ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய வாக்குமூலங்கள் மக்களுக்கு வெளிப்படுத்தப்படவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.
அவரது அலுவலகத்தில் இன்று(26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.
எதிர்காலத்தில் நடைபெறும் தேர்தல்களை தள்ளிப்போடுவதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்பாடே தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பான சட்டமூலம் கொண்டுவரப்படுகின்றதா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எது எப்படிஇருந்தாலும் ஜனாதிபதி தேர்தல் நடாத்தியே ஆகவேண்டும்.அந்த தேர்தலை இந்த நாட்டு மக்கள் எதிர்பார்த்துக்கொண்டிருப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தமிழ் மக்கள் மேற்கொள்ளும் தீர்மானமானது தமிழ் மக்களுக்கான தீர்வினை நோக்கியதாக இருக்கவேண்டும் என்பதற்காக அனைவரும் ஒன்றிணைந்து சரியான தீர்மானத்தை எடுக்கவேண்டும் எனவும் தெரிவித்தார்.
தேசிய மக்கள் மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க,தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வினை முன்வைக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
ஜே.வி.பியை பொறுத்த வரையில் தமிழர்கள் நன்கு உணர்ந்துள்ளனர்.தமிழர்களின் பிரச்சினைக்கு ஆரம்ப புள்ளியாகவந்த மாகாணசபை முறைமையினை மூர்க்கத்தனமாக எதிர்த்தவர்கள் ஜேவிபியினர்.அதற்கு எதிராக எதிர்த்தவர்கள் மட்டுமன்றி தற்காலிகமாக இணைக்கப்பட்டிருந்த வடகிழக்கினை பிரித்து தனியலகாக மாற்றியவர்கள் இவர்கள் என்பதை நாங்கள் மறக்கவில்லை எனவும் தெரிவித்தார்.
ஜேவிபியினர் தமிழர்களின் வாக்குகளை பெறவேண்டுமானால் தமிழர் பகுதிகளில் பிரசாரங்களை முன்னெடுக்கவேண்டுமானால் தமிழர்களின் இனப்பிரச்சினைக்கு என்ன தீர்வினை முன்வைக்கின்றார்கள் என்பதை பொறுத்தே நாங்கள் அவர்களுடன் எந்தவிதமான உறவுகளையும் முன்னெடுக்கமுடியும் எனவும் தெரிவித்தார்.