நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டுமாயின் நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும்-ரெலோ தலைவர் செல்வம் MP

பொருளாதார நெருக்கடியில் மீட்சிப் பெற்று, மேம்பட வேண்டுமென்றால் பயங்கரவாத தடைச் சட்டம் உடனடியாக நீக்கப்பட வேண்டும். அப்போதே எமது முதலீட்டாளர்கள் வருவார்கள். பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதாக அரசாங்கம் குறிப்பிட்டாலும் ஒரு வருடம் கடந்தும் இன்னும் அந்த விடயத்தில் கவனம் செலுத்தப்படவில்லை. பயங்கரவாத தடைச் சட்டத்தை அமுல்படுத்திக்கொண்டு பொருளாதார ரீதியில் ஒருபோதும் முன்னேற்றமடைய முடியாது என தமிழ் ஈழ விடுதலை இயக்கம் ரெலோ தலைவருமான வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (12) நடைபெற்ற 2026ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான நான்காம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

2025ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை அவதானிக்கும்போது இந்த வருடத்தின் கடைசி நேரத்தில்தான் அபிவிருத்தி தொடர்பான வேலைத்திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றது. எங்களின் அதிகாரிகள் அந்த நிதியை திருப்பி அனுப்பி விடக்கூடாது என்று இரவு பகலாக ஓடி உழைத்துக்கொண்டிருக்கின்றனர். இதனால் கடந்த வரவு செலவுத் திட்டத்தை நல்ல வரவு செலவுத் திட்டமென அறிவித்தமை பிழையானது என்பதனை நான் உணர்ந்துகொள்கின்றேன்.

ஏனென்றால், வருடத்தின் கடைசி காலப்பகுதி மழைக்காலம் என்பதனால் எந்தவொரு அபிவிருத்தித் திட்டங்களையும் முன்னெடுக்க முடியாத நிலைமை காணப்படுகிறது. இதனால் 2026ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டத்தை செயற்படுத்த முயலும்போது பல்வேறு விடயங்கள் முதலில் கையாளப்பட வேண்டும் என்பது எமது ஆலோசனையாகும்.

வனஜீவராசிகள் தொடர்பான பிரச்சினைகள் பாரிய பிரச்சினையாக உள்ளது. ஏதேனும் விடயத்தை எங்கள் பிரதேசத்தில் செய்ய வேண்டும் என்றால் அந்த திணைக்களத்தின் அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. குறிப்பாக அபிவிருத்திக்கு கூடுதாலான பணத்தை ஒதுக்கினாலும் அந்த அபிவிருத்தி தடைபடுகின்றது என்றால் வனஇலாகா திணைக்களமும் அதற்கு காரணமாகும்.

பாரியளவிலான விவசாய காணிகளை அந்த திணைக்களம் கைப்பற்றி வைத்திருக்கின்றது. இது தொடர்பில் அபிவிருத்தி குழு கூட்டத்திலும் குறிப்பிட்டுள்ளோம். ஒவ்வொரு அரசாங்கத்திலும் இதுவே நடக்கின்றது. வீட்டுத் திட்டம்,விவசாயிகளுக்கான அபிவிருத்தி திட்டங்கள் என்பன இந்த திணைக்களங்களால் தடைப்படுகின்றது. அரசாங்கம் தனது கட்டுப்பாட்டில் இதனை வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். இந்த திணைக்களம் தனியான அரசாங்கம் போன்று செயற்படுகின்றது. எதற்கும் அடங்குவதாக இல்லை. எவ்வளவு நிதியை ஒதுக்கினாலும் இந்த திணைக்களங்களில் மிக மோசமான செயற்பாடுகளால் அந்த அபிவிருத்திகள் நடக்காது.

அபிவிருத்தியில் நாங்கள் இப்போதுதான் முன்னேறி வருகின்றோம். எமது அயல் நாடான இந்தியா நிதியை வழங்க முனைகின்ற போது ஏன் அதனை தடுக்கின்றீர்கள். பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையம் என்ற தரத்திற்கு கொண்டு வர ஏன் மறுக்கpன்றீர்கள். காங்கேசன்துறை கப்பல்துறை முயற்சியை ஏன் மறுக்கின்றீர்கள்.

தலைமன்னாரில் இருந்து இராமேஸ்வரம் செல்லும் கப்பல் போக்குவரத்து சேவை திட்டத்தை ஏன் தாமதப்படுத்துகின்றீர்னள். சுற்றுலாத்துறையே எமது நாட்டுக்கு கைகொடுக்கின்றது. இந்த விடயத்தில் எமக்கு உதவுவதற்கு இந்தியா வருகின்ற போது வடக்கு என்ற காரணத்தால் அதனை நிறுத்துகின்றீர்களா? .இந்த விடயத்தை இனம் சார்ந்த விடயமாக பார்க்கின்றீர்களா? இந்தியா தனது உதவியை நீட்டுகின்ற போது கைபிடித்து பொருளாதார நிலைமையை ஏற்படுத்துவதே சரியாக இருக்கும் இந்த விடயத்தில் ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும் என்று கோருகின்றேன்.

பொருளாதார நெருக்கடியில் இருந்து நாங்கள் மேம்பட வேண்டுமென்றால் பயங்கரவாத தடைச்சட்டம் உடனடியாக நீக்கப்பட வேண்டும். அப்போதே எமது முதலீட்டாளர்கள் வருவார்கள். அவர்கள் முதலீடு செய்யும் போது பயங்கரவாத தடைச்சட்டம் இருக்குமாக இருந்தால் அந்த முதலீடு எப்படி வந்தது அது விடுதலைப் புலிகளின் பணமா? என்று விசாரிக்கலாம் என்பதனால் எவரும் வருவதற்கு அச்சப்படுகின்றனர். நாட்டை பொருளாதார ரீதியில் முன்னேற்ற வேண்டுமென்றால் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க வேண்டும். இதனை நீக்குவதாக அரசாங்கம் குறிப்பிட்டாலும் ஒரு வருடம் கடந்தும் இன்னும் அந்த விடயத்தில் கவனம் செலுத்தப்படவில்லை. இதனை செய்யாவிட்டால் பொருளாதாரம் முன்னேற்றமடையாது என்றே கூற வேண்டும் என்றார்.

கடற்தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் விசேட சந்திப்பு!

மன்னார் மாவட்ட கடற்தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களுக்கும், தமிழ் ஈழ விடுதலை இயக்கம் ரெலோ தலைவருமான வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று 05-11-2025 புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சின் காரியாலயத்தில் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலில் தலைமன்னார் பியர் மீனவ கூட்டுறவு சங்க பிரதிநிதிகளும், தாழ்வுபாடு மீனவ கூட்டுறவு சங்க பிரதிநிதிகளும் மன்னார் பிரதேச சபை உபதவிசாளர் திருமதி றொயிற்றன் சாந்தினி அவர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

நுண்பாகநிதி நிறுவனங்களின் அத்துமீறல், அடாத்து வட்டியாளர்களுக்கு எதிராக அவசர அவசர தீர்மானம் வலி கிழக்கில் நிறைவேற்றம்

நுண்பாக நிதி நிறுவனங்களின் அத்துமீறிய செயற்பாடுகளையும் அடாத்தான வட்டிக்கு நிதி வழங்குபவர்களையும் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை விரைவாக எடுக்கவேண்டும் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் ஒக்டோபர் மாத அமர்வு தவிசாளர் தியாகராஜா நிரோ~; தலைமையில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. இதில் அவசர நடவடிக்கைக்கான பிரேரணையாக சபையின் உறுப்பினர் ஐங்கரன் இராமநாதனால் மேற்படி பிரேரணை முன்வைக்கப்பட்டது.

கடந்த சபையில் நுண்பாக நிதி நிறுவனங்களின் அத்துமீறிய செயற்பாடுகள் தொடர்பாக அவரால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணையில், வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் ஆட்சி எல்லைக்கு உட்பட்ட கிராமங்கள் தோறும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதன் மூலம் நிதிநிறுவனங்கள் சட்டம் ஒழுங்கு அந்நிறுவனங்கள் வரையரைக்குப் புறம்பாக செயற்படுவது நீண்ட முயற்சியினால் மட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டன.

தற்போதைய நிலையில் மீளவும் கிராமங்கள் தோறும் நுண்நிதிக்கடன் வழங்குனர்கள் பெண் தலைமைத்துவக் குடும்பங்களை இலக்கு வைத்து வீடு வீடாகச் சென்று நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இவ்வாறாக ஈடுபடுவதன் வாயிலாக பல்வேறுபட்ட பிரச்சினைகள் ஏற்படுகின்றன. நாட்டின் நடைமுறையில் உள்ள நிதி சார் சட்டம் ஒழுங்குகளின் வாயிலான கடப்பாடுகளை பூர்த்திசெய்யாது அவற்றினை அந் நிறுவனங்கள் மீறிவிடுகின்றனர். இதனால் பெரும் இன்னல்களுக்குள் கிராமப்புறப் பெண்கள் தள்ளப்பட்டு விடுகின்றனர். பிரதேச சபை நடைமுறையில் செயற்படும் நிதி நிறுவனங்களின் செயற்பாடுகளை கிராமங்களுக்குள் கண்காணிக்க வேண்டும். அவற்றின் அத்துமீறல்கள் தொடர்பாக உடன் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என சபை உறுப்பினரின் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டது. மேலும் மீற்றர் வட்டியாளர்களை சட்டத்தின் முன்நிறுத்தவும் வேண்டும். இந் நடவடிக்கைகளை தன்னால் கடந்த சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தவேண்டும் எனவும் உறுப்பினர் ஐங்கரன் இராமநாதனால் தீர்மானம் முன்வைக்கப்பட்டது.

இவ்விடயத்தில் உடனடி இடர்நிலையாகக் கருதி பிரதேச சபை உச்ச அளவில் செயற்படாவிடில் அப்பாவிகளை பாதுகாக்க முடியாதுபோகும் என்பதுடன் அநியாயமாக பலர் தவறானமுடிவுகளைக்கூட எடுக்கத்தள்ளப்படும் நிலை ஏற்படும். உடனடியாக இத் தீர்மானத்தினை முன்கொண்டு செல்லத்தக்க செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்த உறுப்பினர் ஐங்கரன் இராமநாதனால் கோரப்பட்டது.

இத் தீர்மானத்தின் மீது உப தவிசாளர் ஜனார்த்தனன் உரையாற்றுகையில் மக்கள் தெளிவின்றி ஆடம்பரத்தேவைகளுக்காக முறைகேடான கடன்களைப் பெற்று பாரிய இடருக்கள் இகப்பட்டுள்ள நிலையில் அதுதொடர்பில் உடனடி நடவடிக்கைகளுக்காக சகல தரப்புக்களும் ஒன்றினைய வேண்டும் என்றார்.

இந் நிலையில் இத் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட நிலையில் விரைவான செயற்றிட்டங்களை வகுத்து செயற்படுத்தவதற்கான ஒழுங்களை கடந்த காலத்தில் இச் சபையில் மேற்கொள்ளப்பட்டமை போன்று தற்போதைய சபையில் முன்வைக்கப்பட்டுள்ள மேலதிகத் தீர்மானத்தினையும் அடிப்படையாகக் கொண்டு விரைவான நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ரெலோ வின் தலைமை குழு உறுப்பினரும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளருமான தியாகராஜா நிரோஷ அறிவித்தார்.

Posted in Uncategorized

ஆளும் கட்சி என்ற அதிகாரத்தில் உள்ளராட்சி சட்டங்களை மீறிவிட முடியாது இருபாலையில் தேசிய மக்கள் சக்திக்கும் தவிசாளருக்கும் இடையில் தர்க்கம்

உள்ளுராட்சி மன்றங்களின் அதிகாரங்களையும் சட்டத்தினையும் நாட்டின் ஆளும் கட்சி என்றவகையில் அரசாங்கத்தில் உள்ளவர்கள் மீறிவிட அனுமதிக்க முடியாது என ரெலோ வின் தலைமை குழு உறுப்பினரும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளருமான தியாகராஜா நிரோஷ; தெரிவித்தார்.

இருபாலைச் சந்தியில் பேருந்து தரிப்பிடம் ஒன்றை அமைப்பதற்காக பிரதேச சபையிடம் விண்ணப்பித்துவிட்டு அவ் விண்ணப்பத்தினை பரிசீலிப்பதற்காக பிரதேச சபை வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் போக்குவரத்துசபை போன்ற திணைக்களங்களின் பரிந்துரையை பெற்றத்தரக் கோரியிருந்த நிலையில், இருபாலைச் சந்தியில் சந்தியில் குறித்த பேருந்து நிலையத்தினை ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரஜிவன் தலைமையில் தேசிய மக்கள் சக்தியின் உள்ள10ராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றம் சிலர் திறந்து வைத்தனர்.

இந்நிலையில் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் உறுப்பினர்கள் பலர் தவிசாளரைத் தொடர்பு கொண்டு மேற்படி தரிப்பிடத்திற்று சட்டப்படியாக தங்களினால் அனுமதியளிக்கப்பட்டுள்ளதா எனக் கேள்வி எழுப்பினர். இதனைத்தொடர்ந்து தவிசாளர் விண்ணப்பம் பரிசீலனையில் இருப்பதாகத் தெரிவித்துடன் அவ்வாறாக சட்டப்படியான அனுமதியற்ற விடயத்தில் சட்டம் ஒழுங்கு சகலருக்கும் சமன் என்ற அடிப்படையில் தான் நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.

தவிசாளரினால் தரிப்பிடத்தின் பெயர்ப்பலகையினை சேதமற்ற வகையில் அகற்றுவதுடன் உடனடியாக சபையினைத் தொடர்புகொண்டு உரிய அனுமதியை பெற்றக்கொள்ளுமாறு அறிவித்தல் ஒட்டுவதற்கு பணிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்தில் ஒன்று கூடிய தேசிய மக்கள் சக்தியின் பிரதேசசபையின் உறுப்பினர்களான சி.சுகிர்தரூபன்,சிகஜீபன் தாம் வீதிஅபிவிருத்தி அதிகாரசபையில் அனுமதிபெற்றதாகவும் தவிசாளர் அரசியல் காரணங்களுக்காக செயற்படுகின்றார் எனவும் வாக்குவாதப்பட்டனர். தவிசாளருடன் நின்றிருந்த உறுப்பினர் அ.கமலறேகனுடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இவ்விடத்தில் தவிசாளர் விட்டுக்கொடுப்பின்றி பெயர்பலகையினை சேதாரமன்றி அகற்றுமாறும் அனுமதியை சபை வழங்கும் வரையில் காட்சிப்படுத்தமுடியாது கூறி அகற்றவதற்கான முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டது.

எனினும் குறித்தபேருந்து நிலையத்தினை ஞாபகமாக சமர்ப்பணம் செய்யப்பட்டவரின் மகன் தவிசாளரிடம் தனது தந்தையின் ஞாபகமாகவே அமைக்கப்பட்டதாகவும் தன் இவ்வாறான நடைமுறைகளை அறிந்திருக்கவில்லை எனவும் தனது இறந்த தந்தை தொடர்பான தமது குடும்பத்தின் மனிதாபிமானக் காரணத்தினை அடிப்படையாகக் கொண்டு நடவடிக்கைகளை ஒத்திவைக்கக்கோரினார். மேலும் தாம் உடனடியாக அனுமதித்தேவையினை முறைப்படி பூர்த்திசெய்யும் வரையில் அவகாசம் அளிக்கக் கோரியதுடன் அதற்காக கடிதம் வழங்க சம்மதிக்கப்பட்டதனையடுத்து பிரதேச சபையின் அனுமதியற்ற கட்டிடத்திற்கு எதிரான நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன.

இவ்விடத்தில் நாட்டில் அதிகாரத்தில் உள்ளவர்கள் உள்ள10ராட்சி மன்றங்களின் சட்டம் ஒழுங்குகளை மீறிவிட அனுமதிக்கமுடியாது. அவர்களுக்கு உள்ளுராட்சி மன்றவிடயங்களில் புரிதல் கிடையாது ஆயின் அதற்கு ஆலோசகர்களை நியமித்து செயற்பட முடியும். நாட்டில் ஆட்சியில் உள்ளனர் என்பதற்காக சட்டம் ஒழுங்கை யாரும் வளைத்துப்போடக்கூடாது. எவருக்கும் மனிதாபிமானக்காரணங்களைத் தவிர எமதுசபையின் சட்டம் ஒழுங்கு ஒரே விதமாகவே காணப்படும் என தவிசாளர் தியாகராஜா நிரோஷ; தெரிவித்தார்.

தமிழர்க்கு எதிரான இனப்படுகொலையை எடுத்தியம்பும் ஆதாரங்களை நாம் இனமாகப் பாதுகாக்கவேண்டும் – தவிசாளர் நிரோஷ் கோரிக்கை

தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பாரதுரமான இனப்படுகொலைக்கான சாட்சியங்களை வரலாற்றாக்கும் வகையில் அமையப்பெற்ற நினைவு இடங்களை நாம் பாதுகாப்பது அவசியம். அவற்றை பாதுகாப்பதற்கு சகல தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் என ரெலோ வின் தலைமை குழு உறுப்பினரும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.

செம்மணியில் அமையப் பெற்ற அணையா விளக்கு நினைவு தூபி உடைக்கப்பட்ட நிலையில் அதனை மீளமைக்கும் முயற்சிகளில் ஒத்துழைப்பு நல்கிய நிலையில் ஊடகங்களுக்குக் கருத்துரைக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும், செம்மணி என்பது தமிழ் மக்களுக்கு எதிராக எவ்வளவு தூரம் உள்நாட்டில் இனப்படுகொலை நடைபெற்றது என்பதை சர்வதேச அளவில் ஆதாரப்படுத்தி நிற்கின்றது. அணையா விளக்கு போராட்டம் இடம்பெற்ற இடம் மற்றும் இவ் நினைவுத்தூபி அமைக்கப்பட்டுள்ள பகுதி என்பன யாழ் குடாநாட்டை இலங்கை அரச படைகள் கைப்பற்றிய பின்னர் அரச படைகளால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு புதைக்கப்பட்ட கிரிசாந்தி குமாரசுவாமியின் உடலம் மற்றும் பிள்ளையை தேடிச்சென்ற பெற்றோர் அயலவர் என நீதி கேட்ட பலரும் படுகொலை செய்யப்பட்டு மீட்கப்பட்ட பகுதி ஆகும். இவ்விடத்திலேயே இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் ஆணையர் வேல்கர் அவர்களும் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

தமிழ் மக்களின் மீது வடக்குக் கிழக்கில் அரசினால் கட்டவீழ்த்து விடப்பட்ட அரச பயங்கரவாதத்தின் சாட்சியங்கள் அபிவிருத்தி என்ற போர்வையில் பல இடங்களில் திட்டமிட்டு மாற்றியமைக்கப்பட்டுவிட்டன. மேலும் சில இடங்கள் தனிநபர்களாலும் அழிக்கப்பட்டு வருகின்றன. இப்போது தமிழ் மக்களுக்கு அரச பயங்கரவாதத்தினால் எதுவுமே நடக்கவில்லை என சொல்வதற்கான உத்திகளே நடைபெறுகின்றன. இவற்றில் தமிழ் மக்கள் மிகுந்த அவதானமாக இருக்க வேண்டும. எமக்கெதிரான அடக்குமுறைகளை ஆவணப்படுத்துவதிலும் பாதுகாப்பதிலும் நாம் அவதானமாக இருக்கவேண்டும் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.

Posted in Uncategorized

தொண்டமானாறு உவர்நீர்த் தடுப்பணையால் வெள்ளப்பாதிப்பனை எதிர்கொள்வோருக்கு தீர்வு முன்வைக்கப்படவேண்டும் – ஆளுநரிடம் தவிசாளர் நிரோஷ் கோரிக்கை

தொண்டமனாறு உவர்நீர்த் தடுப்பணைத் திட்டத்தினை நாம் வரவேற்கின்றோம். அதேயிடத்தில் இத் திட்டத்தினால் வருடாவருடம் வெள்ளப் பாதிப்பை எதிர்கொள்ளும் மக்களை காப்பாற்றுவதற்கான நிலைத்தகு திட்டத்தினை மாகாண நிதி ஒதுக்கீடுகளுக்குள்ளாகவோ அல்லது சர்வதேச தாபனங்களின் ஒத்துழைப்புடனோ நிறைவேற்றமாறு என வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகத்திடம் ரெலோ வின் தலைமை குழு உறுப்பினரும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் கோரிக்கை விடுத்தார்.

இன்று செவ்வாய்க்கிழமை வடக்கு மாகாணத்தினைச் சேர்ந்த உள்ளுராட்சி மன்றத் தலைவர்களுக்கம் ஆளுநர் நா. வேதநாயகம் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது. இச் சந்திப்பிலேயே வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் மேற்படி கோரிக்கையினை முன்வைத்தார்.

அவர் மேலும் யாழ். மாவட்டத்தில் நிலத்தடி நீரை பாதுகாப்பதற்கான பெரும் அர்ப்பணிப்பினை வலிகாமம் கிழக்குப் பிரதேசமே மேற்கொள்கின்றது. தொண்டமானாறு மற்றும் செம்மணி நீரேரிகள் எமது ஆட்சிப் பகுதிக்கு உட்பட்டவை. நிலத்தடி நீரைப்பாதுகாப்பதற்கான உவர் நீர்த்தடுப்புத் திட்டம் இங்கு செயற்படுத்தப்படுவதனால் எமது மக்களில் ஆயிரக்கணக்கானவர்கள் வெள்ளப்பாதிப்பினை எதிர்கொள்கின்றார்கள். அவ்வாறாக மக்கள் பாதிக்கப்படும் போதும் மக்களை நாம் நிலத்தடி நீர்ப்பாதுகாப்புத் திட்டம் என்ற ஒரே காரணத்திற்காக பாதிப்புக்களை சகித்துவாழ பல அரச கட்டமைப்பு கோருகின்றது.

நிலத்தடி நீரைப் பாதுகாக்கும் திட்டத்துடன் இணைந்த உப திட்டங்கள் வகுக்கப்பட்டு அதன்வாயிலாக மக்களை வெள்ளப்பாதிப்பில் இருந்து நாம் பாதுகாக்கவேண்டும். அவ்வாறான திட்டங்கள் நிலைத்தகு சிந்தனையுடன் நடைமுறைப்படுத்தப்படும் போது மக்கள் எதிர்கொண்டுள்ள வெள்ளப்பாதிப்பிற்கு தீர்வு காணலாம். ஒவ்வொரு வருடமும் அச்சுவேலி வடக்கு, அச்சுவேலி தெற்கு, ஆவரங்காலின் ஒருபகுதி, வாதரவத்தை, புத்தூர் கிழக்கு என வலிகாமம் கிழக்குப் பிரதேசத்தின் பல பகுதி வெள்ளப்பாதிப்பிற்கு உள்ளாகின்றது. இதில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் இடர் நிலையை எதிர்கொள்கின்றனர்.

இவ்வாறான நிலையில் மாகாண சபை கூட தனது குறித்தொதுக்கப்பட்ட நிதி ஏற்பாடுகளின் கீழ் மேற்படி மக்களுக்கு சிறந்த திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தி மக்களின் பாதிப்புக்களைக் குறைக்கலாம். அதற்கு ஏனைய உள்ளுராட்சி மன்றங்களும் தமது பகுதிக்கும் நிலத்தடி நீரைப் பாதுகாக்கும் திட்டம் நன்மையளிக்கின்றது என்ற அடிப்படையில் நிதிகள் மாகாண மட்டத்தில் பகிரப்படும் போது விட்டுக்கொடுப்புக்களைச் செய்யமுடியும். மேலும் உலக வங்கி உள்ளிட்ட சர்வதேச கொடையாளர்களிடம் மேற்படி உவர் நீர்த் தடுப்பணை நன்னீர்த்திட்டத்தினை பேணுவதனால் பாதிக்கப்படும் மக்களுக்கான பாதிப்பை நிவர்த்தி செய்யத்தக்க திட்டத்தினை மேற்கொள்ள நிதி கோரிக்கையினை ஆளுநர் அவர்கள் முன்வைக்க வேண்டும் என தவிசாளர் நிரோஷ் கோரிக்கை விடுத்தார்.

இதனைத்தொடர்ந்து கருத்தரைத்த ஆளுநர் நா.வேதநாயகம் அவர்கள் சர்வதேசத்திட்டங்களில் வாயிலாக பாதிக்கப்படும் மக்களை பாதுகாப்பதற்கான உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார்.

Posted in Uncategorized

ரெலோ திருகோணமலை மாவட்ட உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் இன்று இடம் பெற்றது

தமிழ் ஈழ விடுதலை இயக்கம் ரெலோ கட்சியின் திருகோணமலை மாவட்ட உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் இன்று ஞாயிற்றுக்கிழமை 6/10/2025 இடம் பெற்றது.

மேற்படி கலந்துரையாடல் திருகோணமலை மாவட்ட பொறுப்பாளர் திரு.சாள்ஸ் அவர்களது தலமையில் நடைபெற்றது, வட்டார கிளையின் செயற்பாடுகள் மற்றும் இனிவரும் காலங்களில் நடக்க இருக்கும் மாகாண சபை தேர்தலை எப்படி எதிர் கொள்வது , திருகோணமலை மாவட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் போன்ற விடயங்கள் கலந்தாய்வு செய்யபட்டது, இவ் லந்துரையாடலின் போது திருகோணமலை மாவட்ட பிரதேச சபை மற்றும் நகர சபை உறுப்பினர்கள், கட்சியின் முன்னாள் உறுப்பினர்கள் ,திருகோணமலை மாவட்ட துணை மாவட்ட பொறுப்பாளர் திரு.பிரபா, பீரித்தானியாவில் இருந்து வருகை தந்திருந்த திரு.பீற்றர், திரு.றூபன், திரு.றதன், மற்றும் முன்னாள் பிரான்ஸ் தேசத்தின் ரெலோ கட்சியின் பொறுப்பாளர் திரு.லோகன், ஆகியோரின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றது.

Posted in Uncategorized

தியாகி திலிபனின் தியாகம் வரலாற்றில் என்றும் தமிழினத்திற்கு வழிகாட்டி நிற்கின்றது – அஞ்சலியில் தவிசாளர் நிரோஷ்

தியாக தீபம் திலிபன் அவர்கள் தமிழ் மக்களுக்கு எதிரான ஒடுக்கு முறைகளுக்கு எதிராகப் போராடினார். அவர் எமது மக்கள் தாயகத்தில் சுதந்திரமாக வாழவேண்டும் என்பதற்காக அகிம்சை வழியில் தன் இன்னுயிரினைத் தியாகம் செய்தார். தியாக தீபத்தின் நினைவுகளை எமது மக்கள் வரலாற்று ரீதியில் என்றும் நினைவுகூர்கின்றனர் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

பிரதேச சபையில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வில் அஞ்சலியுரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும், எமது மக்களுக்கு எதிரான ஒடுக்கு முறைகளுக்கு எதிராக அகிம்சை வழியில் தன் உயிரை நீராகாரம் ஏனும் அருந்தாது ஆகுதியாக்கிய மகானுக்கு தமிழர் தேசம் அஞ்சலிக்கின்றது. இன்றும் தியாக தீபம் திலிபன் எதற்காகப் போராடினாரோ அவரது போராட்டத்திற்கான காரணங்கள் தீர்க்கப்படாது அவ்வாறே கானப்படுகின்றன. அரசாங்கங்கள் மாறி மாறி ஆட்சிக்கு வந்த போதும் தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறைகளுக்கு எதிரான அடிப்படைகளில் எவ்வித மாற்றத்தினையும் செய்யவில்லை.

இலங்கையில் பௌத்த சிங்கள பேரினவாதம் அவ்வாறே காணப்படுகின்றது. அவ் பௌத்த சிங்கள பேரினவாதத்தினை திறன்பட முன்னெடுக்கத்தக்க சட்டங்கள் வலுவில் காணப்படுகின்றன. அரசியலமைப்பில் மாற்றங்கள் கொண்டு வரப்படவில்லை. குறைந்தபட்சம் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு முன்வைக்கப்படவில்லை. எமது மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைக்கு குறைந்தபட்ச பொறுப்புக்கூறல் ஏனும் இடம்பெறவில்லை.

யதார்த்தம் இவ்வாறிருக்க நடைமுறையில் இப்போதைக்கு பிரச்சினையில்லை என அரசாங்கம் சமாளிப்புச் செய்கின்றது. இனப்பிரச்சினையினையினை, மனிதாபிமானப்பிரச்சினைக்குத் தீர்வின்றி நடைமுறையில் அரச நிர்வாகத்தில் சமாளிப்புக்களைச் செய்வதன் வாயிலாக எல்லோரையும் ஏமாற்ற அரசு நினைக்கின்றது.

இவ்விடத்தில் நாங்கள் ஓர் இனமாக இலட்சியத்தினால் ஒன்றுபட்டவர்களாக சர்வதேசம் ஏற்றுக்கொண்ட எமது சுயநிர்ணய உரிமைக்காக நாம் போராடவேண்டியுள்ளது. அதற்கு தியாகி திலிபன் அவர்களது தியாகங்கள் எமக்கு வழிகாட்டியாகவுள்ளன. இவ்வாறு ரெலோ வின் தலைமை குழு உறுப்பினரும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

Posted in Uncategorized

திலிபனுக்கு வலி கிழக்கு பிரதேச சபையில் அஞ்சலி வீதிக்கு பெயரிடவும் சபையில் சிலை அமைக்கவும் தீர்மானம்

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையில் தியாக தீபம் திலிபனின் நினைவு தினத்தினம் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டதுடன் திலிபனின் தியாகத்திற்கு மதிப்பளிக்குமுகமாக தீர்மானங்களும் மேற்கொள்ளப்பட்டன.

வியாழக்கிழமை காலை ரெலோ வின் தலைமை குழு உறுப்பினரும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளருமான தியாகராஜா நிரோஷ; தலைமையில் சபை முன்றலில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. விடுதலைப் போராட்ட வரலாற்றில் தம் இன்னுயிர்களை தியாகம் செய்த மாவீரர்கள் பொதுமக்களுக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டது. அஞ்சலிச்சுடரினை இந் நாள் பிரதேச சபையின் உறுப்பினர் விஜயதாரணி ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து மலர் வணக்கம் செலுத்தப்பட்டது. தொடந்து தவிசாளரினால் அஞ்சலியுரை நிகழ்த்தப்பட்டது.

உறுப்பினர்களும் தமது அஞ்சலிகளை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற பிரதேச சபையின் அவை அமர்வில் தியாக தீபத்தினை நினைவு கூர்ந்து முன்னைய காலங்களில் திலிபன் வீதி என பிரயோகத்தில் காணப்பட்டு பின்னரான சூழ்நிலையில் பொக்கணை வீதி காணப்படும் வீதியை புனரமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படுவடுவதற்கும் அவ் வீதியின் பெயரை நிர்வாக நடைமுறைகளுக்கு அமைவாக திலிபன் வீதி என மீளவும் மாற்றியமைக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதற்கும் தீர்மானம் எடுக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தியாக தீபம் திலிபன் அவர்கள் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்கு உட்பட்ட கிராமத்தினைச் சேர்ந்தவர் என்ற அடிப்படையில் வலிகாமம் கிழக்கு பிரதேச சபை வளாகத்தில் தியாக தீபம் திலிபன் அவர்களுக்கு திருவுருவச் சிலையினை 1975 ஆம் ஆண்டின் 4 இலக்க காட்சிப்படுத்தல் சட்டத்தின் பிரகாரம் உள்ள10ராட்சி அமைச்சரின் அனுமதியைப் பெற்று நிறுவுவதெனவும் தவிசாளர் தியாகராஜா நிரோஷpனால் அவைத் தீர்மானத்திற்காக முக்வைக்கப்பட்டது. இத் தீர்மானங்கள் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ஐ.நா வதிவிடப் பிரதிநிதியிடம் தமிழ் மக்களின் நீதி கோரிய மகஜர் கையொப்பங்களுடன் கையளிப்பு!

ஐநாவின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி திரு மார்க் அண்ட்ரே பிரான்சே அவர்களிடம் அனைத்து தமிழ்த் தேசியக் கட்சிகளும் ஒன்றிணைந்து கையெழுத்துப் போராட்டத்தில் பெற்றுக் கொண்ட கையொப்பங்கள் இன்றைய தினம் கொழும்பில் கையளிக்கப்பட்டன.

23-09-2025 செவ்வாய் மாலை 3:30 மணியளவில் கொழும்பில் உள்ள ஐநா அலுவலகத்தில் இச்சந்திப்பு நடைபெற்றது.

இக்கையொப்பங்களுடன் தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்கள் ஒன்றிணைந்து கையொப்பமிட்ட கடித வரைவும் கையளிக்கப்பட்டது.

தமிழ் தேசிய கட்சிகளின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ செல்வம் அடைக்கலநாதனும், சமத்துவ கட்சியின் செயலாளர் நாயகம். சந்திரகுமார் அவர்களும், கட்சிகளின் ஒருங்கிணைப்பாளரான குருசுவாமி சுரேந்திரனும் இச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

ஐநா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருக்கு எழுதப்பட்டு ஐநா செயலாளர் நாயகத்துக்கும் பாதுகாப்பு சபைக்கும் மனித உரிமைகள் பேரவையின் அங்கத்துவ நாடுகளின் பிரதிநிதிகளுக்கும் பிரதி செய்யப்பட்டுள்ள இக் கடிதத்தில் நீதியரசர் திரு சீ.வீ. விக்னேஸ்வரன், கெள.கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சார்பில் திரு செ. கஜேந்திரன், கௌ. செல்வம் அடைக்கலநாதன், திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன், திரு சுரேஷ் பிரேமச்சந்திரன், திரு. முருகேசு சந்திரகுமார் மற்றும் திரு எஸ். நவீந்திரா (வேந்தன்)
ஆகியோர் கையொப்பம் இட்டு இருந்தனர்.

காலம் காலமாக தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அட்டூழிய குற்றங்களுக்கான நீதியை விரைந்து நிலை நாட்டவும், பிரதானமாக செம்மணி உட்பட எமது வடக்கு கிழக்கு தாயகத்தில் அடையாளப்படுத்தப் படும் மனிதப் புதைகுழிகளில் தொடர்ந்தும் அகழ்வுப் பணிகளை முன்னெடுக்கவும், கண்டெடுக்கப்படும் ஆதாரங்களை உறுதிப்படுத்துவும் சர்வதேச மேற்பார்வையுடன் கூடிய ஆலோசனே, தொழில்நுட்பம், நிதி, பாதுகாப்பு என பல கோரிக்கைகள் இக்கடிதத்தில் உள்ளடங்கியிருந்தன. அவற்றை நேரடியாகவும் ஐநா ஒருங்கிணைப்பாளரிடம் இச்சந்திப்பின்போது தமிழ் மக்களின் பிரதிநிதிகளால் வலியுறுத்தப்பட்டன.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாக நடந்த இச்சந்திப்பு கையெழுத்து ஆவணங்களையும் கடிதப் பிரதியையும் கையளித்ததுடன் முடிவு பெற்றது.

கு. சுரேந்திரன்
பேச்சாளர்-ரெலோ
கட்சிகளின் ஒருங்கிணைப்பாளர்