புதிய அரசியலமைப்பில் மாகாண சபை முறைமைகள் இருக்காது – சுரேஸ்

புதிய அரசியலமைப்பில் மாகாண சபை முறைமைகள் இருக்காது எனவே தாம் எதிர்பார்ப்பதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழில் இன்று இடம்பெற்ற அனைத்து தமிழ் கட்சிக் கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எம்மிடம் இருக்கின்ற சிலவற்றை காப்பாற்ற நினைக்கும்போது அரசாங்கம் தமிழ் மக்களிடம் உள்ள எல்லாவற்றையும் பறிக்க முயற்சி செய்கின்றது என குற்றம் சாட்டினார்.

இதன் காரணமாகவே 13 ஆவது திருத்தம் வேண்டும் என இந்தியாவிடம் தமிழ் கட்சிகள் ஒன்றாக இணைந்து கோரிக்கை விடுத்தன என்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

ஆகவே, இருப்பை தக்க வைப்பதற்கு 13வது திருத்தம் அவசியமே அன்றி அது ஒருபோதும் தீர்வாகாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இரண்டு அரசியல் கட்சி சின்னங்களை நீக்கியது தேர்தல்கள் ஆணைக்குழு !

அரசியல் கட்சிகளுக்கு ஒதுக்கப்படாத சின்னங்களின் பட்டியலில் இருந்து இரண்டு சின்னங்கள் நீக்கப்பட்டுள்ளன.

மேற்படி பட்டியலில் இருந்து கிரீடம் மற்றும் விவசாயி ஆகிய சின்னங்கள் நீக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு வர்த்தமானி மூலம் அறிவித்துள்ளது.

இரண்டு சின்னங்களும் தேசிய சின்னங்களுக்கு ஒத்ததாக இருப்பதால் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக ஆணைக்குழுவின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

இதனை அரசியல் கட்சிக்கு சின்னமாக ஒதுக்க கூடாது என்றும், எதிர்காலத்தில் எந்த அரசியல் கட்சியும் இதனை பயன்படுத்த அனுமதிக்கப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

மாபெரும் போராட்டத்திற்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் அழைப்பு!

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் எதிர்வரும் 20ஆம் திகதி மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

கிளிநொச்சியில் இன்று (புதன்கிழமை) காலை 11.30 மணியளவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க தலைவி யோகராசா கனகரஞ்சினி இந்த அழைப்பினை விடுத்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “வடக்கு – கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் தொடர் போராட்டத்தினை ஆரம்பித்து எதிர்வரும் 20ஆம் திகதி ஐந்து ஆண்டுகள் ஆகின்றது. இலங்கை அரசிடம் தீர்வு கோரி கிடைக்காத நிலையில் சர்வதேசத்திடம் நீதி கேட்டு நாங்கள் போராடி வருகின்றோம்.

இந்த நிலையில் குறித்த நாளன்று மாபெரும் பேரணி ஒன்றினை மேற்கொள்வதற்கு நாங்கள் திட்டமிட்டுள்ளோம். அன்றைய தினம் கடந்த காலங்களில் நாங்கள் போராட்டங்களை மேற்கொள்கின்றபோது இருந்த ஒத்துழைப்புக்களை போன்று கிராம மட்ட அமைப்புக்கள், வர்த்தக சங்கங்கள், முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கம், தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம், தமிழ் தேசியத்தை நேசிக்கனிறவர்கள், அரசியல்வாதிகள், அரசியலிற்கு அப்பால் நின்று செயற்படுகின்றவர்கள் என அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை இந்த ஊடகங்கள் வாயிலாக முன்வைக்கின்றோம்.

வடக்கு கிழக்கில் இருக்கின்ற அனைத்து தரப்பினரும் இந்த அழைப்பினை ஏற்று குறித்த தினத்தில் இடம்பெறும் மாபெரும் பேரணியில் கலந்துகொண்டு ஆதரவினை வழங்க வேண்டும்” என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

Posted in Uncategorized

இலங்கை அரசை கண்டித்து ராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட முடிவு

இலங்கை அரசை கண்டித்தும், கடற்றொழிலாளர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்றுத்தர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் வரும் 21ஆம் திகதி முதல் தங்கச்சி மடத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.இலங்கை கடற்படையினரின் தொடர் பிரச்சினை காரணமாக ராமேஸ்வரம், தங்கச்சிமடம், மண்டபம், பாம்பன் பகுதிகளைச் சேர்ந்த பெரும்பாலான மீனவர்கள் மீன்பிடி தொழில் தேடி அண்டை மாநிலங்களுக்குச் சென்றதால் மீன்பிடி தொழிலாளர்கள் இன்றி விசைப்படகுகள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த பிரச்சினை குறித்து நேற்று (திங்கட்கிழமை) தங்கச்சிமடம் சூசையப்பர் கோயில் வளாகத்தில் ராமேஸ்வரம் மீனவர்கள், மீன்பிடி தொழிலாளர்கள் என சுமார் 50க்கும் மேற்பட்டோர் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினர்.இதன்போதே, எதிர்வரும் 21ஆம் திகதி தங்கச்சிமடத்தில் தொடர் உண்ணாவிரதப்போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதேவேளை நாளை முதல் ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் காலவரையறையற்ற பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபடவும் தீர்மானம் நிறைவேற்றினர்.மீனவர்களின் இந்த காலவரையறையற்ற பணிப்புறக்கணிப்புப் போராட்டம் காரணமாக ராமேஸ்வரத்தில் உள்ள 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடற்கரை நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன.

மீனவர்களின் போராட்டங்கள் காரணமாக ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சுமார் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட மீனவர்கள் நேரடியாகவும் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட மீன் பிடி சார்பு தொழிலாளர்களும் வேலை இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் எதிர்வரும் 21ஆம் திகதி முதல் தங்கச்சி மடத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.

பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைதானவர் 12 வருடங்களின் பின் விடுதலை!

12 வருடங்களுக்கு முன்னர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட யாழ்ப்பாணம் – கரவெட்டியை சேர்ந்த ஒருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில், நீதவான் சந்திம லியனகேவினால் இவர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு கொழும்பில் நிதி சேகரித்து வழங்கிய குற்றச்சாட்டில் 2010ஆம் ஆண்டில் கந்தப்பு ராஜசேகர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாமையால், அவரை விடுதலை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Posted in Uncategorized

அரசாங்கம் ஊடக சுதந்திரத்தின் மீது கை வைக்கக்கூடாது – ரஞ்சித் மத்தும பண்டார

அரசாங்கம் ஊடக சுதந்திரத்தின் மீது கை வைக்கக்கூடாது என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளர் சோ.கணேசமூர்த்தி தலைமையில் மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள இராசமாணிக்கம் மண்டபத்தில் இன்று (செவ்வாய்கிழமை) நடைபெற்ற கட்சி ஆதரவாளர்களுடனான ஒன்றுகூடலின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “நாட்டுக்கு ஒரு நேர்மையான அரசியல் தலைவரைத் தெரிவு செய்யவேண்டும். அரசாங்கத்தின் சொத்துக்களைச் சூறையாடுகின்றவர்களை நாங்கள் வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.

நாட்டின் ஆட்சியை அமைக்கின்ற செல்வாக்கும் தகுதியும் சஜித் பிரேமதாஸவுக்குத்தான் உள்ளது. அவரால்தான் உறுதியான ஆட்சியை நிறுவ முடியும்.

இந்நாட்டிலுள்ள அனைத்து மக்களையும் இணைத்துக்கொண்டு புதிய திட்டங்களினூடாக பயணிப்பதற்கு எமது கட்சியின் உயர்பீடம் திட்டம் தீட்டியுள்ளது.

இதில் அனைத்து மக்களையும் அரவணைத்துச் செல்கின்ற கொள்கை ரீதியான வேலைத்திட்டங்களை நாம் இணைத்துள்ளோம்.

நாட்டில் தற்போது ஊடகத்துறைக்கு ஒரு அச்சமான நிலைமை ஏற்பட்டுள்ளது. அரசு செய்யும் பிளைகளைச் சுட்டிக்காட்டுகின்றபோது ஊடகங்களைப் பயம் காட்டுகின்றார்கள். நேற்றையத்தினம் ஊடகவியலாளர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளனார். எந்த அரசாங்கமாக இருந்தாலும் அவர்கள் விடும் தவறுகளைச் சுட்டிக்காட்ட வேண்டியது ஊடக தர்மமாகும். அதனைக் காப்பாற்ற வேண்டியது யார். தேசிய பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் என ஆட்சிக்கு வந்த ஜனாதிபதியால் உறுதியளிக்கப்பட்டது. அது இன்று நடைபெறவில்லை.

ஊடகவியலாளர் ஒருவர் சுதந்திரமாக செயற்பட முடியாதுள்ளது. இதனைப் பாதுகாகக்க வேண்டியுள்ளது. இவ்வாறு நடைபெறுகின்ற அனைத்து செயற்பாடுகளுக்கும் அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும்.

கடந்த காலங்களில் ஏற்படுத்தப்பட்ட குண்டு வெடிப்புச் சம்பவங்களைக் காரணம்காட்டி ஆட்சிக்கு வந்த அரசாங்கம், அது தொடர்பாக நீதியான விசாரணைகளை முன்னெடுக்கத் தயங்குகின்றது.

எனவே, ஊடக சுதந்திரம் உள்ளிட்ட அனைத்தையும் பாதுகாக்க வேண்டிய கடப்பாடு அனைவருக்கும் உள்ளது. அரசாங்கம் ஊடக சுதந்திரத்தின் மீது கைவைக்கக்கூடாது” என அவர் இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

துப்பாக்கி முனையில் கைதிகள் அச்சுறுத்தல்: விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவு

அனுராதபுர சிறைச்சாலை சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க பொலிஸ்மா அதிபருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அநுராதபுரம் சிறைச்சாலைக்கு விஜயம் செய்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, இரண்டு கைதிகளை மண்டியிடுமாறு துப்பாக்கி முனையில் அச்சுறுத்தினார்.

இந்த சம்பவம் தொடர்பாக 08 கைதிகள் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்குவந்த போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

முன்னதாக, சட்டமா அதிபரின் ஆலோசனையுடன் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்துமாறு பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை வழங்கப்பட்டது.

ஆகவே கடந்த உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை குறித்த அறிக்கையை எதிர்வரும் ஆவணி 9 ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Posted in Uncategorized

சட்டமா அதிபரும் அரச ஊழியரே, அரச கைக்கூலி அல்ல – பொலிஸார் மற்றும் சட்டமா அதிபரை கடுமையாக சாடிய பேராயர்

அரசாங்கத்தின் சதிச் செயலை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார்.

மக்களை மிரட்டி உண்மைகளை நசுக்கும் முயற்சிகளுக்கு உரிய நேரத்தில் மக்கள் பதிலளிக்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

கைது தொடர்பான விடயத்தை சிவில் செயற்பாட்டாளர் ஷெஹான் மாலக்க வெளிப்படுத்தி இருக்கவிட்டால் அவர் வெள்ளை வானில் பலவந்தமாக அழைத்துச் செல்லப்பட்டதை நாடு ஒருபோதும் அறிந்திருக்காது என்றும் சுட்டிக்காட்டினார்.

பொதுமக்களை கைது செய்வதில் பொலிஸாரின் நடத்தை குறித்து கடுமையாக சாடிய கொழும்பு பேராயர், ஷெஹான் மாலக்கவின் கைது பட்டப்பகலில் நடந்த கடத்தல் என்றும் குற்றம் சாட்டினார்.

இத்தகைய செயற்பாடுகள் நாகரீகமற்றது மற்றும் ஒழுக்கக்கேடானது என குறிப்பிட்ட கொழும்பு பேராயர், சட்டமா அதிபரும் அரச ஊழியரே அன்றி அரச கைக்கூலி அல்ல என்றும் சாடினார்.

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக விசாரணை நடத்திய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த அவர் கடமைப்பட்டுள்ளார்.

ஆனால் பயங்கரவாத தாக்குதல்களுக்கு நீதி கோரி குரல் கொடுப்பவர்களை கைது செய்வதற்கான முயற்சிகளை சட்டமா அதிபர் மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டில் பிரச்சினைகளை தீர்க்க முடியாவிட்டால், சர்வதேசத்திடம் சென்று தீர்வை பெற்றுக்கொள்ள தயங்கமாட்டேன் என்றும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

Posted in Uncategorized

அரசாங்கம் வடக்கு மக்களுக்கும் மானியமுறையில் அரிசி, கோதுமை வழங்க வேண்டும்- சபா.குகதாஸ்.

வடக்கு மாகாணத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இதுவரை இழப்பீட்டு நிதி வழங்கப்படாத நிலையில் மானிய அடிப்படையிலாவது உணவுத் தேவைகளை பூர்த்தி செய்ய அரிசி , கோதுமை மா , சீனி, மண்ணெண்ணை வழங்க ஐனாதிபதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்

என்று தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் இளைஞர் அணித் தலைவரும் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினருமான சபா குகதாஸ்  தெரிவித்துள்ளார்.

இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையொன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,

வடக்கு மாகாணத்தில் விவசாயத்தையும் கடற்தொழிலையும் இவை சார்ந்த கூலித் தொழிலையும் வாழ்வாதாரமாக கொண்டு வாழுகின்ற ஒரு லட்சத்திற்கு அதிகமான அதிகமான குடும்பங்கள் வருமானங்கள் பாதிக்கப்பட்ட நிலையில் பல்வேறு சிரமங்களை எதிர் நோக்குகின்றனர்.

சீர் அற்ற காலநிலையாலும் இரசாயன உரம் இன்மையாலும் விவசாயிகள் நெல் விழைவு இல்லாது கடனாளிகளாகவும் சட்டவிரோத மீன்பிடி காரணமாகவும் எரிபொருள்(மண்ணெண்ணை) விலை ஏற்றம் காரணமாகவும் மீனவர்கள் வருமானம் இழந்துள்ளனர். இதனால் இத் தொழில்கள் சார்ந்த கூலித் தொழிலாளர்களும் வருமானம் இழந்துள்ளனர்.

ஆகவே வடக்கு மாகாணத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இதுவரை இழப்பீட்டு நிதி வழங்கப்படாத நிலையில் மானிய அடிப்படையிலாவது உணவுத் தேவைகளை பூர்த்தி செய்ய அரிசி , கோதுமை மா , சீனி, மண்ணெண்ணை வழங்க ஐனாதிபதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் அத்துடன் மாவட்ட செயலாளர்களும் அரசாங்கத்தின் கவனத்திற்கு விரைந்து கொண்டு செல்ல வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.

ஆட்சி மாற்றத்துக்கு மக்கள் தயாராக வேண்டும் – இராதாகிருஷ்ணன்

இந்த ஆட்சி தொடரும்வரை நாட்டில் பிரச்சினைகளும் தொடரும். எனவே, ஆட்சி மாற்றத்துக்கு மக்கள் தயாராக வேண்டும்.” என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

நுவரெலியாவில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர், ” நாட்டு மக்கள் தற்போது சொல்லொணாத் துயரங்களை அனுபவித்துவருகின்றனர். இதற்கு கொரோனா காரணம் அல்ல. ஏனெனில் எமது நாட்டில் மட்டும் கொரோனா பரவவில்லை. கொரோனாவால் பெரிதும் பாதிக்கப்பட்ட அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பொருளாதாரம் மேம்பட்டுள்ளது. ஊழல் ஆட்சி மற்றும் முறையற்ற முகாமைத்துவம் காரணமாகவே எமது நாடு முன்னேறாமல் உள்ளது.

குறிப்பாக சேதனை பசளையை நோக்கி நகரும் முடிவு ஓரிரவில் எடுக்கப்பட்டதாகும். இவ்வாறான முடிவுகள் நீண்டகாலத்தை அடிப்படையாகக்கொண்டு முறையாக எடுத்திருக்க வேண்டும். ஆனால் இங்கு என்ன நடந்தது? உலக சந்தையில் உர விலை குறைந்திருந்த சமயம், உர இறக்குமதிக்கு தடை செய்யப்பட்டது. தற்போது விலை அதிகரித்துள்ளது.  இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கம்பனிகள் இலாபம் அடைந்துள்ளன.

கொரோனா பெருந்தொற்று காலத்திலும் எமது தோட்ட மக்கள் தொழிலுக்குச்சென்றனர். பொருளாதாரத்துக்கு பங்களிப்புச்செய்தனர். ஆனால் பட்ஜட்டிலோ, ஜனாதிபதியின் சிம்மாசன உரையிலோ  எமது மக்களுக்கு எந்த அறிவிப்பும் விடுக்கப்படவில்லை. மானிய நிலையில் கோதுமை மாவ வழங்கப்படும் எனக் கூறப்பட்டது. தற்போது அதுவும் இல்லை.

இந்த அரசு தொடரும்வரை துன்பமும் தொடரும். இன்று ஈபிஎவ், ஈடிஎவ்பில் கை வைத்துள்ளனர். எனவே, மக்கள் இந்த அரசை விரட்டியடிக்க தயாராக வேண்டும். அப்போதுதான் நாட்டுக்கு விடிவு பிறக்கும்.” என்றார்.