AIIB இன் ஊடாக இலங்கைக்கு 100 மில்லியன்

கடுமையான கடன் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் நாடுகள் குறித்து ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) தனது ஆண்டறிக்கையில் கவனம் செலுத்தியுள்ளது.

சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு ஆதரவை வழங்க AIIB முடிவு செய்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

இலங்கைக்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி நிவாரணம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தொடர்புடைய வருடாந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியை ஆட்சியில் அமர்த்த தயார் நிலையில் மக்கள் – சஜித்

மாற்று அரசாக ஐக்கிய மக்கள் சக்தி அரசை நிறுவ நாட்டு மக்கள் எந்நேரமும் தயாராகவே உள்ளனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

மருந்தக உரிமையாளர்கள் சங்கம், மருந்தக உதவியாளர் சங்கம், அவர்களின் தொழில்முயற்சியாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் பலர் கலந்துகொண்ட தேசிய மக்கள் பேரவை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் நேற்று கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் கூடியது.

டொலர் நெருக்கடிக்கு தீர்வு
இதில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “மருந்துப் பற்றாக்குறைக்கு முக்கியக் காரணம் டொலர் தட்டுப்பாடும், இறக்குமதி முறையின் பிரச்சினையும் ஆகும். பண்டோரா பத்திரங்களில் குறிப்பிட்டுள்ளபடி நாடு இழந்த பில்லியன் கணக்கான டொலர்களை கொண்டு வருவதே இந்த டொலர் பிரச்சினையைத் தீர்க்க சிறந்த தீர்வாகும்.

அவ்வாறு இல்லாமல் சீனா, இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகளிடமிருந்து கடன் பெறுவதல்ல. இதன் மூலம் மருந்துத் தட்டுப்பாடு மட்டுமின்றி, நாட்டின் டொலர் நெருக்கடிக்கு தீர்வு கிட்டும். இது தனிநபர்களைக் குறிவைப்பதன் மூலம் அன்றி, மாறாக தவறு செய்த மற்றும் திருடிய, கொள்ளையடித்த, அரச வளங்கள் மற்றும் அரச சொத்துக்களைப் பெற்றுக்கொள்வதை இலக்காகக் கொண்டு மேற்கொள்ள வேண்டும்.

இந்தப் பணமும் சொத்துக்களும் 220 இலட்சம் பொதுமக்களின் சொத்து ஆகும். ஆனால், தற்போதைய அரசு அந்த வழியைப் பின்பற்றுமா என்பது ஒரு பிரச்சினைக்குரிய விடயம் என்றாலும், எதிர்காலத்தில் ஐக்கிய மக்கள் சக்தி அரசின் கீழ், திருடப்பட்ட பணம் அனைத்தும் தெளிவான, வெளிப்படத்தன்மையுடனும் பொறுப்புடனும் தொடர்புடைய அனைத்து வளங்களும் மீட்கப்படும்.

நாட்டில் தற்போது நிலவும் மருந்துப் பற்றாக்குறையைத் தீர்க்க எதிர்க்கட்சியில் இருந்தும் பெரிய வேலைத்திட்டம் செயற்படுத்தப்படுகின்றது. இதன் கீழ் இதுவரை 165 மில்லியன் பெறுமதியான வைத்தியசாலை உபகரணங்கள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன” – என்றார்.

தமிழருக்கான தீர்வு விடயத்தில் ரணில் செயலாற்றினால் முழு ஆதரவு! – சம்பந்தன்

புதிய அரசமைப்பினூடாக தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் அதே நிலைப்பாட்டில் இருப்பதை நாம் வரவேற்கின்றோம். இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதியை செயற்படுத்தும் பணியில் இறங்கினால் நாம் முழுமையான ஆதரவை வழங்குவோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

‘தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு புதிய அரசமைப்பு மூலம் கிடைக்கும். ஒரு வருடத்துக்குள் இந்தப் பணிகள் முற்றுப்பெற வேண்டும் என்பதே எனது நோக்கம்’ என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார். அதேவேளை, ‘தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்குக் கிடைத்த இந்த அரிய சந்தர்ப்பத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உள்ளிட்ட தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகள் தவறவிடக்கூடாது. அவர்கள் கட்சி, பேதமின்றி மக்களின் நலனைக் கருத்தில்கொண்டு ஜனாதிபதியுடன் இணைந்து செயற்பட வேண்டும்’ என்று பிரதமர் தினேஷ் குணவர்த்தன வலியுறுத்தியிருந்தார்.

இவர்கள் இருவரினதும் கருத்துக்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“புதிய அரசமைப்பை உருவாக்கவும், தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வைக் காணவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசுடன் இணைந்து பயணிக்கத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்நேரமும் தயாராகவே உள்ளது.

ஆனால், இந்த விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதிகளை உடனடியாகச் செயற்படுத்தும் பணியில் இறங்க வேண்டும்.

அப்போதுதான் எமக்கும் அதில் பூரண நம்பிக்கை ஏற்பட்டு முழு ஆதரவை வழங்க முடியும். காலத்தை இழுத்தடிக்காமல் ஒரு வருடத்துக்குள் தமிழர்களுக்கு நிலையான தீர்வை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வழங்கினால் அவர் இலங்கை வரலாற்றில் தனித்துவமான இடத்தைப் பிடிப்பார்” என்றார்.

மூன்று தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடந்த 16 ஆண்டுகளாக கொழும்பு – மகஸின் சிறைச்சாலையில் மறியலில் வைக்கப்பட்டிருந்த மூவர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சியைச் சேர்ந்த மூன்று அரசியல் கைதிகளை கொழும்பு மேல் நீதிமன்றம் அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை எனத் தெரிவித்து அதனடிப்படையில் அவர்களைச் சுத்தவாளிகளாகக் கருதி விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது.

அவர்களுக்கு எதிரான சாட்சியமாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சமர்ப்பிக்கப்பட்ட அவர்களது ஒப்புதல் வாக்குமூலங்கள் அவர்களால் சுயாதீனமாக வழங்கப்பட்டவை அல்ல என்று தீர்மானித்த நீதிமன்றம் அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை எனத் தெரிவித்து அவர்களை நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முற்பகுதியில் கைது செய்யப்பட்ட தங்கவேல் சிவகுமார் (வயது 47), எட்வர்ட் சாம் சிவலிங்கம் (வயது 49), சீலன் ஆனந்தராஜா (வயது 45) ஆகியோரே கொழும்பு மேல் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர்.

காலிக்கு ஆயுதங்கள் கொண்டு செல்லப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் இவர்கள் 2006 இல் கைது செய்யப்பட்டனர். அவர்களின் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் அவர்களுக்கு எதிரான ஆதாரமாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. 16 வருடங்களின் பின்னர் அந்த ஒப்புதல் வாக்குமூலங்கள் சுயாதீனமாக வழங்கப்படவில்லை என நீதிமன்றம் தீர்மானித்து மூவரையும் விடுவித்துள்ளது.

இரட்டைக்குடியுரிமை பெற்றவர்களை கண்டுபிடிக்க அரசிடம் வழி இல்லை

நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இரட்டை குடியுரிமை பிரஜைகளை அடையாளம் காணும் முறைமை அரசாங்கத்திடம் இல்லை என அமைச்சரவை ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

நீதித்துறை நடவடிக்கை மூலம் இதற்கு தீர்வு காண வேண்டும் என ஊடகத்துறை அமைச்சரும், அமைச்சரவை ஊடகப் பேச்சாளருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

“அதனை கண்டறிய அரசாங்கத்திடம் வழியில்லை. அதற்கு சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்பு உள்ளது. நீதிமன்றம் மூலம் தேடினாலே ஒழிய, அரசாங்கம் அதனை தேடி கண்டுபிடிப்பதற்கு வழி இருப்பதாக என்னுடைய அறிவுக்கு எட்டியவரை கருதவில்லை. எனவே இது நீதிமன்றத்தினால் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினை” என முன்னாள் தேர்தல் ஆணையாளர் குறிப்பிட்டிருந்தார்.

ஒக்டோபர் 26 ஆம் திகதி புதன்கிழமை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில்,இரட்டைக் குடியுரிமை தொடர்பில் சுமார் 10 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும், அரசாங்கம் அந்த பெயர்களை வெளியிடுமா எனவும் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போது அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

ஒக்டோபர் 21ஆம் திகதி நாடாளுமன்றத்தில் விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்ட 22ஆவது அரசியலமைப்பு திருத்தம், இரட்டை குடியுரிமை பிரஜைகளுக்கு நாட்டின் சட்ட மன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பை இழக்கச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வரி வலையில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது

வரி வலையிலிருந்து யாரையும் தப்பிக்க அனுமதிக்கக் கூடாது என்று மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் வரி அறவிடப்படும் முறையும், வரி அறவிடும் நிறுவனங்களும் நிலையானதாக இருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வரிச்சுமை நியாயமாக பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் மூன்று நிறுவனங்கள் வரி அறவீடு செய்கின்றன. வருமான வரித் திணைக்களம், சுங்கத் திணைக்களம் மற்றும் மதுவரித் திணைக்களம் என்பனவே அந்நிறுவனங்களாகும்.

இந்நிறுவனங்கள் சுயாதீனமாக இயங்க வேண்டும். வரி அறவிடுவதற்கு அந்த நிறுவனங்களை மறுசீரமைக்க வேண்டும்.

நேர்மையான முறையில் வரி செலுத்துவோருக்குச் சுமையை ஏற்படுத்தாமல், உழைக்கும் அனைவருக்கும் வரிச்சுமை நியாயமாகப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். வரி வலையிலிருந்து யாரையும் தப்பிக்க அனுமதிக்கக் கூடாது என தெரிவித்துள்ளார்.

இலங்கையின் நிலைமை மேலும் மோசமடையும் – உலக உணவுத் திட்டம்

இலங்கையில் உக்கிரமடைந்து வரும் பொருளாதார நெருக்கடியானது உணவுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக தொடர்ந்தும் இருப்பதாக உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் 2022 ஒக்டோபர் முதல் 2023 பெப்ரவரி வரையான காலத்தில் தொடர்ச்சியான உதவி இல்லாமல் நிலைமை மேலும் மோசமடையக்கூடும் என்று உலக உணவுத்திட்டம் எச்சரித்துள்ளது.

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின்படி, உணவுப் பணவீக்கம் ஓகஸ்ட் மாதத்தில் 93.7 சதவீதத்திலிருந்து செப்டம்பர் மாதத்தில் 94.9 சதவீதமாக உயர்ந்துள்ளதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்தநிலையில் மூன்று மாத காலத்திற்கு ஒரு மில்லியன் குழந்தைகளுக்கு பாடசாலை உணவை வழங்குவதற்காக, உலக உணவுத்திட்டம் ஆயிரத்து 475 மெற்றிக் தொன் அரிசி மற்றும் 775 மெற்றிக் தொன் இரும்புச் சத்துள்ள அரிசியை வழங்கியுள்ளது.

அவற்றின் விநியோகம் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், அது அரசாங்கத்தின் தேசிய பாடசாலை உணவுத் திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு நேரடியாக கிடைக்கக்கூடியதாக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் முறைமையை திருத்துவதற்கு பாராளுமன்ற தெரிவுக்குழு

தேர்தல் முறைமையை திருத்துவதற்கு பாராளுமன்ற தெரிவுக்குழுவை நியமிக்குமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.

பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளை 101 இன் விதிகளுக்கு அமைய இந்தக் குழுவில் 21 உறுப்பினர்களுக்கு மேல் இருக்கக் கூடாது என அமைச்சர் விஜயதாச சபாநாயகருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இந்தக் குழுவிற்கான தலைவர் மற்றும் உறுப்பினர்களை சபாநாயகர் பெயரிட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Posted in Uncategorized | Tagged

புலம்பெயர் தொழிலாளர்கள் இலத்திரனியல் வாகனம் கொள்வனவு செய்ய விசேட அனுமதி

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களுக்கு சட்டபூர்வமான முறையில் பண அனுப்பல்களை ஊக்குவிக்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சலுகைகளுக்கு கடந்த ஆகஸ்ட் 8 திகதி அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சினால் குறித்த சுற்றறிக்கை ஆலோசனைகள் வெளியிடப்பட்டுள்ளதுடன், தகைமை பெறுகின்ற புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உயர்ந்தபட்சம் 25,000 அமெரிக்க டொலர்களுக்கு உட்பட்டு இரண்டு சக்கர இலத்திரனியல் வாகனமொன்றும், உயர்ந்தபட்சம் 65,000 அமெரிக்க டொலர்கள் உட்பட்டு நான்கு சக்கர முழு அளவிலான இலத்திரனியல் வாகனமொன்றைக் கொள்வனவு செய்வதற்குத் தேவையான வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சரால் அமைச்சரவையின் கவனத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள, புலம்பெயர் தொழிலாளர்களால் வெளிநாட்டில் வருமானமாக ஈட்டும் வெளிநாட்டு செலாவணியை இலங்கைக்கு அனுப்புவதை மேலும் ஊக்குவிப்பதற்காக கீழ்க்காணும் நடவடிக்கைகளுக்காக அமைச்சரவை உடன்பாடு வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளது :

2023.04.30 ஆம் திகதி வரை வாகனமொன்றை இறக்குமதி செய்வதற்காக விண்ணப்பப்படிவத்தை சமர்ப்பிக்கும் திகதி வரைக்கும் அனுப்பப்படுகின்ற அந்நிய செலாவணியின் பெறுமதி 50 சதவீதம் வரை செலவு , காப்பீட்டு பெறுமதியுடன் கூடிய இரண்டு சக்கர இலத்திரனியல் வாகனமொன்றை இறக்குமதி செய்வதற்காக அனுமதி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த மே மாதம் முதலாம் திகதி தொடக்கம் 2023.12.31 ஆம் திகதி வரை எமது நாட்டுக்கு அனுப்பப்பட்ட அந்நிய செலாவணிப் பெறுமதி 50 சதவீதம் வீதம் வரைக்கும் செலவு , காப்பீட்டு பெறுமதியுடன் கூடிய நான்கு சக்கர முழு அளவிலான இலத்திரனியல் வாகனமொன்றை இறக்குமதி செய்வதற்காக அனுமதி வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை – நெதர்லாந்துக்கிடையில் விமான சேவை ஒப்பந்தம்

இலங்கை மற்றும் நெதர்லாந்துக்கு இடையிலான இருதரப்பு விமான சேவைகள் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இலங்கை மற்றும் நெதர்லாந்துக்கிடையில் இராஜதந்திரத் தொடர்புகள் 1951 ஆம் ஆண்டு தொடக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், விமான சேவைகள் ஒப்பந்தத்தை மேற்கொள்வதன் மூலம் இரு நாடுகளுக்கிடையில் நேரடியான பயணிகள் போக்குவரத்து மற்றும் சரக்குகள் விமானப் போக்குவரத்தை ஆரம்பிப்பதற்கு வசதிகள் உருவாகும்.

அதன் மூலம், இரு நாடுகளுக்கிடையில் சுற்றுலா, கல்வி, வணிகம், முதலீடுகள், விவசாயம் மற்றும் கலாச்சாரத் தொடர்புகள் மேலும் விருத்தியடையும்.

அதற்கமைய, இரு நாடுகளுக்கிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு எட்டப்பட்டுள்ள விடயங்களுக்கமைய இருதரப்பு விமான சேவைகள் ஒப்பந்தமொன்றில் கையொப்பமிடுவதற்காக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.