தமிழ் அரசியல் கைதிகள் நான்கு பேர் விடுதலை!

தமிழ் அரசியல் கைதிகள் நான்கு பேர், நிரபராதிகள் என இனங்காணப்பட்டதையடுத்து வவுனியா மேல் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

குரலற்றவர்களின் குரல் அமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இவ்விடயம் தொடர்பாக மேலும் கூறியுள்ளதாவது, அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதிகளான யாழ்ப்பாணத்தை சேர்ந்த நடேசன் தருமராசா, வவுனியாவைச் சேர்ந்த ஜோசப் செபஸ்ரியான், கிளிநொச்சியை சேர்ந்த நடராசா சர்வேஸ்வரன் மற்றும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த கண்ணதாசன் ஆகியோரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இதில் நடேசன் தருமராசா, தனது ஒருவருட புனர்வாழ்வை முடித்து இயல்பு வாழ்க்கையில் ஈடுபட்டிருந்த வேளையில், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கடந்த 2013 ஆம் ஆண்டு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.

இதன்போது ஜோசப் செபஸ்ரியான் என்பவரும் கைது செய்யப்பட்டு, இருவருக்கும் கடந்த 2018 ஆம் ஆண்டு வவுனியா மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

அந்தவகையில் வழக்கு விசாரணைகளின் அடிப்படையில் அவர்கள், வவுனியா மேல் நீதிமன்றத்தினால் நிரபராதிகள் என இனங்காணப்பட்டதையடுத்து, 8 வருடங்களின் பின்னர் நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கடந்த 2016 ஆம் ஆண்டு நடராசா சர்வேஸ்வரன் கைது செய்யப்பட்டு, கடந்த 2018 ஆம் ஆண்டு அவருக்கு எதிராக வவுனியா மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த வழக்கு விசாரணைகளின் அடிப்படையில் நேற்று நிரபராதியென இனங்காணப்பட்டு நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு கட்டாய ஆள்சேர்ப்பில் ஈடுபட்டார் என்ற குற்றத்துக்காக கைது செய்யப்பட்டு, தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் நுண்கலைத் துறை விரிவுரையாளர் கண்ணதாசனையும் வவுனியா மேல் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

சீன தூதுவருடன் வடக்கு, கிழக்கு ஆளுநர்கள் சந்திப்பு

இலங்கைக்கான சீன தூதுவர் கீ சென்ஹொங்க்கும் (Qi Zhenhong) வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்லத் இற்கும் இடையில் மிக அண்மையில் விசேட சந்திப்புக்கள் நடை பெற்றதன.

இந்தச் சந்திப்புக்களின் போது வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கும் சீனாவுக்கும் இடையில் காணப்படுகின்ற வரலாற்றுத் தொடர்புகள் பற்றி இருவரும் பரஸ்பரம் கலந்துரையாடினார்கள்.

அத்துடன் வடக்கு மாகாணத்திற்கு தடுப்பூசிகளை வழங்கியமைக்கு நன்றிகளைத் தெரிவித்ததோடு, தமது மாகாணத்திற்கு முழுமையாக தடுப்பூசிகளை அளிப்பது தொடர்பில் கரிசனை கொண்டிருப்பதாக ஆளுநர்கள் தெரிவித்தனர்.

அத்துடன் எதிர் வரும் காலத்தில் சீனாவுடன் ஒத்துழைப்புக்களை மேம்படுத்தி வட மாகாணத்திலும், கிழக்கு மாகாணத்திலும் பல்வேறு விடயங்களை முன்னெடுப் பதற்கான இருதரப்பினரதும் விருப்பம் வெளியிடப்பட்டது.

‘தமிழர்களைப் பாதுகாக்கும் பொறுப்பை இலங்கை நிறைவேற்றவேண்டும்’- வைகோவின் கேள்விக்கு அமைச்சர் பதில்

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மாநிலங்களவையில் நடந்த விவாதத்தின் போது, கீழ்காணும் கேள்விகளுக்கு, அயல் உறவுத்துறை அமைச்சர் விளக்கம் தருவாரா? என கேள்வி எழுப்பி ஆறு முக்கிய கேள்விகளை முன் வைத்திருந்தார்.

அதாவது,

1.இலங்கையின் உள்நாட்டுப் போரில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து, இலங்கையில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகள், பன்னாட்டு நீதி விசாரணை கோரி இருக்கின்றார்களா?

அவ்வாறு இருப்பின், அதுகுறித்து உங்கள் நிலைப்பாடு என்ன?
இலங்கை அரசு இதுவரை எந்தவிதமான உள்ளக விசாரணையும் மேற்கொள்ளாத நிலையில், இனியும் அதற்கான வாய்ப்புகள் இல்லாத சூழலில், பன்னாட்டு நீதி விசாரணை நடைபெறுவதற்கான முயற்சிகளை, இந்திய அரசு மேற்கொள்ளுமா?
இலங்கையில் முஸ்லிம்கள் உடல் அடக்க உரிமைகளைத் திரும்பத் தருவதற்கும், தமிழர்களுடைய நிலங்களில் இலங்கைப் படையினர் நிலை கொண்டு, தமிழர்களைக் கண்காணித்து வருவதையும், அவர்கள் மீது தொடர் அடக்குமுறைகளைத் தடுப்பதற்கும், தூதரக முறையில் இந்தியா ஏதேனும் முயற்சிகளை மேற்கொண்டதா?
அவ்வாறு இருப்பின், அதுகுறித்த தகவல்களைத் தருக;
இல்லை என்றால், அதற்கான காரணங்கள் என்ன?
வைகோவின் குறித்த ஆறு கேள்விகளுக்கும் உள்துறை இணை அமைச்சர் முரளிதரன் விளக்கம் அளிக்கையில்,

இலங்கையின் உள்நாட்டுப் போரின்போது நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் குறித்து, இலங்கையில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகள், பன்னாட்டு விசாரணை கோரி இருக்கின்றன. பல்வேறு இனங்கள், பல்வேறு மொழிகள், பல்வேறு சமயங்கள் கொண்ட இலங்கை நாட்டில், தமிழர் உள்ளிட்ட அனைத்துக் குடிமக்களும் சமமாக வாழ்வதற்கும், பாதுகாப்பு மற்றும் சமய நல்லிணக்கம் நிலவுதற்கும், அவர்களுடைய முன்னேற்றம், எதிர்காலக் கனவுகளை, ஒன்றுபட்ட இலங்கை என்ற நாட்டுக்கு உள்ளே நிறைவேற்றிக் கொள்வதற்கும், இந்தியா எப்போதும் உறுதுணையாக இருந்து வருகின்றது.

இந்தப் பொருண்மையில், இந்திய அரசு, இலங்கை அரசுடன் தொடர்ந்து பேசி வருகின்றது; பல்வேறு நிலைகளில் இருதரப்பு பேச்சுகள் நடைபெற்று உள்ளன; இலங்கைத் தமிழர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கு இலங்கை அரசு அளித்துள்ள உறுதிமொழிகளை நிறைவேற்ற வலியுறுத்தி வருகின்றது.

2019, 2020 ஆம் ஆண்டுகளில், இலங்கைக் குடிஅரசின் தலைவர் இந்தியா வருகை தந்தபோதும், 2020 செப்டெம்பர் 26 ஆம்நாள், இரண்டு நாடுகளின் பிரதமர்கள் இணையக் காணொளி வழியாக நடத்திய இருதரப்புப் பேச்சுகளிலும், 2021 ஜனவரி மாதம், இந்திய அயல் உறவு அமைச்சர் இலங்கை சென்றபோதும், மேற்கண்ட கருத்துகளை, இந்தியா வலியுறுத்தி இருக்கின்றது.

ஐ.நா.மனித உரிமைகள் மன்றத்தின் (United Nations Human Rights Council – UNHRC), 46 ஆவது கூட்டத் தொடரில், சமத்துவம், நீதி, அமைதி, கண்ணிய வாழ்வு என்ற தமிழர்களின் விருப்பங்களை நிறைவேற்ற இந்தியா வலியுறுத்தியது.

தமிழர்களின் உரிமைகளை மதிக்கின்ற வகையில், உண்மையான அதிகாரப் பகிர்வுதான், இலங்கையின் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கும் என்பதையும் எடுத்துக் கூறியது.

கூடுதலாக, இலங்கை அரசு நல்லிணக்க முயற்சிகளை மேற்கொள்ளவும், மறுவாழ்வுப் பணிகளைச் செயல்படுத்தவும், தமிழர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவும், பன்னாட்டு சமுதாயத்துடன் இணைந்து அத்தகைய முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு, இலங்கையின் அனைத்துத் தரப்பு மக்களும், விடுதலை உணர்வுடன், மனித உரிமைகள் பாதுகாப்புடன் வாழ வகை செய்யுமாறு இந்தியா வலியுறுத்தியது.

இந்நிலையில், இலங்கையில் மனித உரிமை மீறல்களிற்கு பெறுப்புக்கூறுவது உள்நாட்டு பொறிமுறைகள் மூலம் சாத்தியமில்லை என்பதால் இந்தியா சர்வதேச விசாரணையை ஆரம்பிக்குமா என்ற கேள்விக்கு அமைச்சர் வி முரளீதரன் நேரடியான பதிலை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கிராம மட்டத்தில் சுதந்திரக் கட்சியை மறுசீரமைக்கும் திட்டத்தை ஆரம்பித்தார் மைத்திரிபால சிறிசேன

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை வலுப்படுத்துவதற்கான புதிய திட்டத்தை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆரம்பித்துள்ளார்.

இந்த திட்டத்தின் கீழ் மாவட்ட மட்டத்தில் நடத்தப்படுகின்ற கருத்தரங்கு இன்று காலியில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தவிசாளர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

காலி மாவட்டத்தின் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தொகுதி அமைப்பாளர்கள், முகாமையாளர்களும் கருத்தரங்கிற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

கருத்தரங்கு நிறைவு பெற்றதன் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு முன்னாள் ஜனாதிபதி பதிலளித்தார்.

Posted in Uncategorized

இலங்கை வரலாற்றில் அதிக பெறுமதியான பணம் அச்சிடப்பட்டது

இந்த வருடம் ஒரே நாளில் அதிக பெறுமதியான பணம் 28-07-2021 அச்சிடப்பட்டுள்ளது.

நேற்று 213.48 பில்லியன் ரூபா புழக்கத்திற்கு விடுவிக்கப்பட்டதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

நேற்று முன்தினம் 1 பில்லியன் அமெரிக்க டொலர் வௌிநாட்டு கடன் செலுத்தப்பட்டதை அடுத்து, இந்த பணம் புழக்கத்திற்கு விடப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் பொருளாதார ஸ்திரநிலை உள்ளதாக அல் ஜசீரா தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

பிரித்தானிய வெளியுறவு செயலகத்திடம் ரெலோ அவசர விடயங்கள் கோரிக்கை 

பிரித்தானிய வெளியுறவு மற்றும் பொதுநலவாய அபிவிருத்தி அலுவலகத்தின்  இந்தியா மற்றும் இந்தியப் பெருங்கடல் உதவி இயக்குநராக லிசா பண்டாரி நியமிக்கப்பட்டுள்ளார்.  அவரின் பதவியேற்பின் பின் 28-07-2021ரெலோ   பிரித்தானிய  கிளை  தலைவரும் , தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இணைத் தலைவராகவும் செயலாற்றிவரும் சாம் சம்பந்தன் அவர்களுடன் சந்திப்பு ஒன்று நடைபெற்றது . 

இலங்கை விவகாரங்கள் பற்றி கலந்துரையாடப் பட்ட வேளையில் தமிழ் மக்கள் தற்போது எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனைகளை பிரித்தானிய அரசு உடனடி கவனத்தில் கொள்வதோடு உரிய செயல்பாடுகளையும் முன்னெடுக்க வேண்டும் என திரு. சம்பந்தன் அவர்களால் கோரிக்கைகள் சமர்ப்பிக்கப் பட்டன. 

 குறிப்பாக தமிழ் மக்கள் நீண்டகாலமாக கோரிவரும் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளை நமது பாரம்பரிய தாயகமாக அங்கீகரிக்கும் அரசியல் தீர்வை அடைய தமிழ் சமூகத்திற்கு சர்வதேச மத்தியஸ்தத்தின் முலம் உதவுதல்.

 அரசியல் தீர்வை எட்டும் வரை  நிலம் மற்றும் பொலிஸ் அதிகாரப் பகிர்வுடன் அரசியலமைப்பின் 13 வது திருத்தத்தை UNHRC தீர்மானம் 46/1 இல் பிரேரிக்கப் பட்டதன் பிரகாரம் முழு அளவில் செயல்படுத்துதல்.

 இதன் அடிப்படையில் மாகாண சபை தேர்தல்களை தாமதமின்றி நடத்த இலங்கை அரசை வலியுறுத்துதல்

இலங்கை சிறைகளில் காலவரையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை பொதுமன்னிப்பு வழங்கி விடுவித்தல்

இலங்கை அரசின் இனப்படுகொலை உள்ளிட்ட அட்டூழிய குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க அர்த்தமுள்ள நடவடிக்கைகளை மனித உரிமைப் பேரவையிலும் அதைத் தாண்டியும் செயல்படுத்தல் 

பல்வேறு காரணங்களின் அடிப்படையில் தமிழரின் பாரம்பரிய  நிலங்களை ஆக்கிரமித்து சிங்கள குடியேற்றங்களை நிறுவி தமிழ் மக்களின் இனக் குடிப் பரம்பலை சிதைப்பது மூலம் தங்கள் சொந்த நிலத்தில் உள்ள தமிழ் மக்களுக்கு எதிரான  இலங்கை அரசின் திட்டமிட்ட இனவழிப்பு நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துதல்.

என்பன உடனடியாக கையாளப்பட வேண்டிய விடயங்களாக சுட்டிக் காட்டப்பட்டன.  தமிழ் மக்களின்  மனித உரிமை மற்றும்  அடிப்படை உரிமைகள் அரசியல் சமத்துவம், கெளரவமான வாழ்வு என்பனவற்றை உறுதி செய்யும் அனைத்து நடவடிக்கைகளையும் பிரித்தானியா விரைந்து செயல்படுத்தும் என புதிய உதவி இயக்குனராக லிஸா பண்டாரி உறுதியளித்தார் .

ரெலோ ஊடக வாரியம்

ஆரியகுளம் யாழ்.மாநகரசபைக்கே சொந்தம்: எவரும் உரிமை கோர முடியாது! ரெலோ பிரதி முதல்வர் ஈசன்

யாழ்.ஆரியகுளம் யாழ்.மாநகரசபைக்கும், மக்களுக்கும் உரியது. எந்தக் காலத்திலும் ஆரியகுளத்தை யாரும் உரிமை கோர முடியாது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் யாழ் மாவட்ட பிரதி அமைப்பாளரும், யாழ்.மாநகரசபையின் பிரதி முதல்வருமாகிய து. ஈசன் தெரிவித்தார்.

யாழ். மாநகர முதல்வரின் “தூய கரங்கள் தூய நகரம்” எனும் திட்டத்தின் ஒரு பகுதியாக யாழ்.ஆரிய குளம் துரித அபிவிருத்தித் திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை(23-07-2021) இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

44 குளங்களை ஆழமாக்கி அழகுபடுத்தும் வேலைத் திட்டமாக உலகவங்கி தலையிட்டு அதற்கான திட்டத்தை தந்திருந்தது. அதற்கான முயற்சிகளை மேற்கொண்ட நிலையில் தற்போது இரண்டு குளங்களுக்கான புனரமைப்பு வேலைகள் தான் நடந்து கொண்டிருக்கின்றன.

ஆரியகுளத்தை அழகுபடுத்துவதுடன் மாத்திரமின்றி நிலத்தடி நீரைப் பாதுகாக்கக் கூடிய வகையில் ஆழப்படுத்தி, சுத்தப்படுத்தி நவீனமயப்படுத்துவதால் யாழ்.நகரத்தின் அழகுக்கு மேலும் அழகு சேர்க்கும் என்பதில் ஐயமில்லை.

யாழ்.மாநகர முதல்வரின் சிந்தனைக்கு ஈடாகத் தியாகி அறக்கொடை நிலையத்தின் ஸ்தாபகர் இந்தத் திட்டத்தை முன்னெடுப்பதற்கான நிதி உதவி வழங்க முன்வந்திருப்பதை நாங்கள் மேலும் மேலும் பாராட்டுகின்றோம்.

இதுபோன்ற பல மக்கள் நலப் பணிகளை ஆற்றும் மனிதர்களை வாழ்வில் காண்பது அரிது. அந்தவகையில் யாழ். மாநகரத்துக்கு இப்படியானதொரு கொடையாளி கிடைத்தது வரவேற்கத்தக்க விடயம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Posted in Uncategorized

சீன நாட்டு பிரஜை ஒருவரும், கோட்டாபய முகாமுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் கிழக்கு, வட்டுவாகல் கோட்டாபய கடற்படை முகாம் காணி அளவீடு செய்வதற்கு நேற்றும் (29) முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டமையால் அங்கு பெரும் பதற்றமான நிலைமையொன்று இன்றுக்காலை முதல் ஏற்பட்டிருந்தமை யாவரும் அறிந்த விடயமாகும்.

இந்நிலையில், அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் மற்றும் ஏனைய தரப்பினருக்கும் அதிகாரிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றது. அந்தப் பேச்சுவார்த்தையின் போது,

முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் கிழக்கு, வட்டுவாகல் கோட்டாபய கடற்படை முகாம் காணி அளவீடு தொடர்பில் கடற்படை, காணிகளுக்கு உரியவர்கள், உரிய திணைக்கள அதிகாரிகளுடன் மாவட்டசெயலகத்தில் ஒரு கலந்துரையாடல் இடம்பெறும். அந்தக் கலந்துரையாடலின் அடிப்படையிலேயே நில அளவீடு தொடர்பில் முடிவு எடுக்கப்படும். அதுவரை நில அளவைச் செயறபாடுகள் இடம்பெறாது என்ற இணக்கமான முடிவொன்று எடுக்கப்பட்டது. இதனையடுத்தே, ஆர்ப்பாட்டம் சற்றுமுன்னர் கைவிடப்பட்டது.

தென்னிலங்கையில் வசித்துவருகின்ற சீன நாட்டவர் ஒருவருக்கு குறித்த கோட்டாப கடற்படை முகாம் அமைந்துள்ள பகுதியில் சுமார் 49 ஏக்கர் காணியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அந்த சீன நாட்டைச்சேர்ந்தவர் ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற பகுதிக்கு வருகைதந்து தனது காணிகளுக்குரிய நட்ட ஈட்டைப் பெறுவதற்கும், இதுவரைகாலம் அங்கு கடற்படை இருந்து தனது காணியைப் பயன்படுத்தியமைக்கான நட்ட ஈட்டைப் பெறுவதற்கும் கட்டாயம் அங்கு நில அளவீடு இடம்பெறவேண்டும் என வலியுறுத்தினார்.

குறித்த நபரின் இத்தகைய கருத்திற்கு அங்கிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது கடுமையான கண்டனங்களை வெளியிட்டிருந்தனர். சீனச்சிங்களவர் அங்கிருந்து வெளியேறவேண்டும் என கோசம் எழுப்பியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து ஏனைய ஆர்ப்பாட்டக்காரர்களும் குறித்த நபர் அங்கிருந்து வெ ளியேறவேண்டுமெனக் கோசம் எழுப்பியதைத் தொடர்ந்து ஆர்ப்பாட்ட இடத்திலிருந்து அந்நபர் வெளியேறியிருந்தார்.

ஞாயிறு முதல் வரையறுக்கப்பட்டளவில் மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து ஆரம்பம்

வரையறுக்கப்பட்ட அளவிலான அரச , தனியார் பஸ்கள் மற்றும் புகையிரதங்கள் உரிய சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல்களுக்கு அமைவாக ஞாயிற்றுக்கிழமை முதல் மாகாணங்களுக்கிடையிலான பொதுபோக்குவரத்து சேவையில் ஈடுப்படுத்தப்படும்.

இதன் போது சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல்களை பின்பற்றாதவர்களுக்கு எதிராக கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

மாகாணங்களுக்கிடையிலான பொதுபோக்குவரத்து சேவை தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Posted in Uncategorized

ஹிஷாலினியின் சடலத்தை பொலிஸ் பாதுகாப்புடன் பேராதனை போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு உத்தரவு

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய போது எரிகாயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்த டயகம பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி ஹிஷாலினியின் சடலத்தை தோண்டி, பொலிஸ் பாதுகாப்புடன் பேராதனை போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு நுவரெலியா நீதவான் லுஷாகா குமாரி தர்மகீர்த்தி இன்று உத்தரவிட்டார்.

தனிமைப்படுத்தல் விதிமுறைகளுக்கு அமைய, டயகம பொது மயானத்தில் புதைக்கப்பட்டுள்ள சிறுமியின் சடலத்தை நாளை (30) காலை 8.30-க்கு தோண்டுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அரச சிரேஷ்ட சட்டத்தரணி ஹங்ச அபேரத்ன, B அறிக்கையை சமர்ப்பித்து முன்வைத்த விடயங்களை ஆராய்ந்த பின்னர் நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பணிப்பாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் நெவில் டி சில்வா, கொழும்பு தெற்கு மகளிர் மற்றும் சிறுவர் பிரிவின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட தரப்பினர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர்.

டயகம சிறுமி ஹிஷாலினியின் சடலத்தை தோண்டி எடுத்து மீளவும் பிரேத பரிசோதனையை நடத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.

அதற்கமைய, பிரேத பரிசோதனையை மேற்கொள்வதற்கான மூவரடங்கிய விசேட நிபுணர் குழு நேற்று பெயரிடப்பட்டது.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின், சட்ட மருத்துவத்துறை தொடர்பான பேராசிரியர் ஜீன் பெரேரா, கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின், சட்ட மருத்துவத்துறை தலைவரும், விரிவுரையாளருமான டொக்டர் சமீர குணவர்தன பேராதனை போதனா வைத்தியசாலையின் சட்ட மருத்துவ துறையின் விசேட சட்ட வைத்திய அதிகாரி பிரபாத் சேனசிங்க ஆகியோர் இந்த குழுவிற்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

சிறுமி உயிரிழந்த விதம், துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளாரா, அவ்வாறு ஏற்பட்டிருப்பின் எந்த காலப்பகுதியில் சம்பவம் இடம்பெற்றுள்ளது, ஏனைய சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டுள்ளாரா உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் மூவரடங்கிய விசேட நிபுணர் குழுவிடமிருந்து விசாரணை அறிக்கை பெறப்படவுள்ளது.

நிபுணர் குழுவின் விசாரணை அறிக்கை கிடைத்ததன் பின்னர் மேலதிக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் மனைவி, மனைவியின் தந்தை மற்றும் சிறுமி ஹிஷாலினியை தொழிலுக்காக டயகம பகுதியிலிருந்து கொழும்பிற்கு அழைத்து வந்த தரகர் ஆகியோரே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சிறுமியின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுத்துள்ளமையால், நீதி கோரி ஆர்ப்பாட்டங்களும் வலுப்பெற்றவண்ணமுள்ளன.