“ஒரே நாடு – ஒரே சட்டம்” செயலணி சபாநாயகர், பாராளுமன்ற செயலாளரை சந்தித்தது

‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ தொடர்பான ஜனாதிபதி செயலணி, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் பாராளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக்க தசநாயக்க ஆகியோரை பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் சந்தித்தது.

செயலணியின் எதிர்கால செயற்பாடுகள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்து ஆராய்ந்த பின்னர், ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்படும் எண்ணக்கரு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்பு தேவைப்படுவதாக செயலணியின் உறுப்பினர்கள் குறிப்பிட்டனர்.

இன மற்றும் மத குழுக்களாக, எந்தவொரு வகையிலும் எந்தவொரு இனத்தவரும் தனியாக நடத்தப்படக் கூடாது என்பதை தேசியக் கொள்கையாக சட்டமாக்குவதன் முக்கியத்துவம் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது.

இலங்கையில் “ஒரே நாடு ஒரே சட்டம்” என்ற கருத்தியலை நடைமுறைப்படுத்துவது தொடர்பில், பல்வேறு தரப்பினரின் கருத்துக்கள் மற்றும் எண்ணங்களை கருத்திற்கொண்டு, அந்தக் கருத்தியலை ஆய்வு செய்ததன் பின்னர், நாட்டில் அதனை அமுல்படுத்துவது தொடர்பான கருத்தியல் பத்திரத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் சமர்பிக்க கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் ஒரு செயலணி நியமிக்கப்பட்டது.

சமீபத்தில் அதன் பதவிக்காலம் 2022-02-28இல் இருந்து 03 மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டது.

செயலணியின் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஊடகங்களில் வெளியிடப்பட்ட அறிவித்தலுக்கு ஏற்ப பல்வேறு தொழில் வல்லுநர்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், பல்வேறு மதக் குழுக்கள், பல்வேறு இனத்தினர், பல்கலைக்கழக சமூகத்தினர், சட்ட வல்லுநர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரால் தபால், மின்னஞ்சல் மூலமும் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டப வளாகத்தில் அமைந்துள்ள செயலணியின் அலுவலகத்திற்கு வருகை தந்து, அவர்களின் கருத்துக்களை வாய்மொழியாகவும் எழுத்து மூலமாகவும் முன்வைத்தனர்.

மேலும், செயலணியின் உறுப்பினர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று, அப்பிரதேச பல்வேறு இனக் குழுவினர், மதத் தலைவர்கள் உள்ளிட்ட சாதாரண பொதுமக்களையும் சந்தித்து அவர்களின் கருத்துக்களையும் கேட்டறிந்து கொண்டனர்.

தற்போது 06 மாகாணங்களை உள்ளடக்கிய வகையில், மக்களின் கருத்துக்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதோடு, எஞ்சிய 03 மாகாணங்களில் உள்ள மக்களின் கருத்துக்களும் பெறப்படும் எனவும் செயலணி தெரிவித்துள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை தொடர்பான அறிக்கையை வரவேற்பதாக பிரித்தானியா தெரிவிப்பு

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை தொடர்பான அறிக்கையை வரவேற்பதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது.

பொறுப்புக்கூறலில் தொடர்ந்து முன்னேற்றம் இல்லாதது மற்றும் மனித உரிமை வழக்குகளில் பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளமை குறித்தும் கவலை வெளியிட்டுள்ளது.

இதேவேளை 46 கீழ் 1 தீர்மானத்தில் உள்ள பரிந்துரைகளுடன் ஆக்கப்பூர்வமாக ஈடுபடுமாறும் அவர் இலங்கை அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ள ரீட்டா பிரெஞ்ச் சிவில் சமூகத்தின் கண்காணிப்பு மற்றும் துன்புறுத்தல் மற்றும் இராணுவ மயமாக்கல் குறித்தும் கவலையடைவதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன் வடக்கு மற்றும் கிழக்கில் காணி அபகரிப்பு மற்றும் சிறுபான்மை சமூகங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை குறித்து கவலையடைவதாக மேலும் தெரிவித்துள்ளார்

Posted in Uncategorized

மேய்ச்சல்தரையில்  சட்டவிரோத குடியிருப்பை ஒப்புக்கொண்ட  சட்ட மா அதிபர் திணைக்களம் 

மட்டக்களப்பு  மாவட்டத்தின் மயிலத்தமடு, மாதவணையில் மகாவலியின் இடது கரையில் கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரையாக ஒதுக்கப்பட்டிருந்த காணிகளில் சட்டவிரோத குடியிருப்பாளர்கள்  குடியேறியுள்ளமையை சட்ட மா அதிபர் நேற்று மேன் முறையீட்டு நீதிமன்றில் ஒப்புக்கொண்டார்.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான இராசமாணிக்கம் சாணக்கியன், கோவிந்தன் கருணாகரம் (ஜனா)  ஆகியோர் தாக்கல் செய்திருந்த எழுத்தாணை மனு (ரிட் மனு)  மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதிகளான சோபித்த ராஜகருணா மற்றும் தம் மிக கனேபொல ஆகியோர் முன்னிலையில் நேற்று (7) மேன் முறையீட்டு நீதிமன்றில் பரிசீலிக்கப்பட்டது.

இதன்போது, பிரதிவாதிகளுக்காக மன்றில் ஆஜரான சட்ட மா அதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி விக்கும் டி ஆப்றூ  ஆகியோர் மேற்படி விடயத்தை நீதிமன்றில் ஒப்புக் கொண்டார்.

குறித்த பகுதியில்  32 சட்டவிரோத குடியிருப்பாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களை மயிலத்தமடு, மாதவணை மேய்ச்சல் தரைப் பகுதியிலிருந்து வெளியேற்ற சட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக சொலி சிட்டர் ஜெனரல் விக்கும் டி ஆப்று குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு மயிலத்தமடு, மாதவணையில் மகாவலியின் இடது கரையில் மாடுகளுக்கான மேய்ச்சல் தரையாக ஒதுக் கப்பட்டிருந்த 100 ஏக்கர் காணியை சோள செய்கைக்காக தனியார் நிறுவனங்களுக்கு வழங்குவதற்குஇ மகாவலி அதிகார சபை மேற்கொண்ட தீர்மானத்தை வலுவற்றதாக்கக் கோரி கடந்த வருடம் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

சோளச் செய்கைக்கு தற்காலிகமாக வழங்கப்பட்ட அதிகாரப்பத்திரம் காலாவதியான நிலையில்இ மனுவில் சுட்டிக்காட்டப்பட்ட பிரச்சினைகளுக்கான துரித தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கான இயலுமை கிடைக்க வேண்டும் என சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் விக்கும் டி ஆப்றூ முன்னர் மன்றில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில்இ குறித்த விவகாரத்தில் , மேய்ச்சல் தரை நிலத்தில் சட்டவிரோத குடி யேற்றங்கள் இடம்பெற்றுள்ளமையும் மனு தாரர்களுக்காக மன்றில் ஆஜராகும் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனினால் மன்றில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

அதன்படி நான்கு இலட்சத்திற்கு மேற்பட்ட கறவை மாடுகளுக்கு உணவளித்த மயிலத்தமடு, மாதவணை பகுதியை மீண்டும் கால்நடை வளர்ப்பாளர்களிடம் கையளித்தால் தமது மனுவை வாபஸ் பெறுவதற்கு தயாராகவுள்ளதாக மனுதாரர்கள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் இதற்கு முன்னர் நீதிமன்றில் தெரிவித்தார்.

இந்நிலையில் நேற்று, சட்ட மா அதிபர் சார்பில் மன்றில் தெரிவிக்கப்பட்ட சட்ட விரோத குடியிருப்பாளர்களை அகற்றும் நடவடிக்கை தொடர்பில், உரிய நடைமுறைகளைப் பின்பற்றவும், சட்டவிரோத குடியிருப்பாளர்களை அகற்றும் நடவடிக்கை குறித்த சட்ட நடவடிக்கையின் நிலைமையை மேன் முறையீட்டு நீதிமன்றுக்கு எதிர்வரும் ஜூன் 21ஆம் திகதியன்றோ அதற்கு முன்னரோ சமர்ப்பிக்கவும் நீதிமன்றம் பிரதிவாதிகள் தரப்பில் ஆஜராகும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரலுக்கு உத்தரவிட்டது.

அதன் பின்னர், இந்த ரிட் மனுவை முன் னெடுத்து செல்வது அவசியமா இல்லையா என்பதை தாம் மன்றுக்கு அறிவிக்கக் கூடியதாக இருக்கும் என இதன்போது மனுதாரர் தரப்பின் ஜனாதிபதி சட்டத்தரணி விக்கும் டி ஆப்றூ குறிப்பிட்டார். இதனையடுத்து இந்த ரிட் மனு எதிர்வரும் ஜூலை 21 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட செயலாளர்இ ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் மற்றும் மகாவலி அபிவிருத்தி அதிகார சபையினர் உள்ளிட்ட தரப்பினர் இந்த ரிட் மனுவில் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எமது இனத்துக்காக அனைத்து தமிழ்த் தேசியக் கட்சிகளும் இணைந்து செயற்பட வேண்டும் – ஜனா

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையில் தமிழ்த் தேசியப் பரப்பிலுள்ள ஐந்து கட்சிகளினால் அனுப்பப்பட்ட கடிதத்திலுள்ள பெரும்பாலான விடயங்கள் உள்ளடங்கியிருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது  என்று குறிப்பிட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் (ஜனா) பாதிக்கப்பட்டு, உரிமையிழந்து இருக்கின்ற எமது இனத்துக்காக அனைத்து தமிழ்த் தேசியக் கட்சிகளும் ஒன்றாக இணைந்து செயற்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) இன்றைய தினம் மட்டக்களப்பிலுள்ள அவரது அலுவலகத்தில் நடத்திய ஊடக சந்திப்பிலேயே இதனைக் குறிப்பிட்டார்.

மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையகத்தின் கூட்டத் தொடர் தொடங்கியிருக்கிறது. அதுதான் தற்கால பேசுபொருளாகவும் இருக்கின்றது. இலங்கையில் பொறுப்புக்கூறலானது பின்னடைவைச் சந்தித்துள்ளதாக மனித உரிமை ஆணையகத்தின் ஆணையாளர் தெரிவித்திருக்கிறார்.

ஓவ்வொரு முறையும் மனித உரிமை ஆணையகத்தின்  கூட்டத்தொடர்களிலும் பாதிக்கப்பட்ட எமது தமிழர் தரப்பிலிருந்து பிரதிநிதிகள் நேரடியாக பங்கேற்பர். கடந்த சில தவைகளில் நேரடியாகப் பங்குபற்றாமல் இங்கிருந்து மெய்நிகர் வழியாக இங்கு நடைபெறுகின்ற மனித உரிமை மீறல்களை கடிதம் மூலமாக அனுப்பி வைக்கிறோம். அந்த வகையில் இந்த வருடம் கூட தற்போதைய கூட்டத் தொடருக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயா ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறார். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறது.

அதேபோன்று விபரமாக இங்கு நடைபெறும் மனித உரிமை மீறல்கள், காணி அபகரிப்புகள், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் ஊடாக நடைபெறும் கைதுகள் தொடர்ந்தும் அரசியல் கைதிகள் சிறையில் அடைக்கப்பட்டிருப்பது போன்ற பல விடயங்களை உள்ளடக்கி தமிழ்த் தேசியப் பரப்பில் இருக்கும் ஐந்து கட்சிகள் இணைந்து விபரமான அறிக்கையை அனுப்பியிருந்தார்கள்.

அந்த வகையில் ஐக்கிய நாடுகளின் அதிகாரிகள் மெய்நிகர் மூலமாக இந்த ஐந்து கட்சித் தலைவர்களுடன் உரையாடியிருந்தார்கள். இந்த ஐந்து கட்சிகள் அனுப்பிய விளக்கக் கடிதத்தில் குறிப்பிட்ட பல விடயங்கள் ஆணையாளரின் இலங்கை சம்பந்தமான அறிக்கையில் உள்ளடங்கியிருக்கிறது. ஆணையாளரினால் அங்கத்துவ நாடுகளுக்கு 13 பக்க அறிக்கை வழங்கப்பட்டிருக்கின்றது. இந்த அறிக்கையில் ஐந்து கட்சியினால் அனுப்பப்பட்ட கடிதத்தின் பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருப்பது எங்களுக்கு உண்மையில் மகிழ்ச்சியைத் தருகின்றது.

மனித உரிமை ஆணையாளரின் குறுகிய அறிக்கை நிமித்தம் மெய்நிகர் மூலமாக உரையாடிய அதிகாரிகள்,  இலங்கையில் பொறுப்புக்கூறல் முறையாக நடைபெறவில்லை. இலங்கையில் சகலராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு அரசியல் தீர்வு காணப்படுவதன் முக்கியத்துவத்தினை வலியுறுத்தியிருக்கின்றார். அத்தோடு இந்திய அரசாங்கத்தின் சார்பில் பங்குபற்றிய அதிகாரி, 13வது திருத்தச் சட்டம் உள்ளடங்கலாக இலங்கையில் தமிழர்கள் சமத்துவமாக, சுயநிர்ணய உரிமையுடன் கூடிய ஒரு வாழ்க்கையை வாழ்வதற்கான ஒரு அதிகாரப்பரவலாக்கத்துடன் கூடிய அரசியல் தீர்வு கொண்டு வரப்பட்டு மிக விரைவாக மாகாண சபைகள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்திக் கூறியிருக்கின்றார்.

இவற்றையெல்லாம் பார்க்கின்ற பொழுது எமக்கான தீர்வு மிக விரைவில் வரும் என்பதில் ஓரளவுக்கு நிம்மதியடையக்கூடியதாக இருக்கின்றது.

இந்த அளவில் ஒன்றைக் கூறிக்கொள்ள வேண்டும். தமிழ்த் தேசியப் பரப்பில் தமிழ்த் தேசியம் பேசும் கட்சிகள் ஒருகாலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக ஒற்றுமையாக, தமிழ் மக்களின் உரிமைகளைப் பெறுவதற்காக, அரசியல் ரீதியாக போராடிய கட்சிகள் 2009களுக்குப் பிற்பாடு இக் கட்சிகள் பிளவுபட்டிருக்கின்றன. இந்தக் கட்சிகள் பிளவுபடுவதற்கான காரணங்கள் ஓரளவுக்கு தெரியாமலில்லை. இந்த விடயத்தில் நாங்கள் நான் பெரிது நீ பெரிது என்று பார்க்காமல் ஐந்து கட்சிகள் ஒன்றாக இணைந்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாகத்திற்கு கடிதம் எழுதியது போன்று ஏனைய கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படுவோhக இருந்தால் இன்னமும் விரைவாக, கூடுதலான பெறுபேறுகளைப் பொற்றுக் கொள்ள முடியும்.

அந்தவகையில், பாதிக்கப்பட்டு, உரிமையிழந்து இருக்கின்ற எமது இனத்துக்காக நாங்கள் ஒன்றாக இணைந்து செயற்பட வேண்டும் என்பதனை அனைத்துக் கட்சிகளிடமும் வலிந்து கேட்டுக் கொள்கின்றேன்.

13ஆவது திருத்தத்தை சின்னாபின்னப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள்- ஜனா பா.உ

அரசியலமைப்பைப் பேணிப் பாதுகாக்க உறுதிமொழியெடுத்த நீங்கள் 13ஆவது திருத்தத்தை எவ்வாறு சின்னாபின்னப்படுத்தினீர்கள். இன்னும் சின்னாபின்னப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள் என்பதற்கு அண்மைக்கால அரசியல் சம்பவங்கள் சான்றாக அமைகிறது என்று தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் (ஜனா) பிராந்தியங்களின் ஒன்றியம் என்ற அரசியலமைப்பு வரைபை வரைந்த சட்டப் பேராசிரியர் பீரிஸ் அவர்கள் இது தொடர்பாக கள்ள மௌனம் சாதித்துக் கொண்டிருக்கிறார் எனவும் கூறினார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்க (ரெலோ)த்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) வின் இன்றைய தினம் (23) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார்.

உரையின் முழு வடிவம்,

நாட்டில் தற்பேது நிலவும் நிலைமைகள் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுவதன் மூலம் எமது நாட்டின் இப்போதைய நிலைமைகளை எமது நாட்டு மக்களுக்கு எடுத்துரைப்பதற்கு கிடைத்த பெரும் சந்தர்ப்பமாகவே இதனைக் கருதுகின்றேன்.

எமது நாட்டின் வரலாற்றில் ராஜபக்ச குடும்பத்தின் வரலாறு பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டுமா? இல்லை இழிவாக எடுத்துரைக்கப்பட வேண்டுமா? என்ற இரு துருவ வினாக்களுக்கான விடையினை அரசாங்கமே தேர்ந்தெடுக்க வேண்டும். இன்னமும் காலம் முடியவில்லை. திருந்த இடமுண்டு. ஆனால், நீங்கள் திருந்த மாட்டீர்கள் என்ற நம்பிக்கையும் எனக்குண்டு.

69 இலட்சம் மக்களினால் அதுவும் பெரும்பான்மை மக்களின் பெரும்பான்மை வாக்குகளால் தெரிவு செய்ததாகப் பெருமைப்பட்டு அனுராதபுர மகாபோதியில் இருந்து பிரகடனம் செய்து பெருமைப்பட்ட நீங்கள் இன்று உங்களது செயல்திறனற்ற நிலைமையினை அந்த 69 இலட்சம் மக்களே உணர்ந்துள்ள நிலைமையை நாடு காண்கிறது.

அரசாங்கம் என்பது ஜனாதிபதி, அமைச்சரவை, பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளடங்கலாக சட்டவாக்கத்துறை, நிறைவேற்றுத்துறை, நீதித்துறை என்ற தூண்களில் சிறப்பாகக் கட்டியெழுப்பப்பட வேண்டும். இதற்கான அத்திவாரம் உறுதியாக இருக்க வேண்டும். ஆனால் இன்று அத்திவாரம் இல்லாத கட்டடம் போல சாட்டவாக்க, நிறைவேற்று, நீதித்துறை காணப்படுகிறது.

கூட்டுப் பொறுப்புடன் செயற்பட வேண்டிய அமைச்சர்களிடையே கூட்டுப் பொறுப்பென்பது இம்மியளவும் இல்லை. பாராளுமன்ற ஜனநாயக சம்பிரதாயம் நிலவும் நாடுகளில் அமைச்சரவைக் கூட்டுப் பொறுப்பு பாராம்பரியமாகப் பேணப்பட்டு வரும் மரபாகும். ஆனால், அமைச்சரவைத் தீர்மானங்களை அமைச்சர்களே எதிர்க்கட்சியினரைவிட மோசமாக விமர்சிக்கின்ற நிலையை இன்று நாங்கள் காண்கிறோம்.

அமைச்சரவைக் கூட்டங்களை திறந்தவெளியில் நடத்துங்கள் அதனை மக்களுக்கும் தெரிய சமூக ஊடகங்கள் மூலம் ஒளிபரப்புங்கள். அப்போது தெரியும் யார் புரூட்டஸ் என்பது. இல்லையெனில் அன்று எஸ்.டப்ளியூ.பண்டாரநாயக்கா கூறிய போன்று காலி முகத்திடலில் நடத்துங்கள். மக்கள் கண்ணாரக்கண்டு மகிழ்வார்கள்.

எமது நாடு மறுசீரமைக்க முடியாத, மீளக் கட்டியெழுப்பமுடியாத அதள பாதாளத்துக்குள் சென்று கொண்டிருக்கிறது. உலக அரசியல் வரலாற்றில் பாராளுமன்ற ஜனநாயக வரலாற்றில் என்றும் காணாதளவுக்கு அமைச்சர்களின் எண்ணிக்கை, இராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கை, செயலாளர்களின் எண்ணிக்கை, இவர்களது இணைப்புச் செயலாளர்கள், ஆலோசகர்கள், பிரேத்தியக உதவியாளர்கள் என்று அரச நிதி வீண்விரயமாகிக்கொண்டிருக்கிறது. கட்சிக் காரர்களுக்கும் அமைச்சர்களது உறவினர்களுக்கும் ஓய்வுபெற்ற இராணுவ உயரதிகாரிகளுக்கும் பதவிகளும், பவுசுகளும், வரப்பிரசாதங்களும் தந்து உல்லாசம் அனுபவிக்கத் தந்து, நாட்டு மக்களை சொல்லொணாத் துயரத்துக்குள் தள்ளிவிட்டுள்ளது இந்த அரசு.

ஆட்சியமைத்த இரு வருட காலத்துக்குள் அமைச்சரவையில் எத்தனை தடவை மாற்றங்களை செய்துள்ளீர்கள். உதை பந்தாட்டப் பந்துகூட இந்த அளவுக்கு உதைகளை பட்டிருக்காது. பசில் ராஜபக்சவினை பாராளுமன்றத்துக்குள் கொண்டுவருவதற்கும் நிதி அமைச்சராக்குவதற்கும் எத்தனை பாடு பட்டீர்கள். இதற்காக அமைச்சர் உதய கம்மம்பில எவ்வாறு பலிக்கடாவாக்கப்பட்டார். அலாவுதீனின் அற்புத விளக்கோடு அதிசய பொருளாதார மாற்றங்களினை ஏற்படுத்துவார் என்று அவரைச் சுற்றி போதி சத்துவருக்கு ஒப்பான விம்பத்தை ஏற்படுத்தினீர்கள். நடந்தது என்ன? நாட்டின் பொருளாதாரப் பிரச்சினை நிதி அமைச்சரினால் கட்டுப்படுத்த முடியாத நிலைமைக்குச் சென்றுவிட்டது.

எரிபொருள் விலை உயர்வு, எரிவாயு விலை உயர்வு, அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வு என்று நாட்டில் விலை உயராத பண்டங்களும் இல்லை. சேவைகளும் இல்லை. மகிந்த ராஜபக்ச அவர்களினால் நிதி அமைச்சை திறம்பட நிருவகிக்க முடியாது. கௌரவ பவித்திரா வன்னியாராச்சி அவர்களினால் சுகாதார அமைச்சினை திறம்பட நிருவகிக்க முடியாது. கௌரவ கெகலிய ரம்புக்கல்ல அவர்களினால் வெகுஜன ஊடகத்துறையை நிருவகிக்க முடியாது. என்று அவர்களது அமைச்சுப் பொறுப்புக்களை மாற்றினீர்கள். ஒரு அமைச்சினை ஒழுங்காக நிருவகிக்க முடியாதவர்கள் என்று கருதியவர்களுக்கே வேறு அமைச்சுப் பொறுப்புக்களை வழங்கியுள்ளீர்கள். உங்களால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதியின் ஆலோசகர்கள், அமைச்சுக்களின் ஆலோசகர்கள் என நியமிக்கப்பட்ட நிபுணத்துவ ஆலோசகர்களினால் பெற்றுக் கொண்;ட ஒரு நிபுணத்துவ ஆலோசனையையாவது இந்த உயரிய சபையில் எடுத்துரைக்க முடியுமா?

நாட்டின் நிதிக் கொள்கை தோல்வியடைந்துள்ளது. மத்திய வங்கி நாணாயக் கொள்கையை திறம்படக் கையாள முடியாத நிலையில் உள்ளது. நிதியமைச்சு தோல்வியடைந்துள்ளது வெளிநாட்டு அமைச்சு தோல்வியடைந்துள்ளது. நீதி அமைச்சு தோல்வியடைந்துள்ளது. விவசாயத்துறை அமைச்சு தோல்வியடைந்துள்ளது. சுகாதார அமைச்சு தோல்வியடைந்துள்ளது. கல்வி அமைச்சு தோல்வியடைந்துள்ளது. கடற்றொழில் அமைச்சு தோல்வியடைந்துள்ளது. கலாசார அமைச்சு தோல்வியடைந்துள்ளது. எரிபொருள் அமைச்சு தோல்வியடைந்துள்ளது. இவையாவும் ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல அன்றி பல பதங்களினை எடுத்துக் காட்டியுள்ளேன்.

அணி சேராக் கொள்கையையும், பஞ்ச சீலத்தையும், அரசியல் சித்தாந்தமாக்கி உலகத்துக்கு வெளியுறவுக் கொள்கைளினை எடுத்தியம்பிய எமது நாடு இன்று தனது பிழையான வெளிநாட்டுக் கொள்கையினால் சர்வதேச நாடுகளின் விரோதங்களைச் சம்பாதித்துக் கொண்டிருக்கிறது.

நாட்டின் வளங்கள் வெளிநாடுகளுக்கு தாரை வார்க்கப்படுகிறது. இதை எதிர்க்கட்சியினராகிய நாங்கள் கூறவில்லை. அரசாங்கக் கட்சியின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்களும் கூறவில்லை. கூட்டுப் பொறுப்புடன் இருந்து தீர்மானங்களை எடுக்கும் அமைச்சர்களே இதனைக் கூறுகின்றார்கள்.

நிதி அமைச்சர் கூறுகிறார். கறுப்புச் சந்தையில் டொலர் வாங்கி கறுப்புச் சந்தையில் ஆயுதம் வாங்கி, கறுப்பாகவே யுத்தத்தை முடித்தோம் என்று. இதை எதிர்க்கட்சியினர் கூறவில்லை. நிதி அமைச்சரே ஊடகவியலாளர் மகாநாட்டில் பெருமையுடன் கூறுகின்றார். இத்தகைய புத்திசாலித்தனமான நிதி அமைச்சரை எமது நாடு கொண்டிருக்கிறது. இதன் விளைவையே நாட்டு மக்கள் அனுபவிக்கிறார்கள்.

ஒரே இரவில் சேதனப் பசளைத் திட்டத்தினை கொண்டு வந்தீர்கள். இன்று நாட்டின் விவசாய உற்பத்தித்துறை எங்கு செல்கின்றது. ஒட்டு மொத்த விவசாயிகளுமே கடனாளிகளாக மாறியுள்ளார்கள்.

ஒரு பரீட்சையினை பிரச்சினை இல்லாது நடத்த முடியாத நிலைமையில் பரீட்சைத் திணைக்களம் உள்ளது. வினாத்தாள் தயாரிப்பதிலிருந்து இரு மொழிகளில் பரிமாற்றம் செய்வது, தகுதியான பரீட்சை மேர்ப்பார்வையாளர்களை நியமனம் செய்வது வரை எந்தளவு திறமையுடன், பரீட்சைத் திணைக்களமும், கல்வித் திணைக்களமும், கல்வியமைச்சும் செயற்படுகிறது என்பதற்கு நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற கல்விப் பொதுத் தாராதர உயர்தரப் பரீட்சையில் நடந்து கொண்டிருக்கும் குழறுபடிகள் தகுந்த உதாரணமாகும்.

வர்த்தக வாணிபத்துறை அமைச்சர் நாளொரு அரச வர்த்தக மானியை வெளியிட்டு விலைகளைக் கட்டுப்பாட்டுக்குள் வைப்பதாகக் கூறி வாய்ச்சவாடல் மாத்திரம் விட்டார். அவரைப் பொறுத்தவரை வாய்ச் சவாடல்தான் அவரது மூலதனம். இன்று நாட்டின் பொருள்களின் விலை உயர்வுக்கு குறிப்பாக பால்மா விலை உயர்வுக்கு தானோ தனது அமைச்சோ காரணமில்லை உற்பத்தியாளர்களும், வர்த்தகர்களுமே காரணம் என்று எந்த விதமான குற்ற உணர்வுமின்றி, அமைச்சர் என்ற பொறுப்பின்றி பத்திரிகையாளர் முன் கூறுகின்றார்.

ஒரே நாடு ஒரே சட்டம் என்கிறீர்கள். ஒரே நாட்டில் ஒரே சட்டம் நிலவுகின்றதா, தமிழர்களுக்கு ஒரு சட்டம், சிங்களவர்களுக்கு ஒரு சட்டம் முஸ்லிம்களுக்கு ஒரு சட்டம். கிறிஸ்தவர்களுக்கு ஒரு சட்டம் என நான் கூறவில்லை. நீதிமன்ற அவமதிப்பினைச் செய்து நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்ட ஒரே இனத்தைச் சேர்ந்த கலகொட அத்தே ஞானசார தேரர் தொடர்பாகவும், பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ரஞ்சன் ராமநாயக்க தொடர்பாகவும் உங்கள் சட்டச் செயற்பாடுகளை நோக்கும் போது உங்கள் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கொள்கையானது உங்களைப் பார்த்தே பரிகசிப்பதாக உணரவில்லையா?

அரசியலமைப்பு மேதகு ஜனாதிபதியவர்களுக்கு குற்றவாளிகளுக்கு மன்னிப்பளிக்கும் அதிகாரத்தினை வழங்கியுள்ளது. அதனை எவ்வாறு பிரயோகிக்கலாம் எனவும் பொருள் கோடல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், மரண தண்டனைக் குற்றத் தீர்ப்பளிக்கப்பட்ட முன்னாள் இராணுவ வீரர்களுக்கு நீங்கள் பொது மன்னிப்பளித்த விதம் பற்றி இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உட்பட சிவில் சமூகத்தினர் வரை அதை எவ்வாறு விமர்சித்தார்கள் என்பதை நீங்கள் உணர்ந்தீர்களா? இத்தனைக்கும் எமது நீதி அமைச்சர் இளைமையானவர், ஆளுமையானவர், திறமையானவர், ஜனாதிபதி சட்டத்தரணியும் கூட. இது தவறெனத் தெரிந்தும் எடுத்துரைக்க முடியாத கையறு நிலை அவருக்கு. இதுதான் எமது நாட்டின் சட்ட ஆட்சியின் இன்றைய நிலை.

இன்று ஜெனிவா திருவிழா ஆரம்பகாலம். இதனால், மனித உரிமைகள் பேணுவது தொடர்பாக, பயங்கரவாதத் தடைச்சட்டம் சீர்திருத்தம் தொடர்பாக, அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக, வடக்கு கிழக்கு அபிவிருத்தி தொடர்பாக, கரிசனை காட்டுவது போல் ஒரு விம்பத்தை உருவாக்குகின்றீர்கள். சட்டப் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் அவர்கள். உப்புச் சப்பற்ற பயங்கரவாதத் தடைச்சட்டத் திருத்தம் தொடர்பாக பெரிய வியாக்கியானம் செய்கின்றார். ஆனால், இந்தப் பயங்கரவாதத் திருத்தச் சட்டம் ஓட்டைக் குடத்தில் நீர் நிரப்புவதற்கு ஒப்பானதாகும்.

எமது நாட்டின் வரலாறு ராஜபக்ச பரம்பரையினர் காலத்தில் சகல துறைகளிலும் இருண்ட யுகமாக இருந்தது என எதிர்காலத்தில் உங்களால் எழுதப்படும் மகாவம்ச வரலாற்றில் குறிப்பிடப்பட வேண்டுமா? எமது நாட்டின் பல்லினத் தன்மை ஏற்றுக் கொள்ளப்பட வேண்டுமா? எமது நாட்டின் அரசியலமைப்பு முறையாகப் பேணப்பட வேண்டுமா?

அரசியலமைப்பின் ஒரு அங்கமான 13ஆவது திருத்தம் உங்களால் எவ்வாறு கையாளப்படுகிறது. அரசியலமைப்பைப் பேணிப் பாதுகாக்க உறுதிமொழியெடுத்த நீங்கள் 13ஆவது திருத்தத்தை எவ்வாறு சின்னாபின்னப்படுத்தினீர்கள். இன்னும் சின்னாபின்னப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள் என்பதற்கு அண்மைக்கால அரசியல் சம்பவங்கள் சான்றாக அமைகிறது. ஒரு காலத்தில் பேரினவாத நிலைப்பாட்டில் இருந்த சம்பிக்க ரணவக்க, மக்கள் விடுதலை முன்னணியின் அனுரகுமார திசாநாயக்க போன்றோரே 13ஆவது திருத்தத்தின் உண்மையான அமுலாக்கத்துக்கும் அதிகாரப் பகிர்வுக்கும் ஆதரவான தங்களது நிலைப்பாட்டை மாற்றி வருகின்ற நிலைமையில், பிராந்தியங்களின் ஒன்றியம் என்ற அரசியலமைப்பு வரைபை வரைந்த சட்டப் பேராசிரியர் பீரிஸ் அவர்கள் இது தொடர்பாக கள்ள மௌனம் சாதித்துக் கொண்டிருக்கிறார்

எனவே இந்த நாடு சுபிட்சமான நாடாக திகழ வேண்டுமானால், நீங்கள் உங்களது நிலைப்பாட்டிலிருந்து மாறவேண்டும் என்று கூறிக் கொள்கிறேன். அத்துடன், இன்று நாட்டில் அனைத்து மக்களும் தங்களது சம்பளப்பிரச்சினைக்காக வீதிக்கு வருகின்றார்கள். ஆக குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கு முன்பள்ளி ஆசிரியர்கள் கூட தங்களை நிரந்தரமாக்குமாறு கோரி வருகின்றார்கள். அவர்களை நிரந்தரமாக்கி குழந்தைகளுக்கு நல்ல கல்வியைக் கொடுப்பதற்காவது நீங்கள் முன்வரவேண்டும்.

Posted in Uncategorized

இறுதித் தீர்வை அடைவதற்கு நாங்கள் ஒற்றுமையாக, ஐக்கியமாக, ஓரணியாக போரட வேண்டும் – பாராளுமன்ற உறுப்பினர் ஜனா

மாகாணசபை எங்களுக்கு இறுதித் தீர்வல்ல. எங்களது இறுதித் தீர்வு எங்கோ இருக்கின்றது. அதை அடைவதற்கு நாங்கள் ஒற்றுமையாக, ஐக்கியமாக, ஓரணியாக போரட வேண்டும் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

ஈழத்தமிழர் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வும் தேசிய பிராந்திய சர்வதேச நிலவரங்களும் என்ற தலைப்பில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஆறு தமிழ்க்கட்சிகள் இணைந்து நடத்திய கருத்தரங்கில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த நாட்டைப் பொறுப்பேற்றிருக்கும் கோட்டாபய மற்றும் அவரது சகாக்ககள் குறிப்பாக இந்தியாவிற்கான இலங்கைத் தூதுவர் மிலிந்த மொரகொட இவர்கள் கூறுவது இலங்கைத் தமிழர்களுக்கு இனப்பிரச்சனை இல்லை. இவர்களுக்கு உள்ளது பொருளாதா ரீதியான பிரச்சனையே என்று. பொருளாதாரப் பிரச்சனைக்காகவா இத்தனை வருடங்கள் இத்தனை உயிர்களை, பொருளாதாரத்தை, கலை, கலாச்சாரத்தை, பிரதேசங்களை பறிகொடுத்து வந்திருக்கின்றார்கள் எமது மக்கள்.

கோட்டபாய அவர்கள் வரும்போது திடீரென வானத்தில் இருந்து அல்லது சந்திரமண்டலத்தில் இருந்து குதித்து வந்தாரா என்றே கேட்கத் தோணுகின்றது. ஏனெனில் இலங்கை சுதந்திரமடைந்து தமிழ் மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுக் கொண்டிருந்ததன் காரணமாகத் தான் சமஸ்டிக் கட்சி தமிழரசுக் கட்சி உருவாகி அகிம்சைப் போராட்டம் நடந்தது, அதற்கும் மேலாக இந்த நாட்டில் ஒரு இனப்பிரச்சனைன இருக்கிறது என்று உணர்ந்த காரணத்தினால் தான் பண்டா செல்வா ஒப்பந்தம், டட்லி செல்வா ஒப்பந்தம், 1982ம் ஆண்டு மாவட்ட அபிவிருத்திச் சபைகள், 1984ம் ஆண்டு திம்புப் பேச்சுவார்த்தை, 1987ல் இலங்கை இந்திய ஒப்பந்தம், அதனைத் தொடர்ந்து சந்திரிக்காவினால் கொண்டுவரப்பட்ட பிராந்தியங்களின் ஒன்றியங்கள், ரணில் விக்கிரமசிங்கவின் காலத்தில் இடம்பெற்ற போர்நிறுத்த ஒப்பந்தத்துடன் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் இன்னும் பல வெளிநாடுகள் சம்மந்தப்பட்ட ஒப்பந்தங்கள் எல்லாம் இங்கு கொண்டு வரப்பட்டது, அவை நிறைவேற்றப்படாமல் போனதெல்லாம் எதற்காக?

தமிழரசுக் கட்சி உருவாகி எமது உரிமைகளைப் பெறுவதற்கு அகிம்சை ரீதியில் பல போராட்டங்களை நடத்தி அடி உதை வாங்கி தமிழர்களுக்கான தீர்வு பிரிந்து செல்வதற்கான தீர்வு என்பதைத்தான் வட்டுக்கோட்டைத் தீர்மானம் மூலமாக பல சகாப்தமாக கீரியும், பாம்புமாக இருந்து ஒன்றாகிய அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ், தமிழரசுக் கட்சி, தொண்டமான் போன்றவர்கள் ஒன்று சேர்ந்தார்கள். இது ஐக்கியத்தின் உறுதிப்பாடு.

இந்த வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையிலே தமிழ் மக்கள் உறுதியாக ஐக்கியப்பட்டார்கள். 1977ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலிலே வடக்கு கிழக்கிலே ஒரே ஒரு தொகுதியைத் தவிர அனைத்துத் தொகுதிகளிலும் தமிழீழத்திற்கான ஆணையை தமிழ் மக்கள் ஒன்றிணைந்து கொடுத்தார்கள்.

இதனைப் பார்த்துப் பயந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தன அரசு அதிகாரமற்ற அதிகாரப் பகிர்வு என்ற ரீதியல் மாவட்ட அபிவிருத்திச் சபைகளை உருவாக்கினார். அதன் மூலமாக எங்களுக்கான தீர்வு கிடைக்கவில்லை. தொடர்ச்சியாக எங்களது குரல் ஓங்கிக் கொண்டிருந்த நேரத்தில் 1983ம்ஆண்டு பாரிய இனக்கலவரம் ஏற்படுத்தப்பட்டது. அகிம்சைப் போராட்டத்தில் வெறுப்படைந்து ஆயுதம்தான் முடிவு என்று போராட்ட இயக்கங்கள் உதித்துக் கொண்டிருந்த நேரம் ஏற்பட்ட இனக்கலவரமும் இந்தப் போராட்ட இயக்கங்களை விஸ்வரூபம் எடுக்க வைத்தது.

அந்த நேரத்திலே இந்;தியா எமக்கு உதவி செய்தது. ஆயுதப் போராட்டம் ஓங்கிக் கொண்டிருந்த காலகட்டத்தில் மீண்டும் ஒரு பேச்சுவாhத்தை. திம்புப் பேச்சுவார்த்தை திம்புப் பேச்சுவார்த்தையிலும் ஐந்து முன்னணிப் போராட்ட இயக்கங்களும், தமிழர் விடுதலைக் கூட்டணியும் ஒரு உறுதியான நிலைப்பாட்டை எடுத்திருந்தார்கள். உறுதியான ஐக்கியமொன்று கட்டியெழுப்பட்டது. அந்த ஐக்கியம் குழப்பப்பட வேண்டும் என்று சர்வதேசம் கங்கணம் கட்டியது. நாங்கள் உறுதியாக, ஐக்கியமாக இருந்திருக்கின்றோம். ஆனால் துரதிஸ்டவசமாக எமது ஐக்கியத்தைக் குழப்ப வேண்டும் என்ற சர்வதேசச் சதியினூடாக எமது ஐக்கியம் குழப்பப்பட்டது. தமிழர்கள் ஒரு துர்ப்பாக்கிய நிலைக்குள் தள்ளப்பட்டார்கள். மீண்டும் அந்த ஐக்கியம் 2001லே மலர்ந்தது. கடந்த கால கசப்பான சம்பவங்களை நாங்கள் நினைத்துக் கொண்டு ஒருநாள் புதைகுழிகளைத் தான் தோண்டிக் கொண்டிருக்க வேண்டும். அந்;தக் கசப்பான அனுபவங்கைளயெல்லாம் மறந்து 2001லே தமிழ்த் தேசியப் பரப்பிலே இருந்த மிதவாதக் கட்சிகளும், போராட்டக் கட்சிகளும் உறுதியான ஐக்கியத்துக்குள் கொண்டு வரப்பட்டன.

பின்னர் 2009 மே 18 வரை உறுதியாக ஐக்கியமாகத் தமிழ்த் தேசியப் பரப்பிலே இருந்த கட்சிகள் இன்று அந்த ஐக்கியத்தை இழந்து நிற்கின்றோம். இன்று 2009க்கு முன்னர் இருந்த நிலையை விட வடக்கு கிழக்கிலே மிக மோசமான நிலையிலே இருக்கின்றோம். எனவே அந்த ஐக்கியம் மீண்டும் ஏற்படுத்தப்பட வேண்டும்.

இதற்குப் பல காரணங்கள் உண்டு இன்று வடக்கு கிழக்கிலே எமது நிலம் பறிபோய்க் கொண்டிருக்கின்றன. மொழி உரிமை முற்றுமுழுதாக மீறப்பட்டிருக்கின்றது. உதாரணமாக அண்மையில் வவுனியா பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற சம்பவம் அனைவருக்கும் தெரியும். எமது வரலாற்று அடையாளங்கள் அழிக்கப்பட்டுக் கொண்டு வருகின்றன. கும்பிடுவதற்குப் புத்தர்கள் இல்லாத இடங்களிலெல்லாம் புத்தர் சிலை உருவெடுக்கின்றன. எங்கெங்கெல்லாம் உயர்ந்த மலைகள் இருக்கின்றனவோ அங்கெல்லாம் புத்தர் வந்து உட்காரும் ஒரு நிலைதான் தற்போது வடக்கு கிழக்கில் இருக்கின்றது. நினைவேந்தல்களுக்குத் தடை விதிக்கப்படுகின்றது.

அண்மையில் அமைச்சர் நாமல் அவர்கள் ஒரு அறிக்கை விட்டிருக்கின்றார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் மக்கள்; விடுதலை முன்னணிக்கும் பெரிய வித்தியாசம் இல்லையென்று. ஆனால் தற்போது என்ன நடக்கின்றது. மக்கள் விடுதலை முன்னணி தங்கள் தலைவரையும் மறைந்த உறுப்பினர்களையும் நினைவு கூருவதற்கு எந்தத் தடையும் இல்லை. ஆனால வடக்கு கிழக்கிலே பொதுமக்களைக் கூட நாங்கள் நினைவு கூர முடியாத ஒரு நிலையிலே இருக்கின்றோம்.

ஒரு நாடு ஒரு சட்டத்தின் மூலம் மாகாண சபைகளைக் கூட அகற்ற வேண்டும் என்ற நிலைப்பாடு இருக்கின்றது. மாகாணசபைகள் இருந்தால் அவற்றுக்கான நியதிச் சட்டங்களை அவர்களே உருவாக்கும் நிலை இருக்கின்றது. அப்படியாயின் ஒரு நாடு ஒரு சட்டம் அங்கு தோற்றுப் போகும். இந்த நிலையில் நாங்கள் ஐக்கியப்பட வேண்டும்.

எமது மறைந்த தலைவர் சிறி சபாரெத்தினம் அவர்கள் முன்னர் ஒரு தடவை குறிப்பிடுகையில், இலங்கையின் விடுதலைப் போராட்டம் இந்தியாவின் பாதுகாப்புடன் பின்னிப் பிணைந்திருக்கின்றது என்று சொன்னார். இன்று அது யதார்த்தமாகவும், நிதர்சனமாகவும் இருக்கின்றது. ஆனால் நாங்கள் இன்று தேர்தல் அரசியலுக்காக பிரிந்து நிற்கின்றோம்.

இன்று ஆறு கட்சிகளின் கூட்டம்  நடைபெறுகின்றது. ஆனால் ஐந்து கட்சிகள் தான் இன்று மேடையில் இருக்கின்றன. ஆறு கட்சிகள் ஒன்றிணைந்து 13வது திருத்தத்தை முழுமையாக அழுல்ப்படுத்த வேண்டும் என்று இந்தியப் பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ளன. இலங்கை இந்திய ஒப்பந்தம் உருவாக்கப்பட்ட போது மாகாணசபைகள் தொடர்பில் அமுல்ப்படுத்தப்பட்ட சரத்துக்கள் அனைத்தும் உள்வாங்கப்பட்டு மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று கடிதம் வரைந்துள்ளோம். ஏனெனில் இலங்கை இந்திய ஒப்பந்தம் எங்களுக்கு இறுதித் தீர்வு என்று ஒரு போதும் நாங்கள் சொல்லவில்லை.

நாங்கள் தனி ஈழத்திற்காகப் போராடியவர்கள். புலிகள் தமிழீழத்திற்காகப் போராடவில்லை தமிழர் தேசத்தை அங்கீகரிப்பதற்காகப் போராடியவர்கள் என்று சொல்கிறார் கஜேந்திரன் அவர்கள். புலிகளின் வாசகமே புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் என்பதுதான் அதுகூட அவருக்குத் தெரியாமல் இருக்கின்றது.

ஆனால் நாங்கள் இலங்கை இந்திய ஒப்பந்தத்தை முற்றமுழுதாக அமுல்ப்படுத்தக் கோருவது தற்போது இருக்கும் எமது பிரதேசத்தையாவது நாங்கள் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே. 2009 வரை தமிழீழம் தான் எமது இலக்கு, தமிழீழத்தை அடைய வேண்டும் என்பதற்காக அதற்கு முன் வந்த எத்தனையோ சந்தர்ப்பங்களை நாங்கள் தவறவிட்டிருக்கின்றோம். அவையெல்லாம் எமது கடந்த கால அனுபவங்கள்.

எங்களை நாங்களே ஆழ வேண்டும், சுயநிர்ணய உரிமையுடன் நாங்கள் வாழவேண்டும், எமது பிரதேசஙம் எங்களுக்குத் தேவை என்பது எமது இறுதி இலக்கு. ஆனால் அதுவரை எமது இருப்பை நாங்கள் தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.

கிழக்கு மாகாணத்திலே குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப் புறங்களில் சிங்களவர்கள் குடியேற்றப்படுகின்றார்கள். அங்கு தமிழர்களின் குடிப்பரம்பல் குறைக்கப்படுகின்றது. கிழக்கு மகாணத்தில் அம்பாறை, திருகோணமலை மாவட்டத்தில் இருந்து மாகாணசபைகளுக்கு பெரும்பான்மையாக சிங்கள உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படும் போது மட்டக்களப்பில் மாத்திரமே சிங்களப் பிரதிநிதிகளைத் தெரிவு செய்ய முடியாத நிலை இருக்கின்றது. எதிர்வரும் காலங்களில் இருபதாயிரத்திற்கு மேல் சிங்கள வாக்காளர்களை அங்கு கொண்டு வருவதற்காக கிழக்கு மாகாண ஆளுநர், பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர ஆகியோரின் வழிகாட்டலில் எல்லைப் புறங்களில் மர முந்திரிகை என்றும், சேனைப்பயிர்ச் செய்கை என்றும் எங்களது பண்ணையாளர்களின் மேய்ச்சற் தரைகள் கபளீகரம் செய்யப்படுகின்றன.

எனவே இவற்;றைத் தடுப்பதாக இருந்தால் மாகாணசபை உருவாக்கப்படும் போது இருந்த காணி அதிகாரங்கள் முற்றுமுழுதாக அமுல்ப்படுத்தப்பட்டு மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும் போதே நாங்கள் இவற்றைத் தடுத்து நிறுத்த முடியும். இவற்றைக் கருத்திற்கொண்டு நாங்கள் ஓரணியில் சேரும் போது அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் 13வது திருத்தத்தைச் சவப் பெட்டிக்குள் வைத்துத் தூக்குகின்றார்கள்

இந்த நேரத்திலாவது தமிழ் மக்கள் ஒற்றுமைப்படாவிட்டால் எதிர்காலத்தில் எங்கள் இருப்பு என்னவாகும் என்பதை இவர்கள் யோசித்துப் பார்க்க வேண்டும். ஆயுதப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, இலங்கை இந்திய ஒப்பந்தம் உருவாகும் போது இவர்கள் சிறுவர்கள். இவர்கள் ஆயுதப் போராட்டத்தில் பங்குபற்றவும் இல்லை, உத்வேகம் கொடுக்கவும் இல்லை. தற்போது கஜேந்திரகுமார் சொல்லுகின்றார் இலங்கை இந்திய ஒப்பந்தம் ஆயுதப் போராட்த்தைக் கொச்சைப்படுத்துவதென்று.

இலங்கை இந்திய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட போது அதனுடாக ஏற்படுத்தப்பட்ட அதிகாரங்கள் எங்களுக்குப் போதாது என்று தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி கடிதம் எழுதியது. நாங்கள் ராஜீவ் காந்தி அவர்களை நேரடியாகவும் சந்தித்துப் பேசியிருக்கின்றோம். இலங்கை இந்திய ஒப்பந்தம், 13வது திருத்தச்சட்டம், மாகாணசபை முறைமை எங்களுக்கு இறுதித் தீர்வல்ல. எங்களது இறுதித் தீர்வு எங்கோ இருக்கின்றது. நாங்கள் அதை அடைவதற்கு ஒற்றுமையாக, ஐக்கியமாக, ஓரணியாக போரட வேண்டும் என்பதே எங்களது வேண்டுகோள் என்று தெரிவித்தார்.

 

Posted in Uncategorized

ஜெனீவா அமர்வில் தென்னாபிரிக்காவின் ஆதரவை கோரியது இலங்கை

தென்னாபிரிக்காவிற்கான இலங்கை தூதுவர் சிறிசேன அமரசேகர, தென்னாபிரிக்க அதிகாரிகளுடனும் நமீபியா, சிம்பாப்வே, மலாவி உள்ளிட்ட நாடுகளின் அதிகாரிகளுடனும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.

இந்த பேச்சுவார்த்தைகளின் போது, வெளிதரப்பினரால் திணிக்கப்படும் பொறிமுறைகளை விட உள்நாட்டு மோதல்களிற்கு தீர்வை காண்பதற்கு உள்நாட்டு பொறிமுறைகளின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தியுள்ளார்.

மோதலின் பின்னர் இலங்கை அரசாங்கம் பாதிக்கப்பட்ட மக்களிற்கு நிவாரணத்தை வழங்குவதற்காக அனைத்தையும் செய்துள்ளது என தெரிவித்துள்ள தூதுவர், தேவையற்ற சர்வதேச அழுத்தங்கள் காரணமாக அரசாங்கம் தன்னிடம் உள்ள சிறியஅளவு வளங்களை தியாகம் செய்வதற்கும் தற்பாதுகாப்பு நிலையில் செயற்படுவதற்கும் தள்ளப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சர்வதேச தரப்பினர் தமிழர் விவகாரங்களில் நேர்மையான அக்கறை கொண்டிருந்தால் அவர்கள் பாதிக்கப்பட்ட மக்களிற்கு நிவாரணத்தை வழங்கும் அரசாங்கத்தின் முயற்சிகளிற்கு உதவவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

சம்மந்தப்பட்ட தரப்பினர் தங்களின் தவறுகளை திருத்திக்கொள்ளாவிட்டால் பொறுப்புக்கூறல் என்பது அர்த்தமற்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆதாரமற்ற இட்டுக்கட்டப்பட்ட கதைகளில் தங்கியிருக்காமல் பரந்த கண்ணோட்டத்தில் இந்த பிரச்சினையை பார்க்குமாறு அவர்அழைப்பு விடுத்துள்ளார்.

அம்பிகா சற்குணநாதன் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்துள்ளார்.

பயங்கரவாத தடை சட்டத்தை திருத்தும் சட்டமூலம் இலங்கையின் அரசியலமைப்பின் 3, 4, 11, 12(1), 13(1), 13(3), 13(4), 13(5), 138 அல்லது 141 ஆகிய சட்டங்களுக்கு முரணானது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை தற்போது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பயங்கரவாத தடை சட்டத்தை திருத்தும் சட்ட மூலத்தை சவாலுக்கு உட்படுத்தி பாக்கியசோதி சரவணமுத்தூவினாலும் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அம்பிகா சற்குணநாதன் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அல்லது பொதுசன வாக்கெடுப்பு இன்றி இதை சட்டமாக இயற்ற முடியாது என சுட்டிக்காட்டி அவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

சர்வதேச உதவியை நாடினால் விளைவுகளுக்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் – கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை

சர்வதேச உதவியை நாடினால், இலங்கை அனுபவிக்க வேண்டிய விளைவுகளுக்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை எச்சரிக்கை விடுத்துள்ளார்.வத்திக்கானுடன் இணைந்து ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு நீதியை பெற்றுக்கொள்ள இலங்கை கத்தோலிக்க திருச்சபை நடவடிக்கை எடுத்துவருகின்றது.குறித்த நடவடிக்கை மூடிய கதவுகளுக்குப் பின்னால் இடம்பெறுவதாக கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

சட்டமா அதிபர் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோரின் கடமைகள் அரசியல்வாதிகளை திருப்திப்படுத்துவது அல்ல என்றும் ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாமல் இருப்பதற்கு அவர் கண்டனம் வெளியிட்டார்.

அரசியல் குறிக்கோள்களில் வித்தியாசமில்லை: அவற்றை அடையும் மார்க்கம் பற்றியே தமிழ் கட்சிகளுக்குள் முரண்பாடு – சி.வி.

அரசியல் குறிக்கோள்களில் வித்தியாசமில்லை என்றும் அவற்றை அடையும் மார்க்கம் பற்றியே தமிழ் கட்சிகளுக்குள் முரண்பாடு உள்ளதாக சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

யாழில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற கருத்தரங்கு ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “சென்ற வாரம் இந்தியப் பத்திரிகையொன்றின் இலத்திரனியல் ஊடகத்திற்கு ஒரு பேட்டி அளித்தேன். அங்கு நான் கூறிய ஒரு விடயம் பத்திரிகைகளில் வெளிவரவில்லை. அதனை இப்பொழுது
உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன்.

இதுகாறும் பிரிந்து நின்ற ஆறு கட்சிகளும் எவ்வாறு ஒருமித்து அந்தக் கடிதத்தை பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுத முடிந்தது என்று செவ்விகண்டவர் என்னிடம் கேட்டார்.

அதற்கு நான், எமது அரசியல் குறிக்கோள்களைப் பொறுத்தவரையில் எமக்குள் அதிகம் வித்தியாசம் இல்லை என்றேன். அவற்றை அடையும் மார்க்கம் பற்றியே எமக்குள் முரண்பாடுகள் உண்டு என்றேன். அதை விளக்குமாறு கோரப்பட்ட போது, நான், எமது தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்துமே ‘ஒற்றையாட்சி வேண்டாம் சமஷ்டி ஆட்சி முறையே வேண்டும்’ என்று தான் கோரி வருகின்றோம் என்றேன்.

எமது தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஒருபடி மேலே போய் கூட்டு சமஷ்டியை எமது குறிக்கோளாகக் குறிப்பிட்டுள்ளோம் என்றேன். ஆகவே எமது குறிக்கோள் ஒன்றே அதனை அடையும் விதத்தில் எமக்குள் வேற்றுமைகள், வித்தியாசங்கள், முரண்பாடுகள் உண்டு என்றேன். நான் அங்கு கூறியதை இங்குள்ள அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்புகின்றேன். ஏதோ காரணத்திற்காக செவ்வி கண்டவர் இக்கேள்வியையும் பதிலையும் தணிக்கை செய்துவிட்டார்.

ஆகவே முக்கியமான ஒரே குறிக்கோளை வைத்திருக்கும் எமது ஆறு கட்சிகளும் இன்று இந்த கருத்தரங்கத்தை ஒருமித்து நடத்துவதில் வியப்பொன்றுமில்லை” என அவர் மேலும் தெரிவித்தார்.

Posted in Uncategorized