ராஜபக்ச குடும்பத்துக்கு விரைவில் தண்டனை: வசந்த சமரசிங்ச எச்சரிக்கை

நாமல் ராஜபக்ச உள்ளிட்டவர்கள் கொள்ளையடித்த மக்கள் பணம் எங்கிருக்கின்றது என்பதை விரைவில் கண்டுபிடித்து வெளிக் கொணரவுள்ளதாக வசந்த சமரசிங்க எச்சரித்துள்ளார்.

ராஜபக்ச குடும்பம், மக்கள் பணத்தைக் கொள்ளையடித்துள்ளதாக குற்றம் சாட்டிய தேசிய மக்கள் சக்தி அதிகாரத்திற்கு வந்து இரண்டு வாரங்கள் கடந்துள்ளன.

இந்நிலையில், தங்களுடைய ஊழல்களை இதுவரை கண்டுபிடிக்க முடியாமல் ​போனது ஏன் என்று அண்மையில் நாமல் ராஜபக்ச சாடியிருந்தார்.

அதற்குப் பதிலளிக்கும் வகையில் கருத்து வெளியிட்டுள்ள தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க, நாமல் ராஜபக்ச ​போன்றவர்கள் கொள்ளையடித்த பணம் உள்நாட்டில் அல்லது வெளிநாட்டில் சொத்துக்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளதா? வேறு வகையில் பதுக்கப்பட்டுள்ளதா? என்பதை விரைவில் கண்டுபிடித்து வெளிக் கொண்டு வருவோம்.

இது ஊழல்வாதிகள் தாங்கள் இன்னும் மாட்டிக் கொள்ளவில்லை என்று சந்தோசப்பட்டுக் கொண்டிருக்கும் கடைசி மணித்துளிகள் ஆகும்.

மிக விரைவில் அவர்கள் கூண்டோடு மாட்டிக் கொண்டு தங்கள் தவறுகளுக்கான தண்டனையை அனுபவிக்க நேரிடும்” என கடுமையாக எச்சரித்துள்ளார்.

அரசியலில் இருந்து முழுமையாக ஓய்வு பெற தயாராகும் மகிந்த!

அரசியலில் இருந்து முழுமையாக ஓய்வு பெற முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவதில்லை என மகிந்த தீர்மானித்துள்ள நிலையில் அவர் அரசியலில் இருந்து ஓய்வு தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது.

சமகால அரசியலில் நிலவும் பாதகமான சூழல், உடல்நிலை, வயது போன்றவற்றை கருத்தில் கொண்டு அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக மகிந்தவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அரசியலில் ஓய்வு
பாரம்பரிய அரசியல் மீது முன்வைக்கப்பட்ட விமர்சனங்களும் இந்த முடிவிற்கு காரணமாக அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் பல்வேறு இடம்பெற்ற ஊழல், மோசடிகள் தொடர்பில் மகிந்த ஆட்சியில் அங்கம் வகித்த பலர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.இது தொடர்பில் நாட்டு மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

Posted in Uncategorized

பாராளுமன்ற தேர்தலில் சங்கு சின்னத்தில் போட்டி: ரெலோ செயலாளர் பா.உ கோவிந்தன் கருணாகரம் ஜனா

பாராளுமன்ற தேர்தலில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியாக குத்து விளக்குக்கு பதிலாக சங்கு சின்னத்தில் களமிறங்கவுள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (30) காலை நடைபெற்ற ஊடகவியலளார் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழ் தேசியத்தின் மீது பற்றுக்கொண்ட இளைஞர்களை இணையுமாறும் அவர் அழைப்பு விடுத்தார்.

அதேவேளை, இலங்கை தமிழரசுக் கட்சியின் அழைப்பு தொடர்பில் எதிர்காலத்தில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு தீர்மானிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

தமிழரசுக் கட்சியின் பிரித்தானிய கிளையும் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு!

இலங்கைத்தீவில் 21 செப்டம்பர் 2024 இல் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற தமிழ் பொது வேட்பாளருக்கு இலங்கைத் தமிழரசு கட்சியின் பிரித்தானியவுக்கான கிளையானது (ITAK UK(Forum)) தனது முழுமையான ஆதரவை தெரிவிக்கிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரித்தானிய கிளை வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளது. அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
மேற்படி விடையம் சார்பாக ஐக்கிய இராச்சியத்தில் உள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி கிளையானது மாதாந்த கூட்டங்களில் பல தடவை விவாதித்தது. அக்கூட்டங்களில் கலந்துகொண்ட பெரும்பான்மையினருடைய வேண்டுகோளுக்கும், விருப்பிற்கும் இணங்க, 26 மே 2024 அன்று நடந்த பொதுக் கூட்டத்தில் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.
எனினும் தாயகத்தில் தாய் கட்சியின் முடிவுகள் எதுவும் அறிவிக்கப்படாமையினால், தொடர்ந்தும் இந்த விவகாரம் எமது மாதாந்த கூட்டத் தொடரில் விவாதிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது தமிழரசு கட்சியின் மத்திய குழு, தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவளிப்பதில்லை என்ற முடிவு எடுக்கப்பட்ட நிலையிலும், கட்சியின் மாவட்டக் கிளைகளுக்கு இடையே பல்வேறு கருத்து முரண்பாடுகளும், ஆதரவும், எதிர்ப்பும் என்ற நிலை தோன்றியிருந்த நிலையில் தாயகத்தில் உள்ள தமிழரசு கட்சியின் மாவட்ட கிளைகள் பெரும்பாலானவை மத்திய குழுவின் முடிவை நிராகரித்து, மீறி தமிழ் பொது வேட்பாளர்களுக்கு ஆதரவளிப்பது என்ற தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர்.
இந்நிலையில் தாயக மக்களுடைய பெரும்பான்மையினருடைய விருப்பினை கருத்தில் கொண்டும், புலம்பெயர்ந்து வாழ்கின்ற பெரும்பான்மை மக்களுடைய விருப்பினையும் கருத்தில் கொண்டும், இந்த விடயத்தை அறிவியல் பூர்வமாகவும், அரசியல் ராஜதந்திர நடைமுறைக்கு ஊடாகவும். தத்துவார்த்த ரீதியிலும் ஆராய்ந்து இந்த முடிவை எடுத்திருக்கிறோம்.
முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் தமிழ் தேசிய இனம் தனது அனைத்து வகையான தேசியக் கட்டுமானங்களையும் இழந்து, தமிழ்த் தேசியம் சிதைந்து சீரழிவுக்கு உட்பட்டிருக்கிறது. இந்த நிலையில் தமிழ்த் தேசியம் பேசுவோர் பல்வேறு கட்சிகளாக பிளவுபட்டிருக்கும் நிலையில், தமிழ் மக்களை ஒன்று திரட்டி ஒரு தேசியதிரட்சி பெற வைப்பதற்கான ஒரு நடைமுறையான செயல் திட்டம் ஜனாதிபதித் தேர்தல் என்ற வடிவில் தமிழ் மக்களுக்கு கிடைத்திருக்கிறது.
இந்த அரிய வாய்ப்பை தமிழ் மக்கள் தமது தேசிய கட்டுமானங்களை மீள்கட்டுவதற்கும், பிரிந்து போய் இருக்கின்ற கட்சிகளையும், மக்களையும் இணைப்பதற்கும், தமிழ் மக்கள் தமது தேசிய அபிலாசைகளை அடைவதற்குமாக, மக்கள் பேரவா கொண்டுள்ளனர் என்பதை வெளிக்காட்டுவதற்காகவும், தமிழ் தேசிய இனம் தனது சுயநிர்ணய உரிமையை மீட்டெடுப்பதற்கு தொடர்ந்து போராடும் என்பதை வலியுறுத்தி பறைசாற்றுவதற்கும், தமிழ் மக்களின் தேசிய இருப்பை உறுதிப்படுத்தக்கூடிய செயல்முறை என்ற அடிப்படையில் ஜனாதிபதி தேர்தலில் ஒரு தமிழ் பொது வேட்பாளரை நிறுத்தி, தமிழ் மக்களை அவருக்கு வாக்களிக்க வைத்து, தேசியத்தை மீள் உறுதிப்படுத்துதல் என்ற அடிப்படையிலும், தமிழ் மக்கள் பொதுக் கட்டமைப்பு நிறுத்தியுள்ள பொது வேட்பாளர் பா.அரியநேந்திரன் அவர்களுக்கு எமது முழுமையான ஆதரவை தெரிவிக்க வேண்டியுள்ளது.
இந்நிலையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஐ. இராச்சிய கிளையானது, ஏற்கனவே தனது 26மே 2024 மாதாந்த பொது கூட்டத்தில் எடுத்த முடிவான தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவளித்தல் என்ற உறுதியான நிலைப்பாட்டை ஏற்கனவே தாயகத்தின் தாய் கட்சியின் தலைமை காரியாலயத்திற்கு( ITAK HO 30 Martyn Jaffna Sri Lanka) அறிவித்துள்ளோம். இப்போது அந்த முடிவை ஊடக வாயிலாக எம்மின மக்களுக்கு அறியத் தருகிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Posted in Uncategorized

ஏகமனதாக எடுக்கப்பட்ட தமிழரசுக்கட்சி தீர்மானம் : சி.வி.கே.சிவஞானம் தெரிவிப்பு!

மூன்று ஜனாதிபதி வேட்பாளர்களுடைய தேர்தல் விஞ்ஞாபனங்களையும் பரிசீலித்து ஒப்பீட்டு ரீதியிலேதான் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிக்கலாம் என்ற முடிவிற்கு நாங்கள் வந்திருக்கின்றோம் என தமிழரசு கட்சியின் முக்கியஸ்தரும் வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

தமிழரசுக் கட்சியினுடைய நிலைப்பாடு தொடர்பில் நேற்று (12) இடம்பெற்ற ஊடக் சந்திப்பின் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 10ஆம் திகதி இடம்பெற்ற சந்திப்பானது மிகவும் சுமூகமான நிலையிலே இடம்பெற்றது. இதன்போது கருத்து வேறுபாடுகள் பல இருந்தாலும் கூட சஜித்தை ஆதரிப்பது தொடர்பான தீர்மானத்தை மாற்றியமைப்பதோ அல்லது இரத்துச் செய்வதோ என்ற கருத்து எங்களிடையே பகிரப்படவில்லை.

ஆகவே அதனடிப்படையில் அதற்கு பாதகம் இல்லாமல் நாங்கள் எமது கட்சியினுடைய நிலைப்பாட்டை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டிய கடப்பாடு எமக்கு உள்ளது.

அந்தவகையில் இவ்வார இறுதியில் குறித்த உபகுழு கூட இருக்கின்றது. இதில் எடுக்கப்படவுள்ள தீர்மானம் கடந்த 01ஆம் திகதி எடுக்கப்பட்ட தீர்மானத்தை ஒட்டியதாகவே இருக்கும்.

எனினும், வெற்றிவாய்ப்புள்ள வேட்பாளர்களது தேர்தல் விஞ்ஞாபனங்கள் பரிசீலிக்கப்பட்டுள்ளன. அதனடிப்படையிலேதான் ஒப்பீட்டு ரீதியில் அவருடைய தேர்தல் விஞ்ஞாபனம் எங்களுக்கு சாதகமாக இருந்தது.

இதில் தமிழ் மக்கள் தொடர்பான விடயங்களையும் குறிப்பாக சஜித் பிரேமதாச தெரிவித்த பகிரங்க கருத்துக்களையும் உள்ளடக்கியதாவே எமது நிலைப்பாடு இருந்தது. எனவேதான் சஜித்தை ஆதரிக்கலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கின்றோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரை கைது செய்ய உத்தரவு!

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகேவை கைது செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் முன்னிலையாகாததால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொள்ளுப்பிட்டியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது மூவரை தாக்கிய குற்றச்சாட்டிலேயே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

பொதுவேட்பாளரின் சின்னமான சங்கிற்கு மட்டும் புள்ளடியிடுங்கள்: முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை

கூட்டுத்தலைமையை உருவாக்குவதற்காகவே ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளர். எனவே, பொதுவேட்பாளரின் சின்னமான சங்கிற்கு மட்டும் புள்ளடியிடுங்கள் என இரானியேல் செல்வின் தெரிவித்துள்ளார்.

வடமராட்சியில், தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரனை ஆதரித்து இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் உரை நிகழ்த்தும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும்,”சிங்கள தலைவர்களையும், கட்சிகளையும் நாம் ஒரு தரப்பினராகவே பார்க்க வேண்டும். அத்துடன், தமிழ் மக்கள் அனைவரும் ஒரு தரப்பினராக இணைய வேண்டும்.

இவ்வாறு ஒன்றிணைந்து, பலமுள்ள மக்களாக நாம் பேசுவோம். அடிமைத்தனம் என்று எங்கள் மனங்களில் ஊறிப் போயுள்ள விடயங்களை உடைத்தெறிவோம்” என வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளை, தமிழ் மக்கள் உட்பட அனைவரும் ஒன்றிணைந்து பொதுவேட்பாளருக்கு வாக்களிப்போம் என கூறினார்.

Posted in Uncategorized

நாமல் ராஜபக்சவின் பிரசார கூட்டத்தின் மீது கல் வீச்சு!

ஶ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச பங்கேற்கவிருந்த பிரசார கூட்டத்தின் மீது கல் வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அம்பாந்தோட்டை சிறிபோபுர பகுதியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த கல் வீச்சு தாக்குதல்களில் சிறுவன் ஒருவன் காயமடைந்துள்ளான்.

அரகலயவின் போது சஜித் தாக்கப்பட்டதன் பின்னணி குறித்து அம்பலப்படுத்திய அநுர தரப்பு
அரகலயவின் போது சஜித் தாக்கப்பட்டதன் பின்னணி குறித்து அம்பலப்படுத்திய அநுர தரப்பு
அம்பாந்தோட்டை வைத்தியசாலை
காயமடைந்த சிறுவன் அம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த பிரசார கூட்டத்தில் நாமல் ராஜபக்ச, சமல் ராஜபக்ச, ஷிராந்தி ராஜபக்ச ஆகியோர் பங்கேற்கவிருந்தனர்.

கல் வீச்சுத் தாக்குதல்களைத் தொடர்ந்து அவர்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

ஷிராந்தி ராஜபக்ச, காயமடைந்த சிறுவனை பார்வையிட அம்பாந்தோட்டை வைத்தியசாலைக்குச் சென்றுள்ளார்.

Posted in Uncategorized

தமிழ்ப் பொதுவேட்பாளர் நிறுத்தப்பட்டமை சிங்கள மக்களுக்கு எதிரானது அல்ல – நிரோஷ் தெரிவிப்பு

தமிழ்ப் பொதுவேட்பாளர் நிறுத்தப்பட்டமை சிங்கள மக்களுக்கு எதிரானது அல்ல. மாறாக, இந்த நாட்டின் தேசிய இனங்களில் ஒன்றான தமிழ் மக்கள் வரலாற்று ரீதியில் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகள் இன்றும் தீர்க்கப்படவில்லை என்பதை எடுத்துக்காட்டுவதற்கானது என தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைமைக்குழு உறுப்பினரும் முன்னாள் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளருமான தியாகராஜா நிரோஸ் தெரிவித்தார்.
தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரனை ஆதரித்து நேற்று (10) மாலை வடமராட்சி மாலுசந்தி மைக்கல் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
தமிழ்த் தேசியம் இன்று பலவாறாக அகத் துண்டாடலுக்கு உட்பட்டு வருகிறது. இது தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வெளியுலகுக்கும் ஆட்சியில் அமர்பவர்களுடன் பேசுவதற்கும் அழுத்தம் கொடுப்பதற்கான நிலைமைகளை பலமிழக்கச் செய்துவிடுமோ என்ற நியாயபூர்வமான அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது. அந்த அச்சத்தில் நியாயபூர்வமான யதார்த்தம் உள்ளது.
தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடைய இனமான நாம் எமது அரசியல் அபிலாசைகளை சாதாரண ஜனநாயக உரிமைகளுடன் மட்டும் மட்டுப்படுத்திவிடமுடியாது.
நாட்டில் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் எந்தளவு தூரம் ஆட்சியில் அமரக்கூடிய ஒருவருக்கு ஆதரவு அளிக்கலாம் என்று சிலர் அல்லும் பகலும் அறை போட்டு சிந்திக்கின்றனர், செயற்படுகின்றனர்.
அவர்கள் இந்த நாட்டில் வெல்லக்கூடிய ஒருவரை தேடிப்பிடித்து சலுகைகளைப் பெற்று பெற்று சகித்து வாழ்வோம் என்ற மனநிலையில் இனத்தினை அடைமானம் வைக்கின்றனர்.
நாட்டில் சிங்கள மக்கள் பெரும்பான்மையான எண்ணிக்கையில் வாழ்கின்றனர் என்பதற்காக எண்ணிக்கையில் குறைந்த அளவுடைய நாட்டின் தேசிய இனமான தமிழ் இனம் இன உரிமைகளை விற்று வாழ முடியாது. சிங்கள பேரினவாதிகளுக்கு நோகக்கூடாது என்று வாழ்பவர்கள் எம்மிடத்தில் அதிகரித்துவிட்டனர். மக்களின் இட்சியத்தினையும் தியாகத்தினையும் விற்றுப் பிழைப்பதில் முண்டியடிக்கின்றனர்.
மண்ணுக்காக எத்தனையோ தியாகங்களை எம் இனம் மேற்கொண்டிருக்கிறது. அடிப்படையில், எமது மக்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை என்பதை வலியுறுத்தியும், எமக்கு சமஸ்டி அடிப்படையிலான உலகம் ஏற்றுக்கொண்ட அரசியல் தீர்வினை முன்வைக்கக் கோரியும் நாம் பொது வேட்பாளரை முன்நிறுத்திச் செயற்படுவது நியாயபூர்வமாகச் சிந்திக்கும் எந்தவொரு சிங்களப் பிரஜைக்கும் எதிரான செயற்றிட்டம் கிடையாது. சிங்கள முற்போக்கு சக்திகளும் சொந்த தாய்நாட்டில் ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகும் தமிழ் மக்களின் கருத்து வெளிப்பாட்டு உரிமைக்கும் ஜனநாயக உரிமைக்கும் மதிப்பளித்து வாக்களிக்க முடியும்.
தமிழ் மக்களைப் பொறுத்தளவில் எமது அரசியல் அபிலாசைகளை தொடர்ந்தும் வெளிப்படுத்த வேண்டிய அவசியம் இன்றும் உள்ள நிலையில் ஒருமித்து தமிழ் பொது வேட்பாளரின் சின்னமான சங்கு சின்னத்துக்கு வாக்களித்து தமிழ்த் தேசியக் கடமையினை நிறைவேற்றுவோம் என ரெலோவின் தலைமைக்குழு உறுப்பினரும் முன்னாள் பிரதேச சபைத் தவிசாளருமான தியாகராஜா நிரோஸ் தெரிவித்தார்.
Posted in Uncategorized

தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சிக் கிளை தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவதாக ஏக மனதாக தீர்மானம்

தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சிக் கிளை தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவதாக ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

குறித்த கலந்துரையாடல் இன்று பிற்பகல் 3 மணியளவில் மாவட்டக் கிளை அலுவலகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தலைமையில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் குருகுலராஜா, பிரதேச சபைகளின் முன்னாள் தவிசாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது, ஜனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தை ஆராய நியமிக்கப்பட்ட குழு கூடாமலே கட்சியின் ஆதரவு அறிவிக்கப்பட்டது என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி கட்சி அலுவலகமான அறிவகத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கரைச்சி மற்றும் கண்டாவளை பிரதேச வட்டாரகிளைகளின் நிர்வாகிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து தெரிவிக்கையில் கடந்த 18-08-2024 அன்று மத்திய குழுக்கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தை ஆராய்ந்து யாருக்கு ஆதரவு அளிப்பது தொடர்பான குழு நியமிக்கப்பட்டது.

இந்த குழு கூடி முடிவெடுக்காது முடிவு அறிவிக்கப்பட்டது. தவறு நாளைய தினம் குறித்த குழு கூடவுள்ளது. கூடி சில முடிவுகள் எடுக்கப்படலாம் என தெரிவித்தார்.

இன்று நடைபெற்ற கலந்துரையாடலை கூடியிருந்த அனைவரும் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்தனர். ஏக மனதாக தீர்மானம் எடுத்தனர்.

Posted in Uncategorized