இந்தியாவின் கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி மன்னார் வளைகுடா கடற்பரப்பில் கண்காணிப்பு

மன்னார் வளைகுடா கடற்பகுதி மற்றும் தீவுகளை இந்தியாவின் கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜெனரல் அஜேந்திர பஹதுர் சிங் (Ajendra Bahadur Singh) ஹெலிகொப்டர் மூலம் கண்காணித்துள்ளார்.

மன்னார் வளைகுடா வழியாக தொடர்ந்து கடத்தல்களும் சட்டவிரோத நடவடிக்கைகளும் இடம்பெறுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்திற்கு அருகே இலங்கை இருப்பதால், தெற்கு கடற்கரையான மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இருந்து கடல் அட்டைகள், மஞ்சள், கடல் பல்லி, கடல் குதிரை, கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட்டு வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டிருந்தன.

இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக உரிய ஆவணங்கள் இன்றி சந்தேகநபர்கள் கடல் வழியாக தமிழகத்திற்குள் பிரவேசிக்கின்றமையும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, மன்னார் வளைகுடா பகுதியை கண்காணிக்க இந்திய கடற்படைக்கு சொந்தமான இரண்டு அதிநவீன ரோந்து கப்பல்கள் பாதுகாப்பு பணிக்காக பாம்பன் குந்துகால் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

நேற்று (22) காலை இராமேஸ்வரம் சென்ற இந்திய கடற்படை வைஸ் அட்மிரல் ஜெனரல் அஜேந்திர பஹதுர் சிங் இராமேஸ்வரம் கோவிலில் தரிசனத்தை முடித்துவிட்டு, பாம்பன் அடுத்துள்ள குந்துகால் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் கடற்படைக்கு சொந்தமான அதிநவீன ரோந்து கப்பல்களை பார்வையிட்டுள்ளார்.

பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மன்னார் வளைகுடா பகுதியிலும் தீவுகளிலும் தாழ்வாக பறந்து கடல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

தொடர்ச்சியாக நான்கு நாட்களுக்கு பாராளுமன்ற அமர்வு

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 03ஆம் திகதி முதல் ஓகஸ்ட் 05ஆம் திகதி வரை நான்கு நாட்கள் பாராளுமன்ற அமர்வுகளை முன்னெடுப்பதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் 19 ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இலங்கை பாராளுமன்றம் பணிப்பாளரினால் (தொடர்பாடல்) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

தேருநர்களைப் பதிவுசெய்தல் (திருத்தச்) சட்டமூலம், வேலையாட்களின் தேசிய குறைந்தபட்ச வேதனம் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் இலங்கைப் பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு சட்டமூலம் என்பன இத்தினங்களில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார்.

அத்துடன், சேர் ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டுமூலம் பாதுகாப்பு அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் மேலும் ஆராய்ந்த பின்னர் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவிருப்பதாகவும் தசநாயக்க அவர்கள் குறிப்பிட்டார்.

ஓகஸ்ட் 03ஆம் திகதி பாராளுமன்றத்தில் சபை ஒத்திவைப்புப் பிரேரணை மீதான விவாதமாக இலங்கை மத்திய வங்கியின் 2020ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை குறித்த விவாதம் இடம்பெறும் என்றும் செயலாளர் குறிப்பிட்டார். அன்றையதினம் முற்பகல் 11.00 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை சபை ஒத்திவைப்பு விவாதம் இடம்பெறும்.

ஓகஸ்ட் 04ஆம் திகதி முற்பகல் 11.00 மணி முதல் பிற்பகல் 4.30 மணிவரை தேருநர்களைப் பதிவுசெய்தல் (திருத்தச்) சட்டமூலம், வேலையாட்களின் தேசிய குறைந்தபட்ச வேதனம் (திருத்தச்) சட்டமூலம் என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன. அன்றையதினம் பிற்பகல் 4.30 மணி முதல் பிற்பகல் 5.30 மணிவரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணை குறித்த விவாதம் இடம்பெறவிருப்பதாகவும் செயலாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.

மறுநாள் 05ஆம் திகதி முற்பகல் 11.00 மணி முதல் பிற்பகல் 4.30 மணிவரை இலங்கைப் பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு சட்டமூலம் மற்றும் செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்ட இலக்கம் 14/2008 இன் கீழான கட்டளைகளும், ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சின் 2021ஆம் ஆண்டுக்கான குறைநிரப்பு பிரேரணை என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன. அன்றையதினம் பிற்பகல் 4.30 மணி முதல் 5.30 மணிவரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணை குறித்த விவாதமும் நடைபெறும்.

ஓகஸ்ட் 06ஆம் திகதி முற்பகல் 11.00 மணி முதல் பிற்பகல் 4.30 மணி வரை சேர் ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலம் மற்றும் குடிவருவோர், குடியகல்வோர் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் என்பன இரண்டாவது நாள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவிருப்பதாகவும் செயலாளர் நாயகம் குறிப்பிட்டார். அன்றையதினம் பிற்பகல் 4.30 மணி முதல் 5.30 மணிவரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணை குறித்த விவாதமும் நடைபெறும்.

பாராளுமன்றம் கூடும் நான்கு நாட்களிலும் மு.ப 10.00 மணி முதல் மு.ப 11.00 மணிவரை பாராளுமன்ற உறுப்பினர்களின் வாய்மூல விடைக்கான கேள்விக்காக நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் செயலாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

Posted in Uncategorized

டயகம சிறுமி மரணம் – ரிஷாத்தின் மனைவி உட்பட மூவர் கைது!

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மனைவி, சிறுமியை வேலைக்கமர்த்திய தரகர் மற்றும் மற்றுமொரு நபர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹட்டன், டயகம பிரதேசத்தை சேர்ந்த 16 வயதுடைய சிறுமி ஒருவர் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணி புரிந்து வந்த நிலையில் கடந்த தினம் உயிரழந்திருந்தார்.

குறித்த மரணம் தொடர்பில் இடம்பெற்று வரும் விசாரணைகளுக்கு அமைய ​நேற்றைய தினம் பொரளை பொலிஸார் ரிஷாத் பதியுதீனின் வீட்டிற்கு சென்று அவரது மனைவிடம் வாக்குமூலம் பதிவு செய்திருந்தனர்.

இதனை அடுத்து குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமாகிய அஜித் ரோஹண தெரிவித்தார்.

Velikkadai Sirai Padukolai

கறுப்பு ஜூலை படுகொலையை நினைவேந்த மூதூர் நீதிமன்றம் தடை உத்தரவு!

ஈழத் தமிழரின் வரலாற்றின் முக்கியமான திருப்பு முனையாகவும், அழிக்க முடியா வரலாற்றுப் பதிவாகவும் அமைந்துள்ள கறுப்பு ஜூலை படுகொலையை சம்பூர் பொலிஸ் பிரிவில் நினைவுகூரத் தடை உத்தரவு வழங்கி மூதூர் நீதிவான் நீதிமன்றம் நேற்று கட்டளையிட்டுள்ளது.

சம்பூர் பொலிஸார் நீதிமன்றத்தில் முன்வைத்த விண்ணப்பத்தை ஆராய்ந்து ஒரு குழுவினருக்கு இந்தத் தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 23ஆம் திகதி கறுப்பு ஜூலை படுகொலை நினைவேந்தலை நடத்த ஒரு தரப்பினர் தயாராகி வருகின்றனர் என்று பொலிஸார் மன்றுக்கு தெரிவித்தனர்.

பொலிஸாரின் விண்ணப்பத்தைப் பரிசீலித்த பின்னர், மூதூர் நீதிவான் பாஸ்மிலா பானு, வெருகல் பிரதேச சபையின் துணைத் தலைவர் தேவநாயகம் சங்கர், அகில இலங்கை தமிழ் காங்கிரசின் திருகோணமலை மாவட்ட செயலாளர் கணேஷபிள்ளை குகன் உள்ளிட்டோருக்குத் தடை உத்தரவு கட்டளையை வழங்கினார்.

1983ஆம் ஆண்டு, ஜூலை 23ஆம் திகதி திருநெல்வேலியில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து, நாட்டில் தமிழர்களுக்கு எதிரான இனவன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன.

இதில், நூற்றுக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்; காயப்படுத்தப்பட்டனர்; காணாமல் ஆக்கப்பட்டனர்.

தமிழர்களின் கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துக்கள் சிங்களக் காடையர்களால் எரித்து அழிக்கப்பட்டன – சூறையாடப்பட்டன. தென்பகுதியில் இருந்த ஆயிரக்கணக்கான தமிழர்கள் அடித்து விரட்டப்பட்டு, அகதிகளாக வடக்குக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

Posted in Uncategorized

ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரை கண்டனத்துக்குரியது வேலிக் கட்டைக்கு ஓணான் சாட்சியா? ரெலோ கேள்வி

பயங்கரவாத தடைச்சட்டம் நீக்க தேவையில்லை. சில சரத்துக்களை மாத்திரம் மாற்றம் செய்வதன் மூலம் சட்டத்தை திருத்தி தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரையை நாம் நிராகரிக்கிறோம் என ரெலோ கண்டனத்தை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில், ரெலோ அமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் தெரிவிக்கையில்,

“சட்டவல்லுனர்கள், ஜனநாயகவாதிகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், அரசியல் கட்சிகள் ஏன் சர்வதேச நாடுகள் உட்பட பலதரப்புடக்கள் இந்த சட்டத்தினால் ஏற்பட்ட கடும் மக்கள் விரோத போக்கினை கண்டித்து இதை நீக்குமாறு வலியுறுத்தி அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்கள்.

ஏற்கனவே வீழ்ந்து செல்லும் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவோம் என புதிய நிதி அமைச்சர் நாட்டுக்கு வாக்குறுதி வழங்கியுள்ளார்.
இந்த சட்டத்தை நீக்காது விட்டால் ஐரோப்பிய ஒன்றிய வரிச்சலுகை வழங்க பட மாட்டாது. எமது ஏற்றுமதியும் அந்நிய செலாவணியும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும். அப்படியான அபாய நிலைக்கு நாட்டை இட்டுச் செல்லும் பரிந்துரையை ஜனாதிபதி ஆணைக்குழு வழங்குவது எதற்காக?

ஜனாதிபதியினால் ஏற்படுத்தப்பட்ட ஆணைக்குழு பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கத் தேவையில்லை என்று ஜனாதிபதிக்கு பரிந்துரை வழங்குவது வேலிக் கட்டைக்கு ஓணான் சாட்சி யாக அமைவது போல் இருக்கிறது. இது எதிர்பார்க்கப்பட்ட விடயம்தான். இந்த பயங்கரவாத தடைச் சட்டத்தினால் எமது தமிழினம் சொல்லொணாத கஷ்டங்களை அனுபவித்து வந்திருக்கிறது. இன்றும் பல தசாப்தங்களாக விசாரணையோ, வழக்குகளோ, பிணையோ இன்றி பலர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பலம்மிக்க இளைய சமுதாயம் இந்த நாட்டை விட்டு குடி பெயர்வதற்கும் இன குடிப்பரம்பலில் சிதைவை ஏற்படுத்துவதற்கும் இந்த பயங்கரவாத தடைச்சட்டம் முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது.

சட்டவிரோதமான கைதுகள், காலவரையறை அற்ற தடுப்பு, பிணை வழங்காமை, குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவிக்க எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாத சூழ்நிலை என்று அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகவே அமைந்திருக்கிறது. நியாயமான எமது போராட்டத்தை பயங்கரவாதமாக சித்தரித்து எமது இளம் சமுதாயத்தை வகை தொகையின்றி கைது செய்ததோடு சித்திரவதைக்கும் உள்ளாக்குவதற்கே இந்த சட்டம் பயன்படுத்தப்பட்டது. மாறாக எம்முடைய போராட்டத்தை தடுக்கவோ நிறுத்தவோ முடியவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை.

இன்று தமது தோல்விகளை மறைப்பதற்கும் தமக்கு எதிராக ஜனநாயகப் போராட்டத்தை நடத்த முற்படுபவர்களை கைது செய்வதற்கும் அரசியல் பழிவாங்கல்களை அரங்கேற்றுவதற்குமே இந்த சட்டம் பயன்பட்டு வருவதை அனைவரும் அறிவார்கள்.

ஜனநாயக விழுமியங்களை மதிக்கப்படாத போற்றப்படாத இந்த அரசாங்கத்தில், இந்த சட்டத்தில் சிறிய மாற்றங்களின் மூலம் ஜனநாயகத்தை பேணிவிடலாம் என்று ஜனாதிபதி ஆணைக்குழு சொல்வது மிகவும் வேடிக்கையாக இருக்கிறது. அப்பாவி மக்களை படுகொலை செய்து நீதிமன்றத்தினால் தண்டனை வழங்கப்பட்ட குற்றவாளிகள் விடுவிக்கப்படுகிறார்கள். அதேவேளை தம்முடைய இனத்திற்காகவும் மக்களுக்காகவும் நியாயமாக குரல் கொடுப்பவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். அதற்கு வழிவகுக்கும் அரசாங்கத்திற்கு பயங்கர வாத தடுப்பு சட்டத்துக்கு பரிந்துரைக்கும் மாற்றங்கள் எந்த விதத்தில் மக்களுக்கு நியாயத்தை பெற்றுத்தரும் ?

இதே அரசாங்கத்தில் பதவி வகித்த காலங்களில் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு ஆதரவாக செயற்பட்டவர்கள் கடந்த காலங்களில் அதே சட்டத்தின் கீழ் ஆதாரங்கள் இன்றி கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணை இன்றி தடுத்து வைக்கப்பட்டதை அல்லது தடுத்து வைக்கப்பட்டு வருவதை இந்த நாடு நன்கு அறியும்.

தமிழ் மக்களுக்கு மட்டுமல்லாமல் முழு நாட்டிலும் அராஜகத்தைத்தையும் சர்வாதிகாரத்தையும் நிலை நிறுத்த பயன்படும் இந்த சட்டத்தில், எந்த மாற்றங்களும் இதன் அடிப்படை நோக்கத்தை சீர்செய்து விடப்போவதில்லை. ஆகவே முற்றாக இந்த சட்டமூலம் நீக்கப்பட வேண்டும் என்பதே எங்களுடைய நிலைப்பாடு.

அனைத்து தரப்பினரும் பயங்கரவாத தடுப்பு சட்டத்தை ஒழிப்பதற்கு ஒருமித்து செயலாற்ற கோருகிறோம். அதிகாரங்களுக்கும் அற்ப சலுகைகளுக்காகவும் இந்த சட்டத்திற்கு நொடர்ந்தும் ஆதரவு வழங்குபவர்கள் அறிந்தோ அறியாமலோ உங்களுக்கும் உங்கள் எதிர்கால சந்ததிக்கும் சிதை மூட்டுகிறீர்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்” என்றார்.

Posted in Uncategorized

யாழிற்கு புதிய இந்தியத் துணைத் தூதுவர் நியமனம்

யாழ்ப்பாணத்திற்கான புதிய இந்தியத் துணைத் தூதுவராக ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன் கண்டியில் அமைந்துள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் தற்போது கடமையாற்றி வரும் நிலையில் விரைவில் அவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார்.

இதேவேளை, இதுவரைகாலமும் யாழ்ப்பாணத்திற்கான இந்தியத் துணைத் தூதுவராக ஆர். பாலச்சந்திரன் சிறப்பாக கடமையாற்றி வந்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

டயகம சிறுமியின் மரணம் தொடர்பான விசாரணைகளுக்கு ஆலோசனை வழங்க குழு நியமனம்

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் உயிரிழந்த சிறுமி தொடர்பிலான விசாரணைகளுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்க சட்டமா அதிபரினால் அதிகாரிகள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

சட்டமா அதிபர் சஞ்சய ராஜரத்தினம் இன்று (22) மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவொன்றை சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அழைத்து கலந்துரையாடி இருந்த நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, இதுவரை இடம்பெற்ற விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து சட்டமா அதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இது தொடர்பிலான நாளாந்த நடவடிக்கைகள் மற்றும் தேவையான ஆலோசனைகளை பெற்றுக் கொடுப்பதற்காக பிரதி சொலிசிட்டர் நாயகம் திலீப பீரிஸ் தலைமையிலான சட்டத்தரணிகள் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Posted in Uncategorized

கொரோனா மரணங்கள் குறித்து சற்றுமுன் வௌியான அறிவிப்பு!

நேற்றைய தினம் (21) நாட்டில் மேலும் 42 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.

அதன்படி, 25 ஆண்களும் மற்றும் 17 பெண்களும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர்.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,959 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 290,705 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 264,755 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

’பாலம் புனரமைக்கப்பட்டால் வெளிச்சம் ஏற்படுத்தப்படும்’ ரெலோ விஜிந்தன்

முல்லைத்தீவு – வட்டுவாகல் பாலம் புனரமைக்கப்படாமல், மின்சாரம் மூலமோ அல்லது சூரிய மின்கலம் மூலமோ வெளிச்சம் ஏற்படுத்துவது சாத்தியமானது அல்ல என, தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின்(ரெலோ) மத்திய குழு உறுப்பினரும் கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளருமான க.விஜிந்தன் தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், வட்டுவாகல் பாலத்தில் வெளிச்சம் ஏற்படுத்த வேண்டியது அவசியமாக உள்ள போதிலும், கடந்த பத்து ஆண்டுகளாக பாலம் புனரமைப்பதற்கான திட்டமிடல்கள், முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன எனவும் ஆனால் புனரமைப்பு முயற்சிகள் இதுவரை தொடங்கப்படவில்லை எனவும் கூறினார்.

இந்நிலையில், பிரதேச சபை வட்டுவாகல் பாலத்துக்கு வெளிச்சம் பொருத்த வேண்டும் என்ற செயற்பாடு முன்னெடுக்க முடியாது உள்ளதாகத் தெரிவித்த அவர், காரணம், வட்டுவாகல் பாலம் புனரமைக்கப்பட்டாலே வெளிச்சம் ஏற்படுத்துவதற்கான நடவடிக்கையை முன்னெடுக்க முடியுமென்றும் கூறினார்.

ஹக்கீம் – ரிசாத் தவிர முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ‘ஆளுங்கட்சி’

எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை பாராளுமன்றத்தில் நேற்று (20) தோற்கடிக்கப்பட்டது.

இந்த பிரேரணை மீதான வாக்கெடுப்பின் போது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பிரேரணையை எதிர்த்து வாக்களித்ததுடன், சிலர் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் பிரேரணைக்கு ஆதரவாக தமது வாக்கினை பதிவு செய்தார்.

முஸ்லிம் காங்கிரஸ் இந்த பிரேரணைக்கு ஆதரவளிப்பதற்கு எடுத்திருந்த உத்தியோகபூர்வ தீர்மானத்திற்கு அமையவே தலைவர் ஆதரவாக வாக்களித்ததாக ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர், சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் தெரிவித்தார்.

எனினும், ஏனைய 4 பாராளுமன்ற உறுப்பினர்களும் தனிப்பட்ட காரணங்களுக்காக நேற்று பாராளுமன்றத்தில் பிரசன்னமாகாமல் இருந்திருக்கலாம் என அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் கலந்துகொள்ளவில்லை.

எனினும், அவரது கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்த்து வாக்களித்திருந்தனர்.

கட்சியின் தலைவருக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை காரணமாக உத்தியோகபூர்வமாக இந்த பிரேரணை குறித்து ஆராயப்படவில்லை என்ற போதிலும், குறித்து உறுப்பினர்கள் தனிப்பட்ட ரீதியிலேயே பிரேரணைக்கு எதிராக வாக்களித்ததாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பதில் தலைவர் சட்டத்தரணி என்.எம். சஹீட் தெரிவித்தார்.

20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் இரட்டை பிரஜாவுரிமை சரத்திற்கு ஆதரவாக வாக்களித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முஷாரப் முதுநபீனும் நேற்றைய வாக்களிப்பின் போது அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்தார்.

நாடு எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை அரசுடனேயே பேசித்தீர்க்க வேண்டும் என்ற அடிப்படையில் தாம் இந்த தனிப்பட்ட நிலைப்பாட்டிற்கு வந்ததாக பாராளுமன்ற உறுப்பினர் முஸாரப் முதுநபீன் கூறினார்.

அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்த உறுப்பினர்களுக்கு பதவிகள் வழங்கப்படுவது தொடர்பில் எந்தவித விடயமும் பேசப்படவில்லை எனவும் பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் முதுநபீன் தெரிவித்தார்.

Posted in Uncategorized