இலங்கை தமிழர்களுக்கு நிரந்தர வீடுகள்; தமிழக முதல்வர் திறந்து வைத்தார்

தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் முதல் முறையாக இலங்கை தமிழர்களுக்காக அனைத்து வசதிகளுடனும் கூடிய நிரந்தர வீடுகளைக் கொண்ட மறுவாழ்வு முகாம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொளி மூலம் திறந்து வைத்துள்ளார்.

இந்த நிரந்தர வீடுகள் திண்டுக்கல்லில் இலங்கை அகதிகள் குடியிருந்த தோட்டனூத்து, அடியனூத்து, கோபால்பட்டியில் உள்ள முகாம்களை ஒருங்கிணைத்து கட்டப்பட்டுள்ளன.

மேலும், உட்கட்டமைப்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

17.84 கோடி இந்திய ரூபா செலவில் தலா 300 சதுர அடியில் 321 குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.

தமிழக முகாம்களில் வாழும் இலங்கையர்கள் நீண்ட நாட்களாக நிரந்தர குடியிருப்புகளுக்கான கோரிக்கைகளை முன்வைத்து வந்த நிலையில், முதன் முறையாக நிரந்தர குடியிருப்பு வசதிகளை தமிழக அரசாங்கம் ஏற்படுத்திக்கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

இலங்கைக்கு எதிராக அணி திரளும் நாடுகள்

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவது தொடர்பான ஆரம்ப பிரேரணையை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடரில் சமர்ப்பிக்க பல நாடுகள் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், ஜெர்மன், கனடா, மலாவி, வடக்கு மெசடோனியா மற்றும் மென்டிநிட்ரோ ஆகியவை இந்த நாடுகளில் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்க இந்திய ஜப்பான் அவுஸ்திரேலிய தூதுவர்கள் சந்திப்பு – இலங்கை குறித்து ஆராய்ந்தனர்

இந்தியா அவுஸ்திரேலிய ஜப்பான் தூதுவர்கள் இன்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலிசங்கை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளனர்.

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் இதனை தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

இலங்கையிலும் பிராந்தியத்திலும் பரஸ்பர அக்கறைக்குரிய விடயங்கள் குறித்த பேச்சுவார்த்தைகளிற்காக புதிய தூதரகத்திற்கு அவுஸ்திரேலிய இந்திய ஜப்பான் தூதரகங்களை சேர்ந்த எனது சகாக்களை வரவேற்று மகிழ்ச்சியடைந்தேன் என அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை மக்களிற்கான எமது உறுதிப்பாட்டை பகிர்ந்துகொள்ளும் பிராந்திய பங்காளிகளின் தொடர்பு மற்றும் ஒத்துழைப்பு நான் நன்றியுள்ளவனாக உள்ளேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மஹிந்த தலைமையில் புதிய கூட்டணி? பதிலடிகொடுக்கத் தயாராகும் எதிரணி!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் புதிய அரசியல் கூட்டணி அமைக்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பதில் தலைவர் தெரிவித்துள்ளார்.

பிரதி தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

அந்த கூட்டணியின் பிரதான கட்சியாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன செயற்படும் எனவும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அதனை நிர்மாணிப்பதற்கான அரசியல் குழுக்களுடன் ஏற்கனவே பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அந்தப் பேச்சுக்கள் வெற்றிகரமான மட்டத்தில் உள்ளதாகவும் நாமல் ராஜபக்ஷ மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் அதிகார தளம் வீழ்ச்சியடையாமல் அதனை மீளக் கட்டியெழுப்புவதற்கும், எதிர்வரும் தேர்தலை திடமாக எதிர்கொள்வதற்கும் பல வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் நாமல் ராஜபக்ச எம்.பி. தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவினால் ஆரம்பிக்கப்படவுள்ள இந்த புதிய கூட்டணியின் மூலம் நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்திற்கு பொதுஜன பெரமுன தலைமைத்துவத்தை வழங்கும் என நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

தடிகம பகுதியில் அண்மையில் நடந்த அரசியல் நிகழ்ச்சி ஒன்றில் ராஜபக்ச இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், மகிந்த தரப்பில் இருந்து பிரிந்து சென்ற சுயாதீன அரசியல்கள், இதற்கு எதிரான பிரசாரத்தை ஆரம்பிக்கவும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Posted in Uncategorized

இலங்கை இனப்படுகொலை; ஈழத்தமிழர்களுக்கு அதிகாரம்” – ராமதாஸ் வலியுறுத்தல்

இலங்கை இனப்படுகொலைகள் நிகழ்ந்து 13 ஆண்டுகள் ஆகியும் அதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படாததை ஏற்க முடியாது என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இலங்கையில் வாழும் ஈழத்தமிழர்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கான நடவடிக்கைகளை சிங்கள ஆட்சியாளர்கள் மேற்கொள்ளவில்லை; இனியும் தாமதிக்காமல் அதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை பேரவையில் இந்தியா வலியுறுத்தியுள்ளது. ஈழத்தமிழர்களுக்கு நீதி வழங்குவதில் இந்தியாவின் நிலை வரவேற்கத்தக்கது; ஆனால், போதுமானதல்ல.

ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமை பேரவையின் 51-ஆவது கூட்டத்தில் நேற்று உரையாற்றிய இந்திய தூதர், ”ஈழத்தமிழர்களுக்கு அதிகாரம் வழங்குவதற்காக இலங்கை அரசியலமைப்பு சட்டத்தில் செய்யப்பட்ட 13-ஆவது திருத்தத்தை முழுமையாக செயல்படுத்துதல், மாகாண அவைகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்குதல், நீண்டகாலமாக தேர்தல் நடத்தப்படாமல் இருக்கும் மாகாண அவைகளுக்கு உடனே தேர்தல் நடத்துதல் ஆகியவற்றின் மூலம் ஈழத்தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படும் என்று அளித்திருந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில், அளவிடக்கூடிய முன்னேற்றம் எதையும் இலங்கை அரசு எட்டவில்லை” என்று குற்றஞ்சாட்டினார். ஒருங்கிணைந்த இலங்கைக்குள் தமிழர்களுக்கு நீதி, அமைதி, சமத்துவம் மற்றும் கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்ய வேண்டும் என்பதுதான் இந்தியாவின் நிலைப்பாடு; இதை இலங்கை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இலங்கையில் சிங்களர்கள் மட்டுமே ஆட்சிக்கு வர முடியும்; இலங்கை ஆட்சியாளர்களின் மனதில் இருந்து சிங்கள பேரினவாத உணர்வையும், தமிழர்கள் வெறுப்பு மனநிலையையும் அகற்ற முடியாது என்ற சூழலில் இலங்கை இனச்சிக்கலுக்கு தனித்தமிழ் ஈழம் மட்டுமே தீர்வு என்று பாட்டாளி மக்கள் கட்சி உறுதியாக நம்புகிறது. ஆனால், அதற்கான அரசியல் மற்றும் சட்டரீதியான பயணம் மிக நீண்டது என்பதால், அதுவரை ஈழத்தில் வாழும் தமிழர்கள் கண்ணியமாகவும், சுதந்திரமாகவும் வாழ வகை செய்ய வேண்டும்; அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய பெருங்கடமை இந்தியாவுக்கு உண்டு என்று பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இத்தகைய சூழலில் ஈழத்தமிழர்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தியிருப்பது மனநிறைவை அளிக்கிறது.

ஆனால், இந்த வலியுறுத்தல் மட்டுமே ஈழத்தமிழர்களுக்கு அதிகாரத்தை பெற்றுத் தந்து விடாது என்பதை இந்தியா உணர வேண்டும். ஈழத்தமிழர்களுக்கு ஓரளவாவது அதிகாரத்தை வழங்குவதற்கான 13-ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம், 1987-ஆம் ஆண்டு இந்திய – இலங்கை ஒப்பந்தத்தைத் தொடர்ந்து செய்யப்பட்டதாகும். இந்தியா நினைத்திருந்தால் 13-ஆவது அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தை அடுத்த சில ஆண்டுகளில் செயல்படுத்தி தமிழர்களுக்கு அதிகாரத்தை பெற்றுக் கொடுத்திருக்க முடியும். ஆனால், அதன்பின் 35 ஆண்டுகள் ஆகியும் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை; அரைகுறை அதிகாரங்களுடன் ஏற்படுத்தப்பட்ட மாகாண அவைகளும் முடக்கப்பட்டு விட்டன. வடக்கு – கிழக்கு மாநிலங்களின் இணைப்பும் ரத்து செய்யப்பட்டு விட்டது. இப்படியாக ஈழத்தமிழர்களுக்கு அதிகாரம் வழங்குவதற்கான இந்தியாவின் முயற்சி ஒரு செ.மீ கூட நகராமல் முடங்கிக் கிடக்கிறது.

பன்னாட்டு அவைகளிலும், இரு தரப்பு பேச்சுகளின் போதும், 13-ஆவது அரசியலமைப்புச் சட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று இந்தியா இதுவரை நூறு முறை வலியுறுத்தியிருக்கும். இப்போது 101-ஆவது முறையாக வலியுறுத்துவதால் மட்டும் எந்த பயனும் ஏற்பட்டுவிடாது. மாறாக, இலங்கைக்கு அழுத்தம் கொடுத்து ஈழத்தமிழர்களுக்கு குறைந்தபட்ச அதிகாரத்தையாவது பெற்றுத்தர வேண்டும்.

கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை, அதன் அடிப்படைத் தேவைகளுக்குக் கூட இந்தியாவைத் தான் நம்பியிருக்கிறது. இத்தகைய சூழலில், 13-ஆவது அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தின் அம்சங்களை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தொடங்க வேண்டும். அவற்றில் ஏற்படும் முன்னேற்றங்களின் அடிப்படையில் தான் உதவிகளை வழங்க முடியும் என்று நிபந்தனை விதிப்பதன் மூலம் ஈழத்தமிழர்களுக்கு அதிகாரம் பெற்றுத் தர இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஐ.நா. மனித உரிமை பேரவையில் ஈழத்தமிழர்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என வலியுறுத்திய இந்தியா, அங்கு நடைபெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைகளுக்கு காரணமானவர்களை தண்டிப்பது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்காதது ஏமாற்றமளிக்கிறது. இலங்கை இனப்படுகொலைகள் நிகழ்ந்து 13 ஆண்டுகள் ஆகியும் அதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படாததை ஏற்க முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

இலங்கையில் இழைக்கப்பட்ட பொருளாதார குற்றம் தொடர்பில் ஐ.நா பேரவையில் கவனம்

இலங்கையில் இழைக்கப்பட்ட பொருளாதார குற்றம் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

ஆணையாளரின் அறிக்கையில் இந்த விடயம் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், பொருளாதார குற்றம் தொடர்பிலான குற்றச்சாட்டு ஆணைக்குழுவிற்கு அப்பாற்பட்ட விடயமென நேற்றைய அமர்வின் போது வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார்.

அனைத்து மக்களினதும் மனித உரிமைகளை பாதித்துள்ள பொருளாதார நெருக்கடிக்கு நிலையான தீர்வினை வழங்குவதாக இருந்தால், ஊழல் மோசடிகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளரின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த காலங்களிலும் அண்மையிலும் இலங்கையில் இடம்பெற்றுள்ள மனித உரிமை மீறல்கள் ,பொருளாதார குற்றங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஆணையாளர் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

சீனாவிற்கு கொடுத்து எமது கடல் வளத்தை அழிக்க வேண்டாம் – ஊர்காவற்றுறை பிரதேச கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவர்

தீவகத்தில் கடலட்டை பண்ணை அமைக்கவேண்டாம் சீனாவிற்கு கொடுத்து எமது கடல் வளத்தை இல்லாது செய்யவேண்டாம் என ஊர்காவற்றுறை பிரதேச கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவர் சிவநேசபிள்ளை சிவச்செல்வன் தெரிவித்தார்.

யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதேஅவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தீவகத்தை பொறுத்தவரையில் ஆழ்கடல் மீன்பிடியை விட களப்பு கடலை நம்பி தொழில் செய்கின்றவர்களே அதிகம்.

இவர்களது வாழ்வாதாரத்தை யாரும் சிந்திப்பதாக தெரியவில்லை.

கடலட்டை வளர்ப்பு என்பது அந்நியச் செலாவணியை ஊக்குவிக்கும் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது. தீவகப் பகுதிகளில் கடலட்டை பண்ணைகளை உருவாக்குவதற்கான இடங்கள் சீன நாட்டுக்கு வழங்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனால் மீன் வளங்கள் பெரும்பாலும் இல்லாமல் போகும் என்பதுடன் களப்பு கடலை நம்பி தொழில் செய்பவர்கள் பாதிப்படைவார்கள். இதனை கடற்றொழில் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் கவனத்தில் எடுத்து செயற்பட வேண்டும்.

கடலட்டை பண்ணை அமைக்க அனுமதிக்கும்போது அப்பகுதியை சேர்ந்தவர்களுடன் கலந்துரையாடாமல் அனுமதிக்கப்படுவதுடன், அவர்கள் இடத்தை அடையாளப்படுத்தி விட்டு செல்கின்றார்கள். நேரடியாக அரசாங்கத்திடம் அனுமதி எடுத்து விட்டு வருகின்றார்கள்.

இது தொடர்பாக மக்களுக்கு எதுவும் தெரியாது. ஆகவே எமக்கு தகவல் தெரிந்தவுடன் இதனை ஊடகங்கள் ஊடாக தெரிவித்து எமது எதிர்ப்பை வெளிப்படுத்துகிறோம் – என்றார்.

இந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட மெலிஞ்சிமுனை கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்க தலைவர் மடுத்தின் பெனடிக், கடலட்டை வளர்ப்புக்கு அனுமதி கொடுக்கப்பட்டால் கடற்றொழிலாளர்களை அது பாதிக்கும் என்றும் கடலட்டை பண்ணைக்கான அனுமதி வழங்ப்படுகின்றது என்றார்.

கடல் தொடுவாய்களை மறைத்து கடலட்டை பண்ணைகள் கட்டப்படுவதனால் மீன்வரத்து குறைந்து கடற்றொழிலாளர்கள் பாதிப்பை எதிர்கொள்வார்கள்.

செயற்கை தொழில்களால் இயற்கை தொழில்கள் தீவகத்தில் பாதிக்கப்படுவதை நாம் விரும்பவில்லை.சீனாவுக்கு எங்களுடைய கடல் வளத்தை கொடுப்பதை முற்றும் முழுதாக நாங்கள் விரும்பவில்லை. எங்களிடம் வளம் இருக்கின்றது.

இன்னொரு நாட்டிடம் அதனை கொடுத்து வளத்தை பெற வேண்டிய அவசியமில்லை. வெளிநாட்டுக்கு வளங்களை கொடுத்து நாங்கள் இன்னொரு நாட்டிடம் வளங்களை பெற வேண்டிய அவசியம் இல்லை தீவக மக்களிடமும் எமது பகுதி புலம்பெயர்ந்த மக்களிடம் இதற்கான வளங்கள் இருக்கின்றன.

கடற்றொழில் அமைச்சரிடம் இது தொடர்பாக முறையிட்ட போதும் அதையும் மீறி கடலட்டை பண்ணை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றார்.

Posted in Uncategorized

இலங்கையில் நிலவும் இக்கட்டான சூழலைப் பயன்படுத்தி தமது அபிலாஷைகளை நிறைவேற்ற சிலர் முயற்சி – சீனா

இலங்கையில் நிலவும் இக்கட்டான சூழலைப் பயன்படுத்தி தமது அபிலாஷைகளை நிறைவேற்றும் சில தரப்பினரின் முயற்சிகளை தாம் எதிர்ப்பதாக சீனா தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வில் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பான அறிக்கை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜெனீவாவிலுள்ள சீனாவின் நிரந்தரப் பிரதிநிதி சென் ஜு இவ்வாறு தெரிவித்தார்.

இதேவேளை, சமூக ஸ்திரத்தன்மையை பேணுவதற்கும், இறையாண்மை மற்றும் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கும் இலங்கைக்கு பலமான ஆதரவு வழங்கப்படும் என கூறியுள்ளார்.

இதேவேளை, தமிழ் சிறுபான்மை இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றை வழங்காமை குறித்து தான் கவலையடைவதாக விவாதத்தில் கலந்துகொண்ட இந்திய பிரதிநிதி இந்திரன் மணிபாண்டே தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தின் முன்னிலையில் பாரப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை கனடா பிரதமர் எடுக்கவேண்டும் – கனடா தமிழ் அமைப்புகள் கூட்டாக வேண்டுகோள்

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தற்போதைய அமர்வில் இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தின் முன்னிலையில் பாரப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை கனடா பிரதமர் எடுக்கவேண்டும் என கனடாவின் பல அமைப்புகளும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கனடாவின் தமிழ் அமைப்புகளும் ஒன்டாரியோ மாகாண நாடாளுமன்ற உறுப்பினர் லோகன் கணபதியும் கூட்டாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடிதமொன்றை எழுதியுள்ளனர்.

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான முதன்மை நாடுகளின் குழுவில் கனடா காணப்படுவதால் இலங்கை தொடர்பான தீர்மானத்தை உருவாக்குவதில் கனடா முக்கிய பங்கை வகிக்கின்றது என கனடா அமைப்புகள் தெரிவித்துள்ளன.

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான முதன்மை நாடுகளின் குழுவில் கனடா காணப்படுவதால் கனடாவை சேர்ந்த குழுக்களும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளும் மனித உரிமை பேரவையின் தற்போதைய அமர்வு குறித்தும் யுத்த குற்றங்கள் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் தமிழ் மக்களிற்கு எதிராக இழைக்கப்பட்ட இனப்படுகொலைகளிற்கு பொறுப்புக்கூறுவதில் தொடர்ச்சியாக தோல்வியேற்படுவது குறிpத்த எங்கள் கரிசனையை தெரியப்படுத்துவதற்காக உங்களிற்கு இந்த கடிதத்தை எழுதுகின்றோம்,என தமிழ் அமைப்புகள் தெரிவித்துள்ளன

கனடா பிரதமருக்கான கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

இலங்கை தமிழ் சமூகத்தின் பெரும்பான்மையான தரப்பினரும் இலங்கையை ஐநா சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தவேண்டிய அவசர நிலைமை தொடர்பில் இலங்கை தொடர்பான முதன்மை நாடுகளை தொடர்புகொண்டுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் இந்த அமர்வில் ஐநா தீர்மானங்களை இலங்கை நிறைவேற்றியுள்ளதா என்பது குறித்து மதிப்பிடப்படும். 2021 ம் ஆண்டு மார்ச் மாத அறிக்கையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் பரிந்துரைத்தபடி மனித உரிமைகளிற்கான ஐக்கியநாடுகளின் நான்கு முன்னாள் ஆணையாளர்களும் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு அறிக்கைகளை வெளியிட்ட 9 அறிக்கையாளர்களும் இலங்கை தொடர்பான ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகத்தின் நிபுணர்கள் குழுவில் இடம்பெற்றிருந்த அனைத்து உறுப்பினர்களும் பரிந்துரைத்தபடி இலங்கயை சர்வதேச நீதிமன்றத்தின் முன்னிலையில் பாரப்படுத்துமாறு வேண்டுகோள் விடுக்கும் வலுவான தீர்மானத்தை 13 வருடங்களி;;ற்கு முன்னர் குற்றங்களிற்கு பொறுப்புக்கூறுவதற்காக சமர்ப்பிக்குமாறு நாங்கள் உங்களை கேட்டுக்கொள்கின்றோம்.

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன்னிலையில் பாரப்படுத்துமாறு வேண்டுகோள் விடுக்கும் நடவடிக்கைக்கு குறைவான நடவடிக்கை எதுவும் எங்கள் மக்கள் எதிர்கொண்ட பாரிய அநீதிக்கு நீதியை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகளை இல்லாமல் செய்துவிடும் என கனேடியர்களாகிய நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன்னிலையில் பாரப்படுத்துமாறு வேண்டுகோள் விடுக்கும் நடவடிக்கைக்கு குறைவான நடவடிக்கைகள் இலங்கை அதிகாரிகளும் பாதுகாப்பு படையினரும் எந்த தயக்கமும் இன்றி இலங்கையில் தமிழர்களிற்கு எதிராக பாரிய அநீதிகளில் ஈடுபடும் நிலையை ஏற்படுத்தும்.

Posted in Uncategorized

அலி சப்ரியின் கருத்துக்கு கடும் கண்டனம்!

ஜெனீவாவில் நேற்று (12) ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமான நிலையில் அங்கு கருத்து தெரிவித்த இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியின் கருத்துக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளதோடு தமக்கு சர்வதேச விசாரணையே தேவை எனவும் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளவர்களின் உறவுகள் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளவர்களின் உறவுகள் சங்க தலைவி மரியசுரேஷ் ஈஸ்வரி மற்றும் செயலாளர் பிரபாகரன் றஞ்சனா ஆகியோர் சற்று முன்னர் முல்லைத்தீவு ஊடக அமையத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தனர்.

அவர்கள் மேலும் கருத்து தெரிவிக்கையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமான நிலையில் அங்கு இலங்கை தொடர்பான விடயத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது விடயம் தொடர்பில் சர்வதேச விசாரணையை தொடர்ச்சியாக கோரிவரும் எமக்கு சர்வதேச விசாரணையை வலியுறுத்தி எந்த விடயமும் முன்வைக்கப்படாமையானது கவலையளிக்கிறது. இதேவேளை, இந்த கூட்டத்தொடரில் சர்வதேச விசாரணையை தொடர்பான தீர்ணம் கொண்டுவரப்பட வேண்டும் என வலியுறுத்துக்கிறோம்.

இதேவேளை, பாதிக்கப்பட்ட தரப்புக்களாக நாம் இன்று 13 ஆண்டுகளாக போராடி எந்த தீர்வும் இல்லாது சர்வதேச விசாரணையை வலியுறுத்தி ஆரம்பித்த தொடர்ச்சியான போராட்டம் இன்று 2015 ஆவது நாளாக தொடர்கிறது. இந்நிலையில் ஜெனீவாவில் நேற்று (12) ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமான நிலையில் அங்கு கருத்து தெரிவித்த இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியின் கருத்தானது எமது உணர்வுகளை புரந்தள்ளி அரசை பாதுகாப்பதாக அமைந்துள்ளதோடு குறித்த கருத்துக்கு கடும் கண்டணத்தையும் வெளியிட்டுள்ளனர்.