தமிழக மீனவர்களை நாம் விரோதியாக பார்க்க கூடாது – சிவாஜிலிங்கம்

தமிழ் நாட்டு மீனவர்களும் இலங்கை மீனவர்களும் அடிபட்டு சாக வேண்டும் என்பதற்காகவே இலங்கை அரசாங்கம் மீனவர்களின் பிரச்சினைகளை தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கின்றனது, என தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

ஊரைக் கொளுத்தும் ராஜாவுக்கு கொள்ளிக்கட்டை கொடுக்கும் மந்திரி போல இங்கு ஒரு அமைச்சர் இருக்கின்றார், அவர் தான் டக்ளஸ் தேவானந்தா.

அவர் வருவார், என்ன செய்ய வேண்டுமென்றே அவருக்கு தெரியாது, அவர் கதைப்பதும் விளங்காது.

இந்த நிலைமையில் தான் நாம் இருக்கின்றோம். ஆகவே 2017 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட வெளிநாட்டு படகு ஒழுங்குபடுத்தல் சட்டம் மற்றும் இழுவை மடி தடைச் சட்டம் ஆகியவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும்.

தமிழக மீனவர்களை நாம் விரோதியாக பார்க்க கூடாது, ஒரு பிரச்சினைக்கு ஒரு தீர்வு உண்டு. அதை பயன்படுத்தி தீர்வைக் காண வேண்டும்.

எமக்கும் தமிழகத்துக்குமான உறவை அறுத்து விட அதிக எண்ணிக்கையான ஆட்கள் உள்ளனர்.

அன்று சந்திரிகா அம்மையார் கடலுக்குள் மீனவர்களை இறங்குவதற்கு தடை விதித்தார்.

அப்போது நான் மருத்துவமனையில் இருந்துஇ மாவை சேனாதிராஜா உள்ளிட்டோர் இணைந்து போராட்டத்தை முன்னெடுத்து வெற்றி பெற்றோம்.

டக்ளஸ் தேவானந்தா அண்மையில் யாழில் இடம்பெற்ற போராட்டத்தில் ஆவேசமாக செயற்பட்டார். அது கண்டிக்கத்தக்கது.

இதனால் யாழ்.கச்சேரிக்கு முன்பாக இடம்பெற்ற போராட்டம் மதியத்துடன் நிறைவுக்கு வந்தது.

இப்படி போராட்டங்கள் பல வழிகளிலும் குழப்புவதற்கு இப்படி போராட்டங்கள் பல வழிகளிலும் குழப்புவதற்கு முயற்சித்தனர்.

இதற்கு எதிராக நாம் தெளிவாக செயற்பட வேண்டும். திருமண வீட்டில் நான் தான் மாப்பிளை,  இறப்பு வீட்டில் நான் தான் பிணம் என்று திரிபவர் தான் டக்ளஸ் தேவானந்தா, என்றார்.

ஜெனிவாவில் மற்றொரு பிரேரணைக்கு பிரித்தானியா திட்டம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் மற்றுமொரு கடுமையான பிரேரணையைக் கொண்டு வருவதற்கு பிரித்தானியா தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தப் பிரேரணையை இறுதிக்கட்ட போரில் இடம்பெற்றவை எனக் கூறப்படுகின்ற பாரதூர மான மனித உரிமை மீறல்கள் குறித்த குற்றச் சாட்டுகளுக்கான பொறுப்புக்கூறலின் தாமத நிலை மற்றும் அண்மைய கால உரிமைகள் மீறல்கள் பற்றிய விடயங்களை உள்ளடக்கியதாக இருக்கும் என கொழும்பு இராஜதந்திர மட்டத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

பிரித்தானியா கொண்டு வரவுள்ள இந்த புதிய பிரேரணைக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பலவும் மேற்குலக நாடுகள் சிலவும் ஆதரவை தெரிவித்துள்ளன எனவும் அந்தத் தகவல்கள் குறிப்பிடுகின்றன. இவ்வாறானதொரு நிலையில் ஜெனிவாவில் ஏற்பட கூடிய நெருக்கடிகளை எதிர்கொள்வதற்கு அரசாங்கம் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றது.

இதனடிப்படையில் ஜெனிவா அமர்விற்கு முன்னர் முக்கிய சில ஐரோப்பிய நாடுகளுடன் கலந்துரையாடலை முன்னெடுக்க வெளிவிவகார அமைச்சர் ஜி. எல். பீரிஸ் தீர்மானித்துள்ளார். இந்த கலந்துரையாடல்களுக்கு சில நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளன என வெளிவிவகார அமைச்சின் முக்கியஸ்தர் ஒருவர் குறிப்பிட் டார்.

அண்மைய இந்திய விஜயத்தினை போன்று குறிப்பிட்ட சில ஐரோப்பிய நாடுகளுக்கு ஜெனிவா அமர்வுக்கு முன்னர் விஜயம் செய்தல் அல்லது மார்ச் மாதம் 3 ஆம் திகதி இலங்கை குறித்த அறிக்கை சமர்பிக்கப்படுவதற்கு முன்னர் குறித்த நாடுகளின் பிரதிநிதிகளைச் சந்தித்து ஒத்துழைப்புகளை பெற்றுக்கொள்ளல் போன்ற வழிமுறைகள் குறித்து இலங்கையின் இராஜதந்திர பணிக் குழாம் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

அதே சமயம் வெளிவிவகார அமைச் சர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் எதிர்வரும் 28 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட உள்ள ஐக் கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக ஜெனிவா செல்லவுள்ளார்.

மார்ச் 3 ஆம் திகதி மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை குறித்த எழுத்து மூலமான அறிக்கை சமர்பிக்கப்படஉள்ளது. இந்த அறிக்கையானது இலங்கைக்கு சவால் மிக்கதாகவே அமையும் எனவும் கருதப்படுகின்றது.

Posted in Uncategorized

கடன் ஒப்பந்தத்தை இறுதி செய்ய மீண்டும் இந்தியாவிற்கு செல்கின்றார் பசில் !

இந்தியாவினால் வழங்கப்படும் நிதியுதவி தொடர்பான ஒப்பந்தங்களை இறுதி செய்வதற்கு நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அடுத்த இரண்டு வாரங்களுக்குள் மீண்டும் இந்தியாவிற்கு விஜயம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிதியமைச்சர் அண்மையில் இந்தியாவுக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தியமை வெற்றியளித்துள்ளது என்றும் நாட்டிற்கு பயனுள்ள முடிவுகளை வழங்கியது என்றும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

இலங்கைக்கு 2.4 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்க இந்தியா உறுதி வழங்கியுள்ளது என்றும், அமைச்சர் பசில் ராஜபக்ஷ தனது கடந்த விஜயத்தின் போது இதற்கான அடித்தளத்தை உருவாக்கியதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும், உணவு மற்றும் மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்களை நாட்டிலிருந்து இறக்குமதி செய்வதற்காக இலங்கை முதலில் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை இந்தியாவிடம் இருந்து கடனாகப் பெறும் என ஜி.எல்.பீரிஸ் கூறினார்.

எனவே குறித்த கடன் தொடர்பான இறுதி ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்காக நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ அடுத்த இரண்டு வாரங்களுக்குள் மீண்டும் புதுடெல்லிக்கு செல்வார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கு 10 வெளிநாட்டு மொழிகளை கற்பிப்பதற்கு திட்டம்

இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கு 10 வெளிநாட்டு மொழிகளை கற்பிப்பதற்கான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த விடயம் குறித்து மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி மற்றும் ஆரம்பக்கல்வி, பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கல்விச் சேவைகள் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ், ஆங்கிலம், அரபு மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளுடன், ப்ரான்ஸ், ஸ்பெய்ன், ஜேர்மன், இத்தாலி, சீன மற்றும் ஜப்பான் முதலான நாடுகளின் மொழிகளைக் கற்கும் வாய்ப்பு மாணவர்களுக்கு ஏற்படுவதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, இணையவழி முறைமையில் இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் நிலைமை மிக மோசமாகிவிட்டது, ஆட்சி மாற்றமே உடனடி தேவை என்கின்றார் சந்திரிக்கா

இலங்கையின் இன்றைய நிலைமை மிகவும் மோசமான கட்டத்தில் உள்ளது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்தார்.

மக்கள் அனைவரும் பொறுமை இழந்துள்ளனர் எனவும், நாட்டில் அடுத்து என்ன நடக்கும் என்று தன்னால் கூற முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

தற்போதைய ஆட்சியால் நாடு சீரழிந்துள்ளது என்றும் நாடு மீண்டு எழ முடியாத நிலையில் நாட்டின் பொருளாதாரம் அதாள பாதாளத்தில் சென்றுள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

ஆட்சி மாற்றமே தற்போதைய உடனடித் தேவை என குறிப்பிட்ட சந்திரிகா குமாரதுங்க, ஜனநாயகத்தை நேசிக்கும் பிரதிநிதிகள் ஓரணியில் திரள வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.

அவ்வாறு இணையாவிட்டால் உலக வரைபடத்தில் இலங்கை இல்லாமல் போகும் நிலைமைதான் ஏற்படும் என்றும் சந்திரிகா குமாரதுங்க எச்சரித்தார்.

Posted in Uncategorized

மிச்செல் பச்லெட்டின் அறிக்கை அரசாங்கத்திடம் கையளிப்பு, வெள்ளிக்கிழமை வரை அவகாசம்

இலங்கையில் மனித உரிமைகள் நிலைமை குறித்த ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் மிச்செல் பச்லெட்டின் அறிக்கை இன்று இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்படவுள்ளது.

இதற்கான பதிலை வழங்குவதற்கு வெள்ளிக்கிழமை வரை அவகாசம் வழங்கப்படும் என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பேராசிரியர் ஜெயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

2009 இறுதிபோரின் போது இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் குற்றங்கள் தொடர்பான ஆவணங்ளை திரட்ட கடந்த ஆண்டு மார்ச் மாதம் இடம்பெற்ற அமர்வில் தீர்மானம் எட்டப்பட்டது.

இந்நிலையில் இந்த மாத இறுதியில் தொடங்கும் அதன் நாற்பத்தி ஒன்பதாவது அமர்வில் மிச்செல் பச்லெட் எழுத்து மூலமான அறிக்கையை சமர்ப்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் மனித உரிமைகள் ஆணையர் மிச்செல் பச்லெட்டின் அறிக்கையின் நகலை அரசாங்கம் இன்று பெற்றுக்கொள்ளும் என ஜெயநாத் கொலம்பகே கூறியுள்ளார்.

ஒத்த எண்ணம் கொண்ட நாடுகளின் ஆதரவுடன் தனது நிலைப்பாட்டை பாதுகாக்க இலங்கை தயாராகும் என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

அத்தோடு மனித உரிமைகள் நிலைமையை மேம்படுத்த உறுதியான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்துள்ளதால் இம்முறை கடினமானதாக இருக்காது என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

இருப்பினும் தற்போது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான சட்டமூலத்தில் உள்ள குறைகளை ஐரோப்பிய ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

வவுனியா பாரதிபுரம் கிராமத்தில் ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதனின் மக்கள் சந்திப்பு

வவுனியா பாரதிபுரம் கிராமத்தில் அபிவிருத்தி தொடர்பான மக்கள் சந்திப்பு இன்று காலை இடம்பெற்றிருந்தது.

இதன்போது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தலைவர் க. யோகராசா,ரெலோ மத்திய குழு உறுப்பினரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான செ. மயூரன் மற்றும் உதவி பிரதேச செயலாளர் உட்பட்ட அரச அதிகாரிகளும் இதன்போது கலந்துகொண்டிருந்தனர்.

இந்நிலையில் கிராமத்தின் பல்வேறு தேவைகள் குறித்து இதன்போது கிராம மக்களினால் கோரிக்கைகள் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அரச அதிகாரிகளிடம் முன்வைக்கப்பட்டிருந்தது.

உடனடியாக தீர்க்க கூடிய விடயங்கள் மற்றும் அமைச்சு மட்டத்தில் செயற்படுத்த வேண்டிய விடயங்கள் தொடர்பில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்திருந்த நிலையில் பிரதேச சபையினூடாக செயற்படுத்தும் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

கொலைக் குற்றவாளியே நாட்டின் ஜனாதிபதி – காணாமல் போனவர்களின் உறவுகள் கொந்தளிப்பு

ஜனாதிபதியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை காவல்துறை தடுத்து நிறுத்தியமையால் வவுனியா மன்னார் பிரதான வீதியில் பதட்டமான சூழல் ஏற்பட்டிருந்ததுடன், காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டது.

வவுனியா பல்கலைகழகத்தின் ஆரம்பவிழா நிகழ்வில் இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ அதிதியாக கலந்து கொண்டிருந்தார்.

இதனையடுத்து, ஜனாதிபதியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைகழகத்திற்கு முன்பாக காணாமல் போனவர்களின் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆர்ப்பாட்டம் இடம்பெறவிருந்த குறித்த பகுதிக்கு செல்ல முற்பட்ட காணாமல் போனவர்களின் உறவினர்களை பம்பைமடு இராணுவ சோதனைசாவடியில் குவிக்கப்பட்டிருந்த காவல்துறையினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் வழிமறித்து முன்செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆர்ப்பாட்டக் காரர்களுக்கும் காவல்துறையினருக்கு இடையில் முரண்பாடு ஏற்பட்டதுடன், குழப்பநிலை ஏற்பட்டது.

எமது உறவுகள் காணாமல் போகவில்லை. காணாமல் ஆக்கப்பட்டார்கள். நாங்கள் இந்த நாட்டின் பிரஜை இல்லையா, நடமாடுவதற்கான சுதந்திரம் எமக்கில்லையா, எங்களை மட்டும் எப்போதுமே எதற்காக தடுக்கிறீர்கள் நாங்கள் பயங்கரவாதிகளா, எமக்கு எப்போதுமே கம்பிவேலி பிரயோகம் தானா? என்று காவல்துறையினருக்கு பார்த்து அவர்கள் கேள்வி எழுப்பினர்.

கொலைக் குற்றவாளியே நாட்டின் ஜனாதிபதியாக இருக்கிறார். அவர்களை நம்பியே நாம் எமது பிள்ளைகளை ஒப்படைத்தோம். எனவே அவரிடம் நாம் சில கேள்விகளை கேட்க வேண்டும். அதற்கு அனுமதி வழங்குமாறு போராட்டக்காறர்கள் தெரிவித்தபோதும் அதனை பொருட்படுத்தாத காவல்துறையினருக்கு அவர்களை முன்செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் குறித்த பகுதியில் பதட்டமான சூழல் ஏற்பட்டிருந்தது.

இதனையடுத்து ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள் குறித்த போராட்டக்காரர்களுடன் கலந்துரையாடியதுடன் இருவரை மாத்திரம் வந்து ஜனாதிபதியை சந்திக்குமாறு கோரினர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவர்கள் நாம் அவரை சந்திக்க வரவில்லை எங்கள் அனைவரையும் முன்செல்ல அனுமதிக்குமாறு கோரியதுடன் கொலை குற்றவாளி எப்படி நீதிபதியாக மாறமுடியும் என்றனர்.

இருமணி நேரத்திற்கும் மேலாக குறித்த பகுதியில் காவல்துறையினருக்கு மற்றும் விசேட அதிரடிப்படையினர் அவர்களை வழிமறித்து முன்செல்ல முடியாதவாறாக நின்றனர். இந்நிலையில் போராட்டக்காரர்கள் திரும்பி சென்றனர்.

இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக ஜூலி சங் நியமனம்

இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக ஜூலி சங் நியமிக்கப்பட்டுள்ளார்.

தென்கொரியாவில் பிறந்த இவர், கம்போடியாவின் புனோம் பென் நகரில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் துணைத் தலைவராகவும் தாய்லாந்தின் பேங்கொக்கில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் பொருளாதார ஆலோசகராகவும், கொலம்பியா, வியட்நாம் மற்றும் ஜப்பானில் உள்ள அமெரிக்க தூதரகங்களிலும், சீனாவின் குவாங்சோவில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்திலும் பணியாற்றியுள்ளார்.

ஈராக்கின் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இடைநிலை ஒருங்கிணைப்பாளருக்கு சுங் தலைமை பணியாளராகவும் பணியாறியுள்ளார்.

இந்நிலையில் இலங்கையின் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள இவர், மாலைதீவுக்கான தூதுவராகவும் பணியாற்றவுள்ளார்.

தேசிய பல்கலைக்கழகமாக வவுனியா வளாகம் திறந்து வைப்பு!

பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டிருந்த வவுனியா வளாகம், “வவுனியா பல்கலைக்கழகம்” என்ற பெயரில் தேசிய பல்கலைக்கழகமாக அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று (11) இடம்பெற்றது.

இதன்படி, இந்நாட்டின் 17ஆவது அரச பல்கலைக்கழகமாக “வவுனியா பல்கலைக்கழகம்” வரலாற்றில் இடம்பிடித்திருக்கிறது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துடன் இணைந்த பிரயோக விஞ்ஞான பீடம், வர்த்தக பீடம் மற்றும் ஆங்கில மொழிப் பிரிவு ஆகியவற்றை உள்ளடக்கிய வவுனியா வளாகம், 1997ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டது.
இந்த வவுனியா வளாகத்தை தேசிய பல்கலைக்கழகமாக மாற்றுமாறு, மாணவர்கள் மற்றும் பேராசியர் குழாமினால் நீண்ட காலமாகக் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

இதனைக் கருத்திற்கொண்ட தற்போதைய அரசாங்கம், “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்தின் பிரகாரம் உயர்க் கல்வியை மேம்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ், விரிவுரை மண்டபங்கள், பீடங்களுக்கான கட்டிடங்கள், விளையாட்டு மைதானம் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் கூடிய பல்கலைக்கழகமாக “வவுனியா பல்கலைக்கழகம்” அபிவிருத்தி செய்யப்பட்டது.

வவுனியா பல்கலைக்கழக விடுதி மைதானத்தில் கூடியிருந்த பிரதேசவாசிகள், நிகழ்வு இடம்பெற்ற இடத்துக்கு வருகை தந்த ஜனாதிபதி அவர்களை அன்புடன் வரவேற்றனர். அவர்களுடன் சுமூகமாகக் கலந்துரையாடிய ஜனாதிபதி அவர்கள், அம்மக்களின் நலன் விசாரித்தறிந்தார்.

வவுனியா வளாகத்தை தேசிய பல்கலைக்கழகமாக மாற்றும் நிகழ்வைப் பதிவு செய்யும் நோக்கில் கல்வெட்டைத் திறைநீக்கம் செய்து திறந்துவைத்த ஜனாதிபதி அவர்கள், பல்கலைக்கழகத் தகவல் தொழில்நுட்ப மத்திய நிலையம் மற்றும் சகவாழ்வு மையம் போன்றவற்றை மாணவர் பாவனைக்குக் கையளித்தார்.

தகவல் தொழில்நுட்பப் பீடத்தைச் சேர்ந்த மாணவர்களுடன் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்ட
ஜனாதிபதி அவர்கள், தாம் பெற்றுக்கொள்ளும் அறிவைத் தமது பிரதேசங்களுக்கே வழங்க முடியுமானால், அதுவே தான் பிறந்த இடத்துக்கும் நாட்டுக்கும் செய்யும் பெரும் சேவையாகுமென்று எடுத்துரைத்தார். எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சமூக மாற்றங்களை எதிர்கொள்ளக்கூடிய புத்திஜீவிகளைக் கல்வியினூடாகச் சமூகமயப்படுத்துவதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கமாகும் என்று, நிகழ்வின் பிரதான உரையை நிகழ்த்திய ஜனாதிபதி குறிப்பிட்டார்.

நாடொன்று பலமடைய வேண்டுமாயின், அந்த நாட்டின் கல்விக் கட்டமைப்பு பலமடைந்திருக்க வேண்டும். அதுவே, பயனுள்ள முதலீடாகுமென்று எடுத்துரைத்த ஜனாதிபதி அவர்கள், தேசிய கல்வியைக் கட்டியெழுப்புவதற்கே தற்போதைய அரசாங்கம் முன்னுரிமையளித்துள்ளது என்றார்.

பல்கலைக்கழகங்களுக்கு உள்ளீர்க்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக விடுதிகள் உள்ளிட்ட அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்து, பல்கலைக்கழகங்களுக்கு உள்ளீர்க்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையைப் படிப்படையாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

கலைப் பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கும் ஆங்கில மொழி மற்றும் தகவல் தொழில்நுட்ப அறிவைப் பெற்றுக்கொடுக்கும் வகையிலான பாடத்திட்டங்களைச் சமூகத் தேவைகளுக்கேற்ப தயாரிப்பதற்காகப் பல்கலைக்கழகக் கட்டமைப்பு முன்னெடுத்த வேலைத்திட்டங்களுக்கும் ஜனாதிபதி அவர்கள் இதன்போது பாராட்டுகளைத் தெரிவித்தார்.
உலகில் அதிக கேள்வி நிலவும் துறைகளை அடையாளம் கண்டு, அத்துறைகளினூடான புத்திஜீவிகளை உருவாக்கும் காலத்தின் தேவையைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள், உயர்தரப் பரீட்சையில் சித்தியடையும் அனைத்து மாணவர்களும் பட்டப்படிப்பை மேற்கொள்வதற்கான வாய்ப்பைப் பெற்றுக்கொடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பென்றும் எடுத்துரைத்தார்.

“உங்களதும், உங்கள் நண்பர்களதும் மனங்களில் தேசிய சகவாழ்வைக் கட்டியெழுப்புவதற்கு, இவ்வாறான பல்கலைக்கழகங்களின் விடுதிகளையும் வகுப்பறைகளையும், மைதானங்களையும், சிற்றுண்டிச்சாலைகளையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்” என்று, அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.

பல்கலைக்கழகங்களில் ஏற்படுத்திக்கொள்ளும் பந்தங்கள் மிகவும் பெறுமதிவாய்ந்தவை என்றும் அந்தத் தொடர்பு, இந்த நாட்டினது அபிவிருத்திக்கு பெரும் ஊன்றுகோலாக இருக்குமென்றும் ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டார்.

அமைச்சர்களான தினேஸ் குணவர்தன, டக்ளஸ் தேவானந்தா, வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, பாராளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான், குலசிங்கம் திலீபன், புத்தசாசன அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவரும் சிரேஷ்ட பேராசிரியருமான சம்பத் அமரதுங்க ஆகியோரும், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

Posted in Uncategorized