போரட்டத்தின் போது பலர் காயம்!

கொழும்பில் நேற்று முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது காயமடைந்த 56 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களுள் மூவரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

அவர்களில் ஒருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

காயமடைந்தவர்களில் 05 பெண்களும் அடங்குகின்றனர்.

பாதுகாப்பு பிரிவை சேர்ந்த இருவரும் இதன்போது காயமடைந்துள்ளனர்.

இலங்கையின் அரசியல் கொந்தளிப்புக்கு ஒரு தீர்வு கிடைக்கும் -IMF நம்பிக்கை

சர்வதேச நாணய நிதியம் (IMF) இலங்கையின் அரசியல் கொந்தளிப்புக்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்று நம்புவதாகக் கூறியுள்ளது.

இலங்கையில் நடைபெற்று வரும் நிலைமை களை உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் கூடிய வேலைத்திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தையை மீள ஆரம்பிக்க அனுமதித்து தற்போதைய நிலைமைக்கு தீர்வு காண முடியும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளது.

Posted in Uncategorized

அகதிகளை அவுஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்லுங்கள் என வலியுறுத்தும் ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு

நவுருத்தீவில் மீள்குடியேற்றத்திற்காக காத்திருக்கும் அகதிகள் மற்றும் தஞ்சக்கோரிக்கையாளர்கள் பாதுகாப்பற்ற சூழலில் வாழ்ந்து வரும் நிலையில், அவர்களை உடனடியாக அவுஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என மனித உரிமை அமைப்பான ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் வலியுறுத்தியுள்ளது. 

நவுருத்தீவில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று, அந்நாட்டில் உள்ள 40 சதவீத மக்களை பாதித்துள்ளது. இந்த தொற்று சூழலால் அங்கு 9 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவைக்கப்பட்டுள்ள 112 அகதிகள் மற்றும் தஞ்சம் கோரியவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய பதவி விலகத் தீர்மானித்தார்!

மக்கள் போராட்டங்களை தொடர்ந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ பதவி விலகுவதற்கு தீர்மானித்துள்ளார்.

இதன்படி எதிர்வரும் 13 ஆம் திகதி தான் பதவி விலகுவதாக அவர் அறிவித்துள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில், அந்தத் தீர்மானத்தை சபாநாயகர், ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்திருந்தார்.

இதனை தொடர்ந்து ஜனாதிபதி இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.

Posted in Uncategorized

பிரதமரின் இல்லத்திற்கு தீ வைப்பு!

கொள்ளுபிட்டியில் அமைந்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு தீ வைக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் இல்லத்திற்கு முன்னால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது, அங்கே தீ வைத்துள்ளது.

இதனால் வீட்டுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கிடையில், பிரதமரின் இல்லத்திற்கு வெளியே நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Posted in Uncategorized

பதில் ஜனாதிபதி யார்?: கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவி விலக வேண்டும் என அனைத்து கட்சித் தலைவர்களும் தீர்மானித்துள்ளனர்.

இன்று (09) மாலை சபாநாயகர் இல்லத்தில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு, பிரதமர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், அநுர குமார திஸாநாயக்க ஆகியோர் ஷூம் தொழில்நுட்பத்தின் ஊடாக கலந்து கொண்டனர்.

இக்கலந்துரையாடலில் அரசியலமைப்புக்கு அமைவாக இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக தற்போதைய சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன பதவியேற்பார் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவல்களை பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தனது டுவிட்டர் தளத்தில் பதிவு ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பல்கலைக்கழக மாணவர்களின் பேரணி மீது பொலிஸார் தாக்குதல்!

கொழும்பில் பேரணி நடத்திய பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

மாணவர்கள் கோட்டையில் ஜனாதிபதி மாளிகை பகுதிக்கு செல்ல முயற்சித்த போது உலக வர்த்தக மையத்திற்கு அருகில் அவர்கள் மீது கண்ணீர் புகை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதனால் அங்கு அமைதியின்மை நிலவி வருகின்றது.

Posted in Uncategorized

மேல் மாகாணத்தில் பல பகுதிகளிலும் ஊரடங்கு அமுல்!

ஜனாதிபதிக்கு எதிராக நாளை போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், மேல் மாகாணத்தில் பொலிஸ் பிரிவுகள் பலவற்றில் இன்று இரவு 9 மணி முதல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, கொழும்பு மத்தி ஆகிய பிரதேசங்களிலும் மற்றும் நீர்கொழும்பு, களனி, நுகேகொட, கல்கிசை ஆகிய பொலிஸ் பிரிவுகளிலும் ஊரடங்கு அமுலாகிறது.

மறு அறிவித்தல் வரையில் ஊரடங்கு தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் காலப்பகுதியில் அனைவரும் வீடுகளில் இருக்க வேண்டும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.

Posted in Uncategorized

”நெருக்கடிகள் சில தினங்களில் தீரும்”: ஜனாதிபதி அறிக்கை!

எதிர்வரும் தினங்களில் நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைகள் தீரும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

இதன்படி எரிபொருள், எரிவாயு, மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை விநியோகிப்பதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

நாடு எதிர்நோக்கும் பொருளாதார சவால்களை முறியடித்து, ஏற்றுமதி மற்றும் விவசாயப் பொருளாதாரத்திற்கு முன்னுரிமை அளித்து புதிய முதலீடுகளுடன் வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் நோக்கமாக இருக்கின்றது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், முழு உலகமும் எதிர்கொள்ளும் கொரோனா வைரஸ் பரவல் நிலைமை அனைத்து நாடுகளையும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு இட்டுச் சென்றுள்ளதாகவும், அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் தற்போதுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகளைத் தேடுவதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களாக அரச தலைவர்களுடன் தொலைபேசி மூலமாகவும், பல நாடுகளின் தூதுவர்களுடனும் கலந்துரையாடல்களை மேற்கொண்டதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீண்ட மற்றும் நன்கு திட்டமிடப்பட்ட முயற்சிக்குப் பிறகு, நாடு இப்போது அதன் முடிவுகளைப் பெற்றுள்ளது.

அத்தியாவசிய மருந்துகளின் இருப்பு ஏற்கனவே பெறப்பட்டுள்ளது.

இந்திய கடன் வசதிகளின் கீழ் 65,000 மெற்றிக் தொன் உரம் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், 44,000 மெற்றிக் தொன் உரங்களை ஏற்றிச் செல்லும் முதலாவது கப்பல் நாளை (09) நாட்டை வந்தடைய உள்ளது.

ஜூலை 12 முதல் எரிபொருள், எரிவாயு மற்றும் முன்பதிவு செய்யப்பட்ட அத்தியாவசிய பொருட்கள் தொடர்ந்து பெறப்படும், மேலும் பல்வேறு விவசாய திட்டங்களின் கீழ் நாட்டில் உணவு பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

வெற்றிகரமான தீர்வுகள் கிடைத்துள்ள இவ்வேளையில் எதிர்க்கட்சி அரசியல் குழுக்கள் மக்களை தவறாக வழிநடத்துவது மிகவும் வருத்தமளிப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

இது நாட்டை மீண்டும் பின்னோக்கி செல்ல வைக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சரியான பொருளாதார வேலைத்திட்டத்தின் ஊடாக நாட்டின் எதிர்கால சந்ததியினருக்கு நல்லதொரு நாட்டை கட்டியெழுப்புவதற்கு உறுதுணையாக இருப்பது மக்களின் பொறுப்பும் கடமையும் ஆகும், தற்போதைய நிலைமையை சரியாக புரிந்து கொண்டு அமைதியாகவும் புத்திசாலித்தனமாகவும் செயற்படுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

”எரிபொருள் விலைகளை 200 ரூபா குறைவாக விற்க முடியும்”: கோப் குழுவில் வெளியான தகவல்!

தரவுகளை ஆராயும்போது பெற்றோல் மற்றும் டீசலை ஏறத்தாழ 250 ரூபா விலைக்கு இலங்கைக்குள் விற்பனை செய்ய முடியும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னாயக தெரிவித்தார்.

இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் 2018, 2019 வருடங்களக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் அதன் தற்போதைய செயலாற்றுகை குறித்து ஆராயும் நோக்கில் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு அதன் தலைவர் பேராசிரியர் கௌரவ சரித ஹேரத் தலைமையில் கூடியபோதே அவர் தனது தனிப்பட்ட கருத்தை முன்வைத்தார்.

எரிபொருள் கொள்வனவின் போது அவற்றின் இறக்குமதிக்கான செலவு மற்றும் அரசாங்கம் அறவிடும் வரித் தொகை தொடர்பான புள்ளிவிபரங்களை சரியான முறையில் ஆராயும்போது இது தொடர்பான விபரங்கள் தெரியவருவதாக ரத்நாயக்க மேலும் தெரிவித்தார். இதற்கமைய பெற்றோல் மற்றும் டீசல் ஆகியவற்றை தற்போதைய விலையைவிட 200 ரூபா குறைவாக விற்பனை செய்ய முடியும் எனவும் குறிப்பிட்டார். எனவே, ஏறத்தாழ 250 ரூபாவிற்கு பெற்றோல் மற்றும் டீசலை இந்நாட்டுக்குள் விற்பனை செய்ய முடியும் எனச் சுட்டிக்காட்டிய அவர், கடந்த ஜூலை முதலாம் திகதி இறக்குமதி செய்யப்பட்ட டீசலில் ஒரு லீட்டருக்கு 280 ரூபாவை அரசாங்கம் வரியாக அறவிட்டிருப்பதாகவும் கூறினார்.

இது தனது தனிப்பட்ட கருத்து என்றும், தரவுகள் மற்றும் புள்ளிவிபரங்களை ஆராய்ந்த பின்னர் தான் இந்தக் கருத்தை முன்வைப்பதாகவும் அவர் தெரிவித்தார். இது தொடர்பில் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் அறிந்துள்ளனரா என கோப் குழுவின் உறுப்பினர்கள் கேள்வியெழுப்பினர். எனினும், தாம் இது பற்றி அறிந்திருக்கவில்லையென பணிப்பாளர் சபையின் உறுப்பினர்கள் பதிலளித்தனர். அதேநேரம், நிதி அமைச்சுக்கும் இதுபற்றி உரிய முறையில் தெரிவிக்கப்படவில்லையென்றும் இங்கு தெரியவந்தது.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவராக நியமிக்கப்படுவதற்கு அவருக்குக் காணப்படும் தகுதிகள் குறித்தும் கோப் குழுவின் உறுப்பினர்கள் ரத்னாயக்கவிடம் கேள்வியெழுப்பியிருந்தனர். கல்வித் தகைமையாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் அரசாங்க நிர்வாகம் குறித்த விசேட பட்டமும், கொழும்பு பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டமும் காணப்படுவதாக அவர் பதிலளித்தார். மேலும் ஹாவார்ட் பல்கலைக்கழகத்தில் தான் கற்றிருப்பதாகவும் கூறினார். அதேநேரம், தனது அரசியல் தகுதியாக 2005ஆம் ஆண்டு முதல் அரசாங்கங்கள் அமைப்பதற்கு ராஜபக்ஷக்களுக்கு விசேடமாக ஒத்துழைப்பு வழங்கியதாகவும் ரத்னாயக்க தனது பதிலில் குறிப்பிட்டார்.

எரிபொருள் கொள்வனவு தொடர்பில் ஆணைக்குழுவின் தலைவர் கூறிய இந்தக் கருத்துக்கள் மிகவும் பாரதூரமானவை என்றும், இது நாட்டின் கவனத்தை ஈர்த்திருப்பதாகவும் கோப் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.  எனவே, இது தொடர்பில் மின்சக்தி மற்றும் எரிசக்திவலு அமைச்சின் அதிகாரிகள் மற்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஆகியோரை அழைத்து எதிர்காலத்தில் விசாரணை நடத்துவதற்கு எதிர்பார்ப்பதாக கோப் குழுவின் தலைவர் தெரிவித்தார்.

அதேநேரம், இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் 2021 டிசம்பர் 07ஆம் திகதி முதல் ஒரு வருட காலத்துக்கு எவ்வித ஒப்பந்தங்களும் செய்து கொள்ளாமல் 2005ஆம் ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட பென்ஸ் ரக வாகனத்தை ஜெனரல் பிஸ்னஸ் (தனியார்) நிறுவனம் என்ற நிறுவனத்திடமிருந்து எரிபொருள் அல்லது சாரதி இன்றி மாதாந்த வாடகைக்குப் பெற்றுக் கொள்ளப்பட்டமை குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

இதற்கமைய இந்த வாகனத்துக்காக வருடாந்த வாடகையாக 4,500,000 ரூபாவாக அமைந்திருப்பதுடன், 2022 மே 31ஆம் திகதி குறித்த நிறுவனத்துக்கு 2,187,500 ரூபா செலுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதும் இந்த வாகனத்தைப் பெற்றுக்கொள்வது தொடர்பான ஆவணங்கள் கணக்காய்வுக்காக வழங்கப்படாமை, 15 வருடங்கள் பழமையான வாகனத்தைப் பெற்றுக் கொள்வதற்கு பணிப்புரை வழங்கப்பட்டமை, இதனைப் பெறுவதற்கான விலைமனுக் கோரலில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளமை, இந்த வாகனத்துக்கான வாடகைப் பணம் செலுத்தும்போதான வெளிப்படைத்தன்மை போன்ற விடயங்கள் குறித்தும் கோப் குழுவில் வினவப்பட்டன.

குறிப்பாக, இந்த நிறுவனத்திற்குப் பணம் வழங்குவதற்கான ஒப்புதலில் கையெழுத்திடும் அதிகாரி பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும் கோப் குழு அறிவுறுத்தியது.

இது தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தி அதன் அறிக்கையை குழுவிடம் சமர்ப்பிக்குமாறு கோப் குழுவின் தலைவர் கணக்காய்வாளர் திணைக்களத்தின் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.

மேலும், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் நிறுவன அமைப்பு மற்றும் சம்பளக் கட்டமைப்பு என்பன தேசிய சம்பளம் மற்றும் பணியாளர்கள் ஆணைக்குழுவின் பரிந்துரை, முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும் என்றும், நிதி அமைச்சின் ஊடாக அமைச்சரவைக்குத் திருத்தங்கள் சமர்ப்பிக்கப்பட்டு அவை அனுமதிக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தபோதும், 2021 ஆம் ஆண்டின் இறுதிக்குள் அனுமதி பெறப்படாது சில செயற்பாடுகளுக்கு செலவு செய்யப்பட்டமை குறித்தும் இங்கு விவாதிக்கப்பட்டது.

விசேடமாக,  நிறுவனத்தின் பணியாளர்களுக்கு 11 வகைான கொடுப்பனவுகளின் கீழ் 45,873,483 ரூபா வழங்கப்பட்டிருப்பதுடன், மக்களை விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சிகளுக்காக முழுமையான நடவடிக்கைக்கான தொகையான 86,808,538 ரூபாவில் அதாவது, மொத்தத் தொகையில் 49 வீதம் செலவு செய்யப்பட்டுள்ளமை குறித்தும் கோப் குழு கவனம் செலுத்தியது.