அவசர அமைச்சரவைக் கூட்டம் – அழைப்பு ஜனாதிபதி!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று  வியாழக்கிழமை மாலை விசேட அமைச்சரவைக் கூட்டமொன்று நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இக்கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்குமாறு அமைச்சர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பால்மா, கோதுமை மா, சமையல் எரிவாயு மற்றும் சீமெந்து ஆகியவற்றின் விலைகளை அதிகரிப்பது தொடர்பில் இதன்போது இறுதி முடிவெடுக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்றும் அமைச்சரவைக் கூட்டமொன்று நடைபெற்றுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

பண்டோரா பேப்பர்ஸ் விவகாரம் – சுயாதீன விசாரணை கோரி ஜனாதிபதிக்கு நடேசன் கடிதம்!

பண்டோரா பேப்பர்ஸில் தனக்கும் தனது மனைவிக்கும் எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக சுயாதீன விசாரணையொன்றை மேற்கொள்ளுமாறு திருக்குமார் நடேசன் ஜனாதிபதியிடம் கோரியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக உலகின் பெரும்புள்ளிகள் பலரின் மறைமுக சொத்துக்கள் தொடர்பான தகவல்களை வெளிப்படுத்திய பண்டோரா பேப்பர்ஸில் பெயர் குறிப்பிடப்பட்டிருந்த இலங்கையின் பிரபல தொழிலதிபரான திருக்குமார் நடேசன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

தனக்கும் தனது மனைவியான முன்னாள் அமைச்சர் நிருபமா ராஜபக்ஷவுக்கும் சொந்தமான மறைமுக வங்கிக் கணக்குகள் மற்றும் சொத்துக்கள் வெளிநாடுகளில் உள்ளதாகக் குறித்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அந்தக் கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறே, குறித்த ஆவணத்தில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள அனைவரும் குற்றவாளிகள் என்ற பொதுவான கருத்து தற்போது சமூகத்தின் மத்தியில் வியாபித்துள்ளது என்றும் குறித்த ஆவணத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உள்ளிட்ட உலக தலைவர்கள் பெரும்பாலானோர் உத்தரவிட்டுள்ளனர் என்றம் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தம்மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றும் தாம் எந்தவொரு குற்றச் செயற்பாடுகளையும் மேற்கொள்ளவில்லை எனவும் திருக்குமார் நடேசன் தனது கடிதத்தினூடாக ஜனாதிபதிக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், ஓய்வுபெற்ற நீதிபதியொருவரின் தலைமையிலான விசாரணைக் குழாமொன்றினூடாக இது தொடர்பாக உடனடியாக விசாரணைகளை மேற்கொண்டு தனது மனைவியின் நற்பெயருக்கு ஏற்பட்டுள்ள கலங்கத்தை துடைப்பதற்கான பின்னணியை உருவாக்கித் தருமாறு அவர் மேலும் கோரியுள்ளார்.

மாகாண பயணத் தடை – தனியார் பஸ்கள் சுற்றிவளைப்பு

பயணத் தடையை மீறி மாகாணங்களுக்கு இடையில் சட்டவிரோதமாக சேவையில் ஈடுபட்ட குளிரூட்டப்பட்ட அதி சொகுசு பஸ் வண்டிகள் 2 இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு பொலிஸாரிடம் பாரப்படுத்தப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, சம்மாந்துறை, கல்முனை ஊடாக கொழும்பு நோக்கி சட்டவிரோதமாக இரு பஸ்கள் சென்று கொண்டிருப்பதாக இராணுவத்தினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய பெரியநீலாவணை இராணுவ காவலரனில் வைத்து புதன்கிழமை (6) இரவு 10 மணி அளவில் தடுத்து நிறுத்தப்பட்டது.

இதன்போது குறித்த இரு வேறு பஸ் வண்டிகளிலும் சுமார் 100 க்கும் அதிகமான பயணிகள் இருந்ததுடன் அவ்விடத்திற்கு வருகை தந்த கல்முனை இராணுவ முகாம் பொறுப்பதிகாரி மேஜர் சாந்த விஜயகோன் சுகாதார தரப்பு அதிகாரிகளினால் பயணிகள் அனைவரும் அறிவுறுத்தபட்டு மீண்டும் குறித்த பஸ்களில் அழைத்து செல்லப்பட்டு கல்முனை பொலிஸ் நிலையத்தில் சிறுது நேரம் தடுத்து வைக்கப்பட்டு எச்சரிக்கப்பட்ட பின்னர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

மேலும் குறித்த பஸ் வண்டிகளின் சாரதி நடத்துனர்களிடம் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இது தவிர அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே மாகாணங்களுக்கு இடையிலான பயணங்களை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் மாகாணத்தில் உள்வரும், வெளியேறும் பல நுழை வாயில்களில் கடும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தை தொடர அனுமதிக்கப்படுவதாகவும் அவ்வாறு கட்டுப் பாடுகளை மீறி பயணம் செய்பவர்கள் அனைவரும் திருப்பி அனுப்பட்டு வருவதாகவும் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

அத்துடன் மாகாணங்களுக்கு இடையில் பயணத்தடை தொடர்ந்தும் அமுலில் உள்ள நிலையில் மாகாணங்களுக்கு இடையிலான பயணத் தடையை மீறி அம்பாறை மாவட்டத்தில் இருந்து இரவு வேளைகளில் குளிருட்டப்பட்ட பல தனியார் பஸ்கள் சேவைகளில் ஈடுபட்டு வருகின்றதை அவதானிக்க முடிகின்றது.

ஆசிரியர்கள், அதிபர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு – இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள பிரச்சினையை தீர்க்கும் விடயத்தில் அரச சேவையின் ஏனைய துறைகளுக்கு அநீதி ஏற்படாத வகையில் தீர்மானம் மேற்கொள்ள வேண்டியது அனைத்து அரசாங்கங்களுக்கும் உரிய பொறுப்பாகும் என கல்விச் சீர்திருத்தங்கள், திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக் கல்வி மேம்பாடு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன நேற்று (06) பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது இவ்வாறு குறிப்பிட்ட இராஜாங்க அமைச்சர் இந்த பிரச்சினைக்கு எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் பல கட்டங்களில் தீர்வை பெற்றுக்கொடுக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாட்டை தீர்ப்பது நிதி சம்பந்தப்பட்ட பிரச்சினை மற்றும் அல்ல. 1994 ஆம் ஆண்டில் ஆசிரியர் சேவை யாப்பு அறிமுகப்படுத்தப்பட்டு சம்பளம் அதிகரிக்கப்பட்டது அதன் பின்னர் இடம்பெற்ற அரச சேவை சம்பள முரண்பாட்டை நீக்குவதற்காக பெரேரா சம்பள ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.

அதன் பின்னர் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் சேவையின் சம்பளம் தொடர்பான சிக்கலை புறந்தள்ளி அரச சேவையின் முரண்பாட்டை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன் போது ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் சேவைக்கும் ஏனைய அரச சேவைகளுக்கும் இடையில் ஏற்பட்ட சம்பள முரண்பாடு தொடர்ந்து 24 வருடங்களாக நிலவியதாக ராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

Posted in Uncategorized

தேர்தல் குறித்து சகல தரப்புடனும் கலந்துரையாடி தீர்மானம் எடுப்போம் – ஜனக பண்டார தென்னகோன்

மாகாணசபை தேர்தலை நடத்துவதா இல்லையா என்பது குறித்து சகல தரப்புடனும் கலந்துரையாடி தீர்மானம் எடுக்கப்படும் என உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில்  செவ்வாய்க்கிழமை, வாய்மூல  விடைகளுக்கான வினாக்கள் நேரத்தில், எதிர்க்கட்சி உறுப்பினர் ரோஹான பண்டார இது குறித்து கேள்வி எழுப்பினார்.

தேர்தல் நடத்தப்படும் என்றால் புதிய முறையில் நடக்குமா அல்லது பழைய முறைமையில் நடத்தப்படுமா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன், மாகாணசபை தேர்தலை நடத்துவதற்கான சூழ்நிலை தற்போது இல்லை என கூறினார்.

Posted in Uncategorized

கனிய எண்ணெய் வளம் தொடர்பான சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றம்

புதிய கனிய எண்ணெய் வளம் தொடர்பான சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக இன்று (பதன்கிழமை) நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்ட சட்டமூலமே இவ்வாறு திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சுயாதீன கட்டுப்பாட்டு அதிகாரங்களுடன் இலங்கை கனியவள அபிவிருத்தி அதிகார சபையை ஸ்தாபிப்பதே இந்த சட்டமூலத்தின் பிரதான நோக்கமாகும் என தெரிவிக்கப்படுகிறது.

புலம்பெயர் தமிழர்களை மீளவும் நாட்டுக்கு அழைப்பதே இலக்கு – ஜனாதிபதி!

இணக்கப்பாடுகளுடன் எட்டப்படும் இருதரப்புத் தீர்மானங்களை, இரு நாடுகளினது மக்களுக்கு சரியான முறையில் தெளிவுபடுத்தப்பட வேண்டுமென்று, இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லாவிடம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வலியுறுத்தினார்.

நன்மை, தீமைகளை எடுத்துரைத்து, பெரும்பான்மையான மக்களின் விருப்பத்துடன் செயலாற்றுவது அத்தியாவசியம் என்றும், ஜனாதிபதி எடுத்துரைத்தார்.

இந்திய வெளிவிவகாரச் செயலாளருடன் நேற்று(செவ்வாய்கிழமை) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

1971இல், இந்து சமுத்திரத்தை சமாதான வலயமாக மாற்ற வேண்டுமென்று, அப்போதைய பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க அவர்கள் முன்வைத்த யோசனையைச் செயற்படுத்துவதற்கான பலத்தை அதிகரித்துக்கொள்ள, இந்தியாவின் உதவியை எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கு இடையிலான தொடர்புகளை உயர் மட்டத்துக்குக் கொண்டுசெல்ல வேண்டுமாயின், குறுகிய மற்றும் நீண்டகாலத் தேவைகளின் பொருட்டு முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளைத் துல்லியமாக அடையாளம் காணவேண்டுமென்பது, இரு தரப்பினதும் கருத்தாக அமைந்திருந்தது.

யாழ்ப்பாணக் கோட்டையை மீட்ட தனது அனுபவத்தை எடுத்துக்கூறிய ஜனாதிபதி, காணாமற்போனோர், யுத்தம் காரணமாக கணவரை இழந்தோர் உள்ளிட்ட யுத்தத்தின் பக்க விளைவுகள் பற்றி, தான் நல்ல புரிதல் கொண்டிருப்பதாக எடுத்துரைத்தார்.

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தின் பலவீனங்களைப் போன்றே அதில் காணப்படும் பலம் தொடர்பிலும் கண்டறிந்துச் செயற்படுவதன் தேவை தொடர்பிலும் ஜனாதிபதி எடுத்துரைத்தார்.

இலங்கையிலிருந்து சென்ற தமிழ் மக்களை மீண்டும் நாட்டுக்குத் திருப்பியழைக்கும் நடவடிக்கைகளை முன்னெடுப்பது தனது எதிர்பார்ப்பென்று தெரிவித்த ஜனாதிபதி, அதற்காக அரசாங்கம் முன்னெடுத்துவரும் வேலைத்திட்டங்களை வெற்றிகரமானதாக்கிக்கொள்ள, ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத் தொடரின் போது உரையாற்றி, புலம்பெயர் தமிழர்களுக்கும் வெளிநாடுகளில் வசிக்கும் தமிழ் மக்களுக்கும் பகிரங்க அழைப்பு விடுத்ததாகவும், ஹர்ஷ் வர்தன் ஷரிங்லாவிடம் ஜனாதிபதி எடுத்துரைத்தார்.

வடக்கு – கிழக்கு அபிவிருத்திக்காகதத் தனது அரசாங்கம் கடந்த காலங்களில் முன்னெடுத்திருந்த நடவடிக்கைகள் தொடர்பில் தெளிவுபடுத்திய ஜனாதிபதி, யுத்த காலத்தின் போது பாதுகாப்புத் தரப்பினரால் கைப்பற்றப்பட்டிருந்த காணிகளில் 90 சதவீதத்துக்கும் மேலானவை, அவற்றின் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன என்றும், ஜனாதிபதி எடுத்துரைத்தார்.

அதேபோன்று, காணாமற்போனோரது குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது எனத் தெரிவித்த ஜனாதிபதி, யுத்தத்தால் ஏற்பட்ட ஏனைய பிரச்சினைகளுக்கும் உடன் தீர்வு வழங்குவதற்கான தேவை தொடர்பிலும் தெளிவுபடுத்தினார்.

இரு நாடுகளினதும் புவியியல் இருப்பிடம் தொடர்பில் தெளிவான புரிந்துணர்வு இருப்பின், இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய எந்தவொரு செயற்பாட்டுக்கும் இலங்கையைப் பயன்படுத்திக்கொள்ள இடமளிக்கப் போவதில்லை என்றும், ஜனாதிபதி எடுத்துரைத்தார்.

சீனாவுடனான தொடர்புகள் பற்றி மிகத் தெளிவாக எடுத்துரைத்த ஜனாதிபதி, அது தொடர்பில் எவ்வித சந்தேகமும் கொள்ள வேண்டாமென்று, இந்திய வெளிவிவகாரச் செயலாளரிடம் தெரிவித்தார்.

இலங்கையில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. அதனால், இந்திய முதலீட்டாளர்களுக்கு பகிரங்க அழைப்பு விடுப்பதாக, ஜனாதிபதி தெரிவித்தார்.

திருகோணமலை எண்ணெய்த் தாங்கிகள் தொடர்பான பிரச்சினையை, இரு நாடுகளுக்கும் பயனுள்ள வகையில் தீர்த்துக்கொள்ளும் பொறுப்பு, விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளது என்றும், ஜனாதிபதி குறிப்பிட்டார்.

Posted in Uncategorized

Pandora Papers – விசாரணைகள் ஆரம்பம்!

விசேட விசாரணை குழுவொன்றை நியமித்து பண்டோரா பேப்பர்ஸில் வௌிப்படுத்தப்பட்ட இலங்கையர்கள் மற்றும் அந்த பரிவர்த்தனைகள் தொடர்பிலான விசாரணைகள் தற்போதைய நிலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச மற்றும் ஊழல் பற்றிய குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் செயலாளர் அப்சரா கல்தேரா தெரிவித்தார்.

பண்டோரா பேப்பர்ஸில் வௌிப்படுத்தப்பட்ட இலங்கையர்கள் மற்றும் பரிவர்த்தனைகள் குறித்து உடனடி விசாரணைக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டதை அடுத்து இவ்வாறு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் ஒரு மாதத்திற்குள் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் இன்று பண்டோரா வௌிப்படுத்தல் குறித்து சர்வதேச விசாரணை ஒன்று தேவை என்று தெரிவித்திருந்தார்.

கடல்நீரை நன்னீராக்கும் சுத்திரிக்கும் நிலையம் திறப்பு

ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு என்னும் கருத்திட்டத்திலான தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் ஆசிய அபிவிருத்தி வங்கியின் வறுமைக் குறைப்பிற்கான ஜப்பான் நாட்டு நிதியுதவியில் மின்சார விநியோகத்தை அதிகரிக்கும் உதவித் திட்டத்தின் கீழ் நயினாதீவு நீர்வழங்கல் திட்டத்திற்கு நன்னீர் குடிநீரை வழங்குவதற்காக நிர்மாணிக்கப்பட்ட கடல்நீரை நன்னீராக்கும் சுத்திரிக்கும் நிலையத்தினை திறந்து வைக்கும் நிகழ்வு இன்று யாழ் நயினாதீவில் உள்ள 07 வட்டராத்தில் இடம்பெற்றது.

இவ் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிராமிய மற்றும் பிரதேச குடிநீர் வழங்கல் கருத்திட்டங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த கலந்துகொண்டு உத்தியோகபூர்வமாக திரைநீக்கத்தினை செய்து வைத்து திறந்துவைத்தார்.

இவ் நிகழ்வில் பாராளுமன்ற பிரதிக்குழுக்களின் பிரதித்தலைவர் மாவட்ட பிரதிக்குழுக்களின் பிரதித்தலைவர் அங்கஜன் இராமநாதன், வடமாகாண ஆளுநர் பி.எச்.எம்.சாள்ஸ், வடமாகாண பிரதம செயலாளர் சரத்பத்துல,மற்றும் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன்,உள்ளிட்ட அதிகாரிகள் கொண்டகுழுவினர்கள் கலந்துகொண்டனர்..

இவ் குடிநீர்த் திட்டத்தில் 150 கன மீற்றர் குடிநீராக்கும் நிலையமாக காணப்படுகின்றது.. இதற்காக 187 மில்லியன் ரூபா செலவில் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் ஊடாக 5,000 குடும்பங்கள் நன்மைபெறவுள்ளனர். இந்த குடிநீரை 120 ரூபா செலவில் பெற்றுக்கொள்ள கூடியதாக இருந்தாலும் அவற்றினை ஒரு யூனிட் 10 ரூபாவாக அறவிட்டு நன்னீரை பெற்றுக் கொள்ள முடியும். என நீர்வழங்கல் சபை தெரிவித்துள்ளது..

Posted in Uncategorized

ஐரோப்பிய ஒன்றிய GSP+ கண்காணிப்புக் குழுவின் இலங்கைக்கான விஜயம் பூர்த்தி

(GSP+) தொடர்பில் இலங்கை நடைமுறைப்படுத்த வேண்டிய, 27 சர்வதேச கடைப்பிடிப்புகள் தொடர்பில் மீளாய்வு செய்வதற்காக இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் அடங்கிய குழு தனது விஜயத்தை நிறைவு செய்துள்ளதாக குறிப்பிடடுள்ளது.

இது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் வௌியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு…

கொழும்பு , 06 ஒக்டோபர் 2021- Generalised System of Preferences Plus (GSP+) தொடர்பில் இலங்கை நடைமுறைப்படுத்த வேண்டிய, 27 சர்வதேச கடைப்பிடிப்புகள் தொடர்பில் மீளாய்வு செய்வதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் அடங்கிய குழு 2021 செப்டெம்பர் 27 ஆம் திகதி இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்தது.

மனித மற்றும் தொழிலாளர் உரிமைகள், சூழல் மற்றும் காலநிலை மற்றும் நல்லாட்சிக் கொள்கைகள் போன்றன இவற்றில் அடங்கியுள்ளன. இலங்கையில் இந்தக் குழு தங்கியிருந்த பத்து நாட்கள் வரையான காலப்பகுதியில், ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச , வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர். ஜி.எல்.பீரிஸ், நீதி அமைச்சர் அலி சப்ரி மற்றும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச போன்ற அரசாங்க பிரதிநிதிகளுடன் சந்திப்புகளை மேற்கொண்டிருந்தது.

எதிர்கட்சி , சிவில் சமூக அமைப்புகளான மனித உரிமை காப்புச் செயற்பாட்டாளர்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் தொழில் வழங்குநர்களுடனும் இந்த அதிகாரிகள் சந்திப்புகளை முன்னெடுத்தனர். ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாடுகளின் தூதுவர்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் முகவர் அமைப்புகளின் பிரதான அதிகாரிகளுடனும் சந்திப்புகளை மேற்கொண்டிருந்தது.

மனித உரிமைகள் மற்றும் சட்ட விதிமுறை, பொருளாதார, சமூக மற்றும் கலாசார உரிமைகள் மற்றும் தொழிலாளர் உறவுகள் போன்றவற்றில் தாக்கம் செலுத்தியிருந்த விடயங்கள் தொடர்பில் கண்காணிப்புக் குழு கவனம் செலுத்தியிருந்தது. பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) தொடர்பிலும் விஜயம் செய்திருந்த அதிகாரிகள் கலந்துரையாடியிருந்ததுடன், 2017 ஆம் ஆண்டு GSP+ திட்டத்தில் இலங்கையை மீள உள்வாங்கிய போது பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வது என்பது பிரதான உறுதியளிப்பாக அமைந்திருந்தது.

தற்போது பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் தொடர்பில் நிலவும் பிரச்சனைகள் தொடர்பிலும் ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்புக் குழு கேட்டறிந்ததுடன், அடிப்படை சுதந்திரங்களை அனுபவிப்பதற்கு காணப்படும் கட்டுப்பாடுகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு புதிய சட்ட வரைபு தயாராகின்றமை தொடர்பிலும் கவனம் செலுத்தியிருந்தது.

இலங்கையிலுள்ள சகல சமூகங்களின் உரிமைகளுக்கும் மதிப்பளிப்பது மற்றும் பாகுபாடு இன்றிய செயற்பாடுகள் தொடர்பிலும், இந்த விடயம் தொடர்பில் அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பிலும் அதிகளவு கவனம் செலுத்தப்பட்டிருந்தது.

போதைப்பொருள் கொள்கை, சூழல் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பிலும் இந்தச் சந்திப்புகளின் போது மீளாய்வு செய்யப்பட்டிருந்ததுடன், ஊழல் மோசடி பற்றியும் ஆராயப்பட்டிருந்தது. GSP+ பயன்பாடு மற்றும் எதிர்கால வர்த்தக உறவுகள் என்பது இலங்கையிலுள்ள ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய வர்த்தக சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வெபினாரின் தலைப்பாக அமைந்திருந்தது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் டெனிஷைபி கருத்துத் தெரிவிக்கையில், “சர்வதேச அர்ப்பணிப்புகளின் வினைத்திறன் வாய்ந்த நடைமுறைப்படுத்தல் என்பதனூடாக இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் சந்தையை முன்னுரிமைச் சலுகை அடிப்படையில் அணுகுவதற்கான அடித்தளத்தை ஏற்படுத்துகின்றது.

சம்பந்தப்பட்ட விடயங்கள் தொடர்பில் 2015 ஆம் ஆண்டு முதல் இலங்கை அரசாங்கத்துடன் நாம் இணைந்து பணியாற்றுவதுடன், தொடர்ச்சியான ஈடுபாட்டை வரவேற்கின்றோம். கண்காணிப்பு மற்றும் இலங்கை அரசாங்கத்துடன் ஈடுபாட்டை பேணுவது என்பது, ஐரோப்பிய பாராளுமன்றம் மற்றும் சம்மேளனத்தின் அமைச்சர்களுக்கு அடிக்கடி அறிக்கைகள் சமர்ப்பிப்பதாக அமைந்திருக்கும்.” என்றார்.