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. அமர்வு சவாலாக இருக்கும் – ஜயநாத் கொலம்பகே

மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடரை இலங்கை வெற்றிகரமாக எதிர் கொண்டதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்தார்.

இலங்கைக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து தம்மால் உண்மைகளை முன்வைக்கவும் அது குறித்து விளக்கவுமளிக்கவும் முடிந்தது என்றும் அவர் தெரிவித்தார்.

யுத்தத்தின் போது மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாகக் கூறுவதற்கு பதிலாக உள்நாட்டு அரசியல் விவகாரங்கள் குறித்தே ஆணையாளரின் அறிக்கை கவனம் செலுத்தியது என சுட்டிக்காட்டினார்.

அத்தோடு ஊடாடும் உரையாடலின் போது 31 நாடுகள் இலங்கை தொடர்பான கருத்துக்களை வெளிப்படுத்திய அதேவேளைஇ உள்நாட்டு விவகாரங்களில் தலையிடக் கூடாது என்பதே தமது பிரதான வாதமாக இருந்தது என பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே கூறினார்.

இதன் பின்னர் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தலைவருடன் இலங்கைப் பிரதிநிதிகள் நீண்ட நேரம் கலந்துரையாடியதாகவும்இ அதற்கு சாதகமான பதில் கிடைத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள 51 ஆவது அமர்வு இலங்கை எதிர்கொள்ள வேண்டிய அடுத்த சவாலாக இருக்கும் என்றும்இ அதனை சிவில் சமூகக் குழுக்கள் மற்றும் நிபுணர்கள் உட்பட அனைத்துப் பிரிவினரின் ஆதரவுடன் எதிர்கொள்வோம் என்றும் கூறினார்.

ஒரு லட்சம் ரூபாயை தந்து நீதியை இல்லாமல் ஒழிப்பதற்கே நீதியமைச்சர் முயல்கின்றார்- சி.ஜெனிற்றா

ஒரு லட்சம் ரூபாயையும், சான்றிதழையும் தந்து நீதியை இல்லாமல் ஒழிப்பதற்காகவே நீதியமைச்சர் அலி சப்ரி இவ்வாறு கூறிக்கொண்டிருக்கின்றார் என வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் செயலாளர் சி.ஜெனிற்றா தெரிவித்தார்.

வவுனியாவில் இன்று ( புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், நீதி அமைச்சரின் நடமாடும் சேவையில் காணாமல் போனோருக்கான அலுவலகம் வேண்டாம் என நாங்கள் கூறியிருந்தோம். இழப்பீடோ, மரணச்சான்றிதழோ தேவையில்லை என கூறியிருந்தோம். அப்படியிருந்தும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் மீது திடீரென ஏன் அக்கறை வருகின்றது.

ஒருலட்சம் ரூபா நிதியினை எமது உறவுகளுக்கு வழங்கி அந்த நிதியில் வாழ்க்கை செலவை கட்டியெழுப்ப முடியுமா? இந்த நிதியில் எமது உறவுகள் வாழ முடியுமா? நீதிக்காக இதுவரை காலமும் போராடி கொண்டிருந்தோமே தவிர ஒரு லட்சம் ரூபாவிற்காக போராடவில்லை.

யுத்தம் முடவடைந்து 13 வருடங்களை கடந்தும் எமது உறவுகளை தான் தேடிக்கொண்டிருக்கின்றோம். உறவுகளுக்கு ஒரு லட்சம் ரூபா வழங்கி உறவுகளை திருப்திப்படுத்துவதாக நீதி அமைச்சர் கூறியிருக்கின்றார்.

எமது உறவுகள் நிதிக்காக போராடவில்லை. சர்வதேசமானது நீதி அமைச்சர் அலிசப்ரி கூறுகின்ற கூற்றையும், பதிவாளர் நாயகம் எடுத்திருக்கின்ற இந்த முடிவும் தவறானது. ஏனென்றால் நாங்கள் 13 வருடமாக தொடர்ச்சியாக வீதியோரத்தில் நின்று நிதிக்காகவோ, காணாமல் போனவர்களுக்கான சான்றிதழிற்காகவோ போராடவில்லை. எமக்கு நீதி தான் தேவையென்றே போராடி வருகின்றோம்.

சர்வதேசமானது இதனை கண்டித்து 49 ஆவது கூட்ட தொடரிலாவது எமக்கு நீதி வழங்க ஆவன செய்வார்கள் என்ற நம்பிக்கையிலே காத்திருக்கின்றோம். ஒரு லட்சம் ரூபாயையும், காணாமல் போனவர்களுக்கான சான்றிதழையும் தந்து நீதியை இல்லாமல் ஒழிப்பதற்காகவே நீதியமைச்சர் அலி சப்ரி இவ்வாறு கூறிக்கொண்டிருக்கின்றார். இவரின் கருத்தை வன்மையாக கண்டிக்கின்றோம்.

இலங்கை அரசின் நீதி மறுக்கப்பட்ட போதுதான் சர்வதேசத்தை நோக்கி போராடி வருகின்றோம். இலங்கை அரசின் உள்ளக பொறிமுறையோ, காணாமல் போனோரின் அலுவலகமோ எமக்கு தேவையில்லை என்பதனை தான் கூறிக்கொண்டிருக்கின்றோம்.

இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தி பொறுப்பு கூற வேண்டிய கடமை இருக்கிறது. ஏனென்றால் கையில் ஒப்படைக்கப்பட்டவர்களும் , வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களும், இராணுவ கட்டுப்பாட்டுக்குள் வலுக்கட்டாயமாக கடத்தப்பட்டவர்களும் , இறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்களையும் தான் நாங்கள் கேட்டுக்கொண்டு இருக்கின்றோம்.

ஒரு லட்சம் ரூபாய் பெறுமதியா எமது உறவுகளின் பெறுமதி? இதனை எமது உறவுகள் யாரும் வாங்க கூடாது என்பதனை ஊடக வாயிலாக தெரிவித்து கொள்கிறேன் என மேலும் தெரிவித்தார்.

Posted in Uncategorized

நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்

நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சற்று முன்னர் புதுடில்லியில் உள்ள பாராளுமன்ற வளாகத்தில் சந்தித்தார்.இந்த சந்திப்பின்போது இலங்கைக்கு இந்தியா வழங்கும் நிதி உதவிக்கு இந்திய பிரதமருக்கு நிதி அமைச்சர் நன்றி தெரிவித்தார்.

அத்துடன் பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்கேற்குமாறு நிதி அமைச்சர் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்தார்.இல்லையெனில் மார்ச் 30 அன்று இலங்கையால் நடத்தப்படும் வங்காள விரிகுடாவின் பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான முன்முயற்சி மாநாட்டில் கலந்துகொள்ள அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

இதேவேளை இந்திய வெளியுறவு அமைச்சர் . எஸ். ஜெய்சங்கர், நிதி மற்றும் பெருநிறுவன விவகார அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் இந்தியாவின் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ விக்ரம் மிஸ்ரி ஆகியோரையும் நிதியமைச்சர் சந்திக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

ராஜபக்ஷர்களுக்கு ஒரு உயிரின் பெறுமதி வெறுமனே ஒரு இலட்சம் ரூபாய் மாத்திரமே – அம்பிகா சற்குணநாதன்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஒருதடவை மாத்திரம் ஒரு இலட்சம் ரூபாயை வழங்க அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்திற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் விசனம் தெரிவித்துள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் மரணச் சான்றிதழை பெற்றுக் கொள்வோருக்கு ஒரு இலட்சம் பணத்தை உதவித் தொகையாக ஒரு தடவை மட்டும் வழங்குவதற்கு அமைச்சரவை நேற்று அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், “காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள் மரணச் சான்றிதழையோ அல்லது இழப்பீட்டையோ எதிர்பார்க்கவில்லை எனத் தெரிவித்த அவர், மாறாக அவர்கள் உண்மையையும் நீதியையுமே கோருகின்றார்கள்” என அம்பிகா சற்குணநாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.

ராஜபக்ஷ அரசாங்கத்தைப் பொறுத்தமட்டில் ஒரு உயிரின் பெறுமதி வெறுமனே ஒரு இலட்சம் ரூபாய் மாத்திரமே. இது அவமரியாதை செய்யும் வகையிலான மிகமோசமான செயல் என மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

பயங்கரவாதத் தடுப்பு சட்டமூலம்தை திருத்தங்களுடன் முன்வைக்க அனுமதி

பயங்கரவாதத் தடை (திருத்தம்) சட்டமூலத்தை இரண்டாம் வாசிப்புக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சு சார் ஆலோசனைக் குழு இணங்கியுள்ளது. வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தலைமையில் குறித்த குழு கூடிய நிலையில் அதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பாராளுமன்றத்தின் தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த சட்டமூலம் கடந்த பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி பாராளுமன்றத்தில் முதலாவது வாசிப்புக்காக சமர்ப்பிக்கப்பட்டது. இதனை அடுத்து உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்திற்கு அமைவாக திருத்தங்களை உள்ளடக்கிய சட்டமூலம், அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் அங்கீகரிக்கப்பட்டது.

இந்நிலையில் எதிர்வரும் வாரத்தில் இரண்டாம் வாசிப்புக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

தற்போதைய பொருளாதாரச் சூழலைத் தீர்ப்பதில் அரசியல் கட்சிகளுக்கு இடையே உடன்பாடு ஏற்பட வேண்டும் – ரணில்

தேசிய அரசாங்கத்தை அமைக்கும் யோசனையை நிராகரித்துள்ள முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தற்போதைய அரசாங்கத்தை கவிழ்க்கும் எண்ணமில்லை என்றும் தெரிவித்தார்.

தற்போதைய பொருளாதாரச் சூழலைத் தீர்ப்பதில் அரசியல் கட்சிகளுக்கு இடையே உடன்பாடு ஏற்பட வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

இதேவேளை உக்ரைன்-ரஷ்யா போர் காரணமாக எரிபொருள் விலை அதிகரித்துள்ளது, உர உற்பத்தியில் ரஷ்யா முன்னணியில் உள்ள போதும் அங்கிருந்து வாங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அத்துடன் இலங்கையின் மொத்தக் கடன் 19 ஆயிரம் பில்லியன் என்றும் இந்தக் கடன்களைத் தீர்க்க வெளிநாட்டு நாணயத்தை நாம் கடனாகப் பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என மேலும் தெரிவித்தார்.

இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் ஒரு பில்லியன் கடனை திரும்பச் செலுத்த வேண்டிய நிலையில் தற்போது 600 மில்லியன் மட்டுமே கையிருப்பு உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

காணாமல் போனோருக்காக ஒருமுறை மாத்திரம் செலுத்தப்படும் கொடுப்பனவு!

காணாமல் போன நபரின் நெருங்கிய உறவினருக்கு குடும்ப மீள்வாழ்வுக்காக ஒருமுறை மாத்திரம் செலுத்தப்படும் 100,000 ரூபா கொடுப்பனவை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இழப்பீட்டுக் கொள்கைகள் மற்றும் வழிகாட்டல்களுக்கமைய, பல்வேறு நிலைமைகளின் கீழ் ஏற்பட்ட தொந்தரவுகளால் அழுத்தங்களுக்குள்ளாகிய பிரஜைகளுக்கு அவர்களின் வாழ்வை மீளக்கட்டியெழுப்புவதற்காகவும் மற்றும் மீள்நிலைக்குக் கொண்டுவருவதற்கு ஒத்துழைப்பதற்காகவும் இக்கொள்கை வகுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, எதிர்கால சந்ததியினர் உள்ளிட்ட இலங்கையர்களின் நலன்களுக்காகவும் பாதுகாப்புக்காகவும் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் வகையில் தற்போது வகுக்கப்பட்டுள்ள கொள்கைகளுக்கமைய அக்குடும்பங்களுக்கு உதவிகளை வழங்க வேண்டியுள்ளது. 2016 ஆம் ஆண்டு 17 ஆம் இலக்க காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலக சட்டத்தின் மூலம் காணாமல் போன நபர்கள் தொடர்பாக சரியான விசாரணைகளை நடாத்திய பின்னர் இறப்புச் சான்றிதழ் அல்லது காணக்கிடைக்கவில்லை என்ற சான்றிதழை வழங்குவதற்காக பதிவாளர் நாயகத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தால் கண்டறிப்பட்ட விடயங்களின் அடிப்படையில் பதிவாளர் நாயகத்தால் வழங்கப்பட்டு காணக்கிடைக்கவில்லை எனும் சான்றிதழைப் பெற்றுள்ள காணாமல் போன நபரின் நெருங்கிய உறவினருக்கு குடும்ப மீள்வாழ்வுக்காக ஒருமுறை மாத்திரம் செலுத்தப்படும் 100,000 ரூபாய்களைச் செலுத்துவதற்காக நீதி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.