தமிழீழத்திற்கு எதிரானவர்கள் இன்று சீன ஈழத்தை தோற்றுவிக்க முயற்சி – ராஜித

தமிழ் ஈழத்திற்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டவர்கள் இன்று சீன ஈழத்தை தோற்றுவிப்பதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கின்றனர்.

இவ்வாறான செயற்பாடுகள் ஊடாக இலங்கையின் இறையாண்மைக்கும் தனித்துவத்தன்மைக்கும் பாதிப்பு ஏற்படும் என்று பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

அதிகாரப்பகிர்வு தொடர்பில் இந்த அரசாங்கமே பரவலாக கருத்துக்களை தெரிவித்தது. அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வர பாடுபட்ட தேரர்கள் மாகாணசபை முறைமையை முற்றாக எதிர்க்கின்றனர். எனினும் இந்தியாவின் அழுத்தம் காரணமாக அதனை நடத்துவதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது.

கூட்டாட்சி என்ற சொல்லைக்கூட விரும்பாத அரசாங்கம் தற்போது இலங்கைக்குள் சீன இராச்சியத்தை தோற்றுவிக்க முயற்சிக்கிறது.

அன்றி தமிழ் ஈழத்திற்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டனர். ஆனால் தற்போது சீன ஈழத்திற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கின்றனர். சுமார் 2000 ஆண்டுகள் எம்முடன் வாழ்கின்ற மக்களுக்கு தமிழ் ஈழத்தை தர முடியாதெனக் கூறியவர்கள் சீனாவிற்கு வழங்குகின்றனர்.

அவ்வாறெனில் இவர்களின் தேசப்பற்று எங்கு சென்றது ? இதுவும் தனியொரு ஈழமாகும். இவ்வாறான செயற்பாடுகள் ஊடாக இலங்கையின் இறையான்மைக்கும் தனித்துவத்தன்மைக்கும் பாதிப்பு ஏற்படும் என்றார்.

பாராளுமன்றத்தில் ஆளும் கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் முரண்பட்டுக்கொண்டனர்

நாடாளுமன்றத்தில் நாளை கொண்டு வரப்படவுள்ள அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை தொடர்பான ஒத்திவைப்பு விவாதத்தை யார் முன்வைக்க வேண்டும் என்று விவாத்தின் போது இன்று ஆளும் கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் முரண்பட்டுக்கொண்டனர்.

ஒரு கட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோவும், ஆளும்கட்சியின் உறுப்பினர் திஸ்ஸ குட்டியராச்சியும் ஒருவரை ஒருவரை தள்ளிக்கொண்ட சம்பவமும் இடம்பெற்றது. இந்த பிரச்சினையை எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல கொண்டு வந்தார்.

சபாநாயகர் மஹிந்த யாப்ப அபேவர்தனவிடம் இந்த விவாதத்தை நகர்த்த எதிர்கட்சியை அனுமதிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

எனினும் இந்த விவாதத்தை முன்கொண்டுவர ஆளும் கட்சியை அனுமதிக்க எதிர்க்கட்சி ஒப்புக் கொண்டதாக சபைத் தலைவர் தினேஷ் குணவர்தன வாதிட்டார். அத்துடன் முன்னைய அரசாங்கத்தின் கீழ் அரசியல் பாதிப்புக்குள்ளான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு இந்த விவாதத்தை நகர்த்த தார்மீக உரிமை உள்ளது என்று அவர் வாதிட்டார்.

இதன்போது வாக்குவாதங்களுக்குப் பின்னர் இறுதியாக பதற்றம் ஏற்பட்டது. அரசாங்க உறுப்பினர்கள் பதாகைகளை ஏந்திய வண்ணம் எதிர்க்கட்சியினர் கொலைகாரர்கள் என்று கோஷமிட்டனர். சில உறுப்பினர்கள் உயிர்த்த ஞாயிறு படுகொலைக்கு தலைமை தாங்கிய சஹ்ரான் ஹாஷிமின் படங்களை வைத்திருந்தனர்.

அரசாங்க உறுப்பினர்கள் கறுப்பு துணிகளை கைகளில் கட்டியிருந்தனர் ஐக்கிய மக்கள் சக்தியினர் கறுப்பு நிற ஆடைகளை அணிந்திருந்தனர். நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ மற்றும் திஸ்ஸ குட்டியராச்சி ஒருவருக்கொருவர் தள்ளிக்கொண்ட சம்பவமும் பின்னர் சண்டையை தவிர்க்கும் சம்பவங்களும் இடம்பெற்றன.

Posted in Uncategorized

தொல்லியல் திணைக்கள வழக்கில் ரெலோ தவிசாளர் நிரோஷ் ஒரு இலட்சம் சொந்தப் பிணையில் விடுவிக்கப்பட்டார்

வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தொல்லியல் திணைக்களத்தின் அரச கருமங்களுக்குத் தடை ஏற்படுத்தினார் எனக் குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்றே பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி பொலிஸாருக்கு அறிவுறுத்தியதுடன் தவிசாளர் ஒரு இலட்சம் ரூபா செந்தப் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

தொல்லியல் திணைக்களம் நிலாவரையில் மேற்கொள்ள இருந்த நடவடிக்கைக்கு தவிசாளர் தடை ஏற்படுத்தினார் என்றும் இதன் மூலம் அரச கருமத்திற்கு தடை ஏற்படுத்தினார் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு தொல்லியல் திணைக்களத்தின் முறைப்பாட்டுக்கமைய அச்சுவேலி பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மல்லாகம் நீதிமன்றில் நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் இன்று (21) மாலை எடுக்கொள்ளப்பட்டது.

இவ் வழக்கில், தவிசாளர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி வி. திருக்குமரன் தலைமையிலான சட்டத்தரணிகள் முன்னிலையாகினர். அவர்கள் தொல்லியல் திணைக்களத்தின் வர்த்தமானியில் நிலாவரைக் கிணறு என்றே அடையாளப் படுத்தப்பட்டுள்ளதாகவும் இக் கிணற்றில் இருந்து அப்பால் தான் தொல்லியல் திணைக்களத்தின் முயற்சி இடம்பெற்றுள்ளது.

பிரதேச சபை தொடர்ச்சியாக குறித்த இடத்தினை அரச பெறுகை கேள்விக்கோரல் நடைமுறைகளின் பிரகாரம் குத்தகைக்கு வழங்கிவந்துள்ளது. பொலிசார் தாக்கல் செய்துள்ள குற்றவியல் சட்டக் கோவை சரத்தின் பிரகாரம் சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெற்றே மேற்படி வழக்கின் குற்றப்பத்திரத்தினைத் தாக்கல் செய்திருக்க வேண்டும். நிலாவரையில் பிரதேச சபை பல முதலீடுகளைச் செய்துள்ளது.

தொல்லியல் திணைக்களத்திற்கு பொறுப்பான அமைச்சரே மாவட்ட அபிவிருத்திக் குழுவின் அனுமதி பெற்றே தொல்லியல் திணைக்களம் செயற்படும் என உத்தரவாதமளித்துள்ளார். ஆனால் இங்கு பிரதேச சபை ஒன்றின் தவிசாளர் என்ன நடக்கிறது என்ற விபரத்தினைக் கேட்டால் அரச கருமத்திற்கு தடை ஏற்படுத்தினார் என்கின்றனர்.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதேச சபையின் தலைவர் என்ற வகையில் தவிசாளார் அங்கு என்ன நடக்கின்றது எனக் கேள்வி எழுப்பியமையை அரச கடமைக்கு தடை ஏற்படுத்தியதாகக் கருதமுடியாது. நிர்வாக ரீதியாக இரு அரச நிறுவனங்களுக்கு இடையே எழும் பிரச்சினையினை குற்றவியல் சட்டக்கோவையின் பிரகாரம் அணுகமுடியாது.

எனவே இவ்வழக்கினை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது.
தனியாராக இருந்தாலேன்ன அரச தாபனமாக இருந்தாலேன்ன பிரதேச சபையின் அனுமதி பெற்றே எந்தக் கட்டுமானத்தினையும் செய்ய முடியும் என்பதும் சட்டத்தரணிகளால் முன்வைக்கப்பட்டது.

தொல்லியல் திணைக்களத்தின் முறைப்பாட்டின் அடிப்படையில் தாக்கல் செய்த அச்சுவேலிப் பொலிஸார் தாம் இவரை முதலாவது எதிராளியாகக் கொண்டு மேலும் பலருக்கு இவ்விடயத்தில் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக மன்றில் தெரிவித்தனர். அத்துடன் மன்றில் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர்.

இந் நிலையில் நீதிபதி பொலிசார் தாக்கல் செய்துள்ள குற்றவியல் சட்டக்கோவை சரத்தின் பிரகாரம் முதலாம் எதிராளியாக மன்றில் முன்னிலையாகியுள்ள வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளரை விசாரிப்பதற்கு சட்டமா அதிபரின் ஆலோசனை பெற்ப்பட்டதாக எங்கும் வெளிப்படுத்தவில்லை.

அத்துடன் தொல்லியல் திணைக்களத்தின் வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் கிணறு என்றே அடையாளப்படுத்தப்பட்டுள்ள என்பதைத் தெரிவித்ததுடன் தொடர்ந்து இவ் வழக்கினை நடத்துவதாயின் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்று வழக்கினைத் தொடருமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தினார்.

இதேவேளை மன்றில் பிரசன்னமாகியுள்ள தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட அமைப்பாளரும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளரும் ஆன தியாகராஜா நிரோஷ் மேலதிக விசாரணைகள் ஏற்படின் ஒத்துழைக்க வேண்ம் எனவும் அவர் ஒரு இலட்சம் ரூபா சொந்தப் பிணையில் செல்வதற்கும் உத்தரவிட்டு அனுமதித்தார்.

Posted in Uncategorized

தமிழ் தேசிய இனத்துக்கு மறுக்கும் அதிகாரத்தை துறைமுக நகரத்துக்கு வழங்குவதா – ரெலோ சுரேந்திரன் கேள்வி

துறைமுக நகர முகாமைத்துவத்திற்கான ஆணைக்குழுவை அமைப்பதற்கான சிறப்பு சட்ட மூலத்திற்கான பிரேரணையை அரசு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து இருக்கிறது. இந்த ஆணைக்குழுவின் முலம் வெளிநாட்டு பிரதிநிதிகளை ஆணையாளராக நியமிப்பதற்கும், காணி மற்றும் நிதி அதிகாரங்களும் வழங்கப்படும் அபாயம் இருப்பதாக எதிர்க்கட்சிகளும் ஆளுங்கட்சி கணிசமான உறுப்பினர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள.

இந்த நிலையில் தமிழ் தேசிய இனமான நாங்கள் இந்த நாட்டின் பிரஜைகளாக எங்களுக்கான அதிகாரங்களைப் பகிர, ஆகக்குறைந்தது மாகாணசபை அதிகாரங்களை, ஏற்கனவே அரசியலமைப்பில் உள்ள பிரகாரம் முற்றுமுழுதாக நிறைவேற்றுமாறு கோரிக்கை விடுத்தும் அது மறுக்கப்படுகிறது. ஒரு தேசிய இனத்தின் கோரிக்கையை நிராகரிக்கும் அரசு, வெளிநாடு ஒன்றுக்கு அதே அதிகாரங்களை வழங்குவது எந்த விதத்தில் நியாயம்? என்று கேள்வி எழுப்பியுள்ள தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ஊடகப் பேச்சாளரும் தேசிய அமைப்பாளரைமான சுரேந்திரன் தொடர்ந்தும் தெரிவிக்கையில்

ஆதிக்குடிகளாக, தேசிய இனமாக எமது சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கவும் எமது மக்களை சிறப்பாக நிர்வாகிக்கும் அதிகாரப் பரவலாக்கலாக சமஷ்டிக் கோரிக்கையை முன்வைத்து பல வருடங்களாக ஜனநாயக வழியிலும் ஆயுதப் போராட்ட மூலமும் ஆயிரக்கணக்கான உயிர்களை பலி கொடுத்துள்ளோம். எமது போராட்டங்கள் கொடூரமாக அடக்கப்பட்டு நிராகரிக்கப்பட்ட அதே வேளையில் வெளிநாடு ஒன்றுக்கு தாம்பாளத்தில் வைத்து அதே அதிகாரங்களை அரசு கொடுக்க முற்படுவது எதற்காக?

வியாபார ரீதியாக அந்த துறைமுக நகரம் நாட்டுக்கு நிதி சேர்த்துக் கொடுக்கும் என்றால் நாம் கோரும் அதிகாரங்களை எங்களுக்கும் தாருங்கள். இதைவிட சிறந்த முறையிலே நாங்கள் பொருளாதார ரீதியாக அபிவிருத்தியடைந்து இந்த நாட்டினுடைய பொருளாதாரத்திற்கும் அதிக அளவு வருமானத்தை ஈட்டித் தரும் தேசமாக மாற்றி அமைத்து காட்டுகிறோம்.

தனது நாட்டில் தேசிய இனத்துக்கு பல்வேறு காரணங்களை கூறி மறுக்கும் உரிமையை, வெளிநாட்டுக்கு வருமானம் என்ற நியாப்படுத்தலோடு வழங்குவது எப்படி? இதற்கு அரசு விளக்கம் கொடுத்தே ஆக வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.

ஊடக வாரியம்
தமிழ் ஈழ விடுதலை இயக்கம் – ரெலோ

20ற்கு ஆதரவளித்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பிரதமர் அவசர சந்திப்பு

இன்றுபுதன்கிழமை காலை 10.30 மணிக்கு 20வது சீர்திருத்த சட்டமூலத்திற்கு ஆதரவு தெரிவித்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களையும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச சந்தித்து பேசவுள்ளார்.

இந் சந்திப்பில் கடந்த வாரம் தடைசெய்யப்பட்ட முஸ்லிம் அமைப்புகளின் விவகாரம், சம்மாந்துறை பஸ் டிப்போ விவகாரம் மற்றும் மாகாண சபை தேர்தல் முறைமை விவகாரம் போன்ற இன்னும் பல முக்கிய முஸ்லிம் சமூகம் சம்மந்தப்பட்ட விடயங்கள் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் தெரிவித்து இருந்தார்.

அந்த சந்திப்பின் பின்னர், சந்திப்பு தொடர்பில் ஊடகங்கள் கேள்வியெழுப்பியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் இது தொடர்பில் கருத்துவெளியிட்ட அவர்,

அந்த சாலை விடயமாக போக்குவரத்து அமைச்சர், இராஜாங்க அமைச்சரை பல்வேறு சந்தர்ப்பங்களில் சந்தித்து பேசியுள்ளோம். இது தொடர்பில் இன்று பிரதமருக்கு எடுத்துரைத்தவுடன் சம்மாந்துறை பிரதேசத்தை தான் தனிப்பட்டமுறையில் நன்றாக தெரிந்து வைத்திருப்பதாக தெரிவித்து போக்குவரத்து அமைச்சர் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை தலைவர் ஆகியோரை பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தொலைபேசி ஊடக தொடர்பு கொண்டு இவ்விடயத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டுவந்து தீர்வை வழங்குமாறு கேட்டுக்கொண்டார். அதன் போது இது தொடர்பில் விளக்கமளிக்க முனைந்த இலங்கை போக்குவரத்து சபை தலைவருக்கு கடும் தொனியில் பேசிய பிரதமர் உடனடியாக சாலையை மீண்டும் சம்மாந்துறையில் திறக்குமாறும், இடமாற்றம் செய்யப்பட்ட ஊழியர்களை மீள சம்மாந்துறைக்கு திருப்பியனுப்புமாறும் உடனடியாக இந்த டிப்போவை இயங்கவைக்குமாறு உத்தவிட்டார். இதை தொடர்ந்து மீண்டும் சம்மாந்துறையில் சாலையை இயக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அத்துடன் மேலும் பல முக்கிய விடயங்களும் இங்கு பேசப்பட்டது.

இந்த சந்திப்பில் என்னுடன் முன்னாள் கிழக்கு முதலமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான அல்ஹாபிழ் இசட்.ஏ. நஸீர் அஹமட், முன்னாள் இராஜாங்க அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான பைஸல் காஸிம், முன்னாள் பிரதியமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.தௌபீக், பாராளுமன்ற உறுப்பினர்களான இசாக் ரஹ்மான், சட்டத்தரணி முஷாரப் முதுநபின், அலிசப்ரி ரஹீம் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர் என்றார்.

Posted in Uncategorized

அணு மூலக்கூறுகளுடன் இலங்கைக்கு வந்த சீனக் கப்பல் குறித்து சபையில் சஜித் கேள்வி

ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வேதியல் அணு மூலக்கூறுகளுடன் சர்வதேச கப்பலொன்று வந்துள்ளமை உண்மையா? குறித்த நாட்டின் தூதரகத்தின் வலுயுறுத்தலுக்கு கட்டுப்பட்டு அரசாங்கம் இதனை கண்டுகொள்ளாது மௌனம் காக்கின்றதா? இது உண்மையென்றால் நாட்டின் நிலைமை என்னவாகும் என தெரியுமா என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சபையில் கேள்வி எழுப்பினார். அதேபோல் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நாளை மறுதினம் துறைமுக நகருக்கு கற்கை விஜயம் ஒன்றினை மேற்கொள்ள வருமாறு சீன தூதரகத்தினால் விடுக்கப்பட்டுள்ள அழைப்பு குறித்தும் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பினர்.

பாராளுமன்ற அமர்வுகள் இன்று புதன்கிழமை இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையில் ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச,ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்துள்ள கப்பல் குறித்து வெளிவரும் செய்தி தொடர்பில் சபையில் கேள்வி எழுப்பினார்.

“சமூக வலைத்தளங்களில் செய்தி ஒன்று பகிரப்பட்டு வருகின்றது. நேற்று 20 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு சர்வதேச கப்பலொன்று வேதியல் அணு மூலக்கூறுகளுடன் உள்நுழைந்துள்ளது. இதனை இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு கண்டறிந்துள்ளனர். இது உண்மையான செய்தியென நாம் நம்புகின்றோம், அது தவறான செய்தி சென்றால் அது குறித்து அரசாங்கம் அறிவிக்க முடியும். ஆனால் இலங்கை கடற்படைக்கு கூட இந்த கப்பலை பரிசோதனை செய்ய அனுமதிக்கவில்லை என கூறப்படுகின்றது.

துறைமுகத்தில் இருந்து இந்த கப்பலை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. ஆனால் இப்போது வரையிலும் இந்த விடயத்தில் அரசாங்கம் மௌன கொள்கையை பின்பற்றி வருகின்றது. ஒரு வெளிநாட்டு தூதரகத்தின் வலியுறுத்தலுக்கு கட்டுப்பட்டே அரசாங்கம் இவ்வாறு செயற்பட்டு வருகின்றது எனக் கூறப்படுகின்றது. எனவே இந்த செய்தியின் உண்மை தன்மையை நன்கு ஆராய்ந்து அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வேதியல் அணு மூலக்கூறுககள் எமது நாட்டுக்குள் கொண்டுவருவது என்பது பாரிய அச்சுறுத்தலாகும். எனவே அரசாங்கம் உடனடியாக இதனை ஆராய்ந்து உண்மை பொய் தன்மைகளை ஆராய்ந்து உண்மையென்றால் உடனடியாக கப்பலை வெளியேற்ற வேண்டும், அல்லது இலங்கை கடற்படையை கொண்டு ஆராய அனுமதிக்க வேண்டும்” என அவர் சபையில் வலியுறுத்தினார்.

அதேபோல் எதிர்க்கட்சி உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா ஒழுங்குப்பிரச்சினை எழுப்பி சீன தூதரக அறிவித்தல் தொடர்பில் கேள்வி எழுப்பினார். பாராளுமன்றத்தில் இருந்து எமது தொலைபேசிக்கு குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்) ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதனை உங்களின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகின்றேன்.

கொழும்பு துறைமுக நகர் கற்கை விஜயம் ஒன்றினை சீன தூதரகம் ஏற்பாடு செய்துள்ளதாகவும், ஏப்ரல் 22 ஆம் திகதி பாராளுமன்ற அமர்வுகள் முடிவுக்கு வந்த பின்னர் இந்த விஜயம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த குறுந்தகவலில் கூறப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் எமது ஆட்சியிலும் இவ்வாறு ஏற்பாடு செய்யப்பட்ட போதும் நகர அபிவிருத்தி அதிகாரசபையே ஏற்பாடு செய்திருந்தது. ஆனால் எமது நாட்டின் நிலப்பரப்பில் விஜயம் ஒன்றினை செய்ய சீன தூதரகம் எவ்வாறு ஏற்பாடுகள் செய்ய முடியும் என கேள்வி எழுப்பினார். இதனை கைவிடுமாறு அமைச்சர் தினேஷ் குணவர்தன சபையில் தெரிவித்த வேளையில் குறித்த குறுஞ்செய்தி தொடர்பில் தான் ஆராய்ந்து பார்ப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.

Posted in Uncategorized

வலி கிழக்கு ரெலோ தவிசாளர் நிரோஷ் வழக்கில் நீதிவான் வழங்கியுள்ள உத்தரவு

வலி கிழக்குத் தவிசாளர் – வீதி அபிவிருத்தி அதிகார சபை கலந்துரையாடி இணக்கத்திற்குச் சென்று வழக்கை பாபஸ் பெற்றுக்கொள்ள முடியும் என அறுவுறுத்தி எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதிக்கு வழக்கை மல்லாகம் நீதவான் ஏ.ஏ. ஆனந்தராஜா தவணையிட்டார்.

தம்மால் வீதியை அபிவிருத்தி செய்வதற்காக நாடப்பட்ட பெயர்ப்பலகையினை தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட அமைப்பாளரும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளரும் ஆன தியாகராஜா நிரோஷ் அகற்றினார் எனக் குற்றஞ்சாட்டி அரச சொத்துக்குத் சேதம் விளைவித்தார் எனத் தெரிவித்து கடந்த வருட இறுதியில் வலிகிழக்குத் தவிசாளரைக் கைதுசெய்வதற்கு பொலிஸார் முயற்சித்த நிலையில் தவிசாளர் கைதுக்கு எதிராக நீதிமன்ற பாதுகாப்பைப் பெறும் நோக்கில் முன்பிணை பெற்றார்.

இந் நிலையில் மீள வீதி அபிவிருத்தி அதிகார சபை சார்பில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. அவ் வழக்கு இன்று புதன்கிழமை காலை (21) மல்லாகம் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஷ் சார்பில் சிரோஷ்ட சட்டத்தரணி வி.திருக்குமரன் தலைமையிலான சட்டத்தரணிகள் குழாம் முன்னிலையாகியது. சட்டத்தரணிகளால் தற்போதைய நிலையில் வீதி அபிவிருத்தி அதிகார சபை உரிய அனுமதிகளை உரியவாறு பிரதேச சபையில் இருந்து பெற்றுக்கொள்கின்றது.

இந் நிலையில் குறித்த வீதிக்கான பெயர்ப்பலகைக்கான அனுமதியையும் பெற்றுக்கொள்வதற்கான கடிதங்கள் கிடைத்துள்ளன. குறித்த வழக்கு நிலுவையில் உள்ளமையின் காரணமாக குறித்த விளம்பரப்பதாகைக்கான அனுமதி பற்றி பரிசீலிக்க முடியவில்லை என முன்வைக்கப்பட்டது.

இந் நிலையில் இருதரப்புமாக முடிவெடுத்து வழக்கை பின்வாங்கிக் கொள்ள பெறமுடியும் எனவும் நிதிபதி அறிவுறுத்தி வழக்கை எதிர்வரும் மார்கழி முதலாம் திகதிக்கு தவணையிட்டதுடன் குறித்த வழக்கில் தவிசாளரை ஐம்பதாயிரம் ரூபா சொந்தப்பிணையில் செல்வதற்கு அனுமதித்தார்.

Posted in Uncategorized

பழிவாங்குவதால் திருப்திப்படுத்த முடியாது ; தவறிழைத்தவர்களை மன்னிப்போம் – ஈஸ்டர் தாக்குதல் குறித்து பாப்பரசர்

கத்தோலிக்க சபையானது தவறிழைப்பவர்களுக்கு மன்னிப்பு வழங்குவதோடு பழிவாங்குவதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களை திருப்திப்படுத்த முடியாது. அதே போன்று பழிவாங்குவதால் எவ்வித பயனும் கிடைக்கப் போவதில்லை என்பதை பாதிக்கப்பட்ட மக்களுக்கான கூறிக்கொள்வதுடன் அனைவரையும் ஆசிர்வதிப்பதாகவும் பாப்பரசர் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளமையை முன்னிட்டு நேற்று புதன்கிழமை கொழும்பு – கொச்சிக்கடை புனித அந்தோணியார் திருத்தலத்தில் இடம்பெற்ற விசேட நிழ்வில்; பாப்பரசரின் செய்தியை அறிவிக்கும் போது பாப்பரசரின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ப்ரையன் யுடைக்வே இதனைத் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைகின்ற இன்றைய தினத்தில் நான் பாப்பரசரின் செய்தியை உங்களுக்கு அறிவிக்கின்றேன். அவர் அவரது ஆசீர்வாதத்தை உங்களுக்கும் உங்களது குடும்பத்திற்கும் வழங்கியுள்ளார்.

கத்தோலிக்க சபையானது தவறிழைப்பவர்களுக்கு மன்னிப்பு வழங்குவதாகும். பழிவாங்குவதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களை திருப்திப்படுத்த முடியாது. பழிவாங்குவதால் எவ்வித பயனும் கிடைக்கப் போவதில்லை என்று பாப்பரசர் பாதிக்கப்பட்ட மக்களுக்கான செய்தியில் குறிப்பிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதே வேளை நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய கொச்சிக்கடை ஸ்ரீ பொன்னம்பலவானேஷ்வரர் ஆலய குருக்கள் ,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் உயிரிழந்தவர்களின் முக்திக்காக நாம் இறைவனை பிரார்த்திக்கின்றோம். தாக்குதல்களால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் காயமடைந்தோருக்கும் ஆருதல் கூறுகின்றோம் என்று குறிப்பிட்டார்.

இதன் போது ஹசன் மௌலானா மௌலவி குறிப்பிடுகையில் ,

தீவிரவாத செயற்பாடுகளுக்கு முஸ்லிம் மதத்தில் ஒருபோதும் அனுமதி கிடையாது. இந்த தாக்குதல்களை உலகிலுள்ள சகல முஸ்லிம்களும் கடுமையாக எதிர்க்கின்றனர். அடிப்படைவாத கொள்கைகளை கொண்டவர்களின் செயற்பாடுகள் வேறு ரூபங்களில் முன்னெடுக்கப்படுகின்றன. எனவே இவ்வாறான விடயங்கள் தொடர்பில் தகவல்கள் தெரிந்தால் பொலிஸாருக்கு அறிவிக்குமாறு மக்களிடம் கேட்டுக் கொள்கின்றேன்.

அத்தோடு கருணா அம்மான் மற்றும் பிள்ளையான் போன்றோரால் தற்போது சமூகத்தில் சாதாரண ஒரு பிரஜையாக வாழ முடிகிறது என்றால் , அதே போன்று அடிப்படைவாத கொள்கைகளைக் கொண்ட முஸ்லிம்களும் மனம் திருந்தி ஏன் வாழ முடியாது? அடிப்படைவாதத்தை கைவிட்டு சிறந்த பிரஜைகளாக வாழுமாறு வலியுறுத்துகின்றோம் என்றார்.

Posted in Uncategorized

மாகாணசபையை பாதுகாக்க தமிழ் கட்சிகளை ஒன்றிணையுமாறு ரெலோ கோரிக்கை

மாகாணசபையை பாதுகாக்க தமிழ் கட்சிகளை ஒன்றிணையுமாறு கூட்டமைப்பின் பங்காளிகள் கட்சிகளில் ஒன்றான ரெலோ அமைப்பின் தேசிய அமைப்பாளர் சுரேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தற்போதைய அரசியல் சூழலில் மாகாணசபைத் தேர்தல் நடக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஏதேதோ காரணங்கள் சொல்லி அரசினால் பின் போடப்பட்டு வருகிறது. குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணசபைத் தேர்தல் தொடர்ந்தும் பின் போடப்படுவதால் மாகாண சபை முறைமை செயலிழந்துள்ளது.

கடந்த ஆட்சியில் இருந்து இது தொடர்டகிறது. இதனால் மாகாண சபை முறைமையை அவசியமற்றது என்று கருத்து கூற அரச தரப்பில் பலர் முன் வந்துள்ளனர்.

வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் ஆபத்தான கட்டத்தை எதிர்நோக்கி இருக்கிறார்கள். எமது பூர்விக தாயகப் பரப்பில் காணி நிலங்கள் அபகரிக்கப்பட்டு அபிவிருத்தி என்ற பெயரிலும் தொல்லியல் என்ற பெயரிலும் குடியேற்றங்கள் நிறுவப்பட்டு வருகின்றன. தேர்தல் முறைகளில் மாற்றம் கொண்டு வருவதாக கூறி அரசு சட்ட சிக்கலை முன்வைத்து மாகாணசபை தேர்தலை மேலும் பின்னடித்து செல்கிறது.

மாகாண சபை முறைமையை அரசியல் யாப்பில் இருந்து நீக்கிவிட வேண்டும் என்ற முழுவீச்சோடு பேரினவாத அரசாங்கங்கள் முயற்சி செய்து வருகின்றன. இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் ஊடாக கொண்டுவரப்பட்டமையால் இந்தியாவினுடைய நேரடி அழுத்தத்தின் காரணமாக 13ம் திருத்தம் காப்பாற்றப் பட்டு வருகிறது.

இந்தியாவை பகைத்துக் கொள்ள விரும்பாமல் அல்லது முடியாமல், அதே நேரம் தமது முயற்சியும் கைகூடாமல் அரசு கைகட்டி நிற்கிறது. இழுத்தடிப்பு செய்தாவது நடைமுறைப் படுத்தாமல் காலம் தாழ்த்துவதன் மூலம் பயனற்றுப் போக வைக்கும் செயலாகவே இதை நாம் கருதுகிறோம்.

எமது தேசிய இனத்தின் கோரிக்கைகளுக்கு தீர்வாக இந்த மாகாண சபை முறைமை இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் போராட்ட அமைப்புகளின் தியாகத்திலும் இந்தியாவினுடைய முயற்சியாலும் இலங்கையின் அரசியல் சாசனத்தில் பதின்மூன்றாம் திருத்தச் சட்டத்தினூடாக உள்வாங்கப்பட்ட முக்கிய அரசியல் அம்சமாக இது கருதப்படுகிறது.

வடக்கு கிழக்கை எமது பூர்வீக பிரதேசமாகவும் தமிழை தேசிய மொழியாக ஆட்சி மொழியாக அங்கீகரித்த இந்த ஏற்பாட்டை தமிழ் மக்கள் இழந்து விடமுடியாது. நிரந்தர தீர்வு கிடைக்கும் வரையான தற்காலிக தளமாக இது பேணப் படவேண்டும்.

காலாகாலமாக வந்த அரசுகளுடன் அரசியல் தீர்வு சம்பந்தமாக நடத்தப்பட்ட பல பேச்சுவார்த்தைகள் வெற்றி பெறவில்லை. அதே போல இப்பொழுது அரசு முன்வைத்திருக்கின்ற புதிய அரசியல் சாசனத்திற்கான நிபுணர்கள் குழுவிடம் பல்வேறு அரசியல் தீர்வினை தமிழர் தரப்புகள் முன்வைத்திருக்கிறன.

ஏற்கனவே அரசியல் சாசனத்தில் உள்ள 13 ஆவது திருத்தச் சட்டத்தை முற்றுமுழுதாக எந்த அரசுகளும் நிறைவேற்றாத நிலையில், அரசியல் தீர்விற்கான ஆலோசனைகள் நிறைவேற்றப்படுமா அல்லது கருத்தில் கொள்ளப்படுமா என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

அப்படியான தீர்வினை எட்டும் வரைக்கும் , ஆகக் குறைந்த பட்சமாக கருதக்கூடிய மாகாணசபை முறைமையை பேணுவதற்கும், தமிழ் இனம் எதிர்கொண்டிருக்கும் அபாயகரமான நிலையை தடுப்பதற்கும்,
விரைந்து மாகாண சபை தேர்தலை நடாத்துவது அவசியம்.

தமிழ் கட்சிகள், தேர்தல் அரசியலையும் , தமக்குள் இருக்கும் கொள்கை முரண்பாடுகளையும் கடந்து இந்த விடயத்தை முன்னெடுக்க ஒன்றிணைந்து செயல்படுவது தற்போதைய காலத்தின் அவசியம் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

தமிழ் தேசியம் சார்ந்தவர்களும், மற்றைய தமிழ் அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்துப் பயணிக்க தமிழ் ஈழ விடுதலை இயக்கம் கோரிக்கை விடுகிறது. இதற்கான முழுமையான செயற்பாட்டுக்கு எமது முற்றான ஆதரவையும் வழங்கவும் தயாராக உள்ளோம்.

சுரேந்திரன்
ஊடகப் பேச்சாளர்
ஊடக வாரியம்
தமிழ் ஈழ விடுதலை இயக்கம் -(ரெலோ)
தமிழ் தேசியக் கூட்டமைப்பு

மே தின கூட்டங்களுக்கு அனுமதி இல்லை

மே தின கூட்டங்களையும், நிகழ்வுகளையும் நடத்துவதற்கு அனுமதி வழங்காதிருக்க தீர்மானித்துள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கு அனைத்து கட்சிகளும் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்று (20) கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயற்பாட்டு மையம் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.