மீனவர்களின் எரிபொருள் நெருக்கடியைத் தீர்க்க உதவுமாறு இந்திய துணை தூதுவரிடம் செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை

மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களை சேர்ந்த மீனவர்களுக்கு தேவையான எரிபொருளைப் பெற்றுக்கொள்ள உதவுமாறு யாழ். இந்திய துணைத் தூதுவரிடம் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மன்னாரை சேர்ந்த மீனவர்களுக்கு நாள் ஒன்றுக்கு 78,000 லீட்டர் மண்ணெண்ணெய்யும் முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களுக்கு நாள் ஒன்றுக்கு 31,180 லீட்டர் மண்ணெண்ணெய்யும் தேவைப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்க்கமான முடிவை எடுப்பதற்கு உதவுமாறு செல்வம் அடைக்கலநாதன் இந்திய துணை தூதுவரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கோட்டாகோகம தொடர்பான அடிப்படை உரிமை மனு நிராகரிப்பு

காலி முகத்திடல் கோட்டாகோகம போராட்டக்களத்தில் முன்னெடுக்கப்படுகின்ற அமைதிப் போராட்டம் சட்டவிரோதமான முறையில் கலைக்கப்படுவதை தடுப்பதற்கான உத்தரவை பொலிஸ்மா அதிபர், இராணுவத் தளபதி உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை உயர் நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.

உயர் நீதிமன்ற நீதியரசர்களான புவனெக்க அலுவிஹாரே, L.T.B.தெஹிதெனிய மற்றும் A.H.M.D. நவாஸ் ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மறுத்துள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிவில் பொறியியலாளரும் திக்வெல்ல பிரதேசத்தை சேர்ந்தவருமான M.N.N.ஹமீம் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.

Posted in Uncategorized

ஜனாதிபதியை தாம் சந்தித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை “கோட்டா கோ கம” ஆர்ப்பாட்டக்காரர்கள் மறுப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை தாம் சந்தித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை “கோட்டா கோ கம” ஆர்ப்பாட்டக்காரர்கள் மறுத்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

இதேவேளை ஜனாதிபதியிடம் சில முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையை ஆர்ப்பாட்டக்காரர்கள் மறுத்துள்ளனர்.

மேலும் “கோட்டா கோ கம” பிரதிநிதித்துவப்படுத்தும் எவரும் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குறிப்பிட்டுள்ளனர் .

‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியின் பதவிக் காலம் நீடிப்பு

ஒரே நாடு – ஒரே சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் பதவிக்காலம் மேலும் 3 வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் ஆலோசனைக்கு அமைய, ஜனாதிபதி செயலாளரினால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானியினூடாக செயலணியின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

ஒரே நாடு – ஒரே சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் பதவிக்காலம் கடந்த மே 27 ஆம் திகதியுடன் நிறைவடைந்தது.

அதற்கமைய, செயலணியின் பதவிக்காலத்தை மேலும் 3 வாரங்களுக்கு நீடித்து நேற்று குறித்த அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஒக்டோபர் 26 ஆம் திகதி குறித்த ஜனாதிபதி செயலணி ஸ்தாபிக்கப்பட்டது.

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தலைமையில் நியமிக்கப்பட்ட இச் செயலணியானது கடந்த காலங்களில் நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்று ‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ தொடர்பான கலந்துரையாடல்களை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

அறிவுக்களஞ்சியத்தை தீச்சுவாலைகள் விழுங்கி 41 வருடங்கள்

யாழ். நூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன்(01) 41 வருடங்கள் பூர்த்தியாகின்றன.

புதைத்தாலும் முளைத்து எரித்தாலும் உயிர்க்கும் வரலாற்றை அழித்தல் அத்தனை எளிதன்று.

கம்பீரமாய் காட்சியளிக்கும் யாழ். நூலகத்தின் கருகிய புத்தகங்களின் சாம்பர் மணத்தை வாசிப்பின் மீது தீராத காதல் கொண்ட வாசகர்களால் மாத்திரமே நுகர முடியும்.

அறியாமை இருளகற்றும் புத்தொளிக் கீற்றை இன்று போன்றதோர் நாளில், காரிருளில் மூழ்கடித்த கதையை மீட்ட மீட்ட சோகமே எஞ்சும்.

கவர்ந்து செல்லவோ, சூறையாடவோ முடியாத தெற்காசியாவின் அறிவுப் பொக்கிஷத்தை தீது நன்கறியாத தீ தீண்டி துவம்சம் செய்த துன்பியல் அனுபவத்தை வார்த்தைகளில் வசப்படுத்துவது அத்துணை எளிதன்று.

1933ஆம் ஆண்டு அறிவறம் நிரம்பிய சான்றோரின் வாசிப்பு விதை சில காலத்தில் பெரு விருட்சமாய் யாழ். நூலகமாய் நிமிர்ந்து நின்றது.

புராதனம் பறைசாற்றும் ஓலைச்சுவடிகள்…

1800-களில் யாழில் தகவல் தந்த செய்தி ஏடுகள், தொன்மை வாய்ந்த வரலாற்று ஆவணங்களை உள்ளடக்கி எம்மவரின் உணர்வுகளின் எழுத்துருவாய் வீறுடன் விளங்கியது யாழ். நூலகம்.

இருப்பின் அடையாளத்தை அரிக்கும் கறையான்கள், பழம்பெருமையை அழிக்க தீ வடிவம் கொண்டு யாழ். நூலகத்தை பற்றின.

1981 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதி நள்ளிரவு வேளை, தெற்காசியாவின் அறிவுக்களஞ்சியத்தை தீச்சுவாலைகள் விழுங்க ஆரம்பித்தன.

நூலகம் எரியூட்டப்பட்ட வேளை, இரவல் வழங்கும் பகுதியில் சுமார் 57,000 நூல்களும் சிறுவர் பகுதியில் 8,995 நூல்களும் உசாத்துணை பகுதியில் கிடைத்தற்கரிய 29,500 நூல்களும் இருந்தன.

இவை அனைத்தும் தீயினால் சிதைக்கப்பட்டு, சாம்பராகியமை வேதனைக்குரியதே.

காயங்களை ஆற்றும் காலம், நூலகத்தின் உருவை இன்று மாற்றியுள்ளது.

யாழ். பொது நூலகம் இன்று மீண்டும் கம்பீரமாக காட்சியளிப்பதுடன், வாசகர்களின் அறிவுப்பசியினை போக்கி வருகின்றது.

Posted in Uncategorized

IMF இலங்கைக்கு வழங்கவுள்ள கடன் தொகையின் அளவு

குறைந்தபட்சம் 3 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக பெறுவதற்கு இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த கடன் ஒரு விரிவான நிதி வசதியின் கீழ் திட்டமிடப்பட்டுள்ளதாக ரெய்ட்டர்ஸ் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இம்மாதம் முதல் வாரத்தில் மற்றொரு சுற்று தொழில்நுட்ப விவாதம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜூன் மாத இறுதிக்குள் சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை அரசாங்கம் உடன்படிக்கைக்கு வருமென நம்புவதாக ரெய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

Posted in Uncategorized

வேலைப் பயிற்சி மையத்தை நிறுவ மலேசியாவுடன் இலங்கை புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து

மலேசியாவில் வேலைவாய்ப்பினை இலக்காகக் கொண்டு ஒரு விசேட பயிற்சி மையத்தை விரைவாக நிறுவுவது தொடர்பில் மலேசிய வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு மற்றும் இலங்கை தொழிலாளர் அமைச்சும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைசாத்திட்டுள்ளன.

தொழிலாளர் அமைச்சர் மனுஷ நாணயக்கார மற்றும் இலங்கை, மாலைதீவுக்கான மலேசிய உயர்ஸ்தானிகர் டான் யாங் தாய் ஆகியோருக்கு இடையில் அமைச்சில் இடம்பெற்ற விசேட சந்திப்பின் போதே இது கைச்சாத்திடப்பட்டுள்ளது.

2016ஆம் ஆண்டு அமைச்சர் நாணயக்கார வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சராக இருந்த போது இரு நாடுகளுக்கும் இடையில் மலேசியப் பயிற்சி நிலையம் ஒன்றை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

இக்கலந்துரையாடலில் அமைச்சர் மற்றும் உயர்ஸ்தானிகர் உடன்படிக்கையை மீள்பரிசீலனை செய்து உரிய காலத்தில் பயிற்சி நிலையமொன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக இணக்கம் தெரிவித்துள்ளனர்.

கொவிட் -19 தொற்றுநோய்க்குப் பின்னர் மலேசியா புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அதன் கதவுகளைத் திறந்தவுடன் இலங்கை தொழிலாளர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குமாறு அமைச்சர் உயர் ஸ்தானிகரிடம் கோரிக்கை விடுத்தார்.

குறிப்பாக உற்பத்தித் துறை வேலைகளுக்கு அதிகளவிலான தொழிலாளர்களை அனுப்புவது குறித்தும், அவர்கள் தொடங்கவிருக்கும் மலேசியப் பயிற்சி மையம் மூலம் விசேட பயிற்சிகளை வழங்குவது தொடர்பிலும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது.

மலேசிய தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச சம்பளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு ஒப்பந்தத்தில் குறைந்த பட்ச சம்பளத்தை உள்ளடக்க முடியும் என மலேசிய உயர்ஸ்தானிகர் அமைச்சரிடம் தெரிவித்தார்.

Posted in Uncategorized

இலங்கை-அரசியல் ஸ்திரமின்மையால் பல பிரச்சனைகள் உருவாகின்றதாக தகவல்

இலங்கையில் இன்று  நிலவும் அரசியல் ஸ்திரமின்மையால் பல பிரச்சனைகள் உருவாகின்றன என ஜனநாயக சீர்திருத்தங்கள் மற்றும் தேர்தல் ஆய்வுகளுக்கான நிறுவனம்   தெரிவித்துள்ளது.

தேர்தல் முறைமையில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என நிறைவேற்றுப் பணிப்பாளரான மஞ்சுள கஜநாயக்க தெரிவித்தார்.

“பொருளாதார நெருக்கடியின் தீவிரம் தற்போது உணரப்பட்டு வருவதாகவும், எனினும் மேற்கொள்ளப்பட்டு வரும் அரசியல் சீர்திருத்தங்கள் பாராட்டத்தக்கவை அல்ல. குறிப்பாக அரசியல் தலைமையினால் அரசியலமைப்பின் 21வது திருத்தம் தொடர்பில் துரிதமான சீர்திருத்தங்கள் இன்னும் மேற்கொள்ளப்படவில்லை” எனவும் அவர் தெரிவித்தார்.

21வது திருத்தத்தின் மூலம் ஜனாதிபதியின் அதிகாரங்களை விரைவாகக் குறைக்க முடியும் என்றும் பாராளுமன்றத்திற்கு அதிக அதிகாரத்தை வழங்க முடியும் என்றும்  எனினும் நீதியமைச்சரும் பிரதமரும் ஜனாதிபதியை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

எனவே 21வது திருத்தச் சட்டம் மீதான மக்களின் நம்பிக்கை குறைந்துள்ளதாக அவர் மேலும்  குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு உரம் வழங்க இந்தியப் பிரதமர் இணக்கம்!

இலங்கைக்கு தேவையான உரத்தை பெற்றுத்தருவதற்கு,  இந்திய பிரதமர் நரேந்திர மோடி இணங்கியுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை அதிகாரிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

அதற்கமைய, இந்திய கடனுதவியின் கீழ் கிடைக்கவுள்ள உரத் தொகையை 20 நாட்களுக்குள் பகிர்ந்தளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நீர்ப்பாசன துறை எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்தும் இந்த கலந்துரையாடலின் போது ஆராயப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடலின் போது, உமா ஓயா மற்றும் மொரகஹகந்த செயற்றிட்டங்களை இவ்வருடம் நிறைவு செய்வதனூடாக பெரும்போகத்தில் சிறந்த பயன்களை பெற்றுக்கொள்ள முடியும் என ​தெரிவிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

வௌிநாட்டு நிதியினூடாக முன்னெடுக்கப்பட்டுள்ள செயற்றிட்டங்களை உரிய காலப்பகுதிக்குள் நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது

நாட்டின் நிதி நிலைமை தொடர்பில் விசேட உரைக்கு தயாராகும் பிரதமர்!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 7 ஆம் திகதி விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார்.

நாட்டின் தற்போதைய நிதி நிலைமை தொடர்பில் அவர் அதன்போது தகவல்களை வெளியிடவுள்ளார்.

தற்போது அரச வருமானத்தை அதிகரித்து பொருளாதாரத்தை ஸ்தீர நிலைக்கு கொண்டு வருவதற்காக விசேட வேலைத்திட்டங்களை நிதி அமைச்சு முன்னெடுத்துள்ளது.

அந்த வகையில், நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் பொருட்கள், சேவைகள் மீதான வரிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

Posted in Uncategorized