இலங்கை மக்களை ஏமாற்றும் அரசின் மோசமான செயல்! ரகசியங்களை அம்பலப்படுத்தும் பிரமுகர்

இலங்கையில் பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் வரலாற்றில் இல்லாத அளவுக்கு எரிபொருள் விலையை உயர்த்துவதற்காக கடந்த சில வாரங்களாக எரிபொருட்களை மறைத்து வைத்திருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

20,000 மெற்றிக் டன் பெற்றோல், 7,000 மெற்றிக் டன் சுப்பர் டீசல், 6,000 மெற்றிக் டன் சுப்பர் பெற்றோலைக் கிடங்குகளில் மறைத்து வைத்து, விலை அதிகரித்ததாக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பெற்றோலிய ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.

ஒரு கறுப்புச் சந்தை வியாபாரி கூட இவ்வாறான சட்டவிரோத கொடுக்கல் வாங்கலில் ஈடுபடவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். எரிபொருள் விலை அதிகரிக்கப்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் செலுத்தப்பட்ட 55,000 மெற்றிக் டன் எரிபொருள் இறக்கப்படாமல் கப்பலில் வைக்கப்பட்டிருந்ததாகவும் ஆனந்த பாலித சுட்டிக்காட்டினார்.

கூட்டுத்தாபனத்தில் உள்ள கிடங்குகளில் 20,000 மெட்ரிக் டன் பெட்ரோல், 7,000 மெட்ரிக் டன் சூப்பர் டீசல் மற்றும் 6,000 மெட்ரிக் டன் சூப்பர் பெட்ரோல் இருந்ததும் விநியோகிக்கப்படவில்லை.

எரிபொருளுக்கு உண்மையாகவே தட்டுப்பாடு ஏற்படவில்லை. நாட்டிற்கு வந்த எரிபொருளுக்கு பணம் செலுத்தப்பட்டிருந்தது. எனினும் அரசாங்கம் விலை அதிகரிக்கும் வரை விநியோகிக்கப்படவில்லை.

கறுப்புச் ந்தை வியாபாரி கூட இவ்வாறு செய்ய மாட்டார் என மக்கள் சக்தி கட்சியின் பெற்றோலிய ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

ரணிலுக்கு முக்கிய பதவியை வழங்க தயாராகும் கோட்டாபய

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பொருளாதார சபையை பிரதிநிதித்துவப்படுத்தவுள்ளதாக நம்பகமான தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் மற்றும் பொருளாதார நிபுணர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ரணில் விக்கிரமசிங்க பொருளாதார சபையில் இணைத்துக் கொள்ளப்படுவதாக தெரிய வருகிறது.

நாடு எதிர்நோக்கும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காகவே இந்த பொருளாதார சபை நியமிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன ஆகியோர் பொருளாதார சபைக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், நிதி அமைச்சின் செயலாளர், ஆளுநர் மற்றும் மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் ஆகியோர் சபைக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.

கொழும்பு அரசியல் மட்டத்தில் பரபரப்பு – மத்திய வங்கி ஆளுநர் பதவிக்கும் செக் வைத்த பசில்

அண்மைக்காலமாக கொழும்பு அரசியல் மட்டத்தில் எதிர்பாராத பல திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன.

இந்நிலையில் நிதியமைச்சுக்கும் மத்திய வங்கிக்கும் இடையிலான முரண்பாடு காரணமாக புதிய ஆளுநர் ஒருவர் நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை தவிர்க்க சர்வதேச நாணய நிதியத்தை நாடுவது தொடர்பில் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கும் இடையில் முரண்பாடுகள் வலுவடைந்துள்ளன.

சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக்கொள்ள தேவையில்லை என்ற நிலைப்பாட்டில் மத்திய வங்கி ஆளுநர் தொடர்ந்தும் உள்ளார். இதனால் பசில் ராஜபக்ஷ கடும் சீற்றம் அடைந்துள்ளதாக நிதியமைச்சின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) இரண்டு தலைவர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளனர்.

ராஜதந்திரிகளின் விஜயத்திலும் முரண்பாடு தீவிரம் அடைந்துள்ளது. இலங்கை வரும் அதிகாரிகள், எதிர்வரும் திங்கட்கிழமை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவை சந்திக்க உள்ளதுடன், எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஜனாதிபதியை சந்திக்கவுள்ளனர்.

இலங்கை அரசாங்கத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கமைய, சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் எதிர்காலத்தில் கடன் உதவி வழங்குவதற்கான நிபந்தனைகள் அடங்கிய பிரேரணையை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்க உள்ளதாக தெரிய வருகிறது.

கடன்களை மறுசீரமைக்கும் நோக்கில் சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் இலங்கை செல்வதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலில் கடன் மறுசீரமைப்பு பற்றி விவாதிக்க பசில் ராஜபக்ஷ தயாராக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் இதனை மறுத்துள்ள மத்திய வங்கி ஆளுநர், கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகளுடன் கலந்துரையாடவில்லை என தனது டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தின் ஊடாகவும் நிதியமைச்சுக்கும் மத்திய வங்கிக்கும் இடையிலான முரண்பாடு வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

பசில் ராஜபக்ஷவுடன் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சு பதவிகளிலிருந்து நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அதிகார மமதையால் சீரழிந்துள்ளது நாடு – சந்திரிக்கா வெளிப்படை

அதிகார மமதையில் ஆட்சி நடத்தியதால்தான் நாடு இப்படிச் சீரழிந்துள்ளது.நாட்டின் பொருளாதாரம் அதலபாதாளத்துக்குள் சென்ற பின்னர் சர்வகட்சி மாநாட்டைக் கூட்டி இனி ஒன்றும் செய்ய முடியாது.

இவ்வாறு முன்னாள் அரசதலைவர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது,

“இலங்கையின் தற்போதைய நிலைமை படுமோசமடைந்துள்ளது. இந்தப் பேராபத்திலிருந்து நாட்டை மீட்பதற்கு அரசிடம் எந்தத் திட்டங்களும் இல்லை. எனவே, அரசு உடன் பதவி விலகுவதே சிறந்தது.”

இந்த அரசு புத்திஜீவிகள் மற்றும் பொருளாதார விற்பன்னர்களின் ஆலோசனைகளைக் கேட்காமல் அதிகார மமதையில் ஆட்சி நடத்தியதால்தான் நாடு இப்படிச் சீரழிந்துள்ளது. இதை அரச தலைவரும் அவர் தலைமையிலான அரச தரப்பினரும் இன்னமும் புரிந்துகொள்ளாமல் செயற்படுகின்றனர்.

இந்த ஆட்சிக்கு ஆணை வழங்கிய 69 இலட்சம் பேர் உள்ளிட்ட அனைத்து மக்களும் இன்று வீதிகளில் பொருட்களைக் வாங்க வரிசையாக நிற்கின்றனர். பொருட்களின் விலையேற்றத்தாலும் பொருட்களின் பற்றாக்குறையாலும் மக்கள் இன்று திண்டாடுகின்றனர்.

எனவே, பட்டினியால் மக்கள் செத்து மடிவதற்கு முன் இந்த அரசு உடன் பதவி விலக வேண்டும். அப்போதுதான் நாட்டையும் மக்களையும் மீட்டெடுக்கும் வகையில் ஜனநாயக ஆட்சி மலரும்” – என்றார்.

Posted in Uncategorized

பேரழிவில் சிறிலங்கா – மூன்று மாதங்களாக வாயே திறக்காத பசில்

“நாடு பேரழிவைச் சந்தித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் நாட்டின் நிதி நிலைமை குறித்து நிதியமைச்சர் நாடாளுமன்றத்தில் மூன்று மாதங்களாகப் பேசவில்லை.

சபாநாயகர் அவர்களே, நாட்டின் நிதிநிலையை நாடாளுமன்றத்தில் தெரிவிக்க நிதி அமைச்சருக்கு உடனடியாக உத்தரவிடுங்கள்.” என எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல இன்று (10) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

‘மாண்புமிகு சபாநாயகர் அவர்களே, நமது அரசியலமைப்புச் சட்டத்தின் 148வது பிரிவின்படி நாடாளுமன்றத்திற்கு பண அதிகாரம் உள்ளது.ஆனால், இந்த நாடாளுமன்றத்தில் நமது நிதி அமைச்சர் கடைசியாக டிசம்பர் 10ஆம் திகதி பேசினார்.இன்று மூன்று மாதங்கள் ஆகிவிட்டது. இந்த 3 மாதத்தில் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

நாட்டின் ஒவ்வொரு துறையிலும் பேரழிவு ஏற்பட்டுள்ளது .ஆனால் அவர் மூன்று மாதங்களாக நாட்டின் நிதி நிலை குறித்து எந்த அறிக்கையும் வெளியிடவில்லை .

இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது . எனவே, உடனடியாக உத்தரவை பிறப்பித்து, நாட்டின் நிதி நிலைமையை நாடாளுமன்றத்திற்கு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இனியும் காத்திருக்க முடியாது என அவர் தெரிவித்தார்.

Posted in Uncategorized

ஜனாதிபதிக்கும் கூட்டமைப்பிற்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் காணி அபகரிப்பு உள்ளிட்ட விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினை சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கித்தருமாறும் அவர்கள் கோரிக்ககை விடுத்திருந்தனர். எனினும் ஜனாதிபதி அன்றைய தினம் செயலகத்தில் இல்லை என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர் என்பதுக் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் எதிர்வரும் 15ஆம் திகதி மாலை 3.30 மணிக்கு இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

பேரறிவாளன் நிரந்தரமாக விடுதலை ஆவார் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது- தாயார் அற்புதம்மாள்

பேரறிவாளன் விரைவிலேயே நிரந்தரமாக விடுதலை செய்யப்படுவார் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்று அவரது தாயார் அற்புதம்மாள் கூறியுள்ளார்.

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்பட 7 தமிழர்களையும் விடுதலை செய்யக்கோரி தமிழக ஆளுநருக்கு அனுப்பப்பட்ட தீர்மானத்தின் மீது அவர் இன்னும் முடிவெடுக்கவில்லை.

இந்த நிலையில் பரோலில் வெளியே வந்த பேரறிவாளன் தனக்கு பிணை வழங்க கோரி உச்ச நீதிமற்றத்தில் மனு தாக்கல் செய்தார்.மனுவை விசாரித்த நீதி மன்றம் அவருக்கு பிணை வழங்கி உத்தரவிட்டது.

இந்நிலையில், மிக நீண்ட சட்ட போராட்டத்தை தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கி இருப்பது மகிழ்ச்சியை தருகிறது. 32 வருடமாக ஜெயிலில் இருக்கும் அவனது பாதி வாழ்க்கை ஜெயிலி லேயே முடிந்துவிட்டது. ஜெயில் வாசத்திலும் நல்ல ஒழுக்கத்தையும், படிப்பையும் வழங்கி இருப்பது மகிழ்ச்சியை தருகிறது.

எனக்கு வாழ்க்கையில் எதுவும் தேவையில்லை. எனது மகன் விடுதலையாக வேண்டும். பேரறிவாளனுக்கு ஏற்கனவே பரோல் வழங்கப்பட்டிருந்தாலும் சுதந்திரமாக வெளியே செல்ல முடியாது. இந்த பிரச்சினையையும் அவனது உடல் நிலையையும் கருத்தில் கொண்டு ஜாமீன் கிடைத்து இருக்கிறது.

நியாயம் என்றாவது ஜெயித்தே தீரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. விரைவிலேயே நிரந்தரமாக விடுதலை செய்யப்படுவார் என்ற நம்பிக்கையும் இதன் மூலம் ஏற்பட்டுள்ளது” என்றார்.

Posted in Uncategorized

அரசாங்கம் தீர்வினை தராது, சர்வதேசமே தலையிட வேண்டும் -காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்

அரசாங்கம் தீர்வினை தராது சர்வதேசமே தலையிட வேண்டும் என வவுனியாவில் ஐந்து வருடங்களை கடந்து தொடர் போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்துள்ளனர்.

தமது போராட்டம் குறித்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மேலும் தெரிவிக்கும் போது,

“எமக்கு தீர்வு கிடைக்க வேண்டுமாக இருந்தால் வெளிநாடுகளின் தலையீடு அவசியம். அமெரிக்கா, ஜரோப்பிய ஒன்றிய நாடுகள் நேரடியாக வந்து இப்பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தொடர் போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றோம்.

இன்று எமது போராட்டத்தை வெளிநாடுகள் உன்னிப்பாக அவதானித்து கொண்டு இருக்கின்றனர். நாங்கள் வெளிநாட்டின் தலையீட்டினையே நம்பி இங்கிருந்து போராடி வருகின்றோம்.

வவுனியாவில் கடந்த 1847ஆவது நாட்களாக வீதியிலிருந்து போராடி வருகின்றோம். தற்போது இடம்பெற்றுவரும் ஐநா சபை மாநாட்டில் எங்களுக்கு தீர்வு கிடைக்கும், எங்களுடைய பிள்ளைகளை வீட்டிற்கு அனுப்பி வைப்பார்கள் என்ற நம்பிக்கையில் இருக்கின்றோம். எத்தனை வருடங்கள் கடந்தாலும் தீர்வு கிடைக்கும் வரை எமது போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது போராட்டத்தை வலுப்படுத்துவதற்கு எவரும் முன்வருவதில்லை

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளால் மேற்கொள்ளப்படும் போராட்டத்தை வலுப்படுத்துவதற்கு எவரும் முன்வருவதில்லை எனவும் மாறாக, போராட்டத்தினை மலினப்படுத்தும் செயற்பாடுகளே முன்னெடுக்கப்படுவதாகவும் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கச் செயலாளர் ரஞ்சனா தெரிவித்துள்ளார்.

மக்கள் அனைவரும் சர்வதேச மகளிர் தினத்தினை மகிழ்ச்சியுடன் கொண்டாடிக்கொண்டிருக்கும் நிலையிலே, நாம் மகளிர் தினத்தினைத் துக்கதினமாக கடைப்பிடித்துக்கொண்டிருக்கிறோம்.யுத்தகாலத்திலே உறவுகளைத் தொலைத்துவிட்ட தாய்களாய், சகோதரிகளாய், துணைவிகளாய், ஏனைய உறவுகளாகவும் நாம் தற்போது வீதிவீதியாக கண்ணீரும் கம்பலையுமாக எமது உறவுகளைத் தேடிவருகின்றோம்.

இராணுவத்தினரிடம் கையளித்த உறவுகளையும், வெள்ளைவானில் கடத்தப்பட்ட உறவுகளையும், வீடுவீடாக இராணுவம் கைதுசெய்த உறவுகளையும் நாம் இதுவரை இலங்கை அரசிடம் கேட்டு பயனளிக்காதநிலையில், தற்போது சர்வதேசத்திடம் நீதிகேட்டு போராடிவருகின்றோம்.இந்தப் போராட்டந் தொடங்கி ஐந்துவருடங்கள் பூத்தியாகியுள்ள சூழலில் எங்களுக்கான நீதி இதுவரை கிடைக்கவில்லை. எனவே நாம் தொடர்ந்தும் போராட்டத்தை முன்னெடுத்துச்செல்கின்றோம்.

இவ்வாறு நாம் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும்போது, எமது தொடர் போராட்டத்தை வீழ்ச்சியடையச்செய்வதற்கான முயற்சிகளே இங்கு இடம்பெறுகின்றன. எமது போராட்டத்தை வலுப்படுத்துவதற்கு எவரும் முன்வருவதில்லை என்பதுடன், எமது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதி கிடைக்கவேண்டுமென யாரும் எண்ணுவதாகவுமில்லை.

கடந்த 2009ஆம் ஆண்டுபோர் மௌனிக்கப்பட்ட பின்னர் இலங்கை இராணுவத்திடம் கையளித்த உறவுகளைக் கேட்டு ஐந்துவருடங்களாக தொடர்போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றோம். தற்போது நாம் எமது தொடர்போராட்டத்தின் ஆறாவது வருடத் தொடக்கத்தில் இருக்கின்றோம்.எனினும் இறுதி உயிர் இருக்கும்வரையிலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளின் போராட்டமானது தொடரும் என முல்லைத்தீவு மாவட்ட வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மேற்கெண்ட போராட்டத்தில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கதும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் முழுமையான ஒத்துழைப்பு கிடைக்கும் – அமெரிக்க தூதுவர்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் ஆகியோருடன் நேற்று செவ்வாய்க்கிழமை இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் கலந்துரையாடியிருந்தார்.குறித்த சந்திப்பில் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வெற்றிகொள்வதில் அமெரிக்காவின் முழுமையான ஒத்துழைப்பும் உதவிகளும் கிடைக்கும் என தமிழ் தேசிய கூட்டமைப்புடனான சந்திப்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் உறுதியளித்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது, அரசியல் தீர்வு விடயங்கள், ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவின் வகிபாகம், அரசியலமைப்பு உருவாக்கம் ஆகிய விடயங்கள் குறித்தே முக்கியத்துவம் கொடுத்து கலந்துரையாடப்பட்டுள்ளது.அத்தோடு ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் எதிர்வரும் செப்டெம்பரில் கொண்டுவரும் விரிவான அறிக்கையை அமெரிக்கா முழுமையான ஒத்துழைப்புகளை வழங்கும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.

இதேவேளை தொடர்ச்சியாக அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்தேனும் இலக்குகளை அடைய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என சம்பந்தன் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கிடம் கேட்டுக்கொண்டார்.அத்துடன் சர்வதேச நாடுகளின் மூலமாக தீர்வுகளை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என்றும் எனவே அரசியல் தீர்வு விடயத்தில் அமெரிக்காவின் கூடுதல் அழுத்தம் இருக்கவேண்டும் என்றும் இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்தார்.(15)