கோட்டாபயவின் பாதுகாப்பு தொடர்பில் ஜனாதிபதியிடம் பொதுஜன பெரமுன வலியுறுத்தல்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பாக நாடு திரும்புவதற்கு இடம் வழங்கப்பட வேண்டுமென பொதுஜன பெரமுனவினர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் நேற்று பிற்பகல் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி அலுவலகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது கருத்து தெரிவித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, தற்போதைய பொருளாதார நெருக்கடியை தீர்த்து நாட்டை கட்டியெழுப்ப ஜனாதிபதிக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பூரண ஆதரவை வழங்கும் என தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பாக நாடு திரும்புவதற்கு இடம் வழங்கப்பட வேண்டுமெனவும் பசில் ராஜபக்ஷ இந்த கலந்துரையாடலில் தெரிவித்தார்.

இது, ஜனாதிபதி உட்பட அரசாங்கத்திடம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்வைக்கும் மிக முக்கியமான கோரிக்கையாகும் என பசில் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

இந்த கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி பிரசன்ன ரணதுங்க, சாகர காரியவசம், ரோஹித அபேகுணவர்தன, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, பவித்ரா வன்னியாராச்சி, நாமல் ராஜபக்ஷ மற்றும் சஞ்சீவ எதிரிமான்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை

யுவோன் ஜோன்சன் என்ற 19 வயது யுவதியை கொலை செய்த குற்றச்சாட்டில் மரண தண்டனை அனுபவித்து வந்த ஜூட் ஷமன் அந்தோனி ஜயமஹா, மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவி வகித்த போது பொதுமன்னிப்பில் விடுவிக்கப்பட்டார்.இதன்போது இடம்பெற்றதாக கூறப்படும் இலஞ்சம் ஊழல் தொடர்பான விசாரணையின் ஒரு அம்சமாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று வியாழக்கிழமை சுமார் 03 மணிநேரம் விசாரணை நடத்தி வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர்.

அத்துரலியே ரதன தேரர் செய்த இரண்டு முறைப்பாடுகளின் அடிப்படையிலேயே குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.கொழும்பில் உள்ள முன்னாள் ஜனாதிபதியின் இல்லத்தில் வைத்து மைத்திரிபால சிறிசேனவிடம் இது தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

”மீண்டும் ஜனாதிபதியுடன் பேசத் தயார்”: சஜித்

பயனளிக்கும் மறுசீரமைப்பு செயற்பாட்டின் ஊடாக நாட்டைக் கட்டியெழுப்பும் நோக்கில் ஜனாதிபதியுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தத் தான் தயார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

வரப்பிரசாதங்கள் சலுகைகளைப் பெறுவதற்குப் பதிலாக பிரயோக ரீதியாக தலையிட்டு நாட்டைக் கட்டியெழுப்புவதே தமது நோக்கமாகும் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், அரசாங்கம் கொண்டு வரும் நேர்மறையான, முற்போக்கான முன்மொழிவுகளை ஆதரிக்கும் வகையில் ஒரு வேலைத்திட்டம் வடிவமைக்கப்படும் எனவும், ஒருபோதும் மக்களின் எண்ணங்களுக்கும், விருப்பங்களுக்கும் துரோகம் இழைக்கமாட்டேன் எனவும் அவர் தெரிவித்தார்.

அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொண்டு கையிருப்பில் எஞ்சியுள்ள டொலர்களை அழிக்கும் செயற்பாட்டிற்கு ஒருபோதும் பங்களிக்கப்போவதில்லை என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,தற்போது அனைத்து துறைகளிலும் வீழ்ச்சியடைந்துள்ள நாட்டை கட்டியெழுப்ப பதவிகள் அவசியமில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

மறுசீரமைப்புகளுக்கான புத்திஜீவிகள் ஒன்றியத்தின் விசேட கூட்டம் இன்று (19) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம் பெற்றது.

தற்போது நிலவும் சூழ்நிலையில் இருந்து நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டம் தொடர்பில் நீண்ட கலந்துரையாடல் இதன்போது இடம்பெற்றது.

Posted in Uncategorized

பா.உ ஜனாவின் நிதி ஒதுக்கீட்டில் அமைப்புகள், கழகங்களுக்குஉபகரணங்கள் வழங்கிவைப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம்( ஜனா) அவர்களின் 2022ம் ஆண்டின் முதல் காலாண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் அமைப்புகள் மற்றும் கழகங்கள் சிலவற்றுக்கான தளபாடங்கள், விளையாட்டு உபகரணங்கள் இன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டது.

கோரளைப்பற்று வாழைச்சேனை, மண்முனை மேற்கு வவுணதீவு, மண்முனைப் பற்று ஆரயம்பதி பிரதேச செயலாளர் பிரிவுகளின் கீழ் இயங்கும் அமைப்புகள், கழகங்களுக்கான உபகரணங்களே இன்று வழங்கப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் அவர்களிடம் மேற்படி கழகங்களால் மேற்கொள்ளப்பட்ட வேண்டுகோளின் அடிப்படையில் 2022ம் ஆண்டின் முதல் காலாண்டுக்கான நிதி ஒதுக்கீட்டின் மூலம் உரிய பிரதேச செயலங்களினூடாக உபகரணங்கள் கொள்வனவு செய்யப்பட்டது. இருப்பினும் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார பிரச்சனைகள், அரசியல் குழப்பங்கள் போன்றவற்றின் காரணமாக உபகரணங்கள் கையளிக்கும் செயற்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்து தற்போது அவை உரிய அமைப்புகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.

அதனடிப்படையில் இன்றைய தினம் மேற்குறிப்பிட்ட மூன்று பிரதேச செயலாளர் பிரிவுகளின் கீழுள்ள அமைப்புகளுக்கு தளபாடங்கள், உபகரணங்கள் கையளிப்பட்டது.

இந்நிகழ்வில்  முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம், மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபை உறுப்பினர் வேணு ஆகியோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் ஆசிய-பசிபிக் பிரதிநிதி – யாழ் மாவட்ட செயலாளர் சந்திப்பு

ஐ.நா. அபிவிருத்தி ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் ஆசிய-பசிபிக் பிராந்தியத்திற்கான பிராந்திய பணிப்பாளர் டேவிட் மெக்லாக்லன்-கார் கடந்த ஓகஸ்ட் 16 ஆம் திகதி இலங்கைக்கு வருகைதந்ததுடன் பல்வேறு தரப்புக்களையும் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் ஆசிய-பசிபிக் பிராந்தியத்திற்கான பணிப்பாளர் டேவிட் மெக்லாக்லன்-கார் இன்றையதினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தார்.

இன்று காலை 9 மணியளவில் யாழ் மாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலாளர் மகேசனை டேவிட் மெக்லாக்லன்-கார் சந்தித்தார்.இதன்போது இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கரும் உடனிருந்தார்.தற்போதைய பொருளாதார சூழ்நிலையின் காரணமாக வாழ்வாதாரம் மற்றும் கடற்றொழிலுக்கு உள்ள சவால்கள் குறித்து இதன்போது இவர்கள் விரிவாக அரசாங்க அதிபரிடம் கேட்டறிந்துக் கொண்டனர்.

Posted in Uncategorized

இலங்கைக்கு இந்தியா அதிகபட்ச ஆதரவை வழங்கியுள்ளது என்கிறார் ஜெய்சங்கர்

இலங்கைக்கு இந்தியா அதிகபட்ச ஆதரவை வழங்கியுள்ளது நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து விடுபட இலங்கைக்கு இந்தியா அதிகபட்ச ஆதரவை வழங்கியுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இந்த வருடம் மாத்திரம் இலங்கைக்கு 3.8 பில்லியன் அமெரிக்க டொலர்களை உதவியாக வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் கூறுகிறார்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெயசங்கர் தாய்லாந்தில் உள்ள சூலாங்கோர்ன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற உரையில் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதிய திட்டத்தில் இலங்கைக்கு தேவையான ஆதரவு வழங்கப்படும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஐநா பிரதிநிதிகள் ஜனாதிபதி ரணிலை சந்தித்தனர்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்விற்கும் ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (18) பிற்பகல் இடம்பெற்றது.

ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் ஐக்கிய நாடுகளின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்திற்கான அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்கான பெங்கொக் அலுவலகத்தின் பணிப்பாளர் டேவிட் மஸ்னெக்யன் கார் (David Mclachlan-Karr), ஐக்கிய நாடுகளின் நிரந்தர பிரதிநிதி ஹெனா சிங்கர் (Hanaa Singer) மற்றும் ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் அலுவலகத்தின் பிரதானி ஆண்ட்ரியாஸ் கர்பாதி (Andreas Karpati) ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதியின் சர்வதேச விவகாரப் பணிப்பாளர் தினுக் கொழம்பகே, ஜனாதிபதியின் இளைஞர் மற்றும் நிலையான அபிவிருத்தி விவகாரப் பணிப்பாளர் ரந்துல அபேதீர ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Posted in Uncategorized

மே 9 வன்முறை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசேட விசாரணை

கடந்த மே மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பான விசேட விசாரணை நாளை ஆரம்பிக்கப்படும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) தெரிவித்துள்ளது.

குறித்த தினத்தில் பதிவாகிய சொத்து சேதம் தொடர்பான விசாரணைகளுக்காக ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் நாளை முதல் HRCSL வளாகத்திற்கு நாளாந்தம் வரவழைக்கப்படுவார்கள் என மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவி உச்ச நீதிமன்ற நீதிபதி (ஓய்வு பெற்ற) ரோஹினி மாரசிங்க தெரிவித்துள்ளார்.

 

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரியின் தலைமையில் விசாரணைக் குழுவை நியமித்துள்ளது.

கடந்த மே மாதம் 9 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் மற்றும் அதற்குப் பிந்தைய நாட்களில் மனித உரிமை ஆணையத்திற்கு 100க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திகதி முதல் மே 15 ஆம் திகதி வரை நாட்டில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, தமக்கு மொத்தம் 521 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

கம்பஹா மாவட்டத்திலிருந்து 107 முறைப்பாடுகளும், கொழும்பு மாவட்டத்தில் இருந்து 88 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் புவனேக ஹேரத் தெரிவித்துள்ளார்.

86 முறைப்பாடுகள் குருநாகல் மாவட்டத்திலிருந்தும், 26 முறைப்பாடுகள் களுத்துறை மாவட்டத்திலிருந்தும் கிடைத்துள்ளன.

வீடுகளுக்கு தீ வைத்தல் , கட்சி அலுவலகங்களுக்கு தீ வைத்தல் , பஸ்களுக்கு தீ வைத்தது, வீடுகளை சேதப்படுத்தியது போன்ற புகார்கள் இந்த புகார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

அரசாங்க மதிப்பீட்டுத் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்ட அறிக்கைகளின் அடிப்படையில் சேதங்களை மதிப்பிடுவதற்கு அதிகாரிகள் ஏற்கனவே ஆரம்பித்துள்ளனர்.

Posted in Uncategorized

IMF பிரதிநிதிகள் இலங்கைக்கு பயணம் செய்யவுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் தகவல்

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இம்மாத இறுதியில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கியில் இடம்பெற்றுவரும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மீண்டும் சொந்த நாடான அமெரிக்கா செல்ல தயாராகும் கோட்டாபய

தற்போது தாய்லாந்தில் வசித்து வரும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, அமெரிக்காவில் நிரந்தர வதிவிடத்திற்கான ஏற்பாடுகளை ஆரம்பித்துள்ளார்.

அதன்படி, அமெரிக்க கிரீன் கார்டு லாட்டரியை பெறும் நடவடிக்கையை அவர் தொடங்கியுள்ளார்.

அமெரிக்க குடியுரிமை பெற்ற அவர், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் முன் தனது குடியுரிமையை திரும்பப் பெற்றார்.

எவ்வாறாயினும், அவரது மனைவி, மகன் மற்றும் மருமகள் ஆகியோர் அமெரிக்க பிரஜைகள் என்பதால், முன்னாள் ஜனாதிபதி தனது குடியுரிமையை மீளப் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் அமெரிக்க குடியுரிமையை துறந்தவருக்கு அதை திரும்ப வழங்க அமெரிக்க அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

தற்போது தாய்லாந்தில் இருக்கும் திரு கோத்தபாய ராஜபக்ச எதிர்வரும் 24ஆம் திகதி இலங்கை திரும்பவுள்ளதாக உதயங்க வீரதுங்க நேற்று மேலும் குறிப்பிட்டுள்ளார்.