நல்லூர் கந்தனின் உற்சவத்திற்கு செல்ல கொரோனா தடுப்பூசி அட்டை அவசியம்

நல்லூர் கந்தனின் உற்சவத்திற்கு வருபவர்கள் தடுப்பூசி போடப்பட்ட அட்டைகளை வைத்திருப்பது அவசியமாகுமென யாழ். மாநகர சபை அறிவித்துள்ளது.

நல்லூர் கந்தனின் உற்சவ நடைமுறைகள் தொடர்பாக யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “தற்போது பரவி வரும் கொரோனா தொற்றைக் கருத்திற்கொண்டு நல்லூர் முருகப் பெருமானின் இவ்வருட உற்சவம் முழுமையான சுகாதார நடைமுறைகளை மிக இறுக்கமாகப் பேணி அடியார்களின் பங்குபற்றுதலின்றி அல்லது அந்தந்த சந்தர்ப்பங்களுக்கேற்ப மட்டுப்படுத்தப்பட்ட அடியார்களுடனேயே
நடைபெறவுள்ளது.

எனவே இந்த நெருக்கடிமிக்க அசாதாரண சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு மிக மிக பொறுப்புடனும் அவதானத்துடனும் நடந்துகொள்ளுமாறு நல்லைக்கந்தன் அடியார்களை மிகப் பணிவாகக் கேட்டுக்கொள்கிறோம்.

சுகாதார அமைச்சினால் வெளியிடப்படும் சுற்றறிக்கைகள் மற்றும் அறிவுறுத்தல்கள், யாழ். மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் யாழ்ப்பாணம் மாநகர சபை சுகாதார வைத்திய அதிகாரியால் விடுக்கப்படும் சுகாதார நடைமுறைகளை கருத்திற்கொண்டும் சுகாதார அமைச்சினால் விடுக்கப்படும் அறிவுறுத்தல்களுக்கு ஏற்பவும் நடைமுறைகளில் மாற்றங்கள் பற்றி அடியார்களுக்கு அவ்வப்போது அறிவிக்கப்படும்.

குழந்தைகளும் சிறுவர்களும் முதியவர்களும் ஆலயத்திற்கு வருவதை முற்றாகத்
தவிர்க்கவும்.

கொவிட் 19 நோய் அறிகுறிகள் உள்ளவர்கள் வீதித்தடையில் அனுமதிக்கப்படமாட்டார்கள். ஆலயத்தினுள் அனுமதிக்கப்படும் வேளையில் அடியார்கள் முழுமையாக நடைமுறைகளை பின்பற்றுவதோடு தடுப்பூசி போடப்பட்ட அட்டைகளை வைத்திருப்பதும் அவசியமாகும்.

ஆலயத்திற்கு அனுமதிக்கப்படும் வேளையில் ஆண் அடியார்கள் வேஷ்டியுடனும் பெண்கள் கலாசார உடைகளுடனும் வருதல் வேண்டும்.

சுகாதார நடைமுறைகளுக்கேற்ப அடியார்கள் ஆலயத்தினுள் வரையறுக்கப்பட்ட அளவில் அனுமதிக்கப்படும் பட்சத்தில் தேவஸ்தானத்தின் அறிவுறுத்தல்களின்படி அவர்கள் ஆலய வளாகத்தினுள் தரித்து நிற்கவோ அமர்ந்திருக்கவோ அனுமதிக்கப்படமாட்டார்கள்.

உரிய சமூக இடைவெளியுடன் வழிபாட்டை நடாத்திச் செல்வதற்கு மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

பக்தர்களின் நன்மை கருதியும் ஆலய உற்சவம் அமைதியான முறையில் நடைபெறுவதை உறுதிப்படுத்தும் முகமாகவும் இம்முறையும் வீதித்தடைகள் நாளை நள்ளிரவு முதல் 08.09.2021 இரவு வரை முழுமையாகப் போடப்படும். வழமைபோல் மாற்றுப்பாதை அமுலில் இருக்கும்.

அடியவர்களின் சுகாதார நன்மையைக் கருத்திற்கொண்டு ஆலயத்தினுள் அனுமதிக்கப்படும் சந்தர்ப்பத்தில் சகல அடியவர்களும் முத்திரைச் சந்தியிலிருந்து பருத்தித்துறை வீதியால் மாத்திரமே ஆலயத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படுவர்.

ஆலயத்திற்கு வந்து சேரும் ஏனைய மூன்று வீதிகளும் அடியவர்கள் செல்வதற்கு முழுமையாகத் தடை செய்யப்படும். வீதித்தடைக்கு உள்ளே நிரந்தர வதிவிடத்தைக் கொண்ட மக்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள், நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் மாத்திரம் மாநகர சபையின் அனுமதி அட்டையுடன் ஏனைய வீதித்தடைகளினூடாகச் சென்று வர அனுமதிக்கப்படுவர்.

ஆலயத்தினுள் அடியவர்களை அனுமதிப்பது, எத்தனை பேரை அனுமதிப்பது போன்றவை தொடர்பாக அவ்வப்போது உள்ள நிலைமைகளைக் கருத்திற்கொண்டு சுகாதாரத் தரப்பின் வழிகாட்டலோடு தீர்மானிக்கப்படும்.

தற்போதைய அசாதாரண சூழ்நிலையில் அங்கப்பிரதட்சணம் செய்தல், அடி அழித்தல், கற்பூரச்சட்டி எடுத்தல், காவடி, தூக்குக்காவடி எடுத்தல் போன்ற நேர்த்திக்கடன்கள் மேற்கொள்ளுதல், தாகசாந்தி, அன்னதானம் வழங்கல் போன்றவை முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

ஆலயச் சூழலிலும் ஆலயத்தை அண்டியுள்ள பகுதிகளிலும் அடியார்கள் மற்றும் பொதுமக்கள் கூடுவதற்கான தெய்வீக சொற்பொழிவுகள், தெய்வீக இசை அரங்குகள், நிகழ்வுகள், களியாட்ட நிகழ்வுகள் மற்றும் வியாபார நடவடிக்கைகள் அனைத்தும் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளன.

ஆலய உற்சவ காலத்தில் ஆலய சுற்றாடலில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றத்தவறுவோர் அல்லது மீறுபவர்களின் மீது சுகாதார நடைமுறைகளின் கீழ் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தற்போதைய சூழ்நிலையில் வழங்கப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்காமை, மீறுகின்றமை போன்றவற்றால் ஏற்படக்கூடிய அசௌகரியங்களைக் கருத்திற்கொண்டு முழுமையான ஒத்துழைப்பினை வழங்கவேண்டும்.

இக் கொரோனா தொற்று சூழலினால் எம்மால் எடுக்கப்படும் விசேட நடவடிக்கைகளால் பக்தர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு மனம் வருந்துவதோடு தற்போது எழுந்துள்ள மிகக்கடுமையான நெருக்கடி நிலையைக் கருத்திற்கொண்டு வழிகாட்டல்களுக்கும் நடவடிக்கைகளுக்கும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வேண்டுகிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

மட்டக்களப்பு மாநகரசபை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது

மட்டக்களப்பு மாநகரசபையில் கடமையாற்றும் ஊழியர்கள் ஆறு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப் பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் நேற்று முன்னெடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனைகளில் மட்டக்களப்பு மாநகர சபையில் கடமையாற்றும் மூன்று உத்தியோகத்தர்கள் கொரோனா தொற்றாளர்களாக இனங் காணப்பட்டனர்.

இந்த நிலையில் மட்டக்களப்பு மாநகர சபையின் ஏனைய ஊழியர்களும் இன்று புளியந்தீவு பொதுச் சுகாதார பரிசோதகர் ராஜ்குமார் தலைமையில் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.

இதன்போது மட்டக்களப்பு மாநகர சபையில் கடமையாற்றும் மேலும் மூன்று ஊழியர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளானமை தொடர்பாக கண்டறியப் பட்டுள்ளது.

இந்த நிலையில் மட்டக்களப்பு மாநகர சபையானது தற்காலிமாக மூடப்பட்டுள்ளதுடன், நோயாளர்களுடன் தொடர்புடையவர்களும் தனிமைப் படுத்தப்பட்டு வருகின்றனர்.

இதேநேரம் இன்றைய தினம் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவில் முன்னெடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனைகளில் 60க்கும் மேற்பட்டவர்கள் நோயாளர்களாக இனங்காணப் பட்டுள்ளதாக மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி மருத்துவர் கே.கிரிசுதன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24மணி நேரத்தில் 189 பேர் கொரோனாத் தொற்றாளர்களாக இனங் காணப்பட்டுள்ளனர் என்று மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் முத்துலிங்கம் அச்சுதன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் 2 இலட்சத்தி 75 ஆயிரம் தடுப்பூசிகள் முதலாம் கட்டமாக வழங்கப் பட்டிருக்கின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்றாவது அலை காரணமாக 9626கொரோனா தொற்றாளர்களாக இனங் காணப்பட்டுள்ளதாகவும் 137 பேர் இது வரையில் மரணமடைந்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.

வெடிகுண்டைப் போன்று வெடித்துச் சிதறும் டெல்டா – மாகாணங்களுக்கிடையேயான போக்குவரத்துகளுக்கு கட்டுப்பாடு

நாட்டில் டெல்டா தொற்று பரவல் தீவிரமடைந்து வருகின்ற நிலையில், நாளொன்றில் நூற்றுக்கும் அதிகளமான மரணங்களும் பதிவாகியுள்ளன.

இதன் காரணமாக சுகாதார தரப்பினரின் ஆலோசனைகளை கவனத்தில் கொண்டு மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்குவதற்கும் அது தொடர்பில் தீவிரமாக கண்காணிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சுகாதார தரப்பினர் உள்ளிட்ட அத்தியாவசிய சேவையில் ஈடுபடுவோர் தவிர்ந்த வேறு எவரும் மாகாண எல்லைகளை கடக்க முடியாது என்றவாறு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டாலும் எதிர்வரும் 14 நாட்களுக்கு அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்படுவதையும் , மரணங்கள் பதிவாகின்றமையையும் கட்டுப்படுத்த முடியாது.

எனவே சுகாதார கொள்ளளவை மீறி தொற்று மீண்டும் தீவிரமடைய முன்னர் போக்குவரத்து கட்டுப்பாடுகளை கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

எதிர்வரும் இரு வாரங்கள் மிகவும் தீர்க்கமானவையாகும் என்றும் அபாயம் மிக்க டெல்டா வைரஸ் வெடிகுண்டைப் போன்று வெடித்து சிதறக்கூடும் என்று இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண எச்சரித்துள்ளார்.

‘ டெல்டா வரைஸ் என்பது வெடிகுண்டைப் போன்றதாகும். நியூயோர்க், லண்டன், இந்தியா மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் டெல்டா பாரியளவில் பரவி பாரதூரமான பாதிப்புக்களை ஏற்படுத்தியது.

டெல்டா என்ற குண்டு வெடித்துள்ளது. எவ்வாறிருப்பினும் இதனை நாம் சிறப்பாக எதிர்கொள்ள வேண்டும்.

மக்களிடம் உண்மை நிலைவரத்தை தெரிவித்து , நாமனைவரும் ஒன்றிணைந்து இந்த நிலைமையை எதிர்கொண்டு எதிர்வரும் சில தினங்களுக்கு பாதுகாப்பாக இருந்தால் இந்த சலவாலை வெற்றி கொள்ள முடியும்.

இந்தியாவில் ஏற்பட்ட நிலைமையைப் போன்றே இங்கும் ஆரம்பமானது. எனினும் சுகாதார தரப்பினர் உள்ளிட்ட சகலரும் இணைந்து அவ்வாறான நிலைமை ஏற்படாமல் கட்டுப்படுத்தியுள்ளோம் என்றும் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண தெரிவித்தார்.

சீனத்தடுப்பூசி பெற்ற இலங்கையர்களுக்கு பிரான்ஸ் வைக்கிறது ஆப்பு!

சீனாவின் சைனோபார்ம் தடுப்பூசி பெற்ற இலங்கையர்களுக்கு பிரான்ஸ் கதவடைத்துள்ளது.

உலகில் சீனத்தடுப்பூசி பெற்ற பயணிகளுக்கு பயணத்தடை விதிக்கின்ற முதல்நாடாக பிரான்ஸ் காணப்படுகின்றது.

சீனத்தடுப்பூசி தவிர ஏனைய தடுப்பூசி பெற்ற இலங்கையர்கள் தமது நாட்டிற்குப் பயணிக்கத் தடையில்லை என்றும் பிரான்ஸ் அறிவித்துள்ளது.

Posted in Uncategorized

யாழ்ப்பாணம் மாநகரசபை முதல்வருக்கு எதிராக உண்ணாவிரத போராட்டம்

யாழ்ப்பாணம் மாநகரசபை முதல்வர் மணிவண்ணனுக்கு எதிராக, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மாநகரசபை உறுப்பினர்களான ரஜீவ்காந், கிருபாகரன் ஆகிய இருவரும் உண்ணாவிரதப் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

சபையின் உறுப்பினரான ரஜீவ்காந்தின் வட்டார அபிவிருத்தி நிதியை நிறுத்தி வைத்திருக்கும் முதல்வரின் செயற்பாட்டைக் கண்டித்து இந்த உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் முதல்வர், திட்டமிட்ட வகையில் அரசியல் பழிவாங்கல் செயற்பாடுகளில் ஈடுபடுவது தொடர்பில் தாம் உள்ளூராட்சி ஆணையாளர் உள்ளிட்ட பல தரப்பினரிடமும் முறையிட்டு உள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தமக்கான நீதி கிடைக்காவிட்டால் இப் போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுக்க உள்ளதாகவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Posted in Uncategorized

உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல்கள் : நெளபர் மெளலவி உள்ளிட்ட 25 பேருக்கு எதிராக வழக்கு

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களின் பிரதான சம்பவங்கள் தொடர்பில் 25 பேருக்கு எதிராக சட்ட மா அதிபர் திணைக்களம் இன்று குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள இந்த குற்றப் பத்திரிகையில், நெளபர் மெளலவி, சாஜித் மெளலவி, மொஹம்மட் மில்ஹான், சாதிக் அப்துல்லாஹ், கபூர் மாமா எனும் ஆதம் லெப்பை, மொஹம்மட் சம்சுதீன், மொஹம்மட் ரிஸ்வான் உள்ளிட்ட பிரதிவாதிகள் அடங்குவதாக அறிய முடிகின்றது.

23 ஆயிரத்து 270 குற்றச்சாட்டுக்களின் கீழ் பயங்கரவாத தடை சட்டத்தின் விதி விதானங்களின் பிரகாரம் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் அதனை விசாரிக்க சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிமன்றை அமைக்குமாறு சட்ட மா அதிபர் பிரதம நீதியரசரிடம் கோரியுள்ளார்.

கொழும்பு மற்றும் நீர் கொழும்பு, மட்­டக்­க­ளப்பு ஆகிய இடங்­களில் கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி 8 தொடர் குண்­டு­வெ­டிப்புச் சம்­ப­வங்கள் பதி­வா­கின.

கரையோர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொச்­சிக்­கடை புனித அந்­தோ­னியார் தேவா­லயம், நீர்­கொ­ழும்பு, கட்­டான பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட கட்­டு­வாப்பிட்டி – புனித செபஸ்­டியன் தேவா­லயம், மட்­டக்­க­ளப்பு புனித சீயோன் தேவா­லயம் ஆகி­ய கிறிஸ்­தவ தேவா­ல­யங்­க­ளும் கொழும்பு காலி முகத்­தி­ட­லுக்கு சமீ­ப­மா­க­வுள்ள ஷங்­கி­ரில்லா, சினமன் கிராண்ட், கிங்ஸ்­பெரி ஆகிய ஐந்து நட்­சத்­திர ஹோட்­டல்­க­ளிலும் குண்டுத் தாக்­கு­தல்கள் இடம்­பெற்­றன.

இந்த தற்கொலை குண்டுத் தாக்குதல்களால், 30 வெளிநாட்டவர்கள் உட்பட 268 பேர் கொல்லப்பட்டதுடன், 27 வெளிநாட்டவர்கள் உட்பட 594 பேர் காயமடைந்தனர்.

இந் நிலையிலேயே இந்த பிரதான 8 குண்டுவெடிப்புகள் தொடர்பிலும் பிரதிவாதிகள் 25 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ரிஷாட் பதியுதீனின் விளக்கமறியல் நீடிப்பு

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பொறுப்பிலுள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் விளக்கமறியல் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இன்று (10) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

திட்டமிட்டபடி பாடசாலைகளை திறப்பதில் சாத்தியமில்லை – கல்வியமைச்சர்

முன்னர் திட்டமிட்டபடி செப்டம்பர் முதல் வாரத்தில் பாடசாலைகளை திறப்பதற்கான சாத்தியம் இல்லை என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும்போதே அமைச்சர் இதனைக் கூறினார்.

இதேவேளை தடுப்பூசி திட்டத்துடன் இணைந்து பாடசாலைகளை மீண்டும் திறக்க அரசுக்கு தெளிவான திட்டம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக ஆகஸ்ட் இறுதிக்குள் பாடசாலைகளில் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு தடுப்பூசியின் இரண்டு அளவுகளும் வழங்கப்பட்டு, செப்டெம்பர் முதல் வாரத்தில் பாடசாலைகளை மீண்டும் திக்க முடியும் என்று கல்வியமைச்சு நம்பிக்கை கொண்டிருந்தது.

எனினும் தற்போது நிலவும் கொரோனா வைரஸ் நிலைமை காரணமாக, திட்டமிட்டபடி பாடசாலைகளை மீண்டும் திறக்க முடியாது என்று அமைச்சர் பீரிஸ் கூறினார்.

எனவே மாணவர்கள் பாடத்திட்டத்தை மேற்கொள்ள ஆன்லைன் கல்வி முறையை சார்ந்திருக்க வேண்டும். ஆன்லைன் கல்வி நடவடிக்கைகளில் இருந்து ஆசிரியர்கள் விலகுவது பழிவாங்கும் செயலாக கருதப்பட வேண்டும்.

அரசாங்கமும் நாடும் சுகாதார அவசர நிலையை எதிர்கொள்ளும் நேரத்தில் ஆசிரியர்கள் தங்கள் தொழிற்சங்க நடவடிக்கையை தொடர்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மர்ம மனிதர்களின் நடமாட்டத்தினால் அச்சத்தில் வாழும் வவுனியா மக்கள்

வவுனியா- மதவுவைத்தகுளம் பகுதியில் மர்ம மனிதர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக அப்பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த இரண்டு வாரங்களாக அடையாளம் காண முடியாத வகையில், உடம்பு முழுவதுமாக நிறப்பூச்சுக்களை பூசிக்கொண்டு நிர்வாணமாக, பெண்கள் தனியாக இருக்கும் வீடுகளை இலக்கு வைத்தும், குடும்பத்தலைவர் வீட்டில் இல்லாத நேரங்களில் வீடுகளில் புகுந்தும், வீட்டில் தனிமையில் இருக்கும் பெண்களிடம் தகாதமுறையில் நடந்துகாெள்ள முற்பட்டதாக மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனால் நிம்மதியாக வாழ முடியாத நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளதாக மதவுவைத்தகுளம் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பாக வன்னி பிரதி பொலிஸ்மா அதிபரிடம் கடந்த வியாழக்கிழமை முறைப்பாடு பதிவு செய்தும், அவர்கள் இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மர்மமனிதர்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தாவிட்டால் குறித்த பிரதேச மக்கள் நிம்மதியாக இரவு நேரங்களில் இருக்க முடியாது எனவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

Posted in Uncategorized

கொரோனா மரணங்கள் குறித்து சற்றுமுன் வௌியான அறிவிப்பு

நேற்றைய தினம் (08) நாட்டில் மேலும் 94 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,205 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 331,922 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 295,518 ஆக அதிகரித்துள்ளது.